நடைமுறை இதழியல்
என்ற புத்தகம் முகநூல் நண்பர் இரா. குமார்
எழுதியிருக்கின்றார் என அறிந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இதழியல் பற்றிய
புத்தகம் நாம் கடைகளில் தேடி சென்றால் எளிதாக
கிடைப்பதில்லை இருந்தாலும் ஆங்கில மொழியில் தான் கண்டுள்ளேன். நானும் ஒரு இதழியல் ஆசிரியை
என்பதால் மிகவும் ஆற்வத்துடன் இப்புத்தகம் எங்கு கிடைக்கும் என வினவிய போது நண்பர் ஒரு
புத்தகம் எனக்கு அனுப்பி தந்திருந்தார்.
வாசிக்க வாசிக்க அற்புதமாக இருந்தது என்று மட்டுமல்ல ஒரு ஊடக ஆசிரியையாக
என் வகுப்புகளில் பயண்படுத்தும் படியாகவும் இருந்தது. இப்புத்தகம் என் படிப்பு வேளையில் கிடைத்திருந்தால் பல மணி நேரம் இணையத்திலும் புத்தகத்திலும் தேடிப்படித்ததை எளிதாக புரிந்து படித்து தேற்வை சந்தித்திருக்கலாமே என்று நினைத்து கொண்டேன்.
தமிழ் மொழியில் ஆய்வு நிறைஞர் பட்டம் பெற்றவர் என்பதுடன் தன் முதல் ஊடகப்பணியை தினமலர் நாளிதழில்1984ஆம் வருடம் பிழை திருத்துவராக ஆரம்பித்துள்ளார் என்று அறியும் போது புத்தகத்திற்குள் செல்லும் ஆற்வம் மிகுதியாகின்றது. ஈழத்தில் களப்பணி செய்து செய்தி திரட்டியுள்ளார் மட்டுமல்ல தமிழகத்தில் சிறந்த பல ஆளுமைகளிடம் நேர்முகவும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது. புத்தகம் வாசித்த போது நண்பர் இரா. குமார் பத்திரிகை துறையில் 30வருடமாக ஈடுபட்டு வரும் ஒரு ஜாம்பவான் என்பது புரிந்து கொள்ள இயல்கின்றது. தினகரன் பத்திரிக்கை நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனின் வார்த்தையில் "பத்திரிக்கை துறையில் உள்ளோருக்கு சிறந்த கையேடு, பத்திரிக்கை துறையை தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு ஒரு களஞ்சியம்" என பாராட்டுகின்றார் மேலும் கல்விப் பின்புலமும் அனுபவத்தின் செறிவும் ஒரு நல்ல புத்தகத்தை எழுத ஆசிரியருக்கு உதவியுள்ளதாகவும், வித்தக கலைஞன் விரல் பட்டால் விறகுக் கட்டையும் வீணையாகும் என்ற வார்த்தைகளால் மகுடம் சூட்டியுள்ளார் என்பது ஆசிரியரின் உழைப்பின் மேலுள்ள ஈடுபாட்டை எடுத்துரைப்பதாகவே காண இயலும்.
இக்காலம் என்றில்லை எக்காலமும் பத்திரிக்கையாளர்கள் பணி என்பது முள்ளின் மேல் நடக்கும் போராட்டமான வாழ்கை பயணம்
தான். மற்று தொழில்களில் என்பது போல் ஊதியம் நோக்காது நேரம் காலம் பார்க்காது செய்யும் சவாலான பணியாகும். தனி மனித விருப்பம் என்பதை கடந்து சமூகத்தில் புரக்கணிக்கப்பட்ட மக்கள் நலனுக்காக பணியாற்றுபவர்கள் பத்திரிக்கையாளர்கள் என்றால் மிகையல்ல.சாதாரண அலுவலக பணி போல் அல்லாது சமூக பிரஞ்சை கொண்டு சமூக போராளியாக சவால்களை தினசரி வாழ்கையில் சந்திக்கும் பணி தான் பத்திரிக்கையாளனுடையது.தற்கால ஊழல் அரசியல் சமூக சூழலில்; அறம், தற்மம் என்ற கொள்கையை முன் நிறுத்தி சமூக அரசியலை கேள்விக்கு உள்ளாக்கும் பணி என்பது சாதாரண பணியல்ல. இருந்தும் ஒரு பள்ளி ஆசிரியர் தனியார் பள்ளியில் 7-10 ஆயிரவும், அரசு நிறுவனம் என்றால்
34430முப்பது ஆயிரங்களுக்கு மேலும் ஊதியம் பெற்று பணி செய்யும் சூழலில் ஒரு பத்திரிக்கையாளர் தன்
உழைப்புக்கு என முதல் இரு வருடம் நாலு முதல் ஏழு ஆயிரங்களுக்குள் மட்டுமே பெற இயல்கின்றது என்பது நிதர்சன உண்மையே. இருந்தும் தமிழ் மேல் கொண்ட பற்றால் ஆசிரியர் தன் விரும்பம் போல்
சாகில் தமிழ் படித்துச்
சாக வேண்டும்-எந்தன்
சாம்பல் தமிழ்
மனந்து வேக வேண்டும்.
என்பதற்க்கு இணங்க
இதழியலில் ஈடுபாடு கொண்டு முப்பது வருடம் பணி புரிந்த புத்தக ஆசிரியரிடம் இருந்து ஒரு இதழியல் புத்தகம்
பெறுவதும் அதை வாசிக்க கிடைப்பதும் பாக்கியமே.
புத்தக ஆசிரியரின் சக தோழரான
தினமலர் பத்திரிக்கை ஆசிரியர் ரெ. பார்த்திபன் "தனது
திறமையை தன்னோடு பூட்டி வைத்துக்கொள்ளாமல் மற்று பத்திரிக்கையாளர்களுக்கும் எளிதாக
புரிய வைத்துப் பணியூடே பயிற்சி தருவதைப் பழக்கமாக கொண்ட நல்ல ஆசிரியராகவும்" புத்தக ஆசிரியரை அறிமுகப்படுத்துகின்றார்.
இந்த புத்தகத்தின் அட்டைப்படம், நடை,பொருளடக்கம் என எல்லா பகுதிகளும் மிகவும் நுட்பமாகவும் கலைநயத்துடனும் படைக்கப்பட்டுள்ளது எடுத்து காட்டாக உள்ளது.
ஆசிரியர் ஒரு பண்முக திறைமையாளராக இருந்துள்ளதால்;(சிறந்த பிழைதிருத்துபவர், ஆசிரியர், செய்தி சேகரிப்பவர்
என்பதால்) ஒரு எழுத்துப்பிழை, அச்சு தவறு காண இயலாது இப்புத்தகத்தில். எழுத்தும் தெளிவானதும் சிறந்த தாளில்
அச்சிடப்பட்டுள்ளதாகவும் உள்ளது. ஊடக மாணவர்கள் இப்புத்தகத்தை தேற்வுக்கு மட்டுமல்ல தங்கள் இதழியல் வாழ்கை
பயணம் முழுதும் ஒரு வழி காட்டியாக பயண்படுத்த இயலும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.இதழியல் பாடம் தேற்வு செய்து படிக்கும் மாணவர்கள் முதுகலை பாடத்திட்டத்தில் கற்க வேண்டிய Editing, Reporting, Printing Technology, Journalism என்ற நாலு பாடப்பகுதிகளை விளக்குவதாக இருந்தது. இலகுவாக மொழி நடையுடன், அதே சமயம் விரிவாக தெளிவாக விவரித்து எழுதியிருந்தார். புத்தகஆசிரியர்,
இதழியல் என்றால்
என்ன, ஒரு இதழின் உள்ளடக்கம் என்னவாக இருக்கும் என்பதுடன் முதல் பத்திரிக்கையாளர் நாரதன் என்ற தகவலுடன் துவங்கி இதழ்களின் தோற்றம், பத்திரிக்கை தோற்றம் என உலக இந்திய தமிழக இதழியில் வரலாற்றை விளாவரியாக விவரித்துள்ளார். கி.மு 130 ல் முன்பு துவங்கிய பத்திரிக்கை வளர்ச்சியை படிப்பது அறிவது
மலைப்பாகத்தான் உள்ளது. சுவாரசியம் குறையாது ஆனால் விரிவாக அலசியிருப்பது ஆசிரியரின் அனுபவ அறிவை
காட்டுகின்றது.
அடுத்ததாக பத்திரிக்கை
துறையில் இருக்கும் மூன்று துறைகள் செய்தி, விளம்பரம், விற்பனை பிரிவை பற்றி விளக்கியுள்ளார்.
பல பொழுதும் ஊடக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு பகுதி இதை தொட்டே செல்கின்றது என்பதால் இதன் தெளிவான தெரிவு
ஒவ்வொரு ஊடக மாணவருக்கும் பயண் தரும்.
எது செய்தி என்ற
பாடம் முதுகலை இதழியில் பாடத் திட்டத்தில் ஒரு பருவம் முழுதும் படிக்கும் பாடப்பகுதி.
இந்த புத்தகம் ஒரு வேளை படிக்கும் நாட்களில் கிடைத்திருந்தால் பல மணி நேரம் தேடி வாசித்து படித்ததை
ஆசிரியரின் புத்தகம் ஒரு முறை வாசித்து தெரிந்து கொண்டு தேற்வை எதிர் கொண்டிருக்கலாம். :-)
அடுத்து வருவது செய்தி களங்கள்.(News Sources). இந்த பகுதியும் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைபட்டப் படிப்புக்கு
தெரிந்து கொள்ள வேண்டிய பிரதான பகுதியாகும். உலக, இந்திய, உள்ளூர் செய்தி நிறுவங்களை பற்றி ஆசிரியர்
ஊடாக தெரிவது தெளிவான அறிவைத் தருகின்றது.
செய்தி அறைகளும்
செயல்பாடுகளும் மாணவர்கள் இரண்டாம் வருடம் முதல் பகுதியில் படிக்கும் பாடம். இதை தெரிந்து கொள்வதற்க்கு என்றே 2 மாத கால அளவில் பயிற்சி மாணவர்களாக ஊடக நிறுவனத்தில் பணி புரிந்து தேற்வில் மதிபெண் பெறும் திட்டம் உள்ளது. இரண்டே
மாதம் பயிற்சி பெற்ற ஆசிரியரிடம் கேட்டு படிப்பதை விட இத்துறையில் 30 வருடம் எல்லா துறையிலும் பணி செய்துள்ள பத்திரிக்கையாளர் இரா. குமார் அவர்கள் விளக்கியிருப்பது தெளிவாக புரியும்படியுள்ளது. செய்தி சேகரிப்பவர், ஆசிரியர்,உதவி ஆசிரியர், செய்தி ஆசிரியர்,
துணை ஆசிரியர் என ஒவ்வொருவருடைய பணியும் மிகவும் விரிவாக உதாரணங்களுடன் விளக்கியுள்ள
விதம் அருமையிலும் அருமை.
பத்திரிக்கைத் துறையின்
இரத்த நாளமான செய்தியாளர்களை பற்றி மிகவும் விரிவாக தகவல் அறியக் கிடைக்கின்றது இப்புத்தகம் வழியாக. இதில் தமிழ் செய்தியாளர்கள்,உலகத்தரம் வாய்ந்த செய்தியாளர்கள் எதிர் கொண்ட
சில பிரச்சனைகள் பற்றியும் அலசியுள்ளார்.இப்புத்தகம் வழியாக ஒரு செய்தியாளரின் பலம், தகுதி அறிவது மட்டுமல்ல தங்களை சிறந்த செய்தியாளர்களாக தயார் படுத்தி கொள்ளவும் இயலும் . இதில்
நகர நிருபர்கள், சிறப்பு நிருபர்கள் பகுதிநேர நிருபர்கள் என ஒவ்வொருவரின் தனிச்சிறப்பையும்
உரிமை கடமையை பற்றியும் விளக்கி செல்வது தனி சிறப்பாகும்.
செய்தி திரட்டும்
இடங்கள் பற்றிய தகவல்களும் நாம் அறியக் கிடைக்கின்றது. இந்த பகுதியில் நாடாளுமன்றம்,
சட்டமன்றம்,, கவனை ஈர்ப்பு தீர்மானம்,ஒத்திவைப்பு தீர்மானம், உரிமை மீறல் பிரச்சனை,
பேரவை செய்திகளை சேகரிக்கும் போது கொள்ள வேண்டிய கவனம் என மிகவும் நுட்பமான பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கை நிறுவனம், அதன் உரிமையாளர், அச்சிடுபவர் எதிர்கொள்ளும் பிரச்சனை பற்றியும்
விளாவரியாக விவரித்துள்ளார்.
நேர்காணல் என்பது
ஊடகப்படிப்பில் மிகவும் பிரதாமான பகுதியாகும். ஆசிரியரும் அதை தெரிந்து கொண்டு தனி பாகமே ஒதுக்கியுள்ளார்
என்பது குறிப்பிட தகுந்தது. ஒரு பத்திரிக்கையில்
செய்தி எழுதும் முறை, மொழிநடை, எண்களை எழுதும் முறை என மிகவும் தேவையான தகவல்களை பகிர்ந்துள்ளார்
என்பது இப்புத்தகத்தின் தேவையை எடுத்து சொல்கின்றது.
பல ஆயிரம் செய்திகள்
பத்திரிக்கை அலுவலகத்தில் வந்து சேர்ந்தாலும் செய்தி தேற்வின் முக்கியத்துவம் பற்றி
மிகவும் எளிமையாக புரியவைத்துள்ளார் ஆசிரியர். இந்த புத்தகத்தின்
இதயம் அல்லது மிகவும் தெரிது கொள்ளவேண்டிய பகுதி என்பது செய்தி தொகுப்பு என்பதாகும்.
பல போதும் வித்தகர்கள் தாங்கள் பல வருடங்களாக கற்ற வித்தையை மற்றவர்களுக்கு கற்று கொடுக்க விரும்புவதில்லை.
ஆனால் இரா குமார் தன் 30 வருட தொழில் மூலதனத்தை இதழியலில் விருப்பம் உள்ளவர்களுடன் பகிர்ந்து
கொள்ள இயன்றது என்றால் அவருடைய சகமனித நலன் சார்ந்த விருப்பம் மட்டுமல்ல சிறந்த இதழியல் நபர்கள் உருவாக வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தையே காட்டுகின்றது. தலைப்பு கொடுக்கும் விதம்,
பக்க அமைப்பு விதிகள், தலையங்கம், படவிளக்கம், போஸ்டர் என ஊடகப்பணியை அக்குவேர் ஆணிவேராக
பிரித்து பாடம் நடத்தியுள்ளார் என்பதே இப்புத்தகத்தின் மாபெரும் வெற்றி.
எல்லாம் சொல்லி
விட்டு பத்திரிக்கை சட்டங்கள் சொல்லாது சென்றால் நிறைவு பெறாது என புரிந்து கொண்ட ஆசிரியர்
பல பொழுதும் விவாதத்திற்க்கு உள்ளாகியுள்ள பத்திரிகைக் சுதந்திரம் சட்டங்கள் சில சட்ட சிக்கல்கள் பற்றியும்
பகிர்ந்துள்ளார். பிரீஷ் ஆட்சியில் இருந்து சமீபம் காலம் வரை பத்திரிக்கை சுதந்திரத்திற்க்கு
பங்கம் விளைவிக்கும் அரசு நடவடிக்கைகள் பற்றியும் பகிர்ந்துள்ளார். கடைசி பாகம்
பத்திரிக்கை உலகுடன் இணைந்து செல்லும் மின்னணு மற்றும் நவீன ஊடகம் பற்றியும் சிறிய தொகுப்புடன் முடித்துள்ளார்.
214 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் ஆசிரியரின் உழைப்பின் மற்றும் அனுபவத்தின் சான்று. இதே போன்ற பல புத்தகங்கள் ஆசிரியரிடம் இருந்து எதிர் நோக்குகின்றோம். கல்வியாளரான பத்திரிக்கையாளரிடம் இருந்து கற்பது, தெரிந்து கொள்வது ஊடகத்தில் இயங்குபவர்கள்ளுக்கும் அதை பாடமாக படிப்பவர்களுக்கும் பெரியொதொரு பொக்கிஷமாகும்.
இப்புத்தகம் கிடைக்கும் இடம்
முல்லையகம் வெளியீடு,
A6, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு,
208, அண்ணா முதன்மைசாலை
கலைஞர் நகர்,சென்னை-78
அலைபேசி # -9003152490, 9444391552
விலை- ரூபாய் 200.