15 Aug 2011

திரைக்கதை - மலையாளம் திரைப்படம்



சில நாட்கள் இப்படி தான் எந்த வேலையிலும் மனம் ஈடுபடுவதில்லை. ஒரு மலையாளப்படம் கண்டு விடுவோமே என்றுதிரைக்கதை’(Script) என்ற மலையாளப் படம் பக்கம் வந்து விட்டேன்.                                                                                                                                                                                                         


2006-ல் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2008 ல் வெளிவந்தது தான் திரைக்கதாஎன்ற மலையாளப்படம்.    தேசிய அளவில் அந்த வருடத்திற்கான மலையாள மொழியில்  மிக சிறந்த படம், சிறந்த குணச்சித்திர நடிகைக்குள்ள விருது பிரியா மணிக்கும் வாங்கி தந்த படம் இது. மேலும் அனூப் மேனோன் என்ற நடிகருக்கு சிறந்த உதவி குணச்சித்திர நடிகர் என்ற மாநில விருதும் பெற்று தந்தது இப்படம்.  மலையாளத் திரையுலைகில் ஒரு எடுத்து கொள்ளப்படும் இயக்குனரான  ரஞ்சித்தின் இயக்கதில் மூன்று கதாபாத்திரங்களில் ஊன்றி கொண்டு   விரசமே இல்லாது கதையை நகர்த்தி சென்றுள்ள பாங்கு தான் இப்படத்தின் சிறப்பு.  படம் திரைக்கதை, காட்சிகள் நகர்த்தும் விதம், அர்த்தமான கதை அம்சத்துடன், அழகாக ரசிக்கும் படி எடுத்துள்ள இப்படம் மலையாளி ரசிகர்களால் மிகவும் பாராட்டு பெற்றது. அலட்டாது ஆனால் காண்பவர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு கொடுத்து கொண்டே முன் செல்கின்றது இப்படத்தின் கதைசொல்லும் யுக்தி  படம் முடிவு காட்சி ஒரு போதும் நாம் கற்பனைக்கு செய்து கொள்ளாத வண்ணம் அன்பு, கவலை, பாசம், காதல் என எல்லாம் கலந்து முடித்துள்ளது இன்னும் படத்திற்க்கு சிறப்பு சேர்க்கின்றது.

இந்த படம் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை கதை என்றும் சொல்லப்பட்டிருந்தது. இதன் இயக்குனர் ரஞ்சித் இது ஸ்ரீவித்யாவுடைய கதை அல்ல ஒரு நடிகையின் கதை மட்டுமே என்றும் தெளிவுப்படுத்தியிருதாலும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு  ஈடு கொடுக்க இயலாத சூழலில் ஸ்ரீவித்யாவின்  72-76 களில் கமல்ஹாசனுடன் கொண்ட காதலும் அவருடைய கடைசி மரண நாட்களும் நினைவுப்படுத்திய காட்சிகள் உண்டு என்று வெளிப்படுத்தினார்.

 பிரபல கர்னாடக இசை கலைஞைரான M.L  வசந்தகுமாரியின்  மகளான ஸ்ரீவித்யா தன்னுடைய 13 வயதில் 1969-ல் சட்டம்பிக்கவலா’(தெம்மாடிமுக்கு-தமிழ் பொருள்) என்ற மலையாளம் திரைப்படத்தில் கால் பதித்தது வழியாக திரை உலகில் பிரவேசித்தார்.  60 வயது சத்தியனுடன் ஜோடி சேர்ந்து நடித்து தேசிய விருதும் பெற்றார்.  1972-76 ல் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் தனது 19 வயதில் ரஜனிகாந்தின் மனைவியாகவும் வயதான பெண்ணிடம் காதல் கொள்ளும் இளைஞன் கமல்ஹாசனின் காதலியாகவும் நடித்து தன் நடிப்பு திறைமையால் முத்திரை பதித்தார் சினிமா உலகில்.  அப்படத்தில் நடிக்கும் போது தான் இப்பத்தில் சொல்லப்படும் காதல் அவர்களுக்குள் நிகழ்ந்தது என்றும்;  இரு குடும்பங்களும் அவர்கள்  திருமணம் அனுமதி தந்திருந்த போதும் இருவரும் பிரிந்தனர் என்றும் சொல்லப்படுகின்றது .  பின்பு குடும்ப நபர்களின்  எதிர்ப்பையும் மிஞ்சி 1978 ல் கெ.வி ஜோர்ஜ் என்ற தொழிலதிபரும் மலையாளப்படம் இயக்குனருமான ஜோர்ஜை கிருஸ்தவ மதம் மாறி திருமணம் செய்து கொண்டு ஸ்ரீவித்யாவும்,  தன்னை விட முதியவரான வாணி கணபதியை மணம் முடித்து கமல்ஹாசனும் தங்கள் வழிகளை தேடி கொண்டனர்.  

ஸ்ரீவித்யா தன் நடிப்பால் திரை உலகில் ஜுவலித்தது போல் தன் சொந்த வாழ்க்கையில் வெற்றி பெறாது பல போராட்டங்கள் மத்தியில் வாழ்ந்து வந்தார்.  தன் தாலிகட்டிய கணவன் ஜோர்ஜால் சென்னையில் குடியிருக்கும் வீட்டை பறிகொடுத்து தன் பணம் எல்லாம் அபகரிக்க பட்ட நிலையில் விரட்டி அடிக்கப் பட்டார். வெறும்  9 வருடம் மட்டுமே ஆன அவருடைய திருமண வாழ்வும் முடிவு பெற்று உச்ச நீதிமற்றம் தீர்ப்பு 90 ல் வந்து சேரும் வரை அவர் போராட்டம்   ஓயவே இல்லாது போய் கொண்டிருந்தது.  ஜோடி சேர்ந்து நடித்தவகளுடன் அவர்கள் அம்மா, சகோதரி ரோளில் (அபூர்வ சகோதரர்கள், தளபதி) நடித்து கொண்டு இருந்த ஸ்ரீவித்யா தன் பிறந்த ஊரான  சென்னையில் இருந்து  திருவனந்தபுரத்தில் குடியேறி அமைதியான சூழலில் மலையாளத் தொலைகாட்சி சீரியலுகளில் நடித்து வரும் கலையளவில் தான் கான்சர் உருவத்தில் வந்த காலன் அவர் உயிரை 2006 அக்டொபர் 19 அன்று முற்றும் பறித்து சென்றது.  தன் கடைசி நாட்களில் தன்னை யாரும் காண வருவதை விரும்பாத போதும், கொச்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசன் கேட்டு கொண்டதிற்க்கு இணங்க தன்னை காண அனுமதித்தாகவும், 30 வினாடி கண்ணீருடன் இருவரின் உணர்ச்சி மிக்க சந்திப்பு நடந்தது என்றும், உலகில் எந்த மூலையில் கொண்டு சென்றும் அவருக்கு மருத்துவ வசதி பெற்று தர விரும்புவதாக கமல்ஹாசன் கூறியதாகவும் ஆனால் அவர் மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகின்றதுநாட்டிய பள்ளி துவங்க தன் சொத்துக்கள் யாவும் கேரளா அரசிடம் ஒப்படைத்து விட்டு  இந்த உலகை விட்டு சென்றார் ஸ்ரீவித்யா என்ற மாபெரும்  நடிகை!

திரைப்பட கதை இப்படியாக துவங்குகின்றது; நண்பர்களுடன் ஒரு உணவு விடுதி நடத்தி வரும் ஒரு இளம் இயக்குனர் அக்கி, அவர் தான் பிரத்வி ராஜ்.  தன் முதல் படத்தை வெற்றியுடன் இயக்கி பாராட்டு கிட்டிய பின்பு தன் அடுத்த படம் திரைக்கதை கருவை தேடுவதில் மும்முரமாக உள்ளார்இவ்வேளையில்  புகழின் உச்சியில் கொடிகட்டி பறக்கும் அஜய சந்திரன் என்ற ஹீரோ நடிகரின்(கமல்ஹாசன்முதல் காதலியும் முதல் மனைவியும் தென் இந்தியாவில் துளும்பி நின்ற நடிகை மாளவிக(ஸ்ரீவித்யா) எங்கே? என்ற தேடல் அற்புத நோயால் கவனிபாரற்று உற்றார் உறவினர்களை காண விரும்பாது; தான் வகுத்த தனிமையில் சுத்தம் சுகாதரம் அற்ற  சூழலில்   நாகர்கோயிலில் ஒரு ஆஸுபத்திரியில் கழியும் நடிகை மாளிவிகா பக்கம் கொண்டு விடுகின்றதுஇயக்குனர் நடிகையின் சம்மதத்துடன் நண்பர்கள் துணையுடனும் கேரளாவில் மிக அருமையான மருத்துவ மனையில் சேர்த்து கவனித்து கொள்கின்றார் மேலும் மாளவிகாவை அவருடைய காதல்  கணவருடன் சேர்க்கின்றார் என்பதே கதை!

தன் புகழின் உச்சியில் ஒரு பட்டத்து பூச்சி போல் பறக்கும் காலையளவில்,  வில்லன் வேடங்களிலிலும் இன்னும் அங்கிகாரம் கிடைக்காத நிலையில் இருக்கும் நடிகருடன் காதல் கொண்டு திருமணவும் முடித்து கொள்கின்றார் நடிகை மாளவிகா!  திருமணத்திற்க்கு  பின்பு நடிப்புக்கு முழுக்கிட்டு ஒரு சாதாரண குடும்ப தலைவியாக குழந்தை, கணவர் நலனை மட்டும் பேணி வாழ விரும்பும் சூழலில் தான் ஒரு குழந்தைக்கு தாய் ஆக போகிறேன் என்ற விடயவும் தெரிய வருகின்றது.  நடிகரோ குழந்தை தற்போது வேண்டாம் தன் நடிப்பு என்ற லட்சியத்திற்க்கு பாதிப்பு ஆகி விடும் என கூறி குழந்தையை அழித்து விட முடிவு செய்து மருத்துவ மனையிலும் அனுமதிக்கின்றார். நடிகை பல நாட்களுக்கு பின்பு தன் கருவை மட்டுமல்ல ஒரு போதும் குழந்தை பெற்று கொள்ள கூடாது என்ற நோக்கில் தன் கற்ப பாத்திரத்தை இணைக்கும்  faloppian tube  எடுக்கபட்டுள்ளதை தெரிந்து மனம் நொடிந்து போகின்றார்.  தன் தாய்மையை மதிக்காது தன்னை ஒரு உடலாக மட்டும் கருதிய கணவரில் இருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்து  மது போதைக்கு அடிமையாகின்றார்.  தன் கணவரில் இருந்து வலுகட்டாயமாக விலகிய நடிகை, வாழ்க்கை போராட்ட்த்தின் மத்தியில் சிறு சிறு வேடங்கள் நடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றார்இந்த காலையளவில் நடிகர் நினையாத உயரத்தை எட்டுகின்றார் அவர் மறுமணவும் புரிந்து வாழ்கை சுகமாக சென்று கொண்டிருக்கின்றது.  ஒரு முறை, இருவரும் ஒரே படத்தில் நடிக்கும் சூழலில் தன் பழைய கணவர் அழைப்பை ஏற்க்கும் சூழலை  தவிர்க்க வேண்டும் என்று தயாரிப்பாளருடன் 2 மணி நேரம் செலவழித்ததை அறிந்த நடிகர் முற்றும் அவரை மறந்து பிரிந்து விடுகின்றார்.

அற்புத நோயில் பிடியில் சிக்குண்டு இன்றோ நாளையோ என்று மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் தான் கணவர் நல்லவர் என்றும் அவர் தனக்கு அற்புதம் பாதித்திருந்ததாலே பெலோப்பி டியூபைய் எடுக்க காரணம்  என்று தெரிந்ததும்;  தான் துயரைப்பட கூடாது என்று எண்ணியே தன்னிடம் தன் கணவர் மறைத்தார் என்று அறிந்ததும் அவரை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்று அவரில் ஏக்கம் கொள்கின்றார்.     தன் கடைசி ஆசையாக தானும் கணவரும் முதல் முதலில் சந்தித்த வீட்டில் செல்ல வேண்டும் என்றும்  தெரிவிக்கின்றார்.  நடிகரும் தன்னுடன் அழைத்து செல்கின்றார். எனக்கு சாக விருப்பம் இல்லை உங்களுடன் வாழ வேண்டும் என்று கணவரிடம் சொல்லி அழுவதும் கணவர் தோளில் சாய்வதுடன் படம் நிறைவு பெறுகின்றது.


 ஆனால் பல கேள்விகள் மனதில் எழாதில்லை! பெண்ணின் பெண்மை, தாய்மை உணர்வு, உறவு எல்லாம் உள்ளடங்கி இருக்கும் இவ்வளவு பிரதானமான  சம்பவத்தை நடிகர் ஏன்  தன் மனைவியிடம் இருந்து மறைத்தார் என்பதே. ஒரு வேளை மறுபடி சொல்ல மனைவி அனுமத்திகாது இருந்தால் கூட ஒரு கடிதம் வழி, ஒரு தொலைபேசி வழி ,ஏன் ஒரு நட்பு வழியாவது தெரிவித்து தங்கள் பந்தத்தை புதுப்பித்திருக்கலாமே. பேச வேண்டியதை பேசும் நேரத்தில் மௌனம் காத்து ஈகோ என்ற பிரச்சனையால் ஒரு ஜென்மம் முழுதும் வாடி வதங்கி கணவனை புரிந்து கொள்ள இயலாது பிரிந்து சென்ற மனைவி தன் மரணம் நெருங்கும் போது மட்டும் கணவரிடம் மனதுருகும் அன்பு வந்ததால்  மனைவி என்ற தன் நிலையை நியாயப் படுத்த இயலுமா?  நடிகை, கணவருடன் உள்ள கோபத்தால் ஒரு முழு குடிகாரியாக மாறுகிறாள், ஒரு தாசி போல் அடுத்தவர் படுக்கையறையில் கூட தஞ்சம் அடைய விரும்பும் பெண் மனம் ஏன் கணவர் இதயத்தை தேட மறுக்கின்றது என்ற பல கேள்விகள் நம்மை தேடி வருகின்றது. சேர்ந்து வாழும் போது ஒருவருக்கொருவர் பின்னி இணைந்து பாசப் பிணைப்பால் வாழ்வதும் ஊடல் என்று வந்ததும் கீரியும் பாம்புமாக மாறுவதும், வாழும் ஒரே வாழ்க்கையை நரகமாக்கி சாகும் தருவாயில் உணர்ந்து என்ன தான் பலன்தினசரி வாழ்க்கையில் தேவையற்ற பிடிவாதம் வைராக்கியத்தால் வாழ்க்கை முழுதும் கண்ணீர் குடித்து பெண்களை கண்டுள்ளோம். அவர்கள் மனமாற்றம் பெற வேண்டும் என்று இயக்குனர் நினைத்தால் நல்லதே.    கணவருடன் உள்ள ஊடலால் தனிமையில் தினம் தினம் தீயில் உருகி வாழ்வதுடன் கணவரையும் சுடு கண்ணீரில் தள்ளியிடும் பெண்களுக்கு ஒரு நல்ல பாடமே இப்படம்.  தன் வாழ் நாளில் கணவரை ஒரு புழு போல் எள்ளி நகையாடி மரண நெருங்கும் போது உங்களுடன் வாழ வேண்டும் என்று அழும் பெண்ணின் புத்தியை பின் புத்தி என்று சாடுவதாகவும் தெரிகின்றது கடைசி காட்சி! தங்களுக்கு கிடைத்த ஒரே ஒரு வாழ்க்கையை நிகழ்வுகள் சம்பவங்கள் வார்த்தைகள் என ஏதோ ஒரு குற்றம் சுமத்தி மன்னிப்பு, கருணையை மறந்து தங்கள் வாழ்க்கையும் பரிதாபத்திற்க்கு உள்ளாக்கி அடுத்தவர்கள் கருணைக்கு உள்ளாகும் மனைவிகளையும் நினைத்து எடுத்த படமாக இருக்கலாம்.

கமல்ஹாசன் என்ற கதாபாத்திரத்தை படம் நடுப்பகுதி வரை அவமானப்படுத்தி விட்டு கடைசி 3 சீனில் ரொம்ப நல்லவராக காட்டுவார்கள்.  இது எதனால் என்று தான் புரியவில்லை. பொதுவாக மலையாளிகளின் பல படங்களில் தமிழர்கள் பெண் பித்தர்களும், மகளையே கற்பழிப்பவர்களும், பித்தலாட்டம், ரௌடி, அல்லது பிச்சைகாரர்களாகவே இருப்பார்கள். கமல்ஹாசன் என்ற உலக நாயகனை -தமிழ் நடிகனை திட்டமிட்டே பழித்தார்களா என்றும் தெரியவில்லை.  அவருடைய ஆங்கில உச்சரிப்பு, ஹோலிவுட் படங்களை பற்றி அவர் விவாதிப்பது, அவருடைய தற்போதைய ஒழுக்கமற்ற மனைவிபரதேசியாக  இருந்தவரை நடிப்பு சொல்லி கொடுத்து வாழ்கை கொடுத்தவர்களும் இவர்களே போன்ற ஒரு பிம்பம் ஜெனிப்பத்துள்ளனர். ஸ்ரீவித்யாவின் முடிவுக்கு முதல் காதல் கணவரான கமலை காட்டியுள்ளவர்கள் ஸ்ரீவித்யா 10 வருடம் வாழ்ந்த அவருக்கு தீராத சோதனைகள் கொடுத்த கெ.ஜி ஜோர்ஜை முற்றிலும் மறைத்து விட்டதின் பின்னணியும்  மர்மம் தான்!

மேலும் உண்மை கதைக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை என்றால் ஸ்ரீவித்யாவுக்கு சமர்ப்பிக்கப் பட்ட இப்படத்தில் சில சம்பவங்கள் மட்டும் ஏன் சேர்க்க வேண்டும் என்றும் கேள்வி எழாதில்லைஸ்ரீவித்யா மறுமணம் செய்ததைக் கூட இயக்குனர் மறைக்கும் காரணம் தான் என்ன? ஸ்ரீவித்யாவை  துக்க கதாபாத்திரமாகவும் எல்லாம் விதி செய்த சதி என்பது போல் கொண்டு வந்துள்ளது சினிமா என்ற ஊடகத்தின் நம்பகத்தன்மையை கேலி செய்கின்றது. ஸ்ரீவித்யா தன் வாழ்க்கை கதையை தொடர்கதையாக எழுதியபோது எல்லா விடயங்களும் உண்மையாகவும் துணிவாகவும் எழுதியிருந்தார். ஆனால் மாபெரும் கலையுணர்வு கொண்டு தன் விருப்பங்களுக்காகவும் வாழ முன் வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை சமகால ஆண் ஆதிக்க மனோபாவத்தில் அவரை உருவகப்படுத்தியிருப்பது ஏற்று கொள்ள இயலவில்லை.  ஒரு சம்பவம் தான் நினைவில் வருகின்றது.  சிலர் பெண்ணை கட்டி கொடுக்கும் முன் ஆண் வீடு காணல் செல்லும் நிகழ்ச்சியுண்டு.  புஞ்சை எவ்வளவு நஞ்சை எவ்வளவு என்றால் கையை நீட்டி அந்த கண் எட்டும் தூரம் வரை நம்முடையது தான் என்பார்களாம்  ஆனால் மணப்பெண் வந்த பின்பு தான் தெரியும் காட்டி கொடுத்தது எல்லாம் அடுத்தவன் தோட்டம் என்று. கேட்டால்  எங்க சொக்காரனுடையது தான் என்று சொல்வார்கள்அதே போல் கமல்-ஸ்ரீவித்யா ஒரு விற்பனை யுக்தியாக வைத்து சமீப காலத்தில் வாழ்ந்து மறந்த ஒரு பெண் கலைஞரின் வாழ்க்கையை பொய்யால் மெனைந்து படம் எடுத்து திரையிடும் நோக்கம் தான் என்ன?

ஸ்ரீவித்யா ஒரு பிரபல நடிகையாக இருந்தும் தன் கவனைக்குறைவால், நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாது அந்நோயின் கொடிய பிடியில் சிக்கி மாண்டவரே.  கான்சர் நோய் வீட்டுக்கு வீடு  என்று ஆகி விட்ட சூழலில் கேன்சரை மிகவும் கொடியதாக காட்டி காண்பவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தி வெற்றி காணும் யுக்தி இப்படத்தில் பிரயோகிக்கபட்டுள்ளதையும் நோக்க உள்ளது. ஸ்ரீவித்யா தான் இறக்கும் 2 நாட்களுக்கு முன்பும் தான் உயிர் பிழைப்பேன், தன் வீடு செல்வேன் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்துள்ளார்.   ஒரு காலத்தின் ஒரு நிகழ்வின், ஒரு சம்பவத்தின் உண்மையை பிரதிபலிக்க வேண்டிய சினிமா என்ற ஊடகம், கற்பனை கதையால் அவருடைய உண்மை வாழ்க்கை கதையை மாற்றி படம் பிடிக்க உரிமை உண்டா?
                                                                                                                                                                                     ஷரத் என்ற இசைஅமைப்பளரின்  இசையும் ரfபீக் அகமதுவின் பாட்டின் வரிகளும் அழகானவைபடம் முடியும் போது ஸ்ரீவித்யா ஒரு சோக கானமாக நம்மை விட்டு அகலாது நம்முடன் பயணிக்கின்றார்!!!!

12 Aug 2011

சமச்சீர் கல்வி நிஜமா நிழலா?


சமச்சீர், சமச்சீர் என கேட்டு கேட்டு இப்போ எப்போ முடிவுக்கு வரும் என்றாகி விட்டது. ஆனால் அந்த ஆசையிலும் மண் விழுவது போல் தான் நேற்று, இன்றைய  நாளேடுகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பள்ளியில் படிக்கும் மகனிடம் “தம்பி  கதை புத்தகமாவது எடுத்து படியுங்க நேரத்தை  விரயப் படுத்தாதீர்கள்” என்று  சொல்லும் நிலைக்கு  பெற்றோர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.

சமச்சீர் கல்வி திட்டம்,  இதன் நோக்கம் எல்லாம் நல்லதாக இருந்தாலும் ‘கழுதை பொதியில்  வாய் வைத்தது போல்’ தேவைக்கு அதிகமான அரசியல் புகுந்து நாசம் செய்து விட்டது இந்த நல் திட்டத்தை!.  தமிழகத்தில் அரசு பாடதிட்டம், மத்திய அரசு பாடதிட்டம், ஆங்கிலோ இந்தியன்,  மெட்ரிகுலேசன் என்று 4 பிரிவுகளாக இருந்ததை ஒரே திட்டத்திற்க்குள் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆவலர்கள் சிந்தனையாளர்கள் கல்வியாளர்களால் ஆரம்பிக்கப் பட்ட திட்டம்; சமூக சிந்தனையற்ற அரசியல் வாதிகளால் இவ்விதம் வந்து நிற்க்கின்றது.  2006 ல் மக்களின் வேண்டுதலுக்கு இணங்க பாரதிதாசன் முன்னால் பல்கலைகழக துணைவேந்தராக இருந்த குமரன் தலைமையில் குழு அமைத்து அவர்கள் சமர்ப்பித்த கொடுத்த 109 பரிந்துரையில் வெறும் 4 பரிந்துரைகளை மற்றுமே ஏற்று கொண்டு சமச்சீர் கல்வி என பெயரிட்டு ஆரம்பத்த்திலே பெரிய கப்பலுக்கு ஒரு சிறு ஓட்டை இட்டு கடலுக்குள் பயணத்திற்க்கு அனுப்பியது தான் இந்த சமச்சீர் கல்வி திட்டம்!   திட்டம் 2006 ல் ஆரம்பித்தாலும் 2009 ல் சமச்சீர் கல்வி சட்டம் அமலுக்கு வந்து,   2010 ல் நடைமுறைபடுத்த பட்டுள்ளது,  அதுவும் இரண்டே இரண்டு வகுப்புகளுக்கு மட்டும் 6 ம் 9 ம் வகுப்புகள்.  இந்த வருடவும் தனியார் பள்ளிகளுக்கு தமிழ் பாடம் தவிர்த்து மற்று பாடப் புத்த்கங்கள் எந்த  பாட திட்டத்திலும் தேர்வு   செய்ய அனுமதி கொடுத்திருப்பது நகைப்புக்குரியதாக தான் இருக்கின்றது.http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=3098

சமச்சீர் என்ற பெயருக்கு பதிலாக தமிழக பொது கல்வி என பெயரிட்டிருக்கலாம்.  சம தர்மபுரம், சமத்துவபுரம், சம பந்தி போன்றே கல்வியிலும் அரசியல் புகுத்தியிருக்க வேண்டுமா என்று கேட்க தோன்றாதில்லை.   நம் குழந்தைகள் சாற்றிதழிலும் இதே பெயர் தான் வரும் அடுத்த மாநிலங்களில் சொல்லவே தயங்கும் வார்த்தையாக இருக்கும் இது.   மேலும் ஒரு குழுவை நியமித்து கருத்து கேட்டு விட்டு அதில் 109 பரிந்துரைகளில் வெறும் 4 மட்டும் எடுத்தால் என்ன சிறப்பான பலன் கிடைக்க  போகின்றது இத்திட்டத்தால்.  பிரதான பரிந்துரைகளான பொதுபள்ளி முறை, தாய் மொழி கல்வி ஏற்று கொள்ளப்படவில்லை. இதற்க்கு காரணமாக சொல்லப்படுவது பெற்றோர் ஏற்று கொள்ளவில்லை என்பதாகும் . பெற்றோர் என்பவர்கள் யார் அரசு பள்ளி பெற்றோர்களா தனியார் பள்ளி பெற்றோரா? அதை பற்றி ஒரு ஆக்கபூர்வமான விவாதம் அல்லது ஓட்டெடுப்பு நடந்ததாகவும் தெரியவில்லை!  பிரான்ஸ், நோர்வே, சுவிஸ், ஜப்பான், ஜெர்மனி, சீனா   போன்ற நாடுகளில் தாய் மொழியில் பாடம் கற்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் ஆங்கில மோகம்.  அப்படியே தேவை என இருப்பினும் கேரளா மாநிலங்களில் போன்று ஆங்கில வழி, தமிழ் வழி என ஒரே பாடதிட்டத்தில் கொடுக்கலாம் தானே.  தற்போது கூட எங்கள் ஊரில் அரசு பள்ளிகளால் தமிழ், ஆங்கிலம், மலையாளம் வழி கற்பிக்கும் போது தமிழகத்தில் மட்டும் இது ஏன் சாதியப் படுவதில்லை.

பள்ளி திறக்க வேண்டியது ஜுன் 5 ஆனால் திறந்ததோ  15 தியதி தான்; புத்தகமோ இன்னும் 100 நாட்களாகியும் கொடுக்கப்படவில்லை.   இந்நாட்டு அரசியல் வாதிக்கு  வரும் தலைமுறை பற்றி  என்ன அக்கறை.  இதில் வேறு, வெற்றி எனக்கு- தோல்வி உனக்கு என்ற போட்டி வேறு.  இவர்கள் குழந்தைகள் சமச்சீர் கல்வி பள்ளியில் படிக்க போவதில்லை என்பதே உண்மை.  இப்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து விதியும் வந்து விட்டது  புத்தகம் கொடுக்க சொல்லி ஆனால் மோசமான பகல் கொள்ளையர்களான தனியார் பள்ளிகள் தங்கள் நிலைபாட்டை சொல்லிவிட்டனர், இரண்டு வகை புத்த்கங்களும் பாவிப்பார்களாம் பள்ளியின் பெயரை மெட்ரிக்குலேசம் என்று தான் இருக்குமாம், பள்ளி கட்டணம் மழலை பள்ளிக்கு 5ஆயிரம், 8 வகுப்பு வரை மாணவனுக்கு 15 ஆயிரம், 10 வகுப்பு வரை மாணவர்களுக்கு 20 ஆயிரவும், 12 வகுப்பு வரை மாணவனுக்கு 25 ஆயிரவும் வேண்டுமாம்.   இதுவெல்லாம் எப்போதோ வாங்கி விட்டனர் பெற்றோரிடம் இருந்து பள்ளி நிற்வாகத்தினர்.  8 வகுப்பு படிக்கும் மாணவனுக்கு சேர்க்கும் போது 15 ஆயிரம் 2வது பருவத்திற்க்கு 5,500 ரூபாய் 3 வது பருவத்திற்க்கு 4 ஆயிரம்.
மேலும்  ஒவ்வொரு பள்ளியிலும் மத்திய கல்விக் கழக பாடதிட்டம்  பள்ளி ஆரம்பிக்க அனுமதி வேண்டுமாம். கொள்ளைகாரனை திருத்த வழியில்லை போல் தான் தெரிகின்றது.  அரசு குழு அமைப்பது, புத்தகங்கள் போட்டிக்கு  அச்சிட்டு பணத்தை விரயம் பண்ணுவதற்க்கு பதில் ஊருக்கு ஊர் அரசு பள்ளி நிறுவ வேண்டியது அவசியமே. தற்போது 12 ஆயிரம் தனியார் பள்ளி உண்டு என கணக்கிலிடப் பட்டுள்ளது.  இவை யாவும் அரசு உடமையாக்க வேண்டும். அது மட்டுமே தீர்வாக முடியும்.  தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணம் மட்டுமல்ல பயண வசதி, கேண்டீன் வசதி, மேலும் குடி தண்ணீருக்கு கூட பணம் வசூலித்து விடுகின்றனர்.

அரசியல் அமைப்பு சாசனத்தின் 21 ம் பிரிவில் வலியுறுத்தும் படி கற்கும் உரிமை அடிப்படை உரிமை என்றும் அனைத்து 14 வயது வரையிலுமுள்ள குழந்தைகளுக்கு  தரமான இலவசமான கல்வி வழங்க வேண்டும் என்பதே.  அரசும் தனியார் நிர்வாகவும்  சேர்ந்து கூட்டு வைத்து கொண்டு உரிமையை மறுதலிப்பது வழி அரசியல் சாகனத்திற்க்கே சவால் விடுகிறது போல் அல்லவா உள்ளது.


இன்னொரு விமர்சனம் பாடபுத்தகங்கள் தரமில்லை என்பதாகும்.  சமச்சீர் கல்வி  புத்தகங்கள் 150 கல்வியாளர்களால் 200 கோடி செலவில் 9  கோடி பாடநூல்கள் 197 தலைப்புகளில் அச்சிட்டுள்ளனர். பாடபுத்தகங்களுக்கு என உழைத்தவர்களையும் கேலிக்கு உள் ஆக்குகின்றனர் என்பது தானே அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது. அரசியல் நோக்கமுள்ள பாட பகுதியை நீக்கி விட்டு பாடபுத்தகங்களை கொடுத்திருக்கலாம்.  தனியார் பள்ளிகளில் தரும் புத்தகவும் தரம் பார்த்தா கொடுக்கின்றனர்?  புத்தகம் பதிப்பாளர்களின் கமிஷன் கண்டு வாங்குகின்றனர் என்பதும் அறிந்த உண்மையே. ஒரு வேளை புத்தக்கங்கள் தரமுள்ளதாகினும் கற்பிக்கும் ஆசிரியர்களின் தரவும் நோக்க வேண்டியுள்ளது.  கடந்த வருடம் என் மகன் படித்த நெல்லையில் பெயர் பெற்ற பள்ளியில்  ஒரே வருடத்தில்  4 வகுப்பு ஆசிரியைகள் மாறிமாறி வந்தனர்.  கல்வியில் பட்டபடிப்பு தேற்வாகாத ஆசிரியைகளை கூட நியமித்திருந்தனர்.   தனியார் பள்ளியில் ஆசிரியைகளுக்கு 2-4 ஆயிரத்துக்குள் ஊதியம் கொடுப்பதும் மட்டுமல்லாது அவர்களை கேள்வி கேட்க இயலாத அடிமைகளாக வேலை வாங்குவதால் அவர்கள் கொள்ளும் மன அழுத்தம் குழந்தைகள் கல்வியிலும் பாதிக்கின்றது என்பதை மறக்கல் ஆகாது.

பொதுகல்வி திட்டத்தில் என்ன தான் குறைகள் இருந்தாலும் தற்போதைய தமிழக கல்வி சூழலில் ஒரு மாற்றம் நிச்சயமாக தேவையே.   மேலும் கேரளாவில் போல் அரசு சேனல் நிகழ்ச்சியாக ஒவ்வொரு பள்ளியின் செயலாக்கத்தையும் சமூகம் கேள்வி கேட்க தளம் கொடுக்க வேண்டும்.  ‘நான்’ அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவன் என்ற வேறுபாடு குழந்தைகள் மனதில் மறைய வேண்டும்.   தனியார் பள்ளி மாணவனை ஒரு அடிமையை போன்று உருவாக்குகின்றனர் போராட்ட குணம் இல்லாது வெத்து பந்தாவில் வாழும் சூழலும்  நிலவுகின்றது.  வாசிப்பு  திறன்,  நாட்டு நலனில் அக்கறை அற்றவர்களாகவே கிணற்று தவளை போல் தான் உருவாகின்றனர்.  அவர்கள் போட்டியிடும் விளையாட்டுகளில் கூட அரசு பள்ளி தனியார் பள்ளி மாணவர்கள் ஒன்றாக பங்கு பெறாது இருப்பது இன்னும் கண்டனத்திற்க்கு உரியதே. 

அரசு அதிகாரிகள் பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டம் வர வேண்டும்.
அரசு பள்ளியிலும் ஒரு வகுப்பில் 100 -150 மாணவன் என்ற நிலை மாறி 20-30 மாணவன் என்ற நிலையில் வசதிகள் பெருக்க வேண்டும்
கல்வித் துறையை அரசியல் நோக்கமில்லாத குழு கண்காணித்து வழிநடத்தும் சூழல் உருவாக வேண்டும்

இன்று அரசு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று எல்லா தனியார் பள்ளிகளையும் அரசு உடமையாக்கி ஒரே சமூகமாக சமதர்ம சமூகமாக உருவாக்குவது தான் . மெட்ரிக்குலேசன் வந்த பின்பு மனிதமான்பு, பண்பு அன்பு எல்லாம், சிறார்கள் மத்தியில் குறைந்துள்ளது என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். ஆசிரியர்கள்- மாணவர்களை ஆகட்டும் மாணவர்கள் தங்களுக்குள்ளும் பெயர் சொல்லி பண்பாக பழகுவதை விடுத்து ஏய்  பாய்(Ai boy!) என்று அழைக்கும் கலாச்சாரமே வளந்து வருகின்றது என்பது துயர் தரும் நிஜம் ஆகும்!!!

10 Aug 2011

சாயா வேணோ ....சாயா....



இந்த வாரம் ஒரே படபடப்பா போச்சுது.  ஒரு டீ போட்டு குடிச்சா எல்லா மண்டைக்கனவும் போயிடும். அதான் டீ போட போறேன் உங்களுக்கும் ஒரு கப் டீ?


டீயில் ஒரே பொருட்கள் தான் சேர்த்தாலும் கூட அதன் சுவை, மணம், திடம் எல்லாம் டீ தயாரிக்கும் ஆளுக்கு ஆள் போல, சேர்க்கும் பொருளின் அளவுக்கு அளவு மாறுபடும்.  என் சித்தி வீட்டில் டீ என்பது ஹார்லிக்ஸ் மாதிரி தான் இருக்கும்.  சில வீடுகளில் குடிக்க தருவது டீயா? காப்பியா? என்று புரிவதில்லை!   ஹிந்திக்கார நண்பிகள் இருந்தார்கள்;  ஸ்வெட்டர் பின்னி படிக்க தோழியுடன் செல்வது உண்டு. அவர்கள் வீட்டில் வேலைக்காரர்கள் இருப்பதால் எங்களை கண்டவுடனே மாடசாமி 2 கப் டீ கொண்டு வாங்கோஎன்று கட்டளை இட்டு விடுவார்கள்.  நாங்களும் வேண்டாம், இப்போது தான் சாப்பிட்டு வந்தோம் என்று எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க. இல்லைங்கோ ஒரு டீ குடிங்கோ என்று அன்பாக சொல்லி தரும் டீயை குடிக்காது எப்படி இருப்பது? ஆனால் டீயுடன் சேர்ந்து அடிக்கும் ஒரு நெடி தான் இன்று நினைத்தாலும் பயமாக உள்ளது.  நானும் என் தோழியும் நல்ல ஆற வைத்து ’டக்’கென்று ஒரே மடக்கில்  குடித்து விட்டு கண்களால் பார்த்து ஆறுதல் பட்டு கொள்வோம்.  கழுவாத கப்பில் இருந்து வந்த நெடியா, அல்லது டீஇனி கேட்கப்பிடாது என்று அவர்கள் வேலைக்காரர் ஏதும் சேர்ப்பாரா என்றும் தெரியாது.

சில வீடுகளில் ஒரு பாத்திரத்தில் பால், தண்ணீர் , சீனி, தேயிலை எல்லாம் மொத்தமாக போட்டு கொதிக்க வைத்து அதை அப்படியே வடிகட்டி தேயிலை டீ என்று தந்து விடுவார்கள்.   கொஞ்சம் முந்தி கொண்டு, காப்பி தாங்கோ என்று வாங்கி குடித்தால் தப்பிக்கலாம்.

மாமியார் வீட்டில் தான் சுவையான டீ அருந்தினேன்.  என்னவர் வீட்டில் பசுமாடுகள் இருந்ததால் பால் எப்போதும் சுண்ட சுண்ட அடுப்பில் காணும்.  அந்த பாலில் டீ போட்டு தரும் டீ எனக்கு மட்டும் ஹராமாக இருந்த்து. மாமியார், என்னவர், மாமனார் கொளுந்தனார்  என அவர்கள் எல்லோருக்கும்  4 டம்ளருகளில் வரும் போது, எனக்கு மட்டும் அடுப்பாங்கரையில் உள்ளது கலந்து குடித்து கொள் என்று கூறி விடுவார்கள்.  யாரும் காணாது என்னவரிடம் டீ வாங்கி குடித்து விடுவதே என் வழக்கமாக இருந்ததுபின்பு எங்கள் வீட்டில் நான், இடும் டீயை என்னவர் குடித்து விட்டு “நாய் கூட குடிக்காதுஎன்ற போது தான் உருப்படியான ’டீ’ இட கற்று கொள்ள ஆவல் வந்தது!

எங்கள் ஊர் வண்டிபெரியார் ஏரியா (கேரளா) தேயிலை பயிறிட்டு தயாரிக்கும் இடம் ஆகும். ஒவ்வொரு எஸ்டேட் தேயிலைக்கும் அதன்  தயாரிப்பு முறை சார்ந்து அதன் ருசியில் மாற்றம் காணும்.

தேயிலை 4500 வருடங்களுக்கு முன்பே   சீனாவில் பயன்படுத்தியாதாக  சொல்லப்படுகின்றனர்.  சீனர்கள் கியா(kia) என்றது சா(cha) என்று மாறியது. பின்பு வெள்ளகாரர்கள் சொல்வது தான் வேதவாக்கு என வந்த போது  ‘சா’  டீ யாக மாறியது

2.5 மிலியன் டன் தேயிலை உற்பத்தி செய்யும்  இந்தியாவில் 3 மிலியன் டாலர் அன்னிய செலாவணி  ஈட்டி தருவதாக தேயிலை உள்ளது. அருணாசல் பிரதேஷ், பர்மா போன்ற இடங்களில் 12 நூற்றாண்டில் இருந்தே பயன்படுத்தியதாக சொல்கின்றனர். இந்த தேயிலை செடி  40 உலக நாடுகளிலும் பயிர் செய்கின்றனர்இந்தியாவில் டார்லிஜிங், ஆசாம், கேரளா தமிழகத்தில் நீலகிரி போன்ற மாவட்டங்களில் தேயிலை பயிர் செய்யப்படுகின்றது

ஷென் நங் என்ற ஒரு வைத்தியர் மருந்து தயாரித்து கொண்டிருக்கும் போது தவறுதலாக தேயிலை இலை வென்னீரில் விழுந்ததாகவும் அவர் அதன் மகிமையை கண்டு தேயிலை பயன்படுத்த ஆரம்பித்தாகவும் சொல்லப்படுவது உண்டு.  இன்னும் ஒரு கதையும்  உண்டு;  இந்தியாவில் இருந்து தியானத்திற்கு  சீனா சென்ற போதிதர்மா  என்ற துறைவி தான் தூங்காது தியானத்தில் இருக்க  தன் சக்தியால் உருவாக்கியதே தேயிலை செடிகள் என்றும் ஒரு  சுவாரசியமான கதை உலாவுகிறது

எது எப்படியோ வெள்ளைகாரர்கள் இந்தியாவில் ஆட்சி செய்தபோது  பஞ்சபாண்டவர்கள் தங்கள் மனைவி பாஞ்சாலியுடன் மறைந்திருந்து வாழ்ந்து வந்தகொடூர மேற்கு தொடர்ச்சி மலையில் தேயிலை பயிரிட்டு பல லட்சம் மக்களுக்கு, சிறப்பாக தமிழகத்தில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் வந்த  மலையக தமிழ் தமிழர்களுக்கு வாழ்வாதாரமாகவும் வாழ்வு அளித்ததும் இத்தேயிலை தோட்டங்களே.  ஒரு காலத்தில் தமிழர்களின் உழைப்பின் வழியாக தமிழர்களின் கோட்டையாக இருந்த தேயிலை தோட்டங்கள் வெளிமாநில முதலாளிகள் கைகளில் இருந்து மலையாளி முதலாளிகள் கைவசம் மாறும் தோறும் தமிழன்  இடம் நகர்ந்து தமிழகம் நோக்கி நகர உந்த படுகின்றான்.

தேயிலை தோட்டங்கள் பார்க்க பச்சை பட்டு சேலை உடுத்திய அழகான மங்கையாக எல்லோருக்கும் காட்சி அளித்தாலும் அதில் தங்கள் உழைப்பை சிந்தும் மக்கள் வாழ்க்கை  அவர்கள் பண்பாட்டு தளங்கள் என பல வித்தியாசமான வியற்பூட்டும் பரிணாம கதைகள் கொண்டது!  எப்படி ஜாதியும் மதவும் சமூகத்தை பிரித்து வைத்ததோ, அதே போல் தேயிலை தோட்ட மனிதர்களை அரசியலும் அதிகாரமும் ஆணவவும் ஆண்டு கொண்டிருக்கிறது.


சரி சரி கதைத்தது  போதும். தேத் தண்ணீர் போட ஆரம்பிப்போம்
·     
   1.அடுப்பை பற்ற வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைய்யுங்கள்.

·    2.  ஒரு சிறு பாத்திரத்தில் ஒரு நபருக்கு ஒரு சிறு கரண்டி தேயிலையை எடுத்து கொள்ளுங்கள்.

·  3. நன்றாக கொதித்த  நீரை டீத்தூள் போட்டு வைத்துள்ள பாத்திரத்தில் நேரடியாக ஊற்றி 5-6 நிமிடம்  மூடி வைத்து விடுங்கள்.
     
     6.ஒஒரு போதும் டீ தூளை  இட்ட பின்பு தண்ணீரை கொதிக்க விட கூடாது டீயின் உண்மையான ருசி மாறி கசப்பு கலந்து விடும்.

·     4. இனி கொதித்த பாலை சீனி கலந்து ஒரு கோப்பையில் எடுத்து அதில் இந்த டீ கலவையையும் வடி கட்டி ஊற்றி கலர் வைத்தே கடுப்பம் போதுமா என்று தெரிந்து கொள்ளலாம்
5. 5. இனி நல்ல 5- 6 ஆத்துhttp://www.youtube.com/watch?v=LXlrtrjAo7U&feature=related
·        
டீ ரெடி வாங்கோ குடிப்போம்.

(குறிப்பு:  இலை தேயிலை என்பவையை கொதிக்க வைத்தால் அதன் உண்மை சுவை மறைந்து விடும்.  இவ்வகையான தேயிலை தூள்களை டிக்காஷன் போன்று எடுத்து பயண்படுத்த மட்டுமே வேண்டும். )

 இந்த கட்டன் சாயாவுடன் எலுமிச்சம்இஞ்சிபுதினா இலை போன்றவையில் ஏதாவது ஒன்று சேர்த்து குடித்தால் இன்னும் பல வகை சுவையில் குடிக்கலாம். தற்போது பல வித ருசிகளில் தேயிலை பொடியாகவே தயாரிக்கப்பட்டு வருகின்றதுடீ குடிப்பதால் பித்தம் தாக்க கூடும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அற்புத நோய் வராது தடுக்க கட்டன் சாயா நல்லது என்றும் சொல்கின்றனர். தேயிலையை காற்று புகிராத டின்னுகளில் போட்டு வைத்து பாதுகாக்க வேண்டும் மற்று பொருட்களுடன் வைத்தால் அதன் மணத்தையும் சுவாகரித்து  இதன் சுவை  மணம் மாறி போக வாய்ப்பு உண்டு.


ஏழைகள் வீட்டில் பால் எப்போதும் இருப்பதில்லை, மேலும் சில பணக்காரர்களுக்கு கொழுப்பு, சர்க்கரை வியாதி தாக்கி விடுவதால்  பாலை தவிற்கும் நோக்குடன் கட்டன் சாயா குடிக்க உந்தப்படுவது உண்டு. தேயிலை தோட்ட தொழிலாளிகள் வீட்டு தேத்தண்ணீர் வித்தியாசமான  கருப்பட்டி சேர்த்த ருசியான டீயாக இருக்கும்.  சிறிய பீங்கான் பாத்திரத்தில் ஸ்டைலுக்கு குடிப்பவர்கள் அல்ல அவர்கள். காலை 6.30 மணிக்கே வேலைக்கு செல்ல வேண்டி வருவதால் பெரிய சட்டியில் கொதிக்க வைத்து கருப்பட்டியும் சேர்த்து செம்பு போன்ற பாத்திரங்களில் எடுத்து செல்வர்கள்.  மேலும் பல்லு கூசும் குளிரில் தேத்தண்ணீர் அவர்களுக்கு உணவு, குளிர் நிவாரணி எல்லாமாகின்றது.

மேலும் black tea என்று அழைக்கப்படும் இந்தகட்டன்சாயாதான் மருத்துவர்கள் பரிந்துரைப்பது.  

அற்புத நோய்க்கு சிறந்த நிவாரணி என்று சொல்லி வந்தாலும் தற்போதைய காலத்தில் தேயிலை தோட்டங்களுக்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்து இதை எல்லாம் கேள்விக் குறியாக்குகின்றது.



கழிவு டிக்காஷனை குப்பையில் போடாது, ரோஜா செடிக்கு இட்டால், செடி அழகான பூக்களை நமக்கு தரும்

6 Aug 2011

அம்மாவுக்கு ஓர் கடிதம்!


அன்புள்ள அம்மா, உன் பாச மகள் எழுதி கொள்ளும் கடிதம்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                      அம்மா இன்றும் கொடும் துர்-கனவு கண்டு எழுந்து விட்டேன்.  என் இதயம் ஈட்டியால் குத்தியது போல் வலிக்கின்றது.  நான் என்ன தவறு செய்தேன்.  உன்னை மறக்க நினைக்கும் தோறும் நினைவுகளில் தினம் வந்து என்னை கொல்லுகின்றாய்.    அதன் காரணம் தான் என்னால் உணர இயலவில்லை .  2 வயதில் 4 வயது குழந்தையாக வளர்க்கப்பட்டேன். 14 வயது வந்த போது நீ என்னை 20 வயது மங்கை ஆக்கினாய், திருமணம் வழியாக ஒவ்வொரு தாயும் சுகமாக வாழ அனுப்பும் போது நீயோ என்னை போரிட அனுப்பினாய். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து உன் கண் அசைவில் தானே நான் சிந்தித்தேன், இருந்தேன், நடந்தேன், வளர்ந்தேன்.  உன் முன் கோபத்தால் தேவையற்று தண்டித்து விட்டு தேவைக் கதிகமான பாசத்தால் நீ அருகில் வரும் போது நான் எல்லாம் மறந்தேன். ஆனால் அதுவெல்லாம் இன்று என்னை இப்படி வதைத்து சாம்பலாக்கவா ?
                                                                                                                                                                   நீ சுந்தரம் டெய்லரிடம் ஒரு மாபெரும் டிசைனர் போல் எனக்கென துன்னிய சிவப்பு நிற கவுண் இட்டு   முதலாம் வகுப்புக்கிற்க்கு சென்றது நினைவு வருகின்றது.   உன் பிரிவை தாங்காது பள்ளி திரும்பி வீடு வந்து நீ பூட்டி இட்ட அரை வாசல் கதவில் பிடித்து தொங்கி அழுததும் நினைவு வருகின்றது.   பின்பு நீ வாங்கி கொடுத்த எனக்கு பிடித்த தின் பண்டம் போண்டாவை அல்லது பண் ரொட்டியை வாங்கி தின்று விட்டு நீ எனக்கு முகம் கழுகி பவுடர் இட்டு, பொட்டு,பூ வைத்து முத்தம் இட்டு அனுப்பும் பள்ளி நாட்கள் மட்டுமல்ல;  10ஆம் வகுப்பு வரையிலும் இரட்டை சடை பிண்ணி,  சோற்றை வாயில் ஊட்டி விடும்  நாட்களும் தான் நினைவில் வந்து மறைகின்றதுதேவை இல்லாத இடத்தில் சிரித்தேன், பேசினேன் என்று உன்னிடம் திட்டு வாங்கி அழுத்ததும் நினைவில் உள்ளது.
                                                                                                                                                               முதல் முதலாக  உயர்நிலை- பள்ளி படிப்புக்கு என உன்னை பிரிந்த நாட்கள் ஓடி வருகின்றது என் நினைவில். வாரம் 7 நாட்களும் உனக்கு நான் கடிதம் எழுதினேனே, அந்த கடித எழுத்து என் மகன் பிறக்கும் மட்டும் என்னை தொடர்ந்த்து வந்தது. நீயும் நானும் தாய்- சேயா, தோழிகளா என்று நம் உறவுகள் பொறாமைப் படும் மட்டும் நீ அன்பை பொழிந்து வளர்த்தாய்.  ஆனால் விடுதியில் இருக்கும் போது ஒரு கடிதம் வழியாக  “உனக்கு மாப்பிள்ளை முடிவெடுத்துள்ளோம் தட்டும் மாற்றி விட்டோம்  இனி எங்கள் வாக்கை காப்பாற்றுவது  உன் விருப்பம்என்று நீ கொடுத்த சுதந்திரவும் நினைவில் இருக்கின்றது.   
                       கல்யாண பந்தலில் அனுப்பும்போது கூட நீ என்னை வேட்டைக்கு என்பது போல் உன் பணம் நகை பறி போகின்றது என்று அழுது சாபம் இட்டு அனுப்பி விட்டாய்.  நான் ஏதும் மறுபேச்சு கேட்டேனா?  "என்னை மறந்தால் நீ விளங்க மாட்டாய்" என்று உன் அன்பு மிகுதியால் நீ ஆசிர்வதித்த வார்த்தைகள் தான் என் நெஞ்சில் இப்போது மிதக்கின்றது .  அந்த சாபத்திற்க்கு ஆளாகும் நாள் என் வாழ்வில் ஒரு போதும் வராது என்று நான் நினைத்தது இன்று பொய்யாகி விட்டதே என்று தான் இன்று பரிதபிக்கின்றேன்.
                    எனக்கு கிடைத்த வாழ்க்கையில் சிறப்பாக ஓட நான் துடித்து கொண்டிருக்கின்றேன். இன்றும் உன்னை கட்டி பிடித்து அம்மா என்று உன் அருகில் வர ஆசிக்கின்றேன் நீயும் மக்களே என்று அழைத்து முத்தமிடுவாய் என்று நினைப்பது உண்டு.  ஆனால் நீ என்னை காணும் போது உன் கணவருக்கு இப்போது வருமானம் எவ்வளவு, உனக்கு வேலை கிடைத்து விட்டதா என்ற கேள்வி மட்டும் தான் வரும் என்பதும் எனக்கு தெரியும்

                           தம்பி வெளியூரில்  சென்று படிக்க மாட்டேன் என்ற போது என் படிப்பையையும் சேர்த்து மட்டுப்படுத்தியதும், நம் குடும்ப சொத்தை காப்பாற்ற என்னை அடி மாடு போல் விற்றதும் கூட இப்போது தான் புரிந்து வருகின்றது. இனி உன்னிடம் வந்து மன்னிப்பு கேட்கலாம் என்றாலும் என்ன தவறு நான் செய்தேன் என்று நான் கேட்டு கொண்டே இருக்கின்றேன் தற்போது.

திருமணம் என்ற பெயரில் கடலுக்கும் பேய்க்கும் நடுவில் கொண்டு விட்டு விட்டு நீயும் சேர்ந்து வேடிக்கை பார்க்கின்றாய்.   என்னை வைத்து தாய் பாலில் விஷம் கலந்து விட்டது என்று சொல்ல வைத்தாய்.  தாய் பாசத்திலும் வேஷம் உண்டு என்று என்னை நம்ப வைத்தாய்.  எனக்கு என்று ஒரு உலகம் தந்தாயா? உன் கையிலும், கண்ணிலும் வளர்ந்த என்னால் யாரிடமும்  நட்பு பேணி பழகவும் தெரியவில்லைஎனக்கு சுற்றும் உன்னை தவிற வேறு உலகம் ஏன் தரவில்லை நீஇன்றும் சுற்றும் முற்றும் யாரும் இல்லாத உலகில் நான் என்னுடன் கதைத்து கொண்டே இருக்கின்றேன், தூக்கத்திலும் எனக்கு நிம்மதி தருகின்றாயா? அழுது விழிக்கின்றேன் என் கனவில் கூட எனக்கு நீ விடுதலை  தரவில்லை! 300 கி.மீ உன்னை விட்டு பிரிந்து வரும் போது தனிமையில் அழுது புலன்பினேன் இன்றோ 3000 கி.மீ உன்னை விட்டு போய் விட மாட்டேனா என்று துடிக்கின்றேன்.

அப்பா சொன்னார்கள் உனக்கு பிடிக்காத அத்தை வீட்டிற்க்கு சென்றது தான் கோபம் என்று நான் வந்ததோ  3 வருடம் கடந்து உனக்கு ஒவ்வொரு முறை நான் வரும் போதும் ஒவ்வொரு அத்தையுடன் ஊடலில் இருப்பாய். நான் என்ன பிழை செய்தேன் அவர்களிடம் பேசக் கூடாது என்று. அடுத்த முறை நான் வரும் போது நீ இந்த அத்தையிடம் கூடலிலும் இன்னொரு அத்தையிடம் ஊடலிலும் இருப்பாய் என்றும் எனக்கு தெரியும். எனக்கு யாரும் சத்திருவுமில்லை உற்றவர்களும் இல்லை என்றும் தெரியும். இதற்க்கு என அப்பாவையும் என்னிடம் கதைக்க கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் உண்டு.  அல்லது இந்த காரணம் சொல்லி உன் மகனுக்கு அப்பா சொத்தை முழுதுமாக சேர்க்கும் வேலையின் இதுவும் ஒரு சதி வேலையா?

                 இன்றும் உன் பெருமைக்காகவும் உன் ஆசைக்குமாக தான் வாழ்கின்றேன்நீ ஆசைப்படுவது போல் கழுத்து, காது, கை நிறைய நகை அணிந்து என் பங்களாவில் இருந்து என் காரில் உன்னை பார்க்க வருகின்றேன், என் மக்களே என்று ஓடி வருவாயா என்று  நான் பார்க்க வேண்டும்.   அன்றாவது நம் உறவினர்கள் வீட்டிற்க்கு அழைத்து செல்வாயா, நம் கோயில் திருவிழா சப்பரம் காண தான் அழைத்து செல்வாயா?


                  இது எல்லாம் காலம் செய்த கோலமா அல்லது என் ஜென்ம பாபமா ஒன்றும் விளங்கவில்லை எனக்கு. உனக்கு புரிந்தால் என்னை போல் ஒரு கடைசி கடிதாசு எழுதி தெருவித்து விடு அம்மாஇதை விட நான் பிறந்த போதே அழகு இல்லை என்று கம்பிளிக்குள் ஒளித்து வைத்திருந்த போதே  கொன்றிருக்கலாம் தானே.

ஒரு துளி கூட நிம்மதியான தூக்கம் இல்லை எனக்கு!  நீ வளர்த்த உன் மகிமையா அல்லது என் எல்லா இழப்பிலும் நான் உன்னை தேடுகின்றேனாஎன் மனசாட்சிக்கு ஒரே ஒரு கவலை நீ என்னை விட்டு முன்னே போய் நான் உன் சாபத்தில் வாழ்வதை விட,  நீ  வந்து மக்களே என்று விடும் ஒரு சொட்டு கண்ணீரில் என்  ஆன்ம சாந்தி அடைய வேண்டும் என்பது தான்.

(என்னிடம் தன் கவலையை பகிர்ந்த என் உயிர் தோழிக்கும் அவர் அம்மாவுக்கும் இந்த கடிதம் சமர்ப்பணம்!!! )

3 Aug 2011

உறுமும் "உறுமி"! மலையாளத் திரைப்படம்




உறுமி என்பது போரில் பயன்படுத்தும் ஒரு ஆயுதம் ஆகும்.       சந்தோஷ் சிவம் இயக்கத்தில் பிரத்வி ராஜ், பிரபு தேவா, ஜெனிலியா  நடிப்பில் கேரளக் கரையில் இருந்து மார்ச் 2011 மலையாளம் மொழியில் வெளிவந்த திரைப்படம் ஆகும் றுமி .
வாஸ் கோ டா காமா என்ற மேல்நாட்டு பயணி லிஸ்பனில் இருந்து 15ஆம் நூற்றாண்டில் ஒரு குழுவாக ஆப்பிரிக்கா கண்டம் வழி கேரளா கோழிக்கோடு வந்து சேர்ந்தார்.  கேரளாவிலுள்ள அளவில்லா வளங்கள் கண்டு சிறப்பாக குருமிளகு வியாபரம் செய்யும் நோக்குடன் அடுத்தடுத்து  இரு முறை ஆயுதங்களுன் வந்து  கொச்சின் நாட்டு மன்னரை கைப் பாவையாக வைத்து கொண்டு குறும்நில மன்னர்களான சாமூதிரிகளை அடக்கி கேரளா நாட்டு மக்களை கொன்றும் துன்புறுத்தியும் கேரளா மண்ணை எவ்வாறாக கையகப்படுத்தினர் என்பதே கதைத் தளம்.  அதையும் தற்கால பன்னாடு நிறுவன்ங்களின் ஊருடவலையும் அழகாக ஒப்பிட்டு காட்டியுள்ளனர்.


சாதாரண திரைப்படம் போன்று அல்லாது நிழலையும் நிஜத்தையும் பின்னி கதைசொல்லியுள்ள பாணி வித்தியாசமாக உள்ளது.  காட்சி அமைப்புகள்  சில இடங்களில் நெருடலாக இருப்பினும் கூட சிவம் சந்தோஷின் கேமரா அழகாக படம் பிடிக்கின்றது .  பின்னிசையும்  நன்றாகவே உள்ளது ஆனால் மனதில் நினைக்கும் படி இல்லை என்பது ஒரு குறையே!  திரைக்கதையும் மெச்சும்படி இல்லை தமிழும் அல்லாது மலையாளமும் அல்லாது கதைப்பது ரசிக்கும்படியாக இல்லை தான்.

கதை இப்படியாக தொடங்குகின்றது கேரளாவை சேர்ந்த கோவாவில் வேலை செய்யும் இளைஞர்கள் வாழ்க்கையில் ஒரு கோட்பாடும், கட்டுபாடும் இன்றி கிடைக்கும் பணத்தை செலவழித்து போதாதற்க்கு கடனும் வாங்கி செலவழித்து  டிஸ்கோத்தை ஆட்டவும் போட்டு நாட்களை கடத்தி செல்கின்றனர்அவரில் ஒருவர் ராஜ குடும்பத்தை சேர்ந்த பிரித்வி ராஜும் மற்றொருவர் அவர் நண்பரும் இஸ்லாம் இளைஞருமான பிரபு தேவாவும்.

ஒரு நாள் கேரளாவில் இருந்து ஒரு கட்டிடக் கலை பன்னாட்டு நிறுவனத்தின் ஆட்கள் வந்து பிரத்வி ராஜிடம் உங்கள் அம்மா வழி சொத்து  உங்கள் பெயரில் உள்ளது ஒரு கையெழுத்து மட்டும் இட்டு தந்தால் பணத்தை பெற்று கொள்ளலாம் என்கிறது.  பிரத்வி ராஜும் தான் வசிக்கும் நகரத்தில் இருந்து தன் மூத்த குடிகள் வசித்த கிராமத்திற்க்கு வருகின்றார்.  அங்கு அம்மாவின் நிலத்தில் ஒரு பள்ளி இயங்குகின்றது.  பள்ளி நடத்துபவர் வித்தியா பாலன் பிருத்வியிடம் சில உண்மைகள் புரிய வைக்கின்றார் மேலும் தெரிந்து கொள்ள அந்த மண்ணின் மக்களாம் பழம்குடி மக்களிடம் செல்ல பணிகின்றார்.  அங்கு ஆரியா சில கேள்விகள் வைக்கின்றார் உன் அப்பா யார் உன் அப்பாவின் அப்பா அவரின் முன்னோர்கள் யார் என  தெரியுமா என்று! சிறப்பாக இளைஞனின் முன்னோரான கேளு நாயனாரும் அவர் அப்பாவும் வாஸ்கோடி காமாவிடமும் அவன் மகனிடவும் போராடி உயிர் தியாகம் செய்ததை சொல்கின்றார்.  இளைஞரும் தன் சுயநலனுக்காக தன் பூமியை விற்பது இல்லை என உறுதி எடுக்கின்றார்.  விரும்பிய பணம் அல்ல; தன்  சொந்த நாட்டு மக்கள் வளமாக வாழவேண்டும் தன் முன்னோர்கள் ஆசைப்பட்டது நடக்க வேண்டும் என்று நினைத்து, கிடைக்க போகும் பணத்தை புரக்கணித்து விட்டு செல்கின்றார்.

 கதைக் கரு அழகானது தான்.  தற்காலைய அரசியல் வாதிகளையும் அக்கால மன்னர்களின் மந்திரியையும் சரியாக பொருத்தி பார்த்துள்ளனர்.  அதே போல் நாட்டுக்கு வெறும் பயணி போல் வந்து நாட்டை பிடித்த அயல்நாட்டவருடன் தற்காலைய பன்னாட்டு நிறுவங்களின் செயல்பாட்டையும் தராதரபடுத்தியுள்ளார்.    

பிருத்துவியின் நடிப்பு குறை சொல்லும் படி இல்லை பழைய காலத்து ஆண்களின் வலிமையை உடல் மொழியில் நடை, பார்வை வழியாக சிறப்பாக வெளிப்படுத்துகின்றார்ஆனால் இஸ்லாமிய தமிழ் நண்பனாக வரும் பிரபு தேவாவின் நடிப்பு தான் 'காமடி பீஸ்' போல் உள்ளது; நம் தமிழகப் படங்களில் வரும் விவேக் போன்று!   வீர- சூரத்திற்க்கு பெயர் போன தமிழர்கள் 15 நூற்றாண்டில் இப்படியாகவா இருந்திருப்பார்கள் என்று கேள்வி கேட்க வைக்கின்றது பல இடங்களில் அல்லது மலையாளிகளின் மேட்டுக்குடி பார்வையா என்றும் தெரியவில்லை?

 சொல்லும் கதை-கருத்துக்கு என சரித்திர உண்மைகளை பல இடங்களில் உடைத்து நெளித்துள்ளனர் என்று விமர்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   குதிரைகள் அக்காலத்தில் இல்லை என்றும் சில சம்பவங்களை வரலாறையும் மீறி பொய்யாக கதைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.  மேலும் ராஜ குடும்பம் என்று பிரத்வி ராஜை அடையாளப்படுத்துவதிலும் பிழை உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்நாளைய பெண்களின் பார்வை நடை உடை தான் சகிக்கவில்லை!  தற்காலைய  உலக அழகிகளில் பூனை நடை நடக்கின்றனர். இயக்குனர் சந்தோஷ் சிவன் ஒளிபதிவாளராகவும் இருந்துள்ளதால் காமரா கண் வழியாக அழகாக படம் பிடித்திருந்தாலும் இயக்குனர் என்ற நிலையில் பல இடங்களிலும் சறுக்கி விழுந்துள்ளார். சர்க்கரை பொங்கள் ருசியானது என்று சர்க்கரை அளவுக்கு அதிகம் சேர்த்து சாப்பிட்டு திகட்டி மக்கு பிடித்தது போலவே   உள்ளது பல இடங்களில் காட்சிகள்.  பல காட்சிகளும் கலை நயம் என இருட்டில் படம் பிடித்துள்ளது படம் பார்த்து கொண்டிருக்கும் நம் நிலையை மறக்க செய்து ஓவிய அருங்காட்சியகம் உள் நுழந்தது போன்ற ஒரு உணர்வு.

                                                                                                                                                                    
பாடல் காட்சிகள்http://www.youtube.com/watch?v=7LsDvcAcV88 கதைக்கு ஒட்டாது நிற்கின்றது என்று மட்டுமல்ல தபு, விந்தியா பாலன், புது நடிகை ரம்யா நாயர், ஜெனிலிசா போன்றவர்களை அழகான காவியமாக என்பதற்க்கு பதிலாக வாழைப் பழத்தை உரிப்பது போல் காட்டப் பட்டுள்ளனர்.   பட்டு போன்ற பெண்களை இப்படி அடித்து துவைத்து கிழித்து காயப் போட்டுள்ளதை ரசிக்க இயலாது   என்று இயக்குனர்கள் வரும் காலங்களிலாவது உணர வேண்டும்.  பெண்ணின் மார்பு அழகை படம் பிடித்து காட்டியே தீர்வேன் என்று பல இடங்களில் கவர்ச்சி தான் புகுந்துள்ளது.  ஜெனிலியா ஆயிஷா பீகம் என்ற இஸ்லாமிய அரண்மனை வாரிசாக வருகின்றார் அவர் மூடிய உடையுடன் வருவதும் திடீர் என எல்லாம் களைந்து வருவதும் உண்மையும் மீறி படம் பார்க்க தூண்டில் போட்டு மக்களை பிடிக்க உதவும் தந்திரம் மட்டுமே. ஆர்யா சில காட்சிகளில் வந்து போவார் நான் கடவுள்-பிதாமகன் சேர்ந்த கலைவையாக வருவது எரிச்சல் தான் தரவைக்கின்றது.
                                                                                                                                                                          
 இந்த படம் 200 மில்லியன் செலவில் தெலுங்கு ஹிந்தி தமிழ் ஆங்கிலம் மொழிகளிலும் எடுத்துள்ளனர் என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். படம் பார்த்து முடித்த போது ஏதோ ஒரு மனநிறைவு இன்மை!  இயக்குனர் நல்ல கதை சொல்லியாக இன்னும் உருவாகவில்லையோ?