விது வினோத்
சோப்ராவின் திரைப்படம் ‘ஷிகாரா’. இது 2020 ல் வெளிவந்தது. 1990 ல்
காஷ்மீர் பண்டிதர்கள் வெளியேற்றப்பட்டதை பின்புலனாக கொண்டு இளம்
தம்பதிகளான சிவ்குமார் தார் மற்றும் சாந்தி தார் வாழ்க்கையைத் மையமாகச் சொன்ன
கதை இது. காஷ்மீரி பண்டிதர்களின் அவலநிலையையும், துன்பங்களை எதிர்கொள்ளும் அவர்களின்
தீர்க்கமுடியாத வலிமையையும் தைரியத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த முயற்சியாகும்
இத்திரைப்படம்.
பல தசாப்தங்களாக
இருக்கும் தங்கள் சொந்த பூர்வீக ஊரில், அக்கம் பக்கத்தின் ஆதரவுடன் பாதுகாப்பாக இருப்பதாக
நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் ஆசிரியரும், இலக்கிய ஆர்வலர் சிவ் மற்றும் அவரது
மனைவி சாந்தியும். திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகிய நிலையில் அழகிய காஷ்மீர்
பள்ளத்தாக்கில் வகுப்புவாத பதற்றம் ஒவ்வொரு நாளிலும் அதிகரித்து வருகிறது தம்பதியினரை
கலக்கம் கொள்ள செய்கிறது. சிவ்வின் உயிர் நண்பன் லத்தீப்பின் அரசியல்வாதியான
தகப்பனார் கொல்லப்படுகிறார். அத்துடன் கிரிக்கட் விளையாட்டு வீரரான
லத்தீப், தீவிரவாத இயக்கங்களில் இணைந்து கொள்கிறார்.
தங்களுக்கு
தினம் பால் கொண்டு வரும் பால் வியாபாரி ”இனி உங்கள் வீடுகளில் நாங்கள் குடியிருப்போம்,
நீங்கள் தில்லிக்கு போக வேண்டியது தான்” என்கிறான் குடூரச்சிரிப்புடன்.பைத்தியக்காரன்
புலம்புகிறான் என எண்ணி ஆறுதல் அடைகின்றனர். ஆனால் ஜனவரி 19, 1990 இன் கொடூரமான
இரவு தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள, பல்லாயிரம் காஷ்மீரி பண்டிதர்களுடன்
தங்கள் பிறப்பிடத்தை விட்டு வெளியேறி அகதிகளாக தில்லி வந்து சேர்கின்றனர்.
முனைவர் பட்டத்திற்கு
சேர இருந்த சிவ், அகதிமுகாமில் ஆசிரியராக தன்னார்வத்துடன் பணிசெய்து கொண்டு தனது காதல்
மனைவியுடன், எல்லாவித துன்பங்களையும் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார். அத்துடன்
முப்பது வருடமாக அமெரிக்கா அதிபருக்கு தங்கள் நிலையை குறிப்பிட்டு தொடர்ந்து
கடிதங்களும் எழுதி வருகிறார். இத்தனை துன்பத்திலும் தங்கள் குழந்தைகள்
கல்வி பெற வேண்டும், மனித நேயர்களாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்.
காஷ்மீரில்,
ஆப்பிள் மலிவாக கிடைக்க பெற்றவர்கள், தில்லியில் தக்காளிப் பழத்தை உண்டு வாழும் சூழலுக்கு
தள்ளப்படுகின்றனர். ஒரு திருமண நிகழ்விற்கு பங்கு கொள்ளும் தம்பதிகள், தங்கள் தனித்த
காஷ்மீர் கலாச்சாரம் மறைந்து, சினிமா கேளிக்கை கலாச்சாரத்திற்குள் புதுத்தலைமுறை வந்தடைந்ததை
கண்டு வருந்துகின்றனர்.
30 வருடம் ஆகிவிட்ட நிலையில் இந்திய அரசாலும் தீர்வை கொடுக்க இயலவில்லை, அமெரிக்கா அரசும் எந்த பதிலும் தரவில்லை. அப்படி இருக்க தனது மனைவி, மூளை சம்பந்தமான நோய்க்கு தாக்கப்பட்டதை அறிந்து கொள்கிறார் சிவ். என்றாவது தாயகம் திரும்பி போவோம் என்ற நம்பிக்கையில் விற்காது வைத்து இருந்த தனது பூர்வீக வீட்டை விற்று சிகித்சை மேற்கொள்ள முடிவெடுத்த நிலையில் மனைவியும் இறந்து போகிறார். மனைவியின் அஸ்தியை பூர்வீக வீட்டில் சேர்ப்பதுடன் கதை முடிகிறது.
இந்த திரைப்படத்தில்
ஒரு கருத்தாக ‘தலைமை’ என்பது மக்களை பிரித்து ஆள்வது அல்ல, ஒற்றுமையாக சேர்த்து வைத்து
ஆள்வதே என்ற கருப்பொருளை முன்நிறுத்த துணிகிறார் இயக்குனர். முஸ்லீம் தீவிரவாதியான
தனது நண்பன் லத்தீபுடன் கடைசி வரை நட்பு பேணுகிறார் சிவ். ஆயுத வியாபாரிகளான அமெரிக்காவால்
தான்; சகோதர்கள் போல் வாழ்ந்த இஸ்லாமியர்களும் காஷ்மீர் பண்டிதர்களுக்கும் இடையில்
தொடர்ச்சியான மோதல் உருவானது என்று சொல்கிறார் இயக்குனர்.
1980 இல்,
அப்துல்லா காஷ்மீரின் இஸ்லாமியமயமாக்கலைத் தொடங்கினார். அவரது அரசாங்கம் சுமார்
2,500 கிராமங்களின் பெயர்களை அவற்றின் உண்மைப் பெயர்களிலிருந்து புதிய இஸ்லாமிய பெயர்களாக
மாற்றியது.
செப்டம்பர்
14, 1989 வக்கீல் மற்றும் பாஜக தலைவரான டிக்கா லால் தபூவை அவரது இல்லத்திற்கு வெளியே
கொடூரமாக கொலை செய்யப்பட்டது; சிறுபான்மை சமூகமான பண்டிட்டுகளுக்கு
அச்சத்தை ஏற்படுத்தியது. மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஜே.கே.எல்.எஃப்
இன் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான மக்பூல் பட்டுக்கு மரண தண்டனை விதித்திருந்த
ஓய்வுபெற்ற நீதிபதி நிகலந்த் கஞ்சூ பகலில் கொல்லப்பட்டார். டிசம்பர்
8, 1989 அன்று, ஜே.கே.எல்.எஃப் உறுப்பினர்களால் அப்போதைய வி.பி.சிங் அரசாங்கத்தில்
உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபையா சயீத் கடத்தப்பட்டார்.
அப்துல்லா தலைமையிலான அரசின் சிறையில் அடைக்கப்பட்ட 13 தீவிரவாதி உறுப்பினர்களை
விடுவித்த பின்னர் ரூபையா சயீத் விடுவித்தனர்.
இதற்கிடையில்,
செய்தித்தாள்கள், சுவரொட்டிகள் மற்றும் மசூதிகள் மூலமாக காஷ்மீரி பண்டிதர்களுக்கு
இஸ்லாத்திற்கு மாறவும், காஷ்மீரை விட்டு வெளியேறவும் அல்லதுகொல்லப்படுவீர்கள் போன்ற
மூன்று வாய்ப்புக்களை அறிவித்து சுவரொட்டிகள் காணப்பட்டன. ஒரு உள்ளூர்
உருது தினசரி, அப்தாப் இந்துக்களை வெளியேறுமாறு அச்சுறுத்தும் செய்திகளையும் எடுத்துச்
சென்றது.
ஜனவரி
19 அன்று, ஃபாரூக் அப்துல்லா அரசாங்கத்தை அகற்றி , ஆளுநரின் ஆட்சி அமலுக்கு வந்தது.
அத்துடன் பண்டிட் சமூகம் ஜனவரி 20 ஆம் தேதி, காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து
முதன்முதலாக வெளியேறத் தொடங்கியது. ஜனவரி 21 அன்று, காஷ்மீர் மோதலில் சி.ஆர்.பி.எஃப்,
160 காஷ்மீர் முஸ்லீம் எதிர்ப்பாளர்களை சுட்டுக் கொன்றது. காவல்துறையினர் தங்கள்
பதவிகளை விட்டு வெளியேறியதால் பண்டிதர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழல்
உருவானது. ஸ்ரீநகரில், பிப்ரவரி 13 ஆம் தேதி, தூர்தர்ஷன் நிலைய இயக்குநர் லாசா
கவுல் சுட்டுக் கொல்லப்பட்டார். பி.எஸ்.எஃப் பணியாளரின் மனைவி எம்.என். பால் என்ற அரசாங்க
அதிகாரியின் மனைவி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
பகவத் கீதையை காஷ்மீரிக்கு மொழிபெயர்த்த பிரேமி, தனது மகனுடன் அவரது வீட்டின் அருகே
கொல்லப்பட்டார். அதன்பின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டாவது, பெரிய வெளியேற்றம்
நிகழ்ந்தது. அரசியல் போட்டிகள், தீவிர இஸ்லாமியமயமாக்கல் மற்றும் கொடூரமான கிளர்ச்சியின்
மத்தியில், சிறுபான்மை சமூகமான காஷ்மீர் பண்டிதர்களுக்கு தங்கள் தாய் நாடு,
சொத்துக்கள், வேலைகள், பண்ணைகள் மற்றும் கோயில்களை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு
வழி இருக்கவில்லை.. இந்தியாவின் வரலாற்றில் முன்பு இல்லாத வகையில் நடந்த வெளியேற்றங்களில்
ஒன்றாகும்.
அரசியல்
ஆய்வாளர் அலெக்சாண்டர் எவன்ஸின் கூற்றுப்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் காஷ்மீர்
பண்டிதர்களில் 95 சதவீதம் (1,50,000 முதல் 1,60,000 ) பேர் 1990 ல் வெளியேறினர்
என்கிறது. மறுபுறம், நோர்வே அகதிகள் கவுன்சிலின் உள்ள இடப்பெயர்வு கண்காணிப்பு
மையத்தின் அறிக்கையின் படி 2,50,000 பண்டிதர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டு
உள்ளனர். இதற்கிடையில், ஒரு சிஐஏ அறிக்கையின் படி மொத்த மாநிலத்திலிருந்து
3,00,000 பேர் இடம்பெயர்ந்ததாகக் கூறுகின்றனர்.
காஷ்மீர் பத்திரிகையாளர் கோவர் கிலானி, சில காஷ்மீர் முஸ்லிம்களின் வேண்டுகோளின் பேரில், இந்திய மூத்த நிர்வாகி ஜக்மோகனிடம் பண்டிதர்களை பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறவிடாமல் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலாக, பண்டிதர்கள் வெளியேற முடிவு செய்தால், அவர்களுக்காக அகதி முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், புறப்படும் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என்றும் ஜக்மோகன் கூறினார். அவர்கள் வெளியேறுவதில் இருந்து பின்வாங்கினால் அவர்களுடைய பாதுகாப்பிற்கு தன்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் அவர் அறிவித்து இருந்தார்.
தங்கள்
சொந்த நாட்டில் அகதிகளாக மாற்றப்பட்டு ஜம்மு மற்றும் டெல்லியில் உள்ள அகதி முகாம்களில்
ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட் அகதிகள் சிறிய அறைகளில் குடியேறி, மோசமான நிலைமைகளுக்கு
உள்ளாகினர். அவர்களில் பலர் தங்கள் மூதாதையர் நிலத்திற்குத் திரும்புவதாக 30 வருடங்களாக
நம்பிக்யோடு இருக்கின்றனர்.
2019 ஆகஸ்ட்
5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பின்
370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டபோது, காஷ்மீர் பண்டிதர்களை உள்ளடக்கிய 64 குடிமக்கள்
“இதை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் செய்தனர்..
இப்படி வரலாறு
இருக்க, கதையில் காதல் வாழ்க்கைக்கு கொடுத்த முக்கியம் வரலாற்றில் நிகழ்ந்த கொடூர
சம்பவங்களூக்கு கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஒரு சில குறிப்புகளுக்கு
அப்பால் படம் துயர் சம்பவங்களை பற்றி செல்லவில்லை, திரைக்கதையின் சில பகுதிகள்
அவசரமாக எழுதப்பட்டதைப் போல கடந்து சென்றது என்றும் சிலர் குறை கூறினர்.
.
அறிமுக ஜோடிகளான
சாடியா மற்றும் ஆதில் கான் ஆகியோர் திரையில் ஒரு அழகான ஜோடியாக திறம்பட நடித்துள்ளனர்.
‘ஷிகாரா’வின் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சந்தேஷ் ஷாண்டில்யாவின் இசை மற்றும் பின்னணி
இசை இதமாக கதையை கொண்டு செல்ல உதவுகிறது. காட்சி அமைப்பு சிறப்பாக செய்ட்திருந்தனர்.
திரைக்கதையிலும் தேவையான ஆழம் இருந்தது.
திரைப்படம்
கற்பனை என்ற் பெயரில் திரைப்படம் எடுப்பவர்கள் மத்தியில் ஒரு வரலாற்றை மிகவும் அழகியலுடன்
ஆழமான கருத்தாங்களுடன் ஒரு சில வரலாற்று சம்பவங்குளடன் எடுத்த இந்த திரைப்படம் அனைவரும்
பார்க்க வேண்டிய வரலாற்று திரைப்படம்.
0 Comments:
Post a Comment