9 Nov 2014

கின்னஸ் விருது பெற்ற கேரளா தமிழர் 'ரீகன்'" ஜோன்ஸ்!



ரீகன் ஜோன்ஸ்
சகோதரர் ரீகன் ஜோன்ஸ் நேற்று மரணமடைந்தார் என்ற செய்தி மிகவும் துயர் அளிப்பதாகும். ரீகன் ஜோன்ஸ் தன் கடைசி காலத்தில் அப்பாவின் நண்பராக இருந்தவர் என்பதால் ஒவ்வொரு முறை பிறந்த ஊர் செல்லும் போதும் அவரை நேரில் பார்த்து கதைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

ரீகன் ஜோன்ஸ் ஆளுமை தனித்துவம் பெற்றதாக இருந்தது. உலக அமைதியை கருத்தாக கொண்டு இரண்டு மைல் அளவில் கடிதம் அந்நேர போப் ஜான் பால் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அமெரிக்கா அதிபர் ரீகனுக்கும் கடிதம் எழுதியுள்ளதால் அவரின் பெயரான ஜோன்ஸ் என்பதுடன் ரீகன் என்ற பெயரும் சேர்ந்து கொண்டது.

ரீகன் ஜோன்ஸ் பெற்றோர் கிராம்பி எஸ்டேற்றை சேர்ந்த தொழிலாளிகளாக இருந்தனர். தன்னால் இயன்றளவு தங்கள் ஐந்து குழந்தைகளுக்கு தேவையான கல்வி கொடுக்க துடிப்பாக இருந்தனர். முதல் மகனான  ஜோன்ஸின் கல்வி எஸ்டேட் பள்ளிகளிலும் தன் சொந்த ஊரான நாகர்கோயிலிலுமாக தொடர்ந்தது. ஜோன்ஸின் ஆங்கில ஆசிரியர் என் தகப்பனாரின் ஒன்றுவிட்ட சகோதரர் மணி என்பவர் என்பதால்  ஜோன்ஸ் அவர்களுக்கு அப்பாவின் மேல் தனிப்பட்ட முறையில் அளவுக்கு அதிகமான அன்பும் மதிப்பும் இருந்தது.
என் தகப்பனாருடன்


ஜோன்ஸ் ரீகன் பல மைல் நீளத்தில் பல புதிய வார்த்தைகளால் கடிதம் எழுதியது வழியாக கேரளா முழுக்க புகழ் பெற்றார். லிம்கா சாதனையாளர்கள்  விருது  (http://www.emaninagar.com/wrp5.htm PEACE, PEACE ….. We want PEACE
The longest peace appeal 2.4 Km long, 2.5 ft. wide, 100 Kgs in weight, 10 crores of English words was sent to the Pope by Mr. Reagan Jones of Kerala.)
கின்னஸ் விருதும் கிடைத்த பின்பு, “ஜோன்ஸ் என்றால் ஆங்கிலம்; ஆங்கிலம் கற்க வேண்டும் என்றால்; ஜோன்ஸ் என்றாகி விட்டது”. எங்கள் ஊரிலுள்ள எஸ்டேட் மானேஜர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு டியூஷன் மாஸ்டராக மாற்றினர். எங்கள் ஆலயதிலும் ஆங்கிலம் கற்பிக்க ஜோன்ஸ் அவர்களை நியமித்தனர். வியாபார சங்கம் சார்பிலும் ஒரு டியூஷன் நிலையம் அமைக்கப்பட்ட போதும் ஜோன்ஸ் ஆசிரியராக மாறினார். ஆனால் அவர் தகுதிக்கு தக்க இயங்க ஒரு இடம் கிடைத்ததா அல்லது வழி நடத்தும் நபர்கள் கிடைத்தனரா என்பது சந்தேகமே. ஜோன்ஸின் ஆங்கிலப்புலமையை ஆளாளுக்கு தன்னகப்படுத்த விரும்பினர். கேரளா அரசால் கொடுக்கப்பட்ட தற்காலிக  கவுரவ வேலைகளில் அவரால் நிலைத்து நிற்க இயலவில்லை. தனக்கு கிடைத்த சாதனையாளர் பணத்தையும் வாங்க தெரியாது உழன்றார்.

கேரளா அரசு, தற்காலிக  வங்கி வேலை கொடுத்திருந்தாலும் ஜோன்ஸின் விருப்பம் எழுத்தோடு பயணிப்பதாகத் தான் இருந்தது. தன் எழுத்தை தவமாக கண்டவர் யாருடனும் எந்த தேவைக்கும் சமரப்படவோ அல்லது அடிபணியவோ விரும்பவில்லை. தனக்கென்று ஒரு நேர்மையான மனம் கொண்டு சஞ்சரித்தவர். சில போது உலகின் பொய் புரட்டுகளை தனதான நையாண்டி கலந்து சிரித்து தள்ளியவர். நவீன தொழில்நுட்ப சாதங்களை; ஒரு கைபேசியை கூட பயண்படுத்த விரும்பாதவர். அவரை காணும் போது எல்லாம் நான் வலைப்பதிவை பற்றி கூற மறப்பதில்லை. இருப்பினும் ஏதோ ஒரு யோகியை போன்று வாழ்ந்தவரால் எதிலும் தன்னை வலுகட்டாயமாக இயங்க தெரியவில்லை.  தனக்கு அறிவிக்கப்பட்ட கின்னஸ் விருது பணம் கூட கடைசி வரையிலும் ஜோன்ஸை சென்று அடையவில்லை என்பதே மிகவும் வருத்தமான உண்மை. ஏழைகளுக்கு என  அறிவிக்கப்படும் விருதுகளில் இருக்கும் ஊழலும் இது தானோ என்று தோன்றுகின்றது.  எழுத்தை வாழ்வாக கொண்ட ஜோன்ஸ் திருமணம் செய்து சாதாரண வாழ்க்கையில் இயங்கவும் விரும்பவில்லை

எங்கள் பல்கலைகழக பேராசிரியர்களூடன் ஜோன்ஸ்
50 வயது சென்றடையும் முன்பே நீரழிவு நோயால் பாதிப்படைந்த ஜோன்ஸிற்கு கடைசி நாட்கள் துன்பம் நிறைந்ததாகவே மாறியது. "எங்கள்  ஜோன்ஸ்" என்று புகழ்ந்தவர்கள் யாரும் உதவ முன் வரவில்லை. அரசோ இதோ உதவி.. என்று நாட்களை கடத்தி வந்ததை தவிர அதை துரிதப்படுத்தி தரச்செய்து அவர் மருத்துவ செலவிற்கு கூட உதவவில்லை. தான் குடியிருந்த வீட்டையும் சிகித்சைக்கு என இழந்து தன் சகோதரி சகோதரர்கள் வீட்டில் தன் கடைசி நாட்களை கடத்தினார்.  எப்போதும் சிரித்த முகத்துடன் கலகலப்பாக பேசி கொண்டிருந்த ஜோன்ஸ் தன் கடைசி நாட்களில் பார்வை இழந்து விட்டார். பின்பு நடமாடவும் இயலாதவராகி இருந்தார். கடந்த 20 வருடங்களூக்கு மேலாக தனது சாதனையாளர் விருதாக அறிவித்த  பணம் கிடைக்காது தன் தாய் இறந்த 30வது நாள் தானும் இவ்வுலகை விட்டு மறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வண்டிப்பெரியார் என்ற தான் பிறந்து வளர்ந்த ஊரில் தான் தன் கடைசி நாட்களும் இருக்க வேண்டும் என்று எண்ணிய ஜோன்ஸ் வண்டிப்பெரியர் ஆலயத்தில் ஊர்க்காரர்களின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

கேரளா தமிழரான ஜோன்ஸின் எழுத்தின் உச்சம் ஜோன்ஸோடு மறைந்து விடக்கூடாது. மிகவும் பிற்படுத்தப்பட்ட எஸ்டேட் வளாகத்தில் எந்த அடிப்படை வசதியும் கிட்டாது வளர்ந்த ஜோன்ஸ் என்ற சாதனையாளர் உலக தலைவர்களை கவரும் வண்ணம் உலகின் .சமாதானத்தை பரைசாற்றும் விதம் பல மைல் தூரம் 100 கிலோ காகிதம் பயண்படுத்தி கடிதம் எழுதி பாராட்டைப் பெற்றவர்.  கடிதம் என்ற இலக்கணத்திற்கு மதிப்பு சேர்த்தவர். ஒரு வகையில் ஜோன்ஸுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் போக நிலம் சார்ந்த எல்கைகள் கூட காரணமாகின்றதோ என்று அச்சம் கொள்ள வேண்டியுள்ளது. சாதனையாளர்கள் விருது என்ற ஊழலில் ஒரு சாதாரண மனிதன் அதன் பலனை அனுபவிக்க இயலாது மறைந்து பெரும் துயர்.

இணையத்தில் தேடிய போது இவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. தன் புகழ் பாடாத, சுயநலம் அற்ற மனிதர்கள் அடையாளங்களை கூட இந்த பிரபஞ்சம் விட்டு வைப்பதில்லையா என்று  என் மனம் கலங்குகின்றது.

எப்போதும் உலக அமைதியை பற்றி சிந்தித்து கொண்டிருந்த இவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டி, பிரார்த்திக்கின்றேன்.







2 comments:

  1. ·
    ரீகன் ஜோன்ஸ் அவர்களைப் பற்றிய விரிவான பகிர்வு அருமை. அவரைப் பற்றி ஆராய்ந்து அழகாக எழுதி இருக்கிறீர்கள். அவருடைய ஆத்ம சாந்திக்காகப் பிராத்திக்கிறேன். நன்றி ஜோ.

    ReplyDelete
  2. Christopher Raja Kumar · St.Xavier's College PalayamkottaiNovember 10, 2014 10:16 pm


    He was a simple nice man.!

    ReplyDelete