8 Dec 2012

ரிக்கியின் கடைசி மூச்சும்-கிருஸ்துமஸ் தாத்தா வருகையும்!

 இளைய மகன் தான் நாய் பூனைகளை பராமரிப்பதும் அவையுடன் அன்புடன் கொஞ்சி விளையாடுவதும் என நேரத்தை செலவிடுபவன். அவன் விளையாடுவதை கண்டு ரசிப்பது மட்டுமே என் வேலை. உயிரினங்களிடம் பாசம் உண்டு எனிலும் இனம் புரியாத பய உணர்வு உள்ளதால் இவயை பத்து அடி தள்ளி வைத்து பார்ப்பது தான் என் விருப்பம். 20 நாள் முன்பு வந்த இந்த குட்டி நாய் கூட வீட்டிற்குள் வந்தால் எனக்கு பிடிப்பதில்லை. இதை மிரட்டுவதற்கு என்றே ஒரு சாட்டை போன்ற கம்பு வைத்திருந்தேன். நான் அடிக்கும் போல் அருகில் செல்லும் போது ஓடி வாசல் பக்கம் நின்று கொண்டு என்னை நோக்கி குரைக்கும்.  இதன் தோன்றம் நாலு மாதம் முன்பு காணாமல் போன றிக்கி நாயுடன் ஒத்து இருந்தால் இதையும் ஏற்று கொண்டோம். இதன் பார்வை செயல் கூட பழைய  றிக்கி நாயை போன்றே இருந்தது. அது ஒரு நாள் காணாமல் போனதும் அதை போன்ற நாய்களை வழியில் காணும் போது பெயர் சொல்லி அழைப்பதும் என்றாவது வரும் என்ற நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு நாலு மாதம் கடந்ததால் இனி வராது என்ற எண்ணம் ஆரம்பிக்கும் நேரம் தான் இந்த குட்டி வந்து சேர்ந்தது. றிக்கியின் குட்டியாக கூட இருக்கலாம்.  

இது வருவதற்க்கு ஒரு வாரம் முன்பு பூனைக்குட்டி ஒன்றும் வந்து சேர்ந்தாலும் நாய்  மனிதனிடம் காட்டும் அன்பு பூனையிடம் தெரிவது இல்லை. பெரிய மகனோ பூனை தன்னை முறைப்பதால் பிடிக்கவில்லை என்று கூறி கொண்டிருந்தான். பூனை ஒரு பொறாமை குணம் பிடித்தது என்றும்  நாய் குட்டி பூனையுடன் நட்பாக விரும்பினாலும் தன் கையால் அடித்து, சீறி விரட்டி விடுகின்றது என்றும் குறை கூறி கொண்டிருந்தனர்.

கடந்த 2-3 நாட்களாக சோர்ந்து இருந்தது. சரியாகி விடும் என்று இருந்த எங்களுக்கு இன்று காலை சுருண்டு படுத்து கொண்டு வாலை மட்டும் ஆட்டி தன் அன்பை வெளிப்படுத்தியதும் வருத்தமாக போய் விட்டது.  நாயை எடுத்து கொண்டு மருத்துவரை கண்டு வந்த மகன்கள் மாலை பள்ளி விட்டு வந்து எடுத்து செல்கின்றோம். மருத்துவரிடம் தற்போது மருந்து இல்லை என்று கூறியதால் திரும்பி கொண்டு வந்தனர். 
நேரம் ஆகும் தோறும் அதன் கண் உள்வாங்கி சலனம் நிலைத்து வர ஆரம்பித்து விட்டது.  பின்பு அதன் இடத்தை விட்டு எழுந்து வாசல்ப்படி பக்கம் வந்து படுத்து கொண்டது.  ஒவ்வொரு முறை ரிக்கி என அழைத்த போது சிறு ஒலி எழுப்பி கொண்டே இருந்தது. நேரம் போகப்போக கண் திறக்கவே இல்லை, ஆனால் கையால் கொசுவை விரட்டி கொண்டே இருந்தது. பின்பு கைஅசைவும் நிலைத்து மூச்சு  விடுவது வயிறு அசைவில் மட்டும் தெரிந்தது. 

 யாரை அழைத்து உதவி கேட்பது என்று எண்ணிய போது யாரும் இல்லை என்று உறைத்தது. நகர வாழ்க்கையின் அர்த்தம் இல்லாய்மை வெளிகொணர்ந்தது அந்நேரம். கடிகாரத்தை நோக்கி கொண்டே இருந்தேன் மகன்கள் வர இன்னும் பல மணிநேரம்!  அதன் நிலையை கண்டு கொண்டு இருக்க மனம் தாங்கவில்லை. இரண்டு நாள் முன்பே மருத்துவரை அணுகவில்லையே என்ற குற்ற உணர்வு கண்ணீரை தான் வர வைத்தது. பகல் 11-12 மணியுடன் அதன் கடைசி மூச்சும் நின்று விட்டது.  உடல் அப்படியே கம்பு போன்று மாறி விட்டது.


பள்ளி விட்டு வரும் மகன் தான் சிந்தனையில் வந்தான். அவன் வரும் போது வரவேற்கும் நாய், காலை பள்ளி பேருந்து அருகில் போய் விடை சொல்லி அனுப்பும் நாய்! குழி தோண்டி புதைத்து விடலாம் என உதவிக்கு ஆட்களை தேடினேன். பதிவாக செடிக்கு சாணம் கொண்டு தரும் ஆடு மேய்க்கும்  நபரும்  இன்று  காணவில்லை.  "ரிக்கி எப்படி உள்ளது" என்ற கேள்வியுடன் மகனும் வந்து விட்டான். "வருத்தம் கொள்ளாதே செத்து விட்டது". "புதைக்க வேண்டும் என்றேன்". அவனுக்கு நம்பிக்கை இல்லை, எப்படியம்மா என்று வினவி கொண்டே இருந்தான். அருகில் சென்று பார்த்து விட்டு சமாதானம் ஆகி வந்தான். மண் வெட்டி எடுத்து இருவருமாக குழி தோண்டினோம்.  ரிக்கியை நான் தான் எடுத்து குழியில் வைப்பேன் என்று கூறி எடுத்து வைத்து மண் இட்டு மூடினான். டாக்டர் நாயை பார்க்கவே இல்லை அவசரமாக கிளம்பி போய் விட்டார் அம்மா என்றான் சோர்வாக கல்லில் இருந்து கொண்டு.  இனியும் இதுபோல் ஒரு நாய்குட்டி நம்ம வீட்டிற்கு வரும்.  குளித்து விட்டு வா..  கம்யூட்டர் தருகின்றேன் என்றதும் பின்பு கம்யூட்டர் விளையாட்டில் மூழ்கினான். இன்று கைபந்து விளையாட மைதானத்திற்கும் போகவில்லை.

 6 மணியானதும் பெரியவர் வந்து சேர்ந்தான். ரிக்கி எங்கே என்றான்? பால் வாங்கி வா குழியில் ஊற்றவேண்டும் என்றேன். அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. காலையில் இருந்து உணவு எடுக்காத சோர்வும் எட்டி பார்க்க ஆரம்பித்து விட்டது. வெளியூரில் இருந்த என்னவர் அலைபேசி வழியாக துக்கம் விசாரித்து கொண்டார், மேலும் இனி நாய் வளர்க்க வேண்டாம் பிரிவு வேதனையாக உள்ளது என அறிவுரையும் வழங்கி கொண்டிருந்தார். அடுத்த ஊரில் இருக்கும் தங்கை குடும்பத்துடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டோம் துக்கத்தை. தங்கை வீட்டிற்கு வந்துள்ள அம்மா தான் "கவலை கொள்ளாதீர்கள் நமக்கு வரும் தீங்கு வளர்ப்பு பிராணிக்கு வந்து போய் உள்ளது" என ஆசுவாசப்படுத்தினார். 

பின்பு மகன்கள் கேரம் விளையாடினர், நான் வாசிப்பில் இருந்தேன். மூவருக்கும் மனம் சரியில்லை. போர்டை எடுத்து மூலையில் வைத்தனர் நானும் புத்தகத்தை அலைமாரையில் வைத்து விட்டு பள்ளி வகுப்புக் கதைகளை அவர்கள் சொல்ல, நான் கேட்பதுமாக 9 மணியானதும் தூக்கம் வர துவங்கியது. 

இப்போது வெளியில் பாட்டு சத்தம். ஆலயத்தில் இருந்து கிருஸ்துமஸ்  தாத்தா-பாட்டுடன் வந்து சேர்ந்துள்ளனர். வீட்டில் இன்று எதையும் ஒழுங்குபடுத்தி வைக்கவோ வரும் நபர்களுக்கு இனிப்பு பரிமாறவோ ஆயத்தம் எடுக்கவும் மறந்து விட்டோம். குழந்தைகளும் நல்ல தூக்கம், இனி எழுப்பி தாத்தா ஆடும் ஆட்டத்தை காணும் மனநிலையில் அவர்களும்  இல்லை. வீட்டிற்கு பெல் மாட்டாதது நல்லதாக போய் விட்டது என்று இன்று தான் தோன்றியது. பக்கத்து வீட்டு அழைப்பு ஒலி தான் கேட்டு கொண்டிருந்தது.

 காலை சூழல் தான் நினைவிற்கு வந்தது. ரிக்கி நாய்க்கு உதவிக்கு யாரும் கிடைப்பார்களா என்றால் ஒருவரும் நினைவிலும் வரவில்லை. இந்த குழுவில் உள்ளவர்கள் கூட நம் வீட்டு விலையை வைத்து நம்மை விலையிட்டு சில பிடிக்காத கேள்விகளை இட்டு செல்வார்கள் என்று தெரியும். ஆனால் அவர்கள் போகும் படியாக இல்லை எங்களை எழுப்பியே தீருவோம் என உரக்க பாட்டை ஒலிக்க செய்து கொண்டு நிற்கின்றனர்.

 கிருஸ்தவ வாழ்கையிலும் நாம் அறியாதே இது போன்ற சில  ஆசாரங்களை புகுத்தி விட்டனர். டிசம்பர் முதல் நாள் அன்றே நட்சத்திர விளக்கு மாட்ட வேண்டும், வண்ண விளக்குகளால் வீட்டை அலங்கரிக்க வேண்டும். ஏனோ இதுவெல்லாம்  அன்னியமாக படுகின்றது இன்றைய மனநிலையில். கிருஸ்தவ அன்பை வெளிப்படுத்த  வருவதாக சொல்லி கொண்டு குளிர் இரவில் வந்து காணிக்கை  வாங்கி விட்டு  'ஒரு அனாதை' என்ற  உணர்வையை விட்டு செல்வார்கள். தமிழகம் வந்த பின்பு கிருஸ்தமஸும் மதம் கொண்டு தொடர்புபடுத்தி கொண்டாடுவதும் கிருஸ்த வீட்டில் மட்டும் நட்சத்திரம் மின்னுவதும் அதை அடையாளமாக கொண்டு கிருஸ்தவ வீட்டிற்க்கு மட்டும் கிருஸ்துமஸ் தாத்தா வருவது என்பதும் ஏற்று கொள்ள இயலவில்லை. 

கடந்த ஐந்து வருடமாகவும்  கேட்கும் ஒரே கேள்வி ஐயா எங்கு வேலை பார்க்கிறார்?, நீங்க என்ன செய்கிறீர்கள்?, பெயர் என்ன? என்று கேட்டு எழுதி செல்வது மட்டுமல்ல; இந்த காட்டுக்குள்ள எப்படி பயமில்லாமல் இருப்பீர்கள் என சில முதிய பெண்மணிகளின் கேள்விக்கும் பதில் சொல்லவேண்டி வரும். இன்னும் சிலரோ நம்மை வேற்று கிரகவாசிகள் போன்று அடிமுடி பார்ப்பார்கள். அத்தான் வீட்டிலிருந்தால் அவரை முன் நிறுத்தி நாங்கள் பின்னால் ஒளிந்து கொள்ளலாம். குழந்தைகள் இன்னும் எழவில்லை. அவர்கள் சோர்ந்த மனதை எழுப்பி புண்படுத்தவும் விரும்பவில்லை. ஆனால் நான் விழித்து விட்டேன்.  மறுபடியும் காலை முதலுள்ள ரிக்கி நாய் குட்டியின் கடைசி துளிகள் மனதில் வரத் துவங்கி விட்டது. நேரம் இரவு 12 மணி! கிருஸ்துமஸ் தாத்தா ஆடிபாடும் நேரம் தான் ஆனால் மனது தான் இன்று கனத்து கிடக்கின்றது கதகை திறந்து மகிழ்ச்சியுடன் வரவேற்க மனம் இல்லை!!!  



2 comments:

  1. WISH US ADVANCE HAPPY (MERRY) CHRISTMAS

    KARUNAKARAN
    CHENNAI

    ReplyDelete
  2. எனக்குக் கடவுள் மத நம்பிக்கை கிடையாது. எனினும், கிறுஸ்துமசை ஒட்டிய charitable spirit, மதம் தாண்டியது என்றே நம்புகிறேன். நீங்கள் எழுதியிருப்பதைப் படித்து மனம் கனக்கிறது.

    ReplyDelete