கடந்த நாலு மாதங்களில் என் மூன்று மாணவர்களின்
பெற்றோர்கள் நோய் வாய்ப்பட்டும், எதிர்பாராத விதமாகவும் இறந்து விட்டனர். குழந்தைகள் எல்லாவகையிலும் தன் பெற்றோரை சார்ந்து இருக்கும் வேளையில் அவர்கள் பெற்றோரை இழப்பது மாபெரும் துயரே.
ஒரு மாணவர் மிகவும் அமைதியானவர், கொடுக்கும் வீட்டு பாடங்களை மறக்காது செய்து வருபவர் சரியாக கல்லூரி நேரம் வந்து பாடங்களை காத்திரமாக கவனித்து குறிப்புகள் எழுதி வைத்து படித்து சரியாக தேர்விலும் கலந்து கொள்பவர். புகைப்படகலையில் வேறு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசு பெற்றாலும் அதை இயல்பாக எடுத்து கொள்ளும் அமைதியான சுபாவம். இப்படியான இயல்பாகவே பொறுப்பான மாணவர்கள் ஆசிரியர்களுக்கு என்றும் மறக்காத, விருப்பத்திற்குரிய மாணவர்களாகவே இருபார். பகுதி நேரமாக பணி செய்து வரும் மாணவன் என்று அறிந்த போது அவர் பொறுப்புணர்ச்சியில் மேலும் மதிப்பு சேர்ந்து உருவானது.
அவர் தகப்பனார் கான்சரினால் நோய் வாய்பட்டு இறந்த செய்தி அறிந்து அவர் வீடு தேடி சென்றேன். வீட்டின் மூலையில் நெற்றியில் ஒன்றைய் ரூபாய் நாணயத்துடன் ஓர் கதிரையில் உட்காரும் நிலையில் வைத்திருந்தனர். அவர் அம்மா என் கையை பிடித்து கொண்டு கடைசி நேரம் மகனை பார்க்க தான் விரும்பினார். பார்க்காது போய் விட்டார் என்று அழுது புலம்பி கொண்டிருந்தார். என் தம்பி ரொம்ப வருத்தப்படுவான் அவனுக்கு ஆறுதல் சொல்லுங்கள் அவன் அக்கா அழுகின்றார். மாணவரை நோக்கினேன் அவனுக்கு ஆறுதல் கொள்ள கூட நேரமில்லை அரசு அலுவலகம் அனுப்புகின்றனர், கடைசி கிரியைக்கான துணிகளை வாங்கி வர கூறுகின்றனர். அவன் அப்போதும் தன் நிலை தவறாது எல்லா கவலைகளையும் மனதில் வைத்து கொண்டு சலனமற்று செல்வதை கேட்டு செய்து முடிக்க
தயாராக நிற்கின்றார்.
வேலை, சூழல் காரணமாக நகரங்களை நோக்கி நகரும் போது இது போன்ற துன்ப சூழலில் தனித்து விடப்படும் சூழலே நகர சமூகத்தில் நிலவுகின்றது. யாரையும் கருதலுடன் நோக்கும் மனநிலை இன்று அரிதாகி வருகின்றது என்ற நினைப்பில் நானும் என் பணிக்கு செல்லும் நேரமானதால் உடன் விடை பெற்று வந்தேன்!
இரண்டு வாரம் கூட கடக்கவில்லை எங்கள் மாணவியின் தாயார் நீரழிவு நோயால் இறந்து போனார். ஏற்கனவே தகப்பானார் மூன்று வருடம் முன்பே மரித்து விட்ட நிலையில் ஒரு சகோதரி வேலைக்கு போக, இளையவர் எங்கள் துறையில் படித்து வந்துள்ளார். செய்தி கேள்விப்பட்டதும் காலை 7 மணிக்கு கிளம்பி அவர் ஊர் 8.30 மணிக்கு சென்று சேர்ந்தோம். நான் பயணித்தது எங்கள் வீட்டு காரில் அதுவே ஓர் நெடிய பயணமாக பட்டது. நம் மாணவர்கள் கல்வி கற்க என இவ்வளவு தொலைவில் இருந்து நெடிய பயணம் மேற்கொண்டு வருகின்றனரே என்பதை நினைக்கவே மலைப்பாக இருந்தது. அவர்கள் வகுப்பறையில் சிரிப்பதும் சேட்டைகள் செய்வதையும் கடந்து ஓர் கடினமான சூழலில் இருந்தே வருகின்றனர் என்பது வருந்த செய்தது.
பொதுவாக நான் மாணவர்களிடம் ஓர் குறிப்பிட்ட இடைவெளி வேண்டும் என்றே ஏற்படுத்தி கொண்டே என் பணியை செய்து வருகின்றேன். என்னை கண்டதும் என் மாணவி என் மடியில் கிடந்து அழுதது மறக்க இயலவில்லை. இளம் மகள்களுக்கு இருந்த ஒரே உறவு அம்மாவையும் இழந்ததை அவர்களால் தாங்க கொள்ள இயலாது அந்த காலை வேளையில் அவர்கள் கதறி கதறி அழுதது என் நெஞ்சயை அடைப்பது போன்று உணர்ந்தேன். “அம்மா உன்னை விட மாட்டோம் …
நீ உயிரோடு வா நீ சாகவில்லை” என அழுத போது அவர் அம்மா முகம் உறங்குவது போலவே
தோன்றினது. ஆஸ்பத்திரியில் நோயாளி இறந்தார் என்று அறிந்ததும் முழு பணவும் கட்டிய பின்பே உடலை கொடுத்துள்ளனர். இது போன்ற அவசரத்தேவைகளுக்கு கடன் பெற நம் சமூக சூழலில் கந்து கட்டிகாரர்கள் தவிற யாரும் முன் வருவதில்லை என்பதும் காலக்கொடுமை.
என் அம்மாவிடம் வந்து பேசின பின்பு தான் என் மனத்துயரம் ஓரளவு ஓய்ந்தது. இந்த வயதிலும் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு பொழுதும் அம்மாவின் நினைவுகள் வராது இருப்பதில்லை. இந்த குழந்தைகளை எண்ணி துயர் பீறிட்டு எழுந்தது. ஒரு புறம் தாயை பல ஆஸ்பத்திரிகளில் வைத்து வைத்தியம் செய்த கடன், படிப்பு செலவு, எல்லாம் தானாக நோக்க வேண்டிய சூழல். எல்லாம் நினைக்க நினைக்க மலைக்க வைத்தது. இருப்பினும் என் மாணவி விரைவில் கல்லூரி வந்து சேரவேண்டும் என மன முகந்து இறைவனை வேண்டி கொண்டிருந்தேன்.
தேவையான மன உறுதியை, நம்பிக்கையை வார்த்தையால் கொடுக்க முயல்கின்றோம் ஆனால் செயல்வடிவத்தில் உதவ கையாலாகாத நிலையில் தான் என்னை போன்ற ஆசிரியர்கள் உள்ளனர் என்பது மனதை நெருடுகின்றது. வெறும் வார்த்தைகளால் ஆறுதல் கூறி ஓர் வகையில் நாம் ஏமாற்ற தான் செய்கின்றோம் என்ற எண்ணம் வதைக்கின்றது. ஆசிரியை பணி என்பது வெறும் புத்தகங்களோடு மட்டுமான அறிவாற்றல் சார்ந்த பணி மட்டுமல்ல உயிருள்ள மனிதர்களிடம் நம் மனித நேயத்தை செயல்வடிவத்தில் காட்ட வேண்டிய பணி. பல பொழுதும் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.
இளைஞசர்கள்
இந்த சமூகத்தை மிகவும் நேர்மறையுடன் மிகவும் நேசத்துடன் நோக்குகின்றனர். இந்த சமூகத்தை பற்றிய உண்மையான பிரஞ்சை உண்டு. சகமனிதன் மேல் அதீத அன்பு உண்டு என்று அவர்கள் முதல் பருவத்தில் வருப்புகள் எடுக்கும் போதே கண்டு நெகிழ்ந்துள்ளேன். ஆனால் சூழலின் நெருக்கடி இளம் மனிதர்களை மாற்றம் செய்து விடும் என்ற ஆதங்கமும் என்னை துன்புற செய்கின்றது. அவ்வகையில் தான் உதவி என்று நாடிய போது என் முதல் வருட மாணவர்கள் நாங்கள் உள்ளோம் என என்னுடன் சேர்ந்து செயலாற்ற நினைத்தனர். அதுவெல்லாம் ஓர் கனவு என்றதும் நான் நொறுங்கி போய் விட்டேன். ஆனால் பெரியவர்கள் எவ்வளவும் வேதனைப்படலாம் நொறுங்கலாம் தளரலாம் ஆனால் இளம் தளிர்கள் வாடக்கூடாது என்று மட்டுமே என்னால் இப்போது நினைக்க முடிகிறது.
மனதை நெகிழ செய்து கண்ணில் நீரை வர வழைத்துவிட்டது......
ReplyDelete///ஆசிரியை பணி என்பது வெறும் புத்தகங்களோடு மட்டுமான அறிவாற்றல் சார்ந்த பணி மட்டுமல்ல உயிருள்ள மனிதர்களிடம் நம் மனித நேயத்தை செயல்வடிவத்தில் காட்ட வேண்டிய பணி. //
ReplyDeleteமிக மிக உண்மை
செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
ReplyDeleteஎனது ஆழ்ந்த இரங்கலை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் மதுரைத்தமிழனின் வலைப்பதிவு பார்த்துத் தங்கள் தளத்திற்கு வருகிறேன் சகோதரி. தங்களின் சமூதாய அக்கறை சார்ந்த பதிவுகளைப் பார்த்து, வியந்தேன். தாங்கள் தங்களின் மாணவிகளுக்குச் சொன்னதை, தாங்களும் உணர்ந்துகொண்டு, துயரங்களிலிருந்து மீண்டு, தொடர்ந்து தங்கள் குழந்தைகளுக்காகவும், குழந்தைகளாக நினைத்து பாசம்காட்டும் மாணவிகளுக்காகவும் தொடர்ந்து முன்போல் இயங்கி வரவேண்டும். தங்களுக்கு எனது சகோதர வணக்கம்.
ReplyDeleteநெருங்கிய மரணம் தரும் தெருக்கடி என்ற தலைப்பில் அடுத்தவர்களுக்காக கரிசணத்தோடு பதிவெழுதிய ஒரு வார காலத்துக்குள் அதே நெருக்கடியை நீங்கள் சந்திக்க நேர்ந்திருப்பது மிகவும் கொடுமை. எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரத்திலிருந்து நீங்கள் மீண்டெழ பிரார்த்திக்கிறேன்
ReplyDelete
ReplyDeleteதங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
என் துக்க வேளையில் உங்கள் வார்த்தைகளால் நல் உள்ளத்தால் தேற்றிய உங்களுக்கு என் நன்றிகள்
ReplyDelete