9 Nov 2018

96 பப்பி காதல் - திரைப்பார்வை

பல நாட்கள் காத்திருப்பின் பின் 96 திரைப்படம் பார்த்தாச்சு.
22 வருடங்களுக்கு பின் நண்பர்கள் சந்திப்பது வரை அருமையான படம். விருவிருப்பான திரைக்கதை. அதன் பின்பு அப்படத்தை காண பார்வையாளர்களுக்கு பொறுமையும் சகிப்பு தன்மையும் கொஞ்சம் அதிகமாகவே வேண்டும். விஜய்சேதுபதியின் ராமசந்திரன் என்ற கதாப்பாத்திரத்தை ஒரு பாட்டுடன் ஆளுமையா காட்டிவிட்டு அப்படியே மழுங்கலடித்து விட்டனர்.

96 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மிடித்த நண்பர்கள் சந்தித்து கொள்கின்றனர் .22 வருடங்களுக்கு பின் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியான சந்திக்கும் தருணம் ஜானு மலேஷியாவில் இருந்து வருகிறார். ஜானு கதாப்பாத்திரம் அன்றைய பெண்களின் மிடுக்கை பிரதிபலிப்பது அருமை. எப்போதும் ஒரு படி முன்னே சிந்திக்கும், செயலாற்றும் பொறுப்பான கதாப்பாத்திரம். நண்பர்களை காண தன் மகளை மலேஷிவில் விட்டு விட்டு ஒரு நாள் விடுமுறை என வந்து சேர்கின்றார். ஜானுவை கண்டதும் ராமசந்திரன் தலைசுற்றி விழுகின்றாராம் வெட்கப்படுகின்றாராம்(இதுவெல்லாம் ஓவரு). பின்பு இரவானது எல்லோரும் பிரிய ராமசந்திரனிடம் ஜானுவை ஹோட்டலில் விட்டு விட்டு போகச்சொல்கின்றனர்.

நண்பி. ”அவளை கொண்டு விட்டுட்டியா” என ராமிடம் கேட்க; அடுத்து ”நீ எங்க இருக்க” என ஜானுவிடம். இப்படி இயக்குனர்; பார்வையாளர்களை அவர்கள் படுக்கை அறைக்கு அழைத்து செல்லும் தமிழ் முட்டாள் தனத்துடன் நகர்த்தி, மலேஷியா போனாளா இல்லையா என உளவியல் சென்றிமென்றுடன் முடித்துள்ளார். ஜானுவோ உன்னுடன் பேச வேண்டும், உன்னுடன் இருக்க வேண்டும் என்ற உரையாடலுடன் அழகான மனித மாண்பை வெளிப்படுத்துகின்றார். மலேஷியாவில் இருந்து வந்த தோழியை விருந்து முடிந்ததும் ஒவ்வொருவரும் தனியாக விட்டு சென்றிருப்பார்களா? அப்ப்டியே சென்றிருந்தாலும் 40 வயதை கடந்த தோழமைகள் தங்கள் நண்பர்கள் பற்றி சிறுபிள்ளைத்தனத்துடனா யோசித்திருப்பார்கள்?

நடு இரவில் ஜானுவின் அறையில் பேசிக்கொண்டு இருக்கின்றனர், இரெயிலில் பயணிக்கின்றனர், ராம் வீட்டில் தங்குகின்றனர். எல்லா நொடியிலும் இயக்குனரின் பார்வை கதையிலோ கருத்திலோ அல்ல அவர்கள் வேலியை தாண்டி நடந்து கொண்டார்களா என்ற சந்தேகப்பார்வை தான்!!! அதில் ஜானு தூங்கும் இடத்தில் தாலி சென்றிமென்றையும் புகுத்தி விட்டனர். பள்ளி குழந்தைக்காதலில் வீழ்ந்த இரு நபர்கள் வெகுநாட்கள் கடந்து பொறுப்புடன் சந்தித்து கொண்ட போது என்ன நடந்தது என்ன நடக்க்க போவுது என்ற இயக்குனரின் கொச்சை பார்வை இருக்கே?

பத்தாம் வகுப்பு மாணவன் தந்தையின் கடனால் இரவோடு இரவாக சென்னை ஓடிப்போய் வாழ்ந்தார் என்று முடித்திருந்தால் ராமசந்திரன் கதாப்பாத்திரம் தப்பித்திருக்கும். யாரோ உதவியுடன் ஜானு படிப்பதை அவதானிக்கின்றார், உடுத்தி வந்த சேலைக்கலர் கூட நினைவு இருக்கிறது. ஜானுவை பிந்தொடர்ந்த விடலை பையனைக்கூட அடித்துள்ளான் ஆனால் ஜானுவை மட்டும் நேரில் பார்க்க துணியவில்லையாம். அதற்கு வாசந்தி உதவி வேற...!!????

எல்லா தருணங்களிலும் மிகவும் சரியாக நடந்த ஆளுமை கொண்ட ஜானு தனது 40 வது வயதில் கழிவறையில் இருந்து கொண்டு கதறி கதறி அழுகின்றாராம். தன்னால் காதலன் கிரோணிக் பாச்சிலாராக இருக்கிறான் எனத்தெரிந்ததும் ”நீ கன்னி கழியாதவனா? என்ற கேள்வி வேற. அடுத்து காதலன்; நீ சந்தோஷமா இருக்கியா என்றது, நான் அமைதியா இருக்கிறேன், பிரச்சினை இல்லை என்ற மழுப்பல் பதில் வேற....பல சீனுகள் நெருடல், லாஜிக் களைந்து கொண்டது, ஒரே நாளில் சந்தித்து மகிழ்ச்சியா பிரியா வேண்டிய 40 வயது மத்திய வயது நண்பர்கள் பதின்ம வயது பிள்ளைகளை போல் அழுது வழிஞ்சி, ஜானுக்காக ஒரு மலேஷியா டிக்கட் எடுக்க வைத்து நாடகத்தனமாக மாற்றி; ஜானு என்ற கதாப்பாத்திரத்தையும் உடைத்து படத்தை முடித்துள்ளனர்.


28 வருடங்களுக்கு பின்பு சந்தித்தபோது; நாங்கள் படிக்கும் வேளையில் மிகவும் பிரபலமாக இருந்த காதல் கதையின் கதாநாயகனான நண்பனிடம் ... “இப்போது என்ன தோன்றுகின்றது உன் பள்ளி காதலை பற்றி? எனக்கேட்ட போது. அவன் மறுமொழி சிரிப்புடன் சொன்னது இப்படியாக இருந்தது, அதை நினைத்தால் ஒரு வெட்கம், சே .......அது ஒரு குழந்தைத்தனமான விளையாட்டு. காதல் என விழுந்தனால் ஒரு பெண்ணிடம் மட்டுமே பேச்சு, சிந்தனை என என் பள்ளி பருவம் சுருங்கி விட்டது. அப்படி அல்லாது நட்பின் வழி நடந்திருப்பேன் என்றால் நிறைய தோழிகள் கிடைத்திருப்பார்கள்; அன்றே உங்கள் அனைவரிடவும் நிறைய பேசியிருப்பேன் என வருத்தப்பட்டார். பள்ளி நண்பர்களுடன் மறுபடி கதைக்கும் போது ” என்னடா எப்படி இருக்கேன்னு கேட்கும் தொனியும் , உரிமையும், சுதந்திரவும் காதல் வயப்பட்டு தோல்வியை கண்டவர்களால் அனுபவிக்க இயலாது என்றே நினைக்கின்றேன். வாழ் நாள் முழுக்க ஒரு அவமானத்தின் , அவநம்பிக்கையின் சோகத்தின் ஒரு நிழல் தொடரத்தான் செய்யும்.
படிக்கும் பருவத்தில் காதலை விட நட்பு பேணுவதே கர்வம். பள்ளி நண்பர்களிடம் இப்போது கதைக்கும் போது நம்மையறியாது குழந்தைகளாக மாறி விடுகின்றோம். வாழ்க்கையில் சந்தித்த கசப்புகளை, துயர்களை மறந்து எழுகின்றோம். ஆனால் இப்படத்தில் சந்தேகப்பார்வையில் நண்பர்கள் பிரிவதே அபத்தமாக இருந்தது.

விஜயசேதுபதி கதாப்பாத்திரப் படைப்பு சொதப்பி விட்டது. ராமசந்திரன் கதாப்பாத்திரம் விமர்சனத்தை எதிர்கொண்ட காரணவும்; முழுவளர்ச்சி பெறாத வெறும் ’சென்றிமென்று இடியட்”டாக முடித்ததால் தான். மாணவிகளுடன் பேசும் முறையும் ஒரு மாணவி கண்ணால் அநியாயத்திற்கு வழிவதும் ஐயோ கொடுமை.......
96 ல் அண்ணாத்தே அண்ணாத்தே ந்னு ஒரு புள்ளை உடன் சைக்கிளில் பயணிக்கின்றது. எந்த ஊரில் இப்படியான சுதந்திரத்துடன் தமிழ் குழந்தைகள் வளர்ந்தார்கள் என அறிய ஆவலுடன் உள்ளேன். சூட்கேசில் ஜானுவின் ஒரு ஜோடி உடையையும் சேர்த்து வைத்ததுடன் படத்தை முடித்தது; ராமசந்திரனின் புகைப்பட மாணவியை பற்றி ஜானு பிரத்தியேகமாக ராமசந்திரனிடம் எடுத்துரைப்பது என அடுத்த பகுதி படத்தை எடுக்கவும் பாதை அமைத்துள்ளனர்.

இப்படி இருவர் சந்திப்பு படுக்கையுடன் முடிந்ததா?அல்லாது தொடாது தமிழ் பண்பாடு தாலி சென்றிமென்றிடன் பிரிந்து சென்றனரா என்ற இயக்குனரின் தேடுதலை முடித்துள்ளார்.

தமிழ் சமூகம்; உணர்வு சென்றிமென்று முட்டாள்த்தனத்தில் மீண்டு வந்தால் கூட இந்த இயக்குனர்கள் விடமாட்டார்கள் போல. அப்படி இரு மனிதர்களின் ஆளுமை, குணம் நலன் விருப்பம் எல்லாம் ஒரு குறுகிய பார்வையில் மையம் கொள்ள வைத்து அழகான மென்மையான, கருத்தாக்கம் கொண்ட மனித உணர்வுகளை அதை அதன் நல்ல பாதையில் வெளிப்படுத்தி கொண்டாடவேண்டியதை கதறி கதறி அழ வைத்து படத்தை முடித்தது படத்தில் மேல் இருந்த எதிர் பார்ப்பை முடித்தது ஏமாற்றமே.

ஒரு பப்பி காதலை பிரமாண்டப்படுத்தி ஒரு கேலி காதலாக மாற்றியுள்ளனர்.
இருபாடல்கள் அருமை. முதல் பாடலில் பாடல் மட்டுமல்ல காட்சி அமைப்பு கூட அழகு.

1 Nov 2018

பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை



முதல் காட்சியே கறுப்பி என்ற ஒரு  நாயை இரெயில் தண்டவாளத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்படும் காட்சியுடன் திரைப்படம் துவங்குகின்றது.   சமூக அவலத்தை எடுத்து சொல்லும் கருத்துள்ள, சோகத்தை அள்ளிகொட்டும் கிராமத்துப்பாடல்.

அடுத்து ஆங்கில மீடியம், தமிழ் மொழிக் கல்வி என கல்லூரிக்குள் பார்வையாளர்களை அழைத்து செல்கின்றனர்.  அங்கு கிடைக்கும் ஒரு பெண் நட்பு கதாநாயகனுக்கு  படிக்கும்   உந்து சக்தியை தருகிறது.  கல்லூரித்தோழி தனது நண்பனான கதிரை தன் வீட்டு  கல்யாணத்திற்கு அழைப்பது, கதிர் அவமானப்படுத்தப்படுவது என கதை நகருகிறது.

சாதாரணமாக தமிழ்திரைப்படங்களில் போன்று, வலுகட்டாயமாக பெண்ணை கடத்தி செல்லுவது , திருமணம் என இல்லாது , மாறுபட்ட ஆளுமையான கதிராக படம் நிறைவு பெறுகின்றது இப்படத்தின் சிறப்பாகும்.

முதன்மை கதாப்பாத்திரத்தை இரெயில் தண்டவாளத்தில் கட்டிவைத்து கொலை முயற்சி செய்வதும், நாயை இரயில் தண்டவாளத்தில் கட்டிவைத்து கொலை செய்வது போன்ற காட்சிகள் விழுப்புறத்தில் கொலையுண்ட இளவரசனை நினைவூட்டுவதை மறுக்க இயலாது..

தமிழ் மண்ணின் கலைகள், இயல்பான உரையாடல்கள், கலைகளை உருவகப்படுத்திய விதம் அருமை.  . கதைத்தளத்திற்கு பொருந்தும் பாடல் வரிகள், பாடல்கள் வரிகள் இசை அழகு. கதிரின் நடிப்பும் அருமை. பரியன் தந்தையாக நடித்த நடிகரின் நடிப்பு அபாரம். திரைக்கதை விருவிருப்பாக நகர்கிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா. ரஞ்சித்தயாரிப்பில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஆகும்.   சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் 2018 செப்டம்பர் 28 ஆம் நாள் திரைக்கு வந்தது.

பிரான்ஸ் Toulouse இந்தியத்திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை பெற்றது.  புதுச்சேரி நவதர்சன் திரைப்படக்கழகம் சார்பில் இந்திய திரைப்பட விழாவில் சங்கர்தாஸ் சுவாமிகள் விருதினையும் பெற்றுள்ளார் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ்.   2019 க்கான சிறந்த திரைப்படத்திற்கான     விருதினை யமகா பஃசினோ திரைவிழாவில் பெற்றது குறிப்பிடத்தக்கது.

முரண்கள் :

முதன்மை பெண் கதாப்பாத்திர படைப்பு:  படிப்பில் கெட்டி ஆனால் சமூக அறிவில் சூனியம்.  90 களிலுள்ள பெண்களை போல் உணர்ச்சிவசப்படுகின்றார். பையன் பிரச்சினையில் உச்சத்தில் உயிர் போகும் போராட்டத்தில் உள்ளார்; பெண் கதாப்பாத்திரமோ மிட்டாய் வாங்கி கொடுத்து பக்குவமற்று   உருகுகிறது, அழுகின்றது, சிரிக்கின்றது, சினுங்குகின்றது.!!!

கல்லூரி முதல்வர்: கல்லூரி முதல்வர் பதவியை தன்னால் திரண்பட நேரடியாக செயல்படுத்த இயலாது மறைமுகமாக ஒரு கோஷ்டிக்கு இடம் கொடுத்து இன்னொரு கோஷ்டியை அடக்க நினைக்கும் நிர்ஜீவனான அதிகார நிலைபாடு. படிப்பு நம்மை உயர்த்தும் என்ற நல்ல கருத்தை முன் வைய்த்தவர்.  நாம் க்கல்வி கற்று உயர்பதவிக்கு வருவதால்  அடுத்தவன் நம் முன் கைகட்டி நிற்பான் என போதிக்கின்றது;  கைகட்டி நிற்பதும், கைகட்டவைத்து நிற்க வைக்கப்படுவதும் இழிவு நிலையே.

மாணவர்களுக்குள் ஒரு பிரச்சினை என்றதும் சரியான நடவடிக்க எடுக்க இயலாது  “நம்மால் அவன்களை அடக்க இயலாது, இவன் அடக்கட்டுமே, போராடி சாகட்டும் போன்ற வசனங்கள் சமூக வளர்ச்சிக்கு என்ன சொல்ல வருகிறது என சிந்திக்க வேண்டியுள்ளது.

பேராசிரியை கதப்பாத்திரம் : மாணவரும் மாணவியும் பேருந்து நிலையத்தில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். கரடி மாதிரி புகுந்த ஆசிரியையை கண்டதும் மாணவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஆசிரியையோ,” நான் உனக்கு தேவதையா, எத்தனை தேவதை உண்டு என வினவும், வழியும் உரையாடல்கள் அரோசகமாக இருந்தது.  இரு மாணவர்களுக்கு  பிரச்சினை என்றால், சரியாக பிரச்சினையை புரியவைக்காது பெண் மாணவியிடம்” அவன் உன்னை காதலிக்கான்” என கல்யாணத் தரகர் வேலை செய்யும் அவலம்.

பெண் அப்பா கதாப்பாத்திரம்:  கல்யாணத்திற்கு வந்த பையனை தேவையில்லாது விசாரிப்பது, அறையில் பூட்டி வைத்து அடிவாங்க காரணமாக இருப்பது, அப்புறம் கெஞ்சுவது, கடைசி எல்லாம் முடிந்த பின்பு போய் ” என்ன நடக்குமோ தெரியாது அப்ப பாப்போம்” ன்னு எதிர்பார்ப்பை உருவாக்குவது. இவ்வளவு நேர்மறையான தகப்பன் தன் பெண் பிள்ளையிடம் வினவாது  இன்னொரு பெற்றோரின் மகனை அடிக்கும் மன நிலை என்னது.

ஆணவக்கொலைகள் செய்யும் முதியவர் கதாப்பாத்திரம்:  எந்த படத்திலும் காணாத வித்தியாசமான வில்லன்.  இரக்கத்தோடு மதிப்புடன் காண வேண்டிய முதியவர்களை கண்டாலே இனி பயம் தான் வரும்.

அரசியல் சட்டம் படிக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே ஜாதிய கட்டமைப்பில் நின்றுகொண்டு கல்வியை தொடர்ந்தால், சாதாரண கல்லூரி மாணவர்களின் நிலை தான் என்ன!  இளம் தலைமுறையிடம் இருந்து   அரசியல் மாற்றத்தை எதிர்நோக்க இயலுமா?

சமூகத்தில் புரையோடிகொண்டிருக்கும் அழுகி கொண்டிருக்கும் ஜாதி என்ற புண்ணை நவீன சிந்தனையால் தீர்வு தேடாது அடிமட்ட, சிந்தனையுடன் வன்மத்துடன் எதிர்கொள்வது போல் எடுக்கப்பட்ட பல காட்சிகள் புண்ணில் வேல் பாய்ப்பது போல் தான் உள்ளது.

சமூகத்தில் மற1ந்து வரும்  ஜாதிய அடையாளங்களை  படமிட்டு காட்டி இளம் சமுதாயம்  மனதில் ஒரு வன்மத்தை பரவவும் பல காட்சிகள் காரணமாக அமையும்.  வரலாற்று சம்பவங்களை  வைத்து எடுக்கப்பட்ட சமூக கருத்துள்ள ஆனால் வன்முறை ஜாதித் திரைப்படமாகவே உள்ளது.

ஒரு காட்சிyஇல்  மாணவர் கதிர் மாணவிகள் கழிவறையில் விழ வைக்கப்படுவார். மாணவிகள் அலறுவதும் கதிரை கண்டு பாம்பை காண்பது போல் நெளிவதும் ஓடுவதும் மிகவும் அபத்தமாக உள்ளது.  சட்டம் படிக்க வரும் மாணவிகள் இந்தளவு கோழைகளும் பயந்தாம் கொள்ளிகளுமா?

எத்தனை யுகங்களுக்கு தான் கல்லூரி சூழல், கல்லூரி பேராசிரியர்களை குற்றவாளிகளாக உருவகுப்பீர்கள்? அரசியலமைப்பு சட்டத்தில் கீழ் இயங்கும் அரசு , அரசின் கீழ் இயங்கும் சுதந்திர இந்தியாவின் கல்வி நிலையங்களில் நிலை இது தானா?

திரைப்படம் என்பது கோஷம் அல்ல, அறிவுரையல்ல,   ஆனால் மனித மனதை  சிந்திக்கவைக்க வேண்டும். மனித மனதில் அழகு உணர்ச்சிகளை உணரச்செய்பவை  ஆகும். மனிதர் மத்தியில் எந்த பெயரிலும் வன்மம் விதைக்கும் கருவியாக மாறக்கூடாது.   தமிழக மாணவர்கள் மனங்களிலும் பெரிய எதிர்மறையான அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல. தமிழ்கத்தில் புதிதாக உருவாகும் நீல அரசியலின் பிரசாரப்படங்களில் இதையும் உட்படுத்தலாம்.

 

 

13 Oct 2018

மீ….. டு…..


பாலியல் தேவை குற்றமல்ல, இயற்கை என பல கருத்துகக்ள் கொண்ட சமூகம் ஆகும் இந்தியா.  பெண்கள் துன்புறும் நாடுகளில் ’ஒன்றாவது’ இடத்தில் இருக்கும் இந்தியா போன்ற தேசத்தில் தான் ஒருவன் பாலியல்தேவைக்கு அழைத்தான் என  பல வருடங்களுக்கு பின் குற்றம் சாருவதும் அதை ஆதரிப்பதும்  அணிசேருவது விகடமாகத்தான் உள்ளது.
ஒருவனுக்கு பாலியல் தேவையின் பொருட்டு ஒருவளை அணுகினால் எனக்கு விருப்பமில்லை என்று விலகுவது/ஏற்பது அவர்கள் தனி நபர் விருப்பம்,  தேர்வை பொறுத்தது.  ஆனால் ஒருவனின் சபலத்தை வைத்து விளையாடி விட்டு இவன் ஒருகாலத்தில் என்னை அழைத்தான் என கதை விடுவது பல உண்மையான பாலியல் சுரண்டல்கள் வெளிச்சத்திற்கு வராது செய்து விடும்.

அனுராதா ரமணனிடம் மத தலைவர் முதலில் வேண்டுதளாக, பின்பு அச்சுறுத்தலாக.... ஒரு கட்டத்தில் கட்டாயப்படுத்தபட்ட  பின்பும் ’என்னால் இயலாது’ என்று ஒதுங்கிய அவரின் தைரியத்தை பாராட்டியிருக்க வேண்டும். அவர் பிற்பாடு ஜெயேந்திரர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற போதும் இந்த சமூகம் அவருக்காக குரல் எழுப்பவில்லை. ஜெயேந்திரன் ஆள் அனுப்பி வருவித்தது போல் இன்றைய சூழல் இல்லை. தொழில்நுட்ப வாளர்ச்சியால் பெரிதும் தகவல் தொடர்பு மாறி விட்டது. இன்று சமூகவலைத்தளங்கள் ஊடாக பாலியல் இச்சைகளை எளிதாக தெரிவிப்பதை காண்கின்றோம். இந்த இடங்களில் எல்லாம் பெண்கள் போராட்ட கொடியோடு கிளம்பியால் வாழ்க்கையே இதன் பின் போய் துலைக்க வேண்டி வரும். இது போன்ற அற்ப மனிதர்களை தங்கள் பக்கம் இருந்து விலக்குவதும் அதையும் மீறி வந்தால் சட்டத்தை அணுகுவதே  காலச்சிறந்தது.

இது ஒரு புறம் இருக்க பாலியல் இச்சையுடன் நடந்துகொள்வது கட்டாயப்படுத்துவது மட்டுமே பாலியல் சுரண்டலா? பல பெண்களை வேட்டையாட அல்லது சிறுமைப்படுத்த அவளுக்கு 100 பேரோடு பழக்கம். அவ திமிர் பிடிச்சவா? என அவதூறு பரப்பும் ஈனப்பிறவிகள் செய்வதும் பெண் பாலின வெறுப்புணர்ச்சியால் வரும் வன்புணர்வு தான். இவர்களுக்கு என்ன தண்டனை?

இன்று வேலை இடங்களில்; மேலதிகாரிகளின் நற்மதிப்பைப்பெற, உழக்காது ஊதியம் பெற, தகுதியற்ற அதிகாரம் பெற என பல பெண்கள் தங்கள் பாலியல் தகுதியை பயண்படுத்துகின்றனர். அந்த ஆண்கள் உதவியுடன் பலரை துன்புறுத்தி ஆட்சி செய்யவும் செய்கின்றனர்.
இன்றைய சமூக நிலையில் ஒரு சில  பெண்கள் தாங்கள் நினைத்ததை குறுக்கு வழியாக பெற பணம் அல்லது தன் உடலை தாரைவார்க்க தயங்குவது இல்லை என்பது நிர்மலா தேவி போன்ற நிகழ்வில் காண்கின்றோம். இப்போது மாட்டப்பட்டதால் சிறைச்சாலையில் உள்ளார். ஒரு வேளை அந்த பெண் நினைத்த பெரிய பதவியை அடைந்திருந்தால் இதுவெல்லாம் சகஜம் இதிலென்ன என்ற நினைப்புடன் பலர் அந்த பெண் முன் கைகட்டி சேவகம் செய்து கொண்டு இருந்திருப்பார்கள்.  இதற்கு எல்லாம் சரிப்பட்டு வராத பெண்கள் மாற்றலாக்கப்பட்டு, அதிக வேலைப்பழுவில் உட்படுத்தப்பட்டு கேவலப்படுத்தி பழியை தீர்த்து கொள்ளும் சமூகம் தான் இது. பல பெண்களுக்கு; நியாயமாக, எல்லா தகுதி இருந்தும் கிடைக்க வேண்டிய பல நன்மைகள் சில பெண்களின் குறுக்கு வழி செயலால் இழக்கும் பல உண்மைகள் உண்டு.


ஒருவன் நெருங்கினால் ’தனக்கு பிடிக்கவில்லை; வேண்டாம் எனில் நிலையாக நின்று எதிர்ப்பது ஆகும் பெண்களின் தைரியம், பெண்பலம். அல்லாது எல்லா நலன்களையும் பெற்று ஆட்சியையும் அதிகாரத்தை அனுபவித்து விட்டு பாலியலாக துன்புறுத்தினான் என குற்றம் சாட்டுவதில் என்ன  பெண் உரிமை உள்ளது. வீழ்ந்து எழுவதில் அல்ல விழாது செறுத்து நிற்பதும்  பெண்களின் பலம் தான். .
ஒரு பாடகி அல்லது ஒரு நடிகை எதிர்கொண்ட பாலியல் பிரச்சினைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இங்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏழை எளிய எதிற்க வலுவற்ற பெண்களுக்கு கொடுக்கின்றனரா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. அதற்கான ஒரு அமைப்பு கூட நம் தேசத்தில் இல்லை. மகளிர் காவல் நிலையங்கள் நியாயமாக நடந்து கொள்ளகூடிய சட்ட அலுவலகமாக  எழ வேண்டியது காலத்தின் அவசியமாகும். வீட்டின் படி தாண்டியவளை கேவலமாக பார்க்கும் சூழலில் தான் வாழ்கின்றோம்.

மூர்க்கமாக தன்னை எதிர்க்கும், தனக்கு கெடுதலை மட்டும் விளைவிக்கும் பல ஆண்களை செறுக்க வழியே அற்று  இருக்கும் பெண்கள் என்னை பாலியலாக துன்புறுத்தினான் என்ற ஆயுதத்தை எடுக்கும் சூழல் மட்டுமே பல இடங்களில் உள்ளது.

வேலை இடங்களில் மதிக்கப்படும் இனமாக பெண்களை பார்ப்பதில்லை. தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை அவ…. பொம்பளைன்னு…. மிகவும் எளிதா கேவலப்படுத்தும் ஆண்களை கண்டுள்ளேன். பெண்களை நேரடியான பாலியல் தொல்லைக்கு உட்படுத்த இயலாத;  நாலு ஆம்பளை ஒன்று  சேர்ந்தா அவ…இருக்கால்லே ஹீ…ஹி ன்னு வார்த்தைகளால் பாலியல் சித்திரவதைக்கும் உள்ளாக்குவதையும் கண்டுள்ளோம்
.
மீ….. டு….. போன்றவை அதன் நோக்கத்தில் இருந்து வழுகாது அதன் உண்மையான குறிக்கோளோடு நகரவேண்டும். ஒரு சாதாரண காய்கறி சந்தையில்; சாலையில், கட்டிட தொழிலாளியான பெண்ணும் தன் கருத்தை பதியும் காலம் வர வேண்டும். அல்லாது வியாபார விளம்பர மோகத்தில் உள்ளவர்களின் கைகளில் ஆயுதமாக மாறக்கூடாது மீ….. டூ…….

ஆசீபா படு கொலைக்கு வாய் திறக்காத மேனகா காந்தி கூட களத்தில் இறங்க துணிந்துள்ளார். பெண்கள் வேலையிடத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவதை தெரிவிக்க ஒரு அமைப்பு மனித வளத்துறை மூலம் உருவாக்கலாம். கல்லூரியில் வேலை செய்யும் பெண்ணுக்கு கல்லூரி நிர்வாகியே பாலியல் தொல்லை கொடுக்கும் போது எதிர்க்க வழியற்று உழலும் பெண்களுக்கு அரசு என்ன அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. சரியான திட்டங்களும் அமைப்பும் இல்லாது பெண்கள் பாதுகாப்பாக வாழ்வது கடினமே. இந்த எல்லா ஓட்டைகளையும் அப்படியே விடுத்து விட்டு மேல் வர்க்க பெண்கள் மீடியாவில் சொல்லும் புழுகு மூட்டை எல்லாம் பாலியல் தொல்லை என போராடினால் பெண்கள் எதிர்கொள்ளும் உண்மையான பாலியல் தொல்லைகளை கண்டு  தடுப்பது எப்போது? பெண் வீட்டில் வண்புணர்விற்கு உள்ளாகின்றார், காவல் நிலையத்தில், படிக்க செல்லும் கல்லூரியில், வேலைக்கு செல்லும் அலுவலகத்தில் என விமோச்சனமே இல்லாது பெண்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எதிர்ப்பை தெரிவிக்க நிவர்த்தி செய்ய நல்ல அமைப்பு வேண்டும், அதைவிட உடனே எதிர்க்க பெண்களுக்குமன வலிமை வேண்டும்.