1 Oct 2018

இந்திய இறையாமையை கெடுக்கும் மதஅடிப்படைவாதிகள்!!!


ரஃபேல் ஊழல் மும்முரமாக விவாதித்து கொண்டு இருந்தனர். ஆட்சிக்கே பங்கம் வந்து விடும் அளவிற்கு உள்கட்சியிலே கலவரம் ஆரம்பித்தது.. அதோ வந்து விட்டது “பெண்கள் சபரிமலைக்கு செல்லும் தீர்ப்பு சட்டம்”. திருமணத்திற்கு புறம்பான உறவு குற்றமல்ல என்ற ’448 சட்டம் ’ நல்லவர்கள் எல்லோரும் கள்ளக்காதல் பற்றியும், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கூட ஆலய பிரேவசம்னம் பற்றி ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டனர்.

பெண்கள் சபரிமலைக்கு போராடி செல்வதில் என்ன பெரிய விடுதலை வரப்போகிறது. எல்லா மதவும் பெண்களை அடிமைப்படுத்துவதும் துன்புறுத்துவதும் தான். மதவாதிகளின் கைகளில் சிக்காதிருந்தால் அவ்வளவிற்கு நல்லது. பெண்களுக்கு மலையேற விருப்பம் எனில் குஜராத் இருந்து துவங்கி கன்யாகுமரி கடலில் வந்து விடும் மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகான எந்த பகுதிக்கும் பயணம் செய்யலாம். பெண்கள் வேண்டாம், பெண்கள் இல்லாத இடம் வேண்டும் என ஆண்கள் செல்லும், அவர்கள் விருப்பத்திற்கும் மதிப்பு கொடுத்தாவது பெண்களே சபரிமலையை புரக்கணித்திருக்கலாம்.  ஆண்கள் சபரிமலை பயனம் ஊடாகயாது பெண்கள் இல்லாத சூழலையும் தெரிந்து பார்க்கட்டுமே.
பெண் எத்துறையில் இருந்தாலும் அது காவல் ஆகட்டும் நீதித்துறையாகட்டும், கல்வி ஆகட்டும்  ஏன் அரசியல் பணிகளில் கூட இரண்டாம் இடத்தில் தான் தள்ளப்பட்டு உள்ளனர். ஒரே வேலைக்கு பெண்கள் சம ஊதியம் பெறுவதும், வேலை பெறுவதிலும், வேலையிடத்திலும் படிக்கும், ஆளும் இடங்களில்  சம அந்தஸ்து கிடைக்க போராடியிருக்கலாம்.
பெண்கள் எதிர் கொள்ளும் ஏதாவது வழக்கிற்கு நீதித்துறை பெண் என்ற நிலையில் இருந்து பார்த்து சரியாக நீதி வழங்கியுள்ளதா? நீதிமன்றங்களில் வழக்காடும் பெண் வக்கீல்கள் நிலையே இரண்டாம் நிலை தான்.  ஏதாவது மதவாதி பெண்கள் நலனுக்காக பேசியுள்ளார்களா? அதுவும் இல்லை, வேலைக்கு போகிறவள் வேசி, வேலைக்கு போனாலும் வீட்டு வேலை பிள்ளை வளர்ப்பு, ஆணின் பெற்றோரை பார்த்து கொள்ளுதல் எல்லாவற்றிலும் சம அந்தஸ்து உள்ளதா? எல்லா பொறுப்பும் பெண்கள் தலையில் தான் கட்டிவைக்கின்றனர். கடவுள் கதைகளிலாவது பெண்ணுக்கு முன்னிரிமை உண்டா / அதுவும் இல்லை. பின் எதற்காக ஆலயம் செல்வதை பெண்கள் விடுதலையாக பார்க்கின்றனர் என தெரியவில்லை.

அடுத்த ஆயுதம் 497 என்ற சட்ட திருத்தம்
  திருமணத்துக்குப் புறம்பான பாலுறவு தண்டனைக்குரிய குற்றம் அல்ல ஆனால் அந்தக் குற்றத்தைக் காரணமாகக் காட்டி திருமண ஒப்பந்தத்தை மீறியமைக்காக விவாகரத்து கேட்கமுடியும் என்றே கூறுகின்றது.  https://www.theweek.in/news/india/2018/09/27/adultery-grounds-for-divorce--not-criminal-offense--supreme-cour.htmlஇந்த சட்ட திருத்ததை ஒரு ஆண் தான் கோரியுள்ளார். திருமணத்திற்கு புறம்பான உறவு பெணுவதில் ஆண்கள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றோம், சம உரிமை என்ற அடிப்படை உரிமைப்படி பெண்களுக்கும் தண்டனை கொடுங்கள் என்று வேண்டியுள்ளார் நீதிபதி இது தனிநபர் நெறிசார்ந்தது. இருவருக்கும் இந்த செயல் ’குற்றமல்ல’ ஆனால் இந்த செயலில் ஏற்படுபவர்களை விவாகரத்து செய்து விடும் உரிமை உண்டு எனக்கூறியுள்ளார். சொல்லப்போனால்  தனி நபர் உரிமையை மதித்து கொடுத்த  அருமையான தீர்ப்பு.  

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், நமது கலாச்சாரத்தின் அடிவேர், மதம், ஜாதியுடன் கலந்தது. ஆனால் இரு-மனம் சேராது கள்ள தொடர்பு வைத்து கொண்டு வாழும் திருமணம் திருமணம் அல்ல. நேர்மையா ஒப்பந்தத்தை மதித்து வாழுங்கள்,  இருவரில் ஒருவர் மீறினாலும் இருவரே மீறினாலும் விவாகரத்து வாங்கி விட்டு ஒப்பந்ததில் இருந்து விலகி விடலாம். கள்ள தொடர்பு வைத்து கொள்ள கொடுக்கு லைசன்ஸ் அல்ல, தம்பதிகளுக்கு கொடுக்கும் அச்சுறுத்தல். கள்ள தொடர்பில் ஏற்பட்டால் விவாகம் இரத்து செய்ய உரிமை உண்டு.

இதிலும் கள்ள தொடர்பு பேணும் தம்பதிகள் தான் பயப்பட வேண்டும் அச்சம் கொள்ள வேண்டும்.. இந்த முட்டாள் ஊடகவும் மக்கள் மனநிலைக்கு ஒத்தது போல்  செய்தியாகவும் சம்பவங்களாகவும் சட்டத்தை திரித்து கூறுகின்றது.

எல்லோருக்கும், மேற்குலகு, நாகரிக வாழ்க்கை வேண்டும்,. பயண்படுத்த பொருட்கள் வேண்டும். ஆனால் சட்டம் மட்டும் காலா காலத்திற்கு மாற்றம் பெறாத காலசூழலுக்கு ஒவ்வாத காட்டுமிராண்டி சட்டம் வேண்டும்.

இது ஒரு வழியில் போய் கொண்டிருக்கிறது என்றால் மைனாடிட்டி என்ற பெயரில்; இந்தியாவின் அரசியல்மைப்பு சட்டத்தை மதிக்காது கூவிக்கொண்டிருக்கும் மதவாதியை வளர்க்கின்றது இந்த மதவாதி அரசு. நாட்டில், மக்கள் உரிமைக்காக, மனித நலனுக்காக போராடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்து பல மாதம் சிறைச்சாலையில் போட்டு தண்டிக்கும் அரசு; அடுத்தவர்களின்  மத நம்பிக்கையை உணர்வுகளை கேலி செய்து கலவரம் உருவாக்கும் கள்ள மதவாதிகளை சட்டத்தால் தண்டிக்காது வேடிக்கை பார்த்து கொண்டு மக்கள் மத்தியில் பெரும் கலவரம் வர காரணமாக செயல்படுகின்றது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழக கலாச்சார அடையாளமான கும்பகோணம் ஆலயங்களை ’சாத்தான் கூடாரம்’ என பரப்பி வரும் கள்ள மதவாதியை யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் தங்களின் முகநூல் பக்கங்களில் இருந்து கொண்டு அந்த நபர் கூறிய அத்துமீறல் கருத்துக்கு நிகராக கிறிஸ்தவ மதத்தை பற்றி கேவலமாக கருத்து பகிர்ந்து கொண்டு; உண்மையான பன்முகத்தனமை கொண்ட கிறிஸ்தவர்களை மன வேதனைக்கு உள்ளாக்குகின்றனர். நாலுமாவடி கிறிஸ்தவம் அது ஒரு தனி நபர் கிறிஸ்தவம். கிறிஸ்தவ கோட்பாடுகளுக்கோ,கிறிஸ்தவ தலைமைக்கோ கீழ்படிந்தது அல்ல. எந்த வேலையும் அற்று. வீடு வீடாக காணிக்கை வாங்கி திரிந்த மனிதன் கோடிபதியாக மாறுகிறான் என்றால் இந்த ஊரில் உள்ள கிறிஸ்தவனின் அறிவீனம் தான். அங்கு சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் கிறிஸ்தவ மக்களிடம் இருந்து காணிக்கையாக வாங்கினது தான். ஆனால் அரசு கூறுவது ’வெளிநாட்டு பணம்’ என்று. கிறிஸ்தவர்கள் மதமாற்றுகின்றனர் என குற்றம் கூறி கொண்டே இது போன்ற தனிநபர் மதம் பரப்புவர்களை அரசியல்வாதிகள் சந்தித்து ரகசியம் ஒப்பந்தம் வைத்து அரசியல் நடத்துகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. மதம் என்று ’மக்கள் இயக்கம்’ அல்லாது கார்ப்பரேட் ஆக மாறினதோ அன்று முதலே அரசுடன் இணைந்து ஊழல் செய்யும் அரசின் பங்காளிகளாகவும் மாறி விட்டது.
மத உணர்வுகளை தூண்டி விட்டதற்காக ஒரு பொதுநல வழக்கு பதிந்தாகக்கூட தெரியவில்லை. இவ்வகையில் பேசும் நபர் அப்படி முட்டாளும் கிடையாது. அந்த நபரின் பங்காளி தான் ”அடுத்தும் மோடியே பிரதமர்” ஆகுவார் என அருள்வாக்கு கூறியதுடன் மோடியை சந்தித்து ஆசிர்வாதவும் வாங்கி, வழங்கி சென்றதும்.  இந்த நாலுமாவடி நபரும் அரசியல் குறிவாக்கு சொல்வதில் சளைத்தவர் அல்ல. அடுத்த முதல்வரை தேவன் தேர்ந்து எடுக்க போகின்றார் என சோசியம் சொல்லி உள்ளார்.  https://www.facebook.com/suttavadai2/videos/1212345555596987/ யார் அந்த தேவ குமாரன் என்று தான் நோக்க வேண்டியுள்ளது. இது போன்ற பொறுபற்ற பேச்சுக்கள் அரசின் அனுமதியுடன், அரசுடன் இணைந்தே, மக்கள் கவனத்தை திருப்பும் நோக்குடன் வைரல் காணொளிகளை வெளியிடுகின்றனர் என்றே நான் சந்தேகிக்கின்றேன்.

பொறுப்பற்ற பேச்சால் சமூகத்தில் கலவரம் வெடிக்க வாய்ப்பு உண்டு. கிறிஸ்தவத்தில் பல நூறு பிரிவுகள் உண்டு. இதில் எந்த பிரிவு இது போன்ற முட்டாள் பேச்சு பேசினாலும்  அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் ஆபத்து தான். சொந்த தொழில் புரிந்து வரும் உழைக்கும் ஏழை எளிய கிறிஸ்தவ மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்..
அரசின் சூழ்ச்சியாகவே இதைக்கருதி, மதம் கடந்து, மத பாகுபாடுகள் களைந்து சமூக நீதிக்கு புறம்பாக, மனித நலனுக்கு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவர்களை அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்..

கிறிஸ்தவத்திற்குள் நடக்கும் ஜாதி, சபைச்சண்டைகளுக்கு கணக்கே இல்லை. இதில் கேரளா, தமிழக ஆலயங்களை ’சாத்தான்’ என கூவிக் கொண்டு கலவரம் உருவாக்குபவர்கள் சட்டத்தால் கண்காணிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும். அரசு இது போன்ற புல்லுருவிகளை பயண்படுத்தி கலவரம் கிளப்பி விடாது ஆரம்பத்திலே சட்டத்தால் தண்டிப்பது இந்திய இறையாமைக்கு நல்லது ஆகும்.

23 Sept 2018

மேற்குத் தொடர்ச்சி மலை!


ஒரு திரைப்படம் எப்படி எடுக்கப்பட வேண்டும் காட்சி மொழி என்ன?திரைப்படம் என்ற ஊடகம்  எவ்வாறு  மக்களிடம் உரையாட வேண்டும் என்ற தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ’மேற்குத்தொடர்ச்சி’ மலை. என்ற திரைப்படத்தை பார்த்தே தீர வேண்டும். இரானியன் படத்தை உலகப்படம் என கொண்டாடும் நம் இயக்கங்கள் தமிழில் ஒரு சிறந்த மக்கள் படம் வரும் போது பார்க்கவேண்டியதும் ரசிக்க வேண்டியதும் இது போன்ற படங்கள் மேலும் வர ஊக்கமாக  அமையும்.

தனது 11 வயது வரை கோம்பையில் பிறந்து வளர்ந்த இயக்குனர் லெனின் பாரதி, பிற்பாடு சென்னைக்கு குடிபெயிற்கின்றார். அவர் கண்டுணர்ந்த  மாந்தர்களை பற்றிய படம் தான் இது. அப்படத்தின் திரைக்கதையை இரண்டரை மணிநேரத்தில்  எழுதி முடித்தாக நேர்முகத்தில் கூறியுள்ளார்.

தமிழக கரைகாட்டில் வாழவழியற்ற சூழலில் கேரளா மலைக்காடுகளை தேடிப்புறப்பட்ட மனிதர்களின் கதை இது. கேரளா தமிழ் மலையாள மொழி அரசியல், பண்பாடு, வேலைவாய்ப்பு, மனிதர்களில் வாழ்வியல் என இப்படம் ஒரு காலத்தின் ஒரு நிலைப்பகுதியின் வரலாற்று படமாக மாறுகின்றது.  இந்த மனிதர்கள் மலைமுகடில் இருந்து ஏலக்காயை மட்டும் சுமந்து வரவில்லை தகவல்கள் பணம், கொடுக்கல் வாங்கல்கள் என மலைக்கு  கரைக்குமான பாலமாக தொடர்கின்றனர். அப்படியான சில மனிதர்களில் முக்கியமாக ரங்கசாமியின் வாழ்க்கையை சொல்வதே இக்கதை. 

ரங்கசாமி நல்லவர் மட்டுமல்ல உழைப்பாளி.  அவரின் ஆகப்பெரிய கனவு சொந்தமாக ஒரு இடம் வாங்க வேண்டும்  என்பதாகும்.  தனது திருமணத்தையும் விட ஒரு இடம் வாங்க வேண்டும், அதும் தன் தாயின் பெயரில் வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு வேலை பார்த்து வருகின்றார்.

ரங்கராஜின் ஒரு நாள் என்பது அதிகாலை நாலுமணியுடன் ஒரு  கட்டன் காப்பியுடன் ஆரம்பமாகின்றது. வழியில் கடந்து செல்லும் பாம்பு, யானை ஒன்றும் அவர்களுக்கு தடையல்ல. சகஜீவிகளாகவே அவர்களுடன் அதுகளும் வாழ்ந்து வருகின்றது அல்லது அந்த ஜீவிகளுடன் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எளிய மனிதர்கள் வாழ்க்கை, கடம் சொல்லி குடிக்கும் காப்பியில் இருந்து, கழுதையுடன் மல்லுக்கட்டிய நடைபயணம், சின்ன சின்ன உரசல்கள் சண்டைகள் இட்டு, வெகு விரைவில்  சமரசமாகி, இரத்தம் கக்கி சாகும் வரை வேலை செய்யும் மனத்துணிவுடன் உழைத்தே வாழவேண்டும் என்ற வைராக்கியத்துடன்  வாழும் மக்களவர்கள். அவர்கள் உழைப்பு வெறும் பிழைப்பு சாந்தது அல்ல அவர்கள்  முதலாளியின் நலனும்  அன்பும் கலந்தது.
  
அவர்கள் மனிதர்களிடம் மட்டும் நேசமாக நடந்து கொள்ளவில்லை; அவர்களுடன் பயனிக்கும் கழுதையுடனும் பரிவுடன் நடந்து கொள்கின்றனர். கொலைக்கார யானையை கூட பரிவு கலந்த மரியாதையுடன் நோக்குகின்றனர்.  மனம் பிளர்வுபட்ட பாட்டியையும்  கேலியாக எகத்தாளமாக அல்ல; பரிவாக நோக்குகின்றனர்.  

 சீனியை வாயில் போட்டு தன் அன்பை வெளிப்படுத்தும் பெண்ணாகட்டும்,  ஏலக்காட்டு முதலாளி, கோபக்கார கங்காணி, சகாவு சாக்கோ  என எல்லா மனிதர்களும் அன்பால் பிணையப்பட்டு ஒருவருக்கு ஒருவர் உதவும் மனநிலையில் உள்ளனர்.  மலை உச்சியில் வசிக்கும் சாக்கோவின் தந்தைக்கு மகன் கொடுத்து விட்ட மருந்தை பெற்ற சாக்கோவின் அம்மா ரங்கராஜை வெறும் கையாக அனுப்பவில்லை. உங்க அம்மா எப்படி இருக்காங்க? மரச்சீனியை கொண்டு கொடு என்று  வெட்டி வைத்திருந்த கப்பை கிழங்கை  கொடுத்து விடுகின்றார்.

பஞ்சம் பிழைக்க வந்த லோகு முதலாளியாவதும், முதலாளியானதும் தனது இனமான தமிழனை, மலையாளி முதலாளிக்கு விற்கவும் தயங்கவில்லை. தொழிலாளி தலைவர் சாக்கோ மக்கள் போராட்டத்தில் உண்மையாக நிலைகொள்வதை உடைக்க மொழி அரசியலை ( மலையாளி தமிழன்(பாண்டி) எடுத்த முதலாளியை; தொழிலாளி நலனுக்காக கொலை செய்யவும் தயங்கவில்லை.

உழைப்பவர்கள் கட்சி என்ற அடையாளத்தில் நிலைகொள்ளும் கம்னீஸ்ட் கட்சியில் உள்ள ஒரு பிரிவினரின் துரோகத்தையும் வெளிகொணர்ந்தது; இயக்குனரின் எஸ்டேட் அரசியல் ஆழத்தையும், தார்மீக கோபத்தையும் நேர்மையால் விளைந்த தைரியத்தையும் தான் காட்டுகின்றது.

மீரா அத்தாவிடம் கூட  கடன் கேட்க கூச்சப்பட்டு, தன்மானத்துடன் மனம் நிறைய நன்மைகளுடன் வாழ்ந்த ரங்கு, கடைசியில் தான் ஆசையாக வாங்கி சேர்ந்த கொஞ்ச இடத்தையும் இழந்து, வேட்டிகட்டி வாழ்ந்த  தன்மான வாழ்க்கை கால்சாட்டை யூனிபோம் மாட்டி சுயம் இழந்து   அடிமையாக மாறுவதுடன்  கதை முடிகிறது.

இந்த படம், விவசாய நிலத்தை இழந்த விவசாயியை மட்டுமல்ல சில்லறை  முதலாளிகளை பண்ணாட்டு நிறுவனங்களிடம்  இழந்து தவிக்கும் உள்ளூர் முதலாளிகள் ; கல்விகற்று அடிமைகளாக வேலை பார்க்க வேண்டிவந்த  புதிய  தலைமுறை பற்றிய திரைப்படவுமே இது.

காட்சிப்படுத்தியிருக்கும் அழகு அலாதி. மேற்குத்தொடர்சி மலை என்பதே ஆச்சரியத்தின், அற்புதங்கள் நிரம்பிய செழுமையான காடுகள் நிரம்பியது தான். ஏரியல் ஷாட்டை மிகவும் அழகாக, தேவையான இடத்தில் பயண்படுத்தியிருக்கும் நுட்ப- அம்சம் கொண்ட படம் இது. வெறும் நடிப்புடன் நிறுத்தாது காட்சிகளும் கதையும் சூழலும் மாறும் போது மனிதனின் உடல் மொழியில் வரும் சிறு மாற்றங்களை கூட நுட்பமாக காட்சிபடுத்தியுள்ளனர். தோராது பெய்து கொண்டிருக்கும் மழை, மலைவேலையாட்கள் உடுத்தும் உடை, அணியும் கொங்காணி, அவர்கள் ஊர் டீக்கடைகள் எல்லாம் ஆராய்ச்சி மேற்கொண்டு அதே காலகட்டத்திற்கு அழைத்து சென்று விட்டனர்.

சினிமாத்தனம் இல்லா இயல்பான வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக சொல்லிய படம் இது. சினிமா என்றால் குத்தாட்டம் புளித்த ஜோக், தனிநபர் வணக்கம் இல்லாது நிஜ-சினிமா அல்லது வாழ்வியல் சினிமா என்ற வகையில்  மனிதர்களை கதையில் வாழவைத்து படமாக்கியுள்ள இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.

திரைக்கதையில்  கதாப்பாத்திர படைப்பை; காட்சி அமைப்பையும்  கடந்து அவர்கள் பேசும் உள்ளூர்  உரையாடல்கள் ஊடாக நகத்தியிருப்பது சிறப்பு. நல்லதையே நினைத்து,  சுயநலன் தேடாது நன்றாகவே வாழ்ந்த மனிதர்கள்;   தங்களுக்கு வெளியிலான உலகத்தை தெரிந்திருக்காத மக்கள் உலக அரசியலில், உலகமய வியாபாரத்தில் சிக்கி சின்னாபின்னமாக அழிந்த அவலம் ஒரு திரைப்படமாக  உருவாக்கிய படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.





பணம் ஈட்டுவது, ஆடம்பரம், பாலியல் இன்பம், புகழ் மோகம்  என படம் எடுத்துவரும் இளைஞர்கள் மத்தியில் படத்தொழிழ் நுட்பத்தை அழகியல் சார்ந்து மட்டுமல்ல சமூககருத்தாக்கத்தின் மீட்சியாக பயண்படுத்திய இயக்குனரை பாராட்டியே தீர வேண்டும்.

தயாரிப்பாளர் விஜய் சேதுபதியையும் பாராட்டவேண்டும். தான் நடிக்க வாய்ப்பில்லாத படமாக இருந்தாலும் ஒரு நல்ல திரைப்படம் சமூகத்திற்கு தரவேண்டும் என்ற நோக்கில் லாப நஷ்டத்தை முன்நிறுத்தாது சமூக விழிப்புணர்வை மட்டுமே முன்நோக்கி படத்தை இயக்கிய அவருடைய சமூக பார்வையை நல்லெண்னத்தை சீர்தூக்கி பார்க்க வேண்டியுள்ளது.

படம் வெளியாகும் முன்னே மரணப்பட்டு போன கணக்கப்பிள்ளை, மலையில் முகட்டில் ஹோட்டல் நடத்தும் அப்பத்தா, ரங்கசாமியின் மனைவியாக நடித்தவர்,   மீரா அத்தா என நடித்த அத்துணை பேரும்; எல்லோரும் நல்ல மனிதர்கள்.   உயிரோட்டமான, மனித நேயம் கொண்ட  மனிதர்களை பற்றி சொல்லிய நிஜ(ரியலிஸ்டிக்) திரைப்படம்.

இளையராஜாவில் இசை அருமை. 
எடிட்டர் விஷுவநாத் அவர்களின்கைவண்ணம் திரைப்படத்தை மென்மையாக பார்க்கும் சூழலை உருவாக்குகின்றது. தேனி ஈஷ்வரின் ஒளிபதிவு அருமையிலும் அருமை. க்லோசப் இல்லாது  நடிகரின் நடிப்பில்  அதீத நம்ப்பிக்கை வைக்காது கதையின் சாரத்தை நம்பி முன்நகத்திய அருமையான திரைப்படம் இது.


இன்று நெல்லையில் நடந்த பாராட்டுவிழாவிலும் என் மாணவர்களுடன்  பங்குபெறும் வாய்ப்பு கிட்டியது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாட இடது சாரிகளோ , நாம் நம்பும் சமூகப்போராளி தலைமைகளோ விரும்பவில்லை என அறிந்தேன்.. 


இது இடுக்கி சார்ந்த தோட்டதொழிலாளி அரசியல் நிலவரம் தெரியாது கோபப்படுவது ஆகும். தொழிலாளியின் உரிமையை மீட்டு எடுக்க இடதுசாரிகள் போராடினார்கள் என்பதில் எதிர்கருத்து இல்லை, ஆனால் முதலாளிகள் போடும் கேவலம் பிச்சைக்கு என தொழிலாளிகளை  ஏமாற்றினதும், கொலை செய்ததும், கொலைச் செயப்பட்டதிலும் இடதுசாரிகளின் கை உண்டு என்றால் பொய்யாகாது. 


தமிழர்கள் உரிமையை, குடியிருக்கும் இடத்தை அபகரித்து விட்டு எந்த ஆதாரவும் அற்ற நிலையில் தமிழர்கள் கொண்டு விட்டுள்ளனர். 

இது போன்ற நல்ல படங்களால் மட்டுமே மதி- மயக்கத்தில் கிடக்கும் மனிதர்களை விழிப்புணர்வு செய்ய இயலும். 

ஒரு பிரசார தொனி இல்லாது, தொண்டை கிழியும்  ஒன்றை உரையாடல் இல்லாது இயல்பாக  மனிதர்கள்  வாழ்க்கையாக உள்ள இத்திரைப்படம் வெற்றி பெற்று வேண்டும்







16 Sept 2018

மலர்வதியின் “தூப்புக்காரி”

2012ம் ஆண்டுக்கான இளம் படைப்பாளிகளுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற  நாவலாகும் மலர்வதியின் “தூப்புக்காரி”. இயற்பெயரான மேரிபுளோரா என்பதை தமிழ்மைப்படுத்தி மலர்வதி என்ற பெயரில் எழுதி வருகின்றார்.  

தனது 15 வது வயது முதலே, தன் வாழ்க்கையில் தான் கண்டுணர்ந்தவற்றை  தன்னை பாதித்த மனிதர்கள் வாழ்க்கையை எழுதி  இரும்பு பெட்டியில் பூட்டி வைத்திருந்த எழுத்தாளினி தனது முதல் நாவலை 2008 பதிப்பிட்டு வெளியிட்டுள்ளார். 


இப்புத்தகம் இவருடைய இரண்டாவது புதினமாகும். அச்சிட பணம் இல்லாத நிலையில் அச்சகரிடம் கடனாக அச்சிட்ட இப்புத்தகம் மூத்த எழுத்தாளர்கள் பொன்னீலன் போன்றோரின் உந்துதலின் பெயரில் சாகித்ய அகாடமி விருதிற்கு அனுப்பியதில் 2012ம் ஆண்டிற்கான இளம் சாகித்ய அகாடமி விருது,  தாமிர பட்டயமும், 50 ஆயிரம் ரூபாயும் பெற்றிருந்தது.  விருதை வாங்க பாட்னா செல்லவேண்டிய நிலையில் தனது வழிப்பயணத்திற்கு செல்ல பணபிரச்சினையால் அவதியுற்றது ஊடகச்செய்தியில் இடம் பிடித்திருந்தது. வறுமையில் பிறந்து, வறுமையில் வாழ்ந்த தற்போதும் வறுமையில் வாழும் ஒரு காதாசிரியரின் நாவல் என்பதும் இதன் சிறப்பாகும். 


தந்தை முகம் பார்க்கும் முன்னே வேறு பெண்ணுடன் பிரிந்து சென்ற நிலையில்; தனது ஐந்து குழந்தைகளை காப்பாற்ற வீட்டின்  பக்கத்திலுள்ள கிறிஸ்தவ பள்ளியில் மாதம் 30 ரூபாய் கூலியில்  துப்புறவு தொழிலாளியாக வேலை செய்து வந்த தன் தாயின் துயரை கண்டு வளர்ந்தவர் தான் கதாசிரியை.  எழுத்தாழினியாலும்  9-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கும் சூழல் வீட்டில் இருக்கவில்லை. இன்னிலையில் இரண்டு வருடம் முந்திரி பருப்பு கம்பனியில் வேலை செய்கின்றார். பின்பு தனது அண்ணனின் உதவியுடன் படித்து தமிழில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது இந்தப்பகுதியில் இருந்து வரும் "முதற்சங்கு'என்ற மாத இதழிற்கும்,"இலக்கிய சிறகு' என்ற நாளிதழுக்கும் பொறுப்பாசிரியராக உள்ளார்

மலர்வதியின் தூப்புகாரி என்ற நாவல் விழிம்பு நிலை மக்களின் கதையாகும். கதை இப்படியாக நகர்கின்றது.  தனது கணவர்  நோய்வாய்ப்பட்டு மரித்த நிலையில், மருத்துவம் பார்த்த மருத்துவமனையின் கடன் அடைப்பதற்கு என  நாடார் சமுதாயத்தில் பிறந்த கனகம் துப்புறவு தொழிலை தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றார். ஒரு துப்புறவு தொழிலாளியான கனகத்தை தன்னுடன் சேர்த்து கொள்ள தயங்கிய  உறவினர்களால், ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் கனகம் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றார் பூவரசியும் தனியாக விடப்படுகின்றார். 

கனகத்தின் மகளான் பூவரசியும் தான் வெறுத்த துப்புறவு தொழிலயை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகின்றது. இதனிடே தன் ஜாதிக்காரனான ஒரு பணக்கார பையனுடன் காதல் மலருகின்றது. அவன் ஒரு குழந்தையை கொடுத்து விட்டு, வீட்டில் பார்த்தை பெண்ணை திருமணம் செய்து மறைய, தனித்து விடப்பட்ட பூவரசுவை சக்கிலியனான மாரி, தன் மனைவியாக ஏற்று வீட்டுற்கு அழைத்து செல்கின்றான். பூவரசுவை பிடித்த வேதனைகள் தான் விட்ட பாடில்லை. மாரியும் ஒரு விபத்தில் மரித்த நிலையில் தன் பெண் குழந்தையுடன் அதே துப்புறவு தொழிலாளியாக கனகத்தின் மகளாக  பூவரசு வளர்ந்த வறுமை நிலையில், பூவரசு மகளும் வளர்க்க வேண்டிய  சூழலுக்கு தள்ளப்படுகின்றார்.

துப்புறவு சமூதாயம் மேல்கொண்டுள்ள சமூகத்தின் பார்வை, இந்த மக்கள் வெகுகாலமாக எதிர்கொள்ளும் சமூதாயா புரக்கணிப்பு அவமதிப்பு பல சம்பவங்கள் ஊடாக சொல்லியுள்ளார். கேரளா எல்கையோரமுள்ள கன்யாகுமாரியில் ஜாதி வகைப்படுத்தலின் கொடுமையை விட வர்க்க பாகுபாடான இருப்பவன் இல்லாதவன் நிலை  பற்றி சொல்லியுள்ளார். துப்புறவு தொழில் என்பது ஒரு குறிப்பிட்ட  மக்களின் ஜாதியுடன் இணைந்து தொழில் என்பதையும் கடந்து வசதி வாய்ப்பு அற்ற, மேல்ஜாதி ஏழை மக்கள் மேல் நிர்பந்தமாக திணிக்கப்படுகின்றது என்பதையும் வலியுறுத்துகின்றார். ஒரு தலிது பிரச்சினையை மீறி இது மக்களின், யாருமற்ற பெண்களின் பிரச்சினையாக உணரவைக்கின்றார்.

கல்யாண வீட்டில் மேசையை சுத்தம் செய்ய நிற்கும் ஏழை வயதான பெண்களை கண்டு கடந்து போயுள்ளோம். விருந்துக்கு பந்திவைக்கும் மக்கள் அனைவரும் உண்ட பின் தன் வயிற்று பசிக்காக காத்து நிற்க வேண்டிய கொடிய நிலையும், கொலைப்பசியால் உணவை நேரமே உண்டார் என்று ஏளனப்படுத்தும், பசியை பற்றி தெரிந்திராத பணக்கார இரக்கமற்ற மனநிலையும் ஒரு சம்பவத்தால் எளிதாக வடிவமைத்துள்ளார்.   

பணம் இல்லா எளியவர்கள் என்ற ஒரே காரணத்தால் மிகவும் துச்சமான ஊதியத்தை கொடுத்து தலைமுறை தலைமுறையாக அடிமை நிலையை பேணவைக்கும் மருத்துவ நிர்வாகி என்ற பணக்கார கும்பலின் மனநிலையும் விளங்க பண்ணியுள்ளார். கதைமுடிவில் பூவரசிக்கு இருந்த ஆகமொத்த உரிமையான மகளையும் உன்னால் பிள்ளையை வசதியாக வளர்க்க இயலாது தத்து கொடுத்து விடு” என பிரிக்க நினைக்கும் முதலாளி மனநிலையும் விவரித்துள்ளார்.

ஆண் பெண் காதல் எந்த வகை காதல் மேன்மையானது, பண்பானவன் என்ற நினைத்த மனோவை விட அழுக்கன் என்ற அடையாளமுள்ள மாரி எவ்வளவோ மேல் என அவன் குணத்தால் அழுத்தமாக பதிந்துள்ளார்.

ஜாதிபெருமையும் வசதி பெருமையும் ஏழைகளின் வாழ்க்கைகோ வறுமையை போக்கவோ உதவவில்லை என்பதையும் அழகாக குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறை தூப்புக்காரி என கதாப்பாத்திரம் அழைக்கப்படும் போதும் வாசகர்கள் நாமும் அந்த அவமான சொல்லில் மதிப்பற்ற விளியில் சுருங்கி போவதை உணரலாம்.

இலக்கியம் என்பது வாழ்க்கை, அது கற்பனை கலந்த வார்த்தை பிரயோகம் அல்ல என்பதை மலர்வதி நிரூபித்து விட்டார். கழிவறைகளும்,  அந்த நாற்றத்திலும் அழுக்குலும் அல்லல் படும் மனிதர்கள் நம்மை விட்டு அகலவில்லை. அது ஒரு தீராத அழுகையின்  அவலக்குரலாகவே உள்ளது. வாசிக்கும் ஒவ்வொருவரும் ’தூப்புக்காரி’ என்று விளிப்பதை விடுத்து மனித நேயத்தோடு அவர்களை நோக்கவும் அழைக்கவும் கற்று கொண்டிருப்பார்கள். அவ்வகையில் இது ஒரு விழிப்புணர்வு மனிதநேய நாவல் தான்.

தலிது எழுத்து என எழுத்தாளர் பொன்னீலன் முன்னுரையில் கூறியுள்ளார். ஒரு நாடார் இனத்தை சேர்ந்த பெண் எப்படி தலிது எழுத்தாளர் என்ற அனுகூலங்களை பெற இயலும் என விமர்சங்களுக்கும் உள்ளாகியுள்ளார். தான் தலிது எழுத்தாளர் அல்ல ஒரு எழுத்து போராளி என தன்னை முன் நிறுத்த அம்பை போன்ற எழுத்தாளர்கள் பணிந்துள்ளனர்.  ஆனான் என் வாசிப்பில் நான் கண்டது ஒரு குறிப்பிட்ட தலிது மக்கள் பிரச்சினை மட்டுமல்ல, ஏழ்மையால் சூழலால் தெருவிற்கு வேலைக்கு என வந்த  எல்லா எளிய நிலை பெண்களும் அனுபவிக்கும் அவலைநிலையாகும் தூப்புக்காரி என்ற நாவல் வழியாக நாம் காண்பது. சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் தலிது என அறியப்படவேண்டும் என்பது எழுத்தாழியின் ஆவாலாகும். அவர் வார்த்தைகளில் சொன்னால் ”நான் வாழும் சமூகத்தில் தலித் என்ற அடையாளம் பெற்று எவரும் இல்லை.. இங்கே பணத்தின் பெயரால், படிப்பின் பெயரால் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளும் தலித்திய வலிகளே.. பாதிக்கப்பட்ட அத்தனைப் பேரும் என்னைப் பொறுத்தவரை தலித்துகள் தான்”



நாவலை கையிலெடுத்தால் வாசித்து முடிக்கும்  வரை நம்மை வைக்கவிடாது நகத்தும் வாழ்வியல் கதை. பல கதைமாந்தர்கள்; நாமும் நம் வாழ்க்கையில் கண்டு விலகி சென்றவர்கள், கண்டு கொள்ளாது கடந்து சென்றவர்கள் தான்.

கனகம் பட்ட வேதனையில் அவளின் ஒரே லட்சியம் தனது மகள் தன் தொழிலில் வரக்கூடது என்பதாகும். தன் இனத்தில் யாரேனும் கல்யாணம் செய்து அவ நிம்மதியாக வாழ வேண்டும் என்பதாவே இருந்தது. என் மகளை சக்கிலியன் பெண் கேட்பதா என்று வருந்திய தாய், சக்கிலியன் மாரியாவது தன் மகளை கல்யாணம் செய்து விடக்கூடாதா என ஏங்கும் நிலையில் வாழ்க்கை கொண்டு விடுகிறது, கணவன் கடத்தை அடைக்க கனகம் செய்த வேலை, தன் தாய் மருத்துவ கடன் அடைக்க என பூவரசியும் வேலையில் சேருகின்றார். 

இடையில் பாதுகாவலனாக காப்பாற்றி பூவரசுவிற்கு நல்ல வாழ்க்கை வேண்டும் அவ சந்தோசஷமா இருக்கனும் அவ பிள்ளைக்கு தகப்பனா இருக்கனும் என நினைத்த மாரியும் விபத்தில் மரிக்க; பூவரசு அதே கனகாவின் இடத்தில் வந்து சேருவது தான் திகைக்க வைக்கின்றது, வருந்த வைக்கின்றது. என்னடா வாழ்க்கை? ஏழை பரம்பரையா ஏழை தானா? விடிவே இல்லையா என நம்பிக்கையின்மைக்கு கொண்டு செல்கின்றது. மாரியை கதாசிரியர் எதனால் சாவடித்தார்? தான் வளர்ந்த அதே சூழலில் தன் மகளையும் வளர்க்க ஏன் துணிந்தார்? என்பது காதாசிரியரின் மாந்தர் படைப்பை பொறுத்தது. இருப்பினும் பூவரசின் வாழ்க்கையில் இனி வசந்தமே இல்லை என்பது முடிவில் ஒரு அகலாத வருத்ததையும் நம்பிக்கையின்மையும் விதத்துள்ளதா? என சிந்திக்க வேண்டியுள்ளது.  

மலர்வதியின் இப்புத்தகத்தை எனக்கு தருவித்த எழுத்தாளர் நாறும்பூ நாதனுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். காட்டுக்குட்டியும் உடன் கொடுத்து விட்டுள்ளார். ஒரு விமர்சனத்துடன் சந்திக்கின்றேன். 

மலர்வதிக்கு என் வாழ்த்துக்கள் மென்மேலும் பல புத்தகங்கள் பதிப்பிக்க,

17 Jul 2018

சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்”


சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல்  வெளிவந்த சோம அழகின்  “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும்.  திருநெல்வேலி  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இலக்கியக்கூட்டத்தில் பாராட்டுப்பெற்ற நாங்கள் நாலுபேரில், ஒருவராவார் ’சோம அழகு.’ தற்போது மனோன்மணியம் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவியான இளம் தலைமுறையின் அடையாளமான சோம அழகு என்ற இளம் நங்கையின் புத்தகம் வாசிக்க ஆவல் கொண்டேன்.
தனது முதல் புத்தகத்தை தனக்கு மிகவும் பிரியமான தாத்தாவிற்கு சமர்ப்பித்துள்ளார் அழகு . பேரா. தொ. பரமசிவத்தின் வாழ்த்துரையுடன் புத்தகத்திற்குள் நுழைகின்றோம். எழுத்தாளர் பாமரன் தலைப்பை கண்டு, கோபம் கொண்டாலும் எழுத்தை வாசித்த பின்பு  பேரன்பு கொண்ட  அணிந்துரை வழங்கியுள்ளார் என்பது சோம அழகின் புத்தகத்திற்கு இன்னும் அழகு சேர்க்கின்றது.

சோம அழகிற்கு பின்புலமாக; அழகு வளர்ந்த இனிமையான கூட்டுக்குடும்ப சூழல், அவருடைய அன்பான தாத்தா, பல்கலைகழக கணித பேராசிரியரான தந்தை, தொ பரமசிவம் போன்ற  கருத்துற்ற எழுத்து ஆளுமைகள் என்பது அவருடைய ஆளுமைக்கு மட்டுமல்ல அதின் தொடர்ச்சியான  எழுத்தாளுமைக்கும் உருதுணையாக உள்ளது.

கட்டுரைக்கு ’மெய் அழகு’ என வாழ்த்தியுள்ளார் பதிப்பாசிரியர் காவ்யா சண்முக சுந்தரம். ஆம் அவருடைய ஒவ்வொரு கட்டுரைக்கு ஜீவநாடியாக உள்ளது அவர் எழுத்தில் இழையோடும்  மெய்மை தான். எந்த கற்பனையும் இல்லாது உள்ளதை உள்ளபடி எழுதியுள்ளார்.

21 கட்டுரையை அழகான ஒரு மலர்ச்சரம் போல் தொடுத்து வாசகர்களுக்கு கொடுத்துள்ளார். அவருடைய எழுத்தில் வயதிற்கு அதீதமான பக்குவவும், எதையும் கேள்வி கேட்கும் இளைமையின் துணிவும், தேடுதலின் ஞானவும், சமூக அநீதிமேலான  வெறுப்பும், சில வரட்டுத்தனம் பிடித்த மனிதர்கள் மேலுள்ள  கோபவும்  எழுத்தாக எரிமலை போன்று கொப்பளித்து வெளிவருகின்றது,

 முதல் கட்டுரையிலே தற்கால நுகர்வுக்கலாச்சாரத்தை சாடுவதுடன் நவீன  மனிதர்கள் அடிமைப்பட்டு கிடக்கும் ஆடம்பர கடைகளில் இருந்து துவங்குகின்றார். நமது தெருவிலிருக்கும் அண்ணாச்சி கடை என்பது வெறும் கடை மட்டுமல்ல அது ஒரு மனித நேயத்தின் உன்னத நிலையில் இருந்து  பெரிய கடைகளில் உணர்வற்ற மனநிலையில் பொருள் வாங்குவதும் பணம் கொடுப்பதுமாக ஒழிந்து போனதை பெரும் வருத்ததுடன் பதிந்துள்ளார். அடுத்த கட்டுரையிலோ தனது தெருமூலையில் சைக்கிள் கடை வைத்திருக்கும் ஏழை யாரும் நினைவில் வைத்து கொள்ளாத அங்கிளை நேசத்துடன் நினைவு கூறுகின்றார்.
இவருடைய நையாண்டி கலந்த கோப வார்த்தைக்கு இந்தியா அரசில் விளையாட்டுத்துறையையும் தப்பவில்லை,  தாத்தா என்ற கதைசொல்லியை நினைவு கூறுகின்றார். தன் உறவினர்களில் மறக்க இயலாத நல்ல ஆளுமையான பெரியமாவை  புகழ்ச்சி மாலையால் நினைவுறும் சோம அழகு, உணவகத்தின் தங்களுடைய அதிகாரப்பெருமையை காட்டிய உறவினர்களை கடிந்தும் உள்ளார்,

கல்யாண வீட்டில் காணும் அதீத ஆடம்பரம் மட்டுமல்ல மரணவீட்டில் கூட உறவினர்கள் மனித உணர்வற்று நடந்து கொள்வதை சோம அழகால் சகித்து கொள்ள இயலவில்லை.


சர்க்கஸ் என்ற விளையாட்டை அழகால் ரசிக்க மட்டுமல்ல,  கயிற்றில் நடந்து சாகசம் புரியும் மனிதர்கள், அங்கிருந்த மிருகங்களையும் கரிசனையுடன் நினைத்து பார்க்கும் நெகிழ்ச்சியான மனம் கொண்டவராக இருக்கின்றார் அழகு.


சாதாரணமாக இளம் பெண்கள் என்ற ஒற்றை பார்வையில் இருந்து வாழ்வியல் தத்துவங்களிலும் வாழ்க்கையை பற்றிய கனவிலும் ஒன்றை யானையாக தன் தனி வழியில் மிகவும் மிடுக்காக அறிவுச்செறுக்குடன் தலைநிமிர்ந்து பெருமையாக நடந்து செல்கின்றார். 

அழகின் சிறப்பே அவரின் பார்வையில் உதித்த  மாற்று கருத்துக்களும்,  தன் கருத்தில் நிலைகொள்ள வேண்டும் என்ற அவருடைய விருப்பவும் பிடிவாதவுமாகும். 

அழகு ஒரு வித்தியாசமான சிந்தனைவளம் கொண்ட பெண்ணே. கடவுளை கண் மூடித்தனமாக நம்புவதை கேள்வி எழுப்புகின்றார். பெண்களுக்கான சுதந்திரத்தை கெடுக்கும் உறவுகளை தைரியமாக சாடும் துர்கையாகவும் சில இடங்களில் காட்சி தருகின்றார். பக்கத்து வீட்டு குழந்தையை கொஞ்சும் அன்பில் பேரன்பின் உருவமாயும் மாறுகின்றார்.

காணும் சமூக புரட்சி கொண்ட பெண்ணாக அன்பான நேசம் கொண்ட சிந்தனை வளமிக்க பெண்ணாக, சோம அழகு மிளிர்வதில் இவரின் தாத்தாவின் இடம் இன்றிமையாதது. அதனாலே தாத்தாவின் மரணத்தையும் அழகால் ஜீரணிக்க இயலவில்லை. ஆழமான அன்பின் காயமாகவே அவர் மனதில் நிலைகொள்கின்றது. தாத்தாவின் நோய், மரணம், அதன் பின் நடந்த சங்குகள், ஒரு பெண்ணாகையால் தனக்கு சுடுகாடு சென்று தாத்தாவிற்கு அஞ்சலி செலுத்த தடை விதித்தது எல்லாம் கனத்த இதயத்துடன் பதிந்துள்ளார்.

சோம அழகின் எழுத்தில் ஒரு  மெய்மையை தேடிய பயணம், கோபம், மகிழ்ச்சி, அப்பாவின் பாசமிகு மகள், பக்கத்து வீட்டு பைத்தியக்கார பாதிரியாரையும்  கரிசனையாக நோக்கும் இளகிய மனம் கொண்ட தாயுள்ளம், தான் ஒருபோதும் காணாத ஆனால் கதைகளில் கேட்ட வாழ்க்கையின் கொடூர சதியால் மிகவும் அவலநிலையில் மரித்த தற்கொலை செய்து கொண்ட  ஆச்சிகளையும் நினைவால் நினைத்து வருந்துகின்றார்,.

தனியாக சென்று வந்த இத்தாலிபயணத்தை பற்றியும் எழுதியுள்ளார்.

சோம அழகு நிறைய எழுத வேண்டும். தற்கால பெண்களின் அடையாளமான சோம அழகால் பல நல்ல கருத்தாக்கங்களை இளைய தலைமுறைக்கு சேர்க்கும் வலு உள்ளது,

அழகின் எழுத்திலுள்ள வார்த்தை ஜாலம் அழகு, அழகின் சமூக பார்வை மேன்மை பொருந்தியது, அவ்வகையில் இப்புத்தகம் மிகவும் அழகான அனுபவம் தந்த புத்தகம்.   

3 Jun 2018

தலைவர்கள் திரையில் இல்லை!


மைசூர் மாநிலம் பெங்களூரில் மராத்திய குடும்பத்தில் டிசம்பர் 12, 1950 ல் பிறந்த வர் சிவஜி ராவ்.  தனது நண்பர் ராஜ் பகதூர் உதவியுடன் இரண்டு ஆண்டுகள்(1973 ல்)சென்னை திரைப்பட நிறுவனத்தில் பயில்கின்றார்.

கே.பாலசந்தரின் , அபூர்வ ராகங்கள் மூலம் 1975 ல் தமிழ் சினிமாவிற்கு ஒரு நடிகராக அறிமுகமாகின்றார். 
அபூர்வ ராகங்கள், , கதா சங்கமா, அந்துலெனி கதா, மூன்று முடிச்சு,அவர்கள், 16 வயதினிலே, புவனா ஒரு கேள்விக்குறி ,திருப்புமுனை, முள்ளும் மலரும் , ஆறிலிருந்து அறுபது வரை அலாவுதினும் அற்புத விளக்கும், தர்ம யுத்தம் , புலி, நினைத்தாலே இனிக்கும் , ப்ரியா, அம்மா எவரிக்கின அம்மா, பில்லா, ஜானி ,முரட்டு காளை, நெற்றிக்கண் , தில்லு முள்ளு ,போக்கிரி ராஜா மற்றும் தனிகாட்டு ராஜா , கானூன்(1983) , நான் மகான் அல்ல படம் , அன்புள்ள ரஜினிகாந்த், நல்லவனுக்கு நல்லவன் , ஸ்ரீ ராகவேந்திரா , நான் சிகப்பு மனிதன், படிக்காதவன் மிஸ்டர் பரத் , வேலைக்காரன் குரு சிஷ்யன், மற்றும் தர்மத்தின் ,புளூட் ஸ்டோன் என்ற ஆங்கில படம், ராஜாதி ராஜா, சிவா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை மற்றும் அதிசய பிறவி ,பணக்காரன் , ஹம், தளபதி, அண்ணாமலை,  மன்னன்  ,  வள்ளி , வீரா, பாட்ஷா,முத்து , அருணாசலம், படையப்பா, சந்திரமுகி குசேலன், எந்திரன் என இவருடைய திரைப்பட பெயர்களே இவர் படத்தை பற்றி கதைகள் சொல்லின. 
.
2011 ஆம் ஆண்டு தனது குருவான கே.பாலசந்தர் கேட்டு கொண்டதின் பேரில் தனது புகை பழக்கத்தை விட்ட ரஜனி, 2012 வருடம் பாபா படத்தின் வெற்றிக்கு என  பீடி, மது குடிப்பது போல்  நடித்து பாட்டாளி மக்கள் கட்சியின் விமர்சனத்திற்கு உள்ளானார்.  
சுவாமி சச்சிதானந்தா, ராகவேந்திர சுவாமி, மகாவீர் பாபாஜி, மற்றும் ரமண மகரிஷிஎன பல சாமிகள்   ரஜினியின் சாமிகள்களாக உண்டு . சினிமாத்துறையில் இவருடைய வருமானம் உயர உயர தன் படத்திற்கு தானே திரை வசங்கள் எழுதி கொடுக்கும் நிலையை எட்டினார். அத்துடன் தனது சினிமவில் அரசியல் வசங்கள் பேசத்துவங்கினார்.. இதனால் அரசியல் ரீதியாகவும் செல்வாக்கு வளர துவங்கியது. இவர் உருவ பலகைக்கு பால் ஊற்றும் ரசிக குஞ்சுகள் எல்லாம் தங்கலூம் அரசியலுக்கு வந்தது போலவும் ரஜனி முதலமச்சர் ஆனால் தாங்களும் மந்திரியாகி விடலாம் என கனவு காண ஆரம்பித்தனர். அவர்கள் கனவை வலரச்செய்ய நான் வருவேன் , அது ஆண்வன் கையில் உள்ளது , போர் வந்தால் வருவேன், சிஸ்டம் சரியில்லை என தனது பொன்னான அரசியல் முத்துக்களை உதிர்க்க ஆரம்பித்தார் ரஜனி.

அரசிய விமர்சகர் , எழுத்தாளர் சோ.ராமசாமி போன்றவர்கள் ரஜனியின் சிளை அரசியல் ஆசைக்கு தண்ணீர் ஃபிட்டு வளர்க்க உதவினர்.    இந்த ஊக்கத்தால் 1995 இல், இந்திய தேசிய காங்கிரஸுக்கு  ஆதரவு அளித்தார்.  1996 ல், காங்கிரஸ் கட்சி அதிமுக உடன்- கூட்டணி வைத்ததும் தனது ஆதரவை  தி.மு.க கூட்டணிக்கு அளித்தார். இப்போது ஆன்மீக அரசியல் பேசி வருகின்றார். ஆன்மீகம் என்றால் இமயமலை செல்வது சாமியார்களை சந்தித்து ஆசி பெறுவது பின்பு மலை இறங்கினதும் நடித்து பணம் ஈட்டுவது தன் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு கூட ஊதியம் கொடுக்காது இருப்பது, நாய்க்கு எலும்பு போடுவது போல் சின்ன காசை போட்டு  அரசியல் ஊடாக நிறைய சம்பாதிக்க இருப்பவர் தான் ரஜனி. 
ரஜனியின் தாரளகுணம் சென்னை வெள்ளத்தில் என பல சம்பவங்களில் கண்டது தான். இவரை போன்ற ஆன்மீக நடிகர்கள் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தும் தமிழ் சினிமா அடிப்படை கலைஞர்களின் அடிப்படை பிரச்சினை ஓய்ந்த பாடில்லை. சமூக பணியை செய்யாது அரசியல் என்ற பெயரில் சமூகத்தை ஆட்டிபடைக்க நிலைக்கும் ரஜனியின் ஆன்மீக அரசியல் ஆராயப்பட வேண்டியது. படம் வெளியிடும் முன் அரசியல் பேசுவதும் படம் வெளியானதும் இமைய மலை போய் வருவதும் என ரஜனி ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

ரஜனி சினிமாவில் இடம் பிடித்ததே  பீடி சுற்றி போடுமதல், கழுத்தில்  துண்டை எடுத்து ஸ்டைலாக எறிதல், தொப்பி, கலர் கண்ணாடி அணிதல், பெண்களை அவமதிக்கும் பெண்களை ஏளனம் செய்யும் ஆண் கதாப்பாத்திரமாக வந்து அடிமட்ட ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் இந்த ரஜனி.
அந்தைய நாட்களில் ஒரு சினிமாவில் கதாநாயகன் கதாப்பாத்திரத்திற்கு என சில நியதிகள், ஒழுக்கம், அறம் இருந்தன. ரஜனி குடிகாரனாகவும் போக்கிரியாகவும் , ஏழை வீட்டு வேலைக்காரனாக இருந்து பணக்காரப்பிள்ளையை கல்யாணம் முடிப்பது, மாமியாரிடம் சண்டை போடுவது, முதலாளி அம்மாவை கன்னத்தில் அடிப்பது என  சில பல வெத்து புரச்சியால் அடிமட்ட   இளைஞசர்களுக்கு ஹீரோ ஆனார். 

அந்நேரம் வரை பெண்களை வாம்மா, தாயே, என  மரியாதையுடன் அழைத்த  கதாநாயகர்கள் மத்தியில்; பெண்களை போடி, வாடி என அழைப்பது, பெண்களை அடங்கி போகனும்,  நல்ல பெண்ணுன்னா இப்படி தான், கெட்டவளை அழிக்கனும்  என்ற சில பொன் மொழிகள் எல்லாம் கூறி பெண் என்றாலே ஆணுக்கு அடங்கி வாழ வேண்டியவள், தன்னை கற்பழித்த கொடியவனை கூட கல்யாணம் பண்ணி அவனுக்கு சேவை செய்து வாழ்ந்து மடிய வேண்டிய அபலை, அம்மா என்றாலே தியாகம் என பல பல ஏமாற்று தன்மானமற்ற கொள்கைகளை பரப்பியவர் இந்த ரஜனி.  ரஜனி கதாப்பாத்திரம் போல்  பெண்களை அவதூறு செய்த கதாப்பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் இருந்ததும் இல்லை இனி இருக்க போவதும் இல்லை. அவருடைய படத்தில் பெண்கள் ஆண்களுக்கான கேளிக்கையாகவே கொச்சையான சீனுகளால் கதாவசங்களால் வடிவமைத்திருப்பார்கள். எப்போதும் ஒரு கதாப்பாத்திரம் காம இச்சையுடன் ரஜனி பின் பாய்ந்து ஓடி கொண்டே இருக்கும்.
புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கு காரணமான பீடியை தமிழகத்தை விட்டு போகாது இருக்கிறது என்றால் அதன் காரணம் இந்த ரஜனி ஸ்டைல் பீடி குடி தான்.
ரஜனியின் படத்தை கவனித்தால் வாழ்க்கையை போராட்டமாகவும் தன்னை எதிர்ப்பவனை எதிர்த்து தேவை என்றால் கொலையும் செய்து வெற்றி பெறுபவனகா காட்டியிருப்பார். அடங்காதை என மக்கள் நரம்புகளை புடைக்க செய்து சூப்பர் ஸ்டார் என்ற பதவியை தக்க வைத்தவர். 
இப்படியான ரஜனியின் மாயை உலகம் பழைய தலைமுறையுடன் ஓய்ந்து விட்டது. 91 ல் ஏன் 2001 அரசியலுக்கு வந்திருந்தால் கூட கொஞ்ச நஞ்சம் காலம் அரசியலில் இருந்திருப்பார். அவரை ஏற்க ஒரு கூட்டம் காத்திருந்திருக்கும்.  67 வயதில் தற்போதைய சமூக சூழலை பற்றி முற்றிலும் புரிதல் இல்லாதவர் கார்ப்பரேட் சன்னியாஸியல் தமிழகத்திற்கும் ஒன்றும் நன்மை விளையப்போவதில்லை. பெரியார் போன்ற அறிவாளிகள் சமூக புரச்சியாளர்களின் கொள்கை கருத்து மறந்து போகவே செய்யும். 

நித்தியானந்தாவிடம் ஆசி பெற்ற ரஜனி நித்தியானந்தாவால் பெண்கள் சீரளிகப்படுவதும் மைனர் குழந்தைகள் கூட அவர் பிடியில் சிக்குண்டு இருப்பதை கண்டிக்காதவர். 

ரஜனி ’தான்’ என்ற மாய உலகத்தில் வாழ்ந்தவர். நடிப்பில் கூட 67 வயது ஆன பின்பும் 27 வயது பெண்ணுடன் ஜோடி சேரும் கதை தான் தேர்வு செய்கிறார். அமிதாப்! ஏன், அவர்களுக்கு பின் வந்த அமீர்கான், சல்மான்கான் போற்றோர் கூட தங்கள் வயதிற்கான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டனர்.  ரஜனி இன்னும் ராமாராவ் எம்ஜிஆர் காலத்தில் வாழ்வது காலத்தின் கொடுமை.

கடந்த சில வருடங்களாக தமிழகம் புயல் வெள்ளம் , ஜல்லிகட்டு , தூத்துக்குடி போராட்டம், தண்ணீர் பஞ்சம், நீட் , அனிதா மரணம்,  அரசியல்வாதிகளில் ஊழல், என பல பிரச்சினையை கடந்து போகிறது.  ஆசிபா கலையான போது கூட வாய் திற்க்காதவர். ஒன்றுக்குமே வாய் திறக்காத ரஜனி மக்களுக்கு அறிவுரை மட்டும் வழங்க வந்தது எந்த வகையில் ஞாயம்.

ஆகையால் ரஜனி தியானம், மனைவி குழந்தைகள்,  பேரக்குழந்தைகள் போயஸ் கார்டன், சுகமான வாழ்க்கை என இருந்து விட்டால் அவருக்கு நல்லது. அவரால் ஒரு இளைஞனின் கேள்வியைக்கூட எதிர் கொள்ள இயலவில்லை. அரசியலில் மிளிர, புரட்சியாளனாக நடிக்கவாவது தெரியனும். குறைந்தப்ட்ச  மனித நேயமாவது இருக்க வேண்டும்.  உங்கள் சாணக்கியத்தனம் காலாவதியாகி விட்டது. 
காலாவை காண வேண்டும்.  ரஜனியில் திரை புரட்சி வசனவும் இயல்பு வாழ்க்கையிலுள்ள கார்ப்பரேட் வசனங்களையும் நிதானமாக அவதானிக்க வேண்டும்.
அரசியல் தெரியாதவன் குறிப்பாக தமிழ்நாட்டு பண்பாடு தெரியாதவர்கள், சாதாரண மக்களின் பிரச்சினைகள் தெரியாதவர்கள் அரசியலுக்கு வருவது ஆபத்து. நடிப்பை தொழிலாக கொண்டோர் அரசியலையும் நடிப்பு களமாக மாற்றி விடுவர். அவர்கள் வீராவேச பேச்சில் நாட்டு நடப்பு இருக்காது , வாழ்க்கை இருக்காது வெறும் நடிப்பும், பகிட்டும் மிஞ்சின ஊழலும் அதீதமான ஆசையும் தான் இருக்கும். தமிழர்கள் தனது தலைவர்களை திரையில் தேடாது சமூகத்தில் தான் வாழும், தன்னுடன் வாழும் உயிரும் சதையுமான மனிதனில் மனிதத்தில் தேட வேண்டும்......