20 Mar 2017

விவாசாயியை அழித்த சீர்கெட்ட நீர்மேலாண்மை


தமிழக விவசாயிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி, அல்லல்பட்டு பலர்  தற்கொலை செய்து கொண்டும் இருக்கின்றனர். தமிழன் பாரம்பரியாமாக விவசாயத்தை நம்பி வாழ்ந்தவன். தண்ணீர் தேவைக்கு நதியை சார்ந்தே இருந்தனர். நாயக்கமன்னர்கள் மன்னர்கள் காலத்தில் குளம்வெட்டி  வறண்ட பகுதியிலும்  விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். இந்தியாவிலேயே குளங்கள், ஏரிப் பாசனம் தமிழகத்தில் தான் அதிகம்  நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், சிறு ஊரணிகள், குட்டைகள் என பல வகையான நீர் நிலைகள் பண்டைய மன்னராட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, அவை கவனமாக மேலாண்மை செய்து பாதுகாக்கப்பட்டது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கிணறுகளை நம்பி விவசாயம் தொடர்ந்தனர். சுதந்திர தமிழகத்தில் போர்வெல் அமைக்கஆரம்பித்தனர். போர்வெல்லில் தண்ணீர் வேண்டும் என்றால் நீர் நிலைகளில் தண்ணீர் வேண்டும். 
நிலத்தில் விழும் மழைநீர் படிப்படியாக மண்ணுள் கசிந்து ஆழமான பகுதியில் தேங்கி நிற்கும் நீரைத்தான் நிலத்தடிநீர் என்கிறோம். இயற்கையின் நீண்டகால நிகழ்ச்சிப் போக்கில் உருவாகும் இத்தகைய நிலத்தடி நீர்வளமாக தமிழகத்தில் இருப்பது 22,423 மி..மீ. என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்!


நீரின்றி அமையாது உலகு


தண்ணீர் நாட்டின் வளம் சார்ந்தது . கடப்பா முதல் கன்னியாகுமரி வரை ஏரி, குளங்களை வெட்டி வைத்துள்ளனர்.  உலகமே  வியக்கும்  சிறந்த மழைநீர் சேமிப்பு முறையான ஒரு ஏரியில் தண்ணீர் நிரம்பினால், கால்வாய் மூலமாக இன்னொரு ஏரிக்கு தண்ணீர் போகும். அங்கிருந்து இன்னொரு ஏரி. பக்கத்தில் ஆறு, குளம் இருந்தால் அவையும் ஏரிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியே கடற்பகுதி வரை ஏரிகளும் அதன் கால்வாய்களும் நீண்டு இருந்தன. அத்தனை அருமையான மழைநீர் சேகரிப்பு, நீர் பாசன கட்டமைப்பை அந்த காலத்திலேயே கட்டியிருக்கின்றனர். ஏரிகளை மட்டுமல்ல கயம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம், குளம், கிடங்கு, மடு என விதவிதமான நீர்நிலைகளை உருவாக்கி, மழைநீரை சேமித்து முப்போகம் விளைவித்து, பல போகம் பெருமையுடன் வாழ்ந்த தமிழ்நாட்டில் இப்போது ஆழ்துளை போட்டு தண்ணீரை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

 நீர்வளம் : தமிழகத்தில் 17 முக்கிய ஆற்றுப்படுகைகள், 61 நீர்தேக்கங்கள், மற்றும் 49,480 பாசனக்குளங்கள் ஊடாக  ஒரு ஆண்டில் கிடைக்கும் நீர்வளம் 46, 540 மில்லியன் கன மீட்டர் ! இதில் சரிபாதி நீரானது  நிலப்பரப்பில் வழிந்தோடி கடலில் கலந்து விடுகிறது.  எனவே நமது பயன்பாட்டுக்குக் கிடைப்பது  24,864 மில்லியன் கனமீட்டர் ! இம்மேற்பரப்பு நீரில் 90 சதவீதம், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. சுமார் 24 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் இதனால் பயன்பெறுகின்றன !

 நீர்மேலாண்மை
தமிழகத்தில் வரலாற்று ரீதியாகவே மழை நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த கலாச்சாரத்தின் வெளிப்படுதான் ஏரி, குளம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் ஆதார அமைப்புக்கள்.
தமிழகத்தில் மரபு ரீதியாக அமைந்த நீர் பாசன, நீர் மேலாண்மை பற்றி அறிந்து, நவீன நடைமுறைகளோடு இணைத்து செயல் திட்டங்களை வகுத்து நீர் நிலைகளை பாதுகாக்க தவறி விட்டனர். கல்லணை கட்டிய கரிகாலனும், வைகையினை கடலுக்கே விடாமல் கண்மாய்களால் தடுத்த அக்கால பாண்டிய மன்னனையும் மறந்த தமிழக ஆட்சியாளர்கள் தண்ணீர் மேலாண்மையை பற்றி கவணம் கொள்வது இல்லை. வடக்கே பள்ளிப்பட்டிலிருந்து, தெற்கே பத்மநாபபுரம் வரை இருந்த பல நீர் நிலைகள், சில சுயநலவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் மழையை நம்பிய குளங்கள் 5,276, நதி நீர் பெறும் குளங்கள்     3,627, தனியார் வசம் 9,886 உள்ளது. கடந்த சில ஆண்டாக தமிழகத்தில் குளங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

இலட்சத்திற்கும் மேலாக இருந்த ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் இன்றைக்கு 39,202 ஆக குறைந்து விட்டது. ஏரி மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தில், பழவேற்காடு, பொன்னேரி, உத்திரமேரூர், மதுராந்தகம் ஏரி, செலவப்பன் ஏரி போன்ற பல ஏரிகள் தனது இயற்கை தன்மைகளை இழந்துவிட்டன.  சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு காலத்தில் 200 ஏரிகள் இருந்தன.  பூந்தமல்லி, போரூர், காரம்பாக்கம், வளசரவாக்கம், மேட்டுக்குப்பம், விருகம்பாக்கம், சாலிகிராம், புலியூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் என வரிசையாக ஏரிகளும், அவை கால்வாய்களாலும் இணைக்கப்பட்டிருந்தன. இன்று சென்னையில் ஏரிகளும் இல்லை, அவற்றை இணைத்த கால்வாய்களும் இல்லை.

கடந்த 2008 ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழகத்தில்    32,202 குளங்கள் இருந்தது. தமிழ்நாடு சுற்று சூழல் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இதில், 30 சதவீதம் குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்துவிட்டது . மேலும் 15 சதவீதம் குளங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.

கடந்த 2007-08 ம் ஆண்டு ஏரி, குளம் ஆகியவற்றை பாதுகாக்க சட்டம் கொண்டு வரப் பட்டது. ஆனால், 2009 ம் ஆக்கிரமிப்பு பகுதியில் 10 ஆண்டாக குடியிருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. எனவே, பெரும்பாலான ஏரி, குளங்கள் மாயமாகிவிட்டது. மதுரையில் 39 சதவீதமும், சென்னையில் 60 சதவீதம் குளங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. சேலம், திருமணி முத்தாற்றை ஒட்டியிருந்த பகுதிகளில் ஒரு குளம் கூட இல்லை. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 45 சதவீதம் குளங்கள் தமிழகத்தில் மறைந்து விட்டது .



நாகரீக வளர்ச்சிக்கும், மக்கள் தொகை பெருக்கத்திற்கும் ஏற்ப நீர் நிலைகளை அழித்து வருகின்றனர்.  ஆறு, ஏரி, குளங்கள் அதற்கான இணைப்பு கால்வாய்களும் ஒவ்வொன்றாக காணாமல் போனதால், எஞ்சிய நீர்நிலைகளும் வற்றிப் போய் கிடக்கின்றன. விளைவு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன  நீர்நிலைகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. நீர்நிலைகளை காப்பாற்றா விட்டால், எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். இப்போது தோன்றியிருக்கும் புதிய நகர்களில் 47 சதவீதம், நீர்நிலைகளை மூடி உருவாக்கப்பட்டவை என்கிறதுவட்டம்என்ற அமைப்பு.


வெள்ளைக்காரன் போட்ட பாதை
ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில்தான் முதல் முதலாக நீர்நிலைகள் வழித்தடங்கள், ரயில் பாதை போன்றவை அமைக்க  ஆக்கிரமிக்கப்பட்டன. நீர்நிலைகளை அழித்து விடக்கூடாது என்பதற்காக, ரயில் பாதையின் இடையில் கால்வாய்கள் அமைத்து இரண்டு பக்கத்திற்கும் தொடர்பை விட்டு வைத்தனர் வெள்ளைக்காரர்கள்.


தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நீர் நிலை ஆதாரம் உள்ள பகுதிகளிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலை ஆதாரங்கள் மறைந்து வருகிறது.

விவசாயம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு
கோடைக் காலங்களில் வற்றிப் போயிருக்கும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் சேற்றுப் பகுதிகளில் வெள்ளரி போன்ற குறுகிய கால பயிர்களை பயிரிடுவார்கள். பயிர் தானே என்று விட்டால் கொஞ்ச நாட்களில் வீட்டுமனையாக மாறிவிடும். அப்புறம் நீர் நிலை இருக்காது. நீர்நிலைகளில் பெரியதான கடல் கூட இந்த ஆக்கிரமிப்பு ஆசாமிகளிடம் இருந்து தப்பவில்லை.



பாசனத் திட்டங்களின் அவலநிலை !
கால்வாய் பாசனம், குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகிய மூன்றுவகைப் பாசனத் திட்டங்கள் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. நடப்பில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான சுமார் 130 லட்சம் ஏக்கரில், 90 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு மட்டும்தான் இதுவரை பாசனவசதி செய்யப்பட்டுள்ளது ! இதில், கால்வாய் பாசனம் மூலம் 29.2% , குளத்துப்பாசனம் மூலம் 21.3%, கிணற்றுப்பாசனம் மூலம் 48.9% நிலங்கள் பாசனம் பெறுகின்றன. விவசாயிகளின் துயர். நீராதாரங்களும் நீர்த்தடங்களும் திட்டமிட்டு அழிக்கப்படுவதும் விவசாயத்தை அழிக்கும் காரணியாக உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள்  உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் 17 பேர் என்று கணக்கு காட்டுகிறது. கடுமையான தண்ணீர் பஞ்சத்தை தாங்கக் கூடிய நமது பாரம்பரியமான விதைகள், பயிர் ரகங்களை எல்லாம்  பசுமைப் புரட்சி என்ற பெயரில் அழித்து விட்டனர்.

நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளாலும், ஆகாயத்தாமரை போன்ற வீரியரக களைச்செடிகளாலும், அலட்சியமான அரசின் பராமரிப்புக் குறைவாலும் பெரிய அளவில் பாசனப் பரப்பு விரிவாகவில்லை.

மாநிலத்தில் சுமார் 19 லட்சம் கிணறுகள் உள்ளன. இதில் 30% கிணறுகள் முற்றிலும் நீரின்றி வறண்டு விட்டன ! 27% கிணறுகள் விவசாயப் பயன்பாட்டுக்குப் பொருத்தமில்லாத உவர் நீராகி விட்டன ! மீதியுள்ள கிணறுகளில் தினமும் 4 முதல் 6 மணிநேரம் இறைப்பதற்கே நீர் இருக்கிறது!” என்று 2012-ல் வெளியானதமிழக நீராதரங்களின் தேவையும்- அளிப்பும்என்ற ஆய்வறிக்கை கூறுகிறது.

 பசுமைப் புரட்சிக்குப் முன்பு  1960-களில் இருந்த நீராதாரங்களின் நிலையையும் இழந்து, புதிய பாசனவசதியையும் பெறாமல், எதிர்கால உத்தரவாதமும் இல்லாமல் இன்று மிகவும் ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் மிக மோசமான நிலைக்கு நமது விவசாயம் ஆளாகியுள்ளது.

நீர்வரத்து வாய்க்காலை சுத்தம் செய்வது, குளங்களைத் தூர் வாருவது, கரைகளை உயர்த்துவது, அணைகளில் படிந்துள்ள மண்ணை அகற்றுவது காலத்தின் கட்டாயம்.  நீர்வளத்தைப் பெருக்குவதற்கும், அதை நிரந்தரமாக தக்கவைப்பதற்கும் தொலைநோக்கான, அறிவியல் பூர்வமான திட்டங்கள் கையாள வேண்டும்.
இதற்காக வறட்சிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் (DPAP), ஒருங்கிணைந்த நீர்த்தேக்கத் திட்டம்(IWOP) தேசிய நீர்பிடிப்புப் பகுதிக்கான நீர்தேக்கத் திட்டம்(NWDPRA),ஆகிய மத்திய அரசுத் திட்டங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு நீர்தேக்க வளர்ச்சி ஆணையம் (TAWDEV) வாயிலாக தமிழகத்தில் சிறியதும்,பெரியதுமாக 19,330 நீர்தேக்கங்கள் கட்டப்பட்டன. இதில் பெரும்பாலானவை இன்று பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கின்றது!
தொழிற்சாலைக் கழிவுகளால் ஆற்றுநீர் மாசுபடுவது மற்றுமொரு ஆபத்தாகும்.“குடிநீர், மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் ஆறுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு தொழிற்சாலைகள் அமைக்கத் தடைஉள்ளது. ஆனால் இதையும் தாண்டி தினமும் 6 லட்சம் லிட்டர் ஆலைக் கழிவுகள் ஆற்றுநீரில் கலக்கிறது . ஆலைக்கழிவுகளால் ஆற்றுநீர் விஷமாவது மட்டுமல்ல, நீர்தேக்கங்களில் ஆகாயத்தாமரை போன்ற வீரியரகக் களைகள் பரவுவதற்கும் காரணமாக உள்ளது. நீர்வாழ் தாவரக் களைகளில் ஏற்படும் ரசாயன மாற்றங்களின் விளைவாக தண்ணீரிலுள்ள ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்துவிடும். ஆக்சிஜன் குறைந்த நீர் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் தகுதியற்றதுஎன்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்!

விவசாயிகளே விவசாயத்தை தீர்மானிப்போம்!
இயற்கை வளங்களை, முக்கியமாக நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை!” “நீண்டகாலம் நீர் தேங்காமல் இருக்கும் குளங்களைக் கூட தனியாரோ, அரசோ ஆக்கிரமிக்கக் கூடாது!” “தண்ணீர் பஞ்சம் வராமல் தடுப்பது என்ற பொறுப்புணர்வுடன் மாநில அரசுகள் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்!” “நீர்நிலைகள் மீதான அனைத்து ஆக்கிரமிப்புக் களையும் உடனே அகற்றவேண்டும்!” “நீர்நிலைகளை அரசு மற்றும் தனியார் கையகப்படுத்தாமல் இருப்பதை கலெக்டர் தலைமையிலான மாவட்டக் கமிட்டி உத்திரவாதம் செய்ய வேண்டும்!”
தமிழக நில ஆக்கிரமிப்புச்சட்டம்-1965, 1975, 1996 , தமிழக நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம்-2007 என பல பல அரசுச் சட்டங்களும் இருக்கின்றன!
சட்டங்கள் நடைமுறைப்படுத்தாது காகிதங்களில் மட்டும் இருப்பதால் நம் வாழ்வாதாரமான விவசாயம் பாதுகாக்கப்படவில்லை! விவசாயிகள் வாழ்வும் முன்னேறவில்லை! விவசாயம் பொய்த்துப் போய், விவசாயிகள் விவசாயத்தை வெறுத்து நிலத்தை விட்டும், ஊரை விட்டும் ஊடுவது மட்டுமல்ல தங்கள் உயிரையை மாய்த்து கொள்ள காரணமாகியுள்ளது.  தமிழ்நாடு மாநில வேளாண் மன்றச் சட்டம் (TAMILNADU STATE AGRICULTURAL COUNCIL ACT) ஒன்றை கடந்த 2009-ஜுன்- 24-ல் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. “அங்கீகாரம் பெற்ற வேளாண் பட்டாதாரிகள் மட்டுமே விவசாயம் பற்றிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்என்கிறது இச்சட்டம்! இதன்படி மாற்று விவசாயம் பற்றி பிரச்சாரம் செய்வதே குற்றமா விடும்!  A விவசயம் பற்றி பேசக்கூட தடை என்பது உணவு என்பதை கேட்பதே குற்றம் என மாற உள்ளது.
விவசாயி தனித்து நிற்காது ஒரு கூட்டு பண்ணை விவாசயம் போன்று அரசு சாரா இயக்கங்களாக ஒன்று இணைந்தால் தான் வரும் கால அரசியல் சூழலை எதிர் கொள்ள இயலும். படித்தவர்கள் இன்னொருவரிடம் வேலை செய்து கூலி வாங்கும் நிலையில் இருந்து சொந்த நிலத்தை பராமரிக்க கூடிய மனநிலையை வளர்க்க வேண்டும். விவாசாயிகள் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டு வளர வேண்டும். வேலை செய்யும் தொழிலாளுகளுக்கும் நியாயமான ஊதியம் கொடுப்பதால் விவாசாயம் என்ற தொழில் இன்னும் மதிப்பு பெறும். 


8 Dec 2016

PINK-’பிங்’ பெண்களுக்கான, ஆண்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்!


சமீபத்தில் வெளிவந்து பலரின் நற்மதிப்பை பெற்ற திரைப்படம் ’பிங்’. மூன்று தோழிகள் தங்கள் ஆண் நண்பர்களுடன் இரவு உணவிற்கு என ஓர் விருந்தினர் மாளிகையை அடைகின்றனர். ஆண் நண்பர்கள் தகாத வகையில் நடந்து கொள்ள முயல  ஒரு பெண் கையில் கிடைத்த பீர் போத்தலால் அடித்து விடுகின்றார். இளைஞர் கண் பார்வை பாதிக்கக்கூடிய அளவிற்கு காயம் ஏற்படுகின்றது. மகிழ்சியாக கிளம்பிய பயணம் பின்பு சோகத்தில், கோபத்தில், அவமானத்தில் முடிகின்றது. 

அனிருத்த ரோய் சவுதரி இயக்கத்தில் செப் 16, 2016 ல் வெளியான படமாகும். அமிதாப், தாப்சி, கிருத்தி குல்கரி, அன்கட் பேடி, மற்றும் ஆந்ரே தரேங் போன்றோர் நடித்துள்ளனர்.   காண்போரை மிகவும் கவர்ந்த படமாக இப்படம் திகழ்கின்றது. ”பிங்” என்ற பெயர் பெண்களை குறிப்பது பெண்கள் சுதந்திரத்தை குறிப்பது என்ற அர்த்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் பத்து நாட்களில் 50 கோடிக்குமேல் வசூல் செய்த படம் என்பதும் குறிப்பிட வேண்டியது.

அமைதியாக தன் வேலை, உழைப்பு, சின்ன சின்ன மகிழ்ச்சி என வாழ்ந்து வந்த பெண்களின் ஒவ்வொரு நாளும் பின்பு பதட்டத்திலும் பிரச்சனையிலும்   உழல்கின்றது. இளைஞ்ர்கள் தங்களிடம் மன்னிப்பு கேட்க கூறுகின்றனர். இளம் பெண்களோ தங்கள் மேல் தவறு இல்லாத நிலையில் மன்னிப்பு கேட்க என்ன அவசியம் என்று நினைக்கின்றனர். கோபம் கொண்ட இளைஞர்கள் பகைபோக்கை ஆரம்பிக்கின்றனர். முதலில் அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் இப்பெண்கள் குணம் கெட்டவர்கள் . உங்கள் கட்டிடத்தை விட்டு போகக்கூறுங்கள் என்கின்றனர்.  கண்டு கொள்ளாத க்ட்டிட உரிமையாளரை மிரட்டி பணிய வைக்க முயல்கின்றனர். இரண்டாவது பெண் பெயர் கெடும் விதம் இணையத்தில் அவர் புகைப்படத்துடன் செய்திகள் பரப்பி வேலையை விட்டே விரட்டும் படி செய்கின்றனர். மற்றொரு பெண்ணை நடைபயிற்சியின் போது கடத்தி கொண்டு போய் அவமதிப்பாக நடக்கின்றனர். இப்படியாக பெண்களை மிகவும் மன உளச்சலுக்கும் அச்சத்திற்கும் உள்ளாக்குகின்றனர். 

இந்த நெருக்கடியான சூழலில்  தோழிகளின்  அறிவுறுத்தலையும் காதில்வாங்காது  மூன்று பெண்களில் ஒருவர் போலிஸ் நிலையத்தை அணுகின்றார். காவல் அதிகாரியோ,  இரவில் நீங்களும் சென்று உணவருந்த சென்றுள்ளீர்கள், இளைஞர்களுடன் குடித்துள்ளீர்கள்.  நீங்கள் கூறும் குற்றத்தை நான் விசாரித்தால் நீங்கள் தான் பாதிப்பிற்கு உள்ளாகுவீர்கள். நாங்கள் இளைஞர்களை மிரட்டி வைக்கின்றோம் எனக்கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.  மேல் மட்ட அதிகாரியிடம்  அணுகி இளைஞர்களை பற்றிய தகவலை அளித்து வருகின்றார். போலிஸ் அதிகாரி  விசாரிக்க பெரிய பணப்புள்ளியின் அரசியல் பிண்புலன் உள்ளவரின் மகனும்  குற்றவாளிகளில் ஒருவர் என  தெரிய வருகின்றது. இளைஞனின் வீட்டில் செய்தி செல்கின்றது. தகவல் தெரிந்த தகப்பன் மகனை திருத்த விளையாது; பெண்களுக்கு ஓர் பாடம் கற்று கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து பெண்களில் ஒருவர் தன் மகனை கொலை செய்ய முயன்றதாகவும் தன் மகனை தகாத செயல் செய்ய தூண்டியதாகவும்  கூறி போலிசை வைத்து பெண்ணை கைது செய்து ஜெயிலில் அடைக்கின்றனர்.

இதை சற்றும் எதிர் பாராத பெண்கள் நிலைகுலைந்து போகின்றனர். அயல்வீட்டார் குற்றவாளிகளை போல் நோக்குகின்றனர். அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் வயதாக வழக்கறிஞர் மட்டுமே உதவ முன் வருகின்றார். அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் சந்தேகப்பார்வைக்கு உள்ளாகுகின்றனர். பெண்களுக்கு தங்கள் வீட்டில் சொல்லக்கூடிய நிலையும் இல்லை. பெண்களால் தங்கள் நண்பர்களிடம் மட்டுமே இச்சம்பவத்தை பற்றி பகிர முடிகின்றது. சுதந்திரமாக வேலைக்கு போய் வந்த பண்கள் வாழ்க்கை தங்கள் அறைக்குள் முடங்கும் படியான சூழலை எட்டுகின்றது.

வழக்கு கோர்ட்டுக்கு வருகின்றது. இளைஞர்கள் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் சாதுரியமாக வாதாடுகின்றார். அவரின் ஒவ்வொரு கேள்விக்கு பெண்கள்  தாங்களே குற்றவாளிகள் என, தங்கள் தலையை நிமிர விடாதபடி செய்கின்றார். கொடுக்கப்படும் சாட்சியங்களும் சாட்சிக் கூறும் நபர்களும் கலாச்சார காவர்கள் நிலையில் பெண்களுக்கு எதிராகவே மொழி கொடுக்கின்றனர். பெண்களுக்காக வாதாடும் வழக்கறிஞருக்கு தங்கள் கட்சிக்காரர்களான பெண்களுக்காக வாதாடும் படி எந்த முகாந்தரவும் இல்லாது மனம் உடைந்து போகின்றார்.

பெண்களிடம் வழக்கறிஞர் கேட்கும் கேள்வி இந்த சமூகம் பெண்களை பார்த்து கேட்கும் கேள்விககளாகவே இருக்கின்றது. 
நீங்கள் எதனால் ஆண் நண்பர்களுடன் சாப்பிட சென்றாய்?
எதற்காக இரவில் ஆண் நண்பர்களிடம் சென்றாய்
எதனால் குடித்தீர்கள்?
 மிகவும் ஆபாசமாக  உடையணிந்தீர்களா?
இளைஞர்கள் தவறு செய்யும் படி உங்கள் செயல்கள் இருந்தது. 
நீங்கள் பணத்திற்காக என் கட்சிக்காரர்களை அணுகி உள்ளீர்கள்
தனியாக தங்கும் பெண்கள்
வடகிழக்கை சேர்ந்த பெண் என்ற அடையாளம்
ஆண் நண்பரான ஒரு மனிதரிடம் பணம் பெற்றது
தனியாக தங்கினது தனியாக வேலைக்கு போவது சம்பாதிப்பது என பெண்களின், ஒவ்வொரு இயல்பான வாழ்க்கை சூழலையும், நடவடிக்கைகளையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றார்.

குற்றம் சாட்டப்பட்ட ராஜ்விர் உயர் குடும்ப பிண்ணணியில் இருந்து வந்தவர், உயர்படிப்பை  எட்டினவர், வெளிநாட்டில் கல்வி பெற்றவர். இருந்தும் அவருடைய பெண்களை பற்றிய மனநிலை ஒரு இந்திய சராசரி ஆணின் ஒத்த மனநிலையாகவே உள்ளது..

பெண்கள் பசிக்கின்றது என்பதால் இரக்கத்தை கருதி விருந்திற்கு அழைத்தோம், பெண்கள் தங்கள் சிரிப்பு செயல்கள் வழியாக தங்களை தகாத செயலுக்கு அழைத்தனர். நல்ல குடும்பத்திலுள்ள பெண்கள் குடிக்க மாட்டார்கள், விருந்தினர் மாளிகைக்கு ஆண் நண்பர்களுடன் கூடிகும்மாளம்  அடிக்க மாட்டார்கள். நல்ல பெண்கள் குடும்ப விழாவில் மட்டும் தான் பங்கு செல்வர். எனக்கூறுகின்றார்.  மற்றோர் பெண்களை பற்றி அவ்வகையான கீழ்த்தரமான எண்ணம் இருந்தாலும் தங்கள் வீட்டு பெண்கள் மிகவும் ஒழுக்க சீலர்கள் என காத்திரமாக நம்புகின்றார். 


பெண்களுக்காக வக்கீல் தன் நியாயத்தை நிலை நிறுத்த பெண்களிடம் கேள்விகள் வைக்கின்றார். நீ உன் கன்னி தன்மையை எப்போது இழந்தாய்? உன் ஆண் நண்பர் பணம் கொடுத்தாரா?
அப்பெண்ணின் பதில் நாங்கள் நேசித்தோம், விரும்பி சென்றேன். 
எதனால் இளைஞனை   அடித்து  காயப்படுத்தினாய்  என்றதும்;   என் விருப்பம் இல்லாத நிலையில் விரும்ப தகாத செயல் செய்யத்துணிந்தார். அதனால் அடித்தேன் என்பார்.  ஆண் -பெண் உடல் தேவை 19 வயதில் ஆரம்பிக்கும் நிலையும் திருமணம் என்ற நிலையை எட்டாது தங்கள் வாழ்க்கையை ஸ்திரப்படுத்த  சொந்த வேலை, சம்பாதிக்கும் நிலையில் பெண்கள்   உள்ளதையும் உணர்த்தியுள்ளார்.

முடிவில் ஆண் ஆதிக்க மனநிலையை குற்றச்செயலாக காணாது இந்த சமூகக்கருத்தாக்கத்தால் மாறின ஆண் குழந்தைகள், பரிதாபத்திற்கு உரியவர்கள் . அவர்கள் மனநிலை அவ்வாறாக கட்டமைக்க பட்டிருக்கின்றது. ஒரு பெண் சிரித்து பேசுவது என்பது தன்னை அழைக்கின்றாள் என அர்த்தப்படுத்துகின்றனர். பெண்கள் நல்லவர்கள் என்றால் இறுகிய முகத்துடன் இருக்கும் பெண்கள் என்றே நினைக்கின்றனர். ஒரு பெண் குடிக்கின்றாள் என்பது பெரும் ஒழுக்கக்கேடாக பார்க்கப்படுகின்றது. ஆனால் ஓர் ஆண் குடிக்கின்றான் என்பது    தன் உடை மாற்றுவது போன்று சாதாரண நிகழ்வாக தெரிகிறது. தன் வீட்டு பெண்கள் பற்றிய நல்ல பிம்பத்தை பேணும் ஆண்களால் மற்று பெண்களை சுதந்திரமாக சுயமாக வேலை செய்து வாழும் ெண்களை மிகவும் கீழ்த்தரமாக  கருதுகின்றனர். ஒரு பெண் தன் வீட்டை விட்டு தனியாக வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றாள் என்பது ஆண் உலகத்தால் ஏற்று கொள்ளும் தரத்திலுள்ள பெண்கள் அல்ல என்ற முடிவில் உள்ளனர்.  

படத்தின் முடிவாக ”வேண்டாம்” என்றால் வேண்டாம் என்ற அதே  அர்த்ததில் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது மனைவியோ அது பெண் நண்பியோ, ஏன் விலை மாதுவோ ஆகட்டும் . வேண்டாம் என்பதை வேண்டாம் என எடுத்து கொள்ளுதலே பெண்கள் மாண்பை போற்றுபடியாக இருக்கும் என முடிக்கின்றார்.

திரைக்கதை எந்த இடத்திலும் சோடை போகாது, காண்பவரை ஆர்வத்துடன் நகத்திய படம் இது.  மிகவும் சிக்கலான ஒரு சமூக பிரச்சினையை ஆண்கள் மனநிலையை மாற்றும் வண்ணம் பெண்களுக்கு பல சட்ட நுணுக்கங்களுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய   கொடுத்த படம் இது. 

பெற்றோரின் பார்வையும் சிறப்பாக, அழுத்தமாக ப்ததியப்பட்டிருக்கின்றது. இப்படத்தில். ஒரு குறிப்பிட்ட சம்பவத்தால், சுவாரசியமாக இயல்பாக, மகிழ்ச்சியாக சென்ற பெண்களின்   வாழ்க்கை எவ்விதம் சிக்கல்கள்குள் உள்ளாகி  நொறுங்கி போகின்றது என எடுத்துரைத்த படம். திரைப்படம் என்பது வெறும் நேரம் போக்கி, அல்லது பொழுது போக்கு என்று இல்லாது மனிதர்களின் மனதை சமூகத்தின் நிலைபாட்டை பெண்கள் மேல் உள்ள பார்வையை எடுத்து கூறின படம். 

ஆண்மேல் வைத்த நம்பிக்கையை எவ்விதம் தங்கள் பொறுப்பற்ற செயலால் உடைக்கின்றனர் என்பதையும் கூறியுள்ளனர். பெண்கள் தங்கள் பாதுகாப்பை எவ்விதம் தக்க வைத்து கொள்வது பெண்கள் அணுகு முறையை இயல்பான செயலைக்கூட ஆண் சமூகம் எவ்வித வக்கிர சிந்தனையுடன் பார்க்கின்றது.   சுயகாலில் நிற்க வேண்டிய, குடும்ப பொறுப்பை ஏற்று வேலைக்கு செல்லும் பெண்கள் துயரை, சவால் நிறைந்த வாழ்க்கையை எந்த துறுத்தலும்  இல்லாது,  இயல்பான சம்பவங்களுடன்   எடுக்கப்பட்ட  திரைப்படம்  இது. 

மக்கள் நல்ல படத்தையும் ஏற்பார்கள். இது போன்ற சமூக அக்கறை கொண்ட சட்ட நுணுக்கங்கள் கொண்ட படங்கள் வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். நம் தமிழ் மொழியிலும் சாட்டை, அப்பா, போன்ற படங்கள் நல்ல கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டாலும் பின்பு ஒரு கோஷம் போல், பரைப்புரை போல் காண்பவரை கற்பிக்க ஆரம்பித்தது திரைப்படத்தின் அழகியலை இழந்த சோகமாகும்.  ஆனால் ’பிங்’  என்ற படம் எடுத்த இடம் என்பது பெரும்வாரியாக நீதிமன்ற அறையாகவும் உணர்வு பூர்வமான வாதாடுதலும் அழுகையும் நிரம்பி இருந்தாலும் சுவாரசியவும் விருவிருப்பும் இழக்காது எடுக்கப்பட்டது இதன் வெற்றியாகும். 

பாடல்களும் பிண்ணனி இசையும் படத்தோடு சேர்ந்து பயணிப்பது படத்தின் சிறப்பை கூட்டுகின்றது. 




3 Dec 2016

Black( கறுப்பு)

2005 ல் திரைக்கு வந்த ஹிந்தி திரைப்படமாகும் பிளாக். கண் பார்வை மற்றும் காது கேட்கும் திறனற்று பிறந்த ஹெலன் கெல்லர் என்ற பெண்மணி வாழ்க்கையை தழுவி வெளிவந்த படத்தின் தழுவலாகும் இப்படம்.


படத்தின் கதை ஒரு நினைவு தொகுப்பாக விரிகின்றது. தனக்கு கல்வி கற்பித்த; தற்போது அல்சிமேர் நோய் தாக்கிய தன் ஆசிரியரை சந்திக்க மாணவி முயல்வதும் பி சந்திப்பதுமாக படம் துவங்குகின்றது.  

குடி பழக்கமுள்ள ஆசிரியர்(அமிதாப்)   மிஷேல் என்ற பணக்கார வீட்டு குழந்தைக்கு கல்வி கற்பிக்க வந்து சேர்கின்றார்.  குழந்தை மிகவும் முரட்டுத்தனமாக உள்ளது. முள்ளை வளர்ச்சி பார்வை கேள்வித்திறன் இல்லை என்ற நிலையில் வளர்க்கப்படுகின்றது.  இருட்டில் வாழும் மன உளச்சலில்  நற்பண்பும் கற்க இயலாது  ஒரு இயலாமையின் உச்சத்தில் வாழ்கின்றது. அக்ககுழந்தையின் எச்செயலும் வீட்டிலுள்ளவர்களுக்கு தொல்லையாக முடிகின்றது. குழந்தையை விடுதியில் அனுப்பி விடலாம் என தகப்பன் முன்மொழிய வேண்டாம் என்ற பிடிவாதத்தில் தாய் என மனகலக்கத்தில் நாட்கள் கடத்துகின்றனர். இத்தருணத்தில் தான் ஆசிரியர் வந்து சேருகின்றார். ஆசிரியர் குழந்தையை நல்வழிப்படுத்த, கற்பிக்க எடுக்கும் வழி பெற்றோரை சங்கத்திற்குள்ளாக்குகின்றது.  எங்கள் குழந்தைக்கு நீங்கள் ஆசிரியராக இருக்க வேண்டாம் என  பிடிவாதமாக  வெளியேற்ற முடிவெடுக்கின்றனர், ஆனால்  அறிவான இக்குழந்தையை விட்டு விட்டு செல்ல மனம் வரவில்லை ஆசிரியருக்கு.  மிகவும் கடினமாக முயற்சியுடன் முதல் வார்த்தை தண்ணீர் என்பதை   செயல்வழி கல்வி மூலம் கற்று கொடுக்கின்றார். பெற்றோருக்கு நம்பிக்கை பிறக்க ஆரம்பிக்கின்றது. கைவிரல்கள் வழியாக  தொடர்பாடல் பேண கற்று கொடுப்பது வழியாக கல்வி துவங்குகின்றது. https://www.youtube.com/watch?v=JUkZAOvgxPs

பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்கின்றார். அந்த பருவத்தில் மாணவிக்கு ஆசிரியர் மேல் காதல் எழுகின்றது. ஆனால் ஆசிரியர் மிகவும் கவனமாக மாணவியை கையாளுகின்றார். மாணவியால் கல்லூரி படிப்பில் நினைத்தது போல் வேகமாக எழுதி மதிப்பெண் பெற இயலவில்லை.   கல்லூரி படிப்பை நினைத்த படி தொடர இயலாத மன உளச்சலில் இடையில் நிறுத்தி விட முடிவெடுக்கின்றார் மிஷேல். இருப்பினும் ஆசிரியரின் முயற்ச்சியின் பெயரில் படிப்பை தொடர்கின்றார்.  12 வருட உழைப்பால் பட்டப்படிப்பை முடிக்கின்றார்.


தனக்கு இளைய தங்கைக்கு திருமண நாள் வருகின்றது. தன்னை போல ஊனமுற்றோர் திருமணம் செய்ய இயலாது என்பதும் வருத்ததை தருகின்றது. திருமண நாள் முந்தின நாள் விருந்தில்,  பெற்றோர்களால்     தனக்கு கிடைக்க வேண்டிய கவனிப்பு  தன் சகோதரியை வளர்க்கும் சூழலில்   மறுக்கப்பட்டதில்   மிகவும் காள்புணர்ச்சி கொண்டு பேசுகின்றார். ஆனால் மிஷேல் ஆகட்டும் வாழ்க்கையை மிகவும் ஆக்கபூர்வாக நேர்மறை எண்ணத்துடன் பதில் தருகின்றார்.  இருப்பினும் அன்பு என்றால் என்ன? காதல் என்ற உணர்வை அறிய  அவள் மனம் விளைகின்றது. தன் ஆசிரியரிமே விளக்கும் படி கேட்கின்றார்.   


இப்படியாக மிகவும் சவாலான வாழ்க்கை வாழ்ந்து மறைந்த பல பண்முகத்தனமை கொண்டு விளங்கிய கெலன் கெல்லர்  வாழ்க்கையை நினைவுப்படுத்தும் இப்படம் எடுக்கப்பட்ட  விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அழகிய காட்சிப்படுத்தலும் அந்த பழம் காலம் நோக்கி நம்மை நகர வைத்ததும் படத்தில் சிறப்பு அம்சமாகும். சிறு குழந்தையாக நடித்திருந்த ஆயிஷா கபூரின் நடிப்பு திறன் இளம் மங்கையாக நடித்திருந்த ராணி முகர்ஜிக்கு ஒத்ததாக இருந்தது.


இந்த படத்தில் நடிப்பதற்கு என்றே அமிதாபும், ராணி முகர்ஜியும் பார்வையற்றவர்களுக்கான எழுத்து மொழி பெரியிலி ஏழு மாதம் கற்றுள்ளனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் கண்பார்வையற்ற குழந்தைகள் இவர்களுக்கு செய்கை மொழி கற்று கொடுத்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் சுதந்திரத்திற்கு முந்திய ஷிம்லாவை   காட்சிப்படுத்தும் விதமாக  செட்டு போட்டு   மும்பையில் படமாக்கியுள்ளனர். 225 மிலியன் ரூபா செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான படமாகும் இது.


சஞ்சய் லீலா பான்சாலியின் இயக்கத்தில் ராணி முகர்ஜி நடிப்பில் வெளிவந்த இப்படம் தேசிய மற்றும் உலக சினிமா அருங்குகளிலும் பல விருதுகளை பெற்றுள்ளது.  டைம்ஸ் இதழ், உலக அளவில் 2005 ஆம் ஆண்டு   வெளிவந்த திரைப்படங்களில்    பார்க்க வேண்டிய பத்து படங்களில் ஒன்றாக இப்படத்தை தெரிவு செய்துள்ளது இப்படத்திற்கான உலக அளவிலான  பெருமையாகும்.  ராணி  முகர்ஜிக்கு இரண்டாவது முறையாக சிறந்த நடிகைக்கான பிஃலிம் பெஃயர் விருது பெற்று தந்த, அமிதா பச்சனுக்கு இரண்டாவது  முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கிட்டச்செய்த படமாகும்.     இப்படத்தை தழுவி 2013 ல் பெனிம் டன்யாம்(Benim Dünyam) என்ற துர்க்கிப்படம் வெளிவந்துள்ளது   இதன் சிறப்பாகும்.

நமது தமிழ் நடிகர்கள் 60 வயதை கடந்த பின்பு  இளம் நடிகைகாளுக்கு ஜோடி சேரும்     நாயக கதாப்பாத்திரத்தில் தான் நடிப்போம் என பிடிவாதம் கொள்ளும் போது தன் வயதிற்கு ஏற்ற கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கும் அமிதாப் போன்றவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். நல்ல கதைத்தளம், கதாப்பாத்திரப்படைப்பு, திரைக்கதை என எல்லாஅ வகையிலும் போற்றப்பட வேண்டிய படம் இது.

ஓர் ஆசிரியர்  மாணவி உறவிற்கு எடுத்துக்காட்டாக திகழும் படம். மேலும் உடல் ஊனத்தை தன் உழைப்பால் முயற்சியால் அறிவின் மேலுள்ள ஆழத்தால் எவ்வாறாக களைகின்றார் வாழ்க்கையில் வெற்றி கொள்கின்றார் என்பதற்கும் எடுத்துக்காட்டான திரைப்படம் இது.