20 Mar 2017

விவாசாயியை அழித்த சீர்கெட்ட நீர்மேலாண்மை


தமிழக விவசாயிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி, அல்லல்பட்டு பலர்  தற்கொலை செய்து கொண்டும் இருக்கின்றனர். தமிழன் பாரம்பரியாமாக விவசாயத்தை நம்பி வாழ்ந்தவன். தண்ணீர் தேவைக்கு நதியை சார்ந்தே இருந்தனர். நாயக்கமன்னர்கள் மன்னர்கள் காலத்தில் குளம்வெட்டி  வறண்ட பகுதியிலும்  விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். இந்தியாவிலேயே குளங்கள், ஏரிப் பாசனம் தமிழகத்தில் தான் அதிகம்  நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், சிறு ஊரணிகள், குட்டைகள் என பல வகையான நீர் நிலைகள் பண்டைய மன்னராட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, அவை கவனமாக மேலாண்மை செய்து பாதுகாக்கப்பட்டது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கிணறுகளை நம்பி விவசாயம் தொடர்ந்தனர். சுதந்திர தமிழகத்தில் போர்வெல் அமைக்கஆரம்பித்தனர். போர்வெல்லில் தண்ணீர் வேண்டும் என்றால் நீர் நிலைகளில் தண்ணீர் வேண்டும். 
நிலத்தில் விழும் மழைநீர் படிப்படியாக மண்ணுள் கசிந்து ஆழமான பகுதியில் தேங்கி நிற்கும் நீரைத்தான் நிலத்தடிநீர் என்கிறோம். இயற்கையின் நீண்டகால நிகழ்ச்சிப் போக்கில் உருவாகும் இத்தகைய நிலத்தடி நீர்வளமாக தமிழகத்தில் இருப்பது 22,423 மி..மீ. என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்!


நீரின்றி அமையாது உலகு


தண்ணீர் நாட்டின் வளம் சார்ந்தது . கடப்பா முதல் கன்னியாகுமரி வரை ஏரி, குளங்களை வெட்டி வைத்துள்ளனர்.  உலகமே  வியக்கும்  சிறந்த மழைநீர் சேமிப்பு முறையான ஒரு ஏரியில் தண்ணீர் நிரம்பினால், கால்வாய் மூலமாக இன்னொரு ஏரிக்கு தண்ணீர் போகும். அங்கிருந்து இன்னொரு ஏரி. பக்கத்தில் ஆறு, குளம் இருந்தால் அவையும் ஏரிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியே கடற்பகுதி வரை ஏரிகளும் அதன் கால்வாய்களும் நீண்டு இருந்தன. அத்தனை அருமையான மழைநீர் சேகரிப்பு, நீர் பாசன கட்டமைப்பை அந்த காலத்திலேயே கட்டியிருக்கின்றனர். ஏரிகளை மட்டுமல்ல கயம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம், குளம், கிடங்கு, மடு என விதவிதமான நீர்நிலைகளை உருவாக்கி, மழைநீரை சேமித்து முப்போகம் விளைவித்து, பல போகம் பெருமையுடன் வாழ்ந்த தமிழ்நாட்டில் இப்போது ஆழ்துளை போட்டு தண்ணீரை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

 நீர்வளம் : தமிழகத்தில் 17 முக்கிய ஆற்றுப்படுகைகள், 61 நீர்தேக்கங்கள், மற்றும் 49,480 பாசனக்குளங்கள் ஊடாக  ஒரு ஆண்டில் கிடைக்கும் நீர்வளம் 46, 540 மில்லியன் கன மீட்டர் ! இதில் சரிபாதி நீரானது  நிலப்பரப்பில் வழிந்தோடி கடலில் கலந்து விடுகிறது.  எனவே நமது பயன்பாட்டுக்குக் கிடைப்பது  24,864 மில்லியன் கனமீட்டர் ! இம்மேற்பரப்பு நீரில் 90 சதவீதம், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. சுமார் 24 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் இதனால் பயன்பெறுகின்றன !

 நீர்மேலாண்மை
தமிழகத்தில் வரலாற்று ரீதியாகவே மழை நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த கலாச்சாரத்தின் வெளிப்படுதான் ஏரி, குளம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் ஆதார அமைப்புக்கள்.
தமிழகத்தில் மரபு ரீதியாக அமைந்த நீர் பாசன, நீர் மேலாண்மை பற்றி அறிந்து, நவீன நடைமுறைகளோடு இணைத்து செயல் திட்டங்களை வகுத்து நீர் நிலைகளை பாதுகாக்க தவறி விட்டனர். கல்லணை கட்டிய கரிகாலனும், வைகையினை கடலுக்கே விடாமல் கண்மாய்களால் தடுத்த அக்கால பாண்டிய மன்னனையும் மறந்த தமிழக ஆட்சியாளர்கள் தண்ணீர் மேலாண்மையை பற்றி கவணம் கொள்வது இல்லை. வடக்கே பள்ளிப்பட்டிலிருந்து, தெற்கே பத்மநாபபுரம் வரை இருந்த பல நீர் நிலைகள், சில சுயநலவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் மழையை நம்பிய குளங்கள் 5,276, நதி நீர் பெறும் குளங்கள்     3,627, தனியார் வசம் 9,886 உள்ளது. கடந்த சில ஆண்டாக தமிழகத்தில் குளங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

இலட்சத்திற்கும் மேலாக இருந்த ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் இன்றைக்கு 39,202 ஆக குறைந்து விட்டது. ஏரி மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தில், பழவேற்காடு, பொன்னேரி, உத்திரமேரூர், மதுராந்தகம் ஏரி, செலவப்பன் ஏரி போன்ற பல ஏரிகள் தனது இயற்கை தன்மைகளை இழந்துவிட்டன.  சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு காலத்தில் 200 ஏரிகள் இருந்தன.  பூந்தமல்லி, போரூர், காரம்பாக்கம், வளசரவாக்கம், மேட்டுக்குப்பம், விருகம்பாக்கம், சாலிகிராம், புலியூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் என வரிசையாக ஏரிகளும், அவை கால்வாய்களாலும் இணைக்கப்பட்டிருந்தன. இன்று சென்னையில் ஏரிகளும் இல்லை, அவற்றை இணைத்த கால்வாய்களும் இல்லை.

கடந்த 2008 ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழகத்தில்    32,202 குளங்கள் இருந்தது. தமிழ்நாடு சுற்று சூழல் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இதில், 30 சதவீதம் குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்துவிட்டது . மேலும் 15 சதவீதம் குளங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.

கடந்த 2007-08 ம் ஆண்டு ஏரி, குளம் ஆகியவற்றை பாதுகாக்க சட்டம் கொண்டு வரப் பட்டது. ஆனால், 2009 ம் ஆக்கிரமிப்பு பகுதியில் 10 ஆண்டாக குடியிருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. எனவே, பெரும்பாலான ஏரி, குளங்கள் மாயமாகிவிட்டது. மதுரையில் 39 சதவீதமும், சென்னையில் 60 சதவீதம் குளங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. சேலம், திருமணி முத்தாற்றை ஒட்டியிருந்த பகுதிகளில் ஒரு குளம் கூட இல்லை. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 45 சதவீதம் குளங்கள் தமிழகத்தில் மறைந்து விட்டது .



நாகரீக வளர்ச்சிக்கும், மக்கள் தொகை பெருக்கத்திற்கும் ஏற்ப நீர் நிலைகளை அழித்து வருகின்றனர்.  ஆறு, ஏரி, குளங்கள் அதற்கான இணைப்பு கால்வாய்களும் ஒவ்வொன்றாக காணாமல் போனதால், எஞ்சிய நீர்நிலைகளும் வற்றிப் போய் கிடக்கின்றன. விளைவு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன  நீர்நிலைகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. நீர்நிலைகளை காப்பாற்றா விட்டால், எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். இப்போது தோன்றியிருக்கும் புதிய நகர்களில் 47 சதவீதம், நீர்நிலைகளை மூடி உருவாக்கப்பட்டவை என்கிறதுவட்டம்என்ற அமைப்பு.


வெள்ளைக்காரன் போட்ட பாதை
ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில்தான் முதல் முதலாக நீர்நிலைகள் வழித்தடங்கள், ரயில் பாதை போன்றவை அமைக்க  ஆக்கிரமிக்கப்பட்டன. நீர்நிலைகளை அழித்து விடக்கூடாது என்பதற்காக, ரயில் பாதையின் இடையில் கால்வாய்கள் அமைத்து இரண்டு பக்கத்திற்கும் தொடர்பை விட்டு வைத்தனர் வெள்ளைக்காரர்கள்.


தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நீர் நிலை ஆதாரம் உள்ள பகுதிகளிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலை ஆதாரங்கள் மறைந்து வருகிறது.

விவசாயம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு
கோடைக் காலங்களில் வற்றிப் போயிருக்கும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் சேற்றுப் பகுதிகளில் வெள்ளரி போன்ற குறுகிய கால பயிர்களை பயிரிடுவார்கள். பயிர் தானே என்று விட்டால் கொஞ்ச நாட்களில் வீட்டுமனையாக மாறிவிடும். அப்புறம் நீர் நிலை இருக்காது. நீர்நிலைகளில் பெரியதான கடல் கூட இந்த ஆக்கிரமிப்பு ஆசாமிகளிடம் இருந்து தப்பவில்லை.



பாசனத் திட்டங்களின் அவலநிலை !
கால்வாய் பாசனம், குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகிய மூன்றுவகைப் பாசனத் திட்டங்கள் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. நடப்பில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான சுமார் 130 லட்சம் ஏக்கரில், 90 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு மட்டும்தான் இதுவரை பாசனவசதி செய்யப்பட்டுள்ளது ! இதில், கால்வாய் பாசனம் மூலம் 29.2% , குளத்துப்பாசனம் மூலம் 21.3%, கிணற்றுப்பாசனம் மூலம் 48.9% நிலங்கள் பாசனம் பெறுகின்றன. விவசாயிகளின் துயர். நீராதாரங்களும் நீர்த்தடங்களும் திட்டமிட்டு அழிக்கப்படுவதும் விவசாயத்தை அழிக்கும் காரணியாக உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள்  உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் 17 பேர் என்று கணக்கு காட்டுகிறது. கடுமையான தண்ணீர் பஞ்சத்தை தாங்கக் கூடிய நமது பாரம்பரியமான விதைகள், பயிர் ரகங்களை எல்லாம்  பசுமைப் புரட்சி என்ற பெயரில் அழித்து விட்டனர்.

நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளாலும், ஆகாயத்தாமரை போன்ற வீரியரக களைச்செடிகளாலும், அலட்சியமான அரசின் பராமரிப்புக் குறைவாலும் பெரிய அளவில் பாசனப் பரப்பு விரிவாகவில்லை.

மாநிலத்தில் சுமார் 19 லட்சம் கிணறுகள் உள்ளன. இதில் 30% கிணறுகள் முற்றிலும் நீரின்றி வறண்டு விட்டன ! 27% கிணறுகள் விவசாயப் பயன்பாட்டுக்குப் பொருத்தமில்லாத உவர் நீராகி விட்டன ! மீதியுள்ள கிணறுகளில் தினமும் 4 முதல் 6 மணிநேரம் இறைப்பதற்கே நீர் இருக்கிறது!” என்று 2012-ல் வெளியானதமிழக நீராதரங்களின் தேவையும்- அளிப்பும்என்ற ஆய்வறிக்கை கூறுகிறது.

 பசுமைப் புரட்சிக்குப் முன்பு  1960-களில் இருந்த நீராதாரங்களின் நிலையையும் இழந்து, புதிய பாசனவசதியையும் பெறாமல், எதிர்கால உத்தரவாதமும் இல்லாமல் இன்று மிகவும் ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் மிக மோசமான நிலைக்கு நமது விவசாயம் ஆளாகியுள்ளது.

நீர்வரத்து வாய்க்காலை சுத்தம் செய்வது, குளங்களைத் தூர் வாருவது, கரைகளை உயர்த்துவது, அணைகளில் படிந்துள்ள மண்ணை அகற்றுவது காலத்தின் கட்டாயம்.  நீர்வளத்தைப் பெருக்குவதற்கும், அதை நிரந்தரமாக தக்கவைப்பதற்கும் தொலைநோக்கான, அறிவியல் பூர்வமான திட்டங்கள் கையாள வேண்டும்.
இதற்காக வறட்சிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் (DPAP), ஒருங்கிணைந்த நீர்த்தேக்கத் திட்டம்(IWOP) தேசிய நீர்பிடிப்புப் பகுதிக்கான நீர்தேக்கத் திட்டம்(NWDPRA),ஆகிய மத்திய அரசுத் திட்டங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு நீர்தேக்க வளர்ச்சி ஆணையம் (TAWDEV) வாயிலாக தமிழகத்தில் சிறியதும்,பெரியதுமாக 19,330 நீர்தேக்கங்கள் கட்டப்பட்டன. இதில் பெரும்பாலானவை இன்று பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கின்றது!
தொழிற்சாலைக் கழிவுகளால் ஆற்றுநீர் மாசுபடுவது மற்றுமொரு ஆபத்தாகும்.“குடிநீர், மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் ஆறுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு தொழிற்சாலைகள் அமைக்கத் தடைஉள்ளது. ஆனால் இதையும் தாண்டி தினமும் 6 லட்சம் லிட்டர் ஆலைக் கழிவுகள் ஆற்றுநீரில் கலக்கிறது . ஆலைக்கழிவுகளால் ஆற்றுநீர் விஷமாவது மட்டுமல்ல, நீர்தேக்கங்களில் ஆகாயத்தாமரை போன்ற வீரியரகக் களைகள் பரவுவதற்கும் காரணமாக உள்ளது. நீர்வாழ் தாவரக் களைகளில் ஏற்படும் ரசாயன மாற்றங்களின் விளைவாக தண்ணீரிலுள்ள ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்துவிடும். ஆக்சிஜன் குறைந்த நீர் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் தகுதியற்றதுஎன்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்!

விவசாயிகளே விவசாயத்தை தீர்மானிப்போம்!
இயற்கை வளங்களை, முக்கியமாக நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை!” “நீண்டகாலம் நீர் தேங்காமல் இருக்கும் குளங்களைக் கூட தனியாரோ, அரசோ ஆக்கிரமிக்கக் கூடாது!” “தண்ணீர் பஞ்சம் வராமல் தடுப்பது என்ற பொறுப்புணர்வுடன் மாநில அரசுகள் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்!” “நீர்நிலைகள் மீதான அனைத்து ஆக்கிரமிப்புக் களையும் உடனே அகற்றவேண்டும்!” “நீர்நிலைகளை அரசு மற்றும் தனியார் கையகப்படுத்தாமல் இருப்பதை கலெக்டர் தலைமையிலான மாவட்டக் கமிட்டி உத்திரவாதம் செய்ய வேண்டும்!”
தமிழக நில ஆக்கிரமிப்புச்சட்டம்-1965, 1975, 1996 , தமிழக நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம்-2007 என பல பல அரசுச் சட்டங்களும் இருக்கின்றன!
சட்டங்கள் நடைமுறைப்படுத்தாது காகிதங்களில் மட்டும் இருப்பதால் நம் வாழ்வாதாரமான விவசாயம் பாதுகாக்கப்படவில்லை! விவசாயிகள் வாழ்வும் முன்னேறவில்லை! விவசாயம் பொய்த்துப் போய், விவசாயிகள் விவசாயத்தை வெறுத்து நிலத்தை விட்டும், ஊரை விட்டும் ஊடுவது மட்டுமல்ல தங்கள் உயிரையை மாய்த்து கொள்ள காரணமாகியுள்ளது.  தமிழ்நாடு மாநில வேளாண் மன்றச் சட்டம் (TAMILNADU STATE AGRICULTURAL COUNCIL ACT) ஒன்றை கடந்த 2009-ஜுன்- 24-ல் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. “அங்கீகாரம் பெற்ற வேளாண் பட்டாதாரிகள் மட்டுமே விவசாயம் பற்றிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்என்கிறது இச்சட்டம்! இதன்படி மாற்று விவசாயம் பற்றி பிரச்சாரம் செய்வதே குற்றமா விடும்!  A விவசயம் பற்றி பேசக்கூட தடை என்பது உணவு என்பதை கேட்பதே குற்றம் என மாற உள்ளது.
விவசாயி தனித்து நிற்காது ஒரு கூட்டு பண்ணை விவாசயம் போன்று அரசு சாரா இயக்கங்களாக ஒன்று இணைந்தால் தான் வரும் கால அரசியல் சூழலை எதிர் கொள்ள இயலும். படித்தவர்கள் இன்னொருவரிடம் வேலை செய்து கூலி வாங்கும் நிலையில் இருந்து சொந்த நிலத்தை பராமரிக்க கூடிய மனநிலையை வளர்க்க வேண்டும். விவாசாயிகள் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டு வளர வேண்டும். வேலை செய்யும் தொழிலாளுகளுக்கும் நியாயமான ஊதியம் கொடுப்பதால் விவாசாயம் என்ற தொழில் இன்னும் மதிப்பு பெறும். 


5 comments: