27 Jul 2014

ஒரு பாலியல் தொழிலாளியின் சுய சரிதை-நளினி ஜமீலா

நேற்றைய தினம் புத்தகக் கண்காட்சியில் வாங்கி வாசித்து முடித்த புத்தகம். தன் வாழ்க்கை சரிதையை ஒரு பாலியல் தொழிலாளி எந்த கற்பனை இல்லாது உண்மையான வார்த்தையில் பதிந்துள்ளார்.  அவர் பாலியல் தொழிலாளியானதற்கு முதல் காரணம் வரட்டு கவுரவம் பிடித்த வேலைக்கு போகாத அவள் தகப்பன் மற்றும் கொடுமைக்காரியான பெரியம்மா தன்னலம் கொண்ட அண்ணன் எதையும் தாங்குவதாக அழுது கொண்டிருக்கும் அம்மா அடங்கிய  வசதியான குடும்பவும் தான். 
தனது ஒன்பது வயதிலே மண் சுமக்க போக வேண்டி வந்தவள். 18 வயதில் வீட்டை விட்டு வந்து ஒரு கயவனின் மனைவியாக வாய்க்கப்பட்டு இரு குழந்தைகளுக்கு தாய் ஆன சூழலில் அவன் இறந்து போக பாலியலை தொழிலாக ஏற்ற பெண்.  பின்பு ஒரு இடை வேளை என்பது போல் நாகர்கோயிலை சேர்ந்த சாகுல் என்பவருக்கு மனைவியாக 12 வருடம் வாழ்ந்த பின்பு கணவனின் போக்கால் மறுபடியும் தன் வாழ்வாதாரமான பாலியல் தொழிலையே வரிந்து கொள்கின்றார்.

கணவனின் இரு குழந்தைகளை பிரிந்து விட்ட நிலையில் இரண்டாம் கணவனின் சீனத் என்ற மகளை வளர்த்து நல்ல நிலையில் திருமணம் முடித்து கொடுத்துள்ளார். ஒரு பாலியல் தொழிலாளியாக தன்னை சமூகம் நோக்கியதையும் தன்னுடைய சமூக பார்வையும், சிறப்பாக  பாலியல் தொழிலாளிகளின் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகின்றார். இதுவரை இரண்டு ஆவணப்படம், இரண்டு புத்தகம் பல தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதை பதிவு செய்துள்ளார்.

என்னை கவர்ந்த விடையம் அவரின் பாலியல் தொழில் பற்றிய ஆழமான அறிவும் ஆண்களை பற்றிய அவதானிப்பும் ஆகும். பல வகையான பாலியல் தேவைகளை பற்றி குறிப்பிட்டுள்ளார். அறை எடுத்து தங்குவதை விட உடன் பயணிப்பது, பேசி கொண்டிருப்பது என ஆண்கள் பல விதமான விருப்பத்துடன்  அணுகுவதை பற்றி குறிப்பிட்டுள்ளார். சில ஆண்களோ திருமண உறவில் காணும் பிரச்சினைக்கு அறிவுரைகள் பெற அணுகுவதாகவும்  குறிப்பிடுகின்றார்.  கூலி வேலைக்கு மேல் தட்டு மக்கள் போக விரும்புவது இல்லை, ஆனால் அம்மச்சி வீடுகள் போன்றவை மேல் விட்டு பெண்களால் நடத்தப்படும் பாலியல் தொழில் இடமாக குறிப்பிடுகின்றார்.
ஒரு இரவில் நல்லவனான பண்பாளனாக இருந்த போலிஸ் அதிகாரி அடுத்த பகல் எந்த விதம் கொடூரனாக மாறினான் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது 13 ஆம் வயதில் வீட்டு வேலைக்கு போன இடத்தில் தந்தை வயது கொண்ட ஒரு பள்ளி ஆசிரியர் எவ்விதம் கீழ்த்தரமாக நடந்து கொண்டார் என்றும் விவரிக்கின்றார்.
சமூகத்தால் புரக்கணிக்கப்பட்ட பெண்களில் இருந்து ஒரு வரலாறு எழுத பட்டது சமூக-மக்கள் ஆய்வாளர்களுக்கு இப்புத்தகம் ஒரு பெரும் வரப்பிரசாதமாகத்தான் இருக்கும்.  எவ்விதம் ஏனும் தன் வீட்டிற்கு 3 அணா கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில்  ஒன்பது வயதில் தள்ளப்பட்ட ஜமீலா பிற்காலத்தில் பணத்தை சேகரிக்க மெனக்கெட்டதாக  தெரிய இல்லை. சொந்த ஊரில் 4 அணா பணம் பத்தாது என்ற நிலையில் நாளுக்கு 50 ரூபாய் கிடைக்கும் என்ற நோக்கில் பாலியல் தொழில் புரிய நகர் நோக்கி நகர்கின்றார். ஒவ்வொரு சூழலிலும் உடுக்கும் உடைக்கு கூட மற்றவர்களை கையேந்துவராகவே உள்ளார்.
 பின்பு சில வருடம் சாகுல் என்ற கணவர் குடும்பத்தில் மிகவும் செல்வாக்காக இருந்ததும், அவரால் புரக்கணிக்கப்பட்ட போது ஜமாத்தில் பிச்சை எடுத்து உண்ணும்  நிலைக்கு  தள்ளப்படுகின்றார். சுய மரியாதை இரண்டாவதாக இருக்க விரும்பவில்லை என பல காரணங்கள் கூறி உறவுகளை துடைத்து எறியும் போதும் பல அச்சுறுத்தல் சவால்கள், ஆபத்துகள் கொண்ட பாலியல் தொழிலில் ஈடுபாட்டுடன் தான் பங்கு பெறுகின்றார்.


நளினியின் 12 வருட கணவர் சாகுல் பற்றி குறிப்பிட வேண்டும். பாலியல் தொழிலாளி என்று அறிந்தும் தன் மனைவியாக்கி கொண்டவர்.நளினியின் மகளையும் தன் மகளாக பாவித்து தன் உறவினர்களுக்கு தன் மகள் என்றே அடையாளப்படுத்தியுள்ளார். நளினிக்கும் மரியாதயும் கண்ணியமான உறவை கொடுத்துள்ளார். நளினிக்கு இவர் வழியாக மதினி, இத்தா போன்ற உண்மையான, அன்பான உறவுகள் தந்தவர். இருந்தும் அவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டார் என்று அறிந்ததும் நளினியால் அவரை மன்னிக்க இயலவில்லை. இவருடன் வாழ்வதை விட பைத்தியக்காரியாயும் பிச்சைக்காரியாகவும் பல பள்ளி வாசல்களில் வாழ்கின்றார்.  சாகுல் பல தடவை வந்து சந்திக்கின்றார். தன் மகள் திருமணத்திற்கு தந்தை வேண்டும் என்ற சூழலில் அவசரமாக சல்லடை போட்டு  தேடி கொண்டு வரும் போதும் தன் கடமையும் செய்கின்றார். நளினியின் வாழ்க்கையில் வந்து போன ஆண்களின் எண்ணிக்கை பலர். இரு பொழுது தன் விருப்பம் இல்லாதே இரண்டு ரவுடிகளுக்கு தன்னை கொடுக்க வேண்டிய சூழல் வந்தது. ஒரு பொழுது ஒருவனுடன் இருந்து விட்டு இன்னொருவனுடன் தூங்கினேன் என்று குறிப்பிடுகின்றார். ஒரே நேரம் இரு மனிதர்களுடன் கணவர், சகோதரர் என்ற பெயரில் வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். இருப்பினும் தன்னை மீறி இன்னொரு பெண் நபர் தொடர்பு என்பதை தாங்கி கொள்ள இயலவில்லை என்பது புதிராகவே உள்ளது. ஒரு குழந்தையின் குழந்தைப் பருவம் மிகவும் முக்கியமானது. பெற்றோர்களால் சுரண்டப்பட்ட நளினி தன் வாழ் நாள் முழுதும் குறிக்கோள் அற்ற மனித உறவுகளுடனே போராட்ட உணர்வுடனே வாழ்கின்றார் என்று தான் குறிப்பிட இயலும். இவர்கள் போன்றவர்களை நம் இடத்தில் இருந்து நோக்காது அவர்கள் இடத்தில் இருந்து நோக்கி சக மனிதராக பாவிப்பதில் தான் நம் மனிதம் உள்ளது.  

இவருடைய கோரிக்கை விபசாரம் அரசு சட்டத்தால் ஏற்று கொள்ளப்பட வேண்டும் என்பதே. என்றால் இரண்டு நபர்கள் உடன் பட்டு செய்யும் போது பெண்கள் மட்டும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளார்.. அதே போன்று பாலியலை ஒரு குற்றமாக பார்க்காது ஒரு தொழிலாக பார்க்கும் படி கூறுகின்றார். தேவையுள்ளவன் பணம் கொடுத்து பெறும் போது இதில் சம்பந்தம் இல்லாதவர்கள் கருத்து தெரிவிப்பது அபத்தமகவே குறிப்பிடுகின்றார். பாலியல் தொழில் புரிகின்றவர்களை மூன்று நிலையாக பிரிக்கின்றார் முதலாவது வகை மேல்தட்டு மக்கள், இவர்களை சமூகத்தை நேரடியாக எதிர் கொள்ள வேண்டி வருவதில்லை. அடுத்த இடநிலையில் உள்ளவர்கள் தங்கள் தொழில் நலனுக்காவும் குறிப்பிட்ட லாபத்திற்காகவும் சில நோக்கங்கள் பூர்த்தி செய்யவும் விபசாரத்தில் ஈடுபடுவதாக கூறிகின்றார். ஆனால் இந்த கடைசி வகை விளிம்பு நிலை மக்களே அரசு சட்டத்தாலும் காவல்த்துறை அதிகாரிகளாலும் இந்த சமூகத்தின் பார்வையாலும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகுவதாக குறிப்பிடுகின்றார்.
 "எந்த அதிகாரத்தையும் அடக்குமுறையும் சொந்தம் கொண்டாடுதல்களையும் என்னால் பொறுத்து கொள்ள இயலாது " என்று குறிப்பிடும் ஜமீலாவின் மனபான்மை தன் சிறுவயதில் சந்தித்த கொடும் துயர்களும் தன் தாய் எதிர்க்க வலுவற்று தன் கணவனின் பிடியில் அடங்கி போனதின் எதிர் மனபாவமாகவே தெரிகின்றது. ஏதோ ஒரு வகையில் தன் சொந்த தகப்பன், உடன் பிறந்த சகோதரன், கணவர்கள், உடன் பணிபுரிந்த சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாகும் ஜெமிலாவுக்கு ஆண்கள் பற்றிய உயர்ந்த எண்னம் இருப்பதாக தெரியவில்லை. பயத்துடன் நோக்கியவர் பின்பு கேலியாகவும் வண்மாகவும் பார்ப்பதை காணலாம். தன் வீட்டில் கிடைக்காத அங்கீகாரம் அனுசரனை, பெரியம்மாவின்  அடிமைப்படுத்தல் தன் வாழ் நாள் முழுக்க வதைக்கும் நினைவுகளாகவே உள்ளது. தன் தகப்பன் பெரியம்மாவுக்கு அடங்கி போனதும் தன் மனைவியை அடிமையாக நடத்தினதும் தன் மகளை ஒரு போதும் பாச உணர்வில் நோக்காததும் அவர் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. தன் தகப்பனுக்கும் பெரியம்மாவுக்கும் தகாத உறவு இருந்திருக்காலாம் என்றும் சந்தேகிக்கின்றார். 
பாலியலை அழிப்பது அல்ல பாலியலை பாதுக்காக்க வேண்டும் என்ற தன் கருத்துக்கு பல காரிய காரணங்களை முன்வைக்கின்றார். விபசாரம், பெண் வன்கொடுமை, பெண் வியாபாரம்  போன்றவற்றில் இருந்து வேறுபட்டது என்று குறிப்பிடுகின்றார். 
தற்போதைய ஆண்களின் மனநிலையை விட  பழைய கால ஆண்கள் பெண்களிடன் பரிவுடனும் மரியாதையுடனும் நடந்தனர் என்று குறிப்பிடுகின்றார். பழைய நாட்களில் 40 வயதுக்கு மேல் பெண்கள் வயதானவர்கள் என்ற பார்வையில் ஆண் கொடூரர்களிடம் தப்பித்தது வந்தனர்.  தற்போது 55 வயது பெண்ணும் ஆண்களின் அச்சுறுத்தல் பார்வையில் வாழ்வதாகவும் பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிடுகின்றார். பழைய நாட்களில் பாலியல் தேவைக்கு பெண்களை தேடிவரும் வாடிக்கையாளர்களான ஆண்கள் தன்னை விட சிறிய வயது பெண் என ஆசைப்பட்டது போல் தற்கால இளைஞர்கள் வயதான பெண்களை விரும்புகின்றனர் என்கிறார். பாலியல் தேவை என்பது ஆணுக்கு மட்டுமானது அல்ல அதில் பெண் தேவையும் உள்ளடங்கியது என்று கூறும் நளினி ஜமீலா கேரளாவில் பெண் பாலியல் தொழிலாளர்கள் விட ஆண் பாலியல் தொழிலாளர்கள் தான் அதிகம் உண்டு என கூறியுள்ளார். 

தன் குடும்ப சூழலில் இளமையில் ஒரு தொழிலும் கைவசம் இல்லாத நிலையில் விபசாரத்தை தேர்ந்தெடுத்த நளினி; சாகுல் என்ற கணவருடன் வாழும் போதும் தொழில் செய்து கவுரவமாக வாழ்த்துள்ளார். கணவரால் புரக்கணிக்கப்பட்ட நிலையில் மறுபடியும் விபசாரத்தை தேர்ந்தெடுத்ததில் அவர் குழந்தைப் பருவ அவர் மனநிலையும் காரணமாக இருக்குமோ என்று வினா எழுகின்றது.  இருப்பினும் தன் மகள் தன்னை போல் ஒரு தொழிலை ஏற்க கூடாது என்பதில் காத்திரமாக இருக்கின்றார்.

நமது இந்திய பாரம்பரிய அடித்தளமான  குடும்பம் என்ற கட்டமைப்பு எவ்வளவு ஏமாற்று கொண்டது,  அங்கு பெண்கள் நிராதரர்களாக விடப்படுவதும் அடிமைப்படுத்தப்படுவதும் வசதியான வீட்டிலும் கவுரவம் பெண்கள் கைவிடப்படுவதும் மனம் குமுறச் செய்கின்றது. 
வசதியான குடும்பத்திலுள்ள ஆசை மகள், குழந்தை தொழிலாளி, பாலியல் தொழிலாளி, கவுரவமான குடும்பத்தலைவி பாசமுள்ள தாய், பைத்தியக்காரி, நோயாளி தற்போது பாலியல் தொழிலாளி , போராளி என பல நிலைகளில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களையும் கண்டு உணர்ந்த ஜெமிலாவின் மாயம் சேராத வார்த்தைகள் மனிதகுலத்திற்கு நல்லதே பயிர்க்கும் என நம்பலாம்.



6 Apr 2014

பில்லை போட்டு மிரட்டும் பல் மருத்துவ மனை

எங்க ஊரில் இப்போது பல நவீன மருத்துவ மனைகள் வந்த வண்ணமாகவே இருக்கின்றது. அதிலும் அரசு அலுவலக அல்லாதோர் தெருவில் நல்ல நல்ல புது மருத்துவ மனைகள் வந்துள்ளது. மகாராஜர் மருத்துவ மனை மிகவும் அழகு வாய்ந்தது. அங்கு போனால் பல் வலியுடன் கன்னத்தில் கைவைத்து கொண்டே கண்கவரும் சுவர் மேல்க்கூரை அலங்காரத்தை பார்த்து கொண்டே இருக்கலாம். ஒரு ஒலிப்பேழை கேட்டு கொண்டே இருக்கும். மருத்துவரும் கருணையுடன் பல்லை பரிசோதிப்பார் ஒட்டுவார், பிடுங்குவார். ஆனாலும் சில காலமாக அந்த மருத்துவ மனை ஒன்றாம் வகுப்பு  பணக்காரர்களுக்காக மாறிப்போனது தான் உண்மை.

இன்று வந்த மருத்துவ மனை வாசல்ப்படியில் ஒரு காவலாளி அப்பிராணியாக உட்காந்து இருந்தார். வரவேற்பு பெண் விமானப்பணிப் பெண் போல் கொண்டைபோட்டு சாரி கட்டியிருந்தார். அழகாகவும் இருந்தார். பேரைக்கேட்டு எழுத தான் கொஞ்சம் சிரம்ப்பட்டார். பேரிலுள்ள சிக்கலைக்கருதி நானே எழுதி கொடுத்து விட்டேன். என் பெயரை ஜோஸ்ஃபின் என்று எத்தனை முறை கூறினாலும் பலருக்கும் ஜோஸ்லில், ஜோஸ்வின்,ரோஸ்லின் என்று தான் கேட்கும்!

மருத்துவர் இன்னும் வரவில்லை என்றும் சில நேரம் காத்திருக்க கூறினர்.  ஆதித்திய சானல் ஓடிக்கொண்டிருந்தது. பல் அடைக்கும் வலியுடன் வந்தால் சிரிக்க பிரச்சினை வரவில்லை.ஆனால் ஆதித்தியாவில் நம்மை சிரிக்க வைக்க வேண்டும் என்ற  நோக்குடன் வேஷம் போட்டு  பேசிய, பெண் மொக்கை மொக்பேசிகொண்டு இருந்தார். உடை ரசனை  நல்லாவே இல்லை. மீடியா  படித்து வெளியேறும் மீடியா மாணவிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்களோ இதுவா இவர்கள் பணி என  அங்கலாய்த்த வண்ணம் பார்த்து கொண்டு இருந்தேன்.

என்ன தான் மகிழ்ச்சியாக பல் மருத்துவ மனைக்கு அழைத்து வந்தாலும் பணத்தை எவ்வளவு சுரண்டனுமோ என்று அத்தான் முகத்தில் பயம் நிழலாடியது தெரிந்தது. மருத்துவர் வந்து விட்டார்! மனிதர் கோட் சூட் போட்டு ஒல்லியாக சிரித்து கொண்டே நடக்கும் இளம் மருத்துவர். நெல்லை கொளுத்தும் வெயிலிலும் கோட்டா என்ற சிந்தனையில் இருக்க முன் இருக்கையில் இருந்த வயதான அம்மாவை அவர் கணவர் அன்பாக அழைத்து சென்று கொண்டிருந்தார்.

அடுத்து வடிவேலு ஜோக்கு ஓடி கொண்டிருந்தது.  பிரம்மா படத்திலுள்ள சசிகுமார் ஜோக்கும் வந்து விட்டது. சசிக்குமார்  படத்துக்கு படம் ”உங்க  நேர்மை பிடித்திருக்கு” என்று கழுத்தை அறுக்கின்றார் என்று எண்ணும் வேளையில் என் வரிசை வந்து விட்டது.

கல்லூரி படிப்பு நேர்முகம் போல் இருக்க வைத்து சில கேள்விகள் கேட்டார் மருத்துவர். என்ன பிரச்சினை,  இடது பக்கம் பல்லில் சொத்தை அடைக்க வேண்டும். வலது பக்கம் ரூட் கனால் செய்திருக்கும் பல் பக்கமுள்ள பல்லை பிடுங்க வேண்டும். மருத்துவர் தீர்கமாக என் முகத்தை நோக்கினார். சேவையும் மிஞ்சி சில வணிக நுணுக்கவும் அவர் முகத்தில் தெரிந்தது.  பரிந்துரைக்கும் முன் முதலில் பரிசோதிக்க வேண்டும் என்றார். பல்லை லைட்டு அடித்து பார்த்து விட்டு எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் தான் சிகித்சையை முன் நடத்த இயலும் என்று ஒரு போருக்கு தயார் ஆகும் வண்ணம் ஆழமாக கதைத்தார்.


அடுத்து எக்ஸ்ரே அறைக்கு அழைத்து சென்றனர். வாய்க்குள் ஒரு சதுரமான அட்டையை வைத்து படம் பிடித்தனர். பின்பு வந்து என்னவரையும் அழைத்து  விரிவுரை நிகழ்த்தினார். நாலு பல்லுக்கு ஒட்டு போட வேண்டும். பக்கத்தில் இருக்கும் பல்லை ரூட் கனால் செய்து பாதுகாக்க வேண்டும். ஏற்கனவே ரூட்கனால் அனுபவம் இருந்ததால் இப்போது தேற்வு பணியில் உள்ளேன். அடுத்த வாரம் வந்து சிகித்சை மேற்கொள்கின்றேன் என்றேன். மருத்துவர் முகத்தில் தெளிந்த பிரகாசம் இருட்டாக மாறி கொண்டிருந்ததை வேதனையுடன் பார்த்து கொண்டிருந்தோம்.

ரூட் கனாலுக்கு  ஐந்து வருடம் முன்பு 3000 ரூபாய் செலவானது.  ஒரு பிடித்த பல்லை பாதுக்காக்க வேடும் என்ற ஆசையில் ரூட் கனாலுக்கு ஒத்து கொண்டாலும் அந்த பிடித்த பல்லை ஈவு இரக்கம் இன்றி வெட்டி எடுத்தார் மருத்துவர். அதற்க்கு மேல் ஒரு தொப்பி பல்லுக்குள் ஸ்கூரு போன்று முறுக்கி வைத்தனர். ஆனால் இன்றும் உணவு எடுக்கும் போது வலி தரியத்தான் செய்கின்றது. பல்லை வெட்டி மாற்றியதை தான் ஏற்று கொள்ளவே இயலவில்லை. வெட்டுப்பட பல்லுக்கு விதி இருப்பின் வெட்டுப்படாது பிடுங்கி போட்டிருக்கலாமே என்று இன்றும் வருத்தம் உண்டு.

இரண்டு பல்லுக்கு சிமின்று சாந்தும், ஒரு பல்லுக்கு விலையுயர்ந்த பசை ஒட்டினால் நல்லது என்றும் கூறினார். பல்லை ஒட்டும் முன் சுத்தப்படுத்த வேண்டும் என்றார். தேவையா என்று கணவர் முகத்தை நோக்கினேன். கணவர் சரி சரி என்று அனுமதி வழங்கியதும்வாகனத்தை அடித்து சுத்தம் செய்வது போல் சிறு இயந்திரம் மூலமாக பல்கள் சுத்தசெய்யப்பட்டது.  மருத்துவர் போன் சினுங்க ஆரம்பித்து விட்டது. பேசி முடித்து மறுபடி பல்லை ஒட்ட ஆரம்பித்தார். அதற்குள் வரவேற்ப்பில் இருக்கும் பெண் அவசரமாக மருத்துவரை அழைத்து சென்றார். மருத்துவர் வெளியில் சென்றதும் ஏதோ திட்டும் சத்தம் கேட்டது. எனக்கு முன் வந்த வயதான தம்பதிகள் பில்லை சொல்லி சண்டை போட்டு கொண்டு இருப்பதை ”டம்மி” செவிலியப்பெண்ணிடம்(+ 2 முடித்த பெண். செவிலியப் படிப்பு முடிக்க வில்லை) கேட்டு தெரிந்து கொண்டேன். அடுத்து மருத்துவர் வந்த போது அவர் முகத்தை மூடியிருக்கும் திரையை மீறி முகம் இருட்டு அடித்திருப்பது தெரிந்தது.  பெரியவர் ரொம்ப தான் திட்டி விட்டார் போலும்.....

எங்களுக்கும் பில் கிடைத்து விட்டது.
சாதாரண சாந்து ஒட்டு இரண்டு பல்    2 * 400= 800
                  ஸ்பெஷில் ஒரு பல் ஒட்டு    1* 600 = 600
                                           பல் சுத்தப்படுத்துதல்  = 600  
                                                      பல் ஒளிப்படம் = 450 மொத்தம் 2450 ரூபாயாம்.
பெரியவரைப்போல நம்மால் திட்டவும் இயலாது நம் அறிவுக்கு தெரியாதா? வாங்கி வைத்திருக்கும் இயந்திரம் , வரவேற்பறை பெண், உதவி செவிலியர், டம்மி செவிலியர், மருத்துவர் கோட் சூட், கட்டிட வாடகை,ஆதித்தியா தொலைக்காட்சி நிகழ்ச்சி, வடிவேல் காமடி, அழகிய வண்ண ஒளிகள் என நாம் கட்டணம் செலுத்த வேண்டாம். பல்லுள்ளவன் பட்டாணி சாப்பிடலாம், கைய்யில் காசிருந்தால் பல் மருத்துவ மனைக்கு செல்லாம். பல்லை பிடுங்க 300 ரூபாயாம்(உபரி தகவல்)
     

பயமுறுத்தும் பல் மருத்துவ மனை நினைவுகள்!

பல் ஆஸ்பத்திரி என்றதும் அம்மாவுடன் செல்லும் எங்க ஊர் பல் மருத்துவமனை தான் நினைவிற்கு வருகின்றது. அந்த மருத்துவர் நாலடி உயரம் உள்ள ஒரு மலையாளி! நோயாளியை பார்க்கும் பார்வையிலும் கேட்கும் கேள்வியிலும் நக்கல் துள்ளி விளையாடும். மருத்துவரை பற்றி பல கதைகள் நடைமாடியது. அதில் ஒன்று மருத்துவர் ஏழையாம் பணக்கார வீட்டு பெண்னை காதலித்து மணம் முடித்தாராம். அவர் மனைவி குடும்பத்தார் மருத்துவருக்கு தன் மகளுடன், வீடு, மருத்துவ மனையும் சேர்த்து  கொடுத்தார்களாம். நம்பாமலும் இருக்க இயலவில்லை. மருத்துவரை விட அவர் மனைவி இரண்டு அடி அவரை விட உயரமாகவே இருந்தார். அந்த சீமாட்டி எங்கள் ஊரில் யாருடன் நட்பு கொண்டதோ பேசினதோ கண்டதில்லை. அனால் அமைதியான அம்மையார்.  ஆனால் மருத்துவரை சுற்றி எப்போது எங்கள் ஊர் ”மைனர் குஞ்சுகள்” பேசி கைதட்டி சிரித்து கொண்டு நிற்பார்கள். 


இன்னும் சிலர் மருத்துவரை பற்றி கூறினார்கள் அவர் கடைசி வருட தேற்வில் தோற்றவராம். ஆனால் இந்த கதையும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. எங்கள் ஊரில் அன்று இருந்த மருத்துவர்கள் கேரளா நாட்டு மற்றும் ஆயுர்வேத வைத்தியர்களே. சில மந்திரவாதி வைத்தயர்களும் உண்டு. ஆனால் ஆங்கில மருத்துவம் என்றால் தேற்வில் ஜெயிக்காதவர்கள் தான் மருத்துவமனை நடத்துவார்கள்.

ஒன்று கேள்வி கேட்க தகுந்த அறிவாளியாட்கள் இல்லை அல்லது வருவதில்லை. கொஞ்சம் காசுள்ள மலையாளிகள் குட்டிக்கானம் கடந்து காஞ்சிரபள்ளி போனால் தமிழர்கள் கம்பம் போய் விடுவார்கள்.
அம்மா கடைசி நேரம் வலி உயிர் போகும் நேரம் மருத்துவ மனை செல்வதால் எங்கள் வீட்டில் இருந்து ஒரு தெருவு தள்ளி இருக்கும் இந்த மருத்துவரை தேடி செல்வார். அம்மாவுக்கு துணைக்கு நானும் செல்வேன். அந்த கட்டிடம் மரத்தாலான ஒரு அழகான பழைய கட்டிடம்.மருத்துவர் குடும்பம் அருத்துவமனை அடித்தளத்தில் வசித்து வந்தது. அந்த ஆள் மலையாளத்தில் கேலியாக அம்மாவிடம் கேட்க பல்லை ஒரு கையால் அமத்தி கொண்டும் வரும் கோவத்தை காட்டாது பதில் சொல்வது நினைவில் உள்ளது. .



அந்தக்காலம் ரூட்கனால் போன்ற சிகித்சை முறை இல்லாததால் பல்லை ஒட்டி விடுவார்கள் அல்லது பிடுங்கி விடுவார்கள். ஒட்டுவதை விட பிடுங்குவது லாபம் என்பதால் எங்க ஊர் மருத்துவர் பல்லை பிடுங்கத்தான் விரும்புவார். மயக்க ஊசி போடுவது கூட பல நேரம்  அவருக்கு வழக்கம் இல்லை. முகத்தை கோரமாக வைத்து கொண்டு ”துறக்கு வாயே” என்று கட்டளை இடுவார். அடுத்து கட்டிங் பிளையர் போன்ற ஆயுதம் வைத்து கொண்டு ஒரே பிடுங்கு தான்….. 

இதனாலே பல் மருத்துவ மனை என்றாலே எனக்கு கொள்ளை பயம்!!!  ஆனால் நான் நேற்று சென்ற மருத்துவ மனை நெல்லையிலுள்ள நவீன பல் மருத்துவ மனையாம், ஆனால் தண்ணீர் தான் தானியங்கி இயந்திரம் வழியாக வர வில்லை. ஒரு சிறுபெண் தண்ணீரை தாள் கப்பில் எடுத்து ஊற்றி கொண்டிருந்தார்.

27 Feb 2014

பெண்ணே உன் நிலை தான் என்ன?


உமா மகேஸ்வரி மரணம் பெண்கள் உலகை நடுங்க வைப்பது சிந்திக்கவைக்க வேண்டியது. ஒரு புறம் கொடூரத்தின் உச்சம் மறுபுறமோ கொடும் புறக்கணிப்பின் நிலை!  சமூக பண்பாட்டு சூழல், லாபம் மட்டுமே கண்ணோக்கும் வர்த்தக நிறுவனக்களின் அலட்சியம் என இந்த நிகழ்ச்சி மனித மனசாட்சியை தட்டி எழுப்பவேண்டியது; சிறப்பாக தமிழக அரசின்  கண்ணை திறக்க வேண்டியது.

இப்பெண் காணாமல் போய் விட்டார் என்ற போது காவலர்கள் காதலர்களை தேடவும் அலுவலம் உடன்பணியாற்றுபவர், தெரிந்தவர் தான் செய்திருக்க கூடும் என பல ஊகாபோகங்களுடன்  ஒரு இளம் பெண்ணை சந்தேகப் பார்வையும் இளக்கார தொனியிலும் தான் நோக்கினர். ஒரு மதிப்பு மிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறவர்; தந்தையில் புகார் பெற்றும் போலிஸ் துரிதமான தேடுதலை முடுக்கவில்லை. அவர்கள் சந்தேகம் முழுதும் இளம் பெண், அதுவும் வேலைக்கு போகும் பெண், திருமணம் ஆகாதவர் என்ற குறுகிய பார்வையிலே இருந்தது. குற்றத்தை தடுக்க இயலாது போயிருந்தாலும் அந்த உடலைக்கூட கண்ணியமான முறையில் பெற்று கொடுக்க இயலவில்லை என்பது நம் சமூக பாதுகாப்பு அற்ற தன்மையை தான் காட்டுகின்றது. எல்லாம் முடிந்து 10 நாட்களாகி விட்ட நிலையில் இவர்கள் புலணாய்வு திறமையை பறக்கும் ஆளில்லா விமானம், ஏடிம் வங்கி என புல்லரிக்கும் கதைகளை அவிழ்த்து விட்டு கொண்டு இருக்கின்றனர். பெற்றோருள்ள, கல்வியறிவு பெற்ற வேலையிலுள்ள பொறியாளரான பெண் நிலையை இவ்வகை என்றால் சாதாரண தெருவோர பெண்கள் நிலை என்னவாக இருக்கும்!

 இரவு நேரம் தனியாக பாதுகாப்பாக செல்ல தகுந்த வழியா? என்று சிந்தித்து அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்று கிளம்பி இருக்கலாம். அல்லது  இவர் நண்பர்களிடமோ பெற்றோரிடமோ தன் நிலத்தகவலை சரியான நேரம்  அறிவித்திருந்தால் தேவையற்ற ஊகங்களை தவிர்த்து தேட இயன்றிருக்கலாம்.  இளம் வயதில் வேலைக்கு போகும் இவ்வித பொறியாளர் பெண்களுடன் சில காலம் தங்கியிருந்து அவர்கள் தினசரி வாழ்க்கையை காணும் சூழல் எனக்கிருந்ததால் என்னை இச்சம்பவம் மிகவும் நிலகுலைய செய்தது. 

பொறியாளர் படிப்பே மிகவும் கடினமானது. மிகவும் அறிவாற்றலுள்ள பெண்கள் குழைந்தைகளை, பொறியாளர்களாக உருவாக நேரடியான விருப்பம் இவர்களுக்கு உள்ளதோ இல்லையோ காளான் போன்று முளைத்த பொறியல் கல்லூரியில் இவர்களை சேர்த்து கொள்ளவும் குடும்ப கவுரவத்திற்கு என பெற்றோரும் படிப்பிக்க ஆவல் கொள்கின்றனர். பல பெண் குழந்தைகளால் இந்த படிப்பை எளிதாக படித்து கரையேற முடிவதில்லை. மேலும் இவர்கள் பாடத்திட்டத்திலும் இவர்களை சிறந்த இயந்திர மனிதர்களாக மாற்ற கொடுக்கும் உற்சாகம் அவர்கள் உடல் உளவியல் நலனில் கொடுப்பதில்லை. பல பொறியாளர் பெண்களுக்கு சமூகத்தை பற்றிய பெரிய புரிதல் இல்லை. இதனால் தான் பாட்டு பாடி கிண்டல் அடித்தவன் அவன் தரம் என்ன எச்சூழலில் வாழ்பவன் என பார்க்காது  செருப்பை கழற்றி அடிக்கும் உளவியல் கொடுத்ததும். என்ன தான் பொறியியல் வல்லுனர்கள் ஆகினும் சாதாரண மனிதர்களுடன் வாழ தகுந்த சில பாட திட்டங்கள் அவர்களுக்கு புகுத்துவதும் நல்லது.


இக்கால பெண் உடை நடையில் "மாடேன்" ஆக இருந்தாலும் அவர்கள் அவர்களாக வளருவதற்கான தளங்களும் குறைவு. பல பொறியாளர் பெண்கள் பெற்றோர்களும் படித்தவர்கள் வசதியானவர்கள்  என்பதால் இவர்களை கைபேசி ஊடாக 'ரிமோட் controll' போன்று தங்கள் வளையத்திற்குள் வைத்துள்ளனர். ஒரு சிறு நோய் வந்தாலோ ஏன் தங்கள் துணி மணிகளை கூட சுத்தமாக வைக்க தெரியாதவர்களாக குழந்தைகள் போன்றே வளர்க்கப்படுகின்றனர். இவர்களாக தங்களை வளர்த்து கொள்ளவும் நேரமோ பொறுமையோ இல்லை.  வாரம் ஒரு தேற்வு அதன் போட்டி என இவர்கள் 4 வருடம் உருண்டு ஓடுகின்றது. 5 வருடம் முன் 30-40 ஆயிரம் என்று ஆசை காட்டி ஆள் பிடித்து வேலை கொடுத்த நிறுவனங்களும் இவர்கள் எண்ணம் பெருகப் பெருக 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் முதலே கொடுக்கின்றனர்.  வேலையில் கொஞ்சம் சோடை போனாலும் வேலை போய் விடும் என்ற சூழலில் தினம் 10 முதல் 14 மணி நேரம் உழைக்கின்றனர். இவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளோ உணவோ போதிய சத்தோ சுகாதாரமோ ஆனது அல்ல. இவர்களுக்கு விடுமுறை என்பது ஞாயிறு மட்டுமே. இவ்வளவு சிக்கலிலும் வேலையை விட மனம் வருவதில்லை என்று மட்டுமல்ல முடிவதில்லை. மிக பெரும் கல்லூரி கட்டணத்தில் படித்த இந்த இளம் பெண்கள் தலையில் படிப்பு கடனும் இருக்கும். இவையும் மீறி சில பெற்றோர்கள் இவர்கள் இங்கு கஷ்டப்படுவதை ஊருக்கு வரும் போது கரைவச்ச சேலை வாங்கி வா, தம்பிக்கு பீஸ் கட்டனும் என்ன போனே எடுக்க மாட்டுதே என்ற திட்டு வேற.

உற்றோர் உறவினர் இல்லாத இந்த சென்னை பட்டிணத்தில் அவர்களுக்கு ஒரே பொழுது போக்கு சரவண ஸ்டோரில் போய் பர்சேஸ் பண்ணுவது இன்னும் பல பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவது. . வயதில் திருமணம் என்பதை எல்லாம் சிந்தித்து பார்க்கா இயலாத அளவிற்கு சூழலின் விதியில் தள்ளப்படுகின்றனர்.

ஒரு காலம் 6 மணிக்கு மேல் வீட்டிற்கு வெளியில் அனுமதிக்காத பெற்றோர் இன்று  சமூக அந்தஸ்து கருதி ”என் பொண்ணும் வேலைக்கு போறா”, ”அதும் சென்னையில் வேலையில் இருக்கிறா” என்பதை பெருமையான உள்ளத்துடன் ஏற்று கொள்கின்றனர். இங்கோ வேலையிடத்தில் நெருக்கம், தங்கும் இடத்தில் நெருக்கம், தனிப்பட்ட மனப்போராட்டம் என பாலாவில் படத்தில் காணும் தேயிலை தோட்ட கல்வியறிவு அற்ற பெண்களை விட கொடும் துயரில் இக்கட்டில் வாழ்கின்றனர்.

இந்த கொலையை நிகழ்த்தியிருக்கும் அன்னிய மாநில அந்த மனித மிருகங்கள் வாழ்க்கை அதை விட கொடுமையானது. தொழிலுக்காக தன் சொந்தம் பந்தம் வீடு உறவு எல்லாம் விட்டு வந்த இவர்கள் சென்னையிலுள்ள 50 ஆயிரம் தெருவோர மனிதர்களுடன்  இவர்களும் சென்னையை நிரப்பி விடுகின்னர். கேரளாவில் தமிழனை நடத்துவதையும் ஈழத்தை நம் சகோதர்கள் நடத்தப்படுவதையும் கண்டு இரத்த கண்ணீர் வடிக்கும் மனித நேயர்கள் கொண்ட மாநிலத்தில் பீகார், வங்காளக்காரர்களை மனிதர்களாகவே பார்ப்பதே இல்லை. மற்று மாநிலத்தான் வீட்டில் வளர்க்கும் நாயை விட கேவலமாக நடத்தப்படுகின்றான். பல உணவங்களில்  இதே மாற்று மாநில சிறுவர்கள் வேலை செய்கின்றனர். இந்தியனுக்கு துபாய் போல தமிழகம் துபாயாக  தெரிவதால் வந்து சேரும் இந்த மனிதர்கள் இங்கு மனிதர்களாக நடத்தப்படாது மிருங்களாக நடத்தி மிருகமாகவே மாறி போனவர்கள். சென்னையில் நடக்கும் கட்டிடப்பணியில் ஏற்பட்டிருக்கும் இவர்கள் வேலை நேர விபத்தில் இறந்தால் சொந்த தேசத்தை திரும்ப காண முடியாதவர்கள் என்று மட்டுமல்ல இங்கே அனாதை பிணங்களாக புதக்கப்படுகின்றவர்கள்.வழியோரங்களிலும் ஒதுக்குபுறங்களிலும் தங்கி தங்களுக்கான ஜீவனை நடத்துவர்கள்.

ஒன்று தமிழக அரசு இவர்களுக்கான மனித உரிமைகளை பெற்று தந்து  சகமனிதனாக வாழ வழி செய்ய வேண்டும்.  அல்லது இவர்கள் எல்லோரையும் தமிழக எல்கையை விட்டு விரட்ட வேண்டும். அல்லாது இது போன்ற துயருக்கு முடிவில்லை. இங்குள்ள தமிழர்கள் அனாதமாக அன்னிய நாட்டில் வேலை செய்ய எங்கோ இருந்து இங்கு அகதியாக இன்னும் சில மனிதர்கள் வேலை செய்ய என்பது முதளித்துவ சுரண்டல் மட்டுமே நாம் காணும் சமூகமெங்கும். அரசியல், சமூக, பொருளாதார என எல்லா சுரணலும் ஒன்றாய் ஆட்டிப்படைக்க பாவம் ஒன்றுமறியா பெண்கள் உயிர்கள் அநியாயமாக கொல்லப்படுகின்றன.Migrated labour

இதில் மிகவும் என்னை வருந்தச் செய்தது இந்த மீடியாவின் செய்தி ஆக்கமாகும். அந்த பெண்ணுக்கு நேர்ந்தது தன் உடன் பிறந்தவருக்கு அல்லது தனக்கு தெரிந்தவருக்கு நேர்ந்திருந்தால் வரிக்கு வரி விடாது எழுதி அவரின் மாண்பை கெடுக்க முனையுவார்களா? அப்பெண்ணின் பெற்றோர் உடன் பிறந்தோர், அறிந்தவர்கள் எல்லோரையும் அவமதிக்கின்றனர் விளாவாரியான செய்தியூடாக. செய்தியை நோக்கும் போது ஒரு கொடியவன் இன்னும் தூண்டப்பட்டு பெண் உடல் இவ்வளவு மலிவானதா என்ற எண்ணத்தில் தான் எட்டுவான். பத்திரிக்கை செய்திகளுக்கும் ஒரு  மனித நேயம் வேண்டும். அச்சடிப்பது இயந்திரமாக இருந்தால் கூட அதில் பணி செய்யும் தோழனே உனக்கும் அந்த கொடிய மிருகத்திற்கும் என்ன வேறுபாடு?  

9 Feb 2014

உலக திருமண நாள்-Feb 9



 உலக திருமண நாள்-Feb 9; திருமண பந்ததை உறுதிப்படுத்த அதன் தேவையை உணர, பலப்படுத்த இந்நாளை சிறப்பாக கொண்டாட வேண்டியது அவசியமாக உள்ளது. கடவுள் செய்த முதல் பணியே இரு மனிதர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கி மகிழ்ந்து வாழச் வழி செய்தது தான்.

திருமணம் என்ற பந்தத்தை நிலை நாட்ட எல்லா மதங்களும் போட்டி போட்டு செயலாற்றுகின்றது. துறவறம் போன்றவை மனிதனால் உருவாக்க பட்டிருப்பினும் திருமணம் மட்டுமே இயற்கையால்/ கடவுளால் நிறுவப்பட்டது. இரு வெவ்வேறு மனிதரின் எல்லா நிலையிலுமான வகையிலுமான சங்கமாக பார்க்கப்படுகின்றது. 
இந்திய காலாச்சார சூழலில் திருமணம் என்ற நிகழ்ச்சிக்கு பெரும் பணம் செலவழித்து நடத்தினால் கூட; அதை சிறப்பாக நடத்தி செல்ல தகுந்த வழிகாட்டுதல் இல்லை என்பதே உண்மை. பல மனிதர்கள் காதல் அளவுக்கு திருமண வாழ்க்கையை ரசிக்காது போனதற்கு காரணவும் இதுவே. திருமணம் என்பதை ஒருவர் இன்னொருவரை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள துணியும் போது உறவின் சுவாரசியம் மறைந்து போகிறது. காதலில் இருக்கும் ஈர்ப்பும் சுதந்திரவும் திருமணத்தில் பறி போகும் போது மனிதன் திருமணம் என்ற பந்ததை பல வகையாக குறை கூறி அதில் இருந்து தப்பி ஓடப் பார்க்கிறான்.

ஆனால் சரியாக புரிந்து, அணுகுபவர்களுக்கு இது போன்ற ஒரு மகிழ்ச்சியாக சுதந்திரமான இயல்பான, பாதுகாப்பான வாழ்க்கை முறை இல்லை என்றே கூற வேண்டும். காலங்கள் மாறியிருப்பினும் ஆண்-பெண் வில் பாரிய மாற்றமில்லை. குஷ்வந்த் சிங் சொல்லியுள்ளார் வீட்டிலுள்ள மாமியாருக்கு எப்போது பேரப்பிள்ளை தேவையோ அப்போது தான் மகனை மனைவி பக்கம் அணுக அனுமதிப்பார்களாம். இன்று நவ நாகரீக வாழ்க்கையில் அவ்விதமான அடிமத்த பிடியில் இருந்து தப்பித்து நகரத்தில் தனிக்குடித்தனம் நடத்தும் குடும்பத்திலும் மனைவியை பற்றி கணவர் கூறுகின்றார் “சினிமாவுக்கு அழைத்தால் கூட வருவதில்லையாம். காரணம் தினம் வேலைக்கு போகும் பெண் அந்த ஒரு நாள் அடுத்த வார அலுவல் வேலைக்காக தன்னை தயார்ப்படுத்தும் போது தங்கள் திருமண உறவை மறந்து போகின்றனர்.

இன்று வேலை போன்ற காரணங்களால் பிரிந்திருக்க வேண்டிய சூழலில் வெறும் தொலைபேசிதான்  திருமண பந்ததை காத்து வருகின்றது. இவையும் முன்னேற்றம் என்ற பெயரில் நுழைந்த பேராபத்து தான். “தனி நபர் முன்னேற்றம்” என்ற பெயரில் திருமணத்தை பற்றிய /கணவன் மனைவி உறவை பற்றி தவறான கீழ்த்தரமான சிந்தனை இப்பந்தத்திற்கு மேலும் அச்சுறுத்தல் ஆக மாறுகின்றது; பகடி என்ற பெயரில் பல தவறான கருத்தை வளர்த்து வைத்துள்ளனர். 
ஆண் பெண் சமம், போன்ற கருத்தியலும் திருமண பந்ததின் சுவையை குறைக்கின்றது. வெற்றிகரமான திருமண உறவை நாடுபவர்கள் நானும் நீயும் சமம் என்பதை நிலைநாட்ட முயலாது இருவரும் வேறுபாட்டில் தங்களை  சமரசப்படுத்தி கொள்ளும் வாழ்க்கையாக காண வேண்டும். சிலரோ, எளிதாக பாலியல் உறவை வைத்து கொள்ளும் இயக்கமாகவும் காண்கின்றனர். வெறும் ஊதியம் பெறும் அலுவலகத்தில் மற்று மனிதர்களுடன் அனுசரித்து போக பழகிய மனிதர்கள் ஒரே வீட்டில் வசிக்கும் இருவர்ன் ஆரோக்கியமான உறவை பற்றி எண்ணி பார்ப்பதில்லை. அன்பு பாசம் என்பதை அடித்தளமாக எடுத்து கொள்ளும் போது அங்கு ஆள, ஆளப்பட வாய்ப்பில்லை.



என்னதான் வேலை என்றாலும் கணவன் மனைவி தங்களுக்கு என சில மணி நேரங்களை நிச்சயமாக ஒதுக்க வேண்டும். அங்கு தங்கள் பெற்றோருக்கோ ஏன் அன்பு நமது பிள்ளைகளுக்கோ கூட இடம் இல்லை. அந்த நேரம் என்பது  நடைநேரமாக இருக்கலாம், சாப்பாட்டு நேரமாக இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட நேரம் திறந்த உரையாடலுக்கு தேவை. ஆனால் பல வீடுகளில் பெண்களாகட்டும் பக்கத்து வீட்டு பெண்ணிடம் உறவினர்களிடம் உரையாடுவதில் காட்டும் அக்கறை, ஆண்களோ நட்பில் மயங்கி கிடக்கும் சூழலில் தங்கள் குடும்ப உறவை மறந்து போகின்றனர்.

பல திருமணம் பந்தம் பணத்தாலும் வசதி வாய்ப்பு எண்ணத்தாலும் உருவாகுவதால்; வேலை, அழகு, பணம் கவுரவம் நுழையும் போது உண்மையான மகிழ்ச்சி கிடைக்கபெறாது  இவ்வுறவின் சாரம் அற்று போகின்றது. பல கணவர்கள் தங்கள் மனைவியை பற்றி புறம் பேசுவதும் பெண்களோ தன்னை சார்ந்திருப்பவர்களிடம் கணவரை குறை கூறி தங்களை தியாக பிம்பங்களாக பறைசாற்றவதையும்  சலித்து கொள்வதையும் தவிர்த்து கொள்ள வேண்டும்.
பெண் எப்போதும் ஆணிடம் இருந்து  கருதல், புரிதல், மதிப்பு, ஆராதனையை எதிர் பார்க்கின்றாள். அதுபோலவே ஆண் பெண்ணிடம் இருந்து நம்பிக்கை, ஏற்று கொள்ளுதல், பாராட்டுதல், உற்சாகப்படுத்துதல் எதிர் பார்க்கின்றான். இந்த பந்ததில் நீ கொடுத்ததை நான் திரும்பி தருவேன், நீ இப்படி என்றால் நான் அப்படி என்று இல்லாது இருவரும் போட்டி போட்டு கொண்டு அன்பை காதலை கொடுக்கவும் பெறவும் கடமைப்பட்டுள்ளனர்.
தற்கால பெண்கள் அலுவல ஆளுமையை வீட்டில் புகுத்தி மன அழுத்ததில் உள்ளாகாது குடும்ப வாழ்க்கையும் சமூக/அலுவலக வாழ்க்கையும் பிரித்து பார்க்க பழக வேண்டும். பெண்கள், கணவரின் அருகாமையில் உணரும் சுதந்திரம் மகிழ்ச்சி, நம்பிக்கை வேறு எங்கும் உணர இயலாது.திருமணம் சொர்க்கத்திலல்ல நம் எண்ணத்தில் நம் மனதில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.