23 Nov 2013

கொலைகாரியாகும் மனைவிகள்!


கடந்த சில மாதங்களாக நாட்களாக தங்கள் கணவரை கொலை செய்யும் மனைவியரின் செய்தியை பத்திரிக்கைகள் வாரி வழங்கி வருகின்றது. இவ்விதம் ஆக்கம் அற்ற செய்திகளை தொடர்ந்து வழங்கி வரும் பத்திரிக்கைகளை ஒரு புறம் குறை கூறினாலும் குற்ற செயல் புரியும் பெண்களில்,  பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மனைவி, பேராசிரியர் மனைவி, கணிணித்துறையில் வேலை செய்வபவர்கள், புதுமண பெண்கள் என எல்லா நிலை பெண்களையும் காண்கின்றோம்.

கல்லானாலும், புல்லானாலும் புருஷன் என கண் கண்ட தெய்வமாக வணங்கி நாதா, ஐயா, அத்தான், மச்சான் என அழைத்து கொஞ்சி மகிழ்ந்து பணிந்து வாழ்ந்த பெண்கள் மனம் வெறுப்பு உணர்வு கொண்டு நிரம்பி கொலை செய்யும் பெண்களாக மாறும் சமூக அவலை நிலையும் எண்ணி பார்க்க வேண்டியுள்ளது.
கூட்டு குடும்பம் உடைக்கப்பட்ட நிலையில் தனி குடும்பங்களும் வேலை போன்ற காரணங்களால் இல்லாதாகி வருகின்றதை காண்கின்றோம்.  தனி மனித உரிமை, சுயசார்பான வாழ்க்கை போன்ற போர்வையில்  சமூக மாற்றம், நாகரீகம் என்ற பெயரில் குடும்பம் என்ற அமைப்பின் தேவையை முக்கியத்தை உணர மறுக்கும் சூழலும் காண்கின்றோம். தற்கால எழுத்திலாகட்டும் இலக்கிய படைப்புகளிலாகட்டும் காணும்  சினிமா, தொலைக்காட்சி சீரியலுகள் வழியாகவும் குடும்பம் என்ற அமைப்பை மிகவும் கொச்சைப்படுத்தி அவையை போர்க்களமாக உருவகப்படுத்துவதில் போட்டி போட்டு கொண்டு ஊடக உலகம் முன் நகர்ந்து கொண்டு இருக்கின்றது. காலாகாலமாக கணவன் –மனைவி ஜோக் என்ற பெயரில் கணவன் மனைவி உறவை கொச்சப்படுத்தும் சூழலும் கண்டு வருகின்றோம். காதல் உறவை புனிதப்படுத்தும் அளவுக்கு கணவன் மனைவி உறவின் புனித தன்மையை எடுத்து கூறாவிடிலும் புறக்கணிப்பது கொடும் வேதனையாகும்.  கணவன் மனைவி தூய காதலை வெளிப்படுத்தும் தினமான காதலர் தினத்தை கூட  காதலர் தினமாக மாற்றியதும் இன்னொரு அவலம். திருமணம் என்ற பந்தத்தை; பெரிய சிந்ததையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களால் கூட பிள்ளை உருவாக்கும் இயந்திர அமைப்பு என்ற பார்வையை கடந்து காண இயலவில்லை. பல புரட்சி கவிஞிகளும் தங்கள் கவித்துவ புலமையை வெளிப்படுத்த திருமணம் என்ற அழகிய உறவை கொச்சப்படுத்தும் வரிகளை தான் எடுத்து கொடுக்கின்றனர்.

 
 தானும் சம்பாதிக்கும் சூழலில் கல்வியறிவு பெற்ற சூழலில் அல்லது தன்னிறவு அடைந்த சூழலில் பெண்கள் ஆண்கள் பாதுகாப்பை பெரிய  அரணாக கருதும் போக்கும் குறைந்து வருகின்றது. பெண்கள், ஆணாதிக்கம் ஆண் அடிமைத்தனம் என்ற கோட்பாடுகளிள் சிக்கி கணவன் என்ற உறவை கண்ணிய பார்வையில் இருந்து விலக்கி பார்க்கவும் ஆரம்பித்து விட்டனர். மேலும் வேலைக்கு என வெளி உலகை சந்திக்கும் பெண்கள் வெளியுலகு ஆண்களுடன் வரம்புக்கு மேல் பழகும் சூழலும் உருவாக்கி கொள்கின்றனர். கள்ள தொடர்பு என்பது பெண்கள் மத்தியிலும் மிகவும் சகஜமாக பரவ ஆரம்பித்து விட்டது. அல்லது பல நபர் உறவை பெரிய ஒரு  ஒழுக்க சிக்கலாக காண்பதும் இல்லை. அல்லது தங்கள் வாழ்வியலுக்கான தங்கள் ஸ்திர தன்மைக்கான ஒரு வழியாகவும் எடுத்து கொள்கின்றனர். பல பெண்கள் இவ்வித உறவுகளில் சிக்கி புகைந்தும் வெளிறியும் அவதூறு பேச்சுகளின் மத்தியில் பழக்கப்பட்டு கொண்டிருக்கும் போது சில பெண்கள் அசுர வேகத்தில் முடிவெடுத்து கொலைகாரிகளாகவும் மாறி விடுகின்றனர்.

10 Nov 2013

அழிக்கப்படும் தெய்வ குழந்தைகள்!!!




அவன் வீட்டில் பிறந்திருக்கும் குட்டி தங்கையை பார்க்க போனதால் என்னவோ அவன் சிரிக்கவே இல்லை. போதாத குறைக்கு தொட்டிலில் தூங்கும் குட்டி பாப்பாவை கிள்ளி விட்டான் என்று அவன் அம்மாவிடம் அடி வாங்கி அழுது முடித்த நேரம்! அவனை தூக்கி கொஞ்ச ஆசை இருந்தும் கூட குழந்தைகளை வலு கட்டாயமாக தூக்குவது, அவர்கள் கன்னத்தை அன்பு மிகுதியால் கிள்ளி மகிழ்வது, அவர்கள் அனுமதி பெறாது முத்தம் கொடுப்பது போன்றவை அவர்களை சங்கடப்படுத்தும் என்பதால் ஒரு போதும் நான் விரும்புவதில்லை. அன்றிருந்த அவசர பயண நேரத்தில் அவனிடன் பேசி பழகவும் நேரமில்லை. கையிலிருந்த புகைப்படக் கருவியில் அவனை படம் பிடித்த போது ஆர்வமாக நோக்கினால் கூட அவன் சிரிக்கவே இல்லை.

அவன் அம்மா, அவனுக்கு பிடித்த குளிர் பானம் கொடுத்து அவனை சமாதானப்படுத்த எத்தனித்து கொண்டு இருந்தாள். அவன் ஜூஸை குடித்து கொண்டே வந்த விருந்தினரை அவன் சிறு கண் வழியாக நோக்கினால் கூட அப்போதும் அவன் முகத்தில் மகிழ்ச்சி எட்டி பார்க்கவே இல்லை. தன் இடத்தை பறிக்க வந்த குட்டி பாப்பாவை சகிக்க மனமில்லாதவனாகவே நின்று கொண்டிருந்தான். ஆனால் அவன் விரும்பி குடிக்கும் அந்த குளிர் பானத்தில் அவன் நம்பிக்கைக்கு உரியவர்களே விஷம் கலந்து கொடுத்து கொன்றனர் என்பது மறக்க இயலாத துக்கமாக மாறி விட்டது இன்று. வெறும் நாலு வயது குழந்தையை நம்பிக்கை துரோகம் மூலம் கொலை செய்த நியாயத்தை எந்த காரணமாக இருந்தாலும் ஏற்று கொள்ள இயலவில்லை.

குழந்தை இந்த பூமிக்க வர காரணமானவர்களாக பெற்றோர் இருந்தால் கூட அவர்கள் உயிரை பறிக்க எந்த வகையிலும் அதிகாரம் இல்லாதவர்கள். கணவன் மனைவி சண்டை என்பது இன்று உலகமயமாகி விட்டது. பாசவும் நேசவும் ததும்பிய குடும்பங்களில் என்று பணம் ஒரு மகிழ்ச்சியின் காரணமாக எண்ண துவங்கினரோ; அன்றே சண்டை சச்சரவுகளும் ஆரம்பித்து விட்டது. பல பெரிய தீர்க்க இயலாத கணவன் மனைவி சண்டைகள் கூட ஒரே முத்தத்தில் தீர்க்கப்படுவவை.  இருந்தும் தங்களுக்குள் வரும்  பிரச்சினையில் பெற்ற குழந்தையை கொல்ல முடிவெடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. பத்து மாதம் பல வித துயர் மத்தியில் நொந்து பெற்ற குழந்தையை எவ்வாறாக கொல்ல மனம் வருகின்றது.  அதன் வாயில் அறிந்தே விஷத்தை ஊற்றி கொடுக்க எப்படி துணிகின்றனர்.

பிறந்த குழந்தை என்றில்லை ஒரு முழு குடிகாரனான வாலிப மகனை ஒரு தாய் விஷம் கொடுத்து கொன்ற பின் ஒரு வருடம் முன் இதயம் நொறுங்கி இறந்தார்.

காதல் என்ற போர்வையில் முதல் முதலில் பெற்றோர் நம்பிக்கையை குழி தோண்டி புதக்கும் பெண்கள் கணவனை பழி தீர்க்க தான் பெற்ற குழந்தைகளை கொலை செய்ய நினைப்பது அதிலும் பயங்கர நம்பிக்கை துரோகம். இந்த உலகத்தில் தன்னை நம்பும் முழு அன்பையும் பெற்றவர்களிடமே; முதலில் தாயிடமே எதிர் பார்க்கும் குழந்தையை கொலை செய்ய எவ்வாறு மனம் வருகிறது. குழந்தைகள் இவ்வுலகில் பல வித அச்சுறுத்தல் மத்தியில் வாழ்கின்றனர். பல காரணங்கள் கொண்டு கடத்தி செல்லப்பட்டு பல விதங்களில் கொடூரமாக கொல்லப்படுவதை நாம் அறிகின்றோம். இதில் பெற்ற தாயே தன் குழந்தையை கொல்வது தான் மன்னிக்க இயலாத குற்றம். கருணை உள்ளம் கொடூரமாகும் போது குழந்தை இரக்கத்தை எங்கு நாடுவது.

பெண்கள் மன நிலை “காலத்தின் கோலம்” என்ற வண்ணம் மாறி கொண்டிருக்கின்றது. ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று நம்ப வைக்கப்படுகின்றனர், நம்புகின்றனர். இதனால் பல வகையில் பெண்கள் தங்களை நிலைநிறுத்த எத்தனிக்கின்றனர் போராடுகின்றனர். தங்கள்  இயல்பான, எளிமையான நிலையை மறந்து; பணம் ஈட்டுவது, அலுவல் வேலை என்ற போட்டி பொறாமைக்குள் சிக்கி சின்னாபின்னமாய் கொண்டிருக்கின்றது பெண் உலகம். உலகைமே நம்மை கண்டு வியந்த குடும்பம் என்ற அமைப்பு அறிந்தும் அறியாதும் உடைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த குடும்ப விரிசலில் சிக்கி சின்னாபின்னமாகும் சமூகம் குழந்தைகள் அடுத்து முதியவர்கள்! முதியவர்கள் தெரிந்தே இந்த துயரில் எரிந்து அடங்கும் போது குழந்தைகள் அவர்கள் அறியாதே சிக்க வைக்கப்பட்டு நம்பிக்கை துரோகமாக அழிக்கப்படுகின்றனர்.போதிய சுகாதாரம், உணவு,கிடைக்காமையால் குழந்தைகள் மரணிப்பது விடுத்து  கொல்லப்படும் குழந்தைகளும் பெரும் துயரான சமூகநிலையையே காட்டுகின்றது.

கடந்த நாள் கண்ட பத்திரிக்கை செய்தி இன்னும் ஒரு கடும் துயரத்தை உணர்த்தியது. தங்கள் பல வருட எதிர்பார்ப்பில் பிறந்த குழந்தை நோயால் மரணித்து விடும் என்று அறிந்ததும் அக்குழந்தையின் பெற்றோர்  விஷம் அருந்தி விட்டு வாய்க்காலில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டனர். அக்குழந்தை 12 நாள் பின்னிட்ட வேளையில் அதுவும் இறந்து விட்டது. ஜனனம் அன்றே மரணம் உண்டு என்ற நியதியில் அக்குழந்தைக்கு நிம்மதியான மரணத்தை கொடுக்க ஏன் அப்பெற்றோருக்கு மனம் வரவில்லை. பெற்றோர் இல்லாது அவர்கள் அன்பு இல்லாது அக்குழந்தை வாழ்ந்த 12 நாட்கள் கொடியதாக இருந்திருக்கும். எத்தனை ஏச்சு பேச்சு, பழிச் சொல் கேட்டதோ தெரியவில்லை.

உலகமயமாக்கலில் பொருளாதரம் மட்டுமல்ல ஊடகம், அரசியல் எல்லாவற்றுடன் குடும்பம் என்ற கோயிலும் உடைக்கப்பட்டு விட்டது. அதில் குடியிருக்கும் தெய்வ குழந்தைகளும் அழிக்கப்படுகின்றனர்.

27 Oct 2013

கல்பற்ற நாராயணனின் சுமித்திரா என்ன சொல்கிறது?



கல்பற்ற நாராயணனின் சுமித்திரா என்ற நாவல் வம்சி வெளியீட்டில் சைலஜா என்ற எழுத்தாளரின் மொழி பெயர்ப்பில் வந்துள்ளது. வாசிக்க சுவாரசியமான நாவல் தான். மொழி பெயர்ப்பில் மலையாள சுவை மணம் அடித்தாலும் வாசிக்க தூண்டும் எழுத்து நடை. நான் இங்கு கூற வருவது மலையாள எழுத்தாளரின் பெண் பார்வையை பற்றியே.

இக்கதையில் கதாநாயகி சுமித்திரா என்ற பெண்ணே. இவர் தனது 38 வது வயதில் இறந்து விடுகின்றார். எப்படி இறந்தார் ஏன் இறந்தார் என கடைசி பக்கம் வரை வாசிப்பவர்களை தேடவைத்து கொண்டிருக்கின்றார் ஆசிரியர். 

கதை ஆரம்பிக்கும் கதை தளம் சுமித்திர இறந்து கிடக்கும் மரண வீடு! அங்கு வரும் மனிதர்களும்,இயற்கை வளமான சூழலும்(காப்பி செடியும்)அதை ஒட்டிய மனிதர்களின் சிந்தனையும் கதாபாத்திர விவரணவும். மரணம் தரும் சிந்தனையும் ஒட்டியே கதை நகருகின்றது. எனக்கு வரும் சந்தேகம் இந்த குறும் நாவலில் வரும் காதாப்பாத்திரப்படைப்பை பற்றியே.

முதல் கதாபாத்திரம் சுமித்திரா. நல்ல குடும்பத்தை சேர்ந்தவள். ஒரு நகர்புறத்தில் இருந்து காட்டு பகுதியில் திருமணம் முடித்து குடிபெயர்ந்துள்ளார். மகள் உண்டு. பிரச்சினையில்லாத கணவர் தான். ஒரு நாள் தலைவலியுடன் இருக்கிறார். அப்போது அங்கு பாத்திரம் விற்க வரும் வியாபாரி ஒருவர் தலைவலிக்கு ஒரு மருந்து சொல்கின்றார் அவரே மிளகு செடியை இலையை பறித்து கல்லில் வைத்து அரைக்கின்றார், ஆனால் மருந்தை போடும் முன்  தலையை தடவி கொடுத்து அப்படியே அன்று அவளுடன் கதவை தாப்பாளிட்டு படுத்து கொள்கின்றார். அவள் செத்து கிடக்கும் உடலை பார்க்கும் போதும் அவளுடன் படுத்த உடலை எண்ணி பார்க்கின்றார். என்ன ஒரு ஆண் மனம்!!

சுமித்திராவுக்கு ஒரு தோழி கீதா. அவளோ கணவனை எருமை என்று அழைக்கின்றாள் கணவனுடன் படுப்பதை விட அவன் தம்பியுடன் படுக்கும் கதையை எண்ணி கொள்கின்றார்.
Sumithra (Tamil)

அடுத்து அங்கு தொழிலாளியான மாதவி என்ற கதாபாத்திரம். அதுடன் சுமித்திராவுக்கு நட்பு. அந்த பெண்ணோ 8 மணிக்கு, ஒருவன் 9 மணிக்கு வேறொருவன் 10 மணிக்கு இன்னொருவன் 10.30 க்கு அவளை தான்  பார்க்க வருவதாக சுமித்திரா சொல்கிறார்.இவர்கள் நட்பில் சுமித்திரா கணவருக்கு விருப்பவும் இல்லை.

எல்லா பெண் கதாபாத்திரங்களும் தன் கணவரை மதிப்பது இல்லை, உண்மையாக நேசிப்பதில்லை காதல் கொள்வதில்லை. ஆனால் வழியின் போகும் எத்தவனுடனும் உடல் உறவு கொள்ளுகின்றனர்.  காமமே வாழ்க்கை என்ற நோக்கில் பெண்கள் வாழ்கின்றனர் என்று சொல்ல வருகின்றனரா அல்லது பெண் உடலை வெறும் மாம்ச பிண்டமாக மட்டும் பார்க்கும் மனநிலையில்  உள்ளனரா. நவீன சிந்தனை எழுத்து என்ற பெயரில் எழுத்தாளர்கள் என்ன செய்தியை சமூகத்திற்கு கொடுக்க விளைகின்றனர். பெண் என்பவள் உடல் சுகம் தேடி அலையும் வெறும் மிருகமாக எண்ணுகின்றனரா.

 மேலும் ஒரு நிகழ்வில் ஒரு யானை ஒரு தமிழனின் குடும்பம் முன்பு குரல் எழுப்புகின்றது. இதையும் ஆசிரியன் தமிழன் மிருகம் என்பதால் மிருகமான யானைக்கு அவன் குரல் புரிவதாக கேலி செய்கின்றார். பகடி என்ற பெயரில் இத்து போன சொல்லாடல்கள் பழம்குடி மக்களை மிகவும் கேவலமான நிலையில் வண்ணித்திருப்பது, கொச்சு தம்புராட்டி(சின்ன மகாராணி) என்று அழைப்பதை எண்ணி கதாபாத்திரம் வெட்டி பந்தா காட்டுவது என கதாசிரியர் தன் அகக்குணத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்நூலை பற்றி. எஸ் ராமகிருஷ்ணன் போன்ற சிறந்த எழுத்தாளர்கள் அணிந்துரை என்ற பெயரில் மேலும் கதை சொல்லியிருப்பது சரியா என்றும் சிந்திக்க வேண்டுகின்றேன்.times of India article

மொழி பெயர்ப்பில் வந்த குறையா அல்லது கதை ஆசிரியர்  எழுத்தா page no 85 என்று தெரியவில்லை சுமித்திரா தன் கணவன் வாசுதேவனின் சித்தி மகள் என்று சொல்லியிருப்பதில் உறவு மட்டுமல்ல மறபு சிக்கலும் தெரிகின்றது.