15 Oct 2011

தசரா ...............சூரசம்ஹாரம்!!!




நாங்கள் பயணித்த மோட்டார்  கார் குலசேகரப்பட்டிணம் நெருங்கி விட்டதுஇனி 3 கி.மீ தான் என்று ஆசுவாசப்படுத்திய போது பைபாஸ் ரோட்டில் டிராபிக் போலிஸ் வழி மறித்தது.  நல்லவர்கள் போல் நயவஞ்சமாக பேசி பயணிகளின் வானகங்களைநீங்கள் வாகனங்களுடன் செல்ல இயலாது வாகனத்தை ஒதுக்கி இந்த இடத்தில் நிறுத்த வேண்டும்என ஒரு திறந்த வெளியை காட்டினர்.  நாம் ஒரு முடிவிற்கு வருவதற்குள் காலில் வெந்நீர் ஊற்றியது போல் சீக்கிரம்… சீக்கிரம்.. என அவசரப்படுத்தி வரும் வாகனங்களை வரிசையாக பள்ளத்திற்குள் தள்ளி விட்டு கொண்டிருந்தனர். காரை நிறுத்த முடிவு செய்து கொண்டிருந்த   போது தான் கவனித்தோம் அது வெயிலினால் வற்றி போன கல்லும் முள்ளும் நிறைந்த குளம் என்று!  நம்ம ஊர் போலிஸ் நல்லதே செய்ய மாட்டார்களா என எண்ணி கொண்டு முள் செடிகள் மண்டியிட்ட குளத்திற்குள் வண்டியை கொண்டு போனால் வண்டி பஞ்சர் தான் என எண்ணி கொண்டு "நாங்க திருச்செத்தூர் செல்ல உள்ளோம்" என்று வண்டியை ஒரு வழியாக திருப்பி.., வேறு வழியாக குலசேகரப்பட்டிணம் வந்து அடைந்தோம்.








இனி குலசேகரப்பட்டிணம் கடற்கரைக்கு நடந்து செல்ல வேண்டும் என வண்டி நிறுத்த இடம் தேடினால்  ஒவ்வொரு அடிக்கும் கையில் பிரம்புடன் ஒரு காக்கி சட்டை பெண் போலிசை நிறுத்தியுள்ளனர்.   இங்கு வாகனம் நிறுத்தக் கூடாது நேற்றே வந்து இடம் பிடித்திருக்க வேண்டும் என புது தகவலும் தருகின்றனர் மகளிர் காவல் தெய்வங்கள்!   என்ன செய்வது என்ற நிலையில் பின் நோக்கி  வாகனத்தை  1 கி.மி நகர்த்தி பெண் போலிஸ் கண்ணில் படாத இடம் பார்த்து விரைவாக வண்டியை நிறுத்தி விட்டு, இனி யார் கேட்டாலும் “இது எங்களுடைய வாகனம் அல்லஏன்று சொல்லி விட வேண்டியது  தான் என கதைத்து கொண்டே கடற்கரை நோக்கி வேகமாக நடக்க துவங்கினோம். 3 மைல் தூரம் நடக்க வேண்டுமாம். ஒரே மக்கள் வெள்ளம்! குழந்தைகள் வயதானவர்கள் என வழியோரம் குழுமியுள்ளனர்.  திடீர் என  குதித்து ஓடுகின்றனர் சில பக்தர்கள், ஊளை இடுகின்னர்! பாடுகின்னர்! ஆடுகின்றனர்!  பக்தியால் நாம் அடிபட்டு விழுந்துவிடக் கூடாது என கவனமாக நடந்து சென்று கொண்டே இருந்தோம்.  


பாளையம்கோட்டையில் இருந்து வந்த ஒரு வாகனம் கண்-மண் தெரியாது வேகமாக ஓட்டி வர பின் தொடர்ந்து ஒரு கூட்டம் போலிஸ் உடை அணிந்த இளைஞர்கள் (உண்மை போலிஸா அல்லது தசரா போலிஸா என தெரியவில்லை!) கெட்ட வார்த்தைகளால் வாகனத்தின் ஓட்டுனரை திட்டி கொண்டிருந்தனர்.  இசை முழக்கத்திற்கு இணங்க பக்தர்கள் வேகமாகவும் பக்தி  மயக்கத்திலும் நடந்து போய் கொண்டே இருந்தனர்.  சிலர் கையில் தீச்சட்டி உள்ளது சில பெண்கள் முளப்பாரி வைத்துள்ளனர்.



இரவு ஆகி விட்ட நிலையிலும் தாங்க இயலாத வெப்பம்! கூட்டத்தின் தள்ளும்முள்ளும் கண்ட போது, சபரிமலை நிகழ்வுகளும் மனதில் ஓடியதால் திகிலும் மனதில் பற்றி கொண்டது!   இனி திரும்பி விடலாமா? என்றால் கடற்கரைக்கு செல்லாவிடில் தசரா விழா கண்டதிற்கே அர்த்தம் இல்லை  என கணவரின் சகோதர் உரைக்கின்றார். இனி என்ன செய்ய, அடுத்தும் நடை ஆரம்பித்து விட்டோம்.  ங்கள் சேட்டைக்கார  இளைய மகனை என்னவரின்  சகோதரர் பாதுகாப்பில் அழைத்து வருவதால் நானும் பெரிய மகனும் கவலையற்று படம் பிடித்து கொண்டே நடந்து வந்து கொண்டு இருந்தோம்.  என்னவர் தான் பாதுகாப்பு கவசமாக என்னை சுற்றி நின்று கொண்டு சில நேரம் திட்டுவதுமாகவும் இருந்தார். “தொலைந்தால், விடிந்தால்  தான் கண்டு பிடிக்க இயலும் என்னுடன் சேர்ந்தே வா, என் கையை பிடித்து கொள்என நச்சரித்து கொண்டே வந்தார்.




வழியெங்கும் காக்கா கூட்டம்என்பது போல் போலிஸ் கூட்டம் தங்கள் பாதுகாப்பையும் கண் வைத்து கூட்டமாகவே நின்று கொண்டிருந்தனர்.  10 லட்சம் மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தசரா திருவிழாவுக்கு பெண், ஆண் போலிஸ் என வெறும்  600 பேர் குழுமியிருப்பது குறையாக தான் பட்டது.  ஒரு பெண் போலிஸுக்கு இன்னொரு பாதுகாவல்-போலிஸ் என இரட்டை குழந்தைகளாகவே காட்சி தந்தனர்.  சில இடங்களில் ர் ஆண் போலிசிடம் 4 பெண் போலிஸுகள் கதைத்து(கடலை) கொண்டிருந்தனர்.  ஊர் காவல் படைபோலிஸும் தசரா போலிசும் ஒரே போல் இருந்ததால் சில நேரம் குழப்பமாகவே இருந்தது! தசராவுக்கும் போலிஸ் வேடத்திற்கும் எப்படி தொடர்பிருக்கும் என்று ஆலோசித்து கொண்டே நடந்து கொண்டு இருந்தோம்.



கடற்கரை வந்து விட்டோம்மக்கள் கூட்டம் அலை மோதுகின்றதுபேட்டையிலுள்ள நரிகுறவ மக்கள் அங்கு குழுமியிருந்து சிலர் வியாபாரம் பார்க்கின்றனர், சிலர் பிச்சை எடுத்து கொண்டிருக்கின்றனர்.  இரவு 12 மணிக்கு நடக்கும் சூர சம்ஹாரத்தை காண மக்கள் இடம் பிடித்து அமர்ந்துள்ளனர். கடல் மணல் போல் மக்கள் கூட்டம்.  தூக்கு மேடை போல் சூரனை பலி கொடுக்க பல மேடைகள் அமைத்துள்ளர்.  மக்கள் சூரசம்ஹாரத்தை நிறைவாக காண்பதற்கு    நவீன தகவல் தொடர்பு கருவிகள் உதவி கொண்டு கணிணி திரையும்  அமைத்து  கொடுத்துள்ளனர்.  

வழி எங்கும் நாட்டுப்புற ஆட்டம், குத்தாட்டம், கரகாட்டம் போன்ற கலைநி என மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகள் ஆபாசம் கலந்திருப்பதாக அரசு தடை விதித்திருந்து இந்த வருடவும்.  இந்த நிகழ்வே தசரா திருவிழாவுக்கு அழகு சேர்ப்பதாக முன்பு பங்கு கொண்ட எங்கள் நண்பர் கூறினார்.  இது விளிம்பு நிலை நாட்டுப்புற கலைஞர்களுக்கு செய்யும் துரோகமாக தான் எனக்குப்பட்டது. ஆபாசம் என்று நினைத்தால் தசரா திருவிழாவை அனுமதித்திருக்க இயலாது. 6 அடி  சேலை இத்தியாதிகளுடன் வந்த சில ஆண்கள் சேலையை மட்டும் கற்றி பைக்குள் வைத்து கொண்டு மீதம் ஆடைகளுடன் வலம் வருவது பெண்களை நெளிய தான் வைக்கின்றது.  இந்நேரங்களில் பார்க்கும் பொருளை விட பார்ப்பவரில் தான் பொருள் உண்டு என ஆசுவாசப்படுத்திகொள்ள வேண்டியது தான்.



இந்த வகையான விழாக்களில் விமர்சனங்களையும் மீறி சில நல்ல விடயங்களும் காணாது இருக்க இயலாது. மக்கள் தன்னை மறந்து தன் நிலை, அந்தஸ்து, நான் என்ற அகங்காரம், என எல்லாம் மறந்து ஒரு முகமூடியுடன் தான் விரும்பிய ஆட்டம் கேளிக்கையில் கலந்து கொள்கின்றான். உறவுகள் நட்புகள் சுருங்கிய இந்த காலயளவில் குடும்பமாக மகிழ்ச்சிகள் பங்கிட்டு கடற்கரையில் குழுமுவது காண்பதற்கு ஆச்சரியம் மட்டுமல்ல மனிதனின் உள மன நலத்திற்கும் இது தேவையும் கூட!




கடற்க்கரை வந்து சேர்ந்த மக்கள் தங்கள் தீச்சட்டியை இறக்கி வைத்து விட்டு கடலில் இறங்கி காலை நனைப்பதுடன் தங்கள் செய்த பாவத்தை கடலில் களைந்து புண்ணியம் தேடி கொண்டு அணிந்திருக்கும் உடையை கழற்றி அடுத்த வருடத்திற்கு என எடுத்து கொண்டு கரை ஏறி குடுபத்தினருடன் நடு இரவு 12 நடக்கும் சூரசம்ஹாரம் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.http://www.youtube.com/watch?v=ZDOqXZ23peE 
                                                                                                                                  சூரசம்ஹாரத்தை எதிர்நோக்கி கைக்குழந்தைகள் பெரியவர்கள் என மக்கள் கடற்கரையில் அணிநிரந்து விட்டனர்.  எங்களுக்கோ இனி நேரம் இல்லை 12 க்குள் வீடு வந்து சேர வேண்டும். நாங்கள் திரும்பி விட்டோம். போகும் போது விட வரும் போது கூட்டம் மேலும் கூடி விட்டது.  கூட்ட நெரிசலில் நாம் நடந்து வர தேவை இல்லாது தள்ளி கொண்டு விடுகின்றனர். அப்போது தான் என்னவரின் நண்பரும் ஊர்பாதுகாவல் படையில் உள்ளவருமான அல்போன்ஸ் அவர்களை சந்தித்தோம். அவருடைய காக்கி சட்டை பாதுகாப்பில் எங்கள் வாகனத்தை நெருங்கி விட்டோம்.  கொண்டு சென்ற உணவை சாப்பிட்ட பின்பு தான் கண் திறந்து காதில் கேட்ட ரிங் ரிங் என்ற ஒலி மறைந்தது.  http://www.youtube.com/watch?v=H8Pbcz9Ypwk&feature=related                                                                                                                                             திருசெந்தூர் வழியாக வந்து நெல்லைக்கு திரும்பினோம்.  என்னவருக்கு சாந்தி இனிப்பு கடையை கண்டதும் காப்பி குடிக்க ஆசை! கடை மின் விளக்குகளால் பிரமாண்டமாக இருந்தது.  கடைக்குள் சென்றால் குப்பையாக காட்சி கண்டதும் காப்பி குடிக்க மனம் கொடுக்க வில்லை.  இருப்பினும் மனம் இல்லா மனதுடன் போத்தல் ஜூஸுகளை வாங்கி குடித்து விட்டு எங்கள் வாகனம் பக்கம் நெருங்கினால் வெள்ளை சட்டை அணிந்த பெரிய மனிதர்கள் கட்டண கழிப்படம்  முன்புள்ள ஓடையில் நிற்று கொண்டே சிறுநீர் கழித்து கொண்டு நிற்க்கின்றனர். உலகமே வந்து காண ஆவல் கொள்ளும் புண்ணியமூமி என நம்பும் திருச்செந்தூர் முருகன் ஆலையம் நிலைகொள்ளும் திருச்செந்தூர் பட்டித்தை  சுத்தமாக பாவிக்காவிடில், சாமி குத்தம் ஆகி விடாதா? என  மக்கள் சிந்திக்க மாட்டார்களா என எண்ணிகொண்டு எங்கள் நெல்லைச்சீமை நோக்கி விரைந்தோம்!

14 Oct 2011

தசரா ! சில வரலாறு..................


 தசரா பண்டிகை நேபாள நாட்டின்  தேசியத் திருவிழா ஆகும். ஜப்பான், சுமித்திரா போன்ற சில நாடுகளிலும் பிரமாண்டமாக  கொண்டாடுகின்றனர். இந்தியாவில் பெங்களூரில், மைசூர் ராஜாக்கள் கொண்டாடினதை நினைவூட்டும் விதமாக 10 நாட்களும் அரசு நிகழ்வாக; அரண்மனையை வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்து உலக மக்களே திரண்டு வந்து பார்க்கும் அளவுக்கு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.  சாமுண்டீஸ்வரி என்ற துர்கா தேவியை யானைமேல் வைத்து பவனி வருவது தான் இங்கு  சிறப்பு.  நம் ஊரில் காளி மகிஷாசுரனை வதம் செய்ததை கொண்டாடுவது போல் அங்கு சாமுண்டீஷ்வரி மகிஷாசுரனை வதம் செய்தாக கொண்டாடுகின்றனர்.

 வட இந்தியாவில் விஜயதசமி என்ற பெயரில் சக்தியை வணங்குவது வழியாக உலகத்திலுள்ள தீமையை அழிந்து நன்மை வெற்றி பெற்றதாகவும், இருள் மறைந்து ஒளி பிறந்ததாகவும் அர்த்தம் கொள்ளப்படுகின்றது.   விஷ்ணுவின் 8 வது அவதாரமான ராமர், ராவணன் என்ற அசுரனை  (லங்கா ஆண்ட சிவபக்தனான திராவிட மன்னன்) கொன்ற நிகழ்வை நினைவு படுத்துவதாக கொண்டாடப்படுகின்றதுவிஜய தசமி என்பது 10ஆம் நாளில் கண்ட வெற்றி என்று அர்த்தம் கொள்ளப்படுவதுடன் வியாசன் என்ற கல்வியின் குருவை நினைவு கூர்ந்து கல்வி துவங்கும் நாளாகவும் கொண்டாடுகின்றனர். கேரளாவிலும் குழந்தைகளுக்கு அரிசியில் தங்கள் விரலால்ஹரிஸ்ரீஎன எழுத வைத்து கல்வி துவங்கும் நிகழ்வாக கொண்டாடுகின்றனர். சிறப்பாக கிறுஸ்தவ ஆலயங்களிலும் தங்கள் மத ஆசாரப்படி குழந்தைகளுக்கு கல்வி துவங்கும் நாளாக கொண்டாடுகின்றனர் விஜயதசமி என்ற தினத்தை!

 பெண்களின் அழகுணர்ச்சிக்கு முக்கியவத்துவம் கொடுக்கும் விதம் கொலு பொம்மைகளை கலை நயமாக பாவித்து வைப்பதுடன் மனித உறவுகளை சிறப்பாக பேணும் விதமாக நண்பர்களையும் அண்டை வீட்டுகாரர்களையும் அழைத்து   சுண்டல், பரிசு பொருடகள் கொடுத்து மகிழும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகின்றதும் இவ்விழாவின்  சிறப்பாகும்!

ஆனால் தமிழகத்தில், சிவனின்  பாதியாம் காளி என்ற சக்தி,  மக்களை துன்புறுத்தி வந்த மஹிஷ என்ற அசுர மன்னனை வதம் செய்த நாளாகவே  தசரா கொண்டாப்படுகின்றது.  காளி இருட்டின்  கடவுள் என்பதால் முகம் உடல் என இருட்டாகவே காட்சி தருகின்றனர் பக்தரில் பெரும்வாரியனவர்கள். சக்தியின் வெளிப்பாடாம் தீயை ஏந்தி வருவதும் பறையின் ஒலியில் தன்னை மறந்து பக்தி மயக்கத்தில் ஆடி, துள்ளி செல்வதை ஒரு ஆசாரமாகவே கடை பிடிக்கின்றனர்

குலசேகர மன்னன் வந்து வணங்கி சென்ற 300 வருடம் பழமை வாய்ந்த முத்தாரம்மன் கோயில் இக்கடற்க்கரையில் அமைந்துள்ளது. குலசேகர பாண்டிய மன்னன் வந்து சென்ற ஊர் என்பதால்  குலசேகரபட்டிணம் என்ற பெயருடன் இன்றும் விளங்குகின்றது.  மன்னர் ஆட்சியில் இருந்தே இக் கொண்டாட்டங்கள் இங்கு நடைபெறுகின்றதாம். அமைதியான இக்கடலோர கிராமத்தில் தசரா திருவிழா நாட்களில் சுமார்  10 லட்சம் மக்கள் பக்தர்களாகவும், பார்வையாளர்களாகவும் இங்கு வந்து செல்கின்றனர்.  



ஒரு காலத்தில் சிலோனுடன் வியாபாரம் பேணி வந்த துறைமுகம் இது என்பதால் சிலோன் பணத்தால் கட்டப்பட்ட அழகிய பிரமாண்ட வீடுகள் காண இயன்றது. தூத்துகுடி, பின்பு துறைமுகம் என்ற அந்தஸ்துடன் உயர்ந்த போது குலசேகரப்பட்டிணம் தன் பொலிவை இழந்து தற்போதைய நிலையில்  வீழ்ந்துள்ளது.

 சுதந்திர போராட்டத்தில் இந்த ஊரை சேர்ந்த பல பிரமுகர்கள் பங்கு பெற்றதாகவும் வெள்ளகார அதிகாரியை கொலை செய்த குற்றத்திற்கு   குற்றம் சாட்டப்பட்டு கொலைமரம் அருகே போய் திரும்பி வந்த வரலாறும் இந்த ஊருக்கு உண்டுகொலை செய்யப்பட்ட வெள்ளகாரரின் கல்லறையும் இவ்வூரில் தற்போதும்  உள்ளது.   சுதந்தரத்திற்கு பின்பு என்ன வளர்ச்சி கண்டது என்றால் அதன் சோக முகம் மட்டுமே வெளிப்படும். பழைய வீடுகளின் அழகுடன் இன்றும், மாற்றங்கள் காணாது நிலைகொள்ளும் கிராமமே குலசேகரப்பட்டிணம்!  தமிழகத்திலுள்ள  அழகான கடலோரங்களில்  ஒன்றாகும் இது.   இஸ்லாம் இன மக்கள் இங்கு அதிகமாக வசிக்கின்றனர்.  இங்கு வரும் பக்தர்களுக்கு தங்கள் வீட்டு முற்றத்தில் தங்க வசதி செய்தி கொடுத்துள்ளனர் வடை, ஜூஸ் போன்ற வியாபாரவும் வீட்டு பெண்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறுகின்றது



அரசு சார்பில், மக்கள் குழுமும் விழா காலங்களுக்கு  ஏற்ற  வாகனம் நிறுத்தும் பாதுகாப்பான ஏற்பாடோ, சிறப்பான முன்கருதல்களோ ஒன்றும் செய்து கொடுத்திருப்பதாக காண இயலவில்லை.  வழி நெடுக தடி கம்புடம் அச்சுறுத்தும்  பார்வையுடம் நிற்க்கும் காவலர்களை மட்டுமே காண இயன்றதுபெண் காவலர்களின் உதட்டில் எந்த அளவு நக்கல் சிரிப்பு உள்ளதோ அதே போல் கண்ணில் ஒரு கேலி பார்வையும் நிழலாடுகிறது. மக்கள் நண்பர்களாக போலிஸ் மாற இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகலாமோ  என்று ஒரு வித கலக்கத்துடன் கடந்து சென்றோம்!  

வழி நெடுக கடைகள் அணிவகுப்பு மட்டுமல்ல பக்தி போதையையில் வரும் பக்தர்களுடன் குடிபோதையுடன் நடமாடும் மனிதர்களையும் காணலாம்.  திருவிழாக்களில் காணும் எல்லா கேளிக்கை விளையாட்டுகள் சர்க்கஸ் என  சுவாரசியமான நிகழ்வுகள் ஒருங்கே இங்கு கண்டு களிக்கலாம். கிளிக்கூடுடன்  வரும் காலத்தை கணித்து சொல்லும் சோஸியக்காரர்கள் துவங்கி தென் தமிழக சிறப்பான தேன்குழல் மிட்டாய் வியாபாரிகள் என  சட்டியில் இருந்து உடன் எடுத்த சூடாக பண்டங்கள் வாங்கி உண்டும் மகிழலாம்!


ஆகா இரவு 8 மணி ஆகி விட்டது. மின் விளக்குகள் ஆங்காங்கே வெளிச்சத்துடன் நிற்கின்றது.  நமக்கு பக்தர்களில் தீ பந்தமே வெளிச்சத்தை அள்ளி வழங்குகின்றது.  அப்பாடா கடற்கரை நெருங்கி விட்டோம், இந்த கொடிய வெப்பத்திலும் மெல்லிய கடல் காற்று வந்து நம்மை அணைக்க ஆரம்பித்து விட்டது. இனி கடற்கரையில் என்ன நடக்கிறது என்று அடுத்த பதிவுடன் வருகின்றேன்!!!