23 Jun 2011

வலைப்பதிவர் சங்கமம்- என்ன நடந்தது?


முதல் சுற்றில் பெயரும் தங்கள் வலைப்பதிவின் பெயரும் அறிமுகப்படுத்தினர் மறு சுற்றில் ஏன் எப்படி பதிவுலகத்தில் புகுந்தோம், தாங்கள் பெறும் அனுபவங்கள் எவ்வகையானது என்ற கேள்விக்கு விடை காண்வதாக இருந்தது.
 தமிழ்மணம் வலைப்பதிவில் முதல் வரிசையிலுள்ள சி.பி செந்தில் குமார், தான் எப்படியாக முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றார் என்பதும், அவர் பதிவு உலகத்தை ஒரு போட்டியை நோக்கி நகத்துவதகவும் தெரிந்தது.  பலா பட்டறை சங்கரோ வலைப்பதிவுகளில் ஆக்க பூர்வமான நம் கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு இட்டு செல்லும் தளமாகவும்  காத்திரமான பதிவுகள் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  இன்னும் சில பதிவர்கள் தங்கள் வேலையின் நெருக்கத்தால் வாழ்க்கையில் சுவாரசியம் அற்று போகாது நட்பு, தொடர்பாடல் பேணவே வலைத்தளம் என்று வலியுறுத்தி முடித்தனர். வேளான்மைத்துறையில் விஞ்ஞானியாக இருந்து ஓய்வு பெற்றவரும் முதல் தமிழ் வலைப்பதிவரான டொக்டர் P. கந்தசாமி மற்றவர்களின் இடையூறு இல்லாது  தங்கள் கருத்துக்களை ஆக்கபூர்வமாகவும் சுதந்திரமகவும் பதிய தகுந்த தளமே வலைப்பதிவு என்றும்  விவரித்தார்.  ஐயா N.ரத்தின வேல் அவர்கள் தங்கள் காணும் விடயங்களை சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை பகிர துணை புரிகின்றது என தெளிவுபடுத்தினார்.  வெடிவாள் சகதேவன் ஐயா கூறுகையில் தங்கள் ஓய்வு வயதில் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் கருத்துரையாடல்கள் தங்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் பலர் வலைப்பதிவர்களாக வலம் வர வேண்டும் என்ற தன் ஆதங்கத்தை தெரிவித்தார்.  தங்க சிவம் போன்றோர் அரசு அதிகாரியாக இருப்பதால் தங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் சமூகத்துடன் பங்கிட வலைப்பதிவுகள் என்பது நல்லதொரு வடிகால் என்று உரைத்தார்.  மதுரை மணிகண்டன் நான் ஒரு சின்ன சிறு வலைப்பதிவர் என்று அடையாளப்படுத்தி கொண்டாலும் அவருடைய எழுத்தின் வீரியம், மதுரை தமிழின்  அழகு எழுத்து நடை யாரும் தெரிந்திருக்க வாய்ப்பு கிட்ட வில்லை என்றே உணர்ந்தேன்.  என் நிலை பாடான வலைப்பதிவுகள் என்பது சமூக்க மாற்றத்திற்க்கு பயன்பட வேண்டும் என்றும் சிறப்பாக பெண்களுக்கு தங்கள் உணர்வுகளை கருத்துக்களை தாங்கள் காணும் உலகத்தை தாங்கள் வாழ்வில் கண்ட இழப்பை பகிர்வது வழியாக ஒரு சுவாரசியாமான உலகில் புகுந்து விட துணை புரிகின்றது என்பதை பகிர்ந்தேன். சில வலைப்பதிவர்கள் மாற்று கருத்து கொண்ட வலைப்பதிவுகள் விரும்பவில்லை என்பதும் வலைப்பதிவுகள் என்பது வெறும் பொழுது போக்கு  தான் என்ற கருத்துக்கள் என்னால் ஏற்று கொள்ள கடினமாக தான் இருந்தது.இளம் வலைப்பதிவர்களான தமிழ்வாசி, கோமாளி செல்வா, ஜெயந்து, ஜாஹிர்ஜுசைன், நாய்குட்டி கருவாளி ராமன் போன்றோர் இளம் புயலாக வலம் வந்தனர்.
  
பின்பு அரும் சுவையான உணவு குழுப்படம் எடுத்து கொண்டதுடன் கூட்டம் நிறைவு பெற்றது. ஒரு பார்சல் அல்வா, கடலை மிட்டாய் காரம் கடலை, இன்னும் பால்கோவா போன்ற ஒரு இனிப்பு பார்சலில் தந்து வழி அனுப்பினர். இவை அனைத்தும் இலவசமாக பெறப்பட்டதும் அங்கத்தினர் ஒரு குழுவாக இணைந்த சாற்றோ இல்லாது பிரிந்ததும் வருத்தமாக இருந்தது.  வந்திருந்தவர்களின்  வலைப்பதிவுகளின் அறிமுகம் முழுமையாக பெற இயலாது இருந்ததும் மேலும் அவர்களுடைய தொடர்பு மின்னஞ்சல் முகவரி கிடைத்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும் என்று மனதில் தோன்றியது.

எனக்கு தெரிந்திருந்த வலைப்பதிவர்கள் ஆனால் அறிமுகம் இல்லாத நாறும் பூ, போகன் போன்றோரை சந்திக்க இயலவில்லையே என்ற கவலை மனதில் இருந்தது அடுத்த வலைப்பதிவர் சங்கமத்தில் சந்திக்கலாம் என்று மனதை தேற்றி கொண்டேன்.

இருப்பினும் பதிவர் சந்திப்பால் என்ன பலன், இது எதற்காக, யாருக்காக எடுக்கப்படும் புகைப்படங்கள் காணொளிகள் நம் சுதந்திரத்தை பறிக்கின்றதா என்ற கேள்வி என் மனதை கிளர ஆரம்பித்து விட்டது.  அடுத்த பதிவில் அதை பற்றியே  கதைக்க வேண்டும்!!! 

நெல்லை வலைப்பதிவர் சங்கமம்


நெல்லையில் வெள்ளி கிழமை (17-06-11)அன்று நெல்லை பதிவர் சந்திப்பு நடை பெற்றது. பதிவர் சந்திப்பு என்பதை பற்றி சென்னை பதிவர்கள்,  இலங்கை தமிழர்கள், வெளிநாட்டு  தமிழர்கள்  மத்தியில்  என பதிவுகள் வழியாக அறிந்திருந்தாலும் அது போல் ஒரு கூட்டம் நெல்லையில் நடைபெறுகின்றது அதில் பங்குபெறுகின்றேன் என்பது புதுமையான மகிழ்ச்சியான  அனுபவமாகவே இருந்தது.  இதுவே நெல்லையில் நடக்கும் முதல் கூட்டம் என்றும் அறிந்திருந்தேன்.  உண்மை சொன்னால்  பெரிதும் எதிர்பார்த்து இருந்த நாள் தான் இது!  நாம் எழுத்து வடிவில் காணும் மனிதர்களை நேரில்  காண, கதைக்க அவர்கள் நேரடி கருத்துக்கள் பெற  முடிந்தது என்பது மிகவும் நெகிழ்ச்சியான சம்பவமாகவே இருந்தது.  இதற்க்கு ஒழுங்கு செய்த திரு உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்களையும் திருமதி கவுசல்யா மற்றும் அவர்கள் நண்பர்களும்  பாராட்டுதலுக்கு உரியவர்களே. இத்தருணத்தில் என் பதிவு வழியாக அவர்களுக்கு நன்றி கூறவும் கடமைப்படுள்ளேன்.

என்னுடைய வாசிப்பு தளம் ஈழ தமிழர்களின் எழுத்துக்களாக இருந்ததால் இவர்கள் எழுத்து எனக்கு பெரிதும் பரிசயம் இல்லாவிடிலும் சில குறிப்பிட்ட பதிவர்கள் சிறப்பாக சி.பி செந்தில் குமார், பனித்துளி சங்கர், ஸ்ரீவில்லிபுத்தூர் ரத்தினவேல் ஐயா, தம்பி மதுரை மணிகண்டன் போன்றவர்களின் எழுத்து வழியாக சென்றுள்ளேன் என்பது மகிழ்ச்சியாக இருந்தது.

10 மணிக்கு கூட்டம் என்று தெரிந்தும் 10.30 க்கு தான் வேண்டுமென்றே தாமதமாக சென்றேன்.  ஏன் என்றால் பல கூட்டங்களில் போய் கொசு விரட்டி கொண்டு இருந்த அனுபவம் எனக்கிருந்தது.  மேலும் முகம் தெரியாத நபர்கள் தெரியாத இடம் தேடி செல்கின்றேன் என்ற அச்சமும் உண்டு தான்!

என்னவர்,  ஜானகிராம் ஹோட்டலின் வாசலில் விட்டு விட்டு ஒரு சிறு நமட்டு சிரிப்புடன் 6 வது மாடியில் கூட்டம்  லிப்டில் தனியாக சென்று விடுவேயா என்று வினவினார்.   எனக்கும் ஒரு தயக்கம் தான் இருப்பினும் விட்டு கொடுத்து நம் பயத்தை காட்டி விடக்கூடாது என்று எண்ணி   நான் போய் விடுகின்றேன் முடிந்ததும் தொலைபேசியில் தெரிவிக்கின்றேன் என்று கூறி விட்டு வீர நடையாக  சென்று விட்டேன்.  பொது இடங்களிலுள்ள   லிப்டு, பல்பொருள் அங்காடியிலுள்ள எஸ்கலேட்டர் இவை எல்லாம் பயம் தரக்கூடியவை தான் எனக்கு!  சாரை சாரையாக நெடுகையும் குறுகையுமாக வாகனங்கள் போகும் ரோடு கூட பயம் தான் ஆனால் ரோடு தாண்ட இப்போது வல்லுனர் ஆகி விட்டேன்.   அதிலும் கண்ணில் கருப்பு கண்ணாடி அணிந்து ரோடில் குறுகே தாண்டுவது இன்னும் பாதுகாப்பு . ரோடில்  வருபர்கள்(ஆட்டோ தவிற்த்து) ஐயோ பாவம் என்று வழி விட்டு செல்ல வாய்ப்புகள் உண்டு!!

அப்படி தான் அந்த லிப்டுக்குள்ளும் காலெடுத்து வைத்தேன்.  தமிழ் படத்தில் போன்று ஒரே ஒரு நபர் மட்டுமே கையில் பிளாஸ்க்குடன் என்னை கேள்வி குறியால் கொஞ்சம் முறைத்து பார்த்து  கொண்டு 3 வது மாடிக்குள்ள பொத்தானை அமுத்தினார். அவர் இறங்க போகும் போது என்னை நோக்கினார்; நான் 6 வது மாடி என்றேன் அவரும் பாவம் ஏதோ பேக்கு போல என்று தோன்றியதோ என்னவோ 6 வது பட்டனை அமர்த்தி விட்டு அதுவாகவே கதகு திறந்து விடும் என்று கூறி வெளியில் சென்றார். மனுசா ஒரு உதவி செய்தீர்கள் என இப்படி கதைக்கலாமா; கதைகை உடைத்து கொண்டு போக மாட்டேன் என்று மனதில் நினைத்து கொண்டு சிறு புன்முறுவலுடன் அப்பிராணியாக நின்று கொண்டேன்.   லிப்டு நின்று விட்டது வெளியில் வந்த போது அது ஒரு மொட்டை மாடி அழகாக சாப்பாடு மேஜைகள் இடப்பட்டிருந்தது குழந்தைகள் விளையாட்டு பொருட்கள்  கண்ணை கவரும் செடிகள் அதன் ஒரு கோடியில்  ஒரு கண்ணாடி கதவு கொண்ட பெரிய அறை.

கதகை தள்ளி திறந்து உள்ளெ சென்றேன் என்னை கேள்வி குறியாக நோக்கினர் நான் தான் “சிஐடி போலிஸ் ஜோஸபின்” என்று சொல்லும் கம்பீரமாக ‘நான் வலைப்பதிவர் ஜோஸபின்’ என்றேன். உங்களை தான் தேடி கொண்டிருந்தோம் என்று பலமான வரவேற்ப்பு கிடைத்தது.  ஒரு கரம் என்னை அன்பாக அழைத்து சென்று  ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டேன்.

 நல்ல சூழல் எங்கும் சிரித்த் முகங்கள்! பொதுவாக நெல்லையில் விசேஷ கூட்டங்களுக்கு சென்றால் சிரிப்பு விலை கொடுத்து தான் வாங்க வேண்டும்.    வீடு தேடி வந்து பத்திரிக்கை தந்து அழைப்பவர்கள் கூட அவர்கள் கூறிய மண்டம் முன்  நாம் சென்றடையும் போது அன்று தான் அறிமுகம் ஆவது போல் விரிந்த கண்களுடன் கேள்வியே புருவமாக கொண்டு இருகிய முகத்துடன் காட்சி தருவார்கள். இங்கு எல்லாம் மாறுபட்டு இருந்தது .  எல்லோரும் சிரிப்பாலும் பேச்சாலும் தாம் பல வருடங்களக அறிமுகமானவர்கள் போல் அன்பாக தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி கொண்டிருந்தனர். 

என் கண்கள் முகநூலில் புகைப்படம் கண்டு, ஏற்கெனவே மின் அஞ்சல் வலைப்பதிவு வழியாக  அறிமுகமுள்ள ரத்தின வேல் ஐயாவை தேடியது அதே நேரம் அவர்களும் என்னை அடையாளம் கண்டு விட்டார்.  அவர் மனைவி உமா அம்மையாருடன் வந்திருந்தார் மிகவும் அன்பாக என்னிடம் கதைத்தார்.   ஒரு முறை என் புகைப்படுத்தில் கருத்து வெளியிட்ட போது “ எனக்கு 3 ஆண் குழந்தைகள் உண்டு உன்னை என் மூத்த மகளாக நினைக்கின்றேன் அம்மா “ என்றிருந்தார் அவர் கண்களிலும் அந்த பாசம் கரை புரண்டோடியது.  அவர் மனைவி அவரை ஒரு குழந்தையை போல் கவனித்து கொண்டு அமைதியாக எல்லாம் அவதானித்து கொண்டு அவர் தோழியாக அருகில் இருந்திருந்தார். ஐயா அவர்கள், அவருடைய ஊர் வீசேஷமான இனிப்பு பண்டம்   பால் கோவா எனக்கென கொண்டு வந்து தந்தபோது இன்ப அதிற்ச்சியாகவும் இருந்தது.

அன்றே முதல் முதலாக கண்டுள்ள கவிதை எழுத்தாளர் கல்பனாவின் நட்பு பல வருடம் கண்டு பழகிய இனிமையான தோழியோடு ஒத்திருந்ததும் ஆச்சரியத்தை கொடுத்தது.  அவர் தமிழக வலைப்பதிவுகளுடன் மிகவும் அறிமுக ஆகியவர் என்பதால் அவர் அங்கு வீற்றிருக்கும் பல பதிவர்களை அறிமுகப்படுத்தி தந்து கொண்டு இருந்தார்.  சௌதியில் இருந்து வந்து பங்கு பெற்ற ஜாகிர் ஹுசைன், நாகர்கோவில் இருந்து வந்த வெறும் பையன் ஜெயந்து, நண்பர் தங்க சிவம் மற்றும் சேலத்தில் இருந்து வந்திருந்த ரசிகன், தூத்துகுடி SVS, நாகர்கோயிலில் இருந்து வந்த நண்பர் மனோ, கோவில்பட்டியில் இருந்து விஜயம் செய்த நண்பர் பாபு போன்றோர் மிகவும் அன்பாக- நட்பாக பழகியது மிகவும் ஆனந்தமாக இருந்தது.  தமிழக வலையுலகத்தின்  ஹீரோக்களாக வலம் வரும் சி.பி செந்தில் குமார், பனித் துளி சங்கர், அமைதியே உன் பெயர் தான் தண்ரோரா என்று சொல்லும் வலைப்பதிவர் தண்டோரா, இளம் வலைப்பதிவர்கள் தமிழ்வாசி பிரகாஷ், கழுகு வலைப்பதிவின் கோமாளி செல்வா, வம்பை விலைக்கு வாங்காத மதுரை மணிகண்டன் இவர்கள் எல்லோருடனும் பதிவர்கள் என்று ஒரே குடையின் கீழ் அணி திரண்டதில் பெருமையாகவும் இருந்தது. அதிலும் எழுத்தாளர் சி. பி செந்தில் சிரித்து கொண்டே  தன் நகைச்சுவை கொண்ட பேச்சாற்றலால் எல்லோரின் கவனைத்தையும் தன்பால் கவர்ந்து கொண்டே இருந்தார்.  பனித் துளி அவர்கள் தான்பேசுவதை விட அடுத்தவர்கள் பேசுவதையே அவதானித்து கொண்டிருப்பதில் ஆர்வம் இருப்பதாக தெரிந்தது.                                                                                            இனி என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் காணலாம்.

11 Jun 2011

நீங்களும் வலைப் பதிவர் ஆகலாமே!!!!


வலைப்பதிவுகள் என்பது நவீன ஊடகத்தின் ஒரு பதிப்பு ஆகும். வலைப்பதிவு ஆய்வாளர்களின் கருத்துப் படி வலைப்பதிவுகள் என்பது ஒரு தனி நபரின் அல்லது ஒரு குழுவின், குழுமத்தின், நிறுவனத்தின் இணைய தளமாகும். தனி நபர் வலைப்பதிவுகள் என்பது, தனி நபர்  சிந்தனை கருத்துக்கள் அடங்கிய எழுத்துக்கள், கட்டுரைகள், படங்கள், காணொளிகள், ஒலி நாடாக்கள் உள்ளடங்கியது ஆகும்.  இணைய வசதியும் கணிணியும் உள்ள யாராலும் தாங்கள் எழுதியதை  இடையூறு இல்லாது வெளியிடவும்  உலகளாவிய அளவில் குறைந்த செலவில் மிக விரைவில் கருத்து பரிமாற்றத்திற்க்கும் உதவுகின்றது  என்பது இதன் சிறப்பாகும்.  திறந்த வெளி கருத்து பரிமாற்றம் ஒரு இனமாக அடையாளம் காண, காத்திரமான தொடர்பாடல் பேண என்று இதன் மாற்று கூடி கொண்டே போகின்றது.  பத்திரிக்கை நிறுவனத்தின் தலையீடு இல்லது தனி நபர் படைப்புகள் இணையம் வழியாக மக்கள் மத்தியில் நடைபெறும் விவாதங்களுக்கு வழி வகுக்கின்றது என்றால் மிகையாகாது.  தணிக்கை செய்யப்படாத இடையீட்டாளர்கள்  கட்டுபாடு அற்ற  செய்தி பெறப் படுகின்றது என்பதே இதன் பலவும் பலவீனவும்.

வலைப் பதிவுகள் என்றால் பொதுவாக தனிநபர் நாட்குறிபேடு போன்றது என்று இதன் தரத்தை குறைத்து மதிப்பிடப் பட்டாலும் வலைப்பதிவுகள் அதன் உள்ளடம் சார்ந்தும் அதன் எழுதும் நபர்கள் சார்ந்தும் பல வகை உண்டு. பொதுவாக வலைப்பதிவுகள் என்பது ஒரு தனிநபர் தன்  வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து எழுதுவது நாட்குறிப்பு வலைப்பதிவுகள் என்றும், தம்மை சார்ந்த அனுபவக் குறிப்பு  மட்டுமின்றி சமூக அக்கரையுடன் மற்று நபர்களின் சமூகத்தின் நலன் கருதியும் தங்கள் கருத்துக்களை பகிர எழுதும் வலைப்பதிவுகள் filter வகை என்றால்  நம்மை சாராத முழுக்க முழுக்க ஒரு கருத்து  அல்லது கோட்பாடு சார்ந்து பொது சமூகத்தின் வளர்ச்சிக்கு தகவல் பரி மாற்றத்திற்க்கு  என எழுதும் வலைப்பதிவுகள்  புத்தக வலைப்பதிவுகள் அதாவது note book வலைப்பதிவுகள்  என்று 3 வகை உண்டு. 

அரசியல், நாட்டு நடப்பு செய்திகள், தொழில்நுட்பம், கல்வி, இலக்கியம், பொழுது போக்கு அம்சம் கொண்ட  செய்திகள் என இவையின் உள்ளடக்கம் சார்ந்தும்;  கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் ஊடகவியாளர்கள், பொது மக்கள், வியாபாரிகள்,  குடும்ப தலைவிகள்  என எழுதுவர்கள் சார்ந்தும் வலைப்பதிவுகள் வகைப்படுத்தலாம்.   

1991 ல்,வலைப் பதிவுகள் ‘டிம் பேர்னர்’ என்பரால்  இணையத்திலிருந்து  கண்டு எடுக்கப் பட்டு வரிசைப்படுத்த பட்டது.   அன்றைய சூழலில் கணிணி-தொழில் நுட்பம் தெரிந்தவர்களால் மட்டுமே வலைப் பதிவுகள் உருவாக்கப் பட்டுள்ளது.   இன்றைய நவீன வலைப்பதிவுகளின் துவக்கம் ‘ஜெஸ்டின் ஹால்’என்ற அமெரிக்க  கல்லூரி மாணவனாலே 1994 ல் முன் வைக்கப்பட்டுள்ளது .  1999 ல் வெறும் 23 என்ற அளவில் இருந்த வலைப்பதிவுகள் 2009 ல் டெக்நோரடி என்ற தேடும் கருவியால் 133 மிலியன் வலைப்பதிவுகளாக உயர்ந்துள்ளது என  கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.  பிளோகர் போன்ற கருவியின் வரவுக்கு பின்பு   துரிதமாகவும் எளிதாகவும் வலைப்பதிவுகள் துவங்க வகை செய்துள்ளது, மேலும் இதன் வளர்ச்சி கண்டடைந்துள்ளது.

வலைப்பதிவர்கள் சிந்தனை வளம் மிக்கவர்கள் ஆகவும் தங்களுக்கு சுற்றியுள்ள உலகை தெளிவாக உற்று நோக்கவும் அதை பகிரவும் வலைப்பதிவுகள்  உதவுகின்றது என்றால் அது பொய் ஆகாது.

 

உலக மொழிகளில் 66 நாடுகளில் இருந்து வலைப்பதிவுகள் பதிவு செய்து  கொண்டிருந்ந்தாலும் இவையில் தமிழ் வலைப்பதிவுகளின் இடம் இன்றிமையானது. தமிழ்மணம் என்ற திரட்டி வழியாக 8000 மேல் வலைப்பதிவுகள் கண்டு எடுத்து சேர்க்கப் பட்டுள்ளது.  உலகத் தமிழர்களுக்கு சிறப்பாக ஈழத் தமிழர்களுக்கு தங்களை ஒரு குழுவாக அடையாளம் காட்டவும் தங்களுக்குள் சிறப்பான கருத்துரையாடல் பேணவும் வலைப்பதிவுகள் பெரிதும் உதவுகின்றது. தமிழ்மணம் திரட்டியில் ஈழ வலைப்பதிவுகள் என்றே தனி பக்கம் உள்ளது.  4 வது ஈழப் போர் வேளையில் பத்திரிக்கைகளால் உண்மையான செய்தி மறுக்கப் பட்ட  போதும் ஈழ மக்களின் நோக்கம், உண்மைகள் மழுங்கலடிக்கப் பட்ட போதும் தங்கள் நிலைபாட்டை நிலைநாட்டவும் தங்கள் கருத்துக்க,ள் சோகங்கள் உலகுடன் பகிர்ந்து கொள்ளவும் வலைப்பதிவுகள் பெரிதும் உதவியது.

வலைப்பதிவுகள் என்பது கல்லூரி படிப்புகளிலும் ஒரு பகுதியாகவும் ஆராய்ச்சிக்கு உள்படுத்தபட்டது  மட்டும் அல்லாது பெரும் ஊடகங்களும் தகவல் பெறுதலுக்கும் பரிமாற்றத்திற்க்கு பதிவுகளை சிறந்த  தளமாக பயண்படுத்துகின்றனர்.

வலைப்பதிவுகளின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகினாலும் 2004 துவங்கி தான் தமிழக தமிழர்களை  வந்தடைந்தது. இருப்பினும் தற்போதும் வலைப்பதிவுகள் பல நபர்களுக்கு  அறிமுகம் இல்லாது தான் உள்ளது.  ஒரு வலைப்பதிவராக சிறந்த எழுத்தாளராக அல்லது திறமையானவராக இருக்க வேண்டும் இல்லை, தாங்கள் கண்டவையே அனுபவித்தவயே உண்மையாக இதயபூர்வமாக கதைக்க வேண்டும் என்ற ஆவல் மட்டுமே போதுமானது.  எனக்கு தெரிந்த நுட்பங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் வலைப்பதிவுகள் ஆரம்பித்து தங்கள் அடையாளத்தை பதிய வேண்டும் என்று இப் பதிவை பகிருகின்றேன். நீங்களும் நாளை வலைப்பதிவரே!!
 
நீங்கள் blogger.com என்றும் உள்நுழையலாம். அல்லது gmail கணக்கு வழியாக போய் more என்றதில் சொடுக்கினால் வரிசையாக சேவைகள் வரும் அதில் even more என்பதை சொடுக்கினால் இந்த பக்கத்தில் வந்து விடுவீர்கள்.



பிளோகர்(blogger) என்ற குறியீடை சொடுக்கவும்.


You please click on ‘Get Started’


Fill the following column. கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களை  நிரப்ப வேண்டும்! After finished click on  the ‘continue’ button



You come to this page! உங்கள் வலைப்பதிவுக்கு நீங்கள் கொடுக்க நினைக்கும் பெயரை குறிப்பிடவும்!

You come to this page, choose the template whichever you like. உங்கள் பதிவின் உருவத்தை தேர்வு செய்யலாம்.


Now you come to climax. Then you  click on ‘start blogging’




‘start blogging’. என்று சொடுக்கும் போது எழுத வேண்டிய கட்டம்/பெட்டி வருகின்றது.

You can now write!!!! நம் ஆக்கத்தை பதிவு செய்து விட்டு பப்லிஷ் என்றதில் சொடுக்க நம் பதிவு வெளியிடப்படுகின்றது.

காண்க பதிவு(view post) என்பதை சொடுக்குவது வழியாக உங்கள் பதிவை கண்டு பேரானந்தம் அடைவீர்கள்!
ஆகா…………………………….உங்கள் பதிவை உருவாக்கி விட்டீர்களா. 




கலக்குங்கள்.வாழ்த்துக்கள்!!!

6 Jun 2011

தொலைந்த இணையமும் வேட்டையாடிய நினைவுகளும்!


  
கடந்த சில நாட்கள் இணையம் இல்லாத சூழல். ஒரு பக்கம் நல்லதே  என்று எண்ணினாலும் அப்பாவுக்கு, தன் கவலையெல்லாம் மறக்க செய்த பிராந்தி குப்பி  என்பது போல்  இணையம் எனக்கு போதையாகியதோ என்றும் நம்ப வைத்தது என் நிலை. 

                                                                                                                                     நண்பகளை காணாது கதைக்காது இருந்தது சொல்லி கொள்ள இயலாத துன்பம் தந்தது மட்டுமல்ல இனம் தெரியாத ஒரு துயர் கூடவே ஒட்டிகொண்டதாகவும் உணரப்பட்டேன்.   ஒரு சூனியமான நிலையில் பயணிப்பது போன்று உணர்ந்த போது தான் இவை தரும் துயரம் அளவற்றது என்று புரிந்தது.


பல ஆக்க பூர்வமான வேலைகள் செய்து முடிக்க இணையம் தடையாக இருந்தது என்றால் அது பொய்யாகாது.    பல நாட்களில் நேரத்தோடு எடுக்க வேண்டிய உணவை மறக்க செய்தது,  நிம்மதியான தூக்கத்தை கெடுத்தது. இணையத்துடனே சங்கமித்து நடுநிசி பேய் போல் இணையத்துடன் பயணித்ததால் அதிகாலைகளும் குருவிகல் தரும் ஒலியும் தெரியாதே என்னை விட்டு மறைந்தது.                                                                                                                                                            நாம் நேசிக்கவும் நம்மை நேசிக்கவும் உறவுகள் உண்டு என்பது இன்பமானதும்  தன்னம்பிக்கை தருவதாகவும் இருந்தது.  தனிமையில் ஒரு அறையில் கணிணி முன் இருக்கும் போதும் ஒரு கூட்டத்தில் இருந்து அரட்டை அடித்து கொண்டு  மகிழ்ச்சியான நொடிகளாக இருந்தது. சில பொழுது சில கதைப்புகள் கருத்துரையாடல்கள் நினைத்து நான் தன்னை தானே சிரித்து மாட்டி கொண்டதும் உண்டு.                                                                                                                          


ஆனால் பல சிக்கலான பிரச்சனைகளுக்கு வழி கிடைக்க உதவியது.  இக்கட்டான வேளையில் நம் கவலைகளை பகிர்ந்து கொள்ளவும் சில பொழுது தெளிவு கிடைக்காத பிரச்சனைகளுக்கு தெளிவு பெறவும் உதவியது .  உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒருபோதும் சந்திக்க இயலாதவர்களிடம் நட்பில் இணை பிரியா உறவை பேணுவதும் மகிழ்ச்சியை தந்தது.  புதிய அறிவை நாம் பெறவும் நம் கருத்துரையாடல் சிந்தனைகளை பகரவும் வழிவகுத்தது என்றால் மிகையாகாது. 

ஆனால் இணையம் இல்லாத பொழுதுகள் மாதங்களாக செய்து முடிக்க இயலாத பல வேலைகளை முடிக்க நேரம் தந்தது என்றால் அதுவே மெய்.  செடிக்கு தேவையான அளவு தண்ணீர் நேரத்திற்க்கு, நிதானமாக ஊற்றவும், கருகிய இலைகள் தூத்து துப்புரவாக்கவும், தேவையான உரம் இட்டு அதன் அருகில் நின்று ரசித்து பார்த்து கதைக்கவும் நிறையவே நேரம் கிடைத்தது.  2 மாதம் முன்பே தறையிறக்கி வைத்திருந்த பிபிசி வரலாறு காணொளி காணவும் நேரம் கிடைத்தது.  அடுக்களை பாத்திரங்கள்  நேரா நேரம் கழுகி அடுக்கவும்,   வாசிக்க நேரம் கிடைக்காது;   2 மாதம் முன்பு வாங்கி வைத்திருந்த இரண்டு நாவல்கள், புத்தகங்கள் வாசிக்கவும்  நேரம் கிடைத்தது.

எல்லாவற்றிர்க்கும் உபரி குழந்தைகளுடன் இன்னும் பல நல்ல நேரங்கள் செலவிடவும் என்னவருடன் பேசி பேசியே சண்டை இழுக்கவும் நேரம் கிடைத்தது. மறந்து போன உறவினர்கள் வீடு போய் நலம் விசாரிக்கவும் நிறையவே நேரம் கிடைத்தது.

இருப்பினும் நேற்று மறுபடியும் இணைய இணைப்பு பெற்று  என் நண்பர்களிடம் கதைத்த பின்பு தான் போன ஜீவன் திரும்ப பெற்றது போல் உணர்ந்தேன்.  எப்படியாகிலும் இணையம் என் இணையற்ற நண்பர் தான் . இந்த பதிவு என் உயிரினும் மேலான  நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் சமர்ப்பணம்!  

3 Jun 2011

காதல்........................மோதலா?



Add caption
காதல் என்பது வெள்ளப் பெருக்கு போன்றது.   யாரிடன், ஏன், எப்போது  வருகின்றது என்பதற்க்கு பதில் இல்லை என்பதால் காதல் இல்லை என்று இல்லை!  காதலை தூய அன்பு என்று அர்த்தம் கொள்பவர்களும் உண்டு, காதலை காமத்துடன் இணைத்து  கதைப்பவர்களும் உண்டு, காதல் என்பதே ‘இல்லை’ என்று சொல்பவர்களும் இல்லாதில்லை.  ஆனால் காதலை ஒரு வரையறைக்குள் கொண்டுவர இயலாததாக இருக்கின்றது என்பது மட்டுமல்ல நிலையற்றதாக இருக்கின்றது என்பதும் இதன் தனி அம்சமே.

காதலால் பல சாம்ராஜியங்கள் அழிந்தன, பலவை உருவாகியது, பல யுத்தங்கள், இலக்கியங்கள் காதலால் வந்தன. நெப்போளியன் ஜோசபினுடன் என்று காதலில் தோற்றாரோ அன்றே அவருடைய சாம்ராஜியவும் அழிந்தது, அதே போல் ஒரு தமிழ் பெண்ணின் காதலே ஈழத் துயரின் தொடக்கம் ஆகியது. காதலால் தாஜ்மஹால் என்ற அழியாத அடையாளத்தை உருவாக்கினார் ஆனால் அதே காதல் அவரை பட்டிணி இட்டு சாகவும் வழி வகுத்தது,  பைபிளில் பொல்லாத காதலால் கொலைகாரனாகிய தாவிதையும் அவன் கண்ணீர் வாழ்க்கையும்  காணலாம்.  

ஒரு நபர் இன்னொருவரை விரும்புவதற்க்கும் நேசிப்பதற்க்கும் அவர் மேல் கொண்டுள்ள மதிப்பு  உயர்ந்த எண்ணமாக இருக்கலாம் ஆனால் அதுவே காதல் என்று முடிவுக்கு வர இயலாதது.  காதல் அதையும் கடந்த உணர்வுபூர்வமான ஒரு நிலையாகும்.  நாம் ஒருவரை விரும்ப, நம் விருப்ப- வெறுப்பு, சமூக சூழல், மனநிலை, ஆளுமை,   உயிரியல்-இராசயண மாற்றங்களும் காரணமே.  தன்மை கொண்டு நோக்கும் போது காதலுக்கு ஒரு நிலையான தன்மை இல்லாதது என்று தெரியும் போது அன்பு ஒன்றே என்றென்க்கும் அழியாததும் முடிவில்லாததுமாக இருக்கின்றது என்பது பலருடைய கருத்தாகவும் விளங்குகின்றது.

காதலுக்கு முதல் சுழி இடுவதும், அதே போல் காதல் தோல்வியால் துவண்டு விழுவதும் ஆண்களே.    தன் தாயை ஆண் பெண் இரு பாலர் இரண்டு விதத்தில் பார்க்கின்றனர்.  வளர்ந்த பெண் அம்மாவை தன்னை போல் ஒரு சக மனுஷியாக பார்க்க துவங்கும் போது ஆண்களுக்கு அம்மா என்பது அன்பையும்  பாசத்தையும் சேர்த்து தந்து தன் உணர்வவோடு கலந்த உயர்ந்த உறவாக காண்கின்றனர்.  வளர்ந்து விட்ட நிலையில் புதிய ஒரு பெண்ணை தன் வாழ்க்கையில் சந்திக்கும் போது அதே அன்பையும் பாசத்தையும் தன் காதலியிடம்/மனைவியிடம் பெற துடிப்பதாக காணலாம்.  ஒரு நேர்காணலில் நடிகர் கமல் ஹாசன் தன்  காதல் வாழ்க்கையின் தோல்விக்கு காரணமாக காதலியில் தன் அம்மாவின் பாசத்தை காண்பதே என்று குறிப்பிட்டார்.  சில முரட்டு கணவர்களை   பெண்கள் தாய்மை அன்பில் தன் பக்கம் ஈர்ப்பதின் காரணம் கூட இதுவே.

ஒரு முறை விஜய் தொலைகாட்சியில் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் அம்மா என்பவர், தன் அன்புக்கு பணிவிடைக்கு கணக்கு பார்ப்பதில்லை மனைவிகளின் அன்போ பிரதிபலன் பார்த்தே  இருக்கின்றது ஒரு கணவர் குறிப்பிட்டது நினைவுக்கு வருகின்றது. ஆண்கள் மனதில் உறைந்து கிடக்கு அம்மா என்ற அழியாத உறவை, அன்பின் பிம்பத்தை; மனைவி/காதலி என்ற கண்ணாடி வழியாக பார்க்க துடிக்கின்றனர்.

காதல் ஒரு வகையில் ஆண்களின் பலவீனமே!  காதல் தோல்வி என்பது (நேரம் போக்கு, விளையாட்டாக காதலை காண்பவர்களை தவிர்த்து) கள்ளம் கபடமற்ற ஆழமான   உணர்வுக்கு அடிமையானவர்களுக்கு பெரும் துயரே!  அவர்கள் வாழ்க்கையின் பாதையை மாற்றும் காரணியாக பல பொழுதும் அவர்கள் உயிரை குடிக்கும் ஏன் சில பொழுது தத்துவ ஞானியாக மாற்ற கூடியதாகவும் காதல் மாறுகின்றது.  பெண்களை போல் காதல் தீயில் இருந்து எளிதாக தப்பித்து கொள்ள இயலாது ஆண்களே எரிந்து சாம்பலாகின்றனர்.

காதல் பிறப்பது/ துவங்வது எங்கு ஆகினும், சென்று சேர வேண்டியது நிச்சயமாக திருமணத்தில் தான் இருக்க வேண்டும்.  திருமணம் என்பது   அங்கிகாரம் மட்டுமல்ல வெவ்வேறு இரு நபர்கள் பரிபூர்ணமாக தங்களை ஏற்று கொண்டு தங்கள் இதயத்தால் இணையும் போது காதல் தெய்வீக தன்மை அடைகின்றது.  ஏற்று கொள்வது என்பது இருவரும் பலத்தையும் பலவீனத்தையும்; நன்மையும் அவர்களிலுள்ள தின்மை யும்  ஏற்று கொள்ளுகின்றனர் என்றே அர்த்தம் கொள்ளப்படுகின்றது.

ஆனால் பல பொழுதும் திருமணங்கள் என்பது காதலின் மூடு விழா கொண்டாடும் நிகழ்வாக  பரிணமிக்கின்றது என்பதே உண்மை.  காதலால்  மறையப்பட்ட பல நல்லதும் கெட்டதும் ஆன விடயங்கள் திருமணம் ஆன பின்பு தெளிவாக விளங்குவதும்,  திருமணம் என்பது தங்களை மாறி மாறி குற்றம் செலுத்தவும், கட்டுப்படுத்தவும், ஆளவும்-அடக்கவும்  நிபந்தனையற்ற அனுமதி சீட்டாக மாறிய போது காதல் கசந்து  திருமணம் என்பது அர்த்தமற்ற ஒரு சடங்காக மாறுகின்றது.  நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, புரிதல், அங்கிகாரம் என உயர் பண்புகள் இருக்க வேண்டிய இடத்தில் சந்தேகம், சண்டை சச்சரவுகள் என போர் தொடுக்கும் தளமாக மாறுகின்றது திருமணம்!!   கல்யாணத்தில் காதல் ஒளிந்து கொள்ள உறவுகள் கசந்து உணர்வு பூர்வமான ஒன்றிப்பு இல்லாது வெறும் உடல் கூடலாக மாறி காதலின் வெப்பமோ, ஆவேசமோ அற்ற உயிரற்ற வாழ்க்கையாகி மாறுகின்றது திருமண வாழ்க்கை.  

சமூக சூழல் காரணமாக பல பொழுதும் திருமணத்தின் பின்பு காதலை வெளிப்படுத்த இரு நபர்களும் முயற்ச்சி எடுப்பது இல்லை.  ‘இனி எனக்கு தான்’ என்ற அதீத தற்காப்பு நிலையும் புகுந்து விட ஆண்மை, ஆணவம், ஆளுமை, எல்லாம் ஒன்று சேர காதல் கசந்து திருமண பந்தம்  கேலிக்குரியதாக மாறுகின்றது.  பல ஆண்கள் திருமணம் பின்பு மனைவிக்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை உணர்வதில்லை.  இந்த நிலையை உரமிட என்றே பெண் பித்தன், பெண்டாட்டி தாசன் என்ற கேலி பேச்சும் ஒன்று சேர காதலை வெளிப்படுத்தாது காதல் வாழ்வுக்கு முழுக்கு போட்டு விடுகின்றனர்.

காதல் என்பது உடல் சார்ந்த உறவு என்பதை விட  அன்பின் பிரதிபலிப்பாக, உணர்வுள்ள உறவாகவும்,  தன்னை முழுமையாக அங்கிகரிக்கும், அளவற்ற அன்பு செலுத்தும் உறவு என எதிர் பார்த்திருக்கும் பெண்களுக்கு திருமணம் என்பது உப்பு சப்பற்ற அடிமை வாழ்க்கை என்ற உணர்வு தலை தூக்க விடுதலை என்ற இலக்கை நோக்கி வேகமாக செல்ல துணிகின்றனர்.

பல காதல் மனைவிகளுக்கு பற்றி கொள்ளும் சந்தேகம் என்ற நோயும் சேர்ந்து ஆட வாழ்க்கையே அவதாளமாகிஅபஸ்வரம் ஆகி மாறுகின்றது சில வீடுகளில்.  பல மனைவிகள் காதல் கணவர்களை தங்கள் வாழ்நாள் அடிமை என்றும் தன்னிடம் போல் மற்றவர்களிடமும் காதலில் விழுந்து விடுவாரோ என்ற பயத்தினாலே இவர்கள் கொண்டுள்ள காதலை அழகாக வெளிப்படுத்தாது அழித்து விடுகின்றனர்.  இதனால் பல ஆண்கள் காதலில் கண்டவரல்ல தன் மனைவி இப்போது என்று தெரிய வரும் போது வாழ்க்கையில்  இருந்து ஓடி ஒளிக்கவும், சிலரோ தற்கொலை முடிவை தேடுவதும் இன்னும் பலரோ தத்துவ ஞானிகளாக மாறி “காதல் என்பது அங்கிகரிக்கப் படாத தெய்வீகம் திருமணம் என்பது அங்கிகரிக்கப் பட்ட விபசாரம்” என்ற முடிவை எட்டுகின்றனர்.



இயற்க்கையால் ஒரு போது சந்திக்கயிராத இரு துருவங்களான வித்தியாசமான ஆசாபாசங்கள் கொண்டு படைக்கப்பட்ட ஆண் பெண் இருவரும்; காதல் என்ற ஒரே உணர்வால் ஒரே கோட்டில் பயணித்து ஒரே புள்ளியில் சேர்ந்து  திருமணம் என்ற பந்ததால் ஒன்றாகி அதே நிலையில் நிலைத்து ஒன்றாய் இருப்பது தீராத தூய வெள்ளப் பெருக்கு போன்ற காதலால் மட்டுமே!!!



நேசம் மரணத்தை போல் வலியது;
அதின் தழல் அக்கினி தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கின்றது.
 திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது,
வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது;
ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்திற்க்காகக் கொடுத்தாலும், அது அசட்டை பண்ணப்படும்.
                                                                                உன்னதப் பாட்டு(8:6)




                                      For love is as strong as death,
Its burns like blazing fire,
Like a mighty flame.
Many waters cannot quench love
Rivers cannot wash it away.
If one were to give all the wealth of his house for love,
It would be utterly scorned.
                               Song of Songs(8:6)-Holy Bible.

31 May 2011

ஆண் பாவம் பொல்லாதது!!!


ஆண்கள் என்றாலே ஆணாதிக்கத்தின் முகமுத்திரை, எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள், எதை பற்றியும் பயம் இல்லாதவர்கள் என்ற கருத்து உண்டு.  ஆனால் உண்மை அதுவல்ல. பல வீடுகளில் ஆண்களின் பாடு திண்டாட்டமாகவே உள்ளது.  இதிலும் 45 வயதிற்க்கு மேல் இளைஞர் அடையாளம் மறையவும் முதுமை எட்டி பார்க்கும் ஆண்களின் நிலை படு பரிதாபமே. ஒரு பக்கம் குடும்ப பொறுப்பு அவர்கள் கழுத்தை நெரிக்க மறுபக்கம் அவர்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்பு தராத சூழலில் வாழவும், சாகவும் இயலாது  வாழும் பல ஆண்களை காண நேரிடும் போது வருத்தமே மிஞ்சுகின்றது. அம்மா-பாசம், சொந்தங்கள் என  தன்னை சுற்றி பலர் இருந்த சூழலில் இருந்ந்து ஆண்கள் தன் குடும்பம், மனைவி, குழந்தைகள் என்ற சிறு வட்டத்தில் வந்து சேரும் நேரம் அவர்கள் வயது 50 வயதையும் நெருங்கி விடுகின்றது.  குழந்தைகள் தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட சூழலில் ‘பிள்ளை பூச்சியாக’ இருந்த மனைவியும் பூதமாக மாற பல ஆண்கள் எங்கு ஓடலாம் என தத்தளிக்கின்றனர்.


பெண்கள் பயந்த குணம் படைத்தவர்கள் என்று எடை போட, வெளிப் புறமாக பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பினும் பிறவியிலயே ஆண்களை விட எதையும் தாங்கும் துணிவான மன-தைரியமுள்ள பெண்கள்; இன்னும் மத்திய வயதை கடக்கும் வேளையில் குழந்தைகளும் தலைக்கு மேல் வளர்ந்து விட துணிவு அசூர வளர்ச்சி கொள்கின்ற போது ஆண்களோ தனிமை, மரணம், வாழ்க்கை போராட்டங்கள் கண்டு அதீதமாக பயப்படுவாதாக சில ஆராய்ச்சியாளர்கள்  கண்டு பிடித்துள்ளனர்.  மேலும் வயது கூடும் தோறும் பெண்களின் தாய்மையும் சேர்ந்து வளர ஆண்களோ அப்பா என்ற உணர்வில்(father hood) குறைவு படுவதாகவே கண்டு பிடித்துள்ளனர்.

பேருந்து பயணங்களில் தாத்தா பாட்டிகள் பல பொழுதும் பக்கம் பக்கம் இருக்கை வேண்டும் என்றும் சண்டையிடுவதை மதுரை-கம்பம் பேருந்தில் பயணம் செய்யும் போது கண்டுள்ளேன். நமக்கு சிரிப்பை வரவைத்தால் கூட அவர்கள் மனதளவில் கொள்ளும் பேரானந்தம் அளவிட முடியாததே!!  ஆனால் பல பிள்ளைகள் தாங்கள் இருவரும் வேலைக்கு போகும் சூழலில் தங்கள் குழந்தைகளை பராமரிக்க என தாத்தாவை ஒரு வீட்டிலும் பாட்டிக்கு இன்னோரு மகன் வீட்டிலும் அடைக்கலம் கொடுப்பார்கள். இன்னும் சில வீடுகளிலோ கணவர்கள் தங்கள் நல்ல வயதில் சம்பாதிக்கும் பணத்தை சேகரித்து வைக்காது வயதான காலத்திலும் இன்னும் பணம் சம்பாதித்து கொண்டு வா என்று விரட்டி விடும் அவலவும் உண்டு.   எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் தன் 60 வயதிலும் ஒரு முதியவர் தான் கட்டிய வீட்டில் இருந்து கொண்டே தன் மகனுக்கு சாப்பாடுக்கு பணம் கொடுத்து வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப் படுகின்றார். இதற்க்கு துணை போவதும் அவருடைய மனைவி தான்.

சில வீடுகளிலோ ஆண்கள் உணர்வே அற்ற ஜடம் என்றும் எண்ணுவது உண்டு.  சில  நண்பர்களிடம் நான் கதைக்கும் போது மாமா மாமியிடமும் போனை கொடுங்கோ கதைக்க வேண்டும் என்று கூறினால் அவ கெடக்காம்மா ஏதோ கட்டி  பிள்ளைகளும் உள்ளது ஆணவம் பிடித்தவா என்று நொந்து கொள்வார்கள்.  கணவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்பது, ஒன்றாக உணவு  எடுப்பது,  ஒன்றாக நடை பயணம் செல்வது  என்று தங்கள் பாசத்தை பெருக்க வேண்டும். ஆனால் பல வீடுகளில் எலியும் பூனையும் போன்ற உறவே நிலவும். பார்வையாலெ மிரட்டுவது, கேலி செய்வது என்று ஆண்கள் வாழ்க்கையை ஆக்கிரமித்து விடுவர் மனைவிகள்.   இதனாலே பல ஆண்கள் ஒரு குப்பி பிராந்தியை பச்சை தண்ணீர் போல் குடித்து விட்டு மதி மயக்கத்தில் தங்கள் நாட்களை கடத்தி செல்கின்றனர்.  

ஆணாதிக்கம் என்று நாம் கதைக்கும் அளவுக்கு பெண்கள் கொள்ளும் பெண்ணாதிக்கத்தை பற்றி நாம் சிந்திக்க, கண்டிக்க மறந்து விடுகின்றோம். இன்றைய பெண்களும் வேலைக்கு போய் தன்நிறைவு அடைந்த நிலையில் கணவர்கள் அனுமதி பெற்ற வேலைக்காரர்களாகவும், பாதுகாவலர்களாகவும், தங்கள் குழந்தைகளின் அப்பா என்ற பதவி மட்டுமே கொடுக்கப் படுகின்றது.   எங்கள் பக்கத்து வீடு கட்டி கொண்டிருந்த போது அங்கு காவலுக்கு என 70 வயது தக்க தாத்தாவை அமர்த்தியிருந்தனர். அவர் பெறும் ஊதியம் 4000 ரூபாய் பாட்டி கைக்கு தாத்தா கைக்கு வரும் முன்னே கிடைக்கும் வகையில் ஏற்பாடாக்கி வேலைக்கு அனுப்பியிருந்தனர்.  தாத்தா கீழை விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத ரகம்.  அவர் வேலை பார்த்தாலும் கூட அவருடைய மாடு, ஆடு, பேரபிள்ளைகள் வீட்டு கவலையிலே இருந்தார். ஒவ்வொரு விடுமுறைக்கு செல்லும் போது இனி வரமாட்டேன் அம்மா பாட்டி போக வேண்டாம் என்று சொல்லி விடுவாள் என்று செல்வார் ஆனால் போன வேகத்திலே சுவரில் அடித்த பந்து போல் ஒரு பை அரிசியுடன் வந்து விடுவார்.  அந்த முதியவரின் கவலையை மகன்களுடன் சேர்ந்து மனைவி திட்டுவதாகவே இருந்தது.

பல பெண்கள் வயது கடந்த கணவர்கள் கொண்டு இனி என்ன தேவை என்று வார்த்தைகளாலும் செயலாலும் மதிப்பது இல்லை. ஆண் பிள்ளைகள்  உள்ள அம்மாக்களின் செயல் சொல்லவே வேண்டாம்.   இந்த குணம் ஏழை பணக்காரர்கள் என்று பாகுபாடு இல்லாது பெண்களால் முதிர் வயது கணவர்கள் துன்பத்திற்க்கு ஆளாகின்றனர்.  உணர்வு பூர்வமாக ஒரு உறவை பேணாது கடவுள் பக்தி, பிள்ளைகள் பாசம், பேரபிள்ளை பாசம் என்ற சில முகமூடிகள் அணிந்து கொண்டு பழைய பாத்திரம் போல் ஒதுக்கி வைத்து விடுகின்றனர் சில பெண்கள்.  சில பண நடமாட்டம் உள்ள ஆண்கள் இவர்களை தண்டிக்க வேண்டும் என்று நினைத்து இன்னும் சில சிக்கல்களில் மாட்டி  தங்கள் மரியாதையும் இழந்து வாழும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
இன்னும் சில கடவுள் பக்தை பெண்களின் மனநிலை இன்னும் கொடுமையானது. அவர்கள் கண்ணில் கணவன் பேய் போல் தான் தெரிவார்.  இதில் ‘கணவன் கண் கண்ட தெய்வம்’ என்று சொல்லும் ஹிந்து மதமோ ‘யேசு நாதர் சபைக்கு தலை என்பது போல் மனைவிக்கு கணவர் தலையாக இருக்கட்டும்’ என்ற அறிவுறுத்தும் கிருஸ்தவ சமய பெண்களும் ஒருபோலவே உள்ளனர்.  பல வீடுகளில்  வயது கடந்த ஆண்களை அவர் மனைவி மட்டுமல்ல அந்த வீட்டு பேரபிள்ளைகள் எதிர்வீட்டு சோமாரி-பேமாரி என எல்லாரும் கிழவர் என்று அழைப்பதே நடக்கின்றது.

ஒரு பெரும் பணக்காரர் உறவினர் வீடு சென்ற போது அவர்கள் வீட்டு ‘பொமேரியன் நாய்க்கு’  இருக்கும் செல்லம் அவர் கணவருக்கு கொடுப்பதாகவே தெரியவில்லை.   நாய்க்கு பேன்-செள்ளு  பார்த்து விட்டு கொஞ்சும் அந்த அம்மா; கணவருக்கு நாய்க்கு என்பது போல் சாப்பாட்டை  மேசையில் மூடி வைத்து விட்டு பக்கத்து வீட்டு மாமியுடன் கதையடிக்க சென்று விடுவார். 

சமீபத்தில் ஒரு பெரியவர் 70 வயது கடந்து மரித்த போது வீடியோ படம் எடுத்து பல பாதிரியர்களில் பிரார்த்தனைகளுடன் சிறப்பாக அடக்கம் செய்து அந்த வீட்டு நபர்கள் கண்ணீரும் கம்பலுமாக துக்கம் கொண்டாடினர்.  அந்த முதியவர் பெரும் பணக்காரர் மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தில் ஒரு சட்டம் படிக்காத நீதியரசராகவே இருந்தார்.   பல சண்டைகளுக்கு தீர்ப்பு வழங்கினார். ஆனால் அவருக்கு 65 வயது நெருங்க மனைவியிடம் கரண்டி அடி வாங்குவதும் மருமகளிடம் கெட்ட வார்த்தையால் திட்டு வாங்குவதும் என துண்டாடப்பட்டவர் கடைசியாக அவர் செய்யும் தொழில் எல்லாம் அவர் மகன்களின் கட்டுபாடில் கொண்டு வரப்பட்டு;  நீதிபதி நாற்காலியில் இருந்தும் வலுகட்டாயமாக கீழை தள்ளப் பட்டு கடைசி நாட்களில் மனநிலை  மருத்துவமனையில் காலம் கழிக்கும் சூழலுக்கு தள்ளப் பட்டார்.   அவர் இறந்த பிறகு அவரை புகழ்ந்து, கண்ணீர் விட்ட பிள்ளைகள் அவர் உயிருடன் இருந்த போது அவரிடம் பரிவுடன், அன்புடன் பேசினார்களா என்று தெரியவில்லை!

 சமீபத்தில் என் நெருங்கிய உறவுகாரர்கள் வீட்டில் சென்றிருந்தேன். அந்த வீட்டு பெரியவர் 20 வருடம் முன்பு 4-5 வேலைகாரர்கள் சகிதம் கடை, நிலம் போன்றவற்றுக்கு முதலாளியாக இருந்து இன்று மகனிடம் எல்லா பொறுப்புகளும் கொடுத்த நிலையில் அவர்  பேரிலுள்ள சொச்சம் வங்கியிலுள்ள பணத்தையும் மகனிடம் கொடுக்க சொல்லி தன் மனைவியிடமே திட்டு பட்டு உயிர் வாழ்கின்றார். ஒரு காலத்தில் கணவரிடம் பிடிக்குள் இருந்த மனைவிகளால் எப்படியாக இவ்விதம் நடந்து கொள்ள இயல்கின்றது என்பதே புரியாத புதிர்!

நெல்லையில் பத்திரிக்கையாளர் சங்கம் ஒரு புகைப்படம் கண்காட்சி நடத்தியது, வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் அறிவித்திருந்தனர்.   நாங்கள் பல மைல்கள் பயணம் செய்து படம் பிடித்து வந்தோம். எங்கள் உடன் படித்த மாணவி அவருடைய பக்கத்து வீட்டு முதியவர் தன் மனைவியை குளிப்பிப்பதை படம் பிடித்து வந்திருந்தார்.  இந்த படத்தில் என்ன உள்ளது,  பொழைப்பத்த தாத்தா என்று எண்ணி கொண்டேன் என் மனதில்.  அத்தோழியிடம் ரகசியமாக கேட்டேன் இந்த போட்டோ செட்டப்பா என்று.  அவர் கூறினார் இந்த காட்சி 4 வருடமாக காண்பதாகவும் பாட்டி குளிக்க சோப்பல் கொண்டவர் என்றும் தாத்தா 2 நாட்களுக்கு ஒரு முறை சுள்ளி கம்பு சேகரித்து வெண்ணி வைத்து நடக்க இயலாத பாட்டியை தூக்கி வந்து குளிப்பிப்பதாகவும் பாட்டி முதியவரை திட்டி கொண்டே குளிப்பதாகவும் கூறினார்.

500 அதிகமான புகைப்படங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்த அந்த மண்டபத்தில் பார்வையாளர்களை சிறப்பாக முதியவர்களை கவர்ந்த புகைப்படம் அதுவாகவே இருந்தது.  சிலர் அந்த புகைப்படம் பக்கம் நின்று தொட்டு பார்த்து உண்மை தானா என்று உறுதி படுத்திகொண்டனர் சிலரோ அப்படம் விட்டு நகராது நோக்கி கொண்டே நின்றனர்.  மேடையில் பேசிய தலைவர் (முதியவர்) அன்புக்கு எடுத்து காட்டாக அப்படத்தை எடுத்து கூறினார்.

மனிதன் நேசிக்கவும் நேசிக்கபடுவதற்க்கும் வயதோ  நிலையோ வரம்பல்ல.  அவன் எவ்வயதிலும் நேசிக்கப் பட விரும்புகின்றான் சிறப்பாக மனைவியிடம் தள்ளாத வயதிலும் அன்பு, பாசம் எதிர்பார்க்கின்றான் என புலன்பட்டது.  பல பெண்கள் கணக்கு பார்த்து பழிவாங்கும் காலமாகாவே பார்க்கின்றனர் முதுமையை.  அவருடைய கூடாத பருவ வயது கள்ள காதல், தன் அம்மாவுடன் சேர்ந்து தன்னை துண்புறுத்திய நாட்களுக்கான தண்டனை காலமாக எடுத்து செல்வதும் வேதனையை.   வெறுப்பு, புறக்கணிக்கல், ஏளனம் என்ற தீயால் தங்கள் கணவர்களை சுட்டு எரிக்க நினைத்தால் ஒரு போதும் ஆண் பாவத்தில் இருந்து தப்பிக்கல் ஆகாது என்று உணர வேண்டும்.  புல் போன்று சடுதியில் காயும் இவ்வாழ்வில்  அன்பு, காதல், நேசம் பாசம் மட்டுமே என்றும் வாழ்வது என்பதையும் மறக்கல் ஆகாது!!!!

30 May 2011

தமிழனை இளிச்சவாயனாக்கும் தமிழக ஊடகம்!


சமீப நாட்களாக இணையத்துடன் சங்கமித்துள்ளதால் செய்தி தாள், வார இதழ் இணையம் வழி பெறப்படுவதால் பத்திரிக்கைகள் பணம் கொடுத்து வாங்கி வாசிப்பதை மறந்திருந்தேன்.  சுயபுராணமற்ற கருத்தாக்கமுள்ள பல கட்டுரைகள் மற்றும் செய்திகள் இணையம் வழி தேடி கண்டுபிடிக்க இயல்வதால் வலையே சரணம் என்று சமீப நாட்களாக போய் கொண்டிருந்தது என் வாசிப்பு உலகம்.

கடந்த நாளில் ஆனந்த விகடன் என்ற பத்திர்க்கை வாங்கும் சூழலுக்கு தள்ள பட்டேன். ஒரே பத்திரிக்கை அலுப்பை தரும் என்பதால் தொடர்ந்து ஒரே பத்திக்கை வாசிக்கும் வழக்கம் இல்லாதிருந்தது எனக்கு.     ‘சண்டே இந்தியன்’ போன்ற பத்திரிக்கை செய்திகள் மேட்டு குடி மக்களுக்கு என ஆகிய போது ஜூனியர் விகடன், நக்கீரன் போன்றவை  கொலை கற்பழிப்பு  புறம்-கூறுதல் என தன் வாசகர்களை இட்டு சென்ற போது; ‘இந்திய டுடே’ போன்ற பத்திரிக்கைகள் சாரமற்ற அரசியல் விவாதித்த போது, குமுதம் குங்குமம் போன்றவையோ  சினிமா செய்திகளாகவே வழங்கியது ஆனந்த விகடன் போன்றவை கொஞ்சம் துணிவுள்ள, சிறப்பாக ஆளும் வர்கத்தை கேள்வி கேட்கும் செய்தி தருகின்றது என கண்ட பொது ஆனந்த விகடன் பரவாயில்லை என்ற தோன்றல் அதுடன் ஒரு ஈர்ப்பு உருவாக காரணமானது.

இந்த வாரம் ஆனந்த விகடன் ஒரேடியாக தன் சுய புராணம் பாடுவதை கண்டபோது ஆனந்த விகடன் மேல் இருந்த பிரியவும் வெயிலை கண்ட பனி போல் உருகுவதாக உணர்ந்தேன்.  15 ரூபாய்க்கு வாங்கி 15 மணி நேரம் வாசிக்க தகுந்த செய்திகள்   பெற இயலவில்லை என்பதே என் வருத்தம்! வரட்சியான குளறுபடியான எழுத்து நடை ஆழமற்ற அர்த்தமற்ற செய்திகள் பத்திர்க்கை நேர்த்தியற்ற வார்த்தை பிரயோகம் தற்பெருமை கொண்ட கட்டுரைகள் என அணி வகுத்து இருந்தது.

உதாரணமாக ஒரு அரசியல் கட்டுரையின் தலைப்பு இப்படியாக இருந்தது “டீக் கடைக்காரர் நீதி அமைச்சர் மாடு மேய்த்தவர் கால் நடை அமைச்சர்”. டீக் கடை வைத்திருப்பவர் எந்த விதத்தில் குறைந்தவர் பல பேருக்கு வேலை தருகின்றார்;  மேலும் மாடு மேய்த்தவர் என்ற கட்டுரையிலுள்ள அமைச்சர் அந்த கால பியுசி படித்தவர் அவர் விவசாய தொழில் செய்பவராம்.  சாதாரண மக்களின் அடையாளப்படுத்தல் தான் பத்திரிக்கையுடையதுமா? அடுத்தவர்களை அவர்கள் செய்யும் தொழில், ஊதியம் சார்ந்து குறைவாக இடைபோடும் இழிவான குணம் நம் இந்திய தமிழர்களிடம் மட்டும் முள்ள அற்ப குணம் ஆகும். பத்திரிக்கை எழுத்து வழியாகவும் இதையையா போதிக்கின்றது பத்திரிக்கைகள்!!  ரோமில் பணி புரிந்த என் நண்பர் ஒருவர் கூறினார் வெளிநாட்டில் கழிவறை கழுபவர்களும், பொரியாளரும் மனிதர்கள் என்ற நிலையில் ஒரே மதிப்பே பெறுகின்றனராம்.  மனிதரை மனிதராக பார்க்கும் பண்பு நம்மவர்களுக்கு மிகவும் குறைவே.   மனிதனை விட அவன் பார்க்கும் தொழில் வருமானமே கண்ணில் தெரிவதாக நாம் உணர்ந்தது உண்டு பல இடங்களில்.   தமிழக சூழலில் அரசு ஊழியர்கள் அழுக்கு படாத  சட்டையணியும் அதிகாரிகள்  தவிர்த்து மற்றவர்களை இளக்காரமாக பார்ப்பதும் பேசுவதும் சகஜமே. இதை தான் பத்திரிக்கைகளும் போதிக்கின்றதா?  மாடு என்று அழைப்பது கூட இந்திய கலாச்சாரம் என்ற நிலையில் சரியானதா ‘பசு’ என்று  அழைத்து கோமாதாவாக வணங்கும் மக்கள் கொண்ட நாட்டில் அதை பராமரிப்பவரை இந்த அளவு இளக்காரமாக வர்ணித்து புகழத் தான் வேண்டுமா?

 பத்திரிக்கையை வாங்கி  வாசிப்பவர்கள் அதை புகழ வேண்டும் பத்திரிக்கை தன் பத்திரிக்கையை பற்றி தன் எழுத்தால் புகழ்ந்தால் அதன் அர்த்தம் என்ன ?, தங்கள் தரத்தில் தங்களுக்கே சந்தேகம் வந்து விட்டது என்பது தானே. இது ஆனந்த விகடன் மட்டுமல்ல ‘இளைய தலைமுறை’ போன்ற பத்திரிக்கைகளுக்கும் இதே நோய் உண்டு தான்.  தாங்கள் மட்டுமே சரியான பத்திரிக்கை நடத்துவதாக பீற்றி கொள்வார்கள்.  ஆனால் உண்மையில் மக்கள் நலன் கொண்டு வரும் கட்டுரைகள் மிகவும் குறைவு, இல்லை என்றே சொல்லலாம்.

பக்கங்களை புரட்டியால் சினிமா துணுக்குகள் சினிமா செய்திகள் தான் அதிக இடங்களை ஆக்கிரமித்திருக்கும்(17 பக்கம்). அடுத்தது விளம்பர பக்கங்கள் 16 பக்கங்களில் இடம் பிடிக்கின்றது.  மக்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும் அரசியல் செய்திகள் வெறும் 10 பக்கங்கள் அதிலும் 4 பக்கம் செய்தி கனி மொழியில் கண்ணீர் கதை!( பாதிப்படைந்த இந்திய மக்களின் கதையல்ல) கற்பனை கதைகளுக்கு 14 பக்கங்களுக்கு தேவைப்பட்ட போது பொது அறிவு செய்தி கள் வெறும் 10 பக்கங்கள்.

படங்களை எடுத்து கொண்டால்   சினிமா கலைஞர்கள் படங்கள்  32 ஆக இருந்த போது அரசியல் வாதிகள் 23 படங்களில் இடம் பிடிக்கின்றனர். கல்வியாளர்கள் சமூக சிந்தனையாளர்கள் படங்கள் தபால் தலை அளவே காண இயன்றது.  சினிம பிரபலங்கள் அரசியல் வாதிகளின் சிலரின் படம் தான் முழு  மற்றும் அரை அளவில் காட்சி தந்தது.  அன்னா ஹஜாரா என்ற சமூக புரட்சியாளரை பற்றியுள்ள கட்டுரைக்கு கூட அவரின் படம் கிடைக்காது காந்தி தாத்தாவின் படமே இட்டுள்ளனர்.

தொலைகாட்சி பக்கம் போய்விடலாம் என்றால் அங்கு பொருட்களின் விளம்பரம், சில சாமியார்களின் அறிமுகம், ஆட்டம் பாட்டு என்றே போய் கொண்டிருக்கின்றது.  

மக்களுக்கு ஊடகம் என்ற கருவி வழியாக செய்திகள் கொணரபட்டு சிந்தனை வளம் முள்ளவர்களாக மாற்றம் பெற வேண்டி இருக்கும்  போது யாருடையோ தேவைக்கான செய்திகளை விசு போன்ற பஞ்சாயத்து  - நாட்டாமைகளின் வழியாக மக்கள் மனதில் புகட்ட முற்படுகின்றனர்.  பகுந்து ஆராய்தல் , கலந்துரையாடல் என்பதை விடுத்து விசுவின் ஞானோபதேசம் மக்களுக்கு நேரடியாக கொடுக்கின்றனர்.   ஒரு பெண் சொல்கின்றார் வேலை இல்லா திண்டாட்டத்தை பற்றி விசு ஏதோ நாட்டாமை போல் வேலை நாட்டில் கொட்டி கிடக்கின்றது, செய்ய தான் ஆளில்லை வேலை இல்லாதவர்களை என்னை பார்க்க சொல்லுங்கள் நான் வாங்கி கொடுக்கின்றேன் ஆனால் கிடைத்த வேலையில் கேள்வி கேட்காது சேர்ந்து வேலை செய்ய வேண்டுமாம்!!!  

விசுவின் பேச்சு பல பொழுதும் நம் சகிப்பு தன்மையை சோதிப்பது போல் மட்டுமல்லாது அவரை மேதாவி என்று காட்டி கொள்வது போலவே உள்ளது.  பங்குபெறுபவர்களின்  கருத்தை வெளி கொண்டுவராது, அவற்றை ‘காற்றில் பறக்கும் தூசி’ போல் கருதி புரக்கணிப்பது மட்டுமல்லாது அவரின் நியாங்களை நிலைநாட்டவே விரும்புவார்.  அவருக்கு பலபொழுதும் கிரீடம் வைக்காத பேரரசர் என்ற நினைப்பு உண்டு.  அவரின் உடல் மொழி வாய்மொழி  கூட  சுதந்திரமான கருத்துரயாடலை தகர்த்து எறியும் ஹிட்லர் மொழி போன்றே உள்ளது.   வரும் நாட்களில் அவர் வீசி கொண்டிருக்கும் துண்டுக்கு பதிலாக கத்தி , துப்பாக்கி கொண்டு வந்து மக்களை மிரட்டும் காலங்கள் உண்டு  என்பதை மறக்கலாகாது.

சரி, திரைப்படம் பார்த்தாவது காயம் பட்ட மனதை தேற்றி கொள்ளலாம் என்றால் ‘ராம்’ படம் ஓடி கொண்டிருக்கின்றது.  அதில் ஒரு ஆங்கிலபள்ளி ஆசிரியை அவர் மகனை ‘நீ கடவுள் பிள்ளையடா’ என்று சொல்லி வளர்க்கின்றார்.  குந்தி தேவி ‘சூரியனை பார்த்து கர்ணன் வந்தான் என்று சொன்னது போல்’. ஹிந்து சாமியார் சிவப்பு குங்குமம் தர்மம் என பிதற்றி ஹிந்து மதத்தையை கொல்லா கொலை செய்கின்றனர்.  கதை முடிவில்  மிடுக்கான போலிஸ் அதிகாரியை மாணவன் குருவியை சுடும் போல் கொன்று விடுகின்றானாம்!!

இப்படியாக ஊடம் தமிழர்களை இன்னும் புரிந்து செயல்படாது அவர்களை முட்டாள் ஆக்குவதாகவே தெரிகின்றது.  தமிழக பத்திரிக்கையாளர்கள் வாசிப்பு  பின்புலனை துறந்து, தேடுதல் அற்ற வெத்து வேட்டாக இருப்பது மட்டுமல்லாது மக்களையும் அர்த்தமற்ற நிலையில் தள்ளுகின்றனர். வலைப்பதிவுகள் மற்றும் இணையம் வழியாக வரும் எழுத்துக்கள் இவைகளை கண்டாவது ஊடகம் தன்னை திருத்த முயலாவிடில் வரும் நாட்களில் மக்கள் ஊடகத்தை என்று என்றைக்கும் வெறுக்கும் காலம் சமீபத்தில் வரும் என்று மறக்கல் ஆகாது!!!!