கன்னியாகுமாரியில் இருந்து 35 கி.மி பயணம் செய்தால் பத்மநாப அரண்மனை http://en.wikipedia.org/wiki/Padmanabhapuram_Palace வந்து விடலாம்.
திருவனந்த மன்னர்களால் AD 1601 ல் 187 ஏக்கர் சுற்றுப் புறம் கொண்டு 7 ஏக்கர் நிலைப்பரப்பில் கட்டப்பட்டது. தற்போது கேரளா அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத் தக்கது. அங்கும் கட்டண வேட்டை தான்! https://www.youtube.com/watch?v=pofoU12oh2o 40 ரூபாய் அரண்மனை நிலைகொள்ளும் தொகுதிக்குக்கு செலுத்த வேண்டும். பின்பு அரண்மனைக்குள் நுழைய பெரியவருக்கு 25 ரூபாய் சிறியவர்களுக்கு 10 ரூபாய் என்று வசூலிக்கின்றனர். அரண்மனை வளாகம் நம் தமிழக சுற்றலா பயணிகளால் நிரம்பி வழிந்திருந்தது. கேரளத்து சேச்சிமார் கண்ணத்தில் கை கொடுத்து தமிழக அக்காக்கள் உயிர் போகும் அளவுக்கு கத்தி பேசுவதை அவதானித்து கொண்டு இருந்தனர்.
ஒரு காலத்தில் திருவனந்தபுரம் அரசர்களால் மக்கள் அடக்கி ஆளப்பட்டு, சாதாரண பெண்கள் மேல் சட்டை அணிய கூடாது என்று மறுத்த ராஜவம்சம் என்ற நினைப்புடன் அரண்மனை வாசல் அடைந்த போது அழகிய பெண் சிலைகள் நம்மை வரவேற்றது.
என் மகனிடம் வுட்(wood) வர்க் அழகாக உள்ளதா என்ற போது அவன் நோஸ் கட்டை பார்த்தீர்களா என்று மறு கேள்வி கேட்டான். எரிச்சலுடன் அவனை நோக்கிய போது கல் சிலையின் மூக்கு சிமின்றினால் ஒட்டியுள்ளதை சுட்டி காட்டினான். டிக்கட்யை காவலாளியிடம் கொடுத்து உள்ளே புகுந்தோம். சேலம் பயணிகள் ஒரு டிக்கட்டுக்கு "சின்ன பையன்" தானே அவனுக்கு டிக்கட்டு வேண்டுமா என்று மல்லிட்டு கொண்டிருந்தனர். கடைசியில் காவலாளியும் போய்கோ, போய்கோ என்று பொறுமை இழந்து வழி விட்டார். தமிழர்ன்னா சும்மாவா?
அரண்மனையில் ஒவ்வொரு அறையிலும் தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் விவரிக்க ஆட்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். சிலர் மலையாள அன்போடு ’கொஞ்சும் தமிழில்’ விவரிக்கும் போது சில பெண்கள் எரிச்சலுடனும் சொல்லியும் சொல்லாமலும் விரட்டி விட்டு கொண்டிருந்தனர்.
அரண்மனை வரவேற்பறை கருப்பட்டி. சுண்ணாம்பு, முட்டை வெள்ளைக்கரு கொண்டு உருவாக்கப் பட்டது என்று அதன் சிறப்பை மூச்சு விடாது ஒரு பெண் விவரிக்க ஒரு ஆண் வழிகாட்டி போட்டி நடப்பது போன்று ஆங்லத்தில் பக்கத்தில் நின்றே ஆட்களிடம் விவரித்து கொடுக்க ஆரம்பித்தார்.
கலந்த அவசரத்துடன் அவசரஅவசரமாக தொடுவதை தடுத்தார்.
அரண்மனை 127 அறைகள் கொண்டதும் 450 வருடங்களுக்கு முன்பு வெறும் மண்ணால் கட்டபட்டு மார்தாண்ட ராஜா காலத்தில் புதுக்கி பணியப்பட்டுள்ளது என்பதையும் தெளிவாக கூறி நம்மை அடுத்த அறைக்கு செல்ல பணிந்தனர்.
அரண்மனை 127 அறைகள் கொண்டதும் 450 வருடங்களுக்கு முன்பு வெறும் மண்ணால் கட்டபட்டு மார்தாண்ட ராஜா காலத்தில் புதுக்கி பணியப்பட்டுள்ளது என்பதையும் தெளிவாக கூறி நம்மை அடுத்த அறைக்கு செல்ல பணிந்தனர்.
பின்பு ஒரு இடுங்கிய படிகள் வழியே மேல் நிலைக்கு அனுமதித்தனர். அரசன் தர்பார் மண்டம், குறைகேட்கும் அறை, அரசனின் படுக்கையறை, அரண்மனை பெண்களின் அலங்கார கண்ணாடி, கட்டில், மஹா ராணியின் சாப்பாட்டு அறை , அவருடைய கழிவறை என நாமும் அன்று மன்னரின் உறவினர்களாகி சுற்றி வந்தோம். குளிக்கும் அறையில் கல் தொட்டிகள், அரைக்கும் அரைகற்கள், எண்ணை தொட்டிகள் போன்றவையும் காண்பிக்கப் பட்டது.
அரசி தன் கணவர்-மன்னரை தர்பாரில் இருக்கும்போது நோக்கும் சிறிய துவாரம் கொண்ட ஜன்னல்கள், அதே போல் அரசி குளித்து விட்டு ஆலயத்திற்க்கு பூஜைக்கு வரும் தனி வழி, நடனம் கண்டு களியூறும் ஒரு சிறிய மரத்திலான அறை என்று எல்லாம் வேலைப்பாடுகளும் சிறப்பாக எளிமையான அழகியலுடன் செய்யப் பட்டிருந்தது.
அம்மராணியின் படுக்கை அறை என்று காட்டி தந்தவரிடம் ’அம்மாராணி’ என்றால் யாரு என்று தன் நியாமான சந்தேகத்தை எழுப்பியதும் ’ராஜாவின்றே அம்மா’ என்று அவர் பதில் உரைத்தவுடன் ’ஓஹோ ராஜமாதாவா’ என்று சேலம் பயணிகள் தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டு அடுத்த அறைக்கு முன்னேறினர்.
ஒரு மண்டபம் தரை செம்பரத்தி, மரிதாணி இலையால் சாயம் பூசப் பட்டு சிவப்பு நிறத்தில் கம்பீரமாக காட்சி தந்தது. அதன் ஒரு தூண் வாஸ்துப் படி பலாமரத்தில் செய்யபட்டிருப்பதும் மற்று அனைத்தும் தேக்கு போன்ற மரத்தில் செய்யப் பட்டதாகவும் கூறினர். நம்ம சேலம் ஊர் ஆசாமி தான் உணர்ச்சி வசப்பட்டு ”ஆகா அற்புதம், நம்மவர்களால் இப்படி ஒரு அரண்மனையை கட்ட இயலுமா என்று புல்லரித்து பேச..... வேறு ஒரு பெண் பயணி ஆமாம், இது இப்போதுள்ள மொசைக், மார்பிள் தரையை விட குளிர்ச்சியாக இருக்கின்றது என்று பரவசப் பட்டு கொண்டிருந்தார்.
விளக்கி கொண்டிருந்தவர், ”அப்படி எல்லாம் சொல்வதற்கு இல்லை, செட்டி நாட்டு பக்கம் பல வீடுகள் இதை விட, ஆடம்பரம், கலை நயத்துடன் உள்ளது தற்போது இவ்விதம் கட்ட நினைத்தாலும் செலவு கட்டுக்குள் அடங்காது என்று தன் கருத்தை விளக்கினார்.
மன்னர் படுக்கையறையில் 64 வகை மரங்களினால் ஆன கட்டில் காட்டி தந்தனர். கட்டிலை பற்றி விளக்கிய பெண் மன்னரின் ஆவி அங்கு இருப்பது போல் ராஜபக்தியில் உருகி நின்று கதைத்து கொண்டிருந்தார். ”கீழ் மாடியில் விருந்தினர், மேல் மாடியில் அரச குடும்பத்தினர் தங்கி வந்ததாகவும் நாலாவது மாடியில் பூஜை அறை என்பதால் நீங்கள் அங்கு செல்ல கூடாது” என்று உருக்கமாக கூறினார். 127 அறைகளில் 60 அறைக்கள் மக்களுக்கு காண திறந்து விட்டுள்ளனர். மற்று அறை என்னை நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.
சுற்றுப் புறம் உள்பகுதி எல்லாம் சுத்தமாக பாதுகாப்பது மட்டுமல்லாது பழமையான முல்லைப்பூ, செம்பரத்தி செடிகளுடம் அரண்மனை நம்மை கடந்த நூற்றாண்டிற்கு அழைத்து செல்கின்றது என்றால் மிகையாகாது.
திருவனந்தபுரம் அரச பரம்பரை ஆங்கிலேய அரசுடன் இணக்கத்தில் கழிந்தவர்கள் என்பதால் அரண்மனையின் ஒரு கல்லு கூட கேடு வராது அன்று போல் இன்று காட்சி தருகின்றது. வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்க என மேற்கத்திய கலை நயத்துடன் அறை அமைத்துள்ளனர். தன் பிரஜைகள் தங்கள் குறைகளை சொல்ல அரண்மனை முற்றத்தில் நின்று கூவி சொல்வதும் மன்னர் மட்டுபாவில் இருந்து யானை மேல் இருந்து கேட்பது போல் அமைப்பு உள்ளது. சாதாரண பிரஜையின் நிலை அன்றும் இன்றும் என்றும் ஒன்று தான் போல!
மகா ராணிகள் மன்னர் தவிர மற்றோர் கண்களில் படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்துள்ளனர். ராணிக்கு என்ற தனி நடைபாதை, சாப்பாட்டு அறை என அவர்கள் அறை சன்னல்கள் சொல்லாத கதையும் சொல்லியது.
பதவி, குடும்பப்பிரச்சினையால் அவர்கள் சண்டையிட்டு மடிந்ததும் ராஜகுடும்ப பெண்கள் தங்கள் நாக்கை பிடுங்கி மரணத்தை தழுவிய அரண்மனை வழியே தான் நடந்து செல்கின்றோம் என்று அங்குள்ள பொருட் காட்சி மண்டபம் நினைவுறுத்தியது.
அடுத்தது எங்கள் பயணம் ஜெயின்களுடைய சித்தாறல் மலைக் கோயில் நோக்கி சென்றது. அங்கு தான் கோயில் வளாகத்தில் எதிர்பார்க்காத ஒரு சாட்சி கண்டு அதிர்ந்தோம். அதை பற்றி அடுத்த பதிவில் கதைக்காமல் விட்டு விடுவேனா!!!!
























