தனது குழந்தைப் பருவம் முதல் தனக்கு குழந்தை பிறக்க போகும் காலயளவு வரை கதையை ஒரே(லீனியர்) அடுக்கில் வரிசைப்படுத்தி எழுதியிருப்பது வாசிக்க எளிதாக உள்ளது. மிகவும் சுவாரசியமான, கொஞ்சம் பண்ணையார்த்தனமுள்ள உரையாடல்கள், இயல்பான எளிமையான மொழி என கதையை சுவாரசியமாக நகத்தி செல்கிறார். ஒளிவு மறைவு இன்றி நேர்மையாக எழுதிய பாங்கு அவருடைய எழுத்தின் பலம் ஆகும் . ஒரு இனத்தின் தனித்துவமான வட்டார மொழி வழக்கில் எழுதப்பட்டுள்ளதால் இன்னொரு நிலப்பகுத்திக்கு பயணித்தது போல உள்ளது.
குழந்தைப் பருவத்தில் செய்த சேட்டைகள், நட்புகள், முக்கியமாக முறைப்பெண்களுடன் உள்ள உறவு, அதில் வேம்புவை தனது நண்பன் விரும்புவதால் விட்டு வைத்ததாகவும் தேன் மொழியை தனக்கு இருந்த சோசிய நம்பிக்கையால் திருமணம் செய்ய இயலாது இருந்ததும், மறுபடியும் அவர்களை வாழ்க்கையின் சந்தித்த தருணங்களில் உருகி பேசினது, பேயின் துணையுடன் சல்லபித்தது என எதையும் விட்டு வைக்காது, ஒரு மனிதனின் நிஜமான வாழ்க்கையை அப்படியே பதிந்து வைத்துள்ளதற்கு எழுத்தாளரில் இருக்கும் இயல்பான துடுக்கும், அதையும் கடந்த தைரியமே சான்று..
சுயவரலாறாக எழுதப்பட்ட புத்தகம், பிற்பாடு பேய்க்கதையுடன் ஃபிக்ஷனாக உருமாறுகிறது. பேய் உண்டா இல்லையா என வாசிப்பவர்களை கடைசி வரை மிரட்டிக் கொண்டே இருந்தாலும் பேயை கண்தாக தோன்றின காரணத்தை சிறப்பாகவே சொல்லி விட்டார்.
கேள்வியும் நானே பதிலும் நானே என்று ஒவ்வொரு கேள்விக்கும் காரண காரியகளுடன் தனது மரபணு, தனது முன்னோர் வழக்கம் என தன்னுடைய பார்வையும் கலந்து கதையை ஒரு கருத்தாக்கத்திற்குள் கொண்டு வந்து உள்ளார்.
பேயையும் தன்னுடனே பயணிக்க வைத்து, பேயின் தாக்கத்தால் முறைப்பெண் , செல்வி என பெண்கள் உடன் ஏற்பட்ட உறவுகளை சமப்படுத்தி உள்ளார். இவர் கதையின் கதாப்பாத்திரங்களில் இருந்து பெண்கள் பிடிவாதத்தால், ஆண்கள் வல்லுறவிற்குள் தள்ளப்படுவது போன்ற ஒரு பார்வையும் ஏற்படுகிறது. வலிமையான ஆண்களால் பெண்கள் எப்போதும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதை விட பெண்களின் கட்டுக்குள் அடங்கா ஆசை மற்றும் பிடிவாதம் ஆண்களுக்கு வாய்ப்பு உருவாக்குகிறது என்ற கோட்பாட்டை நிறுவுகிறார்.
பழைய தலைமுறையில் இருந்து தாத்தா, அப்பா, மகன் என உருமாறும் ஆண்மை, அதன் நீட்சியான ஆண் அதிகாரம் உருமாறுவதையும் இக்கதையில் அவதானிக்கலாம்.
அடுத்து கதாசிரியரின் உரையாடல்களை; மனைவியிடம் பேசும் போது பயன்படுத்தும் வார்த்தைகள், தேன் மொழியிடம் பேசும் வார்த்தைகள், அடுத்து வேம்பு, கடைசியில் செல்வியிடம் உரையாடும் வார்த்தைகள் இவயை ஒரு வகைப்படுத்தி வேற்பாடுகளையும் பொருத்தங்களையும் ஆராயவே செய்யலாம். என்னதான் ஆணாதிக்கத்தின் நீட்சியான உரையாடல்கள் வழியாக பெண்கள் மனமுகுந்தே அக்கட்டுகளில் அகப்படுவதை, அல்லது பெண்களை வார்த்தைகளால் கட்டிப்போடும் வித்தையை அவதானிக்க வேண்டியுள்ளது. இத்தனை நேர்மையாக தன் மன ஓட்டத்தை எழுத இயலுமா என நாம் சந்தேகம் கொள்ளும் போதே, சாந்தினி பேயை கொண்டு வந்து நீதி விசாரணைக்கு உட்படாமல் தப்பித்தும் கொள்கிறார் கதாசிரியர்.
எல்லா பெண் கதாப்பாத்திரங்களையும் மிகவும் ஆக்கபூர்வமானவர்களாக தன்னிறவு கொண்டவர்களாக குறிப்பாக பேய் சாந்தினியை கூட வலுவான கதாப்பாத்திரமாகவே படைத்துள்ளார். இவரின் பேச்சில் மயங்குவதிலும் அப்பெண்களுக்கான தேர்வு, விருப்பம், பிடிவாதம் ஒவ்வொரு உறவிலும் வந்து செல்கிறது. பெண்கள் குற்ற உணர்ச்சியற்று தங்கள் வாழ்க்கைக்குள் நகரும் போது, எதனால் இப்படி நிகழ்கிறது என உளமருத்துவர், சோசியக்காரர், சாமியிடம் அறியும் நோக்கிலே பயணிக்கிறது கதை. முக்கியமாக தான் விரும்பின தன்னை விரும்பின பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முன்னெடுக்கும் ஒரு தன்னலமற்ற ஆணாகவே பரிணமிக்கிறது குணசீலன் கதாப்பாத்திரம்.
எல்லா பெண்களை விட பேயை விட தன் மனைவியை பயப்படுவதும் மரியாதை செலுத்துவதும் மதிப்பதும் நமது பண்பாட்டில் மனைவிக்கான முக்கியத்துவத்தையும் சொல்லாது சொல்லி செல்கிறது கதைப்பின்னல்.
உள நல மருத்துவர் இவருக்கு என்ன பிரச்சினை என வழி சொல்ல போகிறார் என வாசகர்கள் காத்து இருக்கும் போது மருத்துவரை ஒரு மனகுழப்பத்தில் தள்ளும் பகிடி சிந்திக்கவும் சிரிக்கும் படி தான் இருந்தது.
ஆனால் கதாசிரியருக்கு எல்லா மருத்துவம் விட ஆழமான சோசிய நம்பிக்கை உள்ளதை கதையில் பல இடங்களில் நிறுவ பார்க்கிறார். ஒரு விமர்சனமாக அல்லது பகுந்தாய்வாக பார்த்தாலும் சோசியத்தை நம்பாத என்னால் சில நேரம் சோசியம் பார்த்து பர்சோதித்து விடுவோமா என்று தோன்றாதும் இல்லை. கதாசிரியரின் எழுத்தின் வலிமையே அதுதான். தான் நம்பும் நம்பிக்கையை, பயத்தை, அச்சத்தை ஏதோ வகையில் வாசகரிலும் கடத்த இயல்கிறது.
சாந்தினிப் பேய்க்கு கண் காது வைத்து நகத்திய விதம் அருமை. கடைசியில் மந்திரவாதியின் உதவியுடன் பேய்களை ஜோடியாக வெளியேற்றுவது வரை கதையில் வந்துள்ளது. சாந்தினிப் பேயால் தேனு, செல்வி போன்றோர் வந்து போனாலும் ஒரு கணவன் மனைவி உறவை பற்றி அதற்குள் இருக்க வேண்டிய அன்பு அன்னியோன்னியம் மனைவியின் சாதுரியம், குடும்பத்தில் மனைவிக்கான இடம் என கதை இந்திய பண்பாட்டு அறத்தில் பயணிகிறது.
என்னதான் பேய்களை வைத்து விளையாடி தேனு , செல்வி கதை சொன்னாலும் அதன் உள்ளிருக்கும் புரியாத புதிரான ஆண்கள் இயல்பு விளங்குகிறது. உள டாக்டர் போலவே சாமியாரும் கதாசிரியரிடம் இருந்து கவனமாக தப்பித்து செல்கிறார்.
ஒரு மனிதனின் குணம் நிர்ணயிப்பது குழந்தைப்பரும் என்பதற்கு இணங்க கதாசிரியர் சிந்தையிலும் செயலிலும் , கருத்தாக்கத்திலும், தன் கருத்தால் மற்றவர்களை நிலைகுலைய வைப்பதிலும் பண்ணையார் தனமான குழந்தைப்பருவம் கூடவே பயணிக்கிறது.
சிவயோகியை பிரேமானந்தா ஆக்குவது முதல் உளமருத்துவரின் மனநிலைய கேள்விக்கு உள்ளாக்குவது என கதாசிரியர் தன்னுடைய வலுவான இடத்தை கதையில் திடமாக பதிப்பித்து செல்கிறார்.
தன்னுடைய கல்வியறிவு, செய்யும் தொழில்களில் கையாளும் நுட்பம் என விளாவரியாக தனது சிந்தனையை அப்படியே குறித்து வைத்து உள்ளார். கதாயாசிரியரின் தொழில் சார்ந்த முனைப்பு, தன்னம்பிக்கை, உழைப்பின் மேல் இருக்கும் அசையாத நம்பிக்கை, ஒவ்வொரு அத்தியாயத்லும் வாசிப்பவனுக்கு ஆக்கபூர்வமான சிந்தனையை தூண்டுகிறது. எத்தனை சோதனை வந்தாலும் நினைத்தை முடிக்கும், ஒரு தொழிலில் இருந்து இன்னொரு தொழிலுக்கு தாவும் வேகம், அறிந்து வைத்திருக்கும் விடயங்களை பற்றிய ஆழமான அறிவு, விவேகம் , கல்வி அறிவையும் தாண்டின ஞானம் அதை குறித்த கதாசிரியரின் சுயத்தில் கொண்ட பெருமையும் வாசிப்பவனை ஊக்கப்படுத்துகிறது.
எலிக் கால் பட்டு ஒரு கதாப்பாத்திரம் கத்தும். அது பேய் அல்ல, சொல்லாமல் கொள்ளாமல் வந்த செல்வி தான் என்பதை வாசகர்கள் எடுத்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். தாயத்து எலுமிச்சம், விபூதி இவை அனைத்தும் பல இடங்களில் வந்து செல்கிறது. விபூதி பூசியும் எலுமிச்சம் அருகில் இருந்தும் சாந்தினி பேய் உருமாறி வருவது மனதின் குடிகொண்டு இருக்கும் நிறைவேறாத அடிமனது ஆசைகள் தான் உண்மையில் வெல்லும் என சொல்ல வருகிறார் என எண்ணம் கொள்கிறேன்.
மோகனூ முதல் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் வாசகனின் மனதில் பதிப்பித்து சென்றுள்ளார். கதாசிரியரின் மனசாட்சியாக நண்பன் மோகனுவை வைத்து கேட்கவைக்கப்பட்டுள்ள கேள்விகள் ஒவ்வொன்றும் சிந்திக்க வைப்பவை. கடைசி பக்கம் 556 வரை சுவாரசியம் குறையாது வாசித்து விடலாம். சில பக்கங்கள் வாசிக்கும் போது உறக்க சிரித்தே வாசிக்கலாம். வீட்டில் உள்ளவர்கள் நமக்கு பேய் பிடித்து விட்டது என எண்ணி விபூதி அடிக்காது இருந்தால் சரி.
இது அமேசான் pen to publish 2019 போட்டியில் 50,000 பரிசு பெற்ற நாவல் என்பது குறிப்பிடத் தக்கது.
❤️ 🌹 🙏
ReplyDelete