13 Jun 2012

ஒற்றை மரம்!

ஆமா ......அப்படி தான் வளர்ந்தேன்.

சண்டைக்கு வரும்  பெண்டாட்டி தான் கேட்பாள் " உங்க அம்மா எப்படி தான் வளர்த்துள்ளோ"! என்று.

யார் வளர்க்க..... நானா வளர்ந்தேன் என்று மனதில் நினைத்து கொண்டேன்.

அம்மா, பாட்டி ஊரில் இருந்து 600 கி.மீ தள்ளி கர்நாடகா மாநில காப்பி தோட்டத்தில் அதிகாரியாக  வேலை செய்யும் என் அப்பாவுடன் திருமணம்.  ஒரு நடுக்காடு. அம்மா வயல் மட்டும் பார்த்து வளந்தவ.  பாம்பு, காட்டு பன்றி காட்டுயானை, புள்ளிப்புலி  நடமாடும் கொடும் வனம். குலை நடுங்கும் குளிர். எப்போதும் பெய்யும் மழை!

நான் பிறந்து இரண்டு  வயது முடிந்ததும் பாட்டி வீட்டுல  விட்டுவிட்டு போனா.  அப்போது தான் புது பெண்டாட்டியோடு வந்திருந்தார் சின்ன மாமா.  அத்தைக்கு கொஞ்சி விளையாடும் பொம்மையாக நான் வளர்ந்தேன். பக்கத்து வீட்டில் பெரிய மாமா, அத்தை மச்சான்கள் இருந்ததால் விளையாட பஞ்சம் இருக்காது. பெரிய அத்தைக்கும் எனக்கும் என்னமோ ஆகாது. அவ சொத்தை பிடுங்க வந்தது மாதிரி திட்டிகிட்டே இருப்பா. அம்மா வீட்டில் இருந்த போது அத்தையிடம் சண்டை போட்டதை சொல்லியே  என்னை அடிப்பா.  சில நேரம்  "போடி கிறுக்கி" என்று சொல்லிவிட்டு ஓடும் நான்; அவள் அடியை பயந்து இரவு  தான் வீடு திரும்புவேன் .  வளர வளர மச்சான்களும் சண்டை பிடிக்க ஆரம்பிச்சிட்டானுக.  எடுத்து எல்லாம் குற்றம். "எங்க வீடு நீ போ" என்று திட்டுவது எனக்கு வெறுப்பாக இருந்தது.  எங்க அம்மா வளந்த வீடு எனக்கும் சொந்தம் தான் என்ற ஆணவவும் எனக்கு இருந்தது. அவனுக விளையாட, நான் முற்றத்தில் இருந்து பேசாம பார்த்து கொண்டே இருப்பேன். 


பாட்டியும் சொல்லிடுவாக மக்கா அவனுக கூட மல்லுக்கு நிக்காதட. உங்க அப்பன் அம்மை வரும் போது நல்ல படிச்சு மார்க்கு வாங்கி காட்டுன்னு. அதனாலே என் தோழர்கள் எல்லாம் எங்க பக்கத்து ஊர் முத்துகுமார், சம்பத்து, செந்தில்ன்னு இருந்தாக.

 தாத்தா இலங்கையில் கடை வைத்திருந்தவர்.  முதல் கலவரத்தில் ஊரு வந்து சேர்ந்தார். கையிலிருந்த காசை கொண்டு ஊரில் வீடு, நிலம் வாங்கி போட்டு விட்டு மதுரையில  கடை வத்திருக்கும் போது இறந்து விட்டார்.  அதன் பின் பாட்டி வயலில் இருந்து வரும் வருமானத்தில் என் மாமாக்கள் அம்மாவை வளர்த்துள்ளார்.   வீட்டில் பசு மாடு வளர்த்தாக.  காலையில் பால் எடுத்து விற்று விட்டு பழைய சோறும் காணத் தொவயலும் எடுத்து கொண்டு வயலுக்கு போயிடுவாக. எனக்குள்ள உணவு உறியில் வீட்டில் தொங்கும்.  நானும் சிலநாள்  வயலுக்கு போவேன். கூட்டாளிகளுடன் விளையாட உடன்காட்டுக்கு போவதுதான் நேரம் போக்காக இருந்தது. கருவண்டை பிடித்து தீப்பெட்டியில் அடைத்து விளையாடுவோம். சில நாள் ஓணான் முட்டை பெறுக்கி வருவோம். அது உடையவே உடையாது. ரப்பர் பந்து மாதிரி துள்ளி துள்ளி வரும். சில நாள் ஆழ்வாத்திருநகரி குளத்தில் குளித்து விட்டு கோயில் மதில் சுவரில் பேச்சிமுத்து சம்பத்துடன் அரட்டை அடித்து கொண்டிருப்போம்.  பேச்சி முத்து பேச்சே காமடி கலாட்டா தான்.
நண்பர்களுடன் பொழுதைகழிக்கும் நான் வீட்டுக்கு போகவே மறந்திடுவேன். சில நாள் நான் ஊர் எல்கை எட்டும் போது பாட்டி என்னை தேடி நாசரேத் கோயில் பக்கம் நிப்பாக.  அடிக்கவோ திட்டவோ மாட்டாக ஏன் ராசா எங்க போனே எங்கல்லாம் தேடுவதாம் ....என்று கையை பிடித்து கூட்டி சென்று குளிப்பித்து சாப்பாடு தருவாக.

மாமா விடுமுறைக்கு வீட்டில் வருவது தான் கொண்டாட்டம். மாமா ஆந்திராவில் மிட்டாய் கடை வைத்திருந்தார்கள். வரும் போது தின்பண்டம் துணிமணி என்று மச்சானுகளுக்கு மாதிரியே எனக்கும் வாங்கி வருவார் . அன்று வரை  கஞ்சி, தொவையல் என்றிருக்கும் பாட்டி ஆடு, மீன் கோழி என ருசியான சமையலாக செய்து தருவார்.


ஒரு முறை மாமா ஒரு  பாட்டுப்பெட்டி வாங்கி வந்தார்கள். அதை வைத்து பாட்டு கேட்டு கொண்டிருக்க, நானும் சென்று அவர்களுடன் பாட்டு கேட்டு கொண்டிருந்தேன். பாட்டுப்பெட்டி ஒலி வரும் பக்கம் கை வைத்து பார்த்த  போது மச்சான் கையை பிடித்து தள்ளி விட்டான். அன்று தான் மச்சான் மேல்  முதல் வெறுப்பு தோன்றியது.  அத்தைகாரி பார்த்து கொண்டே நின்றாள்  அவனை தடுக்கவில்லை. அவன் செய்தது தான் சரி என்பது போல் அவள் பார்வையும் இருந்தது. அம்மாவும் அவளும் வெங்கலபானைக்கு சண்டை பிடித்ததை இப்போதும் நினைவில் வைத்து கொண்டு ”அவெ.. அம்ம மாதிரி தானே இருப்பான் என்றாள்.

பாட்டி மாலை தான் வயலில் இருந்து வருவாக. பாட்டி வந்ததும் மாட்டு தொழுவத்திலே போய் சாணி அள்ள மாட்டுக்கு தீனி கொடுக்க இருப்பாக. பாட்டி என்ற ஒரே ஜீவன் தான் நான் பேசுவதை எல்லாம் ஆசையாய் கேட்டுது.  வேலை முடித்து பாட்டி வந்து சமையல் செய்து முடிக்கும் முன் நான் வீட்டு பாடம் எல்லாம் முடித்து விட்டு சாப்பிட ரெடியா இருப்பேன். அடுத்த வீட்டில் அத்தை மச்சான்கள் சிரித்து பேசி கொண்டிருக்க நாங்க இரண்டு பேரும் எங்க வீட்டில் இருந்து சாப்பிட்டு கொண்டு இருப்போம். கயிறு கட்டிலில் என்னை தூங்க சொல்லிட்டு வாசலில் இருந்து பக்கத்து வீட்டு லில்லி சித்தி, ஆறுமுகநேரி கிரேஸ் பாட்டி கூட பேசிக்கிட்டு இருப்பாங்க.

வடக்குத்தெரு ஜோசப் பெரியப்பாவும் எஸ்டேட்டில தான் வேலை பார்த்தாங்க. பெரியப்பா பிள்ளைகள் புனிதா அக்கா, சகாயம் அக்கா, அவக அண்ணன் மோசஸும் எங்க காம்பவுண்டு வீட்டில தான் இருந்தாங்க. எனக்கு புனிதா அக்கா தான் பிடிக்கும். அவ தான் நான் திக்கி திக்கி பேசுவதை கிண்டல் செய்ய மாட்டா. எனக்கும் மோசஸுக்கும் சண்டை நடப்பதால்  பெரியம்மா தான் விடுமுறைக்கு வரும் போது திட்டுவாக. எலே நீ எப்பிள்ளைட்ட சண்ட போடுவீயோ? வாலை நறுக்கிருவேன்னு பயம் முறுத்துவாக.


 கிறுஸ்துமஸ் என்னக்கி வரும் பாட்டின்னு... பாட்டிட்டே கேட்டிட்டே இருந்தேன். பாட்டி ...... எலே எத்தனை தடவை தான் சொல்லிறது. அந்த கலண்டர பாரு. இன்னும் இருக்குடா 20 நாட்கள். பொறுடான்னு சொல்லிட்டே இருந்தாக.

இந்த முறை எங்க  வீட்டுல புதுசா பிறந்த தம்பியையும் கொண்டு வாராகளாம். அப்பா, அம்மா தம்பி  22 தியதி வருவாகன்னு கடிதாசி வந்துதுன்னு கிரேஸி பாட்டிட்டே சொல்வதை கேட்டிருந்தேன். பாட்டி;  விடுமுறைக்கு அம்மா வீட்டுக்கு வருவதை நினைத்து சந்தோஷபட்டாலும் பெரிய அத்தை கூட சண்டை இடுவதை நினைத்து கவலைப் பட்டுகிட்டே இருந்தாக.

அம்மா ஊரில் இருந்து வருவதால் காலையிலே பாட்டி மீன் வாங்க சந்தைக்கு போய்டாக.  நான் வாசலில் இருந்து பார்த்து கொண்டே இருந்தேன். தூரத்தில அம்மா இடுபில தம்பியும் அப்பா கையிலே பெட்டியுமா வந்து சேர்ந்தாக. 

அப்பா எப்போதும் போல்  இடி முழக்க சத்ததில ”எப்படிடா நல்லா படிக்கியா, முதல் இடம் உனக்கு தானேன்னு?” என்று கேட்டு விட்டு குளிக்க துண்டையும் எடுத்திட்டு குளத்திற்கு போய் விட்டார். பக்கத்து வீட்டு மோகன் மாமா சம்பத்தை தூக்குவது போல என்னையும் தூக்கி காத்தாடி போல சுத்த மாட்டாரா, தோளில் வைத்து கொண்டு குளத்திற்கு அழைத்து போக மாட்டாரா என்று ஆசையாக இருந்தது. கேட்கவும் பயமாக இருந்தது. முகத்தை பார்த்தேன். அப்பா என்னை பார்கவே இல்லை.  விருவிருன்னு நடந்து போயிட்டே  இருந்தார்.

குட்டி தம்பியை எட்டி பார்த்தேன்.  குண்டு குண்டா அழகா இருந்தான். என்னை பார்த்து சின்ன பல் காட்டி சிரித்தான். அம்மா உள்ளே போனதும்;  நான் ஓடி போய் அவனை தூக்க அவன் துள்ளி குதிக்க, அவனும் நானும் சேர்ந்து கீழை விழுந்து விட்டோம். அம்மா ஓடி வந்து கோபமாக  ”சனியனே, கூறு கெட்ட நாயே,’  என்று விறுகு கட்டயாலே  அடி அடின்னு அடிச்சா.

அந்த நேரம் பார்த்து பாட்டி வந்ததாலே தப்பிச்சேன்.  எலே வந்ததும் வராதுமா ஏலே பிள்ளையை போட்டு  அடிக்கேன்னே என்னை  மறைத்து பிடித்து  விட்டார்கள்.  சேலை முந்தனையால் என் கண்ணை துடச்சுவிட்ட  பாட்டி கைக்குள்ளாக இருந்து இப்போது என் தம்பியை திரும்பி பார்த்தேன் . அப்பவும்  அவன் என்னை பார்த்து சிரித்து கொண்டிருந்தான். ஆனால் நான் சிரிக்கல,  அப்போது முதல்  அவன்  முதல் எதிரியா தெரிஞ்சான் எனக்கு.

வீட்டுக்கு வெளியில் இருந்து அழுது கொண்டே இருந்தேன். குசினியில்  அம்மாவும்  பாட்டியும் பேசி கொண்டிருந்தார்கள். பாட்டி தம்பியை எடுத்து மடியில் போட்டு என் ராசா, என் தங்கமுன்னு  கொஞ்சி கிட்டு இருந்தாக.

 மச்சான் அடித்ததை விட அத்தைக்காரி அடித்தை விட அம்மா அடிச்சது முதல் முறையாக வலித்தது.
 வீட்டுக்கு வெளியே வந்தேன் என் சைக்கிளை எடுத்து கொண்டு, இனி இந்த வீட்டு பக்கம் வரவே கூடாது என்று எண்ணி கொண்டு திரும்பி பார்க்காமே வேகமா,  மிதிச்சு போய்கிட்டே இருந்தேன். என் சைக்கிள்  வயல், வாய்க்கால்,  பனங்காட்டு வழியே  போய் கொண்டே இருந்தது! 

15 comments:

  1. ந. பத்மநாதன் · Subscribed · Norwegian University of Science and Technology · 3,179 subscribersJune 13, 2012 1:06 pm

    உண்மையை , உண்மையாக எழுதி இப்பொழுது உங்கள் மனப்பாரத்தை எங்களிடம் சுமத்தி விட்டீர்கள் , அதனால் மனது கனக்கிறது..நல்லதொரு "ஆட்டோகிராவ்" ,இப்பொழுது நீங்கள் குடும்பமும், மாணவர்கள்ளும், முகப்புத்தக நண்பர்களும் நிறைந்த மரத்தோப்பு அல்லவா?

    ReplyDelete
  2. சுவை ஆர்வமுடன் எழுதியுள்ளீர்கள்... நன்று..

    ReplyDelete
  3. N.Rathna Vel · Subscribed · Top Commenter · G.S.H.H.SCHOOLJune 13, 2012 8:28 pm

    , SRIVILLIPUTTUR. · 256 subscribers
    அருமையான எழுத்து நடை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வலித்தது.....
    அருமை ஜோசபின் ...!

    ReplyDelete
  5. Ravi Nag · Subscribed · C.E.O. at Insight Global Group · 746 subscribersJune 13, 2012 8:50 pm

    மச்சான் அடித்ததை விட அத்தைகாரி அடித்தை விட அம்மா அடிச்சது முதல் முறையாக வலித்தது. - Wonderfully Narrated.

    ReplyDelete
  6. Ajith Kumar · Works at Grace College of PharmacyJune 13, 2012 8:50 pm

    Nellai kiramathu vasam varthykalil thavaza.. oru muthal maganin kathai..kiramathu paniyil ezhuthy uleerkal..padathudan...Arumayana kiramathu kathai... Mrs.Baba

    ReplyDelete
  7. Karuna Karan · Govt Arts College, Nandanam, ChennaiJune 13, 2012 8:51 pm

    excellent writing. nija sambavam polave irukku.

    ReplyDelete
  8. N.Rathna Vel · Subscribed · Top Commenter · G.S.H.H.SCHOOL, SRIVILLIPUTTUR. · 256 subscribersJune 13, 2012 8:52 pm

    அருமையான எழுத்து நடை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. மனதை தொடும் கதை.....

    ReplyDelete
  10. மனது கனக்கிறது. ஒரு குழந்தை சுமந்துக்கொண்டிருக்கும் உணர்வு கண்ணீர்தான் வருகிறது.

    ReplyDelete
  11. Subi NarendranJune 14, 2012 8:09 am

    சிறு கதை பிரமாதம். கடைசிப் பந்தி மனசை உருக்கிக் கண்ணீர் வரச் செய்து விட்டது. அன்புக்காக ஏங்கும் ஒரு குழந்தையை கண் முன் நிறுத்தி விட்டிர்கள். கதையோடு இழைந்து போன கிராமத்து பழக்க வழக்கங்கள், சிறுவர்களின் விளையாட்டுகள் யாவும் அருமை. மனசைத் தொடும் பகிர்வு ஜோஸ். நிறையத் திறமைகளை கைக்குள் வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தங்கையே.

    ReplyDelete
  12. கதாசிரியை திருமதி பாபாவின் எழுத்தைப் படிக்கும் பொழுது இதயம் கனக்கின்றது, ஒற்றை மரக் கதாநாயகனின் இளமைக் காலப் பருவத்தில் மாறா வடுகளாகிப் போன வலிகள், ஏமாற்றங்கள், ஏக்கங்களை நினைக்கையிலோ அது கண்ணீர் வடிக்கின்றது. பிஞ்சுப் பருவத்தை எண்ணிப் பார்க்க அஞ்சும் அவலம் தந்து, பல ஒற்றை மரத் தோப்பை உருவாக்காமல் இருக்க வழிகள் காண வேண்டும் அன்பு நெஞ்சங்களே! வாழ்த்துக்கள் பாபா...

    ReplyDelete
  13. உங்கள் எழுத்தை பார்த்து வியந்து பாராட்டி பாராட்டி எனக்கு வாயே வலிக்கிறது.. எப்படி இதை பாராட்டுவது என்று பதிவின் முடிவில் நினத்த பொழுது எனக்காவும் சேர்த்து மற்றவர்களும் உங்களை பாராட்டி சென்றுள்ளனர். வாழ்த்துக்கள் தோழியே...

    ReplyDelete
  14. |>>மச்சான் அடித்ததை விட அத்தைக்காரி அடித்தை விட அம்மா அடிச்சது முதல் முறையாக வலித்தது.


    பிரியமானவர்களிடம் பெறும் வலி அதிக வலி மிக்கது

    ReplyDelete
  15. ரெண்டாவ்து குழந்தை பெற்றுக்கொள்ளவே பயமாயிருக்கிறது.

    ReplyDelete