28 Feb 2016

இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்?

பாபா அத்தான்,  கனவு போன்று ஒன்பது  நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை!  அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்ததாக கூறினீர்கள். காலை உணவாக இடியப்பம் நாம் இருவரும் ஒன்றாகவே எடுத்து கொண்டோம்.. எப்போதும் போல நாம் நிறைய அன்று பேசவில்லை..  என்றும் போல்  மார்கெட் சென்று வந்து விட்ட பின்பு பேசலாம் என்றிருந்தேன். அன்று நீங்கள் வெளியே வரும் போது வீட்டு கெயிட் வரை வரும் நான்,  அன்று ஏன் வரவில்லை! வாசல் வரையே நின்று விட்டேனே. விடுமுறை நாட்களில் நானும் வருகிறேன் என்று பிடிவாதமாக உடன் வருவேனே? ஏன் அன்று அப்படி நான் உங்களுடன் வரவில்லை. நீங்க கூட சிறிய  புன்சிரிப்புடன் தான் என்னை லேசாக  ஆனால் ஆழமாக  பார்த்து  சென்றீர்கள். 

நீங்கள் இல்லாத நாட்களா?  நினைக்கவே இயலவில்லை! நான் லயோளா கல்லூரியிலும் நீங்கள் இங்குமாக   ஒரு வருடம் பிரிந்திருந்தது நம் நியதி என்றீர்கள். ஆனால் அதை பிரிவாக நான் காணவில்லை நாம் ஓர் அழகான நினைவுகளுடன் வாழ்ந்தோம் பேசினோம், சண்டையிட்டோம் பயணித்தோம். . 

என் கழுத்தை இறுக்க பற்றி கொண்டு நம் மகன்கள் கதறுகின்றனர். அத்தான் எங்களுக்கு தெரியாது எப்படி உங்கள் பிரிவை சரிகட்டுவோம் என்று, ஆனால் உங்கள் நினைவுகள் உங்கள் உழைப்பு, உங்கள் ஆசைகள் விருப்பங்கள் எங்களை வழி நடத்தும். 

அந்த பெப் 20 காலை 8 மணி ஏன் வந்தது? அந்த நாகர்கோயிலை சேர்ந்த கோயம்பத்தூரில் குடியிருக்கும் கார்க்காரன் ஏன் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி ஓட்டி வந்தான்? அவன் பெயர் அன்பாம்! , நீங்கள் ஏன் அந்த நேரம் பார்த்து அங்கு வந்து அடைந்தீர்கள்? ஒன்றும் புரியவில்லை. நீங்கள் தான் கூறுவீர்கள் நான் உன்னை,  சாகும் வரை பார்த்து கொள்வேன் நீ என் குழந்தை. ஆம் நம் வாழ்க்கை அப்படி தான் ஓடின. நீங்கள் என் அன்பு குழந்தையாக இருந்தீர்கள், நான் உங்கள் செல்ல குழந்தையாக இருந்தேன். ஒரு சிறந்த நண்பன் போல் என்னை வழி நடத்தினீர்கள் என்னை பலப்படுத்தினீர்கள் என் வெற்றியில் அகமகிழ்ந்தீர்கள். 

அத்தான் இது போன்ற சூழலை நான் தான் முதலில் சந்தித்தேன் என்று இல்லை.  ஆனாலும் உலகில் எனக்காக மட்டும் இருந்த உங்களை இழந்தது என் பூர்வ ஜென்ம பிழை தானே.  நான் ஓர் நல்ல பணியில் வர எவ்வளவு ஆசைப்பட்டீர்கள்.  அத்தான் ஒவ்வொரு நொடியும் உங்கள்  நினைவுகள் தான்.





என்னை நானாக நேசித்தீர்கள். என்னை நானாக வளர்த்தீர்கள். நான் விரும்பின புத்தகம், செடிகள் அளவிற்கும் அதிகமாகவே  வாங்கி தந்தீர்கள். நாம் பவுண்டர்மேட்டில் இருந்து கொண்டு வந்த மல்லிகைச்செடி  உங்கள் பிரிவை தாங்காது கரிந்து விட்டது. 

சாம் ஜோயலை உங்கள்  தோள் கொடுக்கும் உற்ற தோழனாக வளர்த்தீர்கள். அவனுக்கு கார் ஓட்ட கற்ற கொடுத்து கொண்டிருந்தீர்கள். ஜெரி எட்டாம் வகுப்பு போயும் அவனை சின்ன செல்ல குழந்தையாக நினைத்து சண்டையிட்டு கொண்டிருந்தீர்கள். பிள்ளை மெலிந்து விட்டான். இரவில் உங்களை எண்ணி அழுகின்றான். உங்கள்  உடல் தான் பிரிந்துள்ளது அப்பா ஆத்துமம், ஆவி நம்மிடமே உள்ளது என்று அவர்களை பலப்படுத்தி உள்ளேன். சாம் ஜோயல் மிகவும் கருத்துள்ளவனாக வெளியில் காட்டி கொண்டாலும் அழுது புலம்புகின்றான். அத்தான் ................அத்தான்...................பாபா அத்தான்.................உங்கள் தலையணை போன்ற வயிற்றில் கிடந்து என்று விளையாடுவோம்.

கடவுளுக்கு பிடித்தவர்களை விரைவில் அழைத்து செல்வார் என்ற ஆறுதல் என்ன தேற்ற மறுக்கின்றது. ஆனாலும் அந்நியாத்திற்கு நீங்கள் நல்லவராக இருந்து விட்டீர்கள், யாரிடமும் எந்த கோபம், பகை இல்லை எல்லா உறவுகளும் சேர்ந்து பார்க்க வேண்டும் என்ற அதீத ஆசை, உங்கள் தாய் மாமாக்கள் இருவரும் வந்திருந்தனர். உங்கள் பெரியப்பா மக்கள் மூன்று பேரும் வந்திருந்தனர். உங்கள் அமெரிக்காவில் இருக்கும் சகோதரியும் அலைபேசியில் ஆறுதல் அளித்தார். உங்களுக்கு மிகவும் பிடித்த  ராஜசேகர் மாமா கையில் தான் கடைசியாக கிடந்துள்ளீர்கள். எல்லோரும் உங்களை காண வந்திருந்தனர்.   தாயின், சகோதரனின் அன்பிற்கான ஏக்கம் தீர்ந்து விட்டதா? எட்டாம் தியதி, 14 ஆம் தியதி அங்கு நாசரேத் போய் மட்டன் குழம்புடன் சாப்பிட்டீர்களாமே? .................அத்தான் நீங்களே சரணம் என்றிருந்த நாங்கள் மூன்று பேரும் இனி என்ன செய்வோம்.


உங்க அப்பாவின் கடைசி சடங்கு கிரியையை நீங்களே செலவழித்த போது நீங்கள் எமாற்றப்பட்டதாக  நான் குற்றம் சுமர்த்தினேன், உங்களை பண்ணையார் என்று கேலி செய்தேன். அத்தான் உங்கள் கிரியை மிகவும் அருமையாக எந்த குறைவும் இல்லாது உங்கள் சகலன், உங்கள் மச்சினன் உங்கள் உற்ற நண்பர்களால் நடத்தப்பட்டது.  பத்தர் அண்ணா கரிசனையாக உங்களை விசாரித்து உள்ளார்,  உங்களை பற்றி முத்தாலக்குறிச்ச்சி காமராசர், தமயந்தி சைமன், வந்தியத்தேவன் போன்ற நண்பர்கள்  பதிந்துள்ளனர்.  சிவமேனகை சிறந்த கவிதை ஒன்று பரிசளித்துள்ளார், நரேன் அண்ணா சுபி அக்காள் நொறுங்கி போய் விட்டனர். அண்ணன் வாய்விட்டு அழுது விட்டார். உங்களை காண இந்த முறை   வர உள்ளனர். 

உங்கள் நண்பர்- சகோதரன் ரீகனிடம் தான் உங்கள் நிறுவனத்தை ஒப்படைத்து உள்ளேன். உங்கள் நண்பர்கள் உடைந்து அழும் போது உங்கள் நட்பை அன்பை தான் உணர்கின்றேன், குரு இன்னும் அழுது கொண்டே இருந்தார். நான் தான் ஆறுதல் கூறினேன். நான் மருத்துவமனை வந்தடையும் முன்பே உங்கள் நண்பர்கள் வெங்கடேஷ், சத்யா, டேவிட் ராஜா, ஞானப்பிராகசம் ஜெராள்ட் சார் போன்றோர் வந்தடைந்தனர். 

என் வேண்டுதலை ஏற்று நம் நண்பர் நாறும்பூ நாதன் , நம் பக்கத்து தெரு நண்பர் தினமலர் செய்தியாளர் முப்புடாதி போன்றோர் அங்கு நின்றிருந்தனர்.  
உங்களுக்கு ஏதோ பலமாக அடிபட்டிருக்கலாம் என்று அழுது புலம்பின என்னை, "திடம் கொள்ளுங்கள் சார் போய் விட்டார்" என்றதும் உலகமே மொத்தமாக என் தலையில் விழுவது போல் இருந்தது. நமக்கு இரு குழந்தைகள் மட்டுமல்ல என் மாணவர்கள்,  நம் சாம் ஜோயேல் நண்பர்கள் என  நூற்றுக்கிற்கு மேல் குழந்தைகள் அன்று உங்களை சுற்றி இருந்தனர். உங்களை தூக்கினது எல்லாம் அவர்களே.  குழந்தை மனம் கொண்ட நீங்கள் குழந்தைகள் அரவணைப்பிலே இருந்துள்ளீர்கள்.

அத்தான் நீங்கள் அமைதியை தேடி விட்டீர்கள். என் மனம் தான் வெந்து உருகுகின்றது.; என் இதயம் நொறுங்குகின்றது, உங்கள் ஆயிசு முடிந்து விட்டது என ஆசுவாசம் கொள்கின்றேன். நீங்கள் விரும்பின மாதிரி வாழ்ந்தீர்கள், நீங்கள் விரும்பின மாதிரி உங்கள் நிறுவனத்தை வளர்த்தீர்கள், கார் ,  பயணம், காமிரா, உறவினர்கள் , நண்பர்கள் என மகிழ்ச்சியாக இருந்தீர்கள்.  ஒரு நேரம் வேலை இல்லா திண்டாடிய நீங்களும் உங்கள் நிறுவனத்தில் மூன்று பேரை வேலைக்கமர்த்தும் நிலையை எட்டினீர்கள்.  உங்கள் பயிற்சியில் கற்ற பல இளைஞசர்கள் வெளிநாட்டிலும் உள்ளூரிலும் சிறப்பாக வேலை செய்து வாழ்கின்றார்கள் என்று பெருமை கொண்டீர்கள்    எந்நேரமும் பாட்டு கேட்டு கொண்டே உழைத்து வாழ்ந்தீர்கள்.  தூங்கும் நேரம் தவிர்த்து எப்போதும் ஏதோ ஓர் பணியில் உங்களை ஈடுபடுத்தி இருந்தீர்கள், உங்கள் மனைவி பிள்ளைகளை மிகவும் அழகாக நடத்தினீர்கள். உங்கள் பெற்றோரை ஆற்றலை மிஞ்சி, கடன் எடுத்தும் கூட மருத்துவ செலவை நடத்தி கொடுத்தீர்கள், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு மனம் உடைந்து கிடந்த உங்கள் சகோதரனுக்கு பல லட்சம் புரட்டி கொடுத்துள்ளீர்கள். உங்களை பழித்தவர்கள் கேலி செய்தவர்களை நான் வெறுத்த போது,  நீங்கள் உங்கள் அன்பால் ஆதரவால் உதவினீர்கள்.  இந்த விபத்தால் நானும் பிள்ளைகளும் மட்டுமே உங்களை இழந்தோம் என்றால் இல்லை. பலர் அழுது புலம்பினர். "நான் தெருவில் சாக என்று என்று நின்ற போது பாபா தான் கை கொடுத்து உதவினார் என்றார் உங்கள் ஓர் நண்பர்.  

கடந்த ஏழு நாட்களாக உங்கள் நண்பர்கள் உங்கள் பிரிவை விசாரித்து சென்று கொண்டிருக்கின்றனர்.  உங்கள் அம்மாவும் தம்பியும்  தான் ஜெபம் முடிந்ததும் விரைந்து மறைந்து விட்டனர். அது நாம் இருவரும் எதிர்பார்த்தது தான். பிரசவத்திற்கு 300 ரூபாய் கட்டு செய்வது போல், உங்கள் இழப்பிற்கு ஒரு சேலையும், இரண்டு கிலோ அரிசியும், 100 மிலி தேங்காய் எண்ணையும் கொடுத்து சரிகட்டினர். இதுவும் நாம் எதிர் பார்த்தது தான்.

உங்க முகத்தையாவது காண வேண்டும் என நம் உறவினர்கள் நடு இரவு இரண்டு மணி வரை வந்து கொண்டிருந்தனர். வண்டிப்பெரியாரில் இருந்து எல்லாரும் வந்திருந்தனர். ஆனால் உங்களை அழகாக பார்க்க வேண்டும் அது தான் என்னுடைய ஆசை. ஆதலால் உங்கள் முகம் அழகாக இருந்த போதே நான் விடை தந்து விட்டேன்.  ஒரு வேளை  நீங்கள் அதிசயமாக எழுந்து விடுவீர்களோ என்று நினைத்து  உங்கள் கண்ணை திறந்து பார்த்தேன். ஒரு கணம் நீங்கள் மீண்டும் எழுந்து வருவீர்கள் என பேராசை கொண்டேன். உங்கள் காலில் தொட்டு கும்பிட்ட போது உங்களில் கண்ட சிறு காயங்கள் என்னை  வேதனைப்படுத்தியது. நீங்கள் நான்கு மணிநேரம் உதிரம் சிந்தி இறந்தீர்கள் என்றதும் என் உயிரே நின்று விடும் போல் இருந்தது. ஆனாலும் நீங்கள் கடைசி நேரம் எந்த சித்திரவதையும் அனுபவிக்கவில்லை. உடன் இறைவினடம் சென்று விட்டீர்கள் என்றதும் தேற்றி கொண்டேன்.

எங்களை நினைத்து கொண்டு தான் இருப்பீர்கள், ஜெரியால் தான் ஜீரணிக்க இயலவில்லை. உங்கள் சகலன் "அண்ணா  தான்  உங்கள் தங்கையை எனக்கு தேடி தந்தார்  நான் செலவு செய்வதை எண்ணி கவலை கொள்ள வேண்டாம் அவர் என் சொந்த அண்ணன் என்றார். அண்ணி உங்களையும் பிள்ளைகளையும் நான் ஆதரவுடன் கவனிப்பேன் என்றார்". 

நீங்கள் கடைசியாக அணிந்து கழற்றி போட்டிருந்தது சுபி அக்காள் வாங்கி கொடுத்த சட்டை, நீங்கள் மரண நேரத்தில் அணிந்திருந்ததும் சுபி அக்காள் கொடுத்த டீ-ஷர்ட், நீங்கள் ட்றைய் வாஷுக்கு எடுத்து சென்ற ஓர் சேலையும் சுபி அக்காள் எனக்கு எடுத்து தந்த சேலை. அக்கா அக்கா என்று தாய்மை பாசத்துடன் அழைத்து வந்த சுபி அக்கா ஆசிர்வாதத்துடன் சென்றுள்ளீர்கள். சுபி அக்காவை சந்தித்தது முதல் தான் உங்கள் அம்மாவை நினைத்து ஏங்காது மகிழ்ச்சியாக இருந்தீர்கள். நம் சிங்கப்பூர் அத்தை கூறியுள்ளார்கள் பெப் 20 என்பது இந்து சகோதர்களை பொறுத்து புண்ணியமான தினமாம் அன்று இறப்பவர்கள் நேரடியாக இறைவன் உலகம் அடைந்து விடுவார்களாம். 

 அத்தான் நீங்கள் ஆசைப்பட்டது மாதிரியே  உங்கள் சபை கல்லறை தோட்டத்தில் வைத்துள்ளோம். இந்த முடிவை நான் தான் எடுத்தேன். எனக்காக நீங்கள் கல்லறையில் கூட தோற்க கூடாது. என் பாபா அத்தான் என்றும் கம்பீரமாக இருக்க வேண்டும். உங்களுக்கு அழகாக ஓர் இடம் கிடைத்துள்ளது. நீங்கள் விரும்பும் மார்கட் அந்தோணியார் ஆலயம் முன்புள்ள  சீவலப்பேரி ரோட்டில் செடிகள் அருகாமையில் உங்களுக்கு இடம் தேர்ந்துள்ளனர் உங்கள் நண்பர்கள்.  ஒரு வேளை நாசரேத் என்று உங்கள் தாய்க்கு விருப்பம்  இருக்குமோ என்று வினவினேன். அவர்கள். திருநெல்வேலி நோக்கி விரைந்து வந்து விட்டனர்.  உங்கள் மகன் சாம் ஜோயல் மிகவும் உறுதியாக , அப்பா நண்பர்கள் இருக்கும், அப்பா 12 வருடம் வாழ்ந்த திருநெல்வேலி மண்ணில் தான் இருக்க வேண்டும் என்றான். நாசரேத் கல்லறை தோட்டத்தை விட அழகான இடம் இது தான். நானும் உங்களை எந்நேரவும் சந்திக்கலாம். நீங்களும் நாசரேத்தை விரும்ப மாட்டீர்கள் எனத்தெரியும். வீட்டில் கத்தோலிக்க சபைப்படி தான் ஜெபம் நடந்தது.சகாயமாத ஆலய தந்தை எங்கள் கல்லூரி தந்தையர்கள் உங்களூக்காக ஜெபித்தனர். பின்பு ஆலயத்தில் சி. எஸ்.ஐ சபைப்படி ஜெபம் நடந்தது. 



அத்தான் உங்கள் ஓர் அக்காள் சொல்கிறார் "நான் முகநூலிலில் இட்ட படங்களை கண்டு கண் வீழ்ந்ததால் தான் போய் விட்டிர்களாம்" அப்போது தான் நினைவு வந்தது உங்கள் தகப்பானார் இறந்ததை நாம் அறிவித்த போது, "உங்கள் அப்பா என் அப்பா மரண கிரியைக்கு வராததால் நான் வருவதை என் தாயார் விரும்ப மாட்டார், உங்கள் வீட்டில் ஏதும் நிகழ்வு என்றால் பங்கு எடுத்து கொள்கின்றேன் என்றார். உங்கள் சகோதரன் நீங்கள் பெட்டியில் இருப்பதை பார்க்க விரும்பவில்லையாம் அதனால் அடுத்த  நாள் காலை நான்கு மணிக்கு வந்து சேர்ந்தார். உங்கள் குடும்ப சொத்து பங்கை கருணை அடிப்படையில் கொடுப்பாராம், நான் கூறினேன் அது என்னவருக்கு இழுக்கு சட்டப்படி சமபங்கை உங்க மகன்களுக்கு  கொடுக்க கூறினேன்.  எனக்கு நீங்கள் விட்டு சென்றது போதும்.

பாபா அத்தான் சொத்து, பணம் எல்லாம் ஒன்றுமில்லை. நாம் வாழ்ந்த வாழ்க்கை அழியாதது அந்த நினைவுகளுடனே நான் வாழ்ந்து விடுகின்றேன். நீங்கள் என்னை காணாது பரிதபிக்க வேண்டாம். உங்கள் கண்ணை திறந்து பார்த்தேன், அந்த விழியில்,  உங்கள் ஆன்மாவில் நான் தான் குடியிருக்கின்றேன் என்றது.  மிகவும் போராட்டம் கொண்டு நடத்தி சென்ற  அழகிய காதல் நம் வாழ்க்கை,!   கடந்த 19 வருடங்களில் ஒரு நாள் கூட பேசாது இருக்கவில்லை. நம் சண்டை அரை நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை.  அப்படி தான் பெல்ஸ் அத்தையும் கூறினார்கள் "காதல் பறவைகள் போல் சுற்றி வந்தீர்கள்" என்று. நீங்கள் உங்கள் மகன்களை குறித்து கொடுத்த வேலைகளை முடித்து விட்டு விரைவில் நான் உங்களிடன் வருவேன். நாம் பயணிக்க, கதைக்க , சண்டை போட நிறைய உள்ளது.  நீங்கள் உங்கள் நண்பனிடம் கூறினீர்களாமே " என் ஜோஸ் சண்டை போடாது இருப்பதே பயமாக உள்ளது என்று". உங்கள் பயம் தான் கொடியது. அதற்கு நீங்கள் காரணம் இல்லை என தெரியும்,  கடைசி நான்கு மாதம் நீங்கள் என் அறிவு இல்லாதே பல விடையங்கள் செய்து வைத்துள்ளீர்கள். நான் அதற்காக உங்களிடம் கோபப்படப்போவது இல்லை. அது நம் கர்ம வினை!  நீங்கள் இட்டு சென்ற செருப்பு உங்கள் லுங்கி, சட்டை எல்லாம் பொக்கிஷமாக எடுத்து வைத்துள்ளேன். அத்தான் கதைத்து கொண்டிருந்தால் நிறைய உள்ளது. தினம் உங்களிடம் பேசவேண்டும். நாம் கதைப்போம்.

http://avargal-unmaigal.blogspot.com/2016/02/baba.html
http://www.dinamalarnellai.com/web/districtnews/2412
http://www.dinamalar.com/news_detail.asp?id=1461507&Print=1
http://www.maalaimalar.com/2016/02/20130117/killed-by-a-car-collided-near.html
http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/02/20192527/In-PlayankottaiCar-crash-Auditor-death.vpf



18 comments:


  1. பாபாவின் இழப்பு ஈடுகட்ட முடியாத இழப்புதான்.இந்த இழப்பு உங்களை மிக மிக அதிகம் பாதித்துவிட்டது என்பது இந்த பதிவின் மூலம் புரிகிறது.உங்களின் இதயம்மட்டுமல்ல எங்களின் இதயமும் நொருங்கிதான் போய்விட்டது......உங்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை....காலமும் இறைவனின் ஆசியும்தான் உங்களுக்கு இந்த இழப்பில் இருந்து மீண்டு வர சக்தியை கொடுக்கும்...

    ReplyDelete
  2. விரைவில் மீண்டு வாருங்கள்.. வாழ்க்கை இன்னும் இருக்கிறது... ஆறுதல் சொல்ல தெரியவில்லை..

    ReplyDelete
  3. தலை சிறந்த மனிதர் அவர்.
    அவர் நிரந்தரமானவர்

    ReplyDelete
  4. சகோதரி ஜோ. எப்படிச் சொல்லித் தேற்றுவது என்று அதிர்ச்சி அடைந்திருந்தேன்.தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் தயக்கம்; இருந்தும் முயன்றேன். உடனடியாக பேஸ்புக்கில் பதிவு இட்டேன், உங்கள் அருமை அத்தான் அவர்கள் படத்துடன்... கல்லறையில் துவண்டுபோய் அமர்ந்திருந்த ஜோ-வின் கோலம் அழவைத்து விட்டது.
    அத்தானுக்கான அஞ்சலியைக்கூட கதைசொல்லியாக இருந்து கதைத்ததை அத்தான் கண்ணீருடன் புன்முறுவல் தவழ வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் ஜோ.

    அன்புள்ளவர்களிடம் மீண்டும் அன்பு செலுத்தும்போது அத்தானை உணர்வீர்கள்...
    பிள்ளைகளுக்கு என் அன்பும் ஆதரவும்...
    விரைவில் நேரில் வருவேன்.

    ReplyDelete
  5. உண்மையில் கண் கலங்கி நின்றேன் .இழப்புக்களின் வலிகளை நிறையவே அனுபவித்தவர்கள் நாங்கள் .தைரியமாக இருங்கள் ,கடமையை செய்யுங்கள் .கடவுளை நம்புங்கள் .கடவுள் உங்களுக்கு வலிமையையும் உறுதியையும் தருவார் . சகோதரி

    ReplyDelete
  6. இழப்பின் வலியுணர்த்தும் பதிவு. மதுரைத்தமிழன் பதிவின்வழி வந்தேன். சகோதரி, வாழ்க்கை துயர்மிகுந்ததாயின் அர்த்தமும் கடமையும் அதிகரிக்கின்றது என்றே பொருள். அமைதி தவழ வேண்டுகிறேன்.

    ReplyDelete
  7. Thankappan Arumugaperumal · S.T.Hindu College ,NagercoilFebruary 28, 2016 11:18 pm


    முகநூல் முகம் மட்டுமே அறிந்த நான் நீங்கள் தொட்ட துயரம் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஆறுதல் தரும் வார்த்தைகளை....என் கண்ணின் நீர்த்துளிகளை....பதிவு செய்து, வேண்டுகிறேன் இறைவனை. இக்கட்டான நேரத்தில் நல்லவர்கள் அறுதல் சொல்ல உங்கள் பக்கம் இருக்கிறார்கள். எல்லா மன வலிமையையும் ஆண்டவன் தர வேண்டும்.

    ReplyDelete
  8. Bala Murugan · Caldwell Higher Secondary SchoolFebruary 28, 2016 11:18 pm


    வலி(மை) மிகுந்த பதிவு... ஆறுதல் கூற தெரியவில்லை. தைரியமாக இருங்கள் என்ற வார்த்தையை தவிர.

    ReplyDelete
  9. Pathmanathan Nalliah · Rektor/Principal at Realfagakademiet OsloFebruary 28, 2016 11:19 pm


    பெரும் துயர் கொண்ட இழப்பு

    ReplyDelete
  10. ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  11. இதற்கு என்ன பதில் எழுவென தெரியவில்லை! உங்கள் எழுத்துக்கள் நீங்கள் திடமாக இருப்பதை அல்லது குழந்தைகளுக்காக அப்படி இருக்க முயல்வதை காட்டுகிறது. அனுதாபம் காட்ட விரும்பவில்லை. இழப்பு என்பது உலக இயல்புதான் என்றாலும் நமக்கு எனும் பெழுது வலி அதிகம் தான். கடந்து வாருங்கள். எங்கள் குடும்பம பிரார்த்திக்கும்.

    ReplyDelete
  12. Subi Narendran · Works at Marks and SpencerMarch 10, 2016 8:39 pm


    உங்கள் கதையை படிக்க முடியாமல் கண்களைக் கண்ணீர் மறைத்து விட்டது. உங்கள் சோகத்துக்கு முன்னால் எனது பெரிதில்லை. ஆனாலும் சொந்த தம்பியை இழந்த தவிப்பு என்னுள்ளே. பாபா, நீங்கள், சாம், ஜெரி, எல்லோரும் எப்படி எங்கள் மனதில் இப்படி ஆளப் பதிந்தீர்கள் என்று புரியவே இல்லை.
    உங்கள் இழப்புக்கு என்னால் சமாதானம், ஆறுதல் கூற முடியாது. வார்த்தைகளே இல்லை. கடவுளான பாபாவும், நான் வணங்கும் அம்மனும் உங்களை வழிநடத்திச் செல்ல வேண்டும். இதைத்தான் நான் வேண்டுகிறேன். நிறைய எழுத யோசிக்கிறேன் முடிய வில்லை. உங்களுக்காக நானும், நரேனும் இருக்கிறோம். உங்களை வெகு விரைவில் சந்திக்கிறேன்.

    ReplyDelete
  13. Pathmanathan Nalliah · Rektor/Principal at Realfagakademiet OsloMarch 10, 2016 8:40 pm


    ஆம் நட்புகள் நாங்களும் சுபியக்காவுடன் இணைவோம்...நாங்களும் இருக்கிறோம்

    ReplyDelete
  14. Bama Ithayakumar · Vancouver, British ColumbiaMarch 10, 2016 8:40 pm


    ஈடு செய்ய முடியாத வலி நிறைந்த இழப்பு , காலம் தான் உங்கள் சோகத்தை ஆற்ற வேண்டும்.

    ReplyDelete
  15. Valan Arul · Input Editor at Vendhar TvMarch 10, 2016 8:41 pm


    vethanai tharum kathaippu.... Kangalil neer kasiya Vaitthathu...

    ReplyDelete
  16. Subbiah Ravi · Madurai Kamaraj University and the University of MadrasMarch 10, 2016 8:42 pm


    It is sad such intimate a couple had to part midway in their life journey and the partner has to tend the responsibility left by the gone,facing the inlaws,looking after children etc.Having courage is the only solace that would bend all adversities and makes the lives of the children shine

    ReplyDelete
  17. இந்தப் பதிவின் தலைப்பு இயேசுவின் புகழ்பெற்ற மலைப்பிரசங்க வரிகளில் வருகிறது என்று நினைக்கிறேன் (ஏலி ஏலி லெமா சபக்தானி?) அத்தனை வலிகளைப் பொறுத்துக் கொண்டதால்தான் இயேசு பெருமான் இத்தனை நாளாய் மதம் கடந்தும் நினைக்கப்படுகிறார் என்று நினைக்கிறேன். தங்கள் வலிகள் மறக்க முடியாதவைதாம், எனினும் வாழவேண்டிய கடமையும் தேவையும் இருக்கிறது சகோதரி. திடம் பெறுங்கள்.

    ReplyDelete
  18. என் துக்கத்தில் என்னுடன் பங்கு பெற்ற உங்கள் அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்.

    ReplyDelete