14 Apr 2016

வாழ்க்கை எனும் புதிரான பயணம்!

அத்தான் ஒரு வழியா உங்க குரல் கொண்ட காணொளி  கிடைத்து விட்டது.  உங்க உருவம் முதல் சில நாட்கள் மறந்து இருந்தது  பின்பு குரல். பின்பு அதீத துக்கம் விலக உங்கள் உருவம் மறுபடியும் வந்து விட்டது.  இருந்தும் உங்கள் குரல் கேட்க ஆசை கொண்டிருந்தேன். இன்றும் தேடி கொண்டிருந்த போது நாம் பயணப்பட்ட அழகான ஒரு இடத்தில் வண்டியை விட்டு இறங்கி புகைப்படம் எடுக்கவில்லையா என கேட்கின்றீர்கள் நான் வேண்டாம் எனக்கூறும் காணொளி இது.


நம் விடுமுறை நாட்கள், ஏதோ ஒரு இடத்தை தேடிய சில புகைப்படங்களுடன் உள்ள பயணமாக தான்  இருந்துள்ளது.  அது நம்மை பல பிரச்சினைகளில் இருந்து காத்துள்ளது.  சொந்தக்காரர்கள் வீட்டில் போயிருந்து வம்பு பேச வேண்டாம் குத்தி பேச்சு , ஏச்சு கேட்க வேண்டாம். நம் குடும்பம் ,  நமக்கு  மட்டுமே  உருத்தான  உரையாடல்கள் என அந்த நாள் முழுக்க நம் நாலு பேருக்குமானதாக செலவழிக்க இயன்றது. நான்  சாப்பாட்டை பொதி கட்டி விட்டால் நம் பிள்ளைகளுக்கு கோபம் வந்து விடும்.  வெளியில் நிம்மதியாக சாப்பிடத்தான் வருகின்றோம். அங்கும் உங்க தயிரு, புளிசாதமா என கோபம் கொள்வார்கள்.


நீங்க அமைதியா பாட்டு கேட்டு கொண்டே கார் ஓட்டுவீர்கள். ஒரு முறைக்கூட எதிரே வந்த வாகனத்தில் இடித்தீர்கள் என்றோ எதிரே வரும் மனிதர்களை காயப்படுத்தியதோ இல்லை. அசராது ஏழு- எட்டு மணிநேரம் கூட வாகனம் ஓட்டுவீர்கள். ரோடுகள் பயணம் உங்களுக்கு பிடித்தமானது. 
அப்படியான பயணங்களால் தான் திருநெல்வேலி, நாகர்கோயிலை, தூத்துக்குடியை சுற்றியுள்ள பல இடங்கள் போய் வந்து விட்டோம். இனி நம் மனதில் இருந்த சில இடங்கள் இடுக்கி டாம்,  வடஇந்தியாவிலுள்ள சில இடங்கள் இலங்கைப்பயணம் போன்றவை நாம் விரும்பியும் நிறைவேறாதது. 

 உங்களுக்கு நாலுவழிச்சலையில் பயணிப்பது என்றால் அலாதிப்பிரியம். நீங்கள் உங்கள் மகனிடம் எனக்கு பிடித்த ரோடு என்றும் கூறும் இடத்தில் தான் உங்க உயிரையும் விட்டுள்ளீர்கள்.  இன்னும் ஓர் 50 அடி பயணித்திருந்தால் அந்த கொலைக்காரப்பாவியின் கண்ணில் தெரியாது வேறு வழி சென்றிருப்பீர்கள். 

நேற்று முதல் நானும் கார் ஓட்ட கற்க ஆரம்பித்து விட்டேன். உங்களிடம் கற்றுத்தரக்கூறியும் நேரம் இல்லை என ஒதுங்கி விட்டீர்கள். நம் மகனுக்கு கற்று கொடுத்தீர்கள். பெப் 7, 2016 நாள் உங்கள் வழி காட்டுதலுடன் கோயில்பட்டி அருகே வரை ஓட்டினான். நானோ பயத்துடன் பின் சீட்டில் இருந்து வந்தேன். பெரியவன் நம்முடன் பயணிக்கும் போது என்னை பின் சீட்டில் தள்ளுவது தான் அவன் வழக்கம். அத்தான் அந்த கொலைக்காரன் பெருவிரலை பயண்படுத்தி வேகத்தை கட்டுப்படுத்த வேண்டிய இடத்தில் உள்ளம்காலை வைத்து காரை இயக்கி விட்டான் போலும். 

இனி நடந்ததை எண்ணி என்ன கூறினாலும் எந்த பிரயோசனவும் இல்லை. உங்களை உயிருடன் எங்கள் வசம் தர வேண்டும் என்று இறைவன் நினைத்திருந்தால் அது நடந்திருக்கும். உங்க மகன்கள் என்னை பார்ப்பது போல், நாங்கள் உங்களை நன்றாக கவனித்து பார்த்திருப்போம்.


உங்களுக்கும் எங்களுடன் இருக்க விருப்பம் இல்லை, நீங்கள் கடைசி மூன்று மாதம் கூட்டு சேர்ந்த உங்க தம்பி அம்மாவிற்கும் நீங்கள் எங்களுடன் இருப்பது பிடிக்கவில்லை. உங்கள் அப்பா இறந்த கிரியை முடிந்த பின் நாம் நெல்லையில் நம் காரில் கொண்டு வந்து உங்க தம்பி குடும்பத்தை  இரயிலில்  ஊர் அனுப்பி விட்டோம். சென்னையில் சேர்ந்த பின் என்னிடம் அவன் கதைத்ததை அவன் நினைப்பை உங்களிடமும் கூறியிருந்தேன். ”அண்ணி அண்ணன் பயணங்களிலே இருக்கின்றான், அவன் கைபேசியில் என் பெயருடன் தம்பி என்றும் எங்க அம்மா பெயர் பக்கம் அம்மா என்றும் இடக்கூறுங்கள், ஏதாவது நடந்தால் எங்களுக்கு தெரிவிக்க வேண்டாமா  என்றான்”. நீங்க போன அன்று கூட என்னிடம் போலிஸ் கூறினது விபத்து என்று தான் ஆனால் என்னை விட முதல் செய்தி போனது உங்க தம்பிக்கு தான். ஆனால் உங்க முகத்தை பார்க்க அந்த களவாணிக்கு கொடுத்து வைக்கவில்லை. அடுத்த நாள் அதிகாலை வந்து தாயும் மகனும் பெரும் விவாதத்தில் இருந்தனர். காலை 8 மணிக்கே மறைந்து விட்டான். நம் மகன் உங்க அம்மாவிடம் ”சித்தாப்பா எங்க பாட்டி” என கேட்க “அவன் பயண அசதியாக இருப்பதால்  நண்பன் வீட்டில் தூங்க போயுள்ளான் என்றார். இந்த துருப்பிடித்த கதையை பேசி எந்த பலனும் இல்லை. நீங்களே என்னிடம் கூறியிருந்தீர்கள் என் தம்பி நான் இங்கு இருந்தால் சொத்தில் பங்கு கேட்பேன் என நினைத்து எனக்கு மும்முரமாக கத்தார் அனுப்ப  தயார் செய்கிறான் என்று. அவன் பணம் கேட்ட போது கூட உங்களுக்கு வர வேண்டிய சொத்தில் இருந்து வாங்கி கொடுத்திருக்கலாம் தானே? ஏன் உங்கள் செலவில் உங்களுக்கு சூனியம் வைத்தீர்கள் அத்தான். உங்களிடம் உண்மையாக இருந்த பலரை உங்களிடம் இருந்து நெடுதூரம் தள்ளி விட்டு; கடைசி 3 மாதம் உங்களை  பலி வாங்க நினைத்தவர்களுக்கு நிறைய சேவகம் செய்து உள்ளீர்கள். உங்க கணக்கிலுள்ள பணத்தை பற்றி கேட்ட போது கூட கள்ளச்சிரிப்புடன் யாருக்கு கொடுத்திருக்கான் என கண்டு பிடிக்க நான் உதவுகின்றேன் என்றான்.    உங்க அம்மா, தம்பிக்கு  தான் உங்க பணத்தை கொடுத்துள்ளீர்  என அறிந்த போது ஆறுதல் அடைந்தேன். ஒருவேளை எங்களுக்கு தெரியாது வேறு யாருக்காவது கொடுத்திருந்தால் என் இதயமே நின்றிருக்கும்.    



பயவாயில்லை அத்தான். முன் ஜென்மத்தில் நீங்க யாராக இருந்தீர்களோ. களவாணி தம்பிக்கு இந்த பிறவியில் அண்ணனாக பிறந்துள்ளீர்கள். உங்க அப்பா கம்பனியில் இருந்து சாக்கு பெட்ரோல் திருடுவார், உடன் பணி செய்பவர்களை மாட்டி விடுவார் என கேள்விபட்டுள்ளேன். ஆனால் உங்க தம்பியும் உங்க அம்மாவும் உங்களையே களவாண்டு விட்டனர். 

 நாம் வின்னி திருமண வீட்டில் சென்ற போது உங்க தம்பியின் ஏமாற்று புத்தியை பற்றி தானே நீங்களும் உங்க உறவினர்களும் பேசி சிரித்தீர்கள். பொங்கலுக்கு கமல்சன் குடும்பத்துடன் நம் வீட்டிற்கு வந்த போதும் கூட நீங்க இருவரும் பேசி கொண்டது அந்த திருடனை பற்றி தான். அவன் கல்லூரியில் படிக்கும் போதே எப்படி எப்படி பிள்ளைகள் பெயரை கெடுப்பான் என்றும் உங்க காம்பவுண்டு சுவரில் அவனைபற்றி ஊர்க்காரர்கள் எழுதி போட்டதை பற்றியும் தான் பேசிச் சிரித்தீர்கள். ஆனால் அப்போதும்  நீங்க  அவனிடம் பணம் கொடுத்து  கொண்டு தான் இருந்துள்ளீர்கள். நம்முடைய அழகான வாழ்க்கையை ஏன் மறந்தீர்கள் அத்தான். 

உங்க அம்மா நம் மகன் பேசின போது ”நான் உன் சித்தாப்பாவிடம் கேட்டு சொல்கின்றேன் சித்தப்பாவிடம் கொடுத்துள்ளேன், சித்தாப்பாவிடம் கேளு என ஒரே சித்தப்பா புராணம் பாடினார். அதுவே நான் கேட்டேன். பாபாவும் உங்க மகன் தானே. அவரை பற்றி நீங்க தான் கதைக்க வேண்டும். அவரை விட ஏழு வயது இளைய அந்த உதவாக்கறை பேசக்கூடாது”.  அவன் நம் மகனையும் உங்களை போல் நினைத்து ”உங்க அம்மாவிடம் கூறாதே உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்” எனக்கூறி 10 ஆயிரம் அனுப்பி உள்ளான். . 

நம் மகன்களுக்கு உங்கள் வாழ்க்கைகுறிக்கோளான உழைப்பு   விடாமுயற்சி பற்றி தெரியும். இன்று அவன் விண்ணப்பம் வாங்க கோயம்பத்தூர்  பிஎஸ்ஜி கல்லூரி சென்றுள்ளான். உங்கள் மகன்களிடம் உங்க நேர்மை, அன்பு உண்டு.  அவர்கள் உங்களை போல் பாசத்திற்காக ஏமாற மாட்டார்கள். அவர்களை பிறந்ததில் இருந்து நம் நெஞ்சிலும், கைகளிலும், இதயத்திலும் வைத்து வளர்த்துள்ளோம். உங்கள் வாழ்க்கையில் உங்களை முள்ளாக குத்தின சோகமே  உங்களை உங்க பெற்றோர்  பிரிந்தது தான்.  உங்கள் பாட்டி பொறுப்பில் அத்தை மச்சான்களிடம் ஏச்சு பட்டு வளர்ந்ததை அவமானமாக கருதினீர்கள்.  வாழ்க்கையில் ஒரு கட்டத்திலும் உங்கள் விருப்பங்களை நீங்களாக தீர்மானிக்க அனுமதிக்காது இருந்ததை எண்ணி வருந்தினீர்கள். நீங்க விடுமுறைக்கு வரும் போதும் உங்களை தனியறையில் தூங்க வைத்திருந்ததின் கொடுமையை பற்றி கூறியுள்ளீர்கள். ஆனால் நீங்க விடைபெறும் அன்றும் வீட்டில் இருந்து கிளம்பும் முன் உங்க மூத்த மகனிடம் தான் பேசிக்கொண்டிருந்தீர்கள். இளைய மகன் பள்ளிக்கு கிளம்பி செல்வதை  கரிசனையாக பார்த்து கொண்டு இருந்தீர்கள். எனக்கு தான் அன்று உங்களிடம் கொஞ்சி, கெஞ்சி பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.  என்னிடம் தான் சொல்ல வந்ததை சொல்லாமலே போய் விட்டீர்கள். அன்று உங்களை சந்திக்க ரீகனிடம் கூறியிருந்தீர்களாமே. ரீகன் அவசர அவசரமாக கிளம்பும் போது உங்கள் தகவலை நம் மகன் தெரிவித்துள்ளான். ரீகனை  முதல் நாளான வெள்ளி அன்றும் பேசவுள்ளது என வரக் கூறியுள்ளீர்கள். ஆனால் என்னிடம் உங்களுக்கு அன்று ஒன்றும் கதைக்க கதைகள் இருக்கவில்லையோ அத்தான். எப்போதும் நீங்கள் கூறும் கூற்று “  நீ  என் மகிழ்ச்சியில் மட்டும் இருந்தால் போதும் என் துக்கத்தில் நீ வேண்டாம்”. ஆனால் நம் திருமண நாள் நாம் எடுத்த வாக்கு துக்கத்திலும் இன்பத்திலும் உங்களுடன் இருப்பேன் என்று தான். உங்கள் கடைசி மூன்று மாதங்கள், அந்த கடைசி மூன்று நாட்கள் பற்றி நான் தியானித்து கொண்டிருக்கின்றேன் அத்தான்.  

உங்க ஆன்மா சாந்தியாகி விட்டது. உங்க கர்ம வினை எல்லாம் களைந்து விட்டீர்கள். அதற்கு இந்த ஜென்மத்தில் உங்க தாய் தம்பி தகப்பன் உதவி விட்டனர். என் கர்மவினையை எண்ணி தான் புலம்பி கொண்டு இருக்கின்றேன். அன்று எனக்கு விடுமுறையாக இருந்தும் உங்களுடன் நான் வராதிருந்தது என் கர்ம வினை தீரவில்லை என்று தானே. நினைத்தால் தீராத சோகமாக மாறி விட்டது நம் காதல் முடிவு.

நம் திருமணம் முடிந்த போது எனக்கு விருப்பமே கை எட்டும் தூரம் பறந்து போகும் மேகம், அதிகாலை கூட்டம் கூட்டமாக போகும் காட்டு பற்றிகளை வேடிக்கை பார்ப்பது பகல் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகளை அவதானித்து கொண்டிருப்பது. நான் அதிகாலை விழித்து ஜன்னல் வழியாக பார்த்து கொண்டு இருப்பேன். அடுத்து நம் வீட்டு வாசலில் இருந்து  புத்தகம் வாசிப்பது. நீங்கள் அலுவலகம் விட்டு வருவதை கண்டு டீ தயார் செய்து குடித்து விட்டு நடக்க போவது. மெல்ல மெல்ல காதலிக்க கற்று தந்தீர்கள். அந்த காதல் காயாக, கனியாக மாறி வந்த போது என்னை தள்ளி விட்டு சென்று விட்டீர்கள்.  பாண்டவர் மேட்டு கடும் குளிரில் அடுப்பில் தீயிட்டு நாம் பேசி கொண்டு அருகில் நிற்பதும், தற்போதும்  காலையிலே ”என்ன இன்று சாப்பாடு? சப்பாத்தியா, தோசையா ,  பிரியாணி செய்து தரவா”  என்று அவசர அவசரமாக வரும் உங்களை “அத்தான் காலையில் நிதானம் தேவை, படபடக்க வேண்டாம்” என்று  உங்களை அணைத்து கொள்ளும் கணங்கள் தான் நினைவில் வருகின்றது.   

நம் பிள்ளைகள் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய வேளையில் வாழ்க்கையின் எல்லா அவலங்களும், வெறுமையும் முடிந்து விட்டது; இனி அமைதி, அன்பு, ஒன்று மட்டும் தான் தேவை என்ற மனநிலையில் வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்த போது உங்கள் பிரிவு விடைதெரியா புதிராக வந்து விட்டது.


நான் மறுபடியும் போராட ஆரம்பித்து விட்டேன். முதல்படியாக கார் ஓட்ட கற்று கொள்ள செல்கின்றேன். உங்களுக்கு நான் பாரமாக இருந்தது போல் பிள்ளைகளுக்கும் பாரமாக தெரியக்கூடாது அத்தான். நீங்க பல நாட்கள் அவசரம் அவசரம் எனக்கூறி வேகமாக சென்று கல்லூரி வாசலில் விடும் போது ”அத்தான் மூட்டையை இறக்கி வைத்து விட்டீர்களா” என கேலி செய்வேன்.  இந்த வாரம் சாம் ஜோயல் தான் கொண்டு விட்டு அழைத்து வருகின்றான்.  உங்களை சார்ந்தே உங்களை நோக்கியே என் வாழ்க்கை தடத்தை பதித்த எனக்கு இனியுள்ள பாதை ஒற்றையாள்  பாதை என்றதும் கவலை தொற்றி கொள்கின்றது. என்னால் இயலும் என்னால் முடியும் என்ற என் தன்னம்பிக்கை நம் பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கமும் என்னை திடப்படுத்துகின்றது.  



13 Apr 2016

நம் இரண்டாவது குழந்தையும் உங்கள் கடனும்!

நமக்கு இரண்டாவது குழந்தை வேண்டுமா என மனக் குழப்பத்தில் இருந்தோம்.  ஒரு நாள் நம் மகன் பக்கத்து வீட்டில் விளையாட சென்ற போது அங்குள்ள தாய்  பிடித்து வெளியை தள்ளி கதவை அடைத்து விட்டார். பின்பு என்னிடம் அதன் காரணத்தை மிகவும் நிதானமாக கூறினார். உங்கள் மகனிடம் நாங்கள் கொஞ்சுவது எங்கள் ஒரே மகனுக்கு பெரும் மன உளச்சலை கொடுக்கின்றது. மன்னித்து விடுங்கள் என்றார்.  நம் மகன் அன்று துவங்கி எனக்கு விளையாட தம்பி வேண்டும் என பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டான்.  அப்போது நாம் எஸ்டேட்டில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த முதல் வருடம்.  நம்மை சந்திக்க வந்த உங்க அம்மா ஊர் உலக நடப்பிற்கு  ஒரு பிள்ளை போதும் என்றதும் விரைவாக அடுத்த பிள்ளைக்கு நான் தயார் ஆகி இருந்தேன். 


நம் இரண்டாவது மகன் வயிற்றில் இரண்டாவது மாதம் வளர்ந்து கொண்டிருந்த போது உங்களுக்கு தூத்துக்குடி ஸ்பின்னிங் வேலை பிடிக்கவில்லை எனக்கூறி வெளியேறி விட்டீர்கள்.  அப்போது தான் என் தங்கையுடன் மருத்துவ மனை சென்று குழந்தை வளர்வதையும் உறுதி செய்து கொண்டேன்.

அப்போது நாம் மூன்றாம் மைலிலுள்ள மருத்துவ கல்லூரிக்கு அருகிலுள்ள வீட்டிற்கு மாற்றலாக நினைத்தோம். நாம் இருந்த தூரத்து உறவினர்கள் வீட்டில் இரவு ஒன்பது மணிக்கு பின்பு வெளியே போகக்கூடாது தினம் ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதிலும் முக்கியமாக அங்கிருந்த இரண்டு நாய்களை எனக்கு பெரிதும் பயமாக இருந்தது. ஒரு முறை சுரேஷ் அண்ணன் ஆகி அக்கா வந்து நமது மகனுக்கு அவர்கள் வீட்டு, பழைய  சைக்கிளை  நம் மகனுக்கு கொடுத்த  போது அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி  மிகவும் இளக்காரமாக திட்டினார். நாங்க மானமுள்ளவங்க இப்படி இனாமல்லாம் வாங்குவது பிடிக்காது எனக்கூறி நம்மை வருத்தம் அடைய செய்ததும் உடன் வீட்டை மாற்றினோம்.  அப்போது உங்களுக்கு ஓர் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. ஆனால் ஊதியம் ஒழுங்காக கொடுக்கவில்லை என்றதும் நீங்கள் அடுத்த சில நிறுவனங்களில் வேலை  தேடி கொண்டிருந்தீர்கள். அப்போது நம் மகன் 5 மாதம் கடந்திருந்தான். கடுமையான தூத்துக்குடி வெயில்,  ஸ்தரதன்மையற்ற வேலை வாய்ப்பு  நம்மை மிகவும் வருந்த செய்தது.  நம் வீட்டு உணவு பல நாட்களில் தைர் சாதமாகத்தான்  இருந்தது. நீங்கள் பைனி, நொங்கு, பழங்கள் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தீர்கள். உங்கள் அரைவனைப்பில் எந்த குறைவும் இல்லாது இருந்தது. அப்போது நம் வீட்டிற்கு வந்த என் தம்பி என் வீட்டிற்கு சென்று எதையோ கூறியதை நம்பி என் அம்மா ஒரு கடிதம் எனக்கு அனுப்பியிருந்தார். அதை  என் அலமாரியில் ஒட்டி வைத்திருந்து பல நாட்கள் வாசித்து அழுது கொண்டிருந்தேன்.  

நம் இளைய மகன் வயற்றில் இருந்த போது நிறைய பாட்டு கேட்டேன், பல திரைப்படங்கள் கண்டேன். சில பொழுது பைபிளை வாசித்து கொண்டும் இருந்துள்ளேன்.  அந்த வீட்டில் இருந்த போது மேல் மாடியில் இருக்கும் பெண் தண்ணீர் தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை பல வேளைகளில் தடை செய்து விடுவார்.  அவரிடம் இருந்து தப்பிக்க ஸ்மைலி  வீட்டு பக்கம் ஒரு வீட்டிற்கு மாறினோம். அங்கு சென்ற சில நாட்களில் கழிவறையில் ஏதோ சிக்கல் இருக்க  அது எனக்கு ஒவ்வாமை தர அந்த வீட்டில் இருந்தும் மாற முடிவு செய்தோம் . அப்போது தான் ஆக்னஸ் அக்கா வீட்டு மேல் மாடிக்கு சென்று விடலாம் என முடிவு செய்தோம். எவிஎம் மருத்துவமனையும் அருகில் உள்ளது என்ற வசதியை மனதில் கொண்டு அந்த வீட்டிற்கு மாறினோம்.  எனக்கு ஒரு போதும் புலன்படாத ‘யாத்திராகமம்’ அப்போது தான் விளங்கினது. நம் வீடு மாற்றம் எல்லாம் காரணம் இல்லாதே சில தவிற்க இயலாத காரணங்களால்  நிகழ்ந்து கொண்டே இருந்தது.  ஒவ்வொரு வீட்டிற்கு போகும் போதும் அதை பார்ப்பதும் அதன் கழிவறைகளை நீங்கள் சுத்தம் செய்து தந்த பின்பே  பயண்படுத்த என்னைஅனுமதிப்பீர்கள். நாம் தேவைக்கதிகமான பொருட்களை வைத்து கொண்டு வீடு மாறினது  பல பெரும் சிக்கல்களை தந்தது.  இரும்பு அலைமாரையும் வீட்டு படி வழி ஏற்ற இயலாது என்ற காரணத்தால் நாம் சிறமப்பட்டே அதை ஒவ்வொரு முறையும் வீட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம்.  நம் மூத்த மகன் மழலைப்பள்ளியில்( ப்ரீகெஜியில் ) ஏபிசி வீரபாகு  பள்ளியில் சேர்த்து விட்டோம்.   முதல் நாள் பள்ளிக்கு கொண்டு நான் கொண்டு விட்டேன்.  அப்போது நம் சின்ன மகன் எட்டு மாதம் வயற்றில் சுமந்து கொண்டிருந்தேன்.


நம் மகன் இப்போது ஒன்பது மாதத்தை நெருங்கி விட்டான். அம்மா எழுதின ஒரு கடிதத்திற்காக அவரை என் பிரசவத்திற்கு அழைக்க நான் விளையவில்லை. உங்க அம்மாவை அழைக்க நீங்கள் தான் முயன்று கொண்டிருந்தீர்கள். இரண்டாவது பிரசவம் மாப்பிள்ளை வீட்டில் தான் என்ற முறையும் இருக்க நீங்க நம்பி அழைத்து கொண்டிருந்தீர்கள்.  பிரசவ நாளும் நெருங்கியது. ஒரு நாள் அலுவலகம் போய் நீங்க திரும்பி வந்த போது இரண்டு நண்பர்களுடன்  வந்திருந்தீர்கள். அவர்களுக்கு சாயா போட்டு உங்களிடம் தந்து விட்டேன். வீட்டிலிருந்த அவலை பழத்துடன் தேங்காய் போட்டு கொடுத்து விட்டேன்.  அப்போதே எனக்கு வலி ஆரம்பம் ஆகியது. எப்போது உங்க நண்பர்களை அனுப்பி விட்டு நீங்கள்  என்னருகில் வருவீர்கள் என காத்திருந்தேன். 

இரவு பதினொன்று மணி ஆகினதும் எனக்கு வலி அதிகமாகி கொண்டே வந்தது. நம் மூத்த மகனை நாம் குடியிருந்த ஆக்னஸ் அக்கா -சுரேஷ் அண்ணா வீட்டில் விட்டு விட்டு நான் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பையுடன் மருத்துவ மனையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.  அந்த பையில் எனக்கு பயண்படுத்த வேண்டிய உடை, குழந்தைக்கான உடை, டவல்,  பிளாஸ்க் என தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்திருந்தேன். மருத்துவமனை வீட்டின் மிக அருகில் இருந்தது. ஆட்டோவை அந்த இரவில் அழைத்து காத்திருக்கும் சூழலும் இல்லை. நீங்கள் ஒரு கையில் பையும் அடுத்த கையில் என்னையும் பிடித்து கொண்டு மருத்துவமனையை நடந்தே  வந்து அடைந்தோம். நாம் தொடர்ந்து  பரிசோதனை செய்து வந்த  மருத்துவமனை என்பதால் வாசல் வந்ததுமே உடன் மருத்துவ மனைக்குள் அனுமதித்தனர். டாக்டர் உடனே பரிசோதித்தார். தண்ணீர் குடம் உடைத்து விட்டது   இனி தாமதிக்க இயலாது குழந்தையை சிசேரியன் வழியாக எடுக்கலாம் என்றனர். நீங்கள் சிசேரியன் என்றதும் பயந்து உங்கள் கண்கள் நிறைந்து விட்டது, . உடன் என் அம்மாவிற்கு தொலைபேசியில்  நீங்கள் தெரிவிக்க அம்மா நடு நிசி 12 மணிக்கு கேரளாவில் இருந்து கிளம்பி விட்டார்கள்.  நாசரேத்திலுள்ள உங்கள் அம்மாவிற்கும் தகவலை தெரிவித்து விட்டு  அவரை எதிர்பார்த்து  கொண்டே இருந்தீர்கள்.  நீங்கள் பயத்தால் பதட்டத்தால் நம் வீட்டு ஏணிப்படியில் விழுந்து எழுந்து வந்ததை பின்பு அறிந்தேன். என்னை சிசேரியன் தியேட்டருக்கு அழைத்து செல்லும் போது நீங்கள் என் கையை பற்றி அணைத்து கண்ணால் ஆறுதல் கூறி  அனுப்பினீர்கள். உங்களையும் உள்ளே அனுமதித்திருக்கலாமே என எனக்கு தோன்றியது. நம் ஊரில் அந்த வழக்கம் அப்போது இல்லை என்பதால் தனியாகத்தான் சென்றேன். அனிஸ்தேஷ்யா கொடுத்த மனிதர் கையை வலியால் பிடித்திருந்தேன்.   காலை 4 மணிக்கு நம் குழந்தை பிறந்தான். சிசேரியன் இல்லாது அதிசயமாக உபகரணங்கள் பயண்படுத்தி பிறந்தான். அவனை வாங்க உங்கள் அருகில் ஆட்கள் இல்லை என்பதால் நாம் குடியிருந்த வீட்டிலுள்ள ஆக்னஸ் அக்காவை அழைத்து குழந்தையை வாங்க வைத்துள்ளீர்கள். என் அம்மா காலை ஏழு மணி வந்தடைந்தார்கள். பின்பு குழந்தையை அவர்கள் வாங்கி கொண்டார்கள். நம் மூத்த மகனை ஆக்னஸ் அக்கா அவர் பிள்ளைகள் பிளசி, பெனிற்றாவுடன் அழைத்து வந்தார். அவன் தன் விரலை குழந்தையிடம் நீட்ட  இறுக்க பற்றி கொண்டான். இளையவன் நாடி, கண் , தலை என உருவத்தில் உங்களை போன்றே இருந்தான். மூத்தவனை போல் இல்லாது மிகவும் அமைதியானவனும் லேசாக சிரித்து கொண்டு சில பொழுது அழுது கொண்டும் தூங்கினான். தண்ணீர் குடம் உடைந்ததால் அவனுக்கு சில மருத்துவ சிகித்சையும் மேற்கொண்டிருந்தனர்.  

உங்க பெற்றோர் காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தனர்.  வந்ததும் உங்க அப்பா ”உன் மாமியார் எப்போது வந்தார்? எப்போது தெரிவித்தாய்?” என வினவி கொண்டார். நான் சிசேரியன் சிகித்சை உடையில் சில பைகள் பொருத்தப்பட்டு கிடந்ததும் உங்க அம்மா முகத்தில் தெரிந்த நஞ்சு சிரிப்பை காண வேண்டுமே! நம் மூத்த பிள்ளைக்கு போன்றே 300 ரூபாயை அருகில், வைத்து விட்டு “ உன் மாமியார் போனதும் தெரிவி நான் வந்து பார்த்து கொள்கிறேன்” எனக்கூறி கிளம்பி விட்டார். மூன்று நாட்களுக்கு பின் வீட்டை அடைந்தோம். ஏழு நாட்கள் ஆனதும் அம்மா, வீட்டிற்கும் கிளம்ப வேண்டிய தேவை எங்கள் வீட்டில் இருந்தது.  நீங்களும் உங்க அம்மாவை அழைத்து வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் அம்மாவை விரைவாக அனுப்பி விட்டீர்கள். உங்க அம்மாவிற்கு வரக்கூறி போன் செய்ததும் 16 வது நாள் வந்து குழந்தைக்கு ஒரு அரைஞானம் வாங்க உங்களையும் அழைத்து சென்றார்.  வந்து தோசை சுட்டு கொடுக்க கூறினீர்கள். அவர் இருக்கும் மட்டும் செய்து கொடுத்தேன். அப்பாவிற்கு சுகமில்லை  எஸ்டேட் சென்று விட்டு வருகிறேன் எனக்கூறி சென்று விட்டார். அந்த தாயின் செயல்பாட்டை கண்டு அவர் போன பின்பு வெகு நேரம் அழுதேன். எப்போதும் போல் நீங்க அமைதியாக சமையல் செய்தீர்கள், குழந்தையின் துணியை துவைத்தீர்கள் பெரிய மகனை அழைத்து கம்யூட்டர் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தீர்கள்.

முதல் பிரசவம் நேரம் நீங்கள் என்னை  பார்க்கவில்லை என்ற என்னுடைய நெடுநாள் குற்றசாட்டை போக்கும் விதம் நம் இளைய மகன் பிறந்த போது நீங்கள் தான் கவனித்து கொண்டீர்கள்.  என்னிடம், ”இனி முதல் முதல் பிள்ளையை பார்க்கவில்லை என குற்றம்  கூறக்கூடாது, இரண்டாவது பிள்ளையை நானே பார்த்து உள்ளேன்” என்று எப்போதும் பெருமை பட்டு கொண்டீர்கள். நாம் குடியிருந்த ஆக்னஸ் அக்கா வீட்டினர் தான்  நம் மூத்த மகனை பள்ளிக்கு அனுப்புவது, தூங்க வைத்து கொள்வது, அண்ணனுடன் குளிப்பது என செல்லமாக  பார்த்து கொண்டனர். அவன் தினம் பள்ளிக்கு போய் வந்தான்.

உங்கள் தீராத அன்பு, ஒவ்வொரு நாளும் என்னை  நீங்கள் கவனித்த விதமும் உங்களை நினைக்க வைக்கின்றது. அன்பு மயமான அத்தானையா இறைவன் என்னிடம் இருந்து இவ்வளவு விரைவில் அழைத்து கொண்டார் என எண்ணி ஏங்கி ஏங்கி அழுகின்றேன். அத்தான் நீங்கள்;  நான் இறந்த பின்பு தான் என்னை விட்டு போயிருக்க வேண்டும்.  இது என்ன கொடுமை?  இந்த கருதலும் உங்க அன்பும்   நினையாது ஒரு அடி கூட என்னால் முன் வைக்க இயலாது. ஏன் ஆண்வர் அன்பை கொடுத்து  விட்டு விரைவாக  பிடுங்கி விட்டார். அத்தான்...... அத்தான் நான் என்ன பாபம் செய்தேன். என்னை விட்டு ஏன் பிரிய நினைத்தீர்கள். அதை கடவுள் நிறைவேற்றி விட்டாரே.  இனி எத்தனை காலம் நான் அழுது கொண்டே வாழ வேண்டும்.  இந்த வெறுமையான வாழ்விற்காகவா அந்த நிறைவான நாட்களை தந்தீர்கள். அத்தான் என்னால் பொறுக்க இயலவில்லை. நாம் பிரிந்தது என்ன காலக்கொடுமை. எங்கிருந்தாலும் பேசி கொண்டே இருப்போமே. நான் உங்களிடம் எதிர் பார்த்தது உங்கள் அன்பை மட்டும் தான். கத்தார் போறேன், போறேன் எனக்கூறி போய் விட்டீர்களே அத்தான்.  உங்கள் சிரிப்பை உங்கள் பேச்சை, உங்கள் பொய் கோபத்தை பார்க்க வேண்டும். நம் காரில், நாம்  நெடுதூரம் பயணிக்க வேண்டும்.  என் கையை நீங்கள் இறுக பற்றி கொள்ள வேண்டும். உங்க தோளில் நான் சாய  வேண்டும் அத்தான். 

3 Apr 2016

என் கதைப்புகள் !

உங்களை கல்லறைக்கு அனுப்பும் மட்டும் உங்கள் அம்மா பண ஆசை ஓய்ந்த பாடில்லை. ஒரு வகையில் நீங்க நிம்மதியாக இறைவன் சன்னதியை அடைந்து விட்டீர்கள் என்று தான் தோன்றுகின்றது. உங்கள் ஏக்கம்  உங்க குடும்ப பாசத்தை குறித்தே இருந்தது. நானும் எவ்வளவோ உங்களுக்கு சொல்லி பார்த்து விட்டேன் பாபா அத்தான்.  உங்களுக்கு சொந்த வீடு உண்டு உங்களுக்கு என பிழைப்பு உண்டு உங்களுக்கு அருமையான மகன்கள் உண்டு உங்களை எப்போது நினைத்து கொண்டிருக்கு நான் உண்டு. இருந்தும் உங்க தாய் பாசம் -ஏக்கம் வலிமையானது. ஏன் என்னை ஒதுக்கி விட்டனர் ஏன் என்னை மதிப்பதில்லை என வருந்தி  கொண்டே இருந்தீர்கள்.


ஒரு பிள்ளை முதன்முதலாக மதிக்கப்பட வேண்டியது அதன் குடும்பத்தில் தான். ஆனால் உங்கள் தாய் உங்களை ஒன்றரை வயதிலே உங்க பாட்டி  வீட்டில் கொண்டு  விட்டது பெரும் வடுவை உருவாக்கி விட்டது, ஓர் ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டது உங்களுக்கு.. அங்கிருந்த அத்தை, அம்மா பாட்டி வளர்ப்பிலே வளர்க்கப்பட்டவர் நீங்கள்.   தனக்கு மாமா பெரியப்பா போன்ற உறவுகள் வேண்டும் என ஏங்கினீர்கள். ஆனால் உங்க தம்பியை நாலு வயதினிலே விடுதியில்  விட்டதால் பாசத்தை விட மனிதர்களிடம் வெறுப்பு பொறாமையை   மேலோங்கி இருந்தது.


உங்கள் குடும்பம் என்றால் பெரியதும், வலியது என நம்பினீர்கள். அத்தான் இந்த குணம் தான் உங்களை வளர விடாது தடுத்தது என நான் நினைக்கின்றேன்.  ஆனால்  உங்களை தூக்க ஒரு உறவினர்கள் கூட அருகில் இல்லை. உங்களை உண்மையில் நேசித்தது உங்க நண்பர்களாக தான் இருக்க வேண்டும். உங்களை தூக்கினதும் உங்க நண்பர்கள், என் மாணவர்கள் சாம் நண்பர்கள். உங்க உடன் பிறந்த தம்பி கூட விபத்தில் நீங்கள் இறந்து விட்டீர்கள் என அறிந்த பின்பும் வந்து சேர தாமதித்துள்ளான்   நீங்கள் ஏற்பாடு செய்து கொடுத்து செந்திலுடன் வியாபாரம் பேசி கொண்டு இருந்துள்ளான். உங்க தம்பி திருமணம் அன்று செருப்பு தூக்க என்னிடம் கொடுத்தது போல் இன்றும் செருப்பாக நடத்துகின்றனர். என்னை கேலி பேசுவது என்னை விமர்சிப்பது எல்லாம் என் காதுக்கு எட்ட வைக்கின்றனர். நீங்க இருந்திருந்தால் உங்களிடம் எல்லாம் கதைத்திருப்பேன். இன்று என் வலைப்பதிவு வழியாக உங்களிடம் சேர்க்கின்றேன். 

அத்தான்  நான் நினைவில் குறித்து வைத்தவை எல்லாம் நீங்கள் டயறியில் குறித்து வைத்திருந்தீர்கள்.  நாம் தூத்துக்குடி நெல்லைக்கு வந்து குடியேறினதே மிகப்பெரிய தவறு. ஆனால் அந்த தவறை பற்றி 15 வருடம் முன்பே கூறியிருந்தேன். நீங்க வேலை தேடி எஸ்டேடில் இருந்து வெளியேற வேண்டும் என நினைத்த போதே நான் குறிப்பிட்டிருந்தேன். நாம் கோயம்பத்தூர் செல்லலாம் என்று. உங்க குடும்ப ஆட்கள் தொல்லை வேண்டாம் நாம் இக்கட்டான சூழலில் இருப்பதை அவர்கள் காணக்கூடாது என்று மட்டுமே நான் விரும்பினேன். ஆனால் நீங்களோ தூத்துக்குடி திருநெல்வேலி என்றால் உங்கள் வீட்டில் இருக்கலாம் என்று கனவு கண்டீர்கள்.  அந்த கனவு இருந்ததால் தான் உங்க அம்மா அப்பா கட்டின புது வீட்டின் பக்கத்தில் இருந்த பழைய  மண் வீட்டை உங்களுக்கு தரக் கூறினீர்கள். அதற்கு தான் உங்க அப்பா உங்க தம்பி திருமணம் நாள் அன்று நம்மை திட்டி விரட்டி விட்டார். பொதுவாக மௌனம் காக்கும் நீங்கள் அன்று என் பெற்றோர் இருந்ததால் மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி கத்தி அழுது ஆற்பாட்டம் செய்து   உங்க வீட்டை விட்டு அவமானப்பட்டு வந்தீர்கள்.  அன்றைய உங்க துயரை  போக்க என என் நகைகளை வலுக்கட்டாயமாக உங்களிடம்  கொடுத்து உடன் இடம் வாங்குங்கள் நாமும் வீடு கட்டலாம் என்றேன். அது போலவே நாமும் நம் சக்திக்கு இணங்க அழகான ஓர் வீடு கட்டினோம் அந்த வீட்டில் ஒன்பது வருடமாக இருந்தோம்.


உங்க வீட்டிற்கு தறை கல் இட்ட போதோ உங்க தம்பிக்கு பெண் பார்க்கவோ உங்க தம்பிக்கு குழந்தை பிறந்த போது உங்களை அழைக்கவோ இல்லை. உங்க துயரை கண்டு நான் உங்க அம்மாவிடம் தொலைபேசியில் வினைவிய போது  நீங்க தனியார் நிறுவனத்தால் வேலை பார்ப்பதால் லீவ் கிடைக்காது என நினைத்தோம் என்றார். 

தூத்துக்குடியில்  கில்பர் அத்தான் வீட்டு மாடியில் குடியிருந்த போது நம்மை சந்திக்க வந்த உங்க பெற்றோர் உங்களையும் என்னையும் மிகவும் அவமரியாதையாக கேலியாக  பேசின  போது  உங்களுக்கு தெரியாது  உங்க அப்பாவுக்கு  நான் ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தேன். அந்த கடிதத்தை உங்க அப்பா உங்களிடம் வாசித்து காட்டவும் எனக்கு தெரியாது உங்க மருமகள் எழுதியுள்ளாள் என்று கூறி தப்பித்து வந்து நான் எழுதினதை என்னிடம் பாராட்டினீர்கள்.  அந்த கடிதத்தில் என் மாமனாரிடம் நான் வேண்டி கொண்டது உங்க மகனை மகனாக நடத்துங்கள் கேவலப்படுத்தாதீர்கள். உங்கள் மகன் தோல்விக்கு நீங்களும் தான் காரணம் என்று எழுதியிருந்தேன். அதன் பின் நம் விடையத்தை பேசுவதை நிறுத்தி விட்டு நம்மை ஒதுக்கினர்.

அத்தான் இதுவெல்லாம் பொதுத்தளத்தில் பதிய வேண்டிய விடையமல்ல. ஆனால் உங்கள் உழைப்பு, உங்கள் ஆசைகள் எல்லாம் அகாலத்தில் பொலிந்து விட்டதே. இன்று உங்கள் அன்பைக்கூட நினையாது ஒதுக்குகினர். உங்களுக்கு ஒருவேளை புதியதாக இருக்கலாம். நீங்க இல்லாவிடில் நான் சந்திக்க வேண்டிய துயர் எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் இல்லாத போது உங்களை மறுபடியும் அவர்கள் அவமதிப்பதை என்னால் தாங்கி கொள்ள இயலவில்லை. இவை எல்லாம் உண்மையான மனிதர்களின் வரலாறு. இதில் கற்பனையில்லை பொய்மை இல்லை. ஒவ்வொரு பெண்ணும் அன்பு இல்லாத குடும்பங்களில் எதிர் கொள்ள வேண்டிய பிரச்சினைகள் என புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கணவனும் தான் உயிருடன் இருக்கும் போது என்பது போலவே, தன் காலம் பின்பும் தன் மனைவியின் நிலை என்ன என்று புரிந்து அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எனக்கு அத்தான் அளித்த கல்வி உதவியுள்ளது. நான் அத்தான் மதிப்பிற்காக படித்தேன் ஆனால் அத்தான் பணம் சார்ந்து எடுத்த முடிவுகள் அவர்கள் தாய் சகோதரனை நம்பி எடுத்த முடிவுகள் என்னையும் எங்கள் மகன்களையும் நடுத்தெருவில் கொண்டு வந்திருக்கும். என்னிடம் யார் கதைப்பதையும் நான் விரும்பவில்லை அத்தான் உங்கள் அன்பால் மட்டுமே எனக்கு ஆறுதல் தர இயலும்.




நம் மகன்கள் வேதனை!

பாபா அத்தான் சில எச்சில் கணக்குகளை மனதில் வைப்பதே தவறு. இருப்பினும் நம்மை பெரிதும் சங்கடத்திற்குள்ளாக்கியது உங்களை பண்ணையார் என்று கேலி செய்ய வைத்தது என்பதால் இதை பதியுகின்றேன். மேலும் நீங்கள் இறந்த போது உங்களை பற்றி பேச்சு எழுந்த போது உங்கள் வீட்டிற்கு என நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. எப்போதாவது 500 ரூபாய் தந்துள்ளான் என்றார் உங்கள் அம்மா!?


  உங்கள் அப்பா மருத்துவமனையில் இறந்த பின்பு தான் உங்களுக்கு செய்தி அனுப்பினார் உங்கள் அம்மா! நாம் நாசரேத் வந்தடையும் முன்னே உங்கள் அப்பா  உடலை வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டார் உங்கள் தாயார். அன்றைய தினம்  ஜூன் 5  2015. அன்றே உங்கள் மரண தினவும் குறிக்கப்பட்டது என நினைக்கின்றேன். உங்கள் தம்பிக்கு செய்தி அனுப்பியும் அவன் வருகிறான், வரலாம்,வரவில்லை போன்ற செய்திகள் தான் வந்து கொண்டிருந்தன.  உங்கள் அப்பா இறந்து விட்டார் என்று அறிந்ததும் நீங்கள் செய்த முதல் வேலை ”ஜோஸ் என்னுடன் வருவாயா” என்று என்னிடம் கேட்டு விட்டு பணம் புரட்டி கொண்டிருந்தீர்கள். பல ஆயிரங்கள் கைகளில் சேர்ந்த உடன் நாசரேத் புறப்பட்டோம். உங்க அம்மா சோகத்தில் கதைத்து கொண்டு நின்றார். நீங்க உங்கள் பையில் இருந்து பணத்தையும் காசையும் அள்ளி எறிந்து கொண்டு இருந்தீர்கள். எனக்கோ ஆச்சரியம் அத்தானிடன் எப்படி இவ்வளவு பணம் என்று. இருந்தும் நான் காதில் கூறினேன் பணத்தை கவனமாக கையாளுங்கள்.உங்கள் அம்மா தன் வங்கி கணக்கை திறக்கவே இல்லை. சோகமாக இருப்பது போல் இருந்து கொண்டார்.  நம் இருவரிடமும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. நீங்கள் கடமையில் கண்ணாக இருந்தீர்கள். நான் உங்களுக்கு உதவியாக நின்று கொண்டிருந்தேன். உங்கள் சகோதரன் காலையில் வந்து சேர்ந்ததும் உங்கள் தாயார் மகன்- மருமகளை கட்டி பிடித்து ‘ஆமோஸ் தாத்தா “ போயிட்டாருடா என்று அழுது கொண்டார். ஏழு மணிக்கு அடக்கம். பெட்டியை வீட்டை விட்டு எடுக்கும் முன் சொந்த பந்தங்கள் கேட்கும் படி உங்க அம்மா உங்க அப்பாவின் உதவியாளரை பார்த்து ”சாத்திராக் சார் போயிட்டாருடா, சார் கேட்டது மாதிரியை எல்லாம் செய்து விட்டாய்  நன்றிப்பா என உருகி கொண்டு இருந்தார். எனக்கோ நேற்றைய காலை முதல் இன்று காலை இந்நேரம் வரை நீங்கள் தான் கை திறந்து பணம் கொடுத்து கொண்டிருந்தீர்கள் என உள் நெஞ்சில் குத்தியது.

மூன்றாம் நாள் ஜெபக்கூட்டம். அப்பா விரும்பி சாப்பிடும் ஆட்டு இறச்சி தான் வேண்டும் என்றான் உங்கள் தம்பி. நீங்களும் சரி என்றீர்கள். ஆட்டிறச்சி ஏற்பாடானது. பணத்தை உங்களிடம் இருந்து வாங்கி அடுத்த நாள் பணம் வாங்க வந்த கடைக்காரனிடம் பட்டுவாட மட்டும் செய்து கொண்டான். மாலை நான்  உங்க அம்மாவிடம் இனி மாமா இல்லை. இருக்கும் வரை நாங்கள் ஒன்றும் கேட்டதில்லை. உங்களை நம்பி பணம் உண்டா, எங்கள் வீட்டிற்கு வருகிறீர்களா என்றதும் நான் என் வீட்டில் தான் இருப்பேன். செலவுக்கு தரவேண்டும் என்றார். உங்கள் சகோதரனோ ஏன் இதை எல்லாம் கேட்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்டு கொண்டான். அடுத்து செலவு கணக்கை உங்கள் அம்மாவிடம் காண்பித்த போது எழுதி கொடுத்த லிஸ்டை அப்படியே உங்களிடமே கொடுத்தார். உங்க தம்பி வீடு தனக்கு வேண்டும் என்றும் தன் பிறந்தது இறந்த  குழந்தையை புதைத்துள்ளதால்  தனக்கு தான் வீடு என்றான். உங்க அப்பா வாங்கி போட்டிருக்கும் நாலு பிளாட்டு தனக்கு கிடைக்கலாம் என்ற நோக்கில் உங்க அம்மாவிடம் கேட்ட போது அந்த இடம் வாங்கி போட்டதை அப்பா கூறினர்களோ? எனக்கு மருத்துவ செலவுக்கு வேண்டும் என்றார். நீங்க அமைதியாக என் முகத்தை பார்த்தீர்கள். திரும்பி காரில் வரும் போது நான் கூறினேன் விரும்பி தராத சொத்து நிலைக்காது அத்தான் நீங்க அதற்காக சச்சரவுக்கு போக வேண்டாம். நீங்கள் இப்போது செலவழித்த பணத்தின் ஒரு பங்கை மட்டும் தரக்கூறுங்கள் என்றேன். உங்க தம்பி இங்கு இருக்கும் வரை சென்னையில் சென்றதும் அனுப்பி தருகிறேன் என்றவன் சென்னையில் இருந்து கதைக்கும் போது என்னிடம் பணம் இல்லை நான் கொடுக்கவும் தேவை இல்லை என ஒதுங்கி கொண்டான்.





நான் நீங்கள் ஏமாற்றபட்டதாக குற்றம் சாட்டினேன் . நீங்களோ பெற்ற அப்பனுக்கு செய்வது என் கடமை. அவன் செய்கிறானா என்று நான் பார்க்க தேவையில்லை என்றீர்கள்.  மேலும் என் அப்பா என்னை ஒதுக்கி தள்ளினார் இப்போது பார்த்தாயா நான் தான் அடக்கம் செய்துள்ளேன் என்று தற்பெருமையாக சொல்லி கொண்டீர்கள்



ஜாதி சாற்றிதழ் உங்க அம்மா பென்ஷன், வாரிசு சாற்றிதழ் என எல்லாம் நடையாய் நடந்து பெற்று கொடுத்தீர்கள். உங்க அம்மா இதற்கு பதிலாக அவர்கள் ஜோடியாக நிற்கும் படத்தை கொடுத்துள்ளனர். இந்த படத்தை பர்சில் வைத்து கொண்டீர்கள்., உங்க அம்மாவிற்கு உங்க அப்பா இறந்து 40 நாட்களுக்குள் இதய நோய் வந்து விட்டது. நீங்க கார் பிடித்து உங்க மடியில் கிடத்தி வந்து சி எஸ் ஐ மிஷன் மருத்துவ மனையில் சேர்த்தீர்கள். ராவும் பகலும் நீங்கள் இருந்து கவனித்து வந்தீர்கள். நான் பகல் பொழுதில் உணவுடன் வந்து உடன் இருந்தேன். அவரை இரவில் கவனிக்க என ஒரு பெண்  மணிக்கு தினம் 250 கொடுத்து அமர்த்தினீர்கள். 
அந்த அம்மா உங்கள் அம்மாவுடன் தங்கி இருக்கும் போது நிகழ்ந்த சம்பவங்களை உங்களிடன் கூறினது. போகும் போக்கில் சார்”உங்க தாயாரை பெற்ற கடமைக்கு பார்த்து கொள்ளுங்கள்”வேலைக்கு தான் நீங்க இரண்டு பேரும் என்றார். அவர் மணிக்கணக்காக பேசுவது அந்த மகன்-மருமகளுடன் தான் என்று கூறி சென்றார்.

என்னிடமும் கூறியிருந்தார் ”சாரை அந்த கிழவியிடம் அனுப்பாதீர்கள் சூனியக்காரக்கிழவி”. அந்த பெண்மணி ஏன் அப்படி கூறினார் என நான் சிந்திக்க போகவில்லை. எனக்கு பதிலாக இரவில் என் மாமியாரை  கவனித்தார் என்பதால் தான் அந்த பெண்ணின் மகன் திருமணத்திற்கு இரண்டாயிரம் கேட்ட போது கொடுத்தேன். மரண சாற்றிதழ், சாகும் முன் உங்க அப்பா கோர்ட்டில் வைத்திருந்த வீட்டு பத்திரம் மீட்க. வாரிசு சாற்றிதழ் வாங்கி கொடுக்க என அலைந்து உங்கள் அலுவலகம் வேலையாட்கள் கவனிக்கப்படியான சூழல் உருவானது. 

இப்படியான சூழலில் தான் உங்க தம்பிக்கு வேலை கிடைக்க முன் பணம் கட்ட உங்களிடம் பணம் கேட்க; கையிலிருந்த இரு லட்சத்திற்கு மேல் வங்கியில் இருந்தும் கடனாக எடுத்து கொடுத்துள்ளீர்கள். இதனிடையில் கத்தார் என்ற ஆசையை உங்களில் புகுத்திய உங்க  தம்பி  ஆபீஸ் மேல் இருந்த முழு அக்கறையும்  போக்க செய்து மார்ச் 1 கத்தாரில்; பணியில் சேரப்போகிறேன் என்று கூறியிருந்த நீங்கள் மேலுலகமே சென்று விட்டீர்கள்.   நீங்கள் இருக்கும் போது 10 லட்சம் தாரேன் விடுதலை பத்திரத்தில் கை எழுத்து போடுகின்றாயா என கேட்டு கொண்டிருந்தனர்.   

பாபு அத்தான் நான் இப்போது கேட்பது உங்கள் தம்பிக்காக எடுத்து  கொடுத்த கடனை திருப்பி அடைக்க கூறுங்கள். தாய் , தம்பி பாசத்திற்கு என ஏங்கிய நீங்கள் பணத்தை கொடுத்தாவது  உங்கள் அன்பை மீட்க பார்த்தீர்களோ?  நீங்கள் கத்தார் சென்றால் உங்கள் அலுவலகத்தில் இருந்து 10 ஆயிரம் வரும் என்றீர்கள். பத்து பைசா உங்க உதவியாளர்களால் எனக்கு தர இயலவில்லை. அலுவலகத்தை இழுத்து பூட்டி விட்டனர். அத்தான் விபத்து நம் வாழ்க்கையை மாற்றி மறித்து போய் விட்டது. நான் கலங்குவது: உங்கள் பிரிவு இன்னொன்று உங்க சிந்தனையற்ற செயல்கள் அதை தொடர்ந்து நான் பொறுப்பு ஏற்க வேண்டி வந்த உங்க கடன்கள். எனக்கு உங்களிடம் கோபம் இல்லை வருத்தமும் இல்லை  ஐந்து  லட்சத்தை கொடுத்து தாய் பாசத்தை வாங்கி விட்டு எனக்கும் உங்கள் மகன்களுக்கும் உங்கள் நினைவுகளை தந்து கிளம்பி  விட்டீர்கள். சாம் இன்று விடுமுறை ஆரம்பமாகி விட்டது. உங்கள் நினைவால் மிகவும் சோற்வுற்று  அவன் காலையில் இருந்து மாலை வரை ஒன்றும் சாப்பிடவில்லை. உங்கள் மகன்கள் இனி வளர வேண்டுமென்றால் உங்களை நினைத்து அழுது புரள்வதை நான் நிறுத்த வேண்டும். உங்கள் வசம் தான் நல்ல யுக்திகள் வைத்திருப்பீர்களே. எங்களுக்கு வாழ வழி காட்டுங்கள். 

பெண்களை அதும் மனைவிகளை குறை கூறவே இந்த சமூகம் துணியும். அன்பின் பெயராலும் நேசத்தின் பெயராலும் ஏமாற்றப்படுவது பெண்களே. உங்க  அம்மா கூட உங்க சித்தியிடம் சொல்லி விட்டுள்ளார். பொம்மை மாதிரி இருந்து கொண்டு நல்ல ஊர் சுற்றியுள்ளாள். இனி நல்ல அனுபவிக்கட்டும் என்று. நான் எதையும் கண்டு கொள்ளும் மனநிலையில் தற்போது இல்லை. எனக்கு கிடைத்த பல அறிவுரைகள் தான் என்னை அழ வைத்தது. நான் நானாக இருப்பேன். உங்கள் ஆசை போல் உங்கள் எண்ணம் போல் வாழுவேன்.   காதல் குருடு என்பது போல் நாம் மற்றவர்களிடம் வைக்கும் நம்பிக்கையும் ஓர் வகை குருட்டு போக்கு தான் பெற்றோர்கள் மேல் பெற்ற தாய் மேல் வைத்த உங்கள் நம்பிக்கை  உங்களுக்கு சொர்க வாசலை திறந்து விட்டுள்ளது என நினைக்கின்றேன். யார் யாருக்கோ என்ன என்னமோ செய்தீகள். உங்க பிள்ளைகள் உங்களை நினைத்து ஏங்குவது தான் என்னால் சகித்து கொள்ள இயலவில்லை. உங்கள் மேலுள்ள நம்பிக்கை  வீணாகாத வண்ணம் நான் வளர்க்க வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமாக இருக்கும் அத்தான் உங்க சக்தியை உங்க அன்பை உங்க கரிசனையை எங்களிடம் திருப்புங்கள். இனி உங்களுக்காக வாழ்ந்த வாழ்க்கையை நம் மகன்களுக்காக வாழ உள்ளேன். சாம் நொடிந்து விட்டான். கனவிலாவாது வந்து அவனிடம் கதையுங்கள்.