14 வருடம் முன்பு இதே நாளில் பட்டு சேலை - நகையுடன் அன்றைய நாள் கதாநாயகியாக, உலகிலே அதிக மகிழ்ச்சி கொண்ட பெண்ணாக திளைத்தார் இந்த ஜோசபின். 1 1/2 வருடம் முன்பே பெற்றோரால் நிச்சயிக்கப் பட்டது என்றிருந்தாலும் அது காதலாக பரிணமித்திருந்தது அப்போது! கன்னம் சிவந்த சிரிப்புடன் நின்ற என்னை அவர் சகோதரி அளவாக சிரிக்க பணிந்தார் ஆனாலும் துள்ளி வந்த சிரிப்பு ஓயவில்லை என் முகத்தில்.
தமிழ் சினிமாவில் போன்று இருப்பதல்ல திருமண வாழ்கை என்ற குறைந்தபட்ச அறிவு இருந்திருந்தாலும் கூட என்னை மூழ்கடிக்கும், இரவெல்லாம் அழுது மயங்க வைக்கும் துயரம் வர உள்ளது என்று நான் அறிந்திருக்க வில்லை. வலது கால் வைத்து என்னவர் வீட்டுக்குள் நுழைந்தேனோ இல்லையோ 6 மாதத்திற்க்குள் பணம் என்ற பிரச்சனையால் வெளியில் தூக்கி எறியப்பட்டேன். அப்பாவிடம் பொருள் வேண்டாம், எங்கள் வீட்டில் அளவுக்கு அதிகமாக பொருள் உள்ளது என்று என்னவர் பெற்றோர் கூறிய போது பொருள் தான் வேண்டாம் பணமல்ல என்று என் அப்பா புரிந்து கொள்ளவில்லையா, அல்லது புரிந்தது போல் காட்டி கொள்ளவில்லையா என்று தெரியவில்லை, ஆனால் ஆரவாரமாக தேங்காய், பழம் மாற்றி சம்பந்தம் ஆனவர்கள் திருமணத்தன்று கீரியும் பாம்புமாக உறுமி கொண்டு நின்றனர். ஆனால் இதயம் நிறைந்த அன்புடன் நாங்கள் இணைய துடித்து கொண்டிருந்தோம். இரண்டு குடும்பத்திலும் மறுபடியும் வசந்தகாலம் விரியும் என்ற நம்பிக்கையில் சேர்ந்த நாங்கள்; எப்போது பிரியலாம் என்று நேரம் தேடியதாக மாறினது எங்கள் மண வாழ்க்கை. வாழ்க்கையில் தெளிந்த மேகத்தை விட இடி மின்னலுடன் மேகமூட்டமான சூழலாகவே இருந்தது பல நாட்கள். அந்த நாட்களில் தான் மிக்சி , அரைகல் விலை என்னவென்றும் அவைக்கும் மகிழ்ச்சியான திருமணத்தை தீருமானிப்பதில் பங்கு உண்டு என தெரிந்தது. காதல் கணவர் சட்டினியில் தேங்காய் தண்ணீர் சேர்த்து அரைத்தேன் என்பதற்க்கு கோபித்த போது தான் திருமண வாழ்க்கைக்கு அப்பழுக்கற்ற அன்பும் காதலும் மட்டும் போதாது கொஞ்சம் சமையலும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றம் புரிந்தது.
திருமணம் முடிந்தவுடனே எங்களுடன் இருக்கின்றாயா அல்லது தனியாக செல்கின்றாயா என்ற போது கூட்டத்துடன் சேர்ந்து இருப்பதே நலம் என்று எண்ணிய எனக்கு மாமியார் சொன்ன வார்த்தை “நாங்கள் உன் அப்பா பணத்திற்காக தான் உன்னை கட்டியுள்ளோம்” சிந்திக்க வைத்தது மட்டுமல்ல சிங்க கூட்டில் கிடைப்பதை விட தனிமையிலும் சுகம் உண்டு என்று தெரியவைத்தது. என்னவர் வீட்டில் நான் ஒரு தனி மனிதையாக ஒதுக்கப் படுவதையும் குடிக்கும் காப்பியில் இருந்து கிடக்கும் மெத்தை வரை எனக்கு என்ற ஒரு தனி நீதி உண்டு என்ற போது திருமணம் வெறும் நிகழ்வாக மாறிவிட்டது எனக்கு.
ஒரு மாலைப் பொழுது குடும்ப சம்மேளனத்தில் என் மாமனார் “இந்த திருமணத்தால் எனக்கு என்ன லாபம்?”, என்று கேள்வி கேட்ட போது தான் முதல் முதலாக இந்த திருமணம் கொண்டு எனக்கு என்ன லாபம் என்று சிந்தனை கொள்ள ஆரம்பித்தேன். என்னவருடன் ஊர் சுற்றலாம் என்ற நினைப்பில் இருந்த எனக்கு, கிடைத்த முதல் செய்தி என்னவர் திருமண காணொளி எடுத்த கணக்கில் அவர் அப்பாவிடம் இருந்து வாங்கிய 6 ஆயிரம் ரூபாய் கடம் தீர்த்த பின்பு தான் பேருந்து பயணச் சீட்டு எடுக்க அனுமதி உண்டு என்பது தான்!!
அப்பா அடுப்பு வாங்கி தரவில்லை என்பதால் முதல் முதலாக குழல் பிடித்து அடுப்பு ஊதி பத்த வைத்து இருமி கொண்டிருந்ததும், அப்பா மெத்தை வாங்கி கொடுக்கவில்லை என்ற கோபத்தில் அவர்கள் வீட்டு பஞ்சு மெத்தை என்னவருக்கு கூட கொடுக்க மறுக்கப் பட்ட போது நான் குளிரில்லாது தூங்க அத்தான் சாக்குகளால் மெத்தை உருவாக்கியதும் அதை புலனாய்வு அதிகாரி போல் கண்டு பிடித்த என் அம்மா ‘நானா நீயா’‘ என்று சண்டையிட்டு எரியும் தீயில் எண்ணை விட்டு அது கொளுந்து விட்டு எரிந்து; அவர்கள் வீட்டை விட்டு துரத்தி,தல் 6 மாதத்திற்க்குள் அகதியாகவும் அனாதையாகவும், அனாமத்தாகவும் உருமாற்றப்பட்ட போது தான் திருமணம் எவ்வளவு சிக்கலானது என்ற புரிதல் வந்த போது வாழ்க்கையே அர்த்த சூனியமாகப் பட்டது.
திருமணம் என்ற பந்தத்தால் பிறந்த வீட்டில் என் உரிமை பறிக்க பட்டது மட்டுமல்ல புகுந்த வீட்டில் உரிமைக்காக போராடினால் வாழக் கூட வழியற்று போவேன் என்று அறிய வந்த போது என் மனம் எல்லாரையும் எப்படி பழி வாங்குவது என்று துடித்து கொண்டிப்பதும் எனக்கே தெரிந்தது. தூக்கு போட்டு செத்தால் நாக்கு தள்ளி கோரமாக இருக்கும் என்றும் மண்ணெண்ணையை ஊற்றினால் மாமியாருடன் என்னவரும் களி திண்ண வேண்டும் என்றும் பாரதி கண்ட புதுமை பெண்ணாய் கோர்ட்டு படி ஏறினால் அப்பா மானம் போய் செத்து விடுவார் என்றும் கண்ட போது தான் எலிப்பொறியில் அகப்பட்ட பெருச்சாளியா, வேடன் வலையில் விழுந்த புறாவா அல்லது புலியின் முன் விழுந்த மான் தானா என்று தெரியாது புலம்பி தவித்தேன்.
கடவுளிடம் அதீத பக்தையான ஆன அம்மா சொன்னார் தாத்தா செய்த பாவத்தின் பலன் தான் என் வழியாக விடிந்தது என்றும் அப்பாவோ விதியின் சதியென்றும் சொன்ன போது என்னை நான் முதல் முதலாக தேட ஆரம்பித்தேன். பல மணி நேரம் பைபிள் படித்தேன் கதை புத்தகங்கள் என் ஆகாரமாயின.
அந்த வருடம் எங்கள் மகனும் பிறந்தான். மகனின் சுறு சுறுப்பான வளர்ச்சி வாடிய என்னையும் தளிர செய்தது . பொறுப்புள்ள அம்மா ஆகி கொண்டே இருந்தேன் பல பிடிவாதங்கள் மகனுக்காக விட்டு கொடுத்தேன். காதல் தீயை விட அன்பு தீ தான் அப்போது எனக்கு என்னவரிடம் பற்றி பிடிக்க உதவியது. எங்களை இணைக்கும் கயிறாக பல பொழுதும் எங்கள் மகன் உருமாறினார். சில பொழுது தீர்க்க முடியாத பல சண்டைகளுக்கும் அவனே தீர்வாகினான் நாங்களும் மறக்க வேண்டியதை மறக்க துணிந்தோம் அதனால் பிரிதல் விட புரிதல் எங்களை தேடி வந்தது.
போட்டி போட்டு கொண்டு அறிவுரை நல்கிய -அவருடைய பெற்றோர், சம்பளம் கிடைக்காது இருந்த போது கண் மூடி பால் குடிக்கும் பூனையாகவே இருந்து பார்த்து கொண்டு இருந்தனர் . ஒரு வங்கி பணிக்கு நான் தேர்வாகிய போது அதை பொறுப்பாக பெற்று தர என் பெற்றோரோ அவர் பெற்றோரோ முன் வரவில்லை. அன்று தான் நாங்கள் புரிந்து கொண்டோம் பெற்றோர் பாசம் கூட பல பொழுது வேஷம் ஆகிவிடக் கூடும் என்று.
இருவர் வீட்டு எதிர்ப்பையும் மிஞ்சி கேரளாவில் இருந்து தமிழகம் தூத்துகுடி வந்து குடியேறினோம். அழகான நாட்கள் தொடங்கி விட்டது என்று ஆயிரம் கனவுகளுடன் முதல் மகன் துணைக்கு அடுத்தவருக்கும் வரவேற்ப்பு கொடுத்த மறு மாதமமே அத்தான் வேலை போய் வீடு வந்து சேர்ந்தார். பின்பு அப்பா கொடுத்த நகை கொஞ்சம் நாள் சோறூட்டியது, வீட்டு வாடகையும் கொடுக்க செய்தது. தூத்துக்குடி அழகான கடல் கொண்ட முத்தான ஊர் என்றால் கூட போதிய சம்பளம் இல்லாது அங்கு வாழ்வது பெரும் சுமையாகவே இருந்தது. 7 வருடம் முன்பு, ஒரு லாரியை பிடித்து வீட்டிலுள்ள கட்டில் அலமாரையுடன் நெல்லை பட்டணம் வந்து சேர்ந்தோம். வாடகை வீடு வாழ்க்கை நரகமாக தென்பட்டபோது கொஞ்சம் மிதி பட்டாவது மாமியாரிடமே வாழலாம் என்று முடிவெடுத்து கைகுழந்தையுடன் சென்ற போது உங்களால் மாதம் எந்த அளவு பணம் தர இயலும் என்று கேட்டு விட்டு, எங்களுக்கு தங்கவே இங்கு இடம் பத்தாது, வேண்டுமென்றால் எதிர்வீட்டில் வாடகைக்கு இருந்து கொள் இரவு வந்து நடு ஹாளில் படுத்து கொள் என்று சொல்லப் பட்டது எங்களுக்கு.
அழுது கலங்கிய கண்ணுடன் உடைந்த மனதுடன் வந்து வீட்டில் கட்டளையில் வைத்துள்ள குடத்தை எடுத்து அதன் உள்ளில் பொட்டலமாக கட்டி வைத்திருந்த நகையை எடுத்து என்னவ்ரிடம் கொடுத்து நகையை வீடாக மாற்றி தாருங்கள் என்று பிடிவாதமாக கேட்டேன். அவரோ நகையில்லாது இருந்தால் உன் வீட்டு விசேஷங்களுக்கு கூட அழைக்க மாட்டார்கள் என்ற போது எனக்கு வசிக்க மட்டுமல்ல, வாழ ஒரு வீடு இருந்தே ஆக வேண்டும் என்று மட்டும் பட்டது. வீடு முகவரி மட்டுமல்ல தன்மானம், நம்பிக்கை, அமைதி எல்லாமே அதில் தான் அடங்கி இருந்தது.
ஒரு நாள் என்னவர் வந்து கல்லூரியில் சென்று படிக்கின்றாயா என்று வினவினார் தபாலில் என்று நினைத்தே தலையாட்டினேன். ஆனால் என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு என்னையும் பல்கலைகழகம் அனுப்பி அழகு பார்த்தார்.
பல நாட்கள் காலையிலும் மாலையிலும் 1 மைல் தூரம் நடந்து சென்று பேருந்து பிடித்து, அந்த பேருந்தில் இருந்து அடுத்த பேருந்தை பிடித்து 1 மணி நேரம் பயணம் செய்து தங்க மெடலுடன் ஜெயித்த பின்பு தான் என் ஆன்மா அடங்கியது. வாழ்க்கையை காய்ந்த இலையாக நோக்கிய எனக்கு என் வாழ்வில் உள்ள தளிர் இலையை காட்டி தந்ததும் , என்னை மட்டும் நோக்கி நோக்கி அழுது புரண்ட என்னை அடுத்தவர்களையும் நோக்க செய்ததும் நேற்றைக்கும் நாளைக்கும் இல்லாது இன்று, இந்த நாளுக்கு என்று வாழ இட்டு சென்றது கல்வி ஞானம் மட்டுமல்ல நல்ல நட்புகளும் தான்!
இன்றும் வழியெல்லாம் ரோஜா புஷ்பங்கள் விரிந்து கிடக்கவில்லை . இப்போதும் என்னவருடன் கட்டி புரண்டு சண்டையிடுவது உண்டு ஆனால் அடுத்த கணம் கட்டிபிடித்து அவரிடம் அடங்கி போவதும் சிலபோது அவரையும் அடக்க துணிவு நல்குகின்றது. வாழ்க்கையை ரசனையுடன் நோக்கவும் சம்பவங்களை தெளிவாக பார்க்க கற்று தருகின்றது அனுபவங்கள்.
14 வருடங்கள் திரும்பி பார்க்கும் போது என் பொறுமையற்ற குணத்தால், சகிப்பு தன்மை இல்லாததால், முன்கோபத்தால் பலவற்றை இழந்து முட்டாள் ஆனேன். ஆனால் ஒன்றை தவிற அதுதான் என்னவரை இறுக்க பற்றி கொண்டு பிரியாது வாழ்ந்த ஒரே புத்திசாலித்தனம்! இந்த முடிவே இந்த பதிவை எழுத கூட எனக்கு வாய்ப்பு நல்கியது.












