8ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் என் பார்வையில் கடந்து சென்றது. பல இலக்கிய பாடங்கள் ஆசிரியர் -மாணவர் உரையாடல்கள் பாணியில் அமைத்துள்ளனர். இது ஒரு வித அலுப்பையே தருகின்றது. அம்மா –குழந்தை, அப்பா- மகன் உரையாடுவது, நண்பர்களுக்குள் உரையாடுவது என இன்னும் சுவாரசியம் கலந்து உள்படுத்தியிருக்கலாம். மாணவர், ஐயா ஐயா என்று கதறி காலில் விழுகின்றது ஏதோ ஒரு நெருடலாகவே உள்ளது. தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு நகல் பெறுக்கி வேலையில் ஒதுக்கீடு உண்டு என்பதற்க்கு இணங்க “ஆமா சாமி” இனத்தை உருவாக்கும் நோக்கமா என்றும் தெரியவில்லை. பல ஊர்களில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் டில்லி(Central board), உலகத்தர (international schools) பள்ளிகளாக மாறி கொண்டிருக்கும் நிலையில், சிறப்பாக அரசு உயர் அதிக்காரிகள், பணக்காரர்கள் குழந்தைகளுக்கு இப்பள்ளிகளுக்கு மாறும் சூழலில் சமசீர் பள்ளி பாடத் திட்டம் திட்டமிடப்பட்டே கொண்டு வரப்பட்டுள்ளதா?
நாங்கள் எஸ்டேட்டில் வாழ்ந்த சூழலில் மேல் அதிகாரிகளை தொழிலாளர்கள், மட்டுமல்ல அதிகாரிகள் தங்களுக்குள் ஐயா என்று அழைப்பதிலும் கேட்பதிலும் இன்பம் கண்டிருந்தனர். அவர்கள் மனைவி, மக்கள் கூட ஐயா என்று அழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதிகார வாஞ்சையுடன் வாழவும் பழகினர். ஐயாக்கள் மனைவிகளும் அம்மாக்களாகவும், அவர்களின் தொட்டிலில் ஆடும் குழந்தைகள் கூட ஐயா பிள்ளை என்றே அழைக்க பட்டனர். இதன் துவக்கம் பிரிடீஷ் அதிகாரிகள் தேயிலை தோட்டத்தை ஆட்சி செய்வதில் இருந்து வந்தது என்று சொல்லப் படுவது உண்டு!
பின்பு கல்வி, நாகரிகம் எங்கள் பகுதியை வந்தடைய துவங்கிய போது ஐயா என்று அழைப்பது தன்மானத்திற்க்கு வேட்டு வைப்பதாக கருதியதால் ஒரு தீர்மானத்துடன் சார் (sir) என்று மாற்றி கொண்டனர்; சிலர் பிரத்தியேகமாக அழைக்காது மொட்டையாக அழைக்கவும் கற்று கொண்டனர். என்னுடைய ஒரு உறவினர் தமிழகத்தில் அரசு அதிகாரியாக பணிபுரிகின்றார் அவருடைய மேல் அதிகாரியை சக ஊழியர்கள் “ஐயா’ என்றே அழைக்க வேண்டுமாம். மேல் நாடுகளில் மாணவர்கள் திரு. என்று சேர்த்து பெயர் சொல்லி அழைக்கும் போது இந்திய மாணவர்களின் மன நிலைமையும் அதற்க்கு எதிர்மறையாக வளர்ப்பதால் உலகச் சந்தையில் தரம் தாழ்ந்த இடம் வழங்கப் பட வாய்ப்புக்கள் நிறையவே உண்டு என்று மறக்கல் ஆகாது!.
மலையாளிகளுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் ஏன் என்றால் வாங்க போங்க என்று அவர்களை பவ்வியமாக அழைப்பது தான்!! ஆனால் அவர்கள் நம்மவர்களை ஒருமையில் அழைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். தமிழர்களுக்கு அடிமை மனோபாவம் காலா காலம் தொட்டு இரத்தத்தில் ஊறிய பண்பே; எங்கும் அடங்கி போக ஒத்து கொள்வான் இவனை மட்டம் தட்டியே பக்கத்தில் இருப்பவர்கள் தங்கள் மேலான்மையை நிலைகாட்டி கொண்டு இவனை நடத்தி செல்வார்கள் என்று மறுக்க இயலவில்லை. தமிழன் வேற்று மொழியாரை புகழும் அளவுக்கு நம்மில் ஒருவனை அடையாளம் கண்டு கொள்ள, அங்கிகரிக்க தயங்குவார்கள்.
தமிழனுக்கு இரட்டை வாழ்க்கை முறை,கலாச்சாரம், பேச்சு, மொழிப் பற்று, அரசியல் என்பதில் பாடுபாடு இல்லாது அவன் அறியாதே அவனை பின் தொடந்து வருகின்றது. தமிழன் மொழிபற்று என்று காட்டி கொண்டாலும் ஆங்கிலத்திலும் தங்கிலிஷிலும் கதைத்து தன்னை அறிவாளி என்று காட்டி கொள்ளும் ஆற்வம் இவனை விட வேறொருவனுக்கும் இருப்பதில்லை. ஈழத் தமிழர்கள் மறு நாடுகளில் குடிபெயர்ந்திருந்தாலும் தங்களுக்குள் நடைபெறும் தொடர்பாடலுக்கு, ஏன் வெட்டி பேச்சுக்கு கூட தமிழ் மொழியவே பயன்படுத்த விரும்புவர். ஆனால் தமிழகத் தமிழன் அவன் தலைநகரம் சென்னையில் கூட தமிழ் பயன்படுத்த நடுங்குவான், வெட்கப்படுவான். ஒரு விதமான தன்மான மற்ற பொய் மரியாதை கொடுக்கின்றான் மட்டுமல்ல பெறவும் விரும்புகின்றான் என்பதே இதன் காரணம்!! எல்லா நாடுகளிலும் சிறப்பாக ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ், நோர்வே, கனடா, ஆஸ்தேரிலியா போன்றவற்றில் மட்டுமல்ல ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலிலும் அவரவர் தாய் மொழியில் தொடர்பாடல் பேணும் போது தமிழகத்தில் ஆங்கிலம் பேச்சு மொழியாக அறிவு சார்ந்த மொழியாக மாற்றம் பெற்று வருகின்றது என்பது தான் உண்மையிலும் உண்மை!! சென்னையில் பேருந்துகளில் பயணிக்கும் போது வெளிநாட்டு காள்சென்றருகளில் வேலை செய்யும் நபர்கள் உச்ச ஸ்தாயியில் ஆங்கிலத்தில் கதைத்து தங்கள் அறிவை பறைசாற்றி கொண்டு செல்வதை காணலாம். அமெரிக்காவில் உணவகம் வைத்துள்ள ஒரு தோழர் கூறுகையில் தமிழக பெற்றோர்கள் தும்முவது கூட ஆங்கிலத்தில் என்று கருதலாக இருப்பார்களாம் பொது இடங்களில்; இவர்கள் வெத்து பந்தாவை வைத்தே தமிழகத் தமிழர்கள் என்று கண்டு பிடித்து விடுவாராம். சமீபத்தில் ஒரு அமெரிக்க உறவினரை சந்திக்க நேர்ந்தது. அவர் அமெரிக்காவில் குடிபெயர்ந்து 10 வருடத்திற்க்குள் தான் இருக்க வேண்டும் இருப்பினும் அவர்கள் 12 வயது மகன் கஷ்டப் பட்டு மாமா என்று உச்சரித்தான். அவர் நெருங்கின உறவினர்கள் அம்மா பாட்டியிடம் கூட உடல் மொழியால் தான் கதைத்து கொண்டிருந்தான். அக்குழந்தையின் பார்வை எங்கள் கேரளாவில், தமிழர்களை மலையாளிகள் நோக்கும் ஒருவித அருவருப்பு, எகத்தாளம் நிறைந்து இருந்தது. இந்த நிலையில் நம் தமிழக பள்ளியில் தமிழை அழகான பேச்சு மொழியாக கற்பிக்காது வெறியாகவும் அரசியல் நோக்குடன் கற்று கொடுப்பது எவ்விதம் பலன் தரும் என்றே கேட்க தோன்றுகின்றது.
மரியாதை என்பது மனதில் இருந்து வர வேண்டும், வார்த்தைகளில் மட்டும் ஆகாது. என் சமீப கல்லூரி நாட்களில், நான் அறிந்த ஒரு இளம் பெண் பிறந்த நாள் அன்று ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவார் ஆசிரியரிடன் கோபம் வந்துவிட்டால் கீழ்த்தரமாக ஒருமையில் தான் அவரை திட்டுவார் .
நான் என் நண்பர்களுடன் கதைக்கும் போது சார், சார் என்று விளிப்பது உண்டு. இந்த வழக்கம் பெரிய குளம் கல்லூரியில் படிக்கும் போது தான் என்னுடன் ஒட்டி கொண்டது. எங்கள் கேரளா சூழலில் இப்படியான ஊள கும்பிடும் இடும் சூழல் இருந்தது கிடையாது. நான் தமிழகத்தில் பெரிய குளம் கல்லூரியில் சேர்ந்த போது என் பெயர், ஊர் பெயர் என்ன என்று ஒரு பெண் பேராசிரியரால் கேட்கப் பட்டது. பதில் அளிக்கயில் பேராசிரியை, என்னை கடலையை சட்டியில் போட்டு வறுப்பது போன்று சொற்களால் வறுத்து எடுத்து விட்டார். நீ எந்த ஊர், ஓ கேரளாகாரியா, நினைத்தேன் மரியாதை இல்லாது பேசுகின்றாய் என்று நிறுத்தம் இல்லா பேருந்து போல் போய் கொண்டே இருந்தது அவருடைய கோபம். ஒரு கட்டத்தில் என் கண்ணீரை கண்ட போது தன்னை ஆசுவாசப் படுத்தி கொண்டு எனக்கு மன்னிப்பு தர முன் வந்தார். பின்பு என்ன சொன்னாலும் கேட்டாலும் “எஸ் மேம், ஆமாங்க மேம், இல்லை மேம்” என்று என் பதில் தர பழகி கொண்டேன். தற்போது நண்பர்களுடன் கதைக்கும் போது 'நாய் வாலு நிமிராது' என்பது போல் “சார், சார்” என்று என்னால் சொல்லப் படும் போது அவர்கள் கேலி செய்வது உண்டு. அவர்கள் நாடு வழக்கம் பற்றி சொல்லி தருவர், தென் தமிழகத்தில் தான் இந்த நோவு அதிகம் என்று கருதிய போது தமிழக பாடப் புத்தகமே போதிப்பது இது தான் என்பது வருந்த தக்கது.ஆனால் பெண்களை பொம்பளை என்றும் வயதானவர்களை கிழவி என்றும் மிக சாதாரணமாக பொது இடங்களில் அழைப்பதும் அதை கேட்டு கேலியாக சிரிப்பதும் தமிழகத்தில் தான் காண இயலும். ஒரு வித நாடக தன்மை தமிழ் மொழிக்கு மட்டுமல்ல தமிழர் வாழ்க்கையிலும் உண்டு . புத்தகத் தமிழுக்கும் பேச்சு தமிழுக்கும் எந்த சம்பந்தவும் இருப்பது இல்லை. ஆனால் மலையாள மொழியில் இந்த பாகுபாடு காணல் மிகக் குறைவே, மொழியை சாதாரணமாக போதை வெறி கொண்டு அல்லாது பயன்படுத்துவர் ! அவர்கள் மொழியை எந்த அளவு நேசிப்பார்களோ அதே போல் அடுத்தவர் மொழியை பற்றி அறியவும் அவர்களுக்கு ஆசை, ஆவல் உண்டு. பொது இடங்களில் அவர்கள் மொழியில் கதைக்க வெட்கப் படுவது இல்லை.
நான் கோட்டயம் கல்லூரியில் படிக்கும் போது என் அறை தோழிகள் தமிழ் எழுத்து வார்த்தைகள் என்னிடம் எழுதி ஆற்வமுடன் கற்று கொண்டனர். ஆனால் தமிழகம் பெரியகுளம் வந்த போது மலையாள மொழி மூக்கில் பேசுவது என்று கேலி பேசிக் கொண்டு; தமிழ் மட்டும் தான் உலகிலே சிறந்த மொழி என்ற எண்ணம் கொண்டு ஒரு வார்த்தை கூட கற்று கொள்ள விரும்பவில்லை நம்மவர்களால். இந்த மன நிலையால் மற்றவர்களிடம் பழகுவது வேலை பார்ப்பது எல்லாமே அடுத்தவர்கள் தலைமையில் தள்ளபடும் சூழலுக்கு ஆளாகுன்றனர் தமிழர்கள்!!
“ஆகுபெயர்” என்ற பகுதியில் 17 தடவை “ஐயா” என்ற வார்த்தை இரு பக்கத்திற்க்குள் வருகின்றது. கண் திறந்தது என்ற ஒரு பாடம் அதில் கவிதா எழையாம் அவர் அம்மா சொல்வதாக சில வார்த்தைகள் கொடுக்கப் பட்டுள்ளது அவை “பெட்டைக் கோழி கூவிப் பொழுது விடியுமா, உடுப்பதோ கந்தலாடை…….. எதற்க்கு ஐயா படிப்பு என்ற சொல்லாடல்கள் நாடக தன்மை கொடுக்குமே தவிர மாணவர்கள் மனதில் தன்னம்பிக்கை வளர்க்க, சிந்தனை வளம் வளர்க்க உதவாது. மேலும் அரசு அளிக்கு இலவச புத்த்கங்கள், உடுப்பு பற்றிய தம்பட்டம் மாணவர்களின் நல்ல பண்புகளை அழிக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் உண்மையற்ற கிராம விவரணங்கள் நம்பக தன்மையை குறைப்பதுடன் ; அரசியல் வாதிகள் நினைப்பது போல், சினிமா கதைகளில் காண்பது போல் அல்ல இன்றுள்ள கிராம நிலை என்று உணர இயலும். கந்தை உடுத்தால் கூட தன்மானத்துடன் வாழ்கின்றனர் கிராம மக்கள். மேலும் குழுவாக உறவினர்களுடன் வாழ்வதால் அவர்கள் ஆற்றல் தன்னம்பிக்கை மிகுதியானதே. சொல்ல போனால் நகர்புற மக்கள் தான் தங்கள் வேலை, சம்பளம், சாப்பாடு தொலைகாட்சி என்று அடுக்கு மாடி வீடுகளில் கூண்டு கிளிகளாக வாழ்கின்றனர் .
தமிழர் வானியல் என்ற பாடத்தில் திருக்குரல் பெருமை சேர்த்துள்ளனர். திகட்ட திகட்ட சாப்பிடால் வாந்தி வருவது போல் எங்கும் எதிலும் திருக்குரல் என்று நுட்பமாக ஏதோ ஒரு காரணத்திற்காக மாணவர்கள் பாடத் திட்டத்தில் சேர்க்கப் பட்டு வடிவமைத்துள்ளனர். அதில் வரும் பல பாடப் பகுதிகளும் சுவாரசியம் அற்று மாணவர்களை மூச்சடைக்க வைப்பதாகவே தோன்றுகின்றது.
அடுத்தது தமிழர்கள், தமிழ் மொழி என மாணவர்களை கிணற்று தவளையாக வலம் வர பலவந்தப் படுத்துவதாகவும் உள்ளது. தமிழ்மட்டும் தான் சிறந்தது தமிழ் மட்டுமே உண்மையான மொழி என்ற தற்-பெருமை ஆபத்தானது மட்டுமல்ல வன்முறையும் கூட!! நம் கலாச்சாரங்கள் மட்டுமே சிறந்தது என்றால் மற்றவையை பற்றிய நம் அறிவு, தேடுதல் என்ன என்றும் அறிய வேண்டியுள்ளது.
கவிதைகள் கூட 4 வரி கவிதைகள், முழுமையற்ற கட்டுரைகள், நிறைய பொய் மூட நம்பிக்கைகள் என சிந்தனையை அறிவை வளர்க்க, பகுந்தாய்வு திறன் கொடுக்காத வகையில் எழுதப் பட்டதாகவே உள்ளது. உதாரணமாக ராமாயணத்தில் புஷ்பக விமானம் உண்டாம் அதனால் தமிழர்கள் அன்றே வானூர்தி பயன்படுத்தியிருந்தனராம். ராமாயணம் ஒரு கட்டு கதை சைவ மதத்தை அழிக்க எழுதப் பட்டது என்று உண்மை நிலை உள்ள போது; இவ்விதம் குழந்தைகள் மனதில் பொய்யை திணிப்பதால் என்ன பயன்? என்னதான் நியாயம்? தமிழ் மொழியை சில நோக்கங்கள் சில குறிக்கோளுடன் தமிழக கல்வித் துறை கற்பழிப்பது மட்டுமல்லாது கொலையும் செய்ய துணிந்துள்ளது என்பதே வருந்த தக்கது.
1823-74ல் வாழ்ந்த இராமலிங்க அடிகளார் பாடல் ஒன்று வாடிய பயிரை……………… இந்த காலத்தின் துயர் கொண்ட கவிதைகள் கட்டுரைகள் என்று ஒன்றுமில்லை. பல பாடங்கள் ஒரு 13 வயது மாணவனை மனதில் கொண்டு தயாரித்தது போல் தெரியவில்லை. இக்கால மாணவர்கள் வாழும் சூழல் அவர்கள் மனநிலை, கற்பனை வளம் ஒன்றும் கணக்கில் எடுக்காதை இப்புத்த்கம் வடிவமைக்கப் பட்டுள்ளது. . வாடிய பயர் கடந்து பாக்கட் தண்ணீர் மணல் கொள்ளை, சுகாதாரம் மற்ற சுற்றுப் புறம் என்று எங்கோ போய் கொண்டு இருக்கின்றது தற்போதய சூழல்.
இதைவிட 1000 மடங்கு அருமையான எழுத்துக்கள் பதிவு உலகில் உலவுகின்றது என்பது உலகறியும் ஆனால் கல்வித் துறையல்ல. தற்கால எழுத்தாளர்கள் சுஜாதா, ஜெய மோகன் , நாஞ்சில் நாடன், ராம கிருஷ்ணன் போன்றோரின் கதைகள், ஈழத்து கதைகள் கவிதைகள் தற்கால கவிஞர்களின் கதைகள் சேர்த்திருக்கலாம். ஒரு நண்பர் கல்வித் துறையோடு சம்பந்தம் இல்லாதவர் பல புத்தகங்கள் எழுதியிருப்பவர் 2435 புத்தகங்கள் வாசித்துள்ளவர், நான் அறிவேன். இவரை போன்றோரின் எழுத்துக்கள் மாணவர்கள் மத்தியில் சென்று அடையும் போது தான் தமிழ் மொழி மேல் காதல், பற்று கொண்டு படிக்கும் காலம் வரும் !!!!