5 Oct 2011

எங்கே செல்லும் திருமணப் பாதை…..



 சமையல் கலையில் நிபுணரான ஒரு நண்பர் அமெரிக்காவில் உண்டு; அவர் பேசும் பல செய்திகள் சமையலை பற்றியே இருக்கும். நானோ சமையலை சோம்பலாக பார்ப்பவள்.   அவர் கடவுள் நம்பிக்கையில் நாத்திகர் என்றால் நானோ ஆத்திகை!  எங்களுக்குள் நடக்கும் உரையாடல் பல பொழுதும் சண்டையில் தான் முடியும்.  ஆனால் ஒரே ஒரு  ஒற்றுமை  அவருக்கும் எனக்கும் பாடல் கேட்பதில் ஒரே ரசனை என்பது மட்டுமே. அவர் அனுப்பும் பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமான 90 களிலுள்ள மலையாள சினிமா பாடல்கள்! அப்படி தான் ஒரு முறை ஒரு பாட்டு அனுப்பியிருந்தார் ராக்குயிலின் ராஜசதஸில்என்ற  படத்திலுள்ளபூமுகவாதிக்கல்…..’ என்ற  பாடல்.  அதன் பாட்டு வரிகளின் அர்த்தம் தமிழிலுள்ள ஆறுமனமே ஆறுஎன்ற பாட்டுடன் ஒத்திருந்தது.  மலையாள கவிதை நடையிலுள்ள அப்பாடலலில் குடும்ப வாழ்க்கைக்கு உதவும் பல அரிய  கருத்துக்கள் உள்ளடங்கி இருந்தது.  ஒரு கணவர் தன் மனைவி எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என விரும்பி  கதைக்கும் அழகான சொல்லாடல் கொண்ட பாடல் அது! அப்பாடல் பங்கு பெற்ற சினிமாக் கதை கூட நண்பரின் வாழ்க்கையோடு மிகவும் ஒத்திருப்பதாக கூறினார்.

http://www.youtube.com/watch?v=rgb2hca2QT0 இப்பாட்டில் வரும் வரிகளின்  அர்த்தம் இப்படியாக இருந்தது நான் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வரும் போது என் மனைவி வீட்டு வாசலில் நின்று சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும். வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டத்தால் மகிழ்ச்சி என்ற ஒளி அணையாது இருக்க அன்பு என்ற எண்ணை ஊற்றி எரிய வைப்பவளாக இருக்க வேண்டும் என் மனைவி.

ஒரு கணவனின் அதீத ஆசையோ  என்று ஒரு கணம் எண்ணினாலும் இப்படி ஒரு மனைவி அமைந்து விட்டால் குடும்பங்களில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு  தீர்வாகும் தான் என்று உணர்த்தியது. ஆனால் அதுவே கடினமாகவும் பல மனைவிகளுக்கு உள்ளது.  என் ஒரு நண்பரிடம் இப்பாட்டை பகிர்ந்த போது எனக்கு இந்த பாட்டு பிடிக்கவில்லை நான் வேலை முடிந்து வரும் போது பல நாட்களில் என் மனைவி என்னுடன் சண்டை பிடிப்பதற்கே நிற்ப்பாள் என்றார்.

ரொம்ப காரசாரமாகவும், விளையாட்டாகவும் கேலியாகவும் விவாதிக்கும், பேசப்படும் உறவாக கணவர்-மனைவி உறவு மாறுகின்றதை முகநூல் மற்றும் பட்டிமன்றம் போன்ற ஊடக உரையாடலில் பலபொழுதும் கண்டுள்ளேன்.  இதை மையமாக வைத்து தான் பல தொலைகாட்சி நிகழ்ச்சிகள் கூட நடைபெறுகின்றது.

ஒரு சிறு கயறில் கம்பை பிடித்து பாலன்ஸாக  நடக்கும் வித்தை போல் தான் பல ஆசைகள் எதிர்பார்ப்புகளுடன் இரு மனங்கள் இணையும் மண வாழ்க்கையும் செல்கின்றது.  ஒரே கதைப்புகள், விளையாட்டு என்று மகிழ்ச்சியான சூழலில் திடீர் என ஒரு 'மயான அமைதி நிலவுவதை காணலாம் இவ்வுறவில்!  காரணம் அற்ற சின்ன சின்ன ஊடல்கள் கூட பெரிய சண்டையில் முடிவதையும் கண்டு உணரலாம்.  இப்படியான உறவுகள், உணர்வுகள் அடங்கிய திருமணம் என்ற பந்தம் என்ன தகுதியில், என்ன நிலையில் கட்டி அமைக்கப்படுகின்றது என பார்க்க வேண்டியுள்ளது.

   வயிற்று பிழப்பிற்கான ஒரு வேலைக்கு கூட தகுதிஎன்ற ஒன்று நிர்ணயிக்கும்  போது; வாழ்க்கை என்ற நிலையில் நம்மை தாங்கும் திருமணம் என்ற பந்தத்தில் நுழைய வயது மட்டுமே ஒரு தகுதியாக வைத்திருப்பது வியர்ப்பாக தான் உள்ளது.   ஒரு பக்கம் நகை, பணம், அந்தஸ்து மறுபக்கம் வேலை, சொத்து என்று நிர்ணயிக்கப்பட்டு பல திருமணங்கள் முடிவாகின்றது.  ஆசையாக வாழ துவங்கும் பல திருமண தம்பதிகள் ஈகோ  என்ற சகதியில் சிக்கி  தங்களை மட்டுமல்ல தங்களை சார்ந்து இருக்கும் குழந்தைகள் நலனையும் மகிழ்ச்சியையும் அழித்து விடுகின்றனர்.  வேலைக்கு சென்று பணம் ஈட்டுவது வழியாக சம தகுதியும் அந்தஸ்தும் உள்ள ஆண்-பெண் இருவருக்கும் தங்களை மன-உடல் சுமைகளை இறக்கி வைக்க தணல் மரங்கள் கிடைக்கும் போது,  மன உளர்ச்சியில் தள்ளப்படும், குழந்தைகளை பற்றி பல பெற்றோர் மறந்து விடுகின்றனர்.  பல மனைவிகள், பிரிந்து சென்ற கணவனின் நிழல் தங்கள் குழந்தைகள் மேல் விழக்கூடாது என்று அடம் பிடிக்கும் போது தன் அப்பாவின் அன்பான அரவணைப்பில், பாசத்தில் வளர வேண்டிய குழந்தைகள் கொள்ளும் மன அழுத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல.

திருமண வாழ்க்கை  ஒரு சதுரங்க விளையாட்டு மாதிரி தான். சில சட்ட-திட்டங்களுடன் குறிப்பிட்ட வழிமுறையுடன் கவனமாக தன் நிலைகளை அறிந்து  விளையாடும் போது சுவாரசியமாக முன்னேற முடிகின்றது.  சில விட்டு கொடுத்தலுகள்,  தனிமனித சுதந்திரத்தை மதித்தல், காத்திரமான கருத்துரையாடல், மனம் திறந்த பேச்சு, எல்கை அற்ற அன்பு, நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் எந்தளவு பிரட்சனை இருந்தாலும் சமாளித்து ஜெயித்து விடலாம் என்பதே உண்மை.

பல வீடுகளில் தம்பதிகளுக்குள் நிகழும் பிரச்சனைகளுக்கு  அவர்கள் பெற்றோர்களே காரணமாகின்றனர். மாமியாரால் என்ன பிரச்சனை பெண்கள் எதிர் கொள்கின்றார்களோ அதே பிரச்சனையை தன் மாமியாரால் ஆண்களும் எதிர் கொள்கின்றனர்.  இதனால் மனைவி, குழந்தை என தன் குடும்பத்தை இழந்து தவிக்கும் ஆண்களின் எண்ணிக்கை கூடி கொண்டே வருகின்றது !

 பல பெண்கள், பெற்றோர்  பாச வலையில் சிக்கி அல்லல் கொள்வது மட்டும் அல்லாது தன் கணவர், குழந்தைகளையும் துயரில் சிக்க வைத்து தானும் துக்கத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர். இதில் வாழ்க்கையில் துன்புறும் மகளை  வசதியாக தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் பல பெற்றோர்; சுகமாக; கணவர் குழந்தைகளுடன் வாழும் மகள்களுக்கு தான் தீராத தலைவலி கொடுக்கின்றனர். மாமியார் பெண்களுக்கு எந்த அளவு துன்பத்தை உருவாக்குகின்றனரோ அதைவிட ஒரு படி மேலை போய் பல மாமியார்கள் தங்கள் மகள்களின் கணவர்களுக்கு சிக்கலை உருவாக்குகின்றனர்.

இதனால் பல கணவர்கள்  காதலித்த  மனைவியை பிரிந்து வேறு திருமணவும் முடிக்க மனம் இல்லாது; சேர்ந்து வாழுவும்  இயலாது  வெறும் நினைவுகளுடனும் கனவுகளுடனும்  வாழும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். தங்கள் வாழ்க்கை சீரழிவுக்கு இக்கணவர்களின் பங்கும் மறுக்க இயலாதது. முதலில் மனைவியின் எச்சொல்லுக்கும் தலையாட்டும் மரமாக இருந்து  விட்டு மாமியார் குடும்பத்திற்க்கு தன் வீட்டில் இடம் கொடுத்து கொஞ்சம் நாளில் அவர்கள் ஆளுமை பிடிக்காது, மனைவியும் இழந்து தன் வீட்டிலே அனாதர்களாக வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்!

இந்தியாவில் பெண் நலனை கருதிபெண்கள் பாதுகாப்பு சட்டம் வந்த போது, கணவர் வீட்டுகாரர்களுக்கு தங்கள் நியாயங்களை வாய் திறந்து சொல்ல கூடிய அனுமதி கூட மறுக்கப்பட்டு விட்டது. இதனால் பல வீடுகளில் மகன்களின் திருமண மேடை என்பது அவர் பெற்றோர்களின் ஆசை- கனவுகளின் சமாதி மேடையாகவே மாறுகின்றது.  இக்காலத்து பல படித்த பெண்கள் வாய் திறந்தால் கூவம் ஆறாக ஓடுவதால் உறவினர்கள் கூட நெருங்க தயங்கி தூரமாக நின்று வேடிக்கை மட்டும் பார்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டனர். பல இளம் தம்பதிகள் திருமணம் முடிந்து 18 மாத்த்திற்க்குள் பிரிகிறதாக சில ஆய்வறிக்கைகள் சொல்கின்றது. சென்னையில் கடந்த வருடம் மட்டும் 4 ஆயிரம் தம்பதிகள் விவாகரத்திற்க்கு அணுகி உள்ளார்களாம் இதில் 50 சதவீத்திற்க்கு மேல் உள்ளவர்கள் 35 வயதிற்க்கு உட்பட்டவர்களாம்.  40 % பேர் கணிணித் துறை சேர்ந்தவர்களாம்! நம் புலம்பெயர் ஈழ சகோதர்களை எடுத்து கொண்டால் இதன் சதவீதம் அதிகமே. ஈழத்தில் போரால் கணவரை இழந்து தவிப்பது போல் புலம்பெயர் தேசங்களில் தங்கள் அருகிலுள்ள கணவர்களை சகிக்க இயலாது பல மனைவிகள் பிரிந்து வாழ்கின்றனர்.


திருமணத்தால் இரு மனம் இணையும் போது ஒரு புதிய குடும்பம் உருவாக பக்கத்தில் நின்று ஆசி புரிந்து பிரட்சனைகள் வராதிருக்க பாதுகாவலர்களாக மட்டுமே இருப்பதை விடுத்து பல போதும்  பல பிரச்சனைகளுக்கு  பெற்றோர்கள்காரணம் ஆகிவிடுகின்றனர்.  பல பெண்களின் பெற்றோர்கள் தாங்கள் கொடுத்த பணத்திற்க்கும் நகைக்கும்  மகளை தங்கள் வாழ் நாள் அடிமையாக்கி அவர்கள் வாழ்க்கையை அழித்து ஒன்றுமில்லாதாக்கி விடுகின்றனர்.

பயிற்ச்சி பத்திரிக்கையாளராக ஒரு பத்திரிக்கைக்கு செய்தி சேகரிக்க  காவல் நிலையம் அனுப்பபட்டிருந்தேன். அங்கு மக்கள், முதலில் தங்கள் பிரச்சனையை காவலர்கள், வழக்கறிஞ்சரிகளிடம் தெரிவித்து விட்டு பத்திரிக்கையாளரையே தங்கள் தெய்வமாக நோக்கி தங்கள் பிரச்சனையை கதைக்கின்றனர். அப்படியாக ஒரு இளம் பெண் அவர் பெற்றோருடன் அழைத்து வரப்பட்டிருந்தார்.  அப்பெண்ணின் தகப்பனே பிரச்சனையை வரிந்து கட்டிகொண்டு கூக்குரல் இட்டு கொண்டிருந்தார். அந்த பெண்ணின் நலனை பாதுகாக்க  என ஒரு பெண்சங்க தலைவியும் வந்திருந்தார். பெண் நாணத்தால் முகம் கொடுத்து பத்திரிக்கையாளர்களிடம் கதைக்கவே விரும்பவில்லை. ஆனால் அப்பெண்ணை குழுமி சில பேனாக்களும் காமிராக்களும்  கதை கேட்டு கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அவள் பிரச்சனையை பெண்கள் தலைவி கதைக்க தொடங்கிவிட்டார். எல்லா வீட்டிலும் போல் மாமியார் மாமனார் கொடுமைஅதில் எனக்கு புரியாத கொடுமை என்னவென்றால் அவள் கணவர் இரவு அவள் உடையை களைய சொல்லியது பெண் உரிமையை பறிப்பது போல் ஆகி விட்டதாம்.  ப் பெண்ணுக்கு அவள் கணவனை குறை சொல்ல விருப்பம் இல்லை இருப்பினும் அவர்களுக்கு என தலையாட்டி அழுது கொண்டிருந்தார். அப்பெண் கணவனிடம் தன்னை சேர்த்து வைப்பார்களா என்று நோக்கும் போது அவள் பெற்றோரோ கணவன் வீட்டில் இருந்து நஷ்ட ஈடு வாங்குவதிலே குறியாக இருந்தனர்.                               தொடரும்.................

20 Sept 2011

கேரளா மீன் கறி/குழம்பு ரெடி!!(Fish Curry)


மீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும்.  சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது உண்டு.  சிறுவகை மீன்கள் தான் குழம்புக்கு அதீத ருசியை தருவதாக உள்ளது.  ஆட்டிறச்சி கிலோ 400 ரூபாய் கோழி கிலோ 140 ரூபாய் என்ற விலை ஆகி விட்ட நிலையில், தற்போது மீன் தான் எப்போதும் எந்நிலையிலும் வாங்க தகுந்த உணவாக பல தரப்பட்ட மக்களுக்கு உள்ளது.  கேரளத்துகாரர்கள் தேங்காய் சேர்க்காது மீன் குழம்பு வைக்கவே விரும்புகின்றனர்.  இருப்பினும் தேங்காய் சேர்த்தும் மீன் கறி வைப்பது உண்டு. கேரளாவில் கடும் சிவப்பு நிறத்துடன் மீன் கறி விரும்பும் போது சில தமிழக பகுதியில் சிவப்பில் பச்சை கலந்த நிறத்துலுள்ள மீன் கறியை சுவைத்து உண்ணுகின்றனர்.  பொதுவாக நாகர்கோயில் கன்னியாகுமாரி, தூத்துகுடி பகுதியில் வைக்கும் மீன் கறியே மிகவும் சுவையானது. மீன் வகைகளிலும் உவரி கடல் மீனுக்கு சிறப்பான இடம் சுவை உண்டு.  

விளைமீன் இன்று கறிவைக்க வாங்குவோம். விளைமீனுக்கு முள்ளும் செதலும் அதிகமாக உண்டு எனிலும் கறிக்கும் பொரிக்கவும் சுவையான வகை மீன் இதுவே. தற்போது மீன் கடைகளில் சுத்தப்படுத்தி தருவதால் மீன் கறிவைக்க அதிகம் சிரமமும் இல்லை!

வாங்க, இனி சமையல் அறையில் வேலையை பார்த்து கொண்டே கதைப்போம்.
மீனை நன்றாக ஓடும் தண்ணீரில் கழுகவும்.
மீன் கறிக்கு மீனின் தலை பக்கம் தான் மிகவும் சிறப்பாக இருக்கும்.
சின்ன உள்ளி (வெங்காயம்)தேவையான அளவு உரித்து நறுக்கி வைத்து கொள்ளவும்.
தேங்காய் ஒரு கப்பு துருவி கருகாது வறுத்து மைய்போல் அரைத்து எடுத்து கொள்ளவும். அம்மியில் அரைத்தால் ருசி தூக்கலாக இருக்கும்.
ஒரு தக்காளி சிறிது வாளம் புளிகரசல். கேரளாவில் புளிகரசிலுக்கு பதிலாக குடம் புளி சேர்ப்பார்கள்.4 பச்சை மிளகாய்.தேவையான அளவு உப்பு . (மீன் கறிக்கு உப்பு கொஞ்சம் அதிகமாக சேர்க்க வேண்டிவரும்.)
தேவையான மசால் பொருட்கள்:
மிளகாய் தூள் 1தேக்கரண்டி
மல்லி தூள் 2 கரண்டி
மஞ்சள் தூள் மிகவும் சிறிய அளவு. ¼ கரண்டிக்கும் குறைவாக
கடுகும், ஜீரகம்,வெந்தயம் எண்ணைய் சேர்க்காது வறுத்த தூளாகியது  ¼ கரண்டி, 
அல்லது

மீன் குழம்பு பொடி என்றே இப்போது கடைகளில் கிடைக்கின்றது. ஈஸ்டேன் மீன் மஸாலா என்றால் கேரளா கறி நிறத்துடன் கிடைக்கும்.  ஆச்சி மஸாலா தென் தமிழக உவரி, நாசரேத் மீன் கறி சுவைக்கு ஒத்துபடி  கிடைக்கின்றது.  4 கரண்டி போதுமானது.



மீன் கறி மண் பாத்திரத்தில் வைத்தால் சுவை இன்னும் சிறப்பாக அமையும்.
மீன் சட்டியை அடுப்பில் வைக்க பலரும் பயப்படுவது உண்டு. மீன் சட்டி வாங்கியதுன்  சாதம் வடித்த கஞ்சி தண்ணியை சட்டியில் ஊற்றி சிறு சூடில் கொதிக்க வைத்து 1 வாரம் பழக்கினால் சண்டை போட்டு உடைக்கும் வரை சட்டி உடையாது இருக்கும்!
சமையல் வேலையை ஆரம்பித்து விடுவோமா?
முதலில் சட்டியில் தேங்காய் அரைத்து வைத்த கரசல், பொடிகள் , தக்காளி, புளி கரசல் சேர்த்து மீன் துண்டுகளும் அத்துடன் இட்டு நன்றாக கொதிக்க விடவும்.
கறி வத்தி மசாலா சேர்ந்து வந்ததும்; வேறு ஒரு  சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
பின்பு தேங்காய் எண்ணைய் அல்லது சமையல் எண்ணைய் ஊற்றி சூடாகியதும் கடுகு இடவும்.
கடுகு கரியாது பொரிந்த்தும் வெட்டி வைத்துள்ள வெங்காயம் அரைத்து வைத்துள்ள இஞ்சி+வெள்ளப்பூடு விழுதும் குறுகை கீறிய பச்சை மிளகாய் 4, கறிவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதங்கியதும் கொதித்த  மீன் குழம்பில் கொட்டி மூடி வைத்தவுடன் அடுப்பையும் அணைத்து விடுங்கள்.

 ½ மணி நேரம் கழிந்து இதமான சூட்டில் சாதம் சப்பாத்தி, தோசை அல்லது பண், இடியாப்பத்துடன் சேர்த்து ஒரு பிடி பிடித்து விடலாம்.



16 Sept 2011

Tirunelveli Kudankulam- கூடங்குளம் அணு உலை!





பாசமிகு என் சகோதர சகோதரிகளே அணு உலையை பற்றி எனக்கு கிடைத்த சில தகவல்களை பகிர விரும்புகின்றேன். இதில் மனித நலம் அல்லாது எந்த சுயநலமோ அரசியல் சார்போ இல்லை. நான் பகிரும் தகவல்களை குறித்து கருத்துரையாட, விருப்பம் தெரிவிக்க  மட்டுமல்ல  தகவலில் தவறுகள் உண்டு எனிலும் தெரிவிக்க எல்லா உரிமையும்,பதிவை வாசிக்கும், புரிந்து கொள்ளும் உங்கள் அனைவருக்கும் உண்டு என்பதை மிகவும் அன்புடன் கேட்டு கொள்கின்றேன். http://josephinetalks.blogspot.com/2010/12/blog-post_03.html