header-photo

ஜாதி கணக்கெடுப்பு என்ற அரசியல் படையெடுப்பு!!


ஜாதி கணக்கெடுப்புக் குழு இன்று எங்கள் வீடு வந்து சேன்றனர். ஒரு சீனியர் 3 ஜூனியர்கள் என ஒரு கூட்டமாக வந்து தகவல் பெற்று செல்கின்றனர்.  கடந்த வருடங்களிலும் இதே போன்றே ஜாதி தகவல்கள் திரட்டி சென்றிருந்தனர். நான் என் ஜாதி சொல்ல விரும்பவில்லை என்றது "எந்த ஜாதியிலும் சேராதவர்கள் பட்டியலில்"  சேர்த்து விடுவார்களாம்.  ஜாதி சொல்ல விருப்பம் இல்லாதவர்கள் என்ற பட்டியல் இல்லையாம்.  என்னிடம் தகவல்கள் பெற்று விட்டனர் என்று  சிறு ஸ்டிக்கரை அடையாளமாக ஒட்டி சென்றனர். 

கடந்த வருடம் கேட்ட அதே  கேள்விகள் ஜாதி என்ன? டிவி, கார், கம்யூட்டர், துணி துவைக்கும் இயந்திரம் இருக்கின்றதா என்ற கேள்விகள் இருந்தனை.  ஒன்றும் இல்லை என்று சொல்லி உள்ளேன். இரு சக்கர வாகனம் மிதிவண்டி பற்றி கேள்விகள் இல்லை! இந்த கேள்விகளில் ஒன்றிலும் மனித நலனோ அக்கரையோ குறைந்த பட்சம் தன்மான உணர்வோ உள்ளதாக தெரியவில்லை. கார் வைத்திருப்பதை வைத்து நம் வசதியை அளக்க இயலுமா? பலர் வீடுகளில் இன்று கார் உண்டு   சிலர் வீட்டில் ஐயா அலுவலகம் செல்ல ஒரு கார்  அம்மா காய்கறி மார்கெட்டு செல்ல இன்னும் ஒன்று, இளம் மகன் ஊர் சுற்ற மற்றொரு கார் என்றிருக்கும். அந்தஸ்தை கருதி பல வீடுகளில் மாதத் தவணைக்கும் வாங்கி வைத்துள்ளனர். எங்கள் பக்கத்து வீட்டில் சாப்பாட்டு செலவையும் விட கார் -தவணை (மாதம் 15 ஆயிரம்)கட்டுகின்றனர். தொழில் நிமித்தமாக அலங்காரம் என்பதை விட அவர்கள் அவசிய தேவை ஆகின்றது கார்.

துணி துவைக்கும் இயந்திரம் கூட வசதியை நிர்ணயிக்குமா என்பது தான் நகைப்பிற்க்குறிய இன்னொரு கேள்வி! இன்று தவணை முறையில் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் பொருட்களுக்கு அளவே இல்லை பல வீடுகளில். வீடு சுத்தம் செய்ய மின் துடப்பம் கூட வாங்கி வைத்துள்ளனர். ஒரு  வீட்டில் குளிர் சாதன பெட்டியை தண்ணீர் ஊற்றி துடப்பம் வைத்து அடித்து சுத்தப்படுத்தியது நினைவுக்கு வருகின்றது. அடுத்த கேள்விக்கு வருவோம்: வீடு கட்டி 20 வருடம் வரை  வீட்டு பத்திரம் வங்கியில் இருப்பதால், சொந்த வீடா என்ற கேள்விக்கு எளிதாக பதில் பதில் சொல்லவே இயலாது.

சரி இதெல்லாம் இருக்கு என்றால் அரசின் சாதனையா அல்லது இல்லை என்றால்  மக்களுக்கு உடன் பெற்று தந்து  விடுவார்களா? சமூக நலன் சார்ந்த கேள்வி என்றால் வீட்டு வாடகை, வீட்டில் சாராயம்/பிராந்தி குடிக்கும் நபர்கள், நோயாளிகள், படிக்கும் நபர்கள், இருக்கும் கடன்,  வரவு செலவு இவை பற்றி வினவ வேண்டாமா? தமிழகத்தை பொறுத்த வரை அவனவன் புத்திக்கு தகுந்து உழைத்து பிழைக்கின்றனர் சிலர் அடுத்தவர்களை ஏமாற்றி வாழ்கின்றனர்.

கணக்கெடுப்பு என்று எத்தனை முறை தான் வருவார்கள். தேர்தல் நேரம், மக்கள் தொகை கணக்கெடுப்பு, மலிவுக்கடை, ஆதார், பான் கார்டு, வாகன லைசன்ஸ் என எத்தனை கணக்கெடுப்புகள். ஒரு தலைக்கு இத்தனை ரூபாய் என்று பெறப்படுவதால் கணக்கு எடுக்க ஆள் பஞ்சம் இருக்காது. கடந்த முறை கணக்கெடுக்க சமூக சேவை போல் ஒரு பெண் வந்து சென்றார்.

அரசு நியமிக்கும் பணியாளர்களே ஜாதி கேட்பது அசிங்கமாக உள்ளது. நீங்க என்ன ஆளு என்ற கேள்வி, பொது ஜன மத்தியில் மலிவு கேள்வி ஆகி விட்டது. எங்க தெருவில் கூட ஜாதி பார்த்து நட்பு வைத்திருப்பார்கள். சில ஜாதி நபர்கள் நம்மிடம் நேரில் வந்து "எங்க ஆளுங்க ரொம்ப பொல்லாதவங்க" என்று சொல்லி விட்டு செல்வார்கள். ஆத்திர அவசரத்திற்க்கு சொந்த ஜாதி ஜனங்கள் விட மனித நேயமுள்ள மனிதர்கள் தான் உதவுவார்கள். ஜாதி கொண்டு ஒரு மனிதனையும் பெரியவன் என்றோ சிறியவன் என்றோ அளக்க முடியாது, செயல் மட்டுமே ஒருவனை யார் என்று நிர்ணயிக்கும் ஆதாரம்.

கேரளாவில் ஸ்ரீ நாரயண குருவின் வாழ்க்கை போராட்டமே "ஜாதி கேட்காதே ஜாதி சொல்லாதே, ஜாதி எதுவாக இருந்தாலும் மனிதன் நல்லவனாக இருந்தால் போதும் என்பதாகவே இருந்தது. ஜாதி சொல்வதால் என்ன பலன். நம் அரசு ஜாதி நிர்ணயித்திருக்கும்  முறை கூட கேலிக்குறியது. கலப்பு திருமணம் செய்தவர்கள் தங்களுக்கு பிடித்த- தேவையான ஒரு ஜாதியை தங்கள் பிள்ளைகளுக்கு என பதிந்து கொள்ளலாம். எங்கள் ஆசிரியர் ஒருவர் கலப்பு திருமணம் செய்தவர். ஆசிரியர், சமூகம் சொல்லி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவரும் அவர் காதல் மனைவி நடுநிலை ஜாதியை சேர்ந்தவரும் ஆவார்.  பிள்ளைகள் படித்து முடிக்கும் வரையிலும்  தாழ்ந்த ஜாதி என பதிவிட்டு அரசு நலன்களை பெற்ற பின்பு பிள்ளைகள் படித்து ஒரு நிலைக்கு வந்ததும் தங்கள் ஜாதியையே ம்றுதலித்து விட்டனர்.  சமூக அந்தஸ்தை கருதி நட்பு வைப்பதோ இன்னொரு ஜாதி நபர்களூடன்.


 ஒரு வீட்டில் ஒரு முதியவருக்கு 3 ஜாதியில்  மனைவி, துணைவிகள் என்றிருந்தால் முதியவர் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஜாதியாக தான் இருக்கும். இது எல்லாம் எப்படி கணக்கெடுப்பில் பதிகின்றார்கள் என்பதே புதிர்! ஜாதி மனிதனை பிரித்து ஆளுகின்றது என்பதை காண்கின்றோம். நான் படித்த கல்வி நிலையத்தில் பொது மின் நூலகம் போக  ஆதிதிராவிட மாணவர்களுக்கு என்றே தனியாக  இன்னொரு நூலகம் இருந்தது. இது மாணவர்களை மாணவப்பருவத்திலே பிரித்து கலவரம் பொறாமை வன்மத்தை வளர்க்கின்றது.

சமீபத்தில் எனக்கு ஒரு கட்டுரை அனுப்பபட்டிருந்தது. அந்த நபர் குறிப்பிட்ட ஜாதியின் வரலாற்றை ஆய்வு செய்து கட்டுரை எழுதியிருந்தார். ஆனால் மற்று ஜாதிகளை பற்றி குறிப்பிடும் போது காழ்புணர்ச்சியுடன் சில வார்த்தைகளில் குறிப்பிட்டிருந்தார். நம் ஜாதி வரலாறு  பற்றி தெரிவது நம் தன் நம்பிக்கையை வளர்க்கும் செயலே.  அதுவே மற்று ஜாதி மனிதர்களையும் மதிக்கும் நேசிக்கும் உபாதியாக இருக்க வேண்டும்.

   ஜாதி என்ற கூடாரத்தில் மனிதர்களை சிறைப்படுத்த நினைக்கும் அரசியல் மறைய வேண்டும்.  தன் ஜாதி நலன் என கொடி பிடிப்பவர்கள் கூட கலங்கிய நீரில் மீன் பிடித்து விட்டு மறைந்து விடுகின்றனர். இது ஒரு சமூக அவலம் என்று விழிப்புணர்வு வர வேண்டும். ஜாதி என்ற பெயரில் கிடைக்கும் நலன்களை  விட நமக்கு மகிழ்ச்சி அளிப்பது நம் உழைப்பால் கிடைக்கும் வெகுமதியில் தான்.

4 comments:

சிவ மேனகை said...

உலக வரலாற்றில் தமிழன் தலைவிதியை மாற்றவே முடியாது ,,,,,,,,,,,,,,திரு வள்ளுவர் வரலாறு தாய் தந்தையர் விபரம் மறைக்கப்பட்டதற்கும் காரணம் சாதியே ,,,,,,

வீடு சுரேஸ்குமார் said...

ஜாதி கணக்கெடுப்பு என்பது கூட்டமாக இல்லாமல் பிரிந்து கிடக்கும் சமூகத்துக்கு பயன் தரும்...

Seeni said...

சாதிகள் இல்லையடி-
பாப்பா !

பாடல் சொல்லி கொடுப்பார்கள்ன்
சாதி சான்றிதழ் இல்லாம -
சேர்க்க மாட்டார்கள்!

நல்ல பகிர்வு!

Subi Narendran · Good Shepherd Convent Kotehena said...

நல்ல பகிர்வு ஜோஸ். உங்கள் கருத்து மிகவும் முற்போக்கானது. தமிழ் நாட்டில் ஜாதியம் எப்படி இருக்கும் என்று நன்கு தெரிகிறது. மேலைத்திய நாடுகளில் நாம் யாவருமே நிறத்தவர்கள் (coloureds) தான். ஆனாலும் எம்மவர்கள் இன்னும் சாதியை விடாது பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஜாதி மனநிலை மாறும் என்பது சந்தேகம்தான்.

Post Comment

Post a Comment