header-photo

விசாரணை!

மனித உரிமை மீறல்களை அடித்தளமாக கொண்ட படம் விசாரணை இன்று காணக் கிடைத்தது.  பொதுவாக போலிஸ் நிலையங்கள் மனிதர்களுக்கு அதீத பயத்தை கொடுத்து கொண்டிருக்கும் வேளையில் மறுபடியும் போலிஸ் அமைப்பை பற்றிய புரிதல், பயத்தை அள்ளி தந்து சென்றுள்ளது இப்படம். இது கற்பனையை கடந்த உண்மைக்கதையை மையமாக எடுத்த படம்.   தற்போது கோவையில் வசிக்கும் மு.சந்திரகுமார் என்கிற தமிழர் இருபதாண்டுகளுக்கு முன்பாக வேலை தேடி ஆந்திராவிற்கு சென்றிருந்த போது தான் அனுபவித்த கொடுமைகளை  ’லாக்கப்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதன் திரைப்பட உருவாக்கமே விசாரணை. கற்பனை என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான படங்கள், காதல் கதைக்கரு கொண்ட படங்களே மக்கள் மத்தியில் எடுபடும் என்ற சில கருத்தாக்கங்கள் நிலவும் திரைத்துறை சூழலில் சமூக அக்கறை கொண்ட  மனிதநேயத்தை பற்றியும்  மனித உரிமை மீறல்கள் பற்றி பேசும் இது போன்ற திரைப்படங்கள் பெரிதும் உதவுகின்றது. 

கோடிகள்  ஈட்ட சாதாரண மனிதர்கள் அநியாயமாக வேட்டையாடப்படுவதும் அவர்கள் அடையாளமற்று அழிக்கப்படுவதும் தற்போதும் தொடர்ந்து வரும் அவலமாகும். மக்களை பாதுக்காக்க வேண்டிய காவலர்களை மக்கள் அழிவிற்கு காரணமாக இருப்பது மனதை பிழிகின்றது.  சாதாரண எளிமையான மக்கள் இது போன்று அழிக்கப்படுவது தற்போது எல்லா நிலைகளிலும் எல்லா துறையில் நிகழும் சம்பவங்களாகும்.  ஒரு சமூகத்தின் அடிப்படையான  குடும்பங்களில் கூட வறியவர்கள் வலியவர்களால் நசுக்கப்படுவது அழிக்கப்படுவதும் சமூக தளத்தில் கண்டு வருகின்றோம். 

விசாரணை என்ற பெயரில் தெருவில் கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்படும் குற்றவாளிகளை காணும் போது மாற்று சிந்தனையோடு அவர்கள் பக்க நியாங்களையும் உற்று நோக்க இப்படம் உதவ இயலும். 

வெற்றிமாறன் இயக்கம், எழுத்தில், தனுஷ் தயாரிப்பில்  திரைப்படம் திறம்பட வெளி வந்துள்ளது.  காலம் சென்ற எடிட்டர் கிஷோரின் திறமையில் படத்தின் விறுவிறுப்பிற்கு குறைவில்லை, கதாபாத்திரங்களுக்கு ஆன நடிகர்கள் தேர்வும் பாராட்டுதல்குறியது.  சிறப்பாக, கதாபாத்திரங்கள் பேசும் உரையாடல்கள் மிகவும் யதார்த்தவும் அர்த்த செறிவுள்ளதுமாக  விளங்குகின்றது.  புகழ் பெற்ற எழுத்தாளர்களின் எழுத்தை படமாக்கும் போல் சாதாரண மக்களில் எழுத்தையும் படமாக்குவதும் எடுத்து கொள்ளப்படவேண்டிய அம்சமாகும். 

 மனித சமுதாயம் சிறப்பாக, தமிழ் சமுதாயம் மனித  உரிமை மீறல்கள் பற்றி பெரிதாக எடுத்து கொள்வதில்லை. பணிவு, பதவி, பணம், உறவு, விதி  என்ற பெயரில்  எல்லா மீறல்களையும் தாங்கி கொள்கின்றனர். இது போன்ற படங்கள் மக்கள் மத்தியில் ஓர் விழிப்புணர்வு கொண்டு வர இயலும். 
இது போன்ற படங்களுக்கு ஏதோ காரணங்கள் கூறி புரக்கணிக்காது தேசிய விருதுகள் மேலும் வெனிஸ் வெனிஸ் திரைப்பட விழாவில், மனித உரிமைகளுக்கான சினிமா' என்ற பிரிவில் விருது கிடைத்துள்ளதும் பாராட்ட ப்பட வேண்டியுள்ளது.

இந்தியாவில் கைதிகளால் ஜெயில் நிரம்பி வழிவதாகவே தகவல்கள் சொல்கின்றன. மூன்று லட்சத்திற்கு மேல் மக்கள் பெண்கள் உள்பட  ஜெயிலில் கழிகின்றனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு விசாரணை கைதிகள் ஆவார்.  குழந்தைகளின் தாய்மார்களான  2000த்திற்கும் மேற்பட்ட  பெண்கள் விசாரணை கதைகளாக உள்ளனர்.  சமீபத்தில் இந்தியாவில் நடக்கும் விசாரணை சூழலை பற்றி விவரித்த போது உச்ச நீதிமன்ற நீதிபதியே கண்ணீர் விட்டு அழுத செய்தியை பத்திரிக்கையில் வாசித்தோம்.  நளினி போன்ற மிக முக்கிய குற்றவாளிகள் என்று சொல்லப்பட்ட சிலரின் வாழ்க்கை தான் உலக வெளிச்சத்திற்கு தெரிந்தது. இளம் குற்றவாளியாக ஜெயிலில் சென்ற பேரளிவாளன் என்ற மனிதரின் வாழ்க்கையை பற்றி பத்திரிக்கை செய்தி ஊடாக அறிந்ததில் இருந்து பெரும் வேறுபாடு இல்லை விசாரணை போன்ற படங்கள் கூறும் கதைகளும். உலகில் அமெரிக்காவில் தான் அதிகம் மக்கள் அதாவது 21 லட்சம் BBC பேரை குற்றவாளிகள் என்ற பெயரில் ஜெயிலில் வைத்துள்ளனர். 1391 சிறைச்சாலைகள் இந்தியாவில் உள்ளன. 

ஜெயில் பற்றி கூறினாலே ஆங்கிலேயர் காலத்திலுள்ள அந்தமான் கலாபானி  சிறைச்சாலைப்பற்றிய கொடும் கதைகளை  பற்றி கூறிவிட்டு நகருவதே வழக்கமாக உள்ளது.  ஆனால் சுகாதாரம், மனித உரிமை மீறல்கள் என்ற நோக்கில் நோக்கினால் இந்தியாவிலுள்ள பலச் சிறைச்சாலைகள் சாராசரி தரத்திலும் குறைவாகத்தான் தற்போதும் உள்ளது. 

நெல்லை பாளையம் கோட்டை சிறைச்சாலையில் பல விமர்சனங்களையும் கடந்து  சிறைசாலைவாசிகள் கல்வி கற்க, பட்டம் பெற ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுதலுக்குறியது. மேலும் சிறைவாசிகள் உணவகம் நடத்துவது இயற்கை விவசாயம் மேற்கொள்ள வாய்ப்பு உருவாக்கி கொடுத்துள்ளதும் எடுத்து சொல்லக்கூடியதே. 

திருவனந்தபுரம் சிறைவாசிகள் நல்வழிப்படுத்துதல் நிகழ்வுகள் நம்பிக்கை தரும்படியாக உள்ளது.https://www.youtube.com/watch?v=ZwuEGHYo4wg

சுடும் நினைவுகள்!

உங்க கல்லறைக்கு வந்து 10 நாட்களாகி விட்டது.  காலை அழைத்து செல்லக் கூறினால் மாலை; மாலை என்றால் காலை! இன்று நானே ஆட்டோ பிடித்து சென்று வந்தேன். இப்படி தான் சில நேரங்களில் பொறுமையின் எல்கையை மீறச்செய்கின்றனர், உங்கள் நினைவுகள் தான் அந்நேரம் அலைபாய்கின்றது. அத்தான் ..........என ஒரு அழைப்பிலே என் தேவைகள் எல்லாம் நிறைவேறி விடும்.  என் கண்ணை பார்த்து கொண்டே நிற்கும் அந்த உங்கள் முகம் வந்து போகின்றது. ஒரு பக்தனை போல் அல்லவா உருகி நின்றீர்கள்,  அழ ஒரு காலம், சிரிக்க ஒருகாலம், கண்ணீர் சிந்த ஒரு காலம் என அந்த கடவுள் காலத்தை எனக்கு பிரித்து தந்து விட்டார்.  நம்பும்படியாகவே எனக்கு தெரியவில்லை. ஏன் இந்த பிரிவு கடவுளே என்று தான் கேட்க வைக்கின்றது. ஏதோ ஒரு நன்மை, ஏதோ ஒரு நல்லது, என்று மற்றவர்கள் தேற்றுவதை ஏற்க இயலவில்லை. ரீத்தா மேம் வீட்டிற்கு போயிருந்தேன். மேம் மிகவும் கரிசனையாக பேசினார் அறிவுரை தந்தார், நீ நல்லா இருப்பம்மா என பல முறை கூறி ஆசிர்வதித்தார்.  

பாளையம்கோட்டையில் ஒவ்வொரு தெருவில் போகும் போதும் இங்கு அத்தானுடன் வந்தோமே, இந்த கடையில் இருந்து தானே இதை வாங்கினார் அதை வாங்கினார். இந்த வழி தானே பயணித்தோம். எல்லா வாரவும் காலையில் வந்து பொருட்கள் வாங்கினோம் என மனதில் நினைவு ஓட்டங்களாக இருக்கின்றது.


ஒவ்வொரு நொடியும் உயிரோட்டமாக்கியது உங்கள் குரல் தான். நேரில் விட போனில் இன்னும் இனிமையாக கதைப்பீர்கள். ஒரே வீட்டில் இருந்தும் ஒரே வீட்டில் தங்கியும் அந்த பகல் பொழுது உங்களை தேட நான் அந்த கைபேசியை தான் நம்பி இருப்பேன். எப்படி.... சாப்பீட்டிர்களா, என்ன வேலை போய் கொண்டிருக்கின்றது என ஆரம்பிப்பேன். சும்மா உன் குரலை கேட்க என நீங்களும் அழைப்பீர்கள். உங்களை தண்டிக்கவும் இந்த போன் தான் உதவும். உங்கள் அழைப்பை உடன் எடுக்கா விடில் நீங்கள் பதறிவிடுவீர்கள் ஏதும் கோபத்தில் உள்ளேனோ என்று. நான் லயோளாவில் இருந்த போது நம்மை உயிர்ப்புடன் நகர்த்தி  சென்றதே நம் கைபேசி பேச்சுக்கள் தான். என்னிடம் கோபப்பட்டு போனை எடுத்து எறிந்து விட்டு மறுபடியும் எடுத்து கதைப்பீர்கள் என பிள்ளைகள் கூறி அறிந்தேன். அத்தான் இனி உங்களிடம் பேசவே இயலாதா? உங்க போனில் இருந்து எனக்கு அழைப்பு வரவே வராதா? அத்தான் இது போன்ற தருணங்களும் நினைவுகளும் தான் என்னை நிலைகுலைய செய்கின்றன. 

ஏன் அந்த வேடனிடம் கூட்டு வைத்தீர்கள். அவன் பாவ பலியெல்லாம் உங்கள் உள்ளம் தலையை உடைத்து சென்று விட்டதே. இது வரை எங்களை பற்றி விசாரிக்க நாதியில்லை. நீங்கள் நம்பி ஏமாந்தது இவனிடம் மட்டுமல்ல இன்னும் சில உங்க தம்பிகளும் உண்டு. இன்னும் உங்க விபத்து இழப்பீட்டு கேஸை கொடுப்பீர்களா என அலையும், உங்களுக்கு விபத்து என்றதுமே என்னைக்கூட துக்கம் விசாரிக்காது ஏஜன்றுகளை அனுப்பின தம்பிகளையும் வைத்துள்ளீர்கள். 

அத்தான் என்னால் நம்பிக்கைக்குள் வர இயலவில்லை. எதை நான் நம்பிக்கை என கருதுவது. நீங்களும் நிறைய பொய்கள் பேசி சென்று விட்டீர்கள். நீங்கள் இனி இல்லை  உங்களிடம் எனக்கு பேச இயலாது என்பது எல்லாம் நம்பும் படியாக இல்லை. என்னவெல்லம் பேசினீர்கள், என்ன என்ன கனவு வைத்திருந்தீர்கள். எதை கண்டாலும் குழந்தையை போல ஆசை கொள்வீர்கள். உணவை ரசித்து உண்ணுவீர்கள். வெறும் பூக்களை பார்க்க என்றே பூந்தோட்டம் அழைத்து செல்வீர்கள். எத்தனை முறை உங்கள் காரை நிறுத்த கூறி செடிகளை பார்த்து விட்டு வாங்கவில்லையா என்றதும் ரொம்ப விலை அத்தான் என திரும்பி வந்துள்ளேன். அந்த  நேரத்தை விரளயப்படுத்தியதைக்கூட கோபப்படாது கேலிச்சிரிப்புடனை சமாளித்து கொள்வீர்கள்.  கோயிலுக்கு அழைத்து செல்வீர்கள் அங்கு பிச்சைக்காரர்களிடம் பேசி கொண்டிருப்பேன். பிச்சைகாரர்கள் ஈஸ்டர் கொண்டாட்டம்!அதை அடுத்த சில நாட்களில் பதிவாக இடுவேன். நீங்களும் ரசித்து வாசிப்பீர்கள், பிழைகளை திருத்தி தருவீர்கள்.  உங்க ஆசைக்கும் அளவு இருந்திருக்கனும். அந்த பொய் காரியுடன் பேசியே உங்களை நீங்கள் அழித்து கொண்டீர்கள்.  

ஒவ்வொரு நாளும் உங்களிடம் பேச எனக்கு கதைகள் இருக்கும். உங்களிடம் நான் கேட்டால் காலையில் அலுவலகம் சென்றேன், அரசு அலுவலங்களுக்கு சென்று வந்தேன், என் வாடிக்கையாளர்களை சந்திதேன்  இதையா உன்னிடம் சொல்ல. எனக்கு அப்படி கதைகள் ஒன்றுமில்லை;  உன் கதையை கேட்கின்றேன் சொல் என்பீர்கள்.  இனி என் கதைகள் நான் கதைக்க, அதை கேட்க யாருமில்லை,  கதைக்க கதைகளும் ஒன்றுமில்லை. 

திருமணம் என்பது மட்டும் தான்  வாழ்க்கை என்று இல்லை. ஆனால் நாம் நண்பர்கள் போல் அல்லவா வாழ்ந்தோம்.. ஒரு இடிவிழுந்து கருகிய மரம் போல் ஆகி விட்டது நம் வாழ்க்கை. ஒரு முறை ஏனும் மரணத்தை பற்றி நினைத்து பார்ப்பீர்களா? மரணவீட்டை துக்க வீட்டை கண்டால் பயப்படும் நீங்கள் நம் வீட்டை அப்படி மாற்றி விட்டு போய் விட்டீர்கள் அத்தான். கவலையை விட்டு கடமையை நோக்கி நகர வேண்டும். ஆனால் உங்கள் கர்மபலனில் தான் தற்போது வீழ்ந்து கிடக்கின்றேன். 


முதலும் கடைசியுமான குடும்ப சந்திப்பு!

உங்க அப்பா இறந்த நாள்  ஜூன் 4 2015 நினைவில் வருகின்றது அத்தான். அன்று நீங்கள் என்னிடம் வந்து சொன்னீர்கள் அம்மாவிடம் இருந்து போன் வந்துள்ளது அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லையாம் . மருத்துவ மனையில் அனுமதித்துள்ளார்களாம். கொஞ்சம் நேரத்தில் என்னிடம் கூறினீர்கள் நீ உடன் சில உடைகளுடன் தயார் ஆகி கொள் நாம் நாசரேத் செல்ல வேண்டும் அப்பா இறந்து விட்டாராம். என் சில தீருமானங்களை எல்லாம் தூரத்தள்ளி நீங்கள் என்னுடன் வருவாயா என்றதும் காரில் கிளம்பி விட்டோம். ஜெரியை பள்ளியில் சென்று அழைத்து நேர நாசரேத் பயணப்பட்டோம். சாம் காலில் கட்டு போட்டுள்ளாதால் மாலை வருகின்றேன் எனக்கூறி வீட்டில் இருந்தான்.  உங்கள் அலைபேசியை என்னிடம் கொடுத்து  போகும் வழியில் எல்லா உறவினர்களூக்கும் தெரிவிக்க கூறினீர்கள்.  நாசரேத்தில் இருந்தும் மூன்று நாள் உடல் நிலை சரி இல்லாது இருந்தும் உங்களிடம் நேரமே ஏன் தெரிவிக்கவில்லை அத்தான் என என் குறுக்கு கேள்வியை உங்களிடம் தொடுத்து கொண்டே வந்தேன். என் தம்பி வர இயலாது என்பதால் என் அம்மா என்னிடவும் கூறியிருக்க மாட்டார்கள். அதை விடு நடப்பதை பார்ப்போம் எனக்கூறி பயணப்பட்டு கொண்டிருந்தோம்.

மருத்துவ மனையில் இருந்து வீட்டில் கொண்டு போகும் வேலை இருக்கும் என்றே பணத்துடன் அவசரமாக போய் கொண்டிருந்தோம். ஆனால் நம் செல்லும் முன்னே வீடு கொண்டு சேர்த்திருந்தார். நாம் செல்லும் போது உங்கள் அப்பாவை நடு வீட்டில் கட்டிலில் கிடத்தியிருந்தனர் உங்க அம்மா அப்பா அறையில் இருந்து சில கட்டு டாக்குமென்றுகளை அவர்கள் அறையில் வைத்து கொண்டு இருந்தார். உங்கள் அப்பாவின் கடைசி நேரம் பற்றி விவரித்து கொண்டு நின்றார்.

 நாம் 10 மணிக்குள்ளாக வீடு வந்து சேர்ந்தோம். ஆட்களை ஏற்படுத்தி குளிப்பித்து குளிரூட்டபட்டபெட்டியில் வைத்து இருந்தோம். நாசரேத் வழக்கப்படி காலை 7 மணி மாலை நாலு மணிக்கு தான் எடுக்க இயலும். உங்கள் தம்பி வர இயலாது என்பதால் அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு அடக்கம் என்று நிர்ணயிக்கப்பட்டது.


உங்க அம்மா ஒரு பெஞ்சை காட்டி அப்பா பெட்டி வைக்க செய்து வைத்துள்ளார். யாரிடமும் கேட்க வேண்டாம் பார்த்தயா என்று கூறி கொண்டு நின்றார். மரித்த உடல் வீட்டில் இருக்கும் போதும் வீட்டார் எல்லாரும் உறங்கக்கூடாது என்ற கட்டு உண்டு என்று நாம் இருவரும் மாறி மாறி விழித்து இருந்தோம்.  சில சொந்தக்காரர்கள் அங்கு வந்திருந்தனர். பலர் நேரம் கேட்டு விட்டு ஓடி விட்டனர்.  உங்க அம்மா அண்ணன், கன் எல்லோரும் வந்து சேர்ந்தனர். 

தம்பியின் குழந்தைகளை முதன்முதலாக சந்திக்கின்றோம். அந்த குழந்தைகள் எங்கள் வீட்டு பிள்ளைகளிடம் அண்ணா அண்ணா என அழைத்து பசை போன்று ஒட்டி கொண்டனர். நானும் என் தங்கைக்கு அடுத்த படியாக கிடைத்த தங்கையை எண்ணி மகிழ்கின்றேன். அந்த சிறு குழந்தைகள் பெற்றோரை விட்டு தூங்கினதே கிடையாதாம் ஆனால் அன்று இரவு எங்கள் அருகில் படுத்து தூங்கினர். அதில் அந்த இளைய குழந்தையோ தன் அம்மாவிடம்; எனக்கு பெரியப்பாவை தான் மிகவும் பிடித்துள்ளது.  நான் பெரியப்பாவை கல்யாணம் பண்ணி கொள்ளவா என்று கேட்கின்றது. எல்லோரும் சிரித்து மகிழ்ந்து கொண்டோம். எங்களுக்கும் 10 வருடம் கடந்து கண்ட குழந்தைகள் எங்களிடம் ஒட்டி கொண்டதும் மகிழ்ச்சியால் மதி மயங்கி போனோம். அந்த தங்கை கூட நீங்க ”தூத்துக்குடியிலுள்ள என் சொந்த அக்காவை  போல் இருக்கின்றீர்கள். உங்களிடம் பேசாது இவ்வளவு காலம் கடந்தி விட்டேனே” என்கிறாள்.

அத்தான் பணத்தை தண்ணீரை போன்று இரைக்கின்றார். சிறப்பாக குழந்தைகளுக்கு பிடித்த அல்வா , மிச்சர் என செய்தங்கநல்லூரில் இருந்து வாங்கி கொடுக்கின்றார். தன் தம்பி பணச்சிக்கலில் இருக்கின்றான் எனத்தெரியும் ஓர் நிறுவனம் நடத்தியதில் பல போலிஸ் கேஸ் உண்டு என தெரியும் . என் மனம் அலாரம் அவ்வப்போது அடித்து கொண்டாலும் நம்மை என்ன செய்ய போகின்றான் என நினைத்து கொண்டேன். ஆனால் அந்த பத்து நாட்கள் தாயும் மகனும், அத்தானை எடை போட்டு  சேர்ந்து வீழ்த்த வலைபின்னி கொண்டிருந்தது பின்னால் தெரிந்தது. 

அவர்கள் சென்னை செல்லும் மட்டும் உடன் இருந்து கவனித்து ரயில் ஏற்றி விட்டோம். அன்று அவன் வேலையில்லாது இருக்கின்றான் என்றதும் நெல்லையிலுள்ள அத்தான் நண்பர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தி அனுப்பினார். ஆசை தீர புகைப்படம் எடுத்தோம். அந்த கிமாரா வாங்கினதை பற்றியே பின்னீடு கேலி பேசினான் என அறிந்தோம். 

இறக்கும் அன்று அவர் வைத்திருந்த  ஐந்து லட்சம் ரூபாய் கடனில் நான்கு லட்சம் தன் தம்பிக்கு கொடுத்துள்ளார் என்று எங்களிடம் ஆதாரம் இருந்தது. அவர் போனதும் ”அவன் யாருக்கு கொடுத்தானோ நாங்களும் விசாரிக்கின்றோம்” எனக்கூறி விரைந்து பறந்து சென்று விட்டனர். அன்றைய பத்து தினம் ஒன்றாக தின்றதும், பேசினதும், உறங்கினதும் எல்லாம் நாடகமா? அத்தான் பணம் கொடுக்கும் போது எங்களை அரைவணைத்த குடும்பம் இப்போது எங்கே? இதனை நாட்களாகியும் ஒரு நாள் கூட வர இயலாத என் சக தங்கை; ஏன் ஒரு முறைக்கூட கைபேசியில் கூட கதைக்கவில்லை.  அவருக்கு அத்தான் இறந்தது தெரிவிக்கவில்லையா? இது என்ன குடும்பம். இந்த குடும்ப மானத்தை நான் கப்பலேற்றுவதாக வருத்தப்படுகின்றனர். 

ஒரு குடும்பத்தின் தலைமையில் இருந்து எல்லோரையும் நன்றாக வைக்க வேண்டும் என்று எண்ணிய அத்தான் நிலையை பற்றி கரிசனையாக எண்ணாதது ஏன்? அத்தானும் தன் குடும்பத்தை மறந்து என்னையும் குழந்தைகளையும் மீறி அவர்களுக்கு என கடந்த ஜூலை முதல் வாழ்ந்த காரணம் தான் என்ன? காலையும் மாலையும் கைபேசி வழியாகவே அவரை வசியம் செய்து கவிழ்த்து விட்டனர். இன்றைய தினம் எங்களுடன் நீங்க துக்கம் ஆசரிக்க வேண்டாம்.  உங்களுக்காக அவர் பட்ட கடத்தையாவது அடைத்து அவர் ஆத்துமத்திற்கு சாந்தி வாங்கி தர ஏன் மனம் வரவில்லை. அவர் அப்பா இறந்த போது உங்க வீட்டில் வந்து உங்க குடும்ப மானத்திற்கு என 45 ஆயிரம் மேல் செலவழித்தார். அவர் போன அன்று அவருக்கு என பிறந்த வீட்டு  கோடி கூட போட ஏன் மனம் வரவில்லை. அவருக்கு சேராத சட்டை போட்டு சிறிய  அளவு கொண்ட பெட்டியில் அனுப்பியுள்ளனர்.

அத்தான் உங்களை எண்ணி பலர் பலர் உண்டு. உங்க பேரு கேட்டாலே அதிருதில்லை என்பது போல தான் சிறப்பாக போனீர்கள். உங்கள் மரண ஊர்வலமே உங்கள் அன்பை நினைவுப்படுத்தியது. ஆனால் உங்க கூட இருந்த நஞ்சு பாம்புகளுக்காக எங்களை கூட கொஞ்சம் நாட்களாக ஒதுக்கி வைத்து விட்டிர்களே அத்தான். மோசஸை பார்க்க அவன் வீட்டிற்கு போவதாக கூறுவீர்கள், அவன் உங்களை பார்க்க சென்னையில் இருந்து  வந்தான் என கூறினீர்கள். இப்போது பெரியப்பாவை பற்றி என்ன சொல்லி கொடுத்திருப்பார்கள்? 

எந்த ஒரு துரோகியாக இருந்தாலும் கூடப்பிறந்த சொந்த இரத்ததை இப்படி பழி வாங்குவானா? அண்ணன் தம்பி உறவிற்கே களங்கம் சேர்ந்தவன், நாலு வயதினிலே விடுதியில் அனுப்பி  ஒரு களவாணி, கடும் நெஞ்சுக்காரனை உங்க அம்மா உருவாக்கியுள்ளார்.  சிரிப்பும் ஓட்டவுமாக இருந்த நீங்கள் சிரித்து கொண்டே ஓடி விட்டீர்கள். நாங்கள் தான் எப்படி இந்த வாழ்க்கையை ஓட்டுவது எனத்தெரியாது வாடுகின்றோம்.


நினைக்க நினைக்க என் நெஞ்சை அடைக்கும் சோகமாக ஒட்டி கொண்டது. ஏன் என்னை உங்கள் நினைவுகளால் கொல்கின்றீர்கள். ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு இடமும் உங்க ஒவ்வொரு நி்னைவுகளும்  கலங்கடிக்கின்றது.  உங்களுக்கு இவ்வளவு தான் ஆயிசா? இதற்காகவா இறைவன் உங்களை இந்த மாதிரி வாழ்க்கையில் கஷ்டப்படுத்தினார். உங்க உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை என மனம் உடைந்து இருந்தீர்கள். உங்கள் உழைப்பிற்கு தகுந்து முன்னேறி வரும் போது நம் வாழ்க்கை இவ்விதம் உடைந்து விட்டதே அத்தான். உங்க விருப்பங்களை எல்லாம் இறைவன் நிறைவேற்றி விட்டார். 

இனி உங்க கல்லறையை உங்களை பிரதிபலிக்கும் வண்ணம் கட்ட வேண்டும் எனக்கு.  உங்கள் கல்லறையில் நான் என்ன எழுதி வைக்க ? அன்பிற்காக உயிர் கொடுத்தவர் என்றா? அன்பே உருவானவர் என்றா? உங்களுக்கு பிடித்த ஜெய்ப்பூர் மகால் கலர்  மார்பிளில் தான் கட்ட வேண்டும். கறுப்பு கல் கல்லறை எனக்கு பிடிக்கவில்லை. அந்த கலர் உங்களுக்கும் பிடிக்காது.  உங்கல் தலை  மாட்டில்  ஒரு சம்மனசை காவல் நிறுத்த வேண்டும். கல்லறைக்கு சுற்றும் செடி வைக்கும்படியும் அமைக்க வேண்டும்.  நானே வாரம் ஒருமுறை வந்து உங்களை சந்திக்க வேண்டும். அத்தான் உங்களை பற்றிய என் கனவுகள் முடிந்த நிலமையை பாருங்கள். 

அத்தான் இல்லாத உலகம்!

பாபா அத்தான் உங்களை யாராவது குற்றம் கூறினால் கோபமாக வருகின்றது. அவர்களை எவ்விதம் ஏனும் எதிர்க்க வேண்டும் என  என் மனம் சொல்கின்றது. ஆனால் கடந்த ஜூலையில் இருந்தே உங்களை ராமா ராமா ... என்றே உங்கள் சகோதரன் கையில் பிடித்து சென்றுள்ளான். உங்கள் வேலைக்காக சமர்ப்பிக்கவேண்டிய ஒரு கோப்பு அனுப்பியுள்ளான். அதில் உங்க செத்து போன அப்பா பெயர் முதலில் அதன் பின் உங்க அம்மா அதன் பின் நான் , பிள்ளைகள் அதன் பின் உங்க தம்பி. ஆனால் வசதியாக அவன் மனைவி, பிள்ளைகள் பெயரை சேர்க்கவில்லை. என்ன தன்மானம் என்று பார்த்தீர்களா? ஆனால் உங்கள் நாசரேத் கோயில் பதிவேட்டில் நம் குடும்ப பெயர் இருக்காது. உங்க வீட்டு ரேஷன் கார்டில் கூட உங்க பெயர் தப்பாக பதிந்திருப்பார்கள்!

அத்தான்  உங்க அப்பா என்ன செய்தார்? ஒரு தகப்பன் என்ற ஸ்தானத்தில் இருந்து. ஒரு மகனாக மதித்து பேசியிருப்பாரா ரஜனி காந்துக்கு கிடைத்தது போல் ஒரு ஒத்தை ரூபாய் துட்டாவது தந்திருபாரா?  போகும் முன் உங்களுக்கு சில வேலைகள்  மட்டும் தான் கொடுத்து சென்றார். என்ன தான் மனைவியிடம் பாசம் இருந்தாலும் பெற்ற மகனை அடிமையாக அனாதமாக நடத்தின தகப்பன் உங்க தந்தை மட்டுமாகத்தான் இருக்கும். செடிக்கு பூச்சி மருந்து அடிக்கும் குத்தியை சரி செய்து தர வேண்டும்.  அகங்காரம் பிடித்து பக்கத்து வீட்டுக்காரர்களிடம் வம்பிழுத்து  கோட்டில் சமர்ப்பித்த வீட்டு பத்திரத்தை திருப்பி எடுத்து தர வேண்டும்.  எல்லா சொந்தக்காரர்கள் வீட்டிற்கும் உங்க காரில் பவனி கொண்டு செல்ல வேண்டும். ஆசையில் எந்த தவறும் இல்லை ஆனால் தன் மகன்கள் நலனில் என்ன செய்தார்கள். உங்களை பாசத்திற்காக எதையும் விற்கும் கோழை மகனாக வளர்த்து பலி கொடுத்து விட்டனர். அடுத்தவன் உலகத்திருடன்! தன் சொந்த கூடப்பிறந்த அண்ணன் அடக்கம் எத்தனை குடும்பத்தை கெடுத்து அழித்து உள்ளான்.

கடந்த ஜூன்  உங்க அப்பா செத்தது முதல் நீங்க நாசரேத் வீட்டிற்கு பண்ணை வேலை செய்து கொண்டிருக்க; உங்க கம்பனியை உங்க கூட இருப்பவர்களே சுரண்டி தின்ன ஆரம்பித்து விட்டனர். அந்த தாயாவது பிள்ளைகள் மதிமயக்கத்தில் நிலை தவறுவதை தடுக்கக்கூடாதா? அந்த அம்மா என் கண்ணில் கண்ணீர் வருவதை பார்க்க வேண்டும் என ஆசை கொண்டது. ஆசை தீர பார்த்தும் விட்டது. இனி அது ஆத்ம சாந்தியடைந்து விடும். உங்களை தொலைத்த நான் நாள் நாளுக்கு பைத்தியம் ஆகி வருகிறேன். அத்தான் செல்லம் கொடுத்து என்னை பைத்தியமாக்கி விட்டீர்கள். நீங்க செய்யும் தவறைக்கூட கண்டு பிடிக்க இயலாது உங்க மேல் பித்து பிடித்து இருந்துள்ளேன் பாருங்கள்.


நாம் அந்த குடும்ப சாபமே படாது என்ன அழகாக வாழ்ந்தோம். இன்று எனக்கு விடுமுறை ஆரம்பித்து விட்டது. பேருந்து நிலையத்தில் காத்து நின்று பேருந்து பிடித்து இந்த வீணாப்போன வெயிலில் வாடி வதங்கி வீடு வந்து சேர்ந்தேன். நீங்க  இருந்திருந்தால் வெயில் படாது தூசி படாது வீட்டில் கொண்டு விட்டிருப்பீர்கள், தின் பண்டம், எனக்கு பிடித்த பழங்கள் என வாங்கி தந்து ஒரு பயணத்திற்கும் தயாராகி இருப்போம்.  என்ன ஒரு கொடுமை. இன்று எனக்கு மன அழுத்தம் கூடி விட்டது,   கடையில் இருந்து இட்லி வாங்கி தின்று விட்டு இருக்கின்றோம். 

எனக்கு விடுமுறை என்றதும்  வாசிக்க புத்தகம் வாங்கி   தந்திருப்பீர்கள். என்ன சந்தோஷமாக இன்றைய தினம் கழிந்திருக்கும். இந்த ஊரில் தனியாக கொண்டு விட்டு சென்று விட்டீர்கள். எனக்கோ யாரை கண்டாலும் வெறுப்பாக உள்ளது, இப்படியே இருந்தால் என் நலனுக்கு நல்லது இல்லை என்றும் எனக்கு தெரியும் . இருந்தும் என் மூளையை மீறி இதயம் சோர்ந்து விடுகின்றது.  எனக்கு கார் ஓட்ட கற்று தரும் ஆசிரியர் தாத்தா உங்க கணவன் என்ன செய்கின்றார் என்றார். ஆடிட்டர் என கூறி முடித்து கொண்டேன். அவரில்லை, மரணம் அடைந்து விட்டார் எனக்கூறுவது எல்லாம் எனக்கு பெரிய தண்டனையாகப்படுகின்றது.

நம் பிள்ளைகள் கூட தாத்தா பாட்டி வீடு போக வேண்டும் என்றிருந்தனர். நீங்க இல்லாத பயணம் மேலும் எங்களுக்கு வருத்ததை மட்டுமே தரும் என்பதால் நீங்கள் இருக்கும் வீட்டிலே இருந்து கொண்டோம். ஒரு வேளை நாங்க தனியாக போய் நீங்க தனியாக இங்கு இருந்து வருந்தக்கூடாது தானே? அத்தான் துன்பத்தில் எங்களுடன் மகிழ்ச்சியாக இருந்தீர்கள், நாலு பணம் வந்ததும்  அந்த கூட்டத்துடன் சேர்ந்து உங்க பழைய ஓணான் புத்தியை எடுத்து விட்டீர்கள். 

நீங்கள் போனதும் உங்க தம்பி கேலியாக கூறுகிறான் நீங்க புரோட்டா சாப்பிட செங்கோட்டை போவீர்களாம், உங்க குடும்பத்தை அழைத்து புகைப்படம் எடுக்க போவீங்களாம். இந்த ஈனப்பிறவிக்கு இதில் என்ன கேடு? அது அதை அந்த அந்த இடத்தில் வைக்கும் இடத்தை தவற விட்டுள்ளீர்கள். 67 நாட்கள் கடந்த நிலையிலும் எங்களால் அரசு அலுவலகம் அலைந்து உங்க இறப்பு சாற்றிதழ் பெறும் திறன் கூட இல்லை. உங்க நண்பர் உதவிக்கு தான் அணுகியுள்ளோம். ஆனால் உங்க மகன் திறமையாக வருவான். உங்களுடனே உங்க தோளை பற்றி கொண்டே  எந்த கவலையும் இல்லாது சுற்றி வந்தவன் தான் கொடும் வெயிலில் ஒவ்வொரு வேலைக்காக  தனியாக அலைகின்றான். போலிஸ் விட இயலாது என்று கூறியும் சார் சார் என கெஞ்சி முனிசிப்பால் அலுவலகம் சென்று வந்தானாம். என்னத்தை சொல்ல எங்க விதியை! 


எனக்கு நம்மை படைத்த இறைவனிடம் தான் கோபம் வருகின்றது. நல்லா நிம்மதியா சின்ன சின்ன கனவுகளுடன் பெரும் மகிழ்ச்சியில் இருந்த நம்ம குடும்பத்தை  சின்னி சிதறி எறிந்துள்ளார். என்ன மகிழ்ச்சி உண்டு எங்களுக்கு என்று நினைக்கின்றீர்கள்? உணவு வைத்தாலும் சாப்பிட மனமில்லை. எங்கும் செல்ல உற்சாகமில்லை. ஏதோ நம் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளாக இருப்பதால் பல வகையில் தப்பித்து கொண்டேன். உங்கள் முதுகு மறைவில் மறைந்து நிற்பது போல் நம் மகன்கள் நிழலில் வாழ்ந்து வருகின்றேன். அத்தான் நினைக்க நினைக்க இதயம் மரத்து போகின்றது,  நோய் வந்தால் கூட அருகில் இருந்து பார்க்க நீங்க இல்லையே என நினைக்கும் போது வருத்தப்படவும் பயமாக உள்ளது. அத்தான் நீங்க இல்லாத உலகம் என்ற உண்மை உரக்க இன்னும் காலம் எங்களுக்கு வேண்டும். சிரித்து ஓடி உழைத்தவரை ஏன் விரைவாக அழைத்து விட்டார். அத்தான் உங்களுக்கு கூட ஆச்சரியமாக இருக்குமே. இப்படி ஒரு சூழலை ஒரு கனவில் நினைத்தால் கூட இன்னும் கருதலாக எங்களை விட்டு சென்றிருப்பீர்கள்.

சமூக நியதி!

பாபா அத்தான் எனக்கு இன்னும் புரியாது இருப்பது இந்த சமூக நியதி தான்! என் விருப்பங்களை, என்னை புரக்கணிக்கும் பாங்கு நீங்கள் அன்று போன நாள் முதல் துவங்கி விட்டது. எனக்கு உங்களை பார்க்க 15 நிமிடம் அதுவும் அருட் தந்தையர் பிரார்த்திக்கும் நேரம் தான் கிடைத்தது. உங்களுடைய கடைசி பயணத்தில் என்னால் உங்களுடன் வர இயலவில்லை. பெண்கள் வரக்கூடாது என தடுத்து விட்டனர். உங்கள் உடை, நடை எல்லாம் உடனிருந்து கவனித்து வந்த எனக்கு உங்களுடன் வர மற்றவர்கள் அனுமதி பெற வேண்டி வருகின்றது.  நான் எப்படி துக்கம் அனுசரிக்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என யாரும் அன்பாக சொன்னாலும் பிடிக்க வில்லை சமூகக்கருத்தாக கூறினாலும் பிடிக்கவில்லை. என்னை எனக்கு பார்த்து கொள்ள தெரியாதா? 

அடுத்த கட்டளை நானா பக்கவும் இருந்து வருகிறது. இனி பேசக்கூடாது இனி அமைதி காக்க வேண்டும். ஆம் இனி என்ன தான் பேசவுள்ளது எனக்கு. உங்க அதிகாரம், சத்தம், எல்லாம் அவர் இருந்த போது தான், இனி பெற்ற பிள்ளையை கூட நீங்கள் தான் அனுசரித்து போகவேண்டும் என்ற உபதேசம் வேறு.

அடுத்த சில நாட்களில் பணிக்கு திரும்பி விட்டேன். ஒருவர் எங்கள் துறையை சார்ந்த அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்துள்ளார். என்னை அழைத்தாலும் சென்றிருக்க மாட்டேன். நம் வழக்கமே நாம் சேர்ந்து செல்வது தானே. இருந்தும் என்னுடன் வேலை பார்ப்பவர்கள் மேம் உங்களுக்கு அழைப்பு வரவில்லையா என்றனர். நானும் கைபேசியில் பிரச்சினை இருக்கலாம். அழைப்பு பெறவில்லை என்று கூறி முடித்து விட்டேன். பல நாட்கள் கடந்து குறிப்பிட்ட நபர் என்னிடம் வந்து மேடம் உங்களை அழைக்கவில்லை நான்.  வருந்த வேண்டாம். ஒரு வருடம் கடக்கவில்லை பார்த்தீட்களா என்றார். இதுவெல்லாம் இந்த சமூகத்தின் இயல்பு தானா? ஒரு மனிதனை குத்தி விட்டு நோவு பார்ப்பது.  நம் தெருவில் நான் நடந்து போகும் போது யார் முகத்தையும் பார்ப்பதில்லை. காலம் மாறிவிட்டது சகுனம் பார்ப்பது இல்லை என்பதெல்லாம் பொய் அத்தான். உங்களுடன் கவுரவமாக நான் போன காலம் மாறி யாருக்கும் அச்சம் வராதவண்ணம் என் முகத்தை வேறு திசையில்  திருப்பி கொண்டு நானே நடந்து போகின்றேன். இன்னும் ஒரு தோழி முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அந்த நிகழ்விற்கு சாப்பாடிற்கு அழைக்கும் போது என்னை அழைக்க தயங்கின்றார். இவரோ புரஸ்டன்ற் கிறிஸ்தவராம். நானே நீங்கள் என்னுடன் இல்லாத  எல்லா பொது நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள், பயணங்கள் என ஒன்றுமே  விரும்பவில்லை. நம் மகன் கூறியுள்ளான் அவன் படித்து வேலைக்கு வந்த பின் நாம் முன்பு பயணித்தது போல் பயணிக்கலாம் என்றான். ஆம் நீங்கள் கூறி கொண்டிருந்த ராஜஸ்தான் கோட்டைக்கு செல்ல வேண்டும். நாம் விரும்பி செல்ல நினைத்த இலங்கை செல்ல வேண்டும். என் மகன் அழைத்து செல்ல நான் காத்திருப்பேன். 

நம் பிரிவு நமக்கானது நம் தனிப்பட்ட இழப்பு, தனிப்பட்ட கவலை கண்ணீர்.  இதில் ஏன் சுற்றி இருப்பவர்கள் கருணை, சமூக நடப்பு என்ற பெயரில் என்னில் சில விடையங்களை நிலை நிறுத்த பார்க்க வேண்டும்  என தெரியவில்லை. அத்தான் உங்கள் பெட்டியில் உங்களுக்கு பிடித்த வெள்ளை சட்டையை வைத்து அனுப்பினேன். நம் திருமணச்சேலையை வைத்து அனுப்ப அந்த நேரம் தவறி விட்டேன், ஆப்பிரிக்கா போன்ற தேசங்களில் அந்த ஆண்களுக்கு சொந்தமான உடைமைகளுடன் மனைவியும் வைத்து அனுப்புவார்களாம்.  நம் சமூகத்திலும் இதை தான் எதிர் நோக்குகின்றனர். ஆனால் இந்த சமூகத்தை எதிர் கொள்வதிலும் சில வசதிகள், சில பெண்மைக்கான வசதிகள் இந்த நிகழ்வில் உண்டு என்று தான் தோன்றுகின்றது. நான் எப்போது மற்றவர்களிடம் கதைக்கும் குணம் உடையவள். தற்போது நானாகவே என் வாய்க்கு பூட்டு போட்டு வருகின்றேன். விலகி போகவே விரும்புகின்றேன். நீங்கள் இல்லாது கதைக்க ஆர்வமாக இருக்கின்றேன் என யாரும் நினைக்க வேண்டாமே? நீங்கள் அப்படி நினைக்க மாட்டீர்கள். உங்கள் நாசரேத்தை சேர்ந்த பால்ய கால நண்பர் பாலமுருகன் அண்ணா  நெல்லை ரெயில் சந்திப்பில் வைத்து சந்திக்கலாம் என்றதும் என்னையும் அழைத்து சென்றீர்கள் உங்களுடன். அதே போல் கிரீன் அண்ணா வந்த போதும் அவர்கள் வீட்டிற்கு சென்றோம். அப்போது மற்றொரு உங்கள் எஸ்டேட் குடும்பத்தையும் அங்கு வைத்து கண்டு வெகு நேரம் பேசி இருந்தோம். 

நம் எதிர்  வீட்டு நபர் உங்களை கொண்டு போன நேரம் சன்னல் கதவை அடைத்து விட்டு வெகுநேரம் கடந்த பின் ஜன்னல் வழியாக கொண்டு போய் விட்டார்களா என கேட்டு விட்டு ஜன்னலை திறந்தார்களாம். பின்பு 31 நாட்களுக்கு பின்பு தான் அடைத்த கதகை திறந்துள்ளனர். நம் மகன் நண்பன் அந்த வீட்டிலுள்ள சிறுவன் கூட 42 நாட்களுக்கு பின்பு தான் சாம் ஜோயலிடம் பேச கைபேசியில் அழைப்பு விடுத்துள்ளான்.  எதிர் வீட்டு சாமியாரை உங்களுக்கு நினைவு இருக்கும் என நினைக்கின்றேன். அந்த ஆளும் மனைவியும் வந்து நீங்கள் போன அன்று ஒன்றும் தெரியாது என பொய்யாக கதைத்து விட்டு ஞாயிறு அன்று வந்து விசாரித்து சென்றனர்.  பொதுவாக மரண வீட்டிற்கு வியாழன் ஞாயிறு அன்று மட்டும் தான் செல்வார்களாம்.  அன்று நான் அரசு மருத்துவ மனைக்கு போய் வரும் முன்னே நம் பக்கத்து வீட்டுகாரர்களூக்கு தெரிந்து விட்டது. என் வாயில் இருந்து கேட்க வேண்டும் என  அவர்கள் காம்பவுண்டுக்குள் இருந்தே கேட்டு கொண்டிருந்தனர். நீங்க தான் பேருந்து காத்து நிற்கும் போது இவர்களை பேருந்து நிலையத்தில் கொண்டு விடுவீர்கள். ஒரு நாள் நாம் இரவில் வீடு வந்து சேர நம் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு நபர் குடித்து விட்டு மரத்தின் அடியில் படுத்து கிடக்க ஒரு கணம் கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் செல்லலாமா என்று யோசித்து விட்டு, என்ன நினைத்தீர்களோ ஓடி சென்று அந்த நபரை தூக்கி அவர் வீட்டிற்குள் விட்டு விட்டு வந்தீர்கள்.

மோசஸ் நம் வீட்டில் இருந்து மூன்று வீடு தள்ளி இருக்கும் நபர், உங்களை போகும் போதும் வரும் போதும் வழி மறித்து பேசுவாரே; அவரகள்  மகள் திருமணம் , பேரன் பிறந்த போது  நாம் மெனக்கெட்டு சந்தித்து பரிசு வழங்கி வந்தோமே. அந்த ஆட்கள் எல்லாம் நம்மை தெரியாத போல் நடித்து கொள்கின்றனர். இதனால் நான் பொதுவாக யாரை கண்டாலும் பேசாது விலகி சென்று விடுவேன். யார் அபசகுனம் என்று நினைக்கின்றார்கள் என எனக்கு விளங்கவில்லை. 

சில விடையங்களை அவர்கள் பல முறை அழுத்தி கூறி ரொம்ப நல்லவர்களாக மாறக்கூடாது தானே.  பலர் உங்க குடும்பத்தை பற்றி பண ஆசை பிடித்தவர்கள், அந்த தாய் ஈவிரக்கம் அற்றவர் என்ற போது ”அவ சமாளித்து கொள்வாள்” என்றனர். ஐந்து பட்டு சேலை வாங்கி கொடுத்து விட்டாச்சு எனக்கூறி   எத்தனை சேலை வாங்கி கொடுத்தனர். பட்டு சேலை கணக்கு பேசி வாங்கின என் மாமியார் எனக்கு பின்பு ஒரு பெயருக்கு கூட ஒரு சேலை எடுத்து தரவில்லை. எல்லாம் என் மனதில் ஆறிக்கிடந்த காயங்கள். தற்போது யாராவது என்னை ஆசுவாசப்படுத்த அல்லது அவர்கள் நல்ல மனதை எனக்கு புரிய வைக்க ஆரம்பிக்கும் போது என்னால் அமைதி காக்க இயலவில்லை. கொந்தளித்து போகின்றேன்.

எல்லா வசதி வாய்ப்பு இருந்தும் கல்விக்கு என செலவழிக்க பெட்டியை வித்தேன் சட்டியை வித்தேன் என சிலர் கணக்கு கூறும் போது வெறும் தனியார் நிறுவனத்தில் இருந்து கொண்டு எனக்கு கல்வி வாய்ப்பை உருவாக்கி தந்தீர்கள். ஒரு போதும் சொல்லி காட்டவில்லை .  நான் கேட்கும் முன்னே எனக்கு தேவையான புத்தகம் என்னிடம் வந்து விடும் உங்களால். உங்க தியாகம் அன்பு தான் எனக்கு பெரிதாக படுகின்றது. இன்று நீங்கள் முதலில் போய் விட்டீர்கள் என்பதற்காக நான் உங்கள் பக்கம் இருந்து நகல இயலாது. நீங்க தான் எனக்காக மிகவும் உழைத்தீர்கள். பலன் எதுவோ எனக்கு தெரியாது ஆனால் உண்மையான அன்பால் பொதிந்தது நீங்க மட்டும் தான். ஒரு பொருளை வாங்கி வந்தால் உடன் தருவது என்னிடம் தான். என் மகிழ்ச்சியான முகத்தை பார்க்க அவ்வளவு ஆசைப்படுவீர்கள். 10 ரூபாய்க்கு பெயருக்கு பூ வாங்கி தரக்கேட்டால் உங்கள் மனம் போல் வாங்கி தந்து என்னிடம் பணம் அருமை தெரிகிறதா என திட்டு வாங்குவீர்கள். நம் திருமணம் முடிந்த முதல் வருடம் எனக்கு ஒரு மோதிரமும் சுடியும் வாங்கி வந்து தந்தீர்கள். அன்றைய மனநிலையில் என்னை தேர்வு செய்ய அழைத்து செல்லவில்லை எனக்கூறி உங்கள் மகிழ்ச்சியைக்கூட நான் கெடுத்தது நினைவில் வந்து கொல்கின்றது.


உங்களை இழந்தது என் ஜென்மபாபம்.  என் கர்ம பாபம் அல்ல. நான் உங்களுக்கு உண்மையாகத் தான் இருந்தேன். நீங்க தான் என்னை மிகவும் நன்றாக வசதியாக வைக்க போகின்றேன் எனக்கூறி நாலு மாதமாக சில உங்கள் போக்குகளை மறைத்து வந்துள்ளீர்கள்.  உங்களை கட்டுப்படுத்தி உங்களை நேசிப்பது உங்களை காயப்படுத்தி விடக்கூடும் என உங்கள் போக்குக்கு அனுமதித்திருந்தேன். ஆனால் இந்த விபத்து நம் எல்லா நோக்கங்களையும் லட்சியங்களையும் வேரோடு அறுத்து விட்டது. இந்த சூழலில் யாரும் தன்னை தங்கள் தியாங்களை முன் நிறுத்தி என்னை புரியவைக்க நினைப்பது அபத்தவும் தன் அகங்காரவுமாகத் தான் இருக்கும். அதற்கும் நான் பதில் கொடுக்கக்கூடாது அமைதி காக்க வேண்டும் என்று நினைத்தால் நானும் உங்களைப்போல் கடவுளாகத்தான் மாற வேண்டும்.

என் வாழ்வில் எனக்கு கிடைக்காத மிகவும் உண்மையான, பண்பான தன்னிகரற்ற அன்பு, சுதந்திரம், அரவணைப்பு, மரியாதை எல்லாம் கிடைத்தது  உங்களிடம் இருந்து தான். மற்றவர்களுக்கு  எல்லாம் சில சுயநலங்கள் இருந்தது. உங்களுக்கு இருந்த ஒரே சுயநலம் நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் உங்க ஆசை நிறைவேறாது போய் விட்டது அத்தான். அந்த ஆசை நிறைவேற நானும் உங்களுடன் வந்து சேர வேண்டும். அந்த நாட்களுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.

வாழ்க்கை மாயையா? மாயமா?

பாபா அத்தான் நேற்றைய கனவில் உங்களை கண்டேன். ஒரு வெள்ளை வேட்டியை உடுத்த போவதாக என்னிடம் கூறினீர்கள். நான் தடுத்தேன் வேண்டாம் இது போன்று தானே அன்றும் வெள்ளை வேட்டியை எடுத்து போய் வீடு திரும்பாது இருந்தீர்கள். காலையில் விழிக்க போகும் போது நடைப்பயிற்சிக்கு வருகின்றாயா என அழைக்கின்றீர்கள். அத்தான் என்ன கொடுமை? நிஜமான  உயிரோட்டமான நம் வாழ்க்கை கனவாக மாறி விட்டது.  


மூன்றாம் நாள் உங்கள் கல்லறைக்கு அழைத்து வந்தார்கள். அன்று வீட்டில் உணவு நாங்கள் வைக்கவில்லை. ”ராஜா ராணி” உணவகத்தில் தான் உண்டோம். அன்று தான் முதன்முதலாக உணவக பைப்பை திறந்து என் கையை கழுவினேன். இல்லாவிடில் நீங்க பைப்பை திறக்க நான் எப்போதும் ஓடி வந்து கையை நீட்டி கழுக நீங்க பைப்பை அடைத்து விட்டு வருவீர்கள். 

ஆலயம் சென்று உங்களுக்கான திருப்பலியில் பங்கு பெற்று கல்லறைக்கு வந்து சேர்ந்தோம். உங்களுக்கு எப்படிப்பட்ட இடத்தில் இடம் ஒதுக்கியிருக்கிறார்களோ என மனம் பதறியது. உங்கள் நாசரேத் ஊர் கல்லறைக்கு வந்த போது உங்க அப்பா கல்லறை மேல் நாய் அசிங்கம் செய்து இருந்தது.  உங்கள் கல்லறையில் எந்த நாயும் காலை வைத்து விடக்கூடாது என என் மனம் கூறியது. 

அத்தான் என் பக்கம் எப்போதும் மலை போல் நிற்கும் நீங்கள் அந்த கல்லறைக்குள் நெடும்சாணாக கிடக்கும் காட்சி நினைத்தால் இப்போது என் மனம் உடைந்து போகின்றது.  ஏன் அந்த கல்லறையில் இவ்வளவு விரைவில் சிறைப்பிடித்து வைத்து விட்டனர். உங்களால் எப்படி அமைதியாக நித்திரை கொள்ள இயல்கின்றது. அத்தான் எனக்கும் பக்கத்தில் இடம் வாங்கி போட வேண்டியிருந்தேன், வாங்கி இட்ட இடத்தை திருப்பி கொடுத்து விட்டனராம்.   நான் வரும் முன் யாரையாவது உங்கள் பக்கத்தில் வைத்து விடுவார்களோ என என் மனம் பதறுகின்றது. 

அத்தான் இது கொடுமை கொடுமையிலும் கொடுமை. எப்படி அந்த தெய்வத்திற்கு உங்களை அழைத்து செல்ல மனம் வந்தது. உங்கள் தம்பி -நண்பர் ஆன்றூஸ் உங்களுக்காக தினம் 52 மணி ஜெபமாலை சொல்கின்றாராம். உங்களை மறக்க இயலவில்லையாம். என்னால் ஜெபிக்க  இறைவனிடம் ஒன்றும்  இல்லை. உங்களை தவிறை எதை கேட்க இயலும். கடவுள் நினைத்தால் உங்க கண்ணாடி, கைபேசியை காத்து என்னிடம் தந்த து போல் உங்கள் தலையை காத்து தந்திருக்கலாமே. உங்களை விட என்ன இருக்ககூடும் வேண்டுதலாக.  உங்களை காத்து கொள்ளாது என்னிடம் இருந்து பிரித்து சென்று விட்டாரே.  உங்களை மிகவும் பிடித்து போய் விட்டதாம் கடவுளுக்கு!

னக்கு தெரியவில்லை. அது எப்படி என் இதயத்தை பிளர்ந்தா உங்களை அழைத்து செல்வது. அத்தான் என் அரணான உங்களை எப்படி என்னில் இருந்து விலக்கலாம். சிந்திக்க சிந்திக்க முடியவில்லை. என் பெயருடன் இணைத்து கொண்ட பாபா என்ற உங்கள் பெயரை கல்லறையில் பொறித்து பார்ப்பதும் என் விதியா? வேண்டாம் வாழ்க்கை மாயை ஆம் தாமரை இலை போல் தண்ணீரில் மிதக்க வேண்டுமாம். எப்போதும் அப்படி தான் நினைத்து கொண்டு மிதப்பில் வாழ்ந்தோம். நம்மால் யாரையும் ஏமாற்றி சம்பாதிக்க இயலவில்லை. உழைத்தோம், நம்பிக்கை வைத்தோம் கடவுள் தந்த நம் மகன்களை மகிழ்ச்சியாக வைக்க நினைத்தோம். 

அத்தான் என்னால் நீங்கள் மதியம் 12.30 க்கு அழைத்து கதைக்கும் மொழியை மறக்க இயலவில்லை, நீங்கள் காலை என்னிடம் விடைபெற்று செல்வது மாலை 7.30 க்கு சந்திப்பது இரவில் நீங்கள் கணிணியுடன் பொழுதை கழிப்பது அதை அவதானித்து கொண்டே என் புத்தகத்தில் நான் ஆழ்வது. தூக்கம் வந்ததும் நாம் தூங்க செல்வது எல்லாம் எல்லாம் கனவாகி விட்டதே. எங்கிருந்தாலும் எப்போதும் உங்கள் உருவம் தான் வழி மறிக்கின்றது. இந்த பெரும் உருவம், என் காவல் தெய்வத்தை எப்படி என் அனுமதி பெறாது எடுத்து செல்லலாம் அத்தான். நம்பவே இயலவில்லை. எனக்கு இந்த உலகத்தில் கதைக்க, சண்டையிட, கொஞ்ச, மிஞ்ச என எல்லாமே நீங்க தான் இருந்தீர்க்கள். உன்னால் யாரிடமும் நட்பு  தொடர்ந்து பேணத்தெரியாது என்பீர்களே. அதுவெல்லாம் உங்களுக்காக தான். 

என்னால் நேர்மறையாகவே சிந்திக்க இயலவில்லை. எப்படி நம்பிக்கை வைப்பது, யாரிடம் நம்பிக்கை வைப்பது. நான் மகிழ்ச்சியாக இருந்தேன். என் திருமண வாழ்வில் கண்ட குறைகளை நான் பெரிது படுத்தவில்லை வருத்தப்படவில்லை  ஏன் என்றால் நீங்க என்னுடன் இருந்தீர்கள். இப்போது எதை நினைத்து நான் என் வாழ்க்கையில் நம்பிக்கை வைப்பது. 


என் கவலையால் நம் மகன்கள் வளர்ச்சி தடைப்படக்கூடாது, ஆனால் உங்கள் நினைப்புகள் எனக்கு வாழ்க்கையில் அர்த்தத்தை, வாழ்க்கை மேலுள்ள பிடிப்பை  உடைத்து போட்டு விட்டது.  நான் பொதுவாக கலகலப்பாக பேச விரும்பும் நபர் . இப்போது வேண்டுமென்றே அமைதி காக்கின்றேன். யாரிடமும் நிமிர்ந்து நின்று பேச விருப்பமில்லை. பேசி என்ன பயன்? பேசவேண்டிய உங்களிடம் எனக்கு பேச இயலவில்லையே.  

உலகமே மாயை என்ற நம்பிக்கையில் உற்சாகம் அற்று  வாழ இயலுமா? அத்தான் என்னால் இனியும் நம்ப இயலவில்லை. நீங்கள் இனி வரமாட்டீர்களா?.  என் மனம், தியானம் போன்று உங்களையே மனனம் செய்து கொண்டு இருக்கின்றது. என்னை காத்து நீங்கள் நிற்பது , பைக்கில் வேகமாக வருவது, நீங்கள் கதைக்கும் கதைகள் , உங்கள் ஆழமான அமைதியான பார்வை, சில போது நீங்கள் சிரிக்கும் சிரிப்பு, ஓடி வருவது, எங்கு சென்றாலும் என்னை உடன் அழைத்து செல்வது, என என்  எண்ணங்கள் கடல் அலை போன்று திருப்பி திருப்பி மோதுகின்றது. இனி நீங்கள் இல்லை, நீங்கள் இல்லையா? அது எப்படி நிகழ்ந்தது, ஏன் நிகழ்ந்தது என என் மனம் விடை தெரியா கேள்விகளுடன் அல்லல்படுகின்றது. 


என் ஒரே மகிழ்ச்சி உங்களுடன் உள்ள பயணங்கள், நம் கதைகள் . இப்போது கல்லூரி விடுமுறையும் கிடைத்து விட்டது. ஒன்றரை மாதம் நீங்க இல்லாத வீடா? அம்மா வீட்டிற்கு தம்பி தம்பி மனைவி எல்லோரும் அழைத்தனர், ஜாஸ் அவள் வீட்டிற்கு வரக்கூறினாள். இல்லை நீங்கள் இருந்த வீட்டை விட்டு எங்கும் போக மாட்டேன். நேற்று வாடகைக்கு பிடித்த வீட்டின் முன் பணத்தையும் திரும்ப வாங்கி விட்டேன். எல்லாம் இழந்து விட்டேன். உங்கள் மணம் கொண்ட வீட்டை விட்டு போக இயலாது என்னால். உங்க ஒவ்வொரு சட்டையும் எடுத்து பார்த்து கொண்டிருக்கின்றேன். ஏன் இவ்வளவு விரைவில் எல்லாம் முடிந்து விட்டது. உங்களுக்கு சட்டைகள் போட்டு ஆசை தீர்ந்து விட்டதா? உங்க வேட்டிகள் மூன்று எண்ணம் கிடக்கின்றது. பின்பு எதற்கு அந்த கறை பிடித்த வேட்டியை எடுத்து கொண்டு ட்ரை வாஷ் எனக் கூறி ஓடினீர்கள். 

அத்தான் நிம்மதி இனி இல்லவே இல்லை. நீங்கள் தான் பாசமாக இருந்து கொண்டே பழி தீர்த்து விட்டீர்களே? அத்தான் உங்களை நினைத்ததும் அழுகையுடன் தொண்டையும் அடைக்கின்றது. நீங்கள் மெழுகுவத்தி உப்பு வாங்கும் அம்மையார் என்னை உற்று நோக்கினார் அவருக்கு புரிந்து விட்டது போல்.  எனக்கு தான் அன்றைய தினம் அந்த அரசு மருத்துவ மனையில் கடைசியாக உங்களை தொடக்கூட அனுமதி இல்லாது எல்லாரும் உங்களை பார்ப்பதை பார்த்து கொண்டெ கலங்கி நின்றேன்.  இதுவா நீங்கள் விரும்பிய முடிவு?  காலை ஏழே முக்கால் விடை பெற்று சென்ற உங்களை அன்று இரவு ஆறு மணிக்குள்ளே சிறைப்படுத்தி விட்டனர் அத்தான். மனித வாழ்க்கை குறிப்பாக உங்கள் வாழ்க்கைக் கதை இவ்வளவு தானா?  நம்பவே இயலவில்லை இவ்வளவு விரைவில் உங்கள் வாழ்க்கை முடிவு பெறுமா?  நம் வாழ்க்கை மாயமாகுமா? 

வருடங்களை யுகங்களாக மாற்றிய விதி!

திருமணம்  முடிந்து அத்தான் வீட்டிற்கு சென்றாகி விட்டது.  சென்ற ஒரு மாதத்திலே எனக்கு புரிந்து விட்டது இது அவசரமாக முடிவாகின திருமணம். நானும் சில விடையங்களில் பக்குவமாகாத மனநிலையில் இருந்தேன்,  பல சம்பவங்கள் அங்குள்ள சூழல்கள் என் வீட்டில் இருந்தும் மிகவும் மாறுபட்டிருந்தது.  எங்கள் வீட்டில் அப்பா எங்களுக்காக எல்லாம் தியாகம் செய்பவராக இருந்தார். தன்னை விட பிள்ளைகள் சுகமாக இருக்க வேண்டும் என கருதுபவர். எங்கள் சுதந்திரத்தில் தேவை இல்லாது தலையிடாதவர். அப்பாவிடம் நான் அடி வாங்கினதாக ஒரே ஒரு முறை தான் நினைவு உள்ளது. அவருக்கு பாரிய கல்வி அறிவு இல்லை என்றாலும் பண்பானவர்.

ஆனால் அத்தான் வீட்டிலோ அவருடைய தந்தையிடம் யாரும் பேச இயலாது. அவர் மட்டுமே கதைப்பார். எப்போதும் ஆங்கிலப் புத்தகங்கள் தான் வாசிப்பார். தனக்கு காட்டுக்கு,  ஆலையம் செல்லும் போது அணிய, விருந்து வீட்டுக்கு செல்ல என பல காலணிகள் வைத்திருப்பார். பிள்ளைகளுக்கோ இரு செட் செருப்பு தான் இருந்தது.  ஒன்று வீட்டிற்குள் இட மற்றொன்று வெளியில் இட! எப்போதும் பிள்ளைகளை குற்றம் பாடி கொண்டே இருப்பார். அவர் வரும் போது வீட்டில் யாரும் கதைக்கக்கூடாது ரேடியோ சத்தமாக வைக்கக்கூடாது. பிரத்தியேகமாக டிவி ரிமோட் அவர் கையில் தான் இருக்க வேண்டும். முக்கியமாக  அவர் இருக்கும் நாற்காலியில் யாரும் இருக்கக்கூடாது. அந்த வீடு வீடாக தெரியவில்லை எனக்கு அலுவலகமாகத்தான் தெரிந்தது.


என் வீடோ வண்டிப்பெரியார் டவுண் மத்தியில் அவர்கள் வீடு நடுகாட்டில் அதும் கம்பனி வீடு. திருமணம் முடிந்த பின்பு தான் சொந்த வீட்டு, கம்பனி வீடு பிற்காலத்தில் வாடகை வீடு எல்லாம் விளங்கினது.  எங்கள் வீட்டில் எல்லாம் இருந்தும் இல்லாதது போல்  பாவிப்பர், அவர்கள் வீட்டில் பல விடையங்கள் வெட்டி பந்தாவாக காட்டி கொள்வர்.  தினம் இரவில் என்னவர் அப்பா ஒரு அவுன்ஸ் உயர் ரக பிராந்தி அருந்துவது எங்கள் குடும்ப சாப்பாட்டு மேஜையில் இருந்து தான். அதை தானாக குடிப்பதும் இல்லாது, திறம் உள்ளவன் சம்பாதித்து குடிக்கலாம் என்று தன் மகன்களுக்கே சவால் இடுவார்.  நான் என்னவரிடம் இதை பற்றி கேட்ட போது இவர் நாங்கள் பக்கத்து வீட்டில் சென்று குடிப்பதை அறியாது இருக்கார் என்றார். தன் பிள்ளைகளுக்கு தன் வீட்டு வருமான செலவுகளை பகிராது கற்று கொடுக்காது பிள்ளைகள் என்பவர்கள் தன் வீட்டு பைக் துடைக்க குடை போன்ற தொலைக்காட்சி ஆன்றனவை சரிசெய்யவே பயண்படுத்தி வந்தார்.

வெளியில் ஆசாரம் கட்டுப்பாடு, உள்ளே அராஜக ஆட்சி, எகத்தாளம் என்னை அந்த வீட்டை வெறுக்க செய்தது. காட்டுக்கு நடுவில் என்பதால் பாம்பு பயமும் என்னை தொற்றி கொண்டது. என் மாமனார் தேயிலைத்தோட்ட அதிகாரி என்பதால் வீட்டில் வேலையாட்கள்  மாடு வளர்ப்பது, செடி வளர்த்து, காய்கறி பால் விற்பது எல்லாம் எளிதாக இருந்தது. என்னவரோ அலுவலக அதிகாரி மேலும் கம்பனி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் தணிக்கைத்,துறையில் இருந்ததால் எல்லாற்றிலும் சுயகட்டுபாடும் தேவை இருந்தது அவருடைய மேலதிகாரியும் தேவைக்கு அதிகமாகவே கட்டுப்படுத்தியும் வந்தார்.   எங்கள் வீடு இன்னும் பெரும் கொடும் வனத்தில் என்பதால் வீட்டை சுற்றி சில குறிப்பிட்ட இடங்களில் சாரை பாம்பை காணலாம். எனக்கு பாம்பு தான் மிகவும் பயம். பாம்பை பற்றி எங்கள் பக்கத்து வீட்டு நண்பர்களிடம் கூறினால் பாம்பு நடு மத்தியில் விழுந்தது, குறுகே ஓடினது என பல பல .அதை விட பயங்கர கதைகள் சொல்வார்கள்.  

எங்கள் பெரிய மகன் பிறந்து 90 நாள் கடந்து சென்ற போது வீட்டில் வண்டு கத்தும் போல் சத்தம். அத்தான் டவுணில் இருந்து வந்த போது அந்த குறிப்பிட்ட சத்தம் வந்த திசையை காட்டி கொடுத்தேன். அது தேன் நிறமுள்ள ஓர் நல்ல பாம்பாக இருந்தது. அது போனதை கண்டோம். அது எங்கிருந்து வந்தது எங்கு போயிருக்கும் என பல நாட்கள் ஆராய்ந்து கொண்டிருந்தோம். இப்படி பல நெருக்கடி மத்தியிலும்  அத்தான் பாதுகாப்பில் இருப்பது மட்டுமே மகிழ்ச்சி. அவர் ஓர் அதிசயப்பிறவி. யார் யாருக்கு என்ன தேவையோ பார்த்து பார்த்து செய்வார். அது என் வீட்டார் ஆனாலும் அவர் வீட்டார் ஆனாலும் ஒரே போல் தான் செயல்படுவார். அவர் வீட்டார் என்றதும் கொஞ்சம் அதிகமாக பற்றை வெளிப்படுத்துவார் அவ்வளவே.  இந்த குணம் அவர் போகும் மட்டும் இருந்தது. அவருக்கு யார் என்ன செய்கின்றார்கள் என கணக்கிட மாட்டார். அவரால் என்ன செய்ய இயலுமோ அதை செய்து கொண்டே இருப்பார்.

அவருடைய பெற்றோர் அத்தானை ஒரு வகை தரித்திர சூழலில் வளர்த்தால் அவருக்கு தன் பிள்ளைகள் எவ்விதவும் கஷ்டப்படக்கூடாது என எண்ணி ஆற்றலையும் மிஞ்சி நல்ல பள்ளிகளில் கல்வி கொடுத்தார், தன் நிழலில் தன்னுடனே வைத்து வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்.  பல போதும் தகுதிக்கு மீறியே பிள்ளைகளுக்காக செலவழித்தார். பெரியவர் எட்டாம் வகுப்பு ஆகினதும் இனி பைக் சரிவராது எனக்கண்டு கார் வாங்க ஆசைப்பட்டார். எங்கள் எல்லா ஆசையும் நிறைவேற்ற அவர் கடின உழைப்பு தேவைப்பட்டது, உழைத்து கொண்டே இருப்பார். தூங்கும் நேரம் தவிர்த்து ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டு கொண்டு இருப்பார். சில நாட்களில்  பல மணிநேரம் தட்டச்சு செய்வதால் அவர் விரல்கள் வலிப்பது உண்டு, அப்போது கையை தடவி தரக் கூறுவார். கால் ஒரே நிலையில் வைத்து நீர் பிடித்தும் இருந்துள்ளது.  அப்போது நாங்களை எண்ணை தேய்த்து கொடுப்போம். இதனால் நான் காணப்பயிறை வேகவைத்து தண்ணீர் கொடுக்கும் வழக்கம் இருந்தது. அவர் போகும் சில மாதம் முன் எங்கள் மகன்கள் ”அப்பா உங்க வயிறு பெரிதாகி கொண்டே போகின்றது ஜிம்முக்கு வாங்க என அழைப்பார்கள். சில நாள் சில மணிநேர நடைபயிற்சியுடன் வந்து சேருவார். ஜிம்முக்கு போக நேரம் இல்லை என மறுப்பார். அப்போது அவரை ஆசுவாசப்படுத்த  ”டேய் அப்பாவின் அழகே இந்த வயறு தான். கடவுளின் பிள்ளைகள் கொழுத்த கன்றுகள் போல் இருபார்கள்” என்பேன்.


அவருக்கு பிடித்த நேரப்போக்கு பிள்ளைகளுடன் வீடியோ விளையாட்டு என்பதாக இருந்தது. சமீப காலமாக அந்த விளையாட்டை மறந்து விட்டார். தற்போது அவருக்கு  மன அழுத்தம் என்று தோன்றினால் வாகனத்தை எடுத்து கொண்டு சில நேரம் பயணம் செய்து வரவே விரும்புவார்.  அல்லது சமையல் செய்ய மிகவும் ஆசைப்படுவார். பாத்திரம் கழுகுவது, காய்கறி வெட்டுவது அரைத்து கொடுப்பது மட்டுமே என் வேலையாக இருக்கும்.  ஞாயிறு அன்று அத்தான் சமையலாகவே இருக்கும். காலையில் என்னையும் சந்தைக்கு  அழைத்து சென்று இலை உட்பட எல்லா காய்கறியும் வாங்கி வந்து பிரியாணி செய்வார். செய்து முடிக்க 11 மணியாகி விடும். நாங்கள் நால்வரும் ஒன்றாக உணவு எடுக்க அமருவோம். என் இருக்கை அத்தான் அருகில் தான் இருக்க வேண்டும். அவர் நடத்தின வாழ்க்கை ஆக்கபூர்வமாக, அன்பால் உருகி, உயிரோட்டதாக இருந்தது. இதில் நாங்கள் யாராவது வருத்தப்பட்டால் அவரும் வருந்தி விடுவார். அவரை வருந்த செய்ய வேண்டாம் என்றே அவர் உள்ள போது அவர் விரும்பாததை கதைப்பது இல்லை என்றிருந்தோம்.


பிள்ளைகளை நான் ஏதும்  வேலை செய்ய கூறினால் நான் செய்கிறேன். அவர்களை நிம்மதியாக இருக்க விடு.  தன் சிறு வயதில் இரவு உணவுக்கு முன் தன்  அம்மா உடமரக்கட்டையை வெட்டிப்போட கட்டாயப்படுத்துவதை வெறுப்புடன் நினைத்து பார்ப்பார். அதே போன்று இறச்சி குழம்பு கேட்டால் கிராம்பி எஸ்டேடில் இருந்த போது  கொக்கை வழி நடந்து சென்று பாம்பனார் டவுணில் இருந்து வாங்கி வரக்கூறுவதை நினைவு கூறுவார். தன் பெற்றோர் தன்னை நிர்பந்தித்தது போல் தன் பிள்ளைகள் நிர்பந்ததிற்கு உள்ளாகுவதை விரும்பவே மாட்டார்.


இது போன்ற அவருடைய சில விருப்பங்களாலே அவர் பல மடங்கு அதிகமாக உழைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார். எங்கள் திருமணம் முடிந்த போது அவர் 6 ஆயிரம் ரூபாய் கடனுடன் தான் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருக்கு என ஒரு ரூபாய் கூட அந்த பெற்றோர் கொடுக்கவில்லை. நாங்கள் தூத்துக்குடியில் குடிபுகுந்த போது அத்தான் ஊதியத்திற்கு; வரிசை வீடு, பொதுக்கழிப்படம் உள்ள வீட்டிற்கு குடிப்புகிரத்தான் தகுதி இருந்தது. ஆனால் என் வசதி வாழ்க்கையை கருதி நல்ல தனி வீடாக பிடித்து குடியிருந்துள்ளோம். பண்டிகை என்றால் எங்களுக்கு எடுத்து தந்த பின் கடைசியாகவே அவருக்கான உடையை எடுப்பார். எங்கள்  திருமணம் ஆன பின் அவர் பெற்றோர் அவருக்கு அவர் பிள்ளைகளுக்கு ஒரு முறை கூட துணிமணிகள் எடுத்து கொடுக்கவில்லை என வருத்தப்படுவார். ஆனால் அத்தான் வசதியான பின் தன் பெற்றோருக்கு துணிமணிகள் எடுத்து கொடுக்க தயங்கினது இல்லை. இந்த புதுவருடம் தன் அம்மாவிற்கு ஒரு சேலை என்னை வைத்து தேர்ந்து எடுத்து அவர் கையால் கொடுத்தார். 


என் தோழிகள், என் வயது கொண்ட என் உறவினர்களை கண்டால் என் வாழ்க்கைத்தரம் மெச்சப்படவில்லை. பின் தங்கியே இருந்தது. ஆனால் எங்கள் அன்பால், எங்கள் பிணைப்பால் இல்லை என்ற நிலையை எல்லாம் உண்டு என செழுமையாக்கியிருந்தோம். அத்தானின் பிரிவைத் தவிற எந்த துயரையும் நாங்கள் எதிர்கொண்டிருப்போம். அதனால் தான் என்னவோ இறைவன் அத்தானை விரைவாக அழைத்து கொண்டார். ” எல்லாம் அத்தான்”  என்ற இடத்தில் ”இல்லை” என இறைவன் தீர்வு எழுதியதின் மர்மம் தான் விளங்கவில்லை. நல்ல குடும்பம் அரவணைப்புள்ள கணவன் வீட்டார் கருதலான  உறவினர்கள் என எல்லாமே இல்லை, இல்லை என இருக்க எங்களுக்கு எல்லாமான அத்தானே ஏன் அழைத்தாய் இறைவா? என்ன தத்துவமும், எந்த ஜெபமும், எவ்விதமான கடவுள் நம்பிக்கையும், எங்களை ஈடேற செய்யாது. எங்களை கைபிடித்து நடத்தியவரை அழைத்து சென்று விட்டு எங்களை ஓடிவரக் கூறுவது கூட கேலியாக சிரிப்பது போல் தான் உள்ளது. இன்றைய மனநிலையில் 10 வருடம் சொந்த வீடு என மகிழ்ச்சியாக இருந்த வீட்டை வாடகைக்கு கொடுத்து விட்டு, நாங்கள் வாடகை வீடு தேடி போவது தான் நிம்மதியை தரும் போல் உள்ளது. எங்கள் இருப்பு, எங்கள் உயிர், மூச்சு சந்தோஷம் எல்லாம் அணைத்து என்ன பெரிய ஆசிர்வாதம் கிடைக்க உள்ளது எனத்தெரியவில்லை. ஐந்து வருடமாக கார் இருந்தும்  ஒரு முறை கூட ஓட்டுனர் இடத்தை எட்டி பார்க்காத என்னை கார் ஓட்ட கற்று கொள்ள அனுப்பி விட்டது அத்தான் பிரிவு!  பல வருடமாக சேர்த்து வைத்த கனவுகள் ஆசைகள்,எல்லாம் உடைந்து சிதற;  ஏக்கங்களுடன்  இனி புது கனவுகளை தேடி சேர்க்க வேண்டியுள்ளது


எதுவும் மனதில் ஒட்டவில்லை எதுவும் சிந்திக்க இயலவில்லை, எதைப்பற்றியும் அக்கறையும் இல்லை. ஏதோ நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றது , நான் எண்ணிக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் நம் பிள்ளைகளுக்காக போட்ட உங்க கணக்கை நான் முடிக்க நினைத்தால் அதை நிறைவேற்ற இன்னும் 11 வருடங்கள் வாழ வேண்டும் அத்தான். நீங்கள் இல்லாது 11 யுகங்களாகத்தான் தெரிகிறது. உங்களுடன் வாழ்ந்த அந்த 19 வருடங்கள் மின்னல் என மின்னி மறைந்து விட்டது அத்தான்! இந்த சூழலை கடக்க நீங்க தான் உதவ வேண்டும். நீங்க தான் எந்த பிரச்சினையும் ஒரு பிரச்சினை இல்லை என அடிக்கடி கூறுவீர்களே. எங்கள் பிரச்சினை தான் தீர்க்க இயலாத பிரச்சினையாக உள்ளது. உங்கள் நினைவுகளுடன்..............அத்தான்!

பாபா அத்தான் ஒவ்வொரு நாளும் விழிக்கும் போது என்னை திடப்படுத்தி கொள்கின்றேன் நீங்கள் இனி வரமாட்டீர்கள் உங்களை மறுபடியும் பார்க்க இயலாது என்று.  நீங்கள் என்னை விட்டு போய் விட்டீர்கள் என  என் மனம் இன்னும் நம்ப மறுக்கின்றது.  60 நாட்கள், ஒரு மின்னல் போல் மறைந்து விட்டீர்கள். ஒவ்வொரு நாள் கனவிலும் உங்களை எதிர் நோக்குகின்றேன்.  பாட்டி கூறினார்கள் நீங்க இனி ஒரு வருடம் கழிந்த பின்பு தான் வருவீர்களாம் .  என் பாட்டியை  நீங்கள் எவ்வளவு கரிசனையாக மதிப்பீர்கள். அவர்கள் வாழ்வில் கண்ட துயர் யாருக்கும் வரக்கூடாது என நினைப்பீர்கள். ஆனால் அதன் பங்கை இறைவன் உங்க மனைவிக்கே  தந்து விட்டாரே! உங்களை முதன் முதலாக சந்தித்த போது ஒரு  புகைப்படம் எடுத்தது,   நீங்கள் தான் என் வருங்கால கணவர் என தெரிந்து ஒரு புகைப்படம் பெற்று கொண்டது, உங்கள் வீட்டிற்கு ஒரு முறை வந்த போது உங்க திருமண கோட்டை போட்டு எனக்கு அழகு பார்த்தது என எல்லாம் நினைவில் வந்து  கொண்டு இருக்கின்றது.   

நம் வாழ்க்கையை பாண்டவர் மேட்டில் துவங்கி நம் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்கள், என்று உங்கள் ஒவ்வொரு நினைவுகளையும் அசைபோட்டு கொண்டு இருக்கின்றேன். இது எனக்கு கிடைத்த சோதனையா? தண்டனையா என்று எனக்கு பகுந்து அறியத் தெரியவில்லை.  இருப்பினும் என் இதயத்தை என் ஆன்மாவை சாகடித்த மாபெரும் துயர் அத்தான். நான் என்று மீண்டு வருவேன் என எனக்கு தெரியாது,  ஏன் கடவுள் இது போன்ற சோதனையை நமக்கு அளித்தார். நீங்கள் விண்ணுலகில் இருந்தும்  என்னை நினைத்து வருந்தாது இருக்க இயலாது.  

உங்களை தனியாக கொண்டு போனதை எண்ணி இன்னும் அழுகை தான் வருகின்றது. நாம் இருவரும் ஒன்றாக போக வேண்டும் என்று கூட நாம் கதைத்துள்ளோம்.  எதற்காக இப்போது இந்த பிரிவு. ஆனால் வாழ்க்கையை விளையாட்டாக நீங்கள் பார்த்து விட்டீர்கள். நானும் அந்த விளையாட்டை விளையாட்டாக பார்த்து கொண்டு இருந்துள்ளேன்.  நீங்கள் கத்தார் போறேன் என்று கூறின போது கூட நான் நம்பவே இல்லை. என் மனதில் நீங்கள் எங்கும் போக வேண்டாம் போகக்கூடாது, போக இயலாது என்றே இருந்தது. அதனால் தான் நான் எப்போதும் போல் உங்களில் மலை போல் நம்பிக்கை வைத்து இருந்தேன்.  நீங்க என்னை மீறி ஏதும் செய்ய மாட்டீர்கள் என நம்பி இருந்தேன். நீங்க என்னை உங்க அம்மாவிடம் அடகு வைத்தது சில சம்பவங்களில் புரிந்தது, ஆனால் என்ன பலன் நீங்கள் போய் விட்டீர்கள் என அறிந்ததுமே அந்த தாய் என்னை தூக்கி வெளியே எறிந்து விட்டார். நல்ல காலம் நாம் நாசரேத் வீட்டு மாடியில் வீடு கட்டவில்லை. இன்றைய நிலையில் நானும் உங்க பிள்ளைகளும் நடுத்தெருவில் தான் நின்றிருப்போம். எங்களை நாசரேத்தை விட்டு பாளையம்கோட்டையில் கொண்டு வந்து பாதுகாப்பாக இருக்க வைத்து  விட்டு சென்றுள்ளீர்கள். ஒரு நாள் நம் மகன்களிடம் கூட அந்த தாய்க்கு கதைக்க மனம் வரவில்லை. நீங்க எங்க சொந்தம் என ஓடி ஓடி போய்  சொந்தம் கொண்டாடின  ஒருவர் கூட நம் மகன்களிடம் கதைக்கவில்லை.  எனக்கு யாரிடமும் கதைக்கவும் விருப்பம் இல்லை, யாரிடம் இரக்கம் பெறவும் விரும்பவில்லை. இறைவனே கைவிட்ட போது உறவினர்களிடம் இரக்கம் எதிர் பார்க்ககூடுமா?   ஆனால் இன்னும் பலர் எங்களை தாங்கி வருகின்றனர் உதவுகின்றனர், நலம் விசாரிக்கின்றனர் அதுவெல்லாம் உங்கள் அன்பின் பிரதிபலிப்பாக காண்கின்றேன். மரணம் கள்ளனைப் போல் வரும் என்பது இது தான் போல்!  என்னிடம் ஏன் அன்று நீங்கள் கதைக்கவில்லை. உங்கள் மகனிடம் மட்டும் தான் கதைத்து சென்றுள்ளீர்கள். எல்லோரும் கேட்கின்றனர் ஏதும் சகுனம் தெரிந்ததா என்று.. அன்றைய தினம் அதி காலை நம் வீட்டு கன்னி மூலைப்பக்கம் மண் வெட்டி போட்டு யாரோ சுரண்டுவது போல் இருக்கிறது என்றதும் நீங்கள் எலியாக இருக்கும் என்றீர்கள். நீங்கள் கிளம்பி போகும் போது நான் கை வலியால் எரிச்சலில்  நின்று கொண்டிருந்தேன்.  ”என்ன ஆச்சு” என்று கேட்காது கடந்து சென்றீர்கள். நம் மகன் இன்று மீன் வேண்டாம் எனக் கூறியுள்ளான். ஆனால் நீங்களோ நீ என்னுடன் வருகிறாயா என கேட்டதும் நான் படிக்க போகிறேன் நான் வரவில்லை எனக் கூறியுள்ளான். 

நீங்க ஜோசியத்தில் நம்பிக்கை ஏன் வைத்தீர்கள்? அதனால்  உங்கள் தம்பியிடம் கண் மூடித்தனமாக நம்பிக்கை வைத்தீர்கள். என்னை பிரிய வேண்டும் என முடிவு எடுத்தீர்கள். ஏன் அந்த இறைவன் குழந்தையை போல் மனமுள்ள உங்களை எடுத்து விட்டு சென்றார். அத்தான் எப்படியும் வாழ்ந்து தானே ஆக வேண்டும். என்னை காத்திருக்கும் வரும் வருடங்களை எண்ணி கலங்குகின்றேன். அத்தான் உங்க சிரிப்பு, உங்க தைரியம் உங்க அன்பு, உங்களிடம் பேசாது உங்களை நோக்காது எப்படி முன்னோக்கி செல்வேன் எனக்கு தெரியவில்லை.  நீங்கள் சிரித்து கொண்டு வந்து சேரும் வாசல் கதவை உற்று பார்த்து கொண்டே இருக்கின்றேன். 


உங்களிடம் மிகவும் கோபத்தில், சில நேரம் உங்களை  திட்டி கொண்டு வீட்டிலிருப்பேன். உங்களை கண்டதும் லேசாக சிரித்து, நீங்கள் அருகில் வர வர எல்லாம் மறந்து சிரித்து உங்களில் சரணாகதி அடைந்து விடுவேன்.. சில போது  உங்கள் எண்ணங்கள் முடிவுகளை என்னால் ஏற்று கொள்ள இயலாது. அப்படி தான் சில விடையங்களில் உங்களிடம் முரண்டு பிடித்து கொண்டு என் எண்ணங்களை கூறி விட்டு விலகி நின்றேன், ஆனால் அந்த கடைசி மூன்று மாதம் நீங்கள்; நான் கூறினதை ஒன்றுமே ஒரு பொருட்டாக எடுக்க வில்லை. கடைசி வாரம் கூட இந்த ஸ்கூட்டியை மாற்றுங்களேன் என கேட்டு கொண்டேன். ஆனால் மிகவும் லேசாக, கிண்டல் சிரிப்புடன் வண்டியை எடுத்து கொண்டு சென்றீர்கள். நீங்கள் அன்று அணிந்திருந்த  அந்த ஆஷ் நிற செருப்பும் கூட எனக்கு பிடிக்காதது. உங்கள் கால் அழகை, உங்கள் ஆளுமையை கெடுக்கின்றது எனக்கூறி குப்பையில் எறிந்திருந்தேன். நீங்க தான் நம் வீட்டு பின் பக்கம் போய் அந்த செருப்பை மறுபடியும் எடுத்து வந்து அணிந்தீர்கள். 

அத்தான் நான் கூறும் சில விடையங்களை எதிர்க்க வேண்டும்  அல்லது நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று எண்ணியை மிகவும் வண்மையான வார்த்தைகளால் என்னை வாய் பேச இயலாத வண்ணம் முடக்கி உள்ளீர்கள்.

நான்கு ஆண்டு முன்பு கோபம் வந்ததும் நான் எதிர்பாரா நேரம் கட்டிலில் இருந்து உருட்டி நிலத்தில் விழ வைத்தீர்கள். அதை எல்லாம் விளையாட்டாக எடுத்து கொண்டு சமாதானம் ஆகி கொண்டேன். நீங்கள் ஒருவனிடம் நட்பு கொண்டது எனக்கு பிடிக்கவில்லை. நான் கடுமையாக விமர்சித்த போது ஒரு தென்னை மட்டையை வைத்து அடித்து விட்டு சென்றீர்கள். நான் அதை ஒரு அன்பு அடியாகத்தான் நினைத்தேன். ஆனால்  நான் யாரிடவும் தெரிவிக்க விரும்பாது இருந்தும்  நீங்கள் என் அம்மாவை வரவைத்து உங்கள் பக்க நியாயத்தை விளம்பரப்படுத்தினீர்கள்.  நான் நீங்கள் அடித்ததை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. 

 அத்தான் நவம்பரில் இருந்து பெப் 16 மட்டும் நீங்கள் பல விடையங்கள் எனக்கு தெரியாது இருக்க வேண்டும் என கவனமாக இருந்துள்ளீர்கள். ரமேஷ் திருடனிடமே ”எப்படி என்னிடம் கதைக்க வேண்டும்” என்று சொல்லி கொடுத்துள்ளீர்கள். எப்படியோ மகாபாரதப்போரில் குந்தி தன் மகன்கள் வெற்றிக்கு வேண்டி கர்ணன் உயிரை எடுத்தது போல் உங்க உயிரை  உங்க தம்பிக்காக கொடுத்து விட்டாள். கர்ணன் மனைவியை இப்போது சந்திக்க வேண்டும் அவள் மனநிலை எவ்வாறாக இருந்திருக்க கூடும் என என் மனம் கேட்டு கொள்கின்றது. அத்தான் தன் உயிர் குண்டலத்தில் இருக்கிறது என தெரிந்தே கர்ணன் கொடுத்தது போல் உங்க கவசமான என்னை புரக்கணித்து உங்க உயிரை கொடுத்து விட்டீர்கள். இது ஒரு பாடம் என்றனர் சிலர். நான் அப்படி எல்லாம் கூற மாட்டேன். யேசு நாதர் கூறினது போல் அன்பிற்கு என உங்க உயிரை கொடுத்து விட்டீர்கள். என் உயிரையும் எடுத்து விட்டீர்கள் அத்தான். உங்க அன்பு கருதல் உங்க பரிவு என்னை நிலைகொள்ளாவண்னம் நினைக்க வைக்கின்றது சிந்திக்கவைக்கின்றது. நம்மை பொறுத்தவரை இது நமக்கான சவால்.  உங்களை நினைத்து அழாத நாட்கள் இல்லை, நம் வீட்டு சின்ன குழந்தைகள் ஜெனோவில் இருந்து நாங்க அனைவரும் உங்கள் அன்பை நினைத்து வருந்துகின்றோம். உங்க மறைவு எங்கள் அனைவரையும் உங்க அன்பால் உங்க பாசத்தால் கட்டுண்டு கதிகலங்க வைக்கின்றது. நீங்க எங்கும் போகவில்லை எங்கள் மனதில் வாசம் செய்கின்றீகள்.


உங்களை என்னைப்போல் தீவிரமாக அன்பு செலுத்தியவர்கள் யார் இருக்கக்கூடும். கடந்த 19 வருடம் உங்க வெற்றிக்காக உழைத்தேன். உங்க சுண்டு விரல் ஒடிந்து வேலைக்கு செல்ல இயலாத போது என் டாலர் செயினை தந்தேன். மறுபடியும் தூத்துக்குடியில் வேலை இல்லாது இருந்த போது எனக்கு பிடித்த இன்னும் ஒரு செயினை தந்தேன். தூத்துக்குடி ஸ்பினிங் மில்லுக்கு ஆடிட்டராக சைக்கிளில் செல்லக்கூடாது என்ற காரணத்தால் என் கல் வளையலை கொடுத்து ஷைன் பைக் வாங்க கூறினேன். உங்க தம்பி திருமண நாள் அன்று உங்களை சொந்த வீடு இல்லை என அவமதித்த போது என்னிடம் இருந்த எல்லா நகையும் கொடுத்து சொந்த வீட்டிற்கு உடமையாளராக மாற உதவினேன். அதின் உரிமைப்பத்திரத்தில் நம் கூட்டு சொத்து என்று இல்லாது பால்துரை மகன் செல்வபாபா என இட்ட போது மனதில் என் கவலையை ஒளித்து வைத்து கொண்டேன். உங்க அம்மா என்ன செய்தார்? மூன்று மோதிரத்தை பிடுங்கி கொண்டார். ஒரு கட்டில், உங்களுக்கு பிடித்த மேஜை கேட்டதற்கு கூட தரவில்லை, என் அப்பா உங்களுக்கு என கொடுத்த பணத்தையும் அவர்கள் வங்கி கணக்கில் போட்டு கொண்டனர். இருந்தும் அவர்களை நோக்குவது உங்கள் கடமை என நியாயம் கூறினீர்கள்.  அவர்களை திருப்திபடுத்த என பல லட்சம் களைந்தீர்கள். அத்தான் அவர்கள் முன் நீங்கள் முன் வரவேண்டும் என எவ்வளவு நான் முயன்றிருப்பேன். ஆனால் அவர்களுடன் சேர்ந்து கொண்டே என்னை ஏமாற்றி சென்று விட்டீர்களே அத்தான்.


அந்த கடைசி மூன்று நாட்கள் நீங்க ரீகனிடம் ஏதோ கதைக்க எத்தனித்துள்ளீர்கள். ஆனால் என்னிடம் ஒன்றும் கதைக்கவில்லை. அத்தான் என்னால் நினைக்க நினைக்க உங்க பிரிவு கொல்கின்றது. நீங்கள் இந்த உலகில் உங்க இதயத்தால் வாழ நினைத்தீர்கள்.  உங்க இதயத்தை விரும்பிய நாங்கள் பலர் இருந்தும் நீங்க அந்த மூன்று பாம்புகளிடமும் சிக்கி கொண்டது தான் உங்க விதியாக முடிந்து விட்டது. அத்தான் நாம் கண்ட கனவுகள் எல்லாம் நிலைகுலைந்து போய் விட்டது. எல்லா திட்டங்களையும் திருத்தி எழுதி கொண்டிருக்கின்றேன். வருந்த வேண்டாம் அத்தான் நம் காதல் அன்பு நிலையானது அதன் நினைவுகள் உங்களை என்றும் என்னில் வாழ வைக்கும். அந்த நினைவுகளுடன் தான் ஒவ்வொரு பொழுதும் கழித்து கொண்டிருக்கின்றேன்.