3 Jan 2024

எழுத்தாளர் புதிய மகாதேவியின் எழுத்துக்கள்-ரசூலின் மனைவியாகிய நான், மக்ஃபி, ஐவருமாய் - சிறுகதைகள்

”ரசூலின் மனைவியாகிய நான்" என்ற 88 பக்கம் நூல் நமக்கு தரும் அதிர்வு பெரியது. காவ்யா பதிப்பகம் ஊடாக இப்புத்தகம் வெளி வந்துள்ளது.

1993 ல் மும்பை குண்டு வெடிப்பு
மரணம் 459 காயப்பட்டோர் 1400
2008 நடந்த குண்டு வெடிப்பில் மரணம் 164, காயமடைந்தவர்கள் 308

இது போன்ற ஒரு குண்டு வெடிப்பு விபத்தில் சிக்கிய இஸ்லாமியரான ரசூல், ரசூலின் காதல் மனைவி கவுரி, குண்டு வெடிப்புகளில் இறந்த நபரின் மனைவி புஷ்பா, அவர் மகள் தன்வி , கவுரியின் இழந்த வாழ்க்கையை எண்ணி கவலையில் மறைந்த கவுரியின் தகப்பனார், பாட்டி தற்போது மரணத்தோடு மல்லிடும் கவுரியின் தாய். இப்படியாக சர்வதேச தீவிரவாதத்தின் பாதிப்பு எவ்விதம் சாதாரண எளிய மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என விறுவிறுப்பான நடையில் எழுதப் பட்ட புத்தகம் இது.
தேவையற்ற விவரிப்பு இல்லை, விண்ணாரம் இல்லை, தேவையற்ற ஒரு பக்கம் கூட, ஒரு வார்த்தை கூட கண்டு பிடிக்க இயலாது. அத்தனை நுணுக்கமான நுட்பமான எழுத்து. கதாபாத்திரங்களை ஒரு காட்சி சட்டகமாக நகத்தும் நல்லதொரு உக்தியை கையாண்டுள்ளார். வாசகர்களை கதையை சொல்வதை கடந்து சம்வங்கள் ஊடாக அந்த களத்தில் , அந்த அந்த உணர்வில் கொண்டு சேர்க்க இயல்கிறது. கதையை வாசகர்கள் மனக் கண்ணில் காட்சிகளாக கொண்டு வந்துள்ளார்.
மனித உணர்வுகள், உணர்விற்குக்கும் உடலுக்குமான போராட்டம், நேசித்தவர்களை வாழ்க்கையின் இடைவழியில் இழக்கவியலாத மனப் போராட்டம் இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் காத்திரமாக நகர்கிறது.
ஒரு பக்கம் உடல் இயக்கம் அற்று கிடக்கும் காதல் கணவன் ரசூல், அவனுடன் இருந்த காதல் அன்பை கடந்து செல்ல இயலாத கவுரி, அவளை போன்றே அதே துயரில் வாழும் ராமசந்திர புச்சுடன் உருவான ஒரு நேசம் , அதன் முடிவு, அதே போல் ரசூல் பெயரை ஒத்த ராகுல் உடன் ஆன ஒரு சந்திப்பு. பெண்களின் மன வெளி, ஏற்கனவே போராட்டங்கள் வழி கடந்து செல்லும் பெண்களை எதிர் நோக்கி இருக்கும் பள்ளங்களையும் அவதானிக்க சொல்லி எழுதப்பட்ட புத்தகம்.


ரயில் கூட்ட நெரிசலில் பயணம் செய்து போகும் கவுரி என்ற கதாப்பாத்திரம் மனதில் இருந்து அத்தனை எளிதாக கடந்து போகக் கூடியவர் அல்ல. உடல் இயக்கம் அற்று மருத்துவமனையில் இருக்கும் ரசூலும் வாசகர்களில் தங்கி விடுகிறார்.
வெடிகுண்டு தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு ஆணித்தரமான எழுத்து புதியமாதவியிடையது.

பெண் எழுத்தாளர் என்ற வகையில் இன்னும் அங்கீகாரமும் பெயரும் கிடைக்க வேண்டிய ஆளுமை ஆகும் எழுத்தாளர் புதியமாதவி. புதியமாதவி மகாராட்டிர மாநிலத் தலைநகர் மும்பையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தமிழ் சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் சமகால அரசியல், பெண்ணியம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர்.

மக்ஃபி

இருவாச்சி பதிப்பகம் வழியாக நவம்பர் 2023 ல் வெளியான புத்தகம் மக்ஃபி.,பக்கம் 88,விலை ரூ 100, அலைபேசி 9444640986
சைபுன்னிஷா என்ற மக்ஃபி ஒரு சூபிஃ கவிஞர். 1639-1702 காலம் வாழ்ந்து மறைந்தவர். இந்திய அரசியலில் ஸ்தரபதி சிவாஜிக்கு ஆன அதே இடம் மக்ஃபியின் கனவுகளுக்கும் உண்டு என்று கதையாசிரியர் குறிப்பிட்டு உள்ளார்.
தனது தந்தையின் அதிகார செயல்பாடுகளுக்கு எதிராக போராடி 20 வருடம் அரண்மனை சிறையில் இருந்தவள்.
இவருடைய கவிதைகள் இவரின் மரணத்திற்கு பின் சூபி கவிதைகளாக, கடவுளை நினைத்து உருகுவதாக அர்த்தம் கொண்டு பிரசுரிக்கபட்டுள்ளது .
எழுத்தாளர் புதிய மகாதேவி, மக்ஃபியின் ஆன்மாவாக மாறி எழுதிய classic எழுத்து வகை இது . 64 வயது வரை திருமணம் செய்யாது வாழ்ந்தார் என்றாலும் பல காதலர்கள் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது. சத்ரபதி சிவாஜியை மனதார காதலித்து வந்தவள் என்ற வரலாறும் உண்டு.
மாக்ஃபி என்றால் ரகசியம்.
இந்த புத்தகம் வெறுமனே கதையாக சொல்ல கூடியது அல்ல, வாசித்து உணரக் கூடியது. ஒரு வித்தியாசமான உணர்வை மனச்சலனத்தை மனவெளி ஊடாக எல்லையற்று பயணிக்க செய்கிறது. வார்த்தைகள் ஜாலம் செய்கின்றன
*******
"ஓ மாக்ஃபி
காதல் பாதையில்
நீ தனித்தே தான்
பயணித்தாக வேண்டும்
உனக்கு பொருத்தமானவர்கள்
யாருமில்லை
அது கடவுளாக இருந்தாலும்."
***********
"உன் வசந்தம் எப்போதும் இங்கே இருக்கும். இந்த வெறுமை, இந்த சூனியம் இந்த பூஜியம் எல்லாம் நீயே வரைந்து கொண்ட கற்பனை உலகம். அது நிஜமல்ல. நிஜத்தில் உன் பாவா உனக்காக காத்திருக்கிறார் சைபூன்"
*********
எதெற்காகவெல்லாம் கொண்டாடி தீர்த்தாரோ, அதுவே அவருக்கு எதிராக மெல்ல மெல்ல விசுவரூபம் எடுத்து விட்டதை பாதுஷா கவனிக்க தவறவில்லை.
************
மொகலாய சக்ரவர்த்தி அவுரங்கசீப்பின் மூத்த மகள். போர் செய்து ஓய்ந்து போய் விட்டார் அவுரங்கசீப் .தனது முதல் மகள் தன்னிடம் இருந்து பிரிந்து இருப்பதை எண்ணி கவலை கொள்கிறார். ஜீனத் என்ற மகளை அனுப்பி விட்டு தன்னிடம் அழைத்து வர முயல்கிறார். ஆனால் தானே சிறை படுத்திக் கொண்ட மகள், சிறையில் இருந்து வெளிவர மறுக்கிறாள்.
ஒரே நேரம் மக்களிடம் பரிவும், இளவரசியாக இருப்பதும் இயலாத விடயம் என தங்கை ஜீனத் புரியவைக்க முயல்கிறார்.

மாக்ஃபி தனது தந்தையின் இறப்பிற்கு 5 வருடம் முன் இறந்து, பாசமான தந்தைக்கு தண்டனையும் கொடுத்தார் என்பது நியதி ஆனது. மக்ஃபி கதை 17 ஆம் நூற்றாண்டின் காலவெளியை சொல்லியது. அத்துடன் இந்த நூற்றாண்டு தற்கால அரசியல் கொலை கதையையும் பின்னி கதையை முடித்த விதம் அருமை.

தகப்பன் மகனை கொன்றது, மகள் தகப்பனை தண்டித்தது என வரலாற்றில் கடந்து போன போது தற்கால அரசியலில் கணவனே மனைவியை கொலை செய்து விட்டு வெற்றிகரமாக அரசியல் செய்யும் இந்திய அரசியல் தளத்தையும் வெளிப்படுத்தும் விதம் அருமை!.
எப்படி மக்ஃபி தந்தையின் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக நின்றதால் கொல்லப்பட்டாரோ அதே போல் அரசியல்வாதியான கணவனுக்கு எதிராக நிலைகொண்ட பேராசிரியர் மனைவி கொல்லப்படுகிறாள். மக்ஃபி கதையை மொழியாக்கம் செய்தது கொலைக்கான காரணமாகிறது. தற்கால தகவல் காலமும் கொல்லப்பட்ட விதம், கொலை ஒரு சான்று இல்லாதே நடைபெறுகிறது.
--------+++++++++---------
மக்ஃபி கவிதைகள் சூஃபிக் கவிதைகளாக இருப்பதால் யாருக்கும் பிரச்சினை இல்லை. மக்ஃபி கவிதைகளில் இருக்கும் காதலும், ஏக்கமும், வலியும், வேதனையும் தத்துவ உலகில் பிறவிக்பெருங்கடலை நீந்திக் கரையேறத் துடிக்கும் ஆத்மாவின் வலியாகவும் வேதனையாகவும் தாகமாகவும் தவிப்பாகவும் இருப்பதாக இலக்கிய உலகம் கொண்டாடியது.
''''********""""""""""****""**
ஆனால் ஆலம்கீரின் மகளாக இருப்பதோ அவுரங்கசீப் வாழ்ந்த காலத்தின் மனசாட்சியாக மக்ஃபி இருந்ததையோ கொண்டாடவில்லை. அப்படி வரலாற்று நெடுக கேள்வி கேட்கும் சிந்திக்கும் பெண்களை விட துயருற்று இருக்கும் பெண்களை வரலாற்றுக்கும் பிடித்து போயுள்ளது என்பது முரண் தான்.
அன்று மக்ஃபி
நேற்று கவிதா
இன்று அபி என மக்ஃபி மரிப்பது இல்லை என முடித்து உள்ளார் ஆசிரியை.
Power depends upon ceremony and state, as much as upon abilities and strength of mind.
I was born as a prince, said he, and I know not how to act the part of a slave!
Daughter of aurangzeb saw from behind a curtain the behaviour of Shivaji. She was struck with the handsomeness of his person and she admired his pride and haughty deportment. எல்லா கதாப் பாத்திரங்களையும் மனதிற்கு இதமாக படைத்து இருக்கிறார். எல்லா கதாப் பாத்திரங்களும் அத்தனை எளிதாக மனதை விட்டு போகாது இருப்பது இக்கñதைபின்னலின் சிறப்பு ஆகும்.



ஐவருமாய் - சிறுகதைகள்



பதிப்பகம் அன்னை ராஜேஸ்வரி , சென்னை, தொடர்புக்கு 9444640986
பக்கங்கள் 168, செப் 2023 ல் வெளியான இப்புத்தகம் 190 ரூபாய் விலையில் பெறலாம். bookudaya@gmail.com
குடிகார தந்தைக்கு பிறந்த மகள்கள் தனக்கு ஒரு துணையை தேடும் போது அதே போன்ற குடிகாரங்களை தேர்ந்து எடுத்து தங்கள் வாழ்க்கையை அழித்து கொள்வார்கள். அதே போன்று கணவன் காதலன் நண்பன் என ஏதோ ஒரு காரணம் கொண்டு பிடித்து போகும். எவனில் எதை விரும்பவில்லையோ அடுத்து தங்கள் வாழ்க்கையில் தேர்ந்து எடுக்கும் நபர்களும் அதே பலவீனம் கொண்டவர்களாக தேர்ந்து எடுத்து துன்பத்தில் உழல்வார்கள்.
ஆண் பெண் உறவின் சிக்கல்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பெருகுவதும் கொலையிலும் தற்கொலையில் முடிவதிலும் நேர்மையற்ற உறவு சிக்கல்களே ஆணி வேராக உள்ளது.
ஒரு ஆணால் எத்தனை வயது ஆனாலும் தன் பேச்சால் பெண்களை தன் வசப்படுத்துவதும் , தன் தேவைக்கு தீனி போட வைத்து கொள்வதும் அடுத்த நகர்வில் அந்த புறக்கணிப்பு ஆண்களுக்கு தங்கள் ஆண்மையின் மேன்மையாகவும், அதே நேரம் பாதிக்கப்படும் பெண்களை குற்ற உணர்ச்சிக்கு கொண்டு வந்து, அவர்களை தாழ்வு மனப்பான்மைகுள் வைத்து, மறுபடியும் தனக்கு சாதகமாக இரையாக்கும் போக்கு இணைய கருவிகள் வேகத்தை கூட்டுகிறது.
யாரும் யார் அனுபவத்திலும் கற்றுக் கொள்ள போவது இல்லை. இது ஒரு உணர்வு போராட்டம் என்ற நிலையில் நேர்மையான துணிவான ஆட்கள், தண்டிக்கப் படுவதும் தாழ்வு மனப் பான்மை கொண்ட நேர்மையற்ற ஆண்கள் தங்களை மேலும் மேலும் நிறுவி கொள்ள இந்த சமூக கட்டமைப்பும் சாதகமாக உள்ளது. ஆண்களால் பெண்களை வேசி, தரங்கெட்டவள் என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் உணர்வு நிலையில் தங்களை மேம்படுத்தி வைத்து கொள்வதும் பெண்கள் நொறுங்கி இல்லாதாகி போகும் அவலம் கொண்ட சமூகம் இது.
அந்த நுண் உணர்வு, உறவு சிக்கல்களை இப்புத்தகம் தெளிவாக புரிய வைக்கிறது.
எளிய பெண்கள் குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க மட்டுமல்ல, உறவு என்ற ரீதியில் புதைக் குழியின் ஆழத்தை விளக்கும் புத்தகம்.

பரசாற்றலோ நல்வழிப்படுத்தல் என்ற பாங்கில் இல்லாது போகிற போக்கில் வாழ்க்கை இவ்வளவு தான் பெண்களை சுற்றி பல பல பெயர்களில் ஈக்கள் போல வரும் ஆண்களை கையாளும் ஒரு உக்தி , ஆறுதல் தரும் எல்லாம் இயல்பு என்ற புரிதல் தரும் புத்தகம்.
எளிதாக. வாசித்து கடந்து போகலாம். ஒவ்வொரு வார்த்தையிலும் பொதிந்த ஆழமான கருத்துக்கள் பிற்பாடு அசை போடவைக்கும் புத்தகம் இது. பெண்கள் தங்களை சுய விமர்சனம் செய்து கொள்ளவும் துணை செய்கிறது.
டாக்டர் ,இது என்ன ஊசி?
இந்த ஊசிப் போட்டா எனக்கு தூக்கம் வந்திடுமா... தூங்கிடுவேனா
நான் தூங்கும் போது போன் வந்துச்சுனா
"கூப்பிடுறேன்.....கூப்பிடுறேன் டா"
மெல்ல மெல்ல
அவள் கண்கள் மூடின அந்த நள்ளிரவில் அவள் போனிலிருந்து
வைப்ரீஷன்ன்ன்ன்
கூப்பிடுறேன்.....கூப்பிடுதேம்மா......
அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள்.......



5 Dec 2023

என் ஜோசப் தாத்தா வீடு!

 தாத்தா வீட்டில் ஒரு வேட்டை தோக்கு இருந்தது. அது சுவரில் மாட்டிக் கிடக்கும். தாத்தா ஓர் ஜீப்பும் வைத்து இருந்தார். தாத்தா பொரையார் நாடார் காலம் மூணார் வந்து,  அங்கு இருந்து பீர்மேடு சென்றவர். 

அதனால் எங்கள் தோட்டத்தில் பழங்கள். வைத்து சாராயம் காச்சும் வித்தையும் அறிந்து வைத்து இருந்தார். என் தாத்தாவின் அண்ணன் ஆசிரியராக இருந்தும், தாத்தா நான்கு வயது இருக்கையில் பெற்றோர் இறந்த நிலையில் சகோதரர்கள் பராமரிப்பில் வளர்க்கப் பட்டவர். ஒரு சகோதரி மட்டும் இருந்தார் என கேள்வி பட்டுள்ளேன். 

ஆங்கிக்கன் சபையை சேர்ந்த தாத்தாவால் குடும்பக் கட்டுப்பாட்டில் ஒதுங்கி இருக்க இயலவில்லை. அவருக்கான ஒரு உலகம் எஸ்டேட் தோட்டங்களில் இருந்தது. 

எ.வி.டி எஸ்டேட்   குமஸ்தாவாக இருந்த  இடையன் குடியை சேர்ந்த A.V தாமஸ் எஸ்டேட் முதலாளியாக  உருவாகி வரும் காலம் . தாத்தா பக்க பலமாக இருந்ததால் எஸ்டேட்டில் தாத்தாவிற்கு 25 ஏக்கர் நிலம் எஸ்டேட் வீடுகளுடன் சேர்ந்து ஒரு வரிசையான வீடும் கிடைத்ததது. 


அந்த வீட்டில் பிறந்த மகன் வழி முதல் பேத்தி ( பெரியப்பா காதல் திருமணம் என்பதால் பெரியப்பா பிள்ளைகள் அந்த வீட்டில் பிறக்க வில்லை.) என்பதால் எனக்கு ஒரு தனி இடம் இருந்தது. 


என் தம்பி பிறந்த போது மறுபடியும் அந்த வீட்டில் விடப்பட்டேன் . அப்போதே சாந்தா சித்தி எனக்கு பால் சேர்க்காத டீ தந்தார் என்று ஆட்சி செய்யும் அளவிற்கு குட்டி அதிகாரம் எனக்குள்  இருந்தது.

எங்கள் குடும்பத்தில் ரசல் சித்தப்பா மனிதர்களோடு இயங்கி, உதவிகள் செய்து  பழகுபவராக இருந்தார். அதனால் சித்தபாப்பவை சுற்றி ஒரு பெரும்  ஆண் பெண் பட்டாளம் இருந்தது.

என் அப்பா தன் கதையை மட்டும் பார்த்து அப்போதே வேலையில் காத்திரமாக இருந்தார். சொத்துக்கள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். 

ரசல் சித்தப்பா அறையில் இருக்கும் கட்டிலில் நான் உறங்கிய நினைவு உண்டு. காலை விழித்து சன்னல் வழி பார்த்தால் வாழை மரம் குலைத்து நிற்பது காணலாம். பக்கத்தில் ஒரு எட்வட்  ரோஜா செடியும் உண்டு. சித்தப்பாவை தேடி ஆண் பெண்கள் காலையில் வந்து விடுவார்கள். மாட்டு பண்ணை வைத்து இருந்ததால் காலையில் மாட்டில் பால் எடுக்கும். வேலையில் மும்முரமாக பணியாட்களும் இரண்டு சித்தப்பாவும் கிளம்பி விடுவார்கள். 

சித்தப்பாக்கள் அந்த பாலை கேன்களில் நிறைத்து டவுனுக்கு கொண்டு போய் கொடுத்து வருவார்கள்.   அப்போது என் சித்தியுடன் தோட்டத்தில் இருந்து பப்பா பழம் தின்று கொண்டு இருப்பேன். 


எல்லா பண்டிகைகளுக்கும் பெரியப்பா சித்தப்பா அத்தை சில போது மாமி பிள்ளைகளுடன் தாத்தா வீட்டில் தான் கொண்டாடினோம். குழந்தைகள் எங்களை சுதந்திரமாக. விளையாட பேச அனுமதித்தவர். என் அப்பாவிடம் கிடைக்காதே துரைகள் என்ற விளியுடன் உள்ள நேசத்தை  தாத்தாவால் பெற்று வளர்ந்தேன். என் அப்பாவிடம் பேசாத கதைகள் ரசல் சித்தப்பாவுடன் பேச இயன்றது. 


தாத்தா மதியம் டவுனில் இருந்து வரும் போது எனக்கு பிடித்த போண்டா வாங்கி கொண்டு வருவார். தாத்தா ,பாட்டி கதை பேசிக்கொண்டு இருக்க நான் அருகில் இருந்து விளையாடிக் கொண்டு தின்றுக் கொண்டு இருப்பேன். 

என் பாட்டி நெய்யூரை சேர்ந்த ஒரு ஆங்கிலிக்கன்  சபை  பாஸ்டர் மகள் அவருக்கு உலகம் வெத்தலை செல்லம் . அவர் பேசும் மொழி வெற்றிலை இடிக்கும் இசை தான். பொதுவாக யாருடனும் பேசாது இருப்பவர். அவர் வெளியே கிளம்பும் போது சுருக்கு பை போன்ற ஒரு பையை கையில் தொங்க போட்டு மெதுவாக நடந்து செல்வார் , மெதுவாக பேசுவார். வயதான பின்பு கொஞ்சம் கழுத்து ஆடும் படி இருந்தது. 

என்னமோ என் குழந்தை பருவத்தில் என்னை கவர்ந்தது ரசல் சித்தப்பாவும் தாத்தாவும் தான். . தாத்தா தனது 90 வயதில் இறக்கும் வரை என்னிடம் அன்பு பாராட்டி கொண்டு இருந்தவர். எனக்காக காட்டு இறச்சிகள், கின்னி கோழி முட்டைகள் சமைத்து தந்துள்ளார்.  வீட்டில் உதவி செய்ய பணி பெண்கள் இருந்தனர்.  பாட்டி பொதுவாக மந்தமாக எந்த வேலையும் செய்யாது வெற்றிலை செல்லம் மற்றும் பைபிள் உடன் கழித்தவர். அவரை நோக்க ஊரில் இருந்து வரும் அவர் சகோதரி பிள்ளைகளை கண்டால் வழக்கத்திற்கு மீறி கொஞ்சம் முகத்தில் மகிழ்ச்சியை காட்டுவார். பாட்டியின் இளைய தம்பியும் தனது அக்காளை பார்க்க வந்து கொண்டு இருந்தவர். அன்பாக துரைகளே என்று அழைத்துக் கொண்டு எனக்கு காட்டு இறச்சிகளை சிறிய பாத்திரத்தில் எடுத்து வருவதை வழக்கமாக வைத்து இருந்தார். நான் ஒரு ஆஸ்துமா நோயாளி என்பதால் கரிமந்தி இறச்சியை,  தாத்தா பிரத்தியேகமாக எடுத்து வருவார். 

கடைசியில் தாத்தா ஒரு பக்க வாதத்தால் சரியும் வரை என்னிடம் அன்பு பாராட்டினவர். என் திருமணம் நிச்சயமான சில மாதங்களில் இறந்தார் என் கணவர் குடும்பம் கன்னம்குளம் என்பது அழங்கம்பாறையை சேர்ந்த தாத்தாவிற்கு உவப்பாக இருக்கவில்லை. தன் கருத்தை என் அப்பாவிடம் சொல்லவும் தயங்கவில்லை. 

கிழக்கு உதிக்கும் ஒற்றை நச்சத்தரத்தை தாத்தாவாக கண்டு.வைத்து   இருந்தேன். பின்பு பெரியப்பா சித்தப்பா, அப்பா, அத்தான்  என வானில் நிறைய நட்சித்திரங்கள் உதிக்க துவங்கிய பின் நான் நச்சத்திரங்களை பார்ப்பதையே நிறுத்திக் கொண்டேன்.

29 Aug 2023

லதாவின் கழிவறை இருக்கை!

 








 


கழிவறை இருக்கை’ என்ற புத்தகம் லதா எழுத்தில் முதல் பதிப்பாக

நவம்பர் 2020ல் நோரப் இம்பிரின்ட்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது..

224 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் விலை 225 ரூபாய் மற்றும் புத்தக

அட்டை வடிவமைப்பை சந்துரு செய்துள்ளார்.


எழுத்தாளர் முனைவர் தமிழ்மணவாளன் முன்னுரை வழங்கி உள்ளார்.

பெண்ணிய பார்வையில் இருந்து முனைவர் நா நளினி தேவி தனது

விளக்கத்தையும் கொடுத்துள்ளார். எழுத்தாளர் மற்றும் கதை சொல்லி

பவா செல்லதுரை, குங்குமம் தோழி துணை ஆசிரியர் மகேஸ்வரி

நாகராஜன் போன்றோர் தமிழில் காமம் பற்றி வந்த முதல் புத்தகம்

என்ற வகையில் பின் அட்டையில் கருத்து பகிர்ந்துள்ளனர்.


ஆண்கள் காமத்தை பொதுவில் பேசுவது அங்கீகரிக்கப்படுகிறது.

ஆனால் ஒரு பெண் காமத்தைப் பற்றி பேசினால், சாதாரணஅடிப்படை

விஷயமாக இருந்தாலும் , அவள் யாருடனும் படுக்கைக்கு செல்ல

தயங்க மாட்டாள் என்ற நோக்கிலேயே பார்க்கப்படுகிறாள் என்று

எழுத்தாளர் லதா முன்னுரையில் குறிப்பிடுகிறார்.


நன்றாக கலவிக் கொள்வதற்கான வழிமுறைகளோ வாழ்வதற்கான

குறிப்புகள் அடங்கியதும் அல்ல இப்புத்தகம், என் அனுபவங்களில்

இருந்து, என் சுற்றுச்சூழலில் நான் பார்த்தவர்களில் இருந்து

மற்றவர்களிடம் கேட்டு தெரிந்தவைகளில் இருந்து எளிமையான

முறையில் ஆராய்ந்து பார்க்கும் ஒரு சிறு முயற்சியே என்று

குறிப்பிடும் கட்டுரையாளர், உடல் ரீதியான நெருக்கம் என்

பெற்றோரிடமோ, உறவுகளிடமும் அக்கம்பக்கத்தாரிடமும் கண்டதே

இல்லை என்ற முன்னுரையுடன் ஆரம்பிக்கிறார். காமத்தின் மேலுள்ள

தனது ஆச்சரியங்கள், தாக்கங்கள், அதிர்ச்சிகள், வெறுப்புகள்

கோபங்கள், அன்பு, காதல் தன்னுடைய கேள்விகளுக்கு கிடைத்த

பதில்களின் தொகுப்பு தான் இப்புத்தகம் என தொடர்கிறார் லதா.

கட்டுரையாளரின் பல கருத்துக்கள் வெளிநாட்டு எழுத்தாளர்கள் டேவ்

சேவேஜ் மற்றும் கால்கோ போலோ வின் பாதிப்பும் உள்ளதாக கருத

வேண்டியுள்ளது.

பாலியல் சார்ந்த தன்னுடைய முதல் அனுவவம் வாழ்க்கையில்

முதன் முதலில் பார்த்த திரைப்படத்துடன் சம்பந்தப்பட்டது என்பதுடன்;

மாமா என்று அழைக்கப்படும் நபரிடம் தியேட்டரில் தான் எதிர்கொண்ட

கசப்பான அனுபவம் மற்றும் அண்ணன் என்று அழைக்கப்படும் நபரிடம்

தான் எதிர்கொண்ட பாலியல் அத்து மீறல் என்ற தளத்தில் நின்று

புத்தகத்தை விளக்க ஆரம்பிக்கிறார்.


வெவ்வேறு தலைப்பில் 32 அத்தியாயங்களாக இப்புத்தகம்

தொகுக்கப்பட்டுள்ளது. . அவை முக்கியமாக, வாழ்வின் அடிப்படைத்

தேவைகள், பெண்ணும் சமூகமும், கழிவறை இருக்கை, திருமணம்

தாண்டிய உறவுகள், காதலின் வெளிப்பாடாக காணும் காமம், உணவும்

உடலுறவும், சுய இன்பம் போன்ற தலைப்பில் பிரிக்கப்பட்டுள்ளது.

” கலவியினால் ஏற்படும் இன்பத்தைத்தான் நாவின் ருசிக்கு முன்னமே

உணர்ந்திருப்பார் ஆதி மனிதன்” என்ற எழுத்தாளரின் முரண்பட்ட

கருத்துடன் துவங்குகிறது இப்புத்தகம். இக்கருத்து சிக்மண்டு

பிராயிடு கோட்பாடோடு இணைக்க முயன்றாலும் அக்கருத்தை அதன்

பின் வந்த பல ஆராய்சியாளர்கள் கடந்து போனது அறிந்தது தான்.

கட்டுரையாளரின் தோழி சொல்லி அழுதது, சில புத்தக வாசிப்பு, தனது

நண்பர்களுடன் உரையாடியது, இவருக்கு தெரிந்த நண்பர்கள் கூறினது

என தனக்கு தோன்றியதை, தோன்றியது போல எழுதி உள்ளார்.

திருமணமான சில பெண்களிடம் கட்டுரையாளர் பேசிப் பார்த்தாராம்,

கணவர்கள் முத்தம் கூட கொடுக்கவில்லை போன்ற கருத்தாக்கங்கள்

இந்த புத்தகத்தில் நிரப்பி வழிகிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும் அதன்

தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் பொருத்தம் இல்லாது ஒரே

கருத்தை பல இடங்களில் திரும்ப திரும்ப ஒரே கருத்தையே சொல்லி

இப்புத்தகத்தின் ஒரு குறை ஆகும். இந்த கருத்துக்கள் வலுசேர்க்கும்

விதம் ஏதாவது ஆராய்ச்சி நடத்தி நம்பகத்தக்கதான தரவுகள் இல்லை

என்பதும் பெறும் குறை ஆகும். கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து



அனுபவம் பொது சமூகத்திற்கு பொதுமைப்படுத்தி தர இயலாது. அதை

கட்டுரையாளர் தனது சுயவரலாறு மாதிரி தான் எழுதிக் கொள்ள

வேண்டும்.

சிலர் தான் பிறந்த இடத்திலேயே கடைசி வரை வாழ விருப்பம்

உள்ளவர்களாக இருப்பர், சிலருக்கு ஒவ்வொரு நொடியும்

வித்தியாசமாக வாழ பிடிக்கும். புது மனிதர்கள் புதுவகை உணவுகள்

என பலவற்றையும் பார்க்க வேண்டும் அனுபவிக்க வேண்டும் என

என்னை சில ஆண்களுக்கு பெண்களுக்கும் புதுப்புது உறவுகளின்

நாட்டம் ஏற்படும். இவர்களுக்கு திருமணம் ஆனதும் ஆகாததும்

பொருட்டல்ல. தனக்கு பிடித்ததை செய்து வாழ்வது மட்டுமே என

நினைப்பவர்கள் இவர்கள் ஒரு ஆணோ பெண்ணோ தான் மணந்தவரை

தாண்டி வேறு யாராலும் ஈர்க்கப்பட மாட்டார்கள் என யார் சொன்னது?

இப்படி மற்றவர்களால் ஈர்க்கப்பபடுகிறது அவர்களின் தவறு இல்லை

என்றும் குறிப்பிடுகிறார் கட்டுரையாளர். அவள் என்னை

காதலிக்கிறாள், என் குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறாள்,

ஆனாலும் இன்னொருவரையும் காதலிக்கிறாள். ஓரிரு முறை அவனை

பார்ப்பதிலும் அவனுடன் செலவழிப்பதிலும் அவள் மகிழ்வுறுகிறாள்.

அந்த மகிழ்ச்சி அதுவாக எங்கள் வீட்டிலும் பரவுகிறது என்று ஒரு

கணவன் கட்டுரையாளரிடம் பகிர்கிறார்.

திருமண பந்தம் தாண்டி ஏதோ காரணத்துக்காக திருமணனத்திற்கு

மீறிய உறவுகள் பேணுகிறவர்கள், பிற உறவுகள் பாலான ஈடுபாட்டால்


தங்களுடைய குடும்பத்திற்கு தேவையான அன்பையும் ஆதரவையும்

தராமல் இருக்க எவருக்கு உரிமை இல்லை. தனக்கு முக்கியமானது

வெளியில் கிடைக்கிறது. ஆனால் அதே சமயம் தன் குடும்பத்தின்

மகிழ்ச்சியும் முக்கியம் அதனால் எந்த பங்கம் வராமல் பார்த்துக்

கொள்ள வேண்டும் போன்ற வழிமுறைகள் தருகிறார் கட்டுரையாளர்.

திருமணத்திற்கு மீறின உறவால் நிகழும் பாதிப்புக்களை பற்றி, இதன்

சட்ட மீறல்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.


எதிர்காலம் இருட்டாகி விடுமோ என்ற அச்சத்தில் நிகழ்காலத்தில்

இன்பத்தை தவிற்க தேவை இல்லை. ஒருவருக்கு மேல் அன்பு

வைத்திருப்பதன் அறிகுறி என்னவென்றால்; இடைவெளி தேவைப்படும்

நேரம் ஒதுங்கி இடம் கொடுப்பதும் அருகாமையை விரும்பும் நேரம்

அணைத்து கொள்வதும் ஆகும் என்ற புதிய கட்டளையை பிறப்பித்து

உள்ளார் கட்டுரையாளர்.

திருமணம் ஆனதால் ஒருவருடன் மட்டுமே காதல் வரும் என்பது

இயற்கைக்கு புறம்பானது. திருமணங்களில் மேலோட்டமான

விஷயங்களான சடங்குகள் தாலி போன்றவை தான் மனித

உணர்வுகளை விட அதிகமாக மதிக்கப்படுகின்றன. தங்கள் கணவரின்

சடலத்தின் மீது விழுந்து புரண்டு அழும் பெண்கள்; தங்கள் கணவர்

இறந்துவிட்டார் என்பதை விட, தான் பூவும் பொட்டும் இழந்து ஓர்

அமங்கலி என்ற பட்டத்துடன் வாழ வேண்டி வருமே என்ற கவலை


மேலோங்கி நிற்பதால் மட்டுமே என்ற கருத்து பகிரும் கட்டுரையாளர்;

கணவன்பால் கொண்டுள்ள அன்பின் வெளிப்படையாய் அமைந்தது

அல்ல சுய இரக்கத்தின் வெளிப்பாடு மட்டுமே என்று பொதுமைப்படுத்தி

குறிப்பிடும் தகவலுக்கான ஆதாரம் என்ன என்பதையும்

குறிப்பிடவில்லை.


என் வலிமையான உணர்வுகளின் தன்னிச்சையான வெளிப்பாடாகும்.

அத்தனை கருத்துக்களும் அனைவருக்கும் ஏற்புடையதாக இல்லாமல்

இருக்கலாம். ஏற்க கூடியதை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லாததை

இன்னும் ஆழமாக சிந்தித்துப் பாருங்கள் விவாதிப்போம் விளங்கிக்

கொள்வோம் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை

யாராலும் மறுக்க இயலாது என்று முடிக்கிறார் கட்டுரையாளர்.


வாழும் கலையை பாலியல் கல்வியை எத்தனை பள்ளிகள்,

கல்லூரிகள், குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கின்றன என்று

கேள்வியை எழுப்பியுள்ளார் கட்டுரையாளர். தமிழ் மரபு,

சமூகம் கல்வி மற்றும் இலக்கியத்துடன் காமத்தையும்

கலவியையும் நயம்பட கடத்திய தமிழ் மரபை பற்றி

கட்டுரையாளருக்கு தெரியவில்லை தான். தமிழ் சமூகம்

கலவி காமம் பற்றி எதுவும் தெரியாது என்ற

கட்டுரையாளரின் வாசிப்பைத் தான் கேள்விக்கு உள்ளாக்கும்.


கேட் மில்லெட்டின் பாலியல் அரசியல் சார்ந்த புத்தகம் 1968

களில் வந்தது நினைவில் கொள்ள வேண்டி உள்ளது.

கலவி என்பதை முக்கிய கருத்தாக்கமாக வைத்துள்ள கட்டுரையாளர்

கலவிக்கான இந்திய பார்வை, காமசூத்திரா போன்றவை பற்றி எங்கும்

உரையாடவில்லை. கி.மு 3 ஆம் நூற்றாண்டாண்டு எழுதப்பட்ட

தொல்காப்பியம் பொருளாதிகாரம் வாழ்க்கை கல்வி மற்றும் கலவி

பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. அதை மாணவர்கள் இலக்கியமாக

பன்பாடாக கற்றுக் கொண்டு தான் இருக்கின்றனர். நல்லொழுக்கம் ,

நெறிகள், ஆளுமை போன்ற பாட பகுதியில் மாணவர்கள் கற்றுக்

கொண்டு தான் உள்ளனர்.


பெண்கள் தொடைகளை ஆண்கள் ‘கழிவறை இருக்கை’ போன்று

பயன்படுத்துகின்றனர் என்ற பொருள் கொண்ட கழிவறை இருக்கை

தலைப்பு, மனித உடல் உறவை பற்றி எத்தனை அருவருப்பான

பொருளில் மனித மனநிலையில் கடத்துகின்றனர் என்பதை

அவதானிக்க வேண்டி உள்ளது.

இந்த புத்தக கருத்தும் எழுதிய காலமும் எடுத்துக்கொண்டால்,

வெறும் ஒரு புத்தகமாக கடந்து செல்ல இயலாது. இது ஒரு

இட்டுகட்டின பரப்புரையாகவே இப்புத்தகத்தில் அடங்கி இருக்கும்

கருத்தியலை எடுக்க இயலும். சமூகத்தின் அடிப்படையான குடும்பம்


என்ற நிறுவனம் எத்தனை பழுது பட்டாலும் அதன் உள்ளில் இருந்து

அதை சரி செய்ய பல ஆளுமைகள் முயலும் போது, அதை சில

அரசியல் நோக்கங்களூக்காக வெளியில் இருந்து உடைக்கும்

இப்புத்தகத்தை வன்மையாக கண்டிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

கேட் மில்லெட்டின் பாலியல் அரசியல் சார்ந்த புத்தகம் 1968 களிலே

வந்தது நினைவில் கொள்ள வேண்டியது கட்டுரையாளர் மனப்பாங்கை

நோக்கத்தை புரிந்து கொள்ள உதவும்.

பெண்ணியம் என்பது கழிவறைகளை பற்றி புலம்புவதோ காமத்தை

கொண்டாடுவது தான் என்று குறுக்குவது போல் உள்ளது,

பெண்ணியத்தில் இயல்பாக இருக்க வேண்டிய ஆளுமை மற்றும்

அதிகார பரவல் பற்றியோ பெண்களின் சமூக பொறுப்புணர்ச்சி

பற்றியோ எதுவும் பேசப்படவில்லை, மாறாக பெண்ணியம் என்கிற

பேரில் பொறுப்பற்ற உதிரிகளை உருவாக்க முற்படுகிறாரோ இந்த

முற்போக்கு பேர்வளி என்றும் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை

21 May 2023

மீராவின் படைப்புலகில் தமிழர்கள்!


 மலையாள எழுத்தாளர் கே. ஆர் மீராவின் எழுத்துக்கள் ஊடாக கடந்து போனது ஒரு சில நாட்கள். 

தகவல் செழுமை, மொழியின் இலகுவான சீரிய பயன்படுத்தல், அதில் பேசப்படும் சமூகம், அரசியல்,பெண்கள் என எல்லா அம்சங்களும் அவர் எழுத்து பக்கம் இழுத்துக் கொண்டே போனது. புத்தகத்தை நிலத்தில் வைக்க விடவில்லை என்றால் மிகையாகாது. 


மற்றைய மலையாள எழுத்தாளர்களில் இருந்து மீராவின் ஒரு சிறப்பு ,இவர்  பத்திரிகையாளராக இருந்தவர். ஆதலால் உண்மை தகவல்களை வைத்து  உண்மை, மாயை, புனைவு என கதைகளை non linear ஆக  தொகுத்து எழுதுவதில்   வல்லமை படைத்தவராக இருக்கிறார். 



 உண்மையை சொல்ல பயம் இல்லாத ஒரு துணிவு இருந்தது  மீராவின் எழுத்தில். யூதாசின் சுவிசேஷம் என்ற நாவலில் ஜெயராம் படிக்கல் என்ற கொடிய காவல் அதிகாரி பெயரை குறிப்பிட தயங்கவில்லை இவர் . 


அத்துடன் அவர் கதையிலுள்ள பெண் கதாபாத்திரங்களின் படைப்பு ஒரு அதிர்ச்சி, ஆச்சரியம் தருவதாக இருந்தது.  பெண்ணியம் , தலித்தியம், கம்யூனிசம் ,முற்போக்கு என எந்த வரையறைக்குள் நிறுத்த இயலாது,  எல்லா நிலைகளிலும் வியாபித்து இருந்தது. 


நமது பக்கத்து மாநில கதாப்பாத்திரங்கள் என்பதால் அன்னியம் இல்லாது நெருக்கமாக இருந்தது. 


மீரா சாது என்ற கதையில் வரும்  இயல்புக்கு மீறிய செயலால் ஜெயிலுக்கு  அனுப்ப வேண்டிய துளசி என்ற கதாப்பாத்திரத்தை,  இந்தியாவில் உள்ள விதவைகள் நகரம் என்று அறியப்படும் பிருந்தாவத்திற்கு அனுப்பி , கிருஷ்ணன் பெயரால் பெண்கள் மையல் கொண்டு இருக்கும் காதல், ராதா , மீரா என்ற விளக்கம் ஊடாக பெண்களின் ஆண்கள் மேலுள்ள கண் மூடித்தனமான காதல், அவர்கள் முடிவு என சுவாரசியமாக திகில் கொள்ளும் விதம் கதையை நகத்தி இருப்பார். 


இத்தனைக்கும் அப்பாற்பட்டு கேரளா கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த இவர் , திண்டுக்கல் காந்திகிராம பல்கலைகழகத்தில்  தனது முதுகலை பட்டத்தை முடித்து இருந்ததால் ;  கேரளாவில் இருந்து தமிழர்களை பார்ப்பதை போல அல்லாது, தமிழகத்தில் கல்வி கற்றவர் , தமிழர்கள் வாழ்வை அருகில் இருந்து பார்த்தவர்  என்பதால்; இவருடைய தமிழர் கதாப்பாத்திரப் படைப்பு மேல்  ஆவல் தொற்றிக் கொண்டது. 



நான் மூல மொழி மலையாளத்தில் வாசிப்புவள், மலையாள நாட்டுடன் பல வகையில் இணைந்தவள் என்பதால், இவர் கதைகளில் கொண்டு வரும் தமிழர் கதாப்பாத்திரம் மேல் ஒரு ஆர்வம், அக்கறை இருந்தது.  ஆனால் ஒரு பானை அமிர்தத்தை ஒரு துளி விஷம் கெடுப்பது போல தமிழர்களை பற்றிய பார்வை கேரளா பொது புத்தியோடு இணைந்து இருப்பது வருத்தம் மட்டுமல்ல அதிர்ச்சியையும் தந்தது..


பாண்டி, தமிழன் ,கறுத்த, தடித்த, சிவத்த கண்கள் போன்ற வார்த்தைகளால் தமிழர்களை  வன்மத்துடனே அடையாளப்படுத்தி இருந்தார். ஒரு வேளை கேரளா வாசகர்களுக்கு எழுதியதால் அப்படியோ என்றும் தோன்றியது. 


கருப்பு தமிழர்களோடு இணைந்தது மட்டும் தானா?   தடித்தவர்கள் மலையாளியாக இருப்பது இல்லையா? வரலாற்றை திறம்பட எழுத தெரிந்த மீராவிற்கு ' தமிழன் ' என்ற சொல்லாடலில் துவங்கி தமிழரை அடையாளப்படுத்தலில் உள்ள மனச் சிக்கல் என்னவாக இருக்கும் என்றும் புரியவில்லை. 


இன்றைய வேகத்தில் என்றால் , தமிழ் எழுத்தாளர்களை போல, ஒருவேளை தமிழ் எழுத்தாளர்களை விட தமிழ்  வெளியில் பிரபலமாக போகிறார் மீரா.   தமிழக  வாசகர்கள் நிரம்பிய மேடையில் இருக்க உள்ளார். ஆனால் மீராவின் இலக்கிய படைப்பு  தமிழ் இனம் சார்ந்த பொதுப்புத்தியில் இருந்து  விலகாது இருப்பதின் காரணத்தை கேள்விகளோடு அவரை பின் தொடரும், சிலர்  துரத்துவார்கள். 


இன மொழி துவேஷம்  மனிதர்களை எளிதில் தாக்க கூடியது.  இன துவேஷம் எழுத்தில் கூட வரக்கூடாது. அது நீடிய ஒரு தாக்கத்தை சமூகத்திற்குள் நிலைநாட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. . 


சேதன் பகத் தனது "மூன்று முட்டாள்கள்" நாவலில் குஜராத்தில் இஸ்லாமிய மக்கள் மீதான வெறுப்பை எழுத்து படைப்பு மூலம் எப்படி உருவாக்கினர் என்று குறிப்பிட்டு இருப்பார்.


சமீபத்தில் கண்ட திரைப்படம்   " நண்பகல் நேரத்து மயக்கங்கள் ' திரைப்படத்தில் கூட மூன்று முறை பாண்டி என்ற சொல்லை பயன்படுத்தி இருந்தனர். அதனாலே அந்த திரைப்படம் 30 வருடங்களுக்கு முன்னால் உள்ள திரைப்படங்களில் இருந்து நகரவில்லை என்று தோன்றியது. 


மீரா, தங்களுக்காக கோயில் கட்ட வர தயங்காத முரட்டு பக்தர்கள் உருவாகி வருகின்றனர் தமிழகத்தில் என்று அறியத் தருகிறேன்.. உங்கள் வாசகர்கள் மலையாளிகள் மட்டுமல்ல கோடி தமிழர்களும் உண்டு. அது பல கோடிகளாக மாறவும் வாய்ப்பு உண்டு. உங்களை அழைத்து ,இலக்கிய கூட்டம் நடத்த  உலக அளவில் தமிழர்கள் போட்டி போட உள்ளார்கள். 


அப்போதும் என்னை போன்ற எளியவர்கள், எதனால் தமிழர்களை பொது புத்தியுடன் உங்கள் கதையில் பயன்படுத்துகிறீர்கள் என்ற கேள்வியை முன் வைப்போம். நீங்கள் பதில் தர வேண்டி வரும்.

16 Apr 2023

மாஜிதாவின் பர்தா

 


புத்தகம் பேசுது என்ற இதழில் வந்த கட்டுரை


மாஜிதாவின் பர்தா


-ஜெ.பி. ஜோஸ்ஃபின் பாபா


இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள ஓட்டமாவடியை சேர்ந்தவர் மாஜிதா. தற்போது   லண்டனில் வசித்து வரும் ஒரு வழக்குரைஞர் ஆவார்.  சிறுகதை ஆசிரியரான இவருடைய   முதல் நாவல் ஆகும் பர்தா. எதிர்வெளியீடு பதிப்பகம் ஜனுவரி 2023 ல் வெளியிட்டு உள்ளது. விலை ரூ 200.


ஈஸ்டர் குண்டு தாக்குதலைக் கண்டித்தும் அதில் கொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூறும் வகையில் லண்டனில் இயங்கி வரும் தெற்கு ஆசியன் அமைப்பின் கூட்டத்தில் சுரய்யாவை கதையாசிரியை மற்றும்  அவருடைய நண்பர் சந்திக்கின்றனர்.    நான்கு குழந்தைகளின் தாயான சுரய்யாவை பின்பு ஒரு நாள் சுரய்யா வீட்டில்  ஒரு மதிய உணவில்   சந்திக்கிறார். சுரய்யாவிடம் உரையாடின மனதில் பதிந்த சுரய்யாவின் கதையை  ஒரு நாவலாக எழுத ஆரம்பிக்கிறார் மஜிதா. 




 நீரோடையில் நீச்சலடித்து, குளித்து திரும்பின சுரய்யா தனது அப்பா ஹயாத்துடன் சலூன் கடைக்குச்சென்று  டயான கட் வெட்டித் திரும்புகிறாள்.  தனது மகள் டயானக் கட்டில் அழகாக இருப்பதாக மெச்சிக்கொள்கிறார் ஹயாத்து. பெருநாளுக்கு தனது அப்பா வாங்கித் தந்த  பிங்க் நிற மினி ஸ்கேட்டும் வெள்ளைநிற டி-ஷர்ட் அணிந்திருப்பதையும் நினைத்துப் பார்க்கிறாள் சுரய்யா.

இலங்கை முஸ்லீம் பண்பாடுகளில்  பெயர் போன  மாவடியூரைச் சேர்ந்த சுரய்யாவின் அப்பா ஹயாத்து லெப்பை; ஒரு அரசு உத்தியோகர்.  இசைப் பிரியரான ஹயாத்து, தனது வீட்டின் விருந்தினர் அறையில்  இஸ்லாமிய கீதங்கள் அடங்கிய ஓர் ஒலிப் பேழை மற்றும்  சோனி நிறுவனத்தின்  பாடல் கேட்கும் கருவியும், அத்துடன்   படம் பிடிப்பதற்கான கேமராவும் வைத்துள்ளார். 


பண்டிகைக்கு,  மனைவி பீபிக்கு கிளீயோபாட்ரா சேலை வாங்கிக் கொடுத்து அழகு பார்ப்பவர் ஹயாத்து.  பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்லும் பீபியும் தன் சேலை அழகை  மற்றவர்கள் மெச்சியதைக் கண்டு மகிழ்ச்சி அடைபவள். விருந்தினருக்கு என்ன  உணவு சமைக்க வேண்டும் என்று தனக்கு கிடைத்த அனுமதியை பெரிய உரிமையாக எண்ணி பெருமை கொள்ளக் கூடியவர் சுரய்யாவின் தாயார் பீபி.  தன் விருப்பத்திற்கு ஈடுசெய்யும் விதம் பீபியை வேலை வாங்கத் தெரிந்தவர் தான் ஹயாத்து லெப்பை. சுரய்யா உயர்பள்ளி படிக்கும் வயதை அடைந்ததும், வீட்டுக்கு வெளியே வரும் போது தாவணி அணியும்படி அறிவுறுத்தப்படுகிறாள் சுரய்யா.


 கதை நடக்கும் காலவெளி 1980 ஆம் ஆண்டு, அன்றைய பண்டிகை சிறப்புகள்,  பலகாரங்கள் செய்யும் முறை, பெருநாள் கொண்டாடும் விதம் எனக் கடந்து சென்ற  அக்காலப் பண்பாட்டுத் தளம் வழியே கதையை நகத்துகிறார். இப்படி ஒரு சாதாரணமுஸ்லிம் வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் வாழ்க்கையில், பர்தா நுழைய ஆரம்பிக்கிறது.


 ஈரானுக்குப் போய் வந்த   சபீக் மௌலவி பள்ளி மாணவிகளிடம்  பர்தா அணிந்து வர  வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பது மட்டுமல்ல; கேள்வி கேட்பவர்கள்  அல்லாஹுவால் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறார்.  ஜலாலுதீன் பொதுவாக தான் மட்டுமே  ரொம்ப யோக்கியம் மற்றவர்களை கெட்டவர்கள் என்று  நிரூபிக்கக் கூடிய  மனநிலை உள்ளவர். 



 ஜலாலுதீன் மக்கள் மத்தியில் பேசும்போது  நம்ம நாடு,  முஸ்லிம் பெண்களுக்கு நல்லதொரு விடயத்தை அறிமுகம் செய்திருக்கிறது.  அது  முதன்முதலாக  ஈரான் நாட்டில் இருந்து அறிமுகமான ஒரு உடை.   இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிந்து கொள்ளுவது கட்டாயக் கடமை ஆகும்.  அதேபோல பர்தா போட வைப்பது இஸ்லாத்தில் கட்டாயக் கடமை என்று கட்டுப்பாடு விதிக்கிறார். இந்தக் கட்டளை பர்தாவை பள்ளிகளுக்குள் நுழைய வைக்கிறது. பர்தா மற்றும் முகக்கவசம்   அணிய ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுகின்றனர்.  



ஹயாத்து வேளாண்மை அதிகாரியாக சிறந்து விளங்கினவர். ரெட் லேடி என்ற மரபணு பப்பாசியை மக்களிடம்  அறிமுகப்படுத்தக் காரணமாக இருந்தவர்.  அத்துடன் மக்களின் வரம்பு மற்றும் வேளாண்மைக்கான தண்ணீர் சண்டைகளையும் தீர்த்துவைக்கும் அளவிற்கு ஆளுமை செலுத்தக்கூடியவர்.  தனது அலுவலகத்தில் பணிசெய்யும் ஆயிஷாவை பர்தா அணிந்து வரக் கட்டளை இடுகிறார். இஸ்லாத்தை கேள்வி கேட்க இயலாது என்று நம்ப வைக்கிறார்.



வேளாண்மை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஆயிஷா ’பர்தா எதற்கு அணிய வேண்டும்’ என்று யாரையும்  கேள்வி கேட்க முடியாத நிலையை எண்ணி, வருந்தி  பழுப்பு நிறத்தில் பர்தா அணிந்து வர ஆரம்பிக்கிறாள். ஆயிஷாவிடம் கலகலப்பாகி பேசி வரும் கோபாலால் பர்தா அணிந்த அவளிடம் பேச தடங்கலாக தோன்றுகிறது.  ஆயிஷாவின் நண்பர் வேணிக்கும் பர்தா அணிந்த ஆயிஷா அன்னியமாகத் தெரிகிறாள்.


இரான் புரட்சிக்குப் பின் இரான் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் பொருளாதிதார ரீதியாக நண்பர்களாக மாறி இருந்த சூழலில்  இரான் பண்பாட்டு வழக்கங்களும்  இலங்கையில் வேகமாக ஊடுருவ ஆரம்பிக்கிறது.  இரானின் இருந்து வரும் சிற்றிதழ்களும் கொள்கையைப் பரப்பத் துணையாகிறது.



ஈரான் பர்தா முறை இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை. சபீக் மௌலவியின் பிரசாரங்களை நம்பாதீர்கள் என்ற எதிர்ப்புக் குரல்கள்  சுவரொட்டிகளாக ஊர் மதில்களில்  காணப்படுகிறது. 


சுரய்யாவின் உறவினர் வீட்டுக் கல்யாணத்திற்கு பர்தா அணிய சுரய்யா எதிர்ப்பு தெரிவித்ததால்  மிளகாய்ப் பழம் வாயில் தேய்த்து விட்டு,  பெற்றோர் தங்கள் வளர்ப்பின் மேன்மையைத் தண்டனை கொடுத்துத் திருப்தி அடைகின்றனர். 

 

பின்பு முஸ்லீம் பெண்கள் தங்கள் விசேஷ வீடுகளில் குரவை இடுவதைத் தடைச்செய்கின்றனர். ஹயாத்து, மௌலவியின் சகோதரி மகன்; பர்தா அணியாத தனது தாயை அவமதித்ததை அறிந்து ஹயாத்து துயர் கொண்டாலும் அவர் மனைவி பீபிக்கு அது பெரிய தவறாகத் தெரியவில்லை.    ஈசாவின் மூளையை மத்ரஸா மௌலவிமார்கள் குழப்பிப் போட்டார்கள் என்று கூறி ஹயாத்து வருந்துகிறார். எப்போதெல்லாம் பர்தா பற்றி விவாதம் வருகிறதோ, அப்போதெல்லாம் பர்தா அணியாத பீபி பர்தாவிற்கு வக்காலத்து வாங்குவதை கவனிக்கலாம். பார்தாவில் ஆரம்பித்து பர்தா நிறங்களில் பெண்கள் மாட்டுப்பட்டதைக் குறிப்பிடுகிறார். நசீர் மௌலவி போன்றவர்கள் பெண்களிடம் உரையாட வேண்டிய  சூழலில் திரைக்குப் பின்னால் நின்று உரையாட ஆரம்பிக்கின்றனர்.

முஸ்லீம் சமுதாயத்தை ஆக்கிரமிக்கும்  இன்னொன்று பாவாடைக்குழு.  பாவாடைக் குழுவின் பரிந்துரைப்படி ஆண்கள் தங்கள் வீடுகளில் தங்காது, இரவு பள்ளிவாசலில் தங்க கட்டளை பெறுகின்றனர். அல்லாஹை நெருங்குவதற்குக் கட்டாயம் பள்ளிவாசலில்  தங்கியிருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்ற கட்டளைபெறுகின்றனர். ஆண்கள்  மத அடையாளப்படி நாட்டின் அடையாள  அட்டை தேவையற்றது என்ற கருத்தையும் திணிக்கின்றனர்.


ஊருக்குள் தலையெடுக்கிற எந்த  விடயத்திலும் தலைமைப் பொறுப்பு தன்னிடம்  வர வேண்டும் என்பதை பிரதான நோக்கமாகக் கொண்ட  ஹயாத்து பர்தாவுடன் சவுதியிலிருந்து இறக்குமதியாகும் ஹபாயா என்ற உடையை வரவேற்கிறார். பர்தாபோட்டு படிக்க சென்றதால் தனது மகளுக்கு நல்ல படிப்பு வருகிறது என்று சொல்வதில் பீபி பெருமை கொள்கிறாள் .

பர்தா அணிவதைப் பற்றி பர்ஹானா கொண்டிருக்கும் கருத்து சுரய்யாவிற்கு நேரெதிராக உள்ளது. பர்தா தனக்கு பிடித்து இருப்பதாகவும் விரும்பி அணிவதாகவும் கூறுகிறாள்.  இதே பர்ஹானா  வெள்ளை இடப் பெண்ணின் இன-மதவாத தாக்குதலுக்கு உள்ளாக இதே பர்தா காரணமாகிறது.  

ஆண்களால் கட்டமைக்கப்பட்ட உடையிலிருந்து எளிதாக பணக்கார பெண்களால் வெளியே வர இயலும். ஆனால் எளிய பெண்கள் நிலை அதுவல்ல என்று வாதிடுகிறாள் சுரய்யா சுரய்யாவின் மகள் றாபியா காலமாகும்போது பர்தாவும் ஹாபாயும்  சீருடை போன்று கட்டாயமாக்கபடுகிறது. அதில் இருந்து விடுபட இயலாத வண்ணம் இறுக்கமாகிறது. சுரய்யாவின் தந்தை போல கட்டாயப்படுத்திச்  சொல்லாவிடிலும் ஊரோடு ஒத்துப் போகணும் என்ற கருத்தைக் கொண்டவராக உள்ளார் சுரய்யாவின் கணவர் இர்பான். 


பாட்டுகேட்ட காலம் போய் நடனமாடுவது ஹராம் என்று சொல்லப்படும் காலம் வருகிறது. சுரய்யா மகள் மாதிரிக் கேள்வி கேட்பவளாக இல்லாது,  சிந்தனையற்றுமிருக்க ராபியா தெரிந்து வைத்துள்ளாள்.I


விடலைப்பருவத்தில் பர்தா அணிவதை மிகவும் அசவுகரியமாகக் கருதிய ஆபிதாவிற்கு தற்போது பல வழிகளில் சவுகரியமாகத் தெரிகிறது.


ஊர் திரும்பும் சுரைய்யா தனது தாயிடம், பர்தா அணிவதைச் சொல்லிய வாக்குவாதத்தில் “அல்லாஹ் கூலி தருவான்” என்று தன்மகளை வசை பாடவும் தயங்கவில்லை.

பீபி தனது மகளை வலுகட்டாயமாக பர்தா அணிவித்த பிரச்சினை தனது பேத்தியிடம் வரவில்லை. பாசாங்கு வார்த்தைகளுடன் பர்தா கொடுத்ததும் ராபியா உற்சாகமாக அணிந்து கொண்டாள்.

மிகவும் சுவாரசியமாக எளிமையாகக் கதையை நகத்தி உள்ளார் மாஜிதா. மதநிர்வாகிகளின்  கொள்கைகளை ஒரு பெண்ணாக  இருந்து எழுதிய மஜீதா பாராட்டுதலுக்கு உரியவர். 15 வருடங்களாக இஸ்லாமிய சமூகத்தை ஆட்கொள்ளும் தாக்கம் செலுத்தும் உடை அரசியலை மிகவும் சிறப்பாக ஒரு நாவலாகக் கொண்டு வந்ததை பாராட்டியே தீர வேண்டும். அப்படி அடிப்படைவாதம் கடுமையாக புதிய தலைமுறையும் இறுக்கியது என முடித்துள்ளார் மாஜிதா.



 


12 Mar 2023

காலாபாணி - கானல் நீர்

 


டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப. விற்கு 2022 யின் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த  புத்தகம் காலா பாணி. 2022 ல் 538 பக்கத்துடன்  அகநி பதப்பகத்தில் இருந்து வெளியாகி உள்ளது.

சாதிகளால் பிரிந்து கிடக்கும் இக்கால மனிதர்களிடையே சாதிகளைக் கடந்து போராளிகளாய் இணைந்த எழுச்சிப் போராட்டத்தின் பெயர் தெரியா நபர்களுக்கு இப்புத்தகம் சமர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார். 


நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  வேங்கை பெரிய உடையணத்தேவர் எப்படி அரசர் ஆனார் என்பதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. 


மருதுபாண்டியருக்கு  ஆதரவாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடுமையான தண்டனையை வழங்க அக்கினியூவிற்கு மெட்ராஸ் கவர்னர் எட்வர்ட் கிளைவ் அதிகாரம் வழங்கிய நிலையில், வெள்ளைக்கார அதிகாரி வெல்ஷிடம் நட்பாக பழகிய மருது பாண்டியரையும் ஊமைத்துரையையும் தோற்கடிக்க வெல்ஷை அக்கினியூ பயன்படுத்துகிறான். மருது கட்டுப்பாட்டில் இருந்த சிவகங்கை அரசர் உள்ளிட்ட எழுபத்தி மூன்று பேரை பாதுகாப்பாக பினாங்கு தீவிற்கு கொண்டு சேர்க்கும் பணி லெஃப்டினென்ட் ராக்கெட்டிடம் ஒப்படைக்கப்படுகிறது . பெரிய உடையணத்தேவர் மற்றும் மைத்துனர் துரைசாமி மேல் பாவப்பட்டு இந்தப் பணியை ராக்கெட் எற்பதாக உள்ளது. 


கிறிஸ்டீனா என்ற வெள்ளைக்காரப் பெண் மூலம் மேஜர் வெல்ஷ், அவரின் மேலதிகாரி கர்னல் அக்கினியூ, லூஷிங்டன்  போன்ற ஆங்கிலேய அதிகாரிகளைக் குற்றம் சாட்டுவதுடன் இக்கதை ஆரம்பமாகிறது. 


சிவகங்கைச் சீமையில் பதவி நீக்கம் செய்யப்பட்டு நாடு கடத்தப்படும் எழுபத்தி மூன்று பேரையும் இன்றுவரையிலும், இனிமேலும் ஒன்றாக இருக்க அனுமதித்த உங்களது கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் கர்ணல் அக்கினியூவிற்கும் கலெக்டர் லூசிங்டனுக்கும் எங்களது நன்றியை தெரிவியுங்க. 

நீங்கள் எங்களை காலாபாணி என்று அறிவித்த போதும் எங்களில் யாரும் குறிப்பாக வயதான கள்ளிமந்தயம் முதற்கொண்டு சிறுவனான துரைசாமி வரை யாரும் அழுது புலம்பவில்லை, ஒருவரும் பயப்படவில்லை என்பதையும் உங்கள் மேலதிகாரிகளுக்குத் தெரிவியுங்கள். போர்க்களத்தில் நாங்கள் இறந்திருக்க வேண்டும், மரியாதையாவது மிஞ்சியிருக்கும் என்ற ராஜா வேங்கை பெரிய உடையணத்தேவரின்  குறிப்பு கிறிஸ்டீனா அளவு கூட கோபம் கொண்டாதாக இல்லாது ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு அனுசரித்து தண்டனையைப் பெறுவதாகவே உள்ளது. ஆங்கில அரசு கைது பண்ணியிருந்தாலும் ஜெகநாதன் அய்யர் போன்ற கைதிகள் தண்டிக்கப்படாது இருப்பதற்கு ஒரு காரணம், பிராமணர்களைத் தண்டிக்க கூடாது என்ற வெள்ளைக்காரர்களின் நம்பிக்கை என்கிறார்

ஜேபி என்ற குளத்தூர் ஜமீன் தனது சந்தனக் கோலை உயர்த்திக் காண்பித்து, முதுகை வளைத்து வணங்கினான் போன்ற தகவல்கள் ஆங்கிலேயர்களுடன் இணக்கமாகப் போன ஆட்சியாளர்களைத் தான் நினைவு படுத்துகிறது

வேலுநாச்சியார் வெற்றி பெறுவதற்கு அயிதர் அலி  உதவினது,  மூன்று மாத குழந்தை முத்துராமலிங்கம் ராமநாதபுரம் சேதுபதியாக நியமிக்கப்பட்டு அவர்  சார்பில்  அரசாட்சி நடத்திய ராணி அடிக்கடி வெளியூர் செல்வது, நீதிபரிபாலனம் செய்வதோ சரியாக இருக்காது என்பதால் ராணிக்கு உதவியாக திருப்புல்லாணி வெள்ளையன் சேர்வைக்காரன் பிரதானியாக இருந்து செயல்படுகிறார்.  ஒரு பிரெஞ்சு பாதிரியார் லெனுவார் யார் சிக்கினாலும் ஞானஸ்தானம் செய்து கையில் வேத புத்தகத்தைக் கொடுத்து விடுவார் (பக்கம் 4 9) குளத்தூர் ஜமீனின் இரண்டாவது மகனான ஜேபி இராமசாமிக்கு ஆற்காடு நவாபுடன் ஏற்பட்ட நட்பு சாராயத் தொழிலை அறிமுகப்படுத்துகிறது, மார்டினா ரோசல்பட்டி என்ற  கத்தோலிக்க பெண்ணுடன் குடும்பம் நடத்த புரோட்டஸ்டன்ட் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிக்கு தடை இருந்ததாகக் குறிப்பிடுகிறார். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கட்ட பொம்மனால் உருவாக்கப்பட்ட ரகசிய சங்கம் திருநெல்வேலி வீர சங்கம் இவர்களுக்கும் பெரிய மருதுவிற்குமான தொடர்பு போன்ற பல தகவல்கள் தரப்பட்டுள்ளது. 


சின்ன மருது ஊமைத்துரைக்கு உதவினதால், பெரிய மருது சின்ன மருதுவிற்காகத்  தண்டிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

வெள்ளைகாரர்கள் சிவகங்கையின் மன்னர் என்ற பதவிக்குப் பதிலாக இஸ்திமிரார் என்ற பதவியில் கௌரி வல்லபர் வருவதும், புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் வேங்கையின் மனைவிக்கு மாதம் நாற்பது பணம் ஓய்வூதியம் தரும்படி ஆங்கிலேய அரசு கட்டளையிடுவதும் மனுதர்மப்படி மருது, சின்ன மருது, வேங்கை மனைவிகள் மனுதர்மப்படி தனது அடிமைகள் என்பதால் ஓய்வூதியம் கொடுக்கப்போவது இல்லை என்று வல்லபர் கூறியது சரி என்பதை பிராமணர்கள் வழி தெரிந்து கொண்டதால் ,  ஆங்கிலேயர் அதில் தலையிட விரும்பவில்லை  என்ற தகவல் தருகிறார். 

அயிதர் அலி, சிவாஜி, அவுரங்கசீப் செய்த அடாவடி தான் மக்களால் வெள்ளைக்காரர்களை விரும்பக்  காரணமாகினது என்று குறிப்பிடும் கதை ஆசிரியர் ராஜா, ராணி என்று ஆட்சி செய்த உள்ளூர் ஆட்சியாளர்களின் பங்கைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை.

 

வேங்கைக்கு முதல் மனைவி, வேலு நாச்சியாரின் மகள் வெள்ளைச்சியைப் பற்றி இரு இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின், வேங்கை மணம் முடித்த பெரிய மருதுவின் மகள் மருதாத்தாள்  அத்துடன் வேங்கையின் இன்னொரு மனைவி என்று மூன்று மனைவிகள் இருந்த நிலையில் மூன்றாவது மனைவி என்னவானார் என்பதே இல்லை.


அயிதர் அலிக்கும் வேலுநாச்சியாருக்கும் இருந்த அரசியல் நட்புணர்வு, வேலு நாச்சியார் பதவியில் வர அயிதர் உதவினது, ஷியாப் பிரிவு அயிதருக்கும் சன்னி துலுக்கரான ஆற்காடு நவாப்பிற்கும் இருக்கும் எதிர்நிலையும், வேங்கையனுக்கு பிரச்சினை என்றதும் வேங்கை மனைவி மருதாத்தாள் நவாப் மகனை அணுகுவதும், லக்னோவின் அருகிலுள்ள ஊரில் ஒரு சாதாரண குடும்பத்தில் எனது பாட்டனார் பிறந்து இங்கு நவாபாக வந்தார் . எங்களை வைத்து உங்களை ஒடுக்கிய கம்பெனி இப்போது எங்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டது. இன்று  ஒரு பரதேசியாக தர்காவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற நவாபின் மகனின் வார்த்தை, நவாப் ஆங்கிலேயர்களுடன் இணக்கத்தில் இல்லாது இருந்ததால் தற்போது பதவி இழந்ததும் கதையில் காண்கிறோம். 


கிறிஸ்டியனா சொல்வதாகச் சொல்லப்படும் மோசஸ் கதைக்கு ஆதாரம் எது என்றும் கதை ஆசிரியர் குறிப்பிடவில்லை. மோசஸ் என்று ஒரு பெரிய மகான் இருந்தார். எங்கள் சாமி கிறிஸ்துவுக்கு முன்னால் அவர் தான் எங்க மூதாதையர்களுக்குச் சாமியாக இருந்தார் என்று துவங்கும் கதை முற்றிலும் பைபிள் கதைகளுக்கு , யூத மரபுக் கதைகளுக்கு மாறுபட்டது மட்டுமல்ல தவறானது.  


ஷியா சன்னி மோதலும், கத்தோலிக்க புராட்டஸ்டன்டு மோதலும் திண்டுக்கல்லில் கன்னடம் பேசும் திப்புசுல்தான் ஆட்சி, பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள், தஞ்சாவூர் மராட்டியர் ஆட்சி , நாகப்பட்டினத்தில் ஆற்காடு நவாப்பின் ஆட்சி, டச்சுகாரர்கள் தரங்கம்பாடியில் டேனிஷ் மிஷன் இதைத் தவிர்த்து சீமையின் எல்லையில் மலையாளம் பேசும் திருவாங்கூர் ராஜாவின் ஆட்சி,  தங்கள் பகுதியில் உள்ள இரண்டு பாளையங்களில் ஆட்சியாளர்கள் பேசுவது தெலுங்கு.  72 பாளையங்களில் மறவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள 10 பாளையங்கள் தவிர்த்து மற்ற பாளையக்காரர்கள் இன்னமும் கையெழுத்துக் கூட தெலுங்கு பயன்படுத்தும் தகவல் தருகிறார்.



ஆட்சி கையிலிருந்தால் வாணிபத்தை அபரிதமாகப் பெருக்கலாம் என்று கிழக்கிந்தியக் கம்பெனிகள் கண்டறிந்தனர், அரசர்களின் குடும்பப் பெண்கள் மூலம் ஒரு மதத்தைப் பரப்புவது எளிது என்று மதகுருமார்கள் கண்டறிந்தனர்;  பெண்களுக்கே உரிய புதிய வாணிபப் பொருட்கள் மீதான ஆசை, போட்டி அரசிகளின் பிள்ளைகளைத் தவிர்த்து தன்னுடைய பிள்ளையை அடுத்த அரசனாக உருவாக்க;  வெளிநாட்டு ஆட்களின் உதவி, செல்வாக்கைத் தக்க வைக்க, கூடுதல் செல்வாக்குப்பெற; மன நிம்மதிக்கான புதிய வழி என்று பல காரணங்களோடு சொந்த மதத்தின் நிராகரிப்பும் வறுமையும் மத மாற்றத்திற்கான சூழ்நிலையை உருவாக்கியது என்ற மதமாற்றத்திற்கான காரணத்தை அடுக்குகிறார் ஆசிரியர்.

சீனர்களை விட மற்றவர்களை விட தமிழர்கள் நன்றாக வேலை செய்வீர்கள் என்று தெரியும், எதிர்த்துப் பேச மாட்டீர்கள், கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்வீர்கள் என்பதால் நிச்சயம் நாங்கள் மலாய்க்காரர்கள் சீனர்களுக்குத் தரும் சம்பளத்தை கட்டாயம் உங்களுக்கு தருவோம்; சீனர்கள் சுரங்க வேலையில் கில்லாடிகள். இது போன்ற தகவல்கள் இன்றைய வடமாநிலத் தொழிலாளர்கள் நிலையை நினைவுபடுத்துகிறது.

 


ஓர் ஊரில் ஒரு அரசன் இருந்தாராம் எவ்வாறு ஒரே சூழலில் வாழும் ஒருவனுக்கு நல்லது நடக்கிறது மற்றவனுக்குக் கெட்டது நடக்கிறது என்று அவரிடம் கேட்டால் அதற்கு மந்திரி சொன்னாராம்,  அது அவனவன் தலையெழுத்து -  இது போன்ற கூர்மையற்ற விவரணைகள் பக்கத்தின் அளவை மட்டுமே கூட்டியுள்ளது.  

துரைசாமி கெடா சுல்தானின் சுரங்கத்தில் வேலை பார்க்கிறான் அவனோடு அவனது சகாக்கள் 20 பேர் இருக்கிறார்கள். இந்த ஊரில் நல்ல பெயர் வாங்கி கவர்னரின் பரிந்துரையுடன் சீக்கிரம் ஊருக்குப் போக வேண்டும் என, கடுமையாக வேலை செய்கிறான். கைதிகளில் ஆறு பேருக்கு மாதா மாதம் பிழைப்பு ஊதியமாக இரண்டு பவுண்டும் துரைசாமிக்கு  மாதம் 4 பவுண்டும் வேங்கை உடையணத்தேவருக்கு மாதாந்திர பென்ஷனாக 30 பவுண்டும் அனுமதிக்கப்படுகிறது.


ஆவணத்தின் தகவல்களை அடுக்கி கொண்டு போகும் கதை ஆசிரியர் கதை மாந்தர்களுடன் சம்பவங்களின் கோர்வையாக சுவாரசியமாக கதை சொல்ல மெனக்கிடவில்லை. ஒரே தகவல் அடங்கிய ஒரேமாதிரியான  வரிகள் மீண்டும் மீண்டும் வருவது வாசிப்பவர்களுக்கு  அலுப்பூட்டுகிறது. ஒரு கதை வாசிக்கும் உணர்வைத் தருவதை விடுத்து, இயல்பில்லாத உரையாடல்களுடன் கதை சொல்லப்பட்டுள்ளது. 

ஒரு சிறந்த புத்தகத்திற்கு அதன் ஆசிரியர் மட்டுமல்ல மட்டுப்படுத்தும் திருத்தித் தொகுப்பாக்கம் செய்யும் பதிப்பாசிரியர் மிகவும் அவசியம் என்று உணர்த்திய புத்தகம். இந்தக் கதை சார்ந்த வரலாற்றை பலர் எழுதி உள்ளனர். இதில் புதிதாக தகவல் கிடைக்கும் என்ற ஆர்வத்தைக் களையும் படி பல வரலாற்றுத்  தகவல்கள் மழுப்பப்பட்டுள்ளதாகவே உள்ளன.

பொன்கோலன் சிறையில் அடைக்கப்பட்ட வேங்கைக்கு மாதாந்திர பென்ஷன் ஆக 30 பவுண்ட் அனுமதிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் கொட்டடி அறையை விட்டு வெளியே வருகிறார் 


வேங்கையுடன் கடைசி நாட்களில் வெள்ளையன் என்ற ஒரு நாய் உள்ளது. அதைப் பற்றிய குறிப்பு இப்படியாக கதை ஆசிரியர் விவரிக்கிறார்:  ஊரில் இந்நேரம் எங்களையடக்கி ஒடுக்கிவிட்டதாக கொக்கரித்துக் கொண்டிருப்பார்கள் வெள்ளையர்கள். ஆனால் வெள்ளையன் ஒருவனே எனக்கு காவலாக, என் காலடியிலேயே, என் கழிவுகளைச் சுத்தப்படுத்தி கொண்டிருக்கிறான் என்று பதில் சொல்லவே இந்த நாய்க்கு வெள்ளையன் என்று பெயர் வைத்தேன். ஒவ்வொருமுறை என் ஏவலுக்கு இந்த நாய் கட்டுப்படும் போதெல்லாம் எனக்குள் ஒரு மகிழ்ச்சி. திருப்தி பரவுகிறது. இந்தக் கூற்று வேங்கையனின் சிறுபிள்ளைத்தனமா அல்லது எழுத்தாளரின் வன்மம் கொண்ட வரலாற்றுப் புனைவா?

இரண்டு மாதம் குளிக்காமல் இருந்த வேங்கையன் ஒரு மருத்துவர் கட்டளைக்கு இணங்கி குளிப்பிக்கப்படுகிறார். தனக்கு குடி தண்ணீர் வைத்து இருக்கும் பானை கூட கழுவிப் பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் இல்லாது இருக்கிறார். இது வேங்கையன் என்ற மனிதரை ராஜாவாகப் பார்ப்பதை விட பணக்கார வீட்டில் இருந்து வந்து வேலுநாச்சியார் மகளை மணம் முடித்து ராஜாவாகி மருதுவின் ஆளுமைக்கு உட்பட்டு மறைந்த மனிதரைத் தான் காட்டுகிறது. 

சின்ன அம்மான், மருது அம்மான், அத்தை வேலுநாச்சியார், மருதாத்தாள், விட்டு விட்டு வந்த துரைசாமி என்று ஒவ்வொருவராக கண்ணுக்குள் வந்து சென்றார்கள் . காளையார் கோயில் யுத்தம் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், காட்டுக்குள் இருக்கும் மரப்பொந்துக்குள் மருது பாண்டியர்கள் திரவியத்தை ஒளித்து வச்சிருக்காங்க என்று வெள்ளையர்கள் சொன்ன புரளியை நம்பிய பண ஆசை பிடித்த சனங்கள், யாரும் நுழைய முடியாத காளையார் கோயில் காட்டுக்குள் செல்ல வழி பண்ணிக் கொடுத்து  மருதுக்களைக் கைவிட்டதாக வேங்கை குற்றம் சாட்டுகிறார் என ஆசிரியர் சொல்கிறார். 

பொன் கோலன் கோட்டையில் காலை 10 மணிக்கு வேங்கை தனது இறுதி மூச்சை விடுவதுடன் கதை முடிகிறது. 


ஆவணங்களின் அடுக்கல்களாக மட்டுமே மிஞ்சி நிற்கும் காலாபாணியை ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாக ஏற்றுக்கொள்ள மனம் தயங்குவது தவிர்க்கமுடியாததாகிறது.


'புத்தகம் பேசுது ' மார்ச்சு 10,  2023  இதழில் பிரசுரமான பதிவு

 

19 Dec 2022

புத்தக விமர்சனம் - விலகி போகாத நினைவுகள்

 


மத நிந்தனை செய்ததாகக் கூறி 2010 ல் ஒரு ஜூலை மாதம் மத வெறியர்களால் கை துண்டிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த கல்லூரி ஆசிரியர் டி.ஜே.ஜோசப்பின் சுயசரிதை ஆகும் ’விலகி போகாத நினைவுகள்’(அற்று போகாத்த ஓர்மகள்)! இப்புத்தகம்   2021 ஆம் ஆண்டின் கேரள சாகித்ய அகாடமி விருதை பெற்றது. ஜோசப்பின் 'அற்று போகாத்த ஓர்மகள், மதத் தீவிரவாதத்தைப் பற்றிய சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவங்களின் தொகுப்பு மட்டுமல்ல, ஒரு தனி நபரின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களும் ஒன்றுக்கு பின் ஒன்றாக சந்தித்த  சோதனைகளும் அதை தொடர்ந்த  வலிகளும் இழப்புகளும் ஆகும்.  

 

மலையாளப் பாடம் தேர்வுத் தாளில் கேள்வி அமைத்ததில் (internal exam) ஒரு கேள்வியில் இருந்த ஒரு வார்த்தைக்காக குற்றவாளியாக மாற்றப்பட்டு ஜெயிலுக்கு சென்றவர்,  பிற்பாடு கை இழந்து, வேலை இழந்து கடைசியில் தனது மனைவியையும் இழந்தார்.

 

உயிருக்கு பயந்து வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பேராசிரியர், ஒரு நாள், தனது சுகவீனமான தாயார்  மற்றும் கிறிஸ்தவ சபை பெண் துறைவியான தனது சகோதரியுடன் ஞாயிறு காலை நேர ஆராதனைக்கு போய் விட்டு தனது காரில் திரும்புகிறார். சாலையின் ஒரு வளைவில் வைத்து, பேராசிரியரின்

காரை இன்னொரு வாகனத்தை வைத்து இடை மறித்து,  தாய் மற்றும் சகோதரியின் முன் வைத்து, கைக் கோடாலி மற்றும் மூன்று கத்திகளால் கை மொளி, கணங்கால் வெட்டப்பட்டு தெருவில் கிடக்கிறார்.

 

இச்சம்பவம் வீட்டினருகில் நடந்ததால், சத்தம் கேட்டு வந்த பொறியியல் கல்லூரி மாணவரான மகன் மற்றும் மனைவி துணையுடன் ஆம்புலன்ஸ் வருவித்து மருத்துவ மனையில் சேர்க்கப் படுகிறார். தனது நண்பனான பக்கத்து வீட்டு பேராசிரியரிடம் தன் அற்றுபோன கையை தேடி எடுத்து மருத்துவமனையில் சேர்க்கும் படி கேட்டு விட்டு  மருத்துவமனையை சென்று அடைகிறார் பேராசிரியர்.

 

18 மணி நேர நீண்ட அறுவை சிகிச்சைக்கு பின்பு கிடைத்த விரல்கள், கைகள் சேர்த்து வைத்து தைத்து சேர்க்கின்றனர்.  கவலை தோய்ந்த மகனை கண்டதும், அப்பாடா தலை தப்பித்தது, ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தோம் என ஆறுதல் படுத்துகிறார்.

 

இப்புத்தகம் வழியாக  கேரளாவில் நிலவும் இன்றைய மத சமூகம் எவ்விதம் தனிமனிதர்கள் உரிமைகளுக்கு எதிராக நிற்கிறது என காண்கிறோம்.  .

 

 

தன்னுடைய குற்றமின்மையை நிரூபிக்க நெடிய நான்கு வருட சட்டப் போராட்டம், பெரும் சிகிச்சை செலவுகள், வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதால் ஊதியம் இல்லா நிலை அத்துடன் வக்கீல் கட்டணம் பிள்ளைகள் படிப்புச் செலவு என்று ஆசிரியர் குடும்பம் கடும் வறுமைக்குள் விழ ஆரம்பிக்கிறது.

"ஆசிரியர் குற்றவாளி அல்ல' என்று கேரளா நீதிமன்றம் விடுவித்து இருந்தாலும்,பேராசிரியர் அங்கமாக கொண்ட "சீரோ மலபார் திருச்சபையின் தலைமையில் உள்ள கல்வி நிர்வாகம்". பேராசிரியரை வேலைக்கு திரும்பப் பெற அனுமதிப்பதில் தாமதப்படுத்திக் கொண்டு வருக்கிறது.

 

வேலையில் இருந்து கிடைக்க வேண்டிய ஊதியம், பல சலுகைகள் பெற இயலாது, கடன்கள் மத்தியில் ஊசலாடி கொண்டு இருக்கிறது ஆசிரியர் குடும்பம்.  ஆளும் கம்யூனிஸ்டு, பிற்பாடு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், எதிர்கட்சி கம்யூனிஸ்டு, மக்கள்நல வாழ்வு சங்கங்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு, சமூகத்தின் ஆளுமைகள் என எல்லா அமைப்பும் கல்லூரி நிர்வாகத்திடம் பேராசிரியரை திரும்பப் பெற வேண்டியும், கல்லூரி நிர்வாகம் மறுத்து வருகிறது.  ஆனால் பல உறுதி மொழிகளை கொடுத்து ஆசிரியரை தங்கள் பக்கம் வைப்பது போல பாசாங்கு செய்து, பேராசிரியர்  சட்டத்தை நாடாமல் இருக்கவும் தந்திரமாக செயல்படுகிறது. கடைசி வாய்ப்பாக கல்லூரி நிர்வாகம் விருப்ப ஓய்வு(voluntary retirement) என்ற ஒரு கருணையை பரிந்துரைக்கிறது.  நான்கு வருடங்களாக தொடர்ந்த  பிரச்சினைகள், வறுமை அத்துடன் மனைவியின் மனநிலை பிறழ் நோயுடனும் மல்லிடு கொண்டு இருக்கும் பேராசிரியர், வேலை திரும்ப பெற்றால் இழந்த வாழ்க்கையை  மீட்கலாம் என்று நம்பிக்கை கொள்கிறார்.

 

குடும்பம், ஜெபம் என்று மட்டுமே வாழ்ந்த வெளியுலகம் அத்தனை பரிசயம் இல்லாத பேராசிரியர் மனைவிக்கு, கிறிஸ்தவ சமூக விலக்கு நிலைகுலய வைக்கிறது . ஒரு கட்டத்தில் "மதங்களே இல்லாவிடில் எத்தனை நல்லது என்று புலம்ப ஆரம்பிக்கிறாள்", அத்துடன் பேராசிரியரை குற்றப்படுத்தவும் ஆரம்பிக்கும் மன அழுத்த நோய்க்குள்ளும் வீழ்கிறாள்.

 

ஆசிரியர் தனது மனைவியை முதன் முதலில் கண்டதை பற்றி இவ்வாறாக குறிப்பிடுகிறார். அரசு உதவி பெறும் கல்லூரியில் வேலை கிடைத்ததும் பெண் தேடும் படலம் ஆரம்பமாகிறது. கல்லூரி ஆசிரியரான ஜோசப்புக்கு  திருமணம் செய்து கொடுக்க அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக வேலையிலுள்ள பல குடும்பங்கள் விரும்புகிறது. ஆனால் பேராசிரியருக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில், வெறும் 12 ஆம் வகுப்பு முடித்த, தகப்பன் இல்லா நிலையில் தாயின் அரவணைப்பில் வளரும் சலோமியை பிடித்துப்போய் விடுகிறது. தையல், அலங்காரம் போன்றவற்றில் பயிற்சி பெற்ற சலோமி தபால் வழியாக பட்டப்படிப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை கொண்டவள். ஆனால்  நிறைவேறாத ஆசைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு குடும்பத் தலைவியாக தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு அமைதியாக வாழ்த்து வருகிறவள். இப்போதைய நிலையில் தினக் கூலி வேலைக்கு போகவும் சலோமி தயங்கவில்லை. ஏதாவது வேலைக்கு போக தன்னை அனுமதிக்க வேண்டுகிறாள். ஜோசப் என்ற பேராசிரியர் தனது மனைவி வீட்டை விட்டு வேலைக்கு போவதையும் விரும்பவில்லை. ஆனால் மனைவியின் மன நோயை குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று பணிவிடை செய்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் சலோமிக்கு, தன் மகள் திருமணம் எப்படி நடக்கும், வீட்டை எப்போது கட்டுவது, கடனில் இருந்து எப்போது தப்பிப்பது என்ற கவலையும் மன அழுத்தமும் சேர்ந்து  நடமாட இயலாத வண்ணம் படுக்கையில் விழ வைக்கிறது.



ஒரு சூசையப்பர் திருநாள் அன்று, கோயிலுக்கு போய் வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள் சலோமி. ஆயிரம் வெட்டில் பதறாத பேராசிரியர், தனது மனைவி இறந்ததும் உடைந்து நிலைகுலைந்து போகிறார்.

ஆனால் சலோமியின் மகள், இத்தனை துன்பத்தின் இடையிலும் கல்வி கடனில் படித்து செவிலியர் படிப்பை முடித்து அயர்லாந்து நாடு செல்கிறாள். அங்கிருந்து தனது ஊதியத்தை அனுப்ப ஆரம்பிப்பதுடன் குடும்பம் வறுமையில் இருந்து கரையேறுகிறது. பிற்பாடு தெலுங்கானாவை சேர்ந்த பாலமுரளி என்ற இந்து மனிதரை திருமணம் செய்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறாள்.

மகளுக்கு கல்வி கொடுத்த தைரியம், கல்வி பெற இயலாத சூழலில் வளர்ந்த சலோமிக்கு கிடைக்க வில்லை.

ஆசிரியரின் வழக்கில் எந்த வகையிலும் குற்றவாளியாக இல்லாத சலோமி; காக்கா, குருவி, அணிலுக்கு,  உணவு வைத்து மகிழும் சலோமி, தனது உயிரை ஈடு வைத்து தனது கணவருக்கு திரும்பவும் வேலை கிடைக்க தனது தற்கொலையை ஒரு ஆயுதமாக பாவிப்பதுடன் ’நிறுவன’ கொலைக்கு இரையாகிறாள்.

பேராசிரியர் ஜோசப்பின் வாழ்கை சரிதத்தில் ஆரம்பித்து சலோமி என்ற எளிய பெண்ணில் மரணத்துடன் வாசகர்களை நிலம் குத்தி நிற்க செய்கிறது புத்தகம்!.

 

சலோமியின் மரணத்தை தொடர்ந்து, சமூக அழுத்தத்தால், கல்லூரி நிர்வாகம் வேலையில் திரும்பப்பெற சம்மதிக்கிறது. வேலையில் தொடர ஆசை இருந்தும்; வெள்ளிக் கிழமை வேலையில் பிரவேசித்து, சனி, ஞாயிறு விடுமுறைக்கு அடுத்த நாள், திங்கள் அன்று வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெறும் அவல நிலைக்கு தள்ள வைக்கிறது  கல்லூரி நிர்வாகம்.

10 வருடங்களுக்கு பின் கையை வெட்டியவன் பேராசிரியரிடம் மன்னிப்பு பெற்று விட்டார். பேராசிரியருக்கும் வெட்டியவன் மேல் எந்த ஆதங்கமும் இல்லை. ஆனால்  தான் நம்பின தனது மத நம்பிக்கையோடு இணைந்த, தன் சகோதரி துறவியாக சேவையாற்றும்  சபை தன்னை முற்றிலும் புரக்கணித்ததை பேராசிரியரால் இன்னும் ஜீரணிக்க, புரிந்து கொள்ள இயலவில்லை.  பேரா தி.ஜா. ஜோசப் தனது சர்ச்சைக்குரிய கேள்வியால் இஸ்லாத்தையும், முகமது நபியையும் மட்டுமல்ல  நம்முடைய பரிசுத்த திரித்துவத்தையும்  அவமதித்துள்ளார் என்று கிறிஸ்தவ கல்லூரி நிர்வாகம் கூறினது பேராசிரியரை அதிர்ச்சிக்குள் ஆக்குகிறது.  

 

 

கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளில் வாசிக்கும் சுற்றறிக்கை வழி ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை தனிமைப்படுத்துவதை கதையில் காண்கிறோம். பேராசிரியர் சிறையில் இருக்கையில், ​​தீபிகா என்ற கிறிஸ்தவ நாளிதழில்  பேராயர் மார் ஜோசப் பவத்தில் மதச்சார்பின்மை என்ற கட்டுரை வழியாக ”ஒரு கிறிஸ்தவப் பெயர் தாங்கிய ஒரு ஆசிரியரிடமிருந்து இந்தச் செயல் வந்திருக்கக் கூடாது” என்று கிறிஸ்தவ சபை மக்களை முழுதும் பேராசிரியருக்கு எதிராக அணி திரட்டும் பிரசாரங்களை முன்னெடுகும் போது ஒரு தனி மனிதராக எதிர் கொள்ளும் சூழலையும் விளக்கி உள்ளார் . தனக்கு எதிராக செயல்பட்டதால் கர்த்தர் கொடுத்த தண்டனை என கொக்கரிக்கும் உடன் பணியாற்றும் பெண் துறவியின் வார்த்தைகளையும் பகிர்ந்துள்ளார். ஒரு ஆசிரியராக எளீய வாழ்க்கை வாழ்ந்து வந்த பேராசிரியர், கதை, ஜெயில், காவல்னிலையம் வழக்காடு மன்றம் என்ற சட்ட அமைப்பில் சிக்கி தவிக்கும் நிலையையும் வாசிக்கிறோம்.

 

கேரளாவின் இட்டுக்கட்டின ’மேம்பட்ட சமூகம்’ என்ற முகத்திரையை கிழித்த புத்தகம் இது. ஆயிரம் தரம் வெட்டுப்பட்ட கைகால்களுடன் வாழ்ந்து வரும் பேராசிரியர் தற்போது  வலது கையால் எழுத இயலாத நிலையில்  இடது கையால் எழுத கற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஒரு கேள்வியால், தான் சார்ந்த சபையின் எதிர்ப்பை சந்தித்து, தனிமையில் தள்ளப்பட்ட, அவரறியாதே  மத-அரசியல் போரில் இரையாகி மடிந்த பேராசிரியரின் சரிதை இப்புத்தகம் விருவிருப்பாக வாசிக்க வைக்கிறது. ஒரு ஆசிரியர், ஒரு நல்ல ஆசிரியராக மட்டும் இருந்தால் போதாது என்று உணர்த்திய புத்தகமும் கூட! ஆசிரியருக்கே உருத்தான பகடியுடன் கதையை நகத்தும் பாங்கு சுவாரசியமானது. ஒரு கிராமத்து பேராசிரியர் சர்வதேச மத விரோத அரசியலில் மாட்டுப்பட்ட கதை சொன்ன சுவாரசியமான எளிய மனிதனின் வாழ்க்கை துயரை மிகவும் இயல்பாக கொஞ்சம் பகடியாகவே சொல்லிய புத்தகம் இது. இதன் ஆங்கில மொழியாக்கம்  ‘ A Thousand cuts‘ என்ற பெயரில் பென்கிவின் பதிப்பகத்தால் வெளிவந்து விட்டது.