header-photo

சாதனையாளர் பறவைகளின் நண்பர் பால் பாண்டியன்


அகில உலக அளவில், தேசிய அளவில், பல நிறுவனங்கள், கல்லூரி சார்பில் பல விருதுகள் பெற்றுள்ளவர் பால் பாண்டியன். கூந்தம் குளம் என்ற சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். குஜராத்தில் வேலை கிடைத்தும் சில வருடங்கள் வேலை பார்த்தாலும் பறவைகள் நினைவுகள் அவரை நிலையாது அழைத்ததால் தன் வேலையும் உதறி தள்ளி பறவைகளின் பாதுகாவலராக கூந்தம் குளத்தில் வசித்து வருபவர் பால் பாண்டியன்.

சிறுவயதில் இருந்த தன்னை பின் தொடரும் பறவைகளின் நேசத்தை பற்றி இப்படியாக ஆரம்பிக்கின்றார்.  மரத்தில் ,மேலிருந்த கூண்டில் இருந்து மூன்று குஞ்சு குருவிகள் கீழை விழுந்து விட்டது. ஒன்றின் கால் ஒடிந்து விட்டது. மற்றொன்று சிறகொடிந்து பறக்க இயலாது தத்தளித்து கொண்டிருந்தது. முதன் முதலாக இந்த சின்னஞ்சிறு குஞ்சு குருவிகளை காப்பாற்ற வேண்டும் என்று குளத்தில் இருந்து மீன் பிடித்து கொடுத்துள்ளார்.  அதன் பாசத்தை கண்டு கொண்டு தன் வாழ்க்கையை பறவைகளுக்காக என மாற்றி  விட்டார். பின்பு இவரின் நேரப்போக்கே பறவைகளுக்கு மீன் பிடித்து கொடுப்பது அதனுடன் நட்புறவு பேணுவது என அமைந்து விட்டது. தன் பள்ளி வயதில் தன் தகப்பனார் சைக்கிளில் பள்ளிக்கு போய் வா என்று கூறினதை கூட புறம் தள்ளி விட்டு ஐந்து கிலோ மீட்டர் பள்ளிக்கு நடந்து சென்றே படித்து வந்த  இவர் பள்ளி திரும்பி வரும் வழியில் தினம் சிறிது மீன்களையும் குளத்தில் இருந்து பிடித்து வருவதையே வழக்கமாக மாற்றி விட்டார்.                                          
பின்பு தனக்கு கிடைத்த ஆசை மனைவியும் அவருடன் இணைந்து பணியாற்ற பறவைகளே சரணம் என தன் வாழ்க்கை போக்கை மாற்றி கொண்டவர். மாதம் 8 ரூபாய் பின்பு 500 ரூபாய் என ஊதியத்தில் பறவை ஆராய்ச்சி மற்றும் பறவைகள் படம் பிடிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக தன் வாழ்க்கையை தொடர்ந்துள்ளார். இதனிடையில் இவரை பல நூறு இயக்கங்கள் அரசு நிறுவனங்கள் இயற்கையின் தோழன் பறவைகளின் பாதுகாவலன், பூவுலகின் நண்பன் என போற்றி பல விருதுகள் நல்கி கவுரவித்துள்ளது. தற்போதும் கூந்தம்குளத்தில் புகைப்படம் பிடிப்பவர்கள் இவரின் உதவியை நாடுவதில் பரபரப்பாக உள்ளனர்.                                                                 
இரு ஆண்  இரு பெண் என நான்கு குழந்தைகள் மனைவியுடன் இல்லறம் நடத்தி வந்த  சூழலில் தன் மனைவி நோய் வாய்பட்டு இறந்து விட தற்போது பறவைகளுக்கு எனவே தன் வாழ்க்கையை தள்ளி நீக்குகின்றார். இவரை போன்ற எளிய மனிதர்களின் துணை கொண்டு பறவைகளை ஆராய்ச்சி செய்யும் ஆவலர்கள் படம் பிடித்தும், பல ஆவணப்படங்கள் இயக்கியும் உலக அளவில் புகழ் பெறும் பல உயர் மனிதர்களின் சிறுமையான  செயல்களால் மனம் வருந்தியதையும் வருத்ததுடன் பகிர்ந்து கொள்கின்றார்.  தங்கள் புகழுக்காக பணத்திற்காக பயண்படுத்தும் இவர்கள் போன்ற எளிய மனிதர்களை வெறும் ரூ. 100 மற்றும் 500  நோட்டுகளின் ஊதியத்தில் சுரண்டப்படும் கதை கேட்கும் போது நம் உள்ளம் நொறுக்குகின்றது. தன் மனைவிக்கு நோய் வந்ததும் சரியான சிகிச்சை தந்து காப்பாற்ற இயலாதை தன் இயலமையை எண்ணி கண்ணீர் வடிக்கின்றார் பால் பாண்டியன். தற்போதும் தன் உடல் உபாதகைளின் மத்தியிலும் தான் சுரண்டப்படுகின்றோம் என அறிந்தே பறவைகளுடனும் இயற்கையுடனும் கை கோர்த்து வாழ்வதே தன் மனைவிக்கும் விருப்பம் என கூறி தனது மனதை தேற்றி கொள்கின்றார். தான்  சாதனை செய்ய பிறந்தவன் நான் யாரிடமும் எந்த தேவைக்காகவும் கை ஏந்தக்கூடாது என தன் சுயகவுரவத்தையும் விட்டு கொடுக்க மனமில்லாது அடிப்படை தேவைகளுக்கு கூட தன்னிடம் பணம் இல்லை என்ற வருத்ததையும் தன்னை நையாண்டி செய்பவர்களையும் வருத்ததுடம் நினைவு கூறுகின்றார்.  

ஒரு பறவை சுகவீனத்தால் கரையில் ஒதுங்கியுள்ளது என கேள்வி பட்டதும் நம்மிடம் இருந்து அவசரமாக விடைபெற்று அந்த பறவைக்கு தரும் முதல் உதவியில் மும்முரமாகி விட்டார் இயற்கையின் பாதுகாவலன். பறவைக்கும் நமக்கும் மரம் தேவை என கூறும் தானும் தன் மனைவியும் நட்டு வளர்த்த மரங்கள் என குளத்தின் கரையிலிருக்கும் மரங்களை சுட்டிக் காட்டி மகிழ்கின்றார்.                                                            
துயரம் நிறைந்த தன் வாழ்க்கையின் மத்தியிலும் சுயநலமற்று இயற்கையும் பறவைகளையும் பாதுகாக்க வேண்டும் அரிய குணம் கொண்ட பால் பாண்டியன் போன்றோர் சிறப்பானவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். வெறும் பொன்னாடை, வெற்று சாற்றிதழ் பொய் புகழ்ச்சி கொண்டு மட்டுமே இவர்களை போன்ற மனிதர்களை ஏமாற்றி பிழைக்கும் படித்த மனிதர்கள் வெட்கி தலை குனிய வேண்டியுள்ளது.  தன் மனைவி இறந்த துக்கத்தில் தான் எழுதிய சினிமா பாடல் வரிகளையும் தன் இளைய மகன் தன் நோயுற்ற மனைவியை தள்ளி விட்ட சூழலை எண்ணி "பணம் கொடுத்தால் அம்மா கிடைக்குமா" என்ற பாடலையும் நம்மை பாடி காட்டி விட்டு விடை பெற்று சென்றார்.

பால் பாண்டியனின் துயர் மிகு வாழ்க்கை கதையை கேட்ட போது கண்ணீர் நம்மை அறியாது கரை புரண்டு ஓடுகின்றது. ஆனாலும் இவரை தன் கண்ணிரையும் பொருட்படுத்தாது உயிர் உள்ள மட்டும் பறவைகளை காப்பாற்ற வேண்டும் இவை வெளிநாட்டில் இருந்து நம் இந்தியாவுக்கு வருபவை நம்மை விட்டால் யார் இவர்களுக்கு உண்டு என கூறி கொண்டு நான் சாதனைசெய்ய பிறந்தவன். இந்த உலகை விட்டு செல்லும் மட்டும் சாதனை செய்ய வேண்டும் என கூறி கொண்டு ஒரு கையில் தன் பறவைகளின் படங்களையும்,  இன்னொரு பையில் தான் பெற்ற விருது, சான்றிதழ் மற்றும் தன் மனைவியுடன் உள்ள  புகைப்படமுமாக தன் நோயுடன் மல்லிட்டு கொண்டு பறவைகளை தேடி பாசமுடன் ஓடி கொண்டு இருக்கின்றார்.

0 comments:

Post Comment

Post a Comment