26 Nov 2012

சொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி?

 கடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு கதைகள், நிகழ்வுகளா என ஆச்சரியம் கொள்ள செய்தது. சில சம்பவங்கள் கண்ட போது கண் ஈரமாகின ஆனால் பல நிகழ்வுகள் சிரிப்பை தான் வர வைத்தது.  தமிழக சீரியல் கதாநாயகிகளை விட கண்ணீர் சிந்தும், ஆக்கரோஷமாக பேசும் பெண்கள், கெட்ட வார்த்தையை காமரா முன் கூசாது பேசும் ஆண்கள், மயக்கம் போட்டு விழும் முதியவர்கள், திடீர் அடி மிதி , நிகழ்ச்சி நடத்துவர்கள் ஓடுவது ...அழுவது... என நிகழ்ச்சி போய் கொண்டிருக்கின்றது.

ஊடகத்தின் பங்கு என்ன; மக்களுக்கு செய்தி சேர்ப்பது, விழிப்படைய செய்வது, அறிவை புகட்டுவது.  ஆனால்   " சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி வழியாக விரட்டுகின்றது, மிரட்டுகின்றது, குற்ற விசாரணை செய்கின்றது, சமூகத்திற்க்கு நீதி உரைப்பதாக நினைத்து இவர்களை சமூகத்தை விட்டு புரக்கணியுங்கள், ஒதுக்குங்கள் என கட்டளைகளையும் சேர்த்து பிறப்பிக்கின்றது.

நான் கண்ட கதைகள் ஒரு புத்தி சுவீதனம் அற்ற மனைவியை கணவர் புரக்கணிப்பது மட்டுமல்லாது அவர் பெற்ற குழந்தைகளே கேலி செய்யும் சமூக சூழல் கண்டு அதிர்ந்தேன். மீடியா வழியாக மனைவியின் பெற்றவரிடம் பணம் கேட்கும் கணவன், எந்த காரணம் கொண்டாலும்  துணை போகும் ஊடகம், சகோதரன் வீட்டில் வைத்து இறைச்சி சாப்பிடுகின்றான் என குற்றம் சாட்ட அதை நிர்மலா அமோதிக்க ஆசாரமான் குடும்பத்தில் இப்படி செய்யலாமா என கேள்வி கேட்கும் நிர்மலா தனி மனித விருப்பங்களில் மூக்கை நுழைக்கும் பெண்ணை ஏன் சாடவில்லை? சில வரட்டு உபதேசங்கள் கொடுக்க என பஞ்சாயத்து முன்னேறுகின்றது!

இன்னும் கவனிக்க வேண்டிய  விடயம் கணவர்-மனைவி சண்டைகள் ஊடக வியாபரத்திற்காக பொது வேதியில் அல்லோலப்படுவது தான்.  மனைவி உள்ள போது கள்ளக்காதலியை கைபிடித்தவனை  சிறையில் தள்ளாமல் மிரட்டி பணியவைக்கின்றனர், தொலைகாட்சி அலுவலகத்திலே சண்டை நடக்கின்றது, கெட்ட வார்த்தையால் மாறிமாறி பேசி கொள்கின்றனர் அடித்து கொள்கின்றனர். தமிழக சமூக அவலமா அல்லது பண்பாட்டை உலகம் அறிய வெளிச்சம் இடுகின்றோமா?

காதலில் விழுந்து கெட்ட  சிறு பெண்கள் கண்ணீர் கதைகள்! சீரியல் நடிகைகள் கூட கிளீசரின் போட்டு இந்த அளவு கண்ணீர் சிந்தியிருப்பார்களா என்று சந்தேகம்.  இவர்கள் எல்லோரும் ஒன்றும் தெரியாத அபலைகளும் அல்ல. பெற்றவர் அறியாது மற்றொரு ஆணவனுடன் அறை எடுத்து தங்குபவள் நிலை கொடியது தான் ஆனால் நிர்மலாவும் சேர்ந்து உருகின்றார். கள்ளக்காதலியை வைத்து கொண்டே ஏமாற்றி திருமணம் முடிப்பவனிடம் நிர்மலா பெரியசாமி நெஞ்சு வலியோடு ஏன் கதைக்கின்றார் என்பது விளங்கவில்லை.  இதய நோயால் விழுந்த பெண்ணை ஆம்புலன்ஸில் எடுத்து செல்லும் காட்சியும் தேவையா அல்லது நிகழ்ச்சி வெளியிடுபவர்கள் தணிக்கை செய்யாது ஏன் ஒளிபரப்புகின்றனர்...இப்படியாக நாடக தன்மையுடன் உண்மை சம்பவங்கள் காட்டப்படுகின்றதுறது. அவல மகனின் கதை!

நீதிபதி நிர்மலா பெரியசாமி.

உங்கள் கண்ணை கண்டால் நீங்கள் பொய் பேசுவது தெரிகிறது, பாவம் அந்த பெண் அழுகின்றார், ஆண்மை இல்லையாம் உங்களுக்கு!, இது  போன்ற தீர்ப்புகள் இவரால் எப்படி உடன் கொடுக்க  இயல்கின்றது?   என் உள் உணர்வு சொல்கின்றது  அதனால் தீர்ப்பிடுகின்றேன் என சொல்லி கொண்டு வெளிவிடும் வார்த்தைகள் இது மனோத்துவ ரீதியாக  பாதிக்கப்படும் குற்றம் சாட்டப்படும் நபரை பாதிக்க தகுந்த வண்ணம் இந்தளவு லாவகமாக கையாளலாமா? மேலும் கிராம மக்கள் என்றால் அவருக்கு தவறான புரிதலே உள்ளது. கிராம மக்கள் ஒன்றும் தெரியாத பாமரர்கள் என்றும் நகர்புறங்களில் வசிப்பவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் எனும் நினைக்கும் நிர்மலாவை நினைத்து தான் ஆச்சரியமாக உள்ளது. கேரளாவில் இதே போன்று அமிர்தா தொலைகாட்சி நிகழ்ச்சி நடத்துகின்றது,  ஒரு சட்ட வல்லுனர், சமூக ஆவலர், இப்பிரச்சனை கையாளும் தனித்துவ தகுதி வாய்ந்த நபர் என 4 பேர் கொண்ட குழு தான் அந்த அந்த பிரச்ச்னைக்கு தீர்வு குறிப்பிடும்.  இங்கு சர்வரோக நிவாரணியாக நிர்மலா பெரியசாமி மட்டுமே  உள்ளார்.

கட்டபஞ்சாயத்து -நிர்மலா பெரியசாமி!
சில கயவர்களை, கயவர்களாக அவர் நினைப்பவர்களை மிரட்டி பணியவும் வைக்கின்றார். Z தமிழ் தொலைகாட்சி என்ற ஊடகத்தை லத்தியாக சுழற்றுகின்றார்.  மீடியா செய்ய வேண்டிய பணியை செய்கின்றாரா என்றால் தவறவே விடுகின்றார். சட்டபூர்வமான அறம் சார்ந்த கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கை இல்லாது பரபரப்பு நிகழ்வுகளுடன் கண்ணீர், சண்டையுடம் தமிழ் மசாலா படம் போன்று நடத்தி செல்கின்றார் என்ற உண்மையை தெரிந்து கொள்வாரா. இரண்டு மனைவி


தனி நபர் உரிமை

தனி நபர் உரிமை மீறப்படுகின்றது.  ஊடகத்தில் தங்கள் முகம் தெரிய விரும்பாத நபர்களையும் கட்டாயப்படுத்தி கொண்டு வருகின்றார். அங்குவைத்து மிரட்டப்படுகின்றனர்.  சில சம்பவங்களில் காவல் நிலையங்கள் என்பதில் போல் பிரச்சனையை முதலில் கொண்டு வருபவர்களுக்கு சார்பாக தீர்ப்பு கிடைக்கின்றது. மேலும் தனிப்பட்ட வாழ்கையை செய்தியாளர்களால் சேகரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது.  செய்தியாளர்கள் செய்யும் வேலை ஊடக தற்மம் சார்ந்ததா என்றால் இல்லை என்பதை உறக்க கூற இயலும்.  நிர்மலா அவர்களும் தன்னுடைய தனிப்பட்ட கருத்தை திணிக்க பார்க்கின்றார். குணம் சரியில்லை என ஒரு நபர் சொல்வதும் கள்ள தொடர்பா என கேட்பது; நிர்மலா அவர்களில் ஆளுமை குண நலன் மேல் அருவருப்பை தருகின்றது. மேலும் நிகழ்ச்சியில் வரும் பெரும் வாரியான மனிதர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிகரிக்கப்படுவதும் அவர்களை பற்றி திறந்த விளக்கம் கொடுப்பதும் தகுமா எனவும் சிந்திக்க வேண்டியுள்ளது. தெருவில் கூடி கதையளக்கும் போல் மீடியா வழியாக சம்பவங்கள் ஆராய்வது தவிற்க்க வேண்டியது.

நிகழ்ச்சியின் தேவை
 இந்நிகழ்ச்சி முற்றிலும் தவிற்க்க வேண்டியது என சொல்ல இயலாது. ஒரு வகையிலும் தீர்வு கிடைக்காத பெண்கள் மீடியா துணையை நாடுகின்றனர். ஆனால் நிகழ்ச்சி நடத்துவர்கள்  சில நிகழ்ச்சிகளை பொது நலம், மனித நேயம் சார்ந்து புரக்கணித்து ஒளிபரப்புவதை தவிற்க்க வேண்டும்.   சட்ட திட்டங்களை புரியவைக்க வேண்டும். பல நிகழ்ச்சிகள் கள்ள தொடர்பு காதல் சார்ந்த பிரச்ச்னை என்பதால் நிகழ்ச்சி நடத்தும் நிர்மலா வெள்ளைச்சாமி ஹிந்து கிருஸ்தவ, இஸ்லாமிய திருமண சட்டங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நிகழ்ச்சியில் சாதாரண நபர்கள் போல் உணர்ச்சி வசப்பட்டு கத்துவது அழுவது, நிகழ்ச்சிக்கு இடையில் அடி தடி சண்டை நடப்பை தடுக்க அல்லது அதை ஒளிபரப்புவதை  தவிற்க வேண்டும்.

4 comments:

  1. ஜோ, சரியாகச்சொன்னீர்கள். நானும் இந்நிகழ்வை முகநூல் அன்பர்கள் கொடுத்திருந்த சுட்டியின் மூலமாகக் கண்டுகளித்து முகஞ்சுளித்தேன். எவ்வளவு மோசமாக நடத்துகின்றனர் நிகழ்ச்சியை.! தனிமனித உரிமையில் அத்துமீறி தலையீடு. பொது மக்களின் முன்னே ஒரு பெண் ரௌடிபோல் ஒரு ஆணை கை நீட்டி அரைகின்றார். மனைவி அதை வேடிக்கைப் பார்க்கின்றார். நடுவில் செய்வதறியா அந்த ஆள் திருதிருவென முழிக்கின்றார்.அவர் உண்மையிலே தவறு செய்தவரா என்பதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை அங்கே, அவர்களின் பஞ்சாயத்து சுமூகமாக நடைபெறவேண்டும். மக்கள் இவர்களின் அசட்டு தைரியத்திற்கு சலாம் போடவேண்டும். இதுவே அந்த நிகழ்வின் நோக்கம் போல் தெரிந்தது.என்னால் ஒரு முறைகூட ஜீரணிக்க முடியாத நிகழ்வு அது. எப்படி இதுபோன்ற நிகழ்வுகளை அங்கே அநுமதிக்கின்றார்கள்..!? பகிரப்பட்ட சுட்டியின் கீழ், முகநூலில் படுகேவலமாக பின்னூட்டங்கள் வேறு, நம்மை பயமுறுத்தியது. களவாணிப்பய, வெட்டணும், குத்தணும்.. பொறுக்கி, செருப்பால அடிக்கணும் உன்னை அப்படி இப்படி என அசிங்கமான வார்த்தைகள். நாம் நம் நியாயங்களை அதன் கீழ் இட்டால், நமக்கும் செருப்பால் அடிப்பதைப்போல் கமெண்டுகள் வரும் என்பதால் அப்படியே விலகிவிட்டேன். எனக்கு நிஜமாலுமே வருத்தம் வந்தது, குற்றவாளி என பொதுவில் குற்றம் சுமத்தி அசிங்கப்படுத்திய அந்த குற்றவாளிகளின் மீதுதான்.
    நல்ல பகிர்வு தோழி. என் மனதைக் குடைந்த ஒரு விஷயத்தை மிக தைரியமாக அம்பலப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துகள். தொடருங்கள். அந்த அம்மணி (நடத்துனர்) கட்ட பஞ்சாயத்துதான் நடத்துகிறார். மனச்சாட்சியே இல்லாதவர்கள்.

    ReplyDelete
  2. இந்நிகழ்ச்சியை பார்த்தபோது உங்களைப் போல தான் எண்ணினேன். அதனால் இப்போ பார்ப்பதில்லை.
    அடுத்து நிகழ்ச்சிக்கு வருவோர் ஏழைகள்; கீழ்மட்ட மக்கள் தான் அதிகமாக உள்ளது. இதில் ஆயப்படும் பிரச்சனைகள். பணக்காரர்களிடமும், மேல்மட்டத்தினரிடமுமே மிக அதிகம் என அறிகிறேன்.
    எந்த ஒரு நான் பார்த்த நிகழ்ச்சியிலும் இடம்பெறவில்லை.

    ReplyDelete
  3. drpkandaswamy1935 (signed in using yahoo)November 27, 2012 12:12 pm


    காசுக்காக எதையும் செய்வோம் என்ற கொள்கை வைத்திருப்பவர்களை என்ன செய்ய முடியும்? மொத்தத்தில் நிர்மலா பெரியசாமி இப்படி பணம் சேர்க்கவேண்டாம்.

    ReplyDelete

  4. இந்நிகழ்ச்சி முற்றிலும் தவிற்க்க வேண்டியது என சொல்ல இயலாது. ஒரு வகையிலும் தீர்வு கிடைக்காத பெண்கள் மீடியா துணையை நாடுகின்றனர்.

    இந்த நிகழ்ச்சி மூலம் பலருக்கு நீதியும் நல வாழ்வும் கிடைக்கினறது . இந்த நிகழ்ச்சிக்கு நான் ஆதரவுதான் .
    23 hours ago · Unlike ·

    ReplyDelete