header-photo

சாயா வேணோ ....சாயா....இந்த வாரம் ஒரே படபடப்பா போச்சுது. ஒரு டீ போட்டு குடிச்சா எல்லா மண்டைக்கனவும் போயிடும். அதான் டீ போட போறேன் உங்களுக்கும் ஒரு கப் டீ?


டீயில் சேர்க்கும் பொருள் ஒன்றாக இருந்தால் கூட அதன் சுவை, மணம், திடம் எல்லாம் டீ தயாரிக்கும் ஆளுக்கு ஆள் போலவே, சேர்க்கும் பொருளின் அளவுக்கு அளவு மாறுபடும்.  என் சித்தி வீட்டில் டீ என்பது ஹார்லிக்ஸ் மாதிரி தான் இருக்கும். சில வீடுகளில் குடிக்க தருவது டீயா காப்பியா என்று புரிவதில்லை!   ஹிந்திக்கார நண்பிகள் இருந்தார்கள்; அவர்கள் வீட்டுக்கு ஸ்வெட்டர் பின்னி படிக்க தோழியுடன் செல்வது உண்டு. அவர்கள் வீட்டில் வேலைக்காரர்கள் இருப்பதால் எங்களை கண்டவுடனே மாடசாமி 2 கப் டீ கொண்டு வாங்கோஎன்று கட்டளை இட்டு விடுவார்கள்.  நாங்களும் வேண்டாம் இப்போது தான் சாப்பிட்டு வந்தோம் என்று எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க.  இல்லைங்கோ ஒரு டீ குடிங்கோ என்று அன்பாக சொல்லி தரும் டீயை குடிக்காது எப்படி இருப்பது? ஆனால் டீயுடன் சேர்ந்து அடிக்கும் ஒரு நெடி தான் இன்று நினைத்தாலும் பயமாக உள்ளது.  நானும் என் தோழியும் நல்ல ஆற வைத்து டக்கென்று ஒரே மடக்கில்  குடித்து விட்டு கண்களால் பார்த்து ஆறுதல் பட்டு கொள்வோம்.  கழுவாத கப்பில் இருந்து வந்த நெடியா அல்லது டீஇனி கேட்கப்பிடாது என்று அவர்கள் வேலைக்காரன் ஏதும் சேர்ப்பானா என்றும் தெரியாது.

சில வீடுகளில் ஒரு பாத்திரத்தில் பால் தண்ணீர் கலந்து, சீனி, தேயிலை போட்டு கொதிக்க வைத்து அதை அப்படியே வடிகட்டி தேயிலை டீ என்று தந்து விடுவார்கள்.  தமிழக பல வீடுகளில் டீ என்றால் இப்படியாக தான் கிடைக்கும். என்னை போன்றவர்கள் கொஞ்சம் முந்தி கொண்டு காப்பி தாங்கோ என்று வாங்கி குடித்திடுவோமில்லே.

நான் மாட்டு பெண்ணாக வந்த போது  சுவையான டீ அருந்தினேன் மாமியார் வீட்டில்.  என்னவர் வீட்டில் பசுமாடுகள் இருந்ததால் பால் எப்போதும் சுண்ட சுண்ட அடுப்பில் காணும்.  அந்த பாலில் டீ போட்டு தரும் டீ எனக்கு மட்டும் ஹராமாக இருந்த்து.  மாமியார், என்னவர், மாமனார் கொளுந்தனார்  என அவர்கள் எல்லோருக்கும்  4 டம்ளருகளில் வரும் போது, எனக்கு மட்டும் அடுப்பாங்கரையில் உள்ளது கலந்து குடித்து கொள் என்று கூறி விடுவார்கள்.  யாரும் காணாது என்னவரிடம் டீ வாங்கி குடித்து விடுவதே என் வழக்கமாக இருந்த்துபின்பு எங்கள் வீட்டில் நான், இடும் டீயை என்னவர் குடித்து விட்டு “நாய் கூட குடிக்காதுஎன்ற போது தான் உருப்படியான டீ இட கற்று கொள்ள ஆவல் வந்தது!

எங்கள் ஊர் வண்டிபெரியார் ஏரியா (கேரளா) தேயிலை பயிறிட்டு தயாரிக்கும் இடம் ஆகும். ஒவ்வொரு எஸ்டேட் தேயிலைக்கும் அதன்  தயாரிப்பு முறை சார்ந்து அதன் ருசியில் மாற்றம் காணும்.
தேயிலை 4500 வருடங்களுக்கு முன்பே   சீனாவில் பயன்படுத்தியாதாக  சொல்லப்படுகின்றனர்.  சீனர்கள் கியா(kia) என்றது சா(cha) என்று மாறிபின்பு வெள்ளகாரர்கள் சொல்வது தான் வேதவாக்கு என வந்த போது  ‘சா’  டீ ஆக மாறியது. 2.5 மிலியன் டன் தேயிலை உற்பத்தி செய்யும்  இந்தியாவில் 3 மிலியன் டாலர் அன்னிய செலாவணி  ஈட்டி தருவதாக தேயிலை உள்ளது. அருணாசல் பிரதேஷ், பர்மா போன்ற இடங்களில் 12 நூற்றாண்டில் இருந்தே பயன்படுத்தியதாக சொல்கின்றனர். இந்த தேயிலை செடி  40 உலக நாடுகளிலும் பயிர் செய்கின்றனர்இந்தியாவில் டார்லிஜிங், ஆசாம் கேரளா தமிழகத்தில் நீலகிரி போன்ற மாவட்டங்களில் தேயிலை பயிர் செய்யப்படுகின்றது

ஷென் நங் என்ற ஒரு வைத்தியர் மருந்து தயாரித்து கொண்டிருக்கும் போது தவறுதலாக தேயிலை இலை வென்னீரில் விழுந்ததாகவும் அவர் அதன் மகிமையை கண்டு தேயிலை பயன்படுத்த ஆரம்பித்தாகவும் சொல்லப்படுவது உண்டு.  இன்னும் ஒரு கதையும்  உண்டு;  இந்தியாவில் இருந்து தியானத்திற்க்கு என சீனா சென்ற போதிதர்மா  என்ற துறைவி தான் தூங்காது தியானத்தில் இருக்க என தன் சக்தியால் உருவாக்கியதே தேயிலை செடிகள் என்றும் ஒரு  சுவாரசியமான கதை கதைப்பது உண்டு. எது எப்படியோ வெள்ளைகாரர்கள் இந்தியாவில் ஆட்சி செய்தபோது  தான் கொடும் வனமும் மன்னர்களுக்கு வேட்டையாடும் இடமாகவும், பஞ்சபாண்டவர்கள் தங்கள் மனைவி பாஞ்சாலியுடன் மறைந்திருந்து வாழ்ந்து வந்தனர் என்று சொல்லப்படும் கொடூர மேற்க்கு தொடர்ச்சி மலையில் தேயிலை பயிரிட்டு பல லட்ச ம் மக்களுக்கு சிறப்பாக தமிழகத்தில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் வந்த பல மலையக தமிழ் தமிழர்களுக்கு வாழ்வாதாரமாகவும் வாழ்வு அளித்ததும் இத்தேயிலை தோட்டங்களே.  ஒரு காலத்தில் தமிழர்களின் உழைப்பின் வழியாக தமிழர்களின் கோட்டையாக இருந்த தேயிலை தோட்டங்கள் வெளிமாநில முதலாளிகள் கைகளில் இருந்து மலையாளி முதலாளிகள் கைவசம் வரும் தோறும் தமிழன்  இடம் நகர்ந்து தமிழகம் நோக்கி நகழ உந்த படுகின்றான்.

தேயிலை தோட்டங்கள் பார்க்க பச்சை பட்டு சேலை உடுத்திய அழகான மங்கையாக எல்லோருக்கும் காட்சி அளித்தாலும் அதில் தங்கள் உழைப்பை சிந்தும் மக்கள் வாழ்க்கை  அவர்கள் பண்பாட்டு தளங்கள் என பல வித்தியாசமான வியற்ப்பூட்டும் பரிணாம கதைகள் கொண்டது!  எப்படி ஜாதியும் மதவும் சமூகத்தை பிரித்து வைத்ததோ அதே போல் தேயிலை தோட்ட மனிதர்களை அரசியலும் அதிகாரமும் ஆணவவும் பிரித்து ஆண்டது.

 சரி சரி கதைத்தது  போதும். தேத் தண்ணீர் போட ஆரம்பிப்போம்
·        அடுப்பை பற்ற வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைய்யுங்கள்.
·        ஒரு சிறு பாத்திரத்தில் சிறு கரண்டிக்கு ஒரு நபருக்கு ஒன்று என்று தேயிலையை எடுத்து கொள்ளுங்கள்.
·        நன்றாக கொதித்த  நீரை டீ எடுத்து வைத்துள்ள பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் மூடி வைத்து விடுங்கள்.
·        இனி கொதித்த பாலை சீனி கலந்து ஒரு போனியில் எடுத்து அதில் இந்த டீ கலவையையும் வடி கட்டி ஊற்றி கலர் வைத்தே கடுப்பம் போதுமா என்று தெரிந்து கொள்ளலாம். இனி நல்ல 5-6 ஆத்துhttp://www.youtube.com/watch?v=LXlrtrjAo7U&feature=related
·        டீ ரெடி வாங்கோ குடிப்போம்.
 ஏழைகள் வீட்டில் பால் எப்போதும் இருப்பதில்லை, மேலும் சில பணக்காரர்களுக்கும் கொழுப்பு, சர்க்கரை வியாதி தாக்கி விடுவதால்  பாலை தவிற்க்கும் நோக்குடன் கட்டன் சாயா குடிக்க உந்தப்படுவது உண்டு. தேயிலை தோட்ட தொழிலாளிகள் வீட்டு தேத்தண்ணீர் வித்தியாசமான  கருப்பட்டி சேர்த்த ருசியான டீயாக இருக்கும்.  சிறிய பீங்கான் பாத்திரத்தில் ஸ்டைலுக்கு குடிப்பவர்கள் அல்ல. அவர்கள் காலை 6.30 மணிக்கே வேலைக்கு செல்ல வேண்டி வருவதால் பெரிய சட்டியில் கொதிக்க வைத்து கருப்பட்டியும் சேர்த்து செம்பு போன்ற பாத்திரங்களில் குடித்து செல்வர்கள்.  மேலும் பல்லு கூசும் குளிரில் தேத்தண்ணீர் அவர்களுக்கு உணவு, குளிர் நிவாரணி எல்லாமாகின்றது.

மேலும் black tea என்று அழைக்கப்படும் இந்தகட்டன்சாயாதான் மருத்துவர்கள் பரிந்துரைப்பது.  அற்புத நோய்க்கு சிறந்த நிவாரணி என்று சொல்லி வந்தாலும் தற்போதைய காலத்தில் தேயிலை தோட்டங்களுக்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்து இதை எல்லாம் கேள்விக் குறியாக்கின்றது.

 தண்ணீர் கொதி வந்த்தும் டீ தூளை போட்டு தீயை அணைத்து 5-6 நிமிடம் மூடி வைத்து விட வேண்டும்ஒரு போதும் டீ தூள் இட்ட பின்பு கொதிக்க விட கூடாது டீயின் உண்மையான ருசி மாறி கசப்பு கலந்து விடும்.  மேலும் இலை தேயிலை என்பவையை கொதிக்க வைத்தால் அதன் உண்மை சுவை மறைந்து விடும் இவ்வகையான தேயிலை தூள்களை டிக்காஷன் போன்று எடுத்து பயண்படுத்த மட்டுமே வேண்டும்.  இந்த கட்டன் சாயாவுடன் எலுமிச்சம். இஞ்சி, புதினா இலை போன்றவையில் ஏதாவது ஒன்று சேர்த்து குடித்தால் இன்னும் பல வகை சுவையில் குடிக்கலாம். தற்போது பல வித ருசிகளில் தேயிலை பொடியாகவே தயாரிக்கப்பட்டு வருகின்றது. டீ குடிப்பதால் பித்தம் தாக்க கூடும் என்று சொல்லப்படுகின்றது ஆனால் அற்புத நோய் வராது தடுக்க கட்டன் சாயா நல்லது என்றும் சொல்கின்றனர். தேயிலையை காற்று புகிராத டின்னுகளில் போட்டு வைத்து பாதுகாக்க வேண்டும் மற்று பொருட்களுடன் வைத்தால் அதன் மணத்தையையும் சுவாகரித்து  அதன் சுவை  மணம் மாறி போக வாய்ப்பு உண்டு.

 கழிவு டிக்காஷனை குப்பையில் போடாது ரோஜா செடிக்கு இட்டால் செடி அழகான பூக்களை நமக்கு தரும்

16 comments:

Chitra said...

ஒரு கப் நல்ல டீ குடித்துக் கொண்டே , உங்கள் பதிவை வாசித்து விட்டேன். டீ போட கற்று தருவதில் இருந்து, டீ பற்றிய வரலாறு, பெயர் காரணம், கலாச்சார பாதிப்பு, பொருளாதாரம் என்று கலந்து கட்டி தந்து இருக்கீங்களே. சூப்பர்!

r.selvakkumar said...

டீ என்றால் என்னைப் பொறுத்தவரை லெமன் டீதான் மற்றதெல்லாம் டீயைப் போல..அம்புடுதான்.

மற்றபடி டீ என்பது கொஞ்சம் துவர்ப்புடன் சூடாக இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும். ஆனால் பல வீடுகளில் உங்கள் சித்தியைப் போலவே, தித்திப்பாகத்தான் இருக்கும். இதில் பாலேடு வேறு, பால்கோவா சாப்பிடுவதைப் போன்ற தோற்றத்தை தந்துவிடும்.

என்னைப் போன்ற மீடியா ஆசாமிகளுக்கு மிகவும் பரிச்சயமானவர் டீக்கடை நாயர்தான். எப்போ கேட்டாலும் டீ தருவார். ஆனால் அது டீயும் இல்லாமல் சுடு தண்ணியும் இல்லாமல் நடுவாந்தரமாக இருக்கும். ஸ்ட்ராங் டீ, கொஞ்சம் லைட் என்பதற்க்கெல்லாம் டிக்காஷனை என்னவோ செய்வார், என்னைப் பொறுத்தவரை எல்லாம் ஒரே சுவைதான்.

டிரம் டீ என்று ஒரு வகை உண்டு. சில வடக்கத்தியர்கள் நடத்தும் கடையில் இது கிடைக்கும். பிஸ்கட்டை வைத்து டிகாஷன் போட்டோர்களோ என்று எண்ண வைக்கும்.

இரானி டீ ஸ்டால் சூப்பர். அரை கப்தான் இருக்கும். உறிஞ்சுவதை நிறுத்தினால் ஆறிவிடும். கூடவே சின்ன சமோசா.. அமர்க்களமாக காம்போ..

போனவாரம், மாஞ்சோலை கிராமம் போயிருந்தேன். வரும் வழியில் ஊத்து என்ற இடத்தில் ஆர்கானிக் உரம் போட்ட டீ என்று எஸ்டேட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். Green Tea உடம்புக்கு நல்லது என்றார்கள். வாங்கி வைத்திருக்கிறேன் இன்னும் பிரிக்கும் வேளை வரவில்லை.

என் நண்பர்கள் எல்லோருமே சுமாராக சமைப்பார்கள். இரவு வேலை தொடரும்போதெல்லாம் அவர்களே தயார் செய்து தரும் பிளாக் டீ தான் என்னைப் பொறுத்த வரை சூப்பர் டீ. ஏனென்றால் அதுதான் நான் கேட்காமலேயே தயாராகி, கேட்கும் போது கிடைக்கும் டீ.

Anonymous said...

நல்லா கட்டன் சாயா பதிவு...

எனக்கு பிடித்தது...கிரீன் டீ...அதுவும் குளிர்ந்த நீரில்...

அப்புறம் நல்லா ஏலக்காய்...இஞ்சி..பால்..சீனி..போட்ட மைசூர் டீ...

கேரளாவில் இருந்த போது கட்டன் சாயா தான் எப்போதும்...

நல்லா எழுதி இருக்கீங்க...Josephine...உங்களுக்கு பிடித்த 10 மலையாளப்படங்களை
பட்டியலிடசொல்லியது உங்களுக்கு நினைவிருக்கு தானே...

ராம்ஜி_யாஹூ said...

மிகவும் அருமை, நன்கு விளக்கமாகப் பதிவு செய்து உள்ளீர்கள்.

நெல்லை, கோவை, கேரளா பகுதி தண்ணீரும் டீ மற்றும் உணவிற்கு ஒரு கூடுதல் ருசி கொடுக்கிறது.
சென்னையில் உணவு மட்டும் டீ, தென் மாவட்டங்கள் அளவு சிறப்பாக இல்லாமல் இருக்கக் காரணம் தண்ணீர்.

தமிழ்வாசி - Prakash said...

டீத் தண்ணி போடறதுல இம்புட்டு விஷயம் இருக்கா?

தமிழ்வாசி - Prakash said...

எழுத்துருவை சற்று சிறியதாக்குங்கள். பார்க்க நன்றாக இருக்கும்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

செய்பவர்கள் கையில் ருசி இருக்குமென்பது உண்மைதான்.. அதான் இங்க என்வீட்டில் சொல்வாங்க.. அன்பை கலந்து ..உயிருடன் உள்ள காப்பியோ டீயோ குடுன்னு..:))

J.P Josephine Baba said...

நண்பரே உங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி. பல அறிய கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள். நீங்கள் டீ ரசித்து ருசித்து குடிப்பவர் என்று புரிந்து கொண்டேன். கடைகளில் பயன்படுத்தும் டீ தூள் என்பது கடைசி கிரேடான டீ பாக்டரிகளில் குப்பை போல் கொட்டி கிடக்கும் டஸ்ட் வகை டீயை. மேலும் நிறத்துக்கு என ரசாயண பொருட்கள் கலந்திருப்பதாகவும் சொல்கின்றனர். மாஞ்சோலை டீயை ஒரு போதும் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து விடாதீர்கள், டீயை ஒரு டம்ளரில் தேவைக்கு எடுத்து அதில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி சிறிது நேரம் கடந்து சீனி சேர்த்த தண்ணீரில் கலந்து அடியுங்கள். சுவையோ சுவை! நன்றி வணக்கம்!

J.P Josephine Baba said...

மிக்க நன்றி தோழி உங்கள் ஊக்கப்படுத்தும் மொழிகளுக்கு!நன்றி வணக்கம்.

J.P Josephine Baba said...

உங்களுக்கு பிடித்த 10 மலையாளப் படங்களை
பட்டியலிடசொல்லியது உங்களுக்கு நினைவிருக்கு தானே..//// நண்பா உண்டு உண்டு 2 படம் பார்த்து விட்டேன் கதைக்க தான் வேண்டும் உங்களுக்கு பிடித்த படம் இருந்தாலும் பரிந்துரையுங்கள் அதன் கதையும் பகிர்கின்றேன்.

J.P Josephine Baba said...

நெல்லை, கோவை, கேரளா பகுதி தண்ணீரும் டீ மற்றும் உணவிற்கு ஒரு கூடுதல் ருசி கொடுக்கிறது.///புது தகவல் பகிர்ந்துள்ளீர்கள் நண்பா மிக்க நன்றி வணக்கம்!

J.P Josephine Baba said...

தமிழ்வாசி இன்று உங்கள் கையால் மனைவிக்கு ஒரு கப் டீ/சாயா! சரியா?உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி. எழுத்துருவை மாற்றி விடுகின்றேன்.

J.P Josephine Baba said...

செய்பவர்கள் கையில் ருசி இருக்குமென்பது உண்மைதான்.. //நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தோழி!நன்றி வணக்கங்கள்.

Ponnappan.A said...

கருப்புகட்டி சாயா குடிக்கணுமே.

டீயின் தரம் பற்றி படித்ததில் ஏழைகள் நல்ல டீயை கண்ணாலும் பருகி இருக்க மாட்டார்களே என தோன்றுகிறது

க்ரீன் டீ தானே நல்லது?

J.P Josephine Baba said...

க்ரீன் டீ தானே நல்லது?///ஆமாம் தயாரிப்பிலுள்ள வித்தியாசம் மட்டுமே. தேயிலை இரண்டு இலையும் ஒரு குருத்துமாக உள்ளதை கிள்ளி பொடிக்காது உலத்தி எடுப்பது தான் க்ரீன் டீ. மற்று தேயிலை பல நிலைகளில் அரைப்பு உலத்தலில் சென்று வரும். ஆதலால் அதன் தனி சிறப்பு மங்கி போக வாய்ப்பு உண்டு. பச்சை தேயிலையில் அந்த பிரட்சனை இல்லை ஆனால் பலர் அதன் பச்சை மணத்தை விரும்புவதில்லை. தேயிலை தோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல தேயிலை தூள் கிடைப்பது உண்டு. அவர்கள் வசிக்க 3 அறைகள் கொண்ட வீடு, சுத்தமான தண்ணீர் அவர்கள் குழந்தைகளை வளர்க்க பாலவாடிகள், பள்ளிகள்,குளிரில்லாது தூங்க உயர்ரக கம்பளிகள் என வெள்ளைகாரர்கள் காலத்தில் இருந்த வசதியை இந்திய முதலாளிகள் அதே ஒரு வீட்டில் 3 குடும்பங்களை தங்க வைத்து துன்புறுத்துகின்றனர். உரிமை வாங்கி தருவேன் என்று முன் வரும் அரசியல் கட்சிகளும் எஸ்டேட் முதலாளியின் பினாமிகள் தான் இப்போது! கட்சி தலையீடு இல்லாத எஸ்டேட்டில் ஒன்று AVT.

அமைதிச்சாரல் said...

'டீ' கொள்ளாம்.. கேட்டோ :-)))

வடக்கே டீமசாலாவும் சேர்ப்பாங்க. நீங்க குறிப்பிட்ட வாடை அதானோ என்னவோ!!.

Post Comment

Post a Comment