header-photo

"மீனவர் மலையாளத் திரைப்படம் - "அமரம்" 
நடிகர் மம்மூட்டி நடிப்பில், பரதன் இயக்கத்தில் எ.கெ லோகிததாஸின் எழுத்தில் 1991 ல் வெளிவந்த மலையாளப்படம் ஆகும் “அமரம்”.  அமரம் என்பதற்க்கு  ‘மரணம் இல்லாதது’ என்றே அர்த்தம் கொள்ளப்படுகின்றது.  மம்மூட்டிக்கு பிலிம்பெஃயர் விருது  கெ.பி.எ.சி. லலிதா என்ற நடிகைக்கு சிறந்த குணச்சித்திர நடிகை என்ற தேசிய விருது வாங்கி தந்த படம் இது.  கேரளாவில் 250 நாள் ஓடிய படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
ஏற்கனவே கண்டுள்ள இப்படத்தை சில நாட்களுக்கு முன்பு மறுபடியும் காணும் வாய்ப்பு கிடைத்தது.   கதை தெரிந்ததால் சரி இந்த பாட்டு முடிந்து எழுந்து விடுவோம் என எண்ணி எண்ணி முழுப்படம் முடியும் வரை இருக்கையை விட்டு எழு தடுத்து விட்டது.   இப்படத்தின் கதையமைப்பு எடுத்த விதம் எல்லாமே அழகாகவும் சிறப்பாகவும் அதே போல் மிகைப்படுத்தாதும் எடுக்கப்பட்டிருந்தது.  மீனவர்களின் வாழ்கை அவர்கள் மொழி, உடை என நாமும் கொஞ்ச நேரம் கடற்கரையில் குடியிருக்கும் உணர்வை கொடுத்தது.  கதை ஒரு சாதாரண கதை தான் ஆனால் அதன் அமைப்பு தொடக்கம் நடுப்பகுதி, அதன் முடிவு என எல்லா இடத்திலும் மிகச் சிறப்பாக செல்கின்றது.

ஒரு அப்பா, அவர் தான் மம்மூட்டி, அந்த கடற்கரைக்கு தன் பெண் கைகுழந்தையுடன் வந்து சேருகின்றார்.  அங்கு ஒரு வீடு கட்டி தன் மகளை தோளிலும் கையிலும் மட்டுமல்ல தலையிலும் தூக்கி வைத்து வளர்க்கின்றார்.  பக்கத்து வீட்டில் கொச்சு ராமன்என்பவர் தன் மனைவி ஒரே மகன், மற்றும் தன் ஒரே ஒரு அழகான தங்கையுடன் குடியிருப்பார்.  மம்மூட்டிக்கு அவர் சகோதரனுக்கு சகோதரனாகவும் நண்பனுக்கு நண்பனாகவும்  இருக்கின்றார்.   மம்மூட்டி மகள் ராதாவும் சித்தப்பா சித்தி என பாசமுடன் அவர்களின் குடும்ப உறுப்பினர் போன்றே வளர்கின்றாள்.


மம்மூட்டிக்கு தன் மகளை படிப்பித்து டாக்டர்  ஆக்க வேண்டும் என்று ஒரு அதீத ஆசை!  அவர் மனைவியும் கடற்கரையில் மருத்துவர்கள் இல்லாததால் தேவையான சிகித்சை கிடைக்காமல் இறந்து போய் இருப்பார்.  மேலும் தன் மகள் கடற்கரை மக்களில் முதல் டாக்டர் ஆவதில் அவருக்கு ஒரு பெருமையும் இருக்கின்றது.   அவருடன் மீன் பிடிப்பவர்கள் அவரை பல விதத்தில் கேலி செய்வார்கள் ‘ஆமா நீ மீன் பிடிப்பவன் டாக்டர் ஆக்கி விடுவாயோ,  விரலுக்கு தகுந்து வீங்க வேண்டும், அதும் பெண் பிள்ளையை படிக்க வைத்து பெரிய ஆளாக்கி விடுவாயோ என .    இதனால் மம்மூட்டி  கடற்கரை ஆட்களிடம் பேசுவதையே தவிர்த்து தனிமையை விரும்பி வாழ்ந்து வருகின்றார்.  அவருக்கு தன் மகளை டாக்டர் ஆக்குவது என்பது வெறியாகவே இருக்கின்றது.  மகளுக்காக என தன் சுகம், ஆசை எல்லாம்  விலகி ஒரு குறிக்கோளோடு வாழ்கின்றார்.  அவர் மகளும் அப்பாவின் ஆசை போன்றே படித்து 10 ம் வகுப்புப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று தேர்வாகி அப்பாவுக்கு பெருமை சேர்க்கின்றார்.  அவரும் கடன் வாங்கி +2 விற்க்கு  மகளை சேர்த்து விடுகின்றார்.

மம்மூட்டி    அவர் நண்பன் மகன் படிக்கவில்லை என்ற காரணத்தால் அவனை இளக்காரமாகவே பார்க்கின்றார் மேலும் மகளுடன் அவன் நெருங்கி பழகுவதையும் அவர் விரும்பவும் இல்லை.  அவனோ அவர் மகளிடம் டண் கணக்கில் காதலோடு அவளை நினைத்து உருகி வாழ்கின்றான். மகள் ராதா அப்பாவின் ஆசை தெரிந்தே அவரை ஏமாற்றி கொண்டு ராகவனுடனும் காதல் கொள்கின்றாள். அப்பா தன் மகளை குழந்தையாக நினைத்து உனக்கு திருமண வயசு ஆயிட்டா என்று கேட்பதும் கதாநாயகி தன் காதனுக்காக தன் படிப்பை தூக்கி எறிய நினைப்பதும்  என உச்ச கட்ட விருவிருப்புடன் கதை செல்கின்றது.

அப்பா படிப்பு படிப்பு என்று இருக்க மகள் காதல் வழிந்து காமமாகி ஒரு நாள் அவனுடன் வீட்டை வீட்டு ஓடி கல்யாணம் முடித்து  காதலனின் வீட்டில் குடிபெயர்கின்றாள்.  அப்பா நொந்து நொறுங்கி  உடைந்து அழுகின்றார்.  அவர் இதய வேதனையை இயக்குனர்,  மகள் வளர்க்கும் மீன் தொட்டியை மம்மூட்டி தூக்கி எறிந்து உடைப்பதும் மீன்கள் உயிருக்கு என தரையில்  கிடந்து துடிப்பதை அவருடைய இதயத் துடிப்பாக ஒப்பிட்டு காட்டியுள்ளது நம் இதயவும் நாம் அறியாது கவலையால் துடிப்பதை உணரலாம்.

 அப்பா தன் மகள் டாக்டராக வருவாள் என கனவு கண்ட இடத்தில் மகள்  மீன் கூடையுமாக கடற்கரைக்கு  வருவதை காண்பது அப்பாவின் வேதனையை மேலும் கூட்டுகின்றது.

இதனிடையில் நண்பனின் தங்கை தன்னிடம் காதல் கொள்வதும் மகள் படிப்புக்கு இடைஞ்சல் ஆகி விடக்கூடாது என்று எண்ணி  தன் ஆசையை மூடிவைப்பதும் பின்பு நண்பனின் அனுமதியுடன் திருமணம் செய்ய உறுதி எடுப்பதும் மகள் காதலால் அவருடைய காதலியும் வேறொருவரின் மனைவியாகுவதும்  வேதனையான பக்கமாக  வருகின்றது.

தலைமுறைகளின் நடைவடிக்கையில் வரும் மாற்றங்களையும் மிக நுட்பமாக ஒப்பீடு செய்து காட்டியுள்ளார் இயக்குனர்! உதாரணமாக சகோதர உறவு என எண்ணிய இடத்தில் மகளுக்கு காதல் வருவதும் காதல் வர எல்லா சூழல் இருந்தும் குறிக்கோளுக்காக தன் காதலை தூக்கி எறிய நினைக்கும் அப்பாவும்;  மற்றொரு இடத்தில் தன் மகள் தன் நண்பனின் மகனுடன் ஓடி போய் கல்யாணம் முடித்தாலும் நண்பனின் அனுமதி இல்லாது அவர் தங்கயை மணம் முடிப்பது நண்பனுக்கு செய்யும் துரோகம் என எண்ணுவதும் தலைமுறைக்கு தலைமுறை சமுதாய மதிப்பீடுகள்  மாறுவதை அழகாக படம் பிடித்துள்ளார்.  அப்பா, மகள் படிக்க வேண்டும் என பிடிவாதமாக இருப்பதும் மகள் எந்த ஒரு பிடிப்பும் இல்லாது அப்பாவின் விருப்பம் எதுவோ அதுவெ என்னுடைய விருப்பம்  எனவும், தனக்கு காதல் வந்த பின்பு என்னவரின் ஆசையே என் ஆசை என கதைப்பதும் பெண்ணின் காலாகால அடிமை சிந்தனையை அடிவரை இட்டு காட்டியுள்ளனர்.

அப்பா தன் மகள் என்று உருகி உருகி அன்பு செலுத்தி தோற்ற போதும்,  தேவையான தருணத்தில் மகள், என் கணவரை நீங்கள் கொலை செய்திருப்பீர்கள் என பழி சுமர்த்துவது ‘பெத்த மனம் பித்தடா பிள்ளை மனம் கல்லடா என பாடவைத்தது.  கடைசி காட்சியில் மகள், காதலி, நண்பன்,  உறவுகள் எல்லாம் கேள்வி குறி ஆகிய நிலையில் மீனவனுக்கு  தாங்கு- ஆறுதல் எல்லாம் கடல் தான் என கதைத்து கொண்டு கடல் நோக்கி செல்லும் போது நம்மையும் மம்மூட்டி கலங்கவைக்கின்றார்.

மம்மூட்டியின் தோற்றம் மீனவராக பல பொழுதும் நம்மை நம்ப மறுக்க வைத்தாலும் அவர் உடல் மற்றும் பேச்சு மொழியாலும் நடிப்பாலும்  மீனவராகவே வாழ்ந்து நடித்துள்ளார்.  பல பொழுதும் அவர் மீன் பிடிப்பவர் என்று நம்ப வைக்க டாக்டர் என்பதை 'டாக்கடர்' என்று சொல்ல வைத்து நம்மை நம்பவைக்கின்றனர்.  விருது ஏதும் பெறவில்லை என்று இருப்பினும் மம்மூட்டியின் நண்பராக வரும் முரளி-கொச்சு ராமன் தான் அப்படியே அச்சு அசலாக மீன் பிடிப்பவராக தன் நடிப்பு  திறனை வெளிப்படுத்தியுள்ளார்.   அவர் மனைவியாக நடித்த கெ.பி.எஸ் லலிதா வின் நடிப்பு பல பொழுதும் நாம் படம் பார்க்கின்றோம் என மறக்க செய்து நம்மையும் ஒரு  கதாபாத்திரம் போன்று மூழ்க செய்தது.  வெத்தலை போட்டு கொண்டு  மீனவ பெண்ணாகவே மிக நேர்த்தியாக நடித்துள்ளார்.
இதே போன்ற படங்கள் இனி மலையாளத்தில் பார்ப்பது அரிது மட்டுமல்ல இனி வரவும் வாய்ப்பு இல்லை.   இயக்குனர் பரதன் , கதை ஆசிரியர் லோகிததாஸ், நடிகர் முரளி இவர்கள் மூவரும் வயது எட்டும் முன்பே காலா அவனிகைக்குள் மறைந்து விட்டனர்  என்பதே.
கடற்கரையை இவ்வளவு அழகாக ஒரு படத்திலும் காண இயலாது.  அதே போல் மீன் சந்தை, அவர்கள் வாழ்வியல் என அதை அது போல் படம் பிடித்துள்ளதும் இதன் சிறப்பே.  ரவீந்தரன் மெட்டில் படத்தின் ஒவ்வொரு பாடலும் மிக சிறப்பாக இருந்தது.
ஒரு சினிமா கதை என எண்ணி சமாதனம் அடைந்த நான் ஒரு அப்பா இவ்விதம் சூழலை தன் வாழ்க்கையில் உண்மையாக அனுபவித்ததை சோகத்துடன் என்னிடம் பகிர்ந்த  கொண்ட போது இப்படி பல அப்பாக்கள் துயரத்தில் உள்ளனர் என்பது எனக்கும் கவலையாக மட்டுமல்ல புதிராகவும் இருந்தது .

4 comments:

பயணமும் எண்ணங்களும் said...

கண்டிப்பா பார்க்க தூண்டுது உங்க விமர்சனம்..

அதிலும் மம்மூட்டினா ரொம்ப நல்லாருக்கும்..

சு.செந்தில் குமரன் said...

விவரம் தெரிய வந்த வயதில் திருச்சி சோனா தியேட்டரில் நான் பார்தது வியந்த படம் இது . மீண்டும் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளது உங்க எழுத்து

Pal murukan said...

பிரபல இயக்குனர் பரதனால் 28 நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது என்பது கூடுதல் வியப்பு..!

Pal murukan said...

பிரபல இயக்குனர் பரதனால் 28 நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது என்பது கூடுதல் வியப்பு..!

Post Comment

Post a Comment