header-photo

தாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்!

Image result for தாரை தப்பட்டைதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது.  ஒரு திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம் இருக்கலாம். அல்லது அதன் அழகியலை கலாச்சாரத்தை பண்பாட்டை விளங்க பண்ணலாம். ஆனால் தாரை தப்பட்டை இயக்குனரின் கதைக்காக  அல்லது காலுக்கு செருப்பு என்று அல்லாது செருப்புக்கு என காலை ஒட்டி வெட்டி அணிவது போல் இப்படம் பல இடங்களில் பல நம்ப இயலத்தகாத கதை பின்னல் கொண்டு செல்கின்றது.  முதல் பகுதியில் கொடுத்த ஓர் ஆட்ட உணர்வு அடுத்த பகுதியில்  விபத்து போன்று முடிந்தது. படம் ஒரு வகை அருவருப்பு பகை உணர்வு அச்சம் அசிங்கத்தையை விட்டு வைத்துள்ளது.  மனதை பண்படுத்த வேண்டிய கலை மனதை புண்ணாக்கி சென்றது. 

ஓர் மகளை திருமணம் முடித்து கொடுத்த பின்பு தாய்  மகளை சந்திக்காமலை இருப்பாரா? மகளுக்கு என்னவானது என்று கூடவா பார்க்க்காது இருப்பார். அவன் பெயரை தவிர்த்து கூறினது எல்லாம் பொய் என்று தெரிந்த பின்பு மகளை மீட்டு வர முயலமாட்டாரா? ஒவ்வொரு கதாப்பாத்திர படைப்பிலும் முரண்கள் நம்பகமின்மை மலிந்து வலிந்து கிடக்கின்றது. . 

கரகாட்டக்காரர்கள் முதல் தலைமுறை சன்னாசியின் தந்தையும் முழுக்குடிகாரராக இருக்கிறார் கதாநாயகியும் போகிற வருகிற மக்களிடம் எல்லாம் கேட்டு வாங்கி குடிக்கும் முழுக்குடிகாரியாக இருக்கிறார். கதாநாயகி குடிப்பது என்பதை பாலாவாலால் சீரணிக்க இயலவில்லையா அல்லது பெண்கள் தான் முழுக்குடிகாரிகள் என சொல்லவருகிறாரா என்றும் விளங்கவில்லை. குடி என்பது சில குறிப்பிட்ட தொழில்கள் சமூக பிண்ணணியில் உள்ள பெண்களிடம் எப்போதும் உள்ளது தான் என்ற உலக உண்மை தெரியாதா?

சன்னாசி  தன் மேல் காதல் வைத்திருக்கும் சூறாவளியை பாசமாக காதலாக நோக்குகிறாரா என்றால் கொச்சையான வார்த்தையில் திட்டும் எதர்க்கெடுத்தாலும் அடிக்கும் மாஸ்டர் போன்றே நடந்து கொள்கின்றார்.  சன்னாசி ஏன் எப்போதும் பறி கொடுத்த பண்டாரம் போல் முகத்தை வைத்து கொள்ள வேண்டும் என இயக்குனர் நினைத்தார் என தெரியவில்லை. 
தான் விரும்பும் பெண்ணை  வேறு ஒருவனுக்கு மணம் முடித்து கொடுக்க ஒத்து கொள்ளும் சன்னாசி,  கட்ட போகும் நபரை பற்றி விசாரிக்காது  ஒதுங்கி கொள்ளும் சுயநலவாதிக்கு கடைசி காட்சியில் வரும் கடைமை உணர்ச்சி தான் புரிந்து கொள்ள இயலவில்லை. 

கரகாட்ட காரர்களுக்கான உடை என்ற பெயரில் மிகவும் ஆபாசம் உணர்த்தும் உடைகளை அணிவித்து அனைத்து பாடல்களுக்கும் ஆட வைத்துள்ளார். 
கலையுடன் இயங்குபவர்கள் குழு மனநிலையில் இயங்குபவர்கள்; இவர்கள் வாழ்க்கை சூழல் மிகவும் தனி சார்பு கொண்டு விளங்குவதும், சராசரிக்கு மேலான மனமகிழ்ச்சி கொண்ட மக்களாகவே கண்டுள்ளோம்.  ஆனால் அனைவரையும்  எட்டி உதைக்கும் சூறாவளி கணவன் என்ற கயவனின் கையில் ஒரேடியாக ஒடுங்கி போவது நம்ப இயலவில்லை.


ஓர் கலையை முன்னெடுக்க அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த சில நல்ல தகவல்கள் இருந்திருந்தால் கூட இந்த படத்தை பற்றி ஏதேனும் குறிப்பிட்டிருக்கலாம்.  பெண்கள் ஏற்கனவே ஒடுங்க காரணிகளான பாலியல் வியாபாரம், குழந்தை பிறப்பு  என மிகவும் அச்சுறுத்தும் வகையில் புணைந்து கதையாக அமைத்து பெண் இனத்தையே பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். 

சூறாவளியை சந்திக்கும் சன்னாசி ரவுடி கும்பலிடம் இருந்து காப்பாற விளையாமல் எல்லா கதையும் கேட்டு கொண்டு  மறுபடியும் அடியும் வாங்கி  கடைசியில்  எல்லா கயவர்களையும் கொன்று விடுவாராம்!!!!

என்ன அபத்தமாக கதையாடல். இதற்கு பதிலாக பொல்லாதோரை சட்டத்தின் முன் கொண்டு வந்து விட்டு சூறாவளி கயவனால் கற்ப முற்றிருந்தாலும் பாதிக்கப்பட்டிருந்தாலும் காப்பாற்றி அவளுக்கு ஓர் நல்ல வாழ்க்கையை கொடுத்து நல்ல படியாக வாழ்ந்ததாக காட்டியிருந்தால் பெண்களுக்கு வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கலுகளுக்கு தீர்வு உண்டு என மனநிலை உருவாகியிருக்கும். 

தமிழக பெண்கள் அவ்வளவு கோழைகளா/ ஒரே ஓலம் அழுகை கொடூரத்தின் உச்சம் சில காட்சிப்படுத்தலுகள். ஒரு கயவனான கணவனை பழி வாங்க ஒரு பொட்டலம் விஷம் போதும் ஆனால் துள்ளி குதித்து நடந்த சூறாவளி கட்டிலின் விளிம்பில் அடித்து துவைக்கபட்டு  காயப்போட்டிருப்பது போன்று கட்டியிருப்பது பெண்களை மேலும் சிறுமைப்படுத்தும், அவல மனநிலையை வெளிகாட்டுவதாக  உள்ளது. சூறாவளியின் முடிவு கதையின் முடிவு எல்லாமே ரசிகனையும் மனப்பிளவு கொண்டு தியேட்டரை விட்டு வெளியேறவே உதவும். "தாரை தப்பட்டை"  கரகாட்ட கலைஞர்களில் உண்மை உலகத்தை விகாரப்படுத்தி விட்டது.  திரைக்கதையில் ஒரு சுவாரசியவும் இல்லை. எல்லா படங்களிலும் காணும் அதே காட்சி அமைப்பு அதே சண்டை.  விரசம் ஏற்படுத்தும் உரையாடல்கள் என பாலா "நல்ல ஓர் படத்தை கீழை போட்டு உடைத்து விட்டார்" என்ற வருத்தம் தாம் மேல் ஓங்குகின்றது. எதிர் மறையின் உச்சமாக தாரை தப்பட்டை உள்ளது. 

இளைய ராஜா பாடல்கள் மட்டும் தான் ஆறுதலாக அமைந்தது.     சூறாவளியாக நடித்த வரலட்சுமியின் நடிப்பு அபாரம்.  பாலாவின் பிரச்சினையே அதீத உணர்ச்சிக்கு உள்ளாகுதல் தான். இதே பிரச்சினை தான் பரதேசியிலும் கண்டோம். 
பாலா தயவாய்  ரொம்ப உணர்ச்சிவசப்படாம ஒரு படமாவது அடுத்து எடுங்க 


1 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

சரியான ரிவியு...

பாலா மாற வேண்டும்..

Post Comment

Post a Comment