header-photo

என் பூந்தோட்டம் சொல்லும் கதைகள்............................காலையில் அவசரமாக ஒரு பயணத்திற்க்கு தயாராகி கொண்டிருக்க  எங்கள் வீட்டு நுழைவு வாயில் பக்கம் இருந்து அக்கா என்று ஒரு விளி !  எட்டி பார்த்தேன் ஒரு பெண், உண்மையிலே என் அக்கா வயதுள்ளவர் ஒரு மிதி வண்டியில் மகனின் உதவியுடன் ஒரு பெரிய கட்டு துணி பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தார்.  நானும் என்னவென்று விசாரித்து கொண்டே வாசல் பக்கம் வந்தேன். 


பெண்கள், குழந்தைகளுக்கு   இரவு உடுப்பு விற்கின்றாராம்.   துணியை வாங்கி பார்க்க ஆவல் தான். வீட்டினுள்ளில் இருந்து ‘ லொள்’ என்ற எச்சரிக்கை ஒலி எந்த நேரவும் வந்து தாக்கலாம்  என்பதால்   “ அக்கா பின்பு காணலாம்  நான் தற்போது அவசர வேலையில் உள்ளேன்” என்றேன் அவரிடம்.  அவர் வீடும், என் வீடு தள்ளி 10-15 வீடு தள்ளி இருப்பதாக அடையாளம் கூறினார்.   ‘புரிந்தது இடம்’, உங்களுடைய வீட்டில் வந்து நோக்கி கொள்கின்றேன் என்றேன்.  அவரை எதிர் வீட்டு பெண்கள் 10 மணிக்கு மறுபடியும் வர சொல்லியுள்ளதாகவும் தெரிவித்தார். ஒரு கை குட்டை வாங்க கூட 8 மைல் தூரம் பயணிக்க தயங்காதவர்கள் பக்கத்து தெரு பெண்ணிடம் ஒரு பொருள் வாங்க இந்த வெட்டி பந்தா தேவை தானா? என்று மட்டும் நினைத்து கொண்டேன் .  எங்கள் தெருவில் மண் காலில் படாத அரச பரம்பரையை சேர்ந்த  பெண்கள் யாரும் இல்லை.  வெட்டியாக தொலைகாட்சி பார்த்து கொண்டு இருப்பவர்கள் தான் பலரும்.  நடைபயணம் செல்லும் போது கூட வாங்கலாம்.  இருப்பினும் பொருட்கள் விற்க வருபவர்களிடம் ஒருமேட்டிமை காட்டி கொள்வது வழியாக தங்களை பெரிய ஆட்களாக காட்டி கொள்ள தயங்குவது இல்லை இவரை போன்றவர்கள்.


என்னுடைய அனுபவம் கூட இப்படியாகத் தான் இருந்தது சுயமாக ஒரு தொழிலில் கால் ஊற்ற வேண்டும் என்று முடிவெடுத்த போது!  எங்கள் வீடு கட்டி முடித்த வேளையில் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் இருந்து விடுபட்டு வெட்டியாக வீட்டிலிருந்தேன்.  வீட்டை சுற்றி போதிய இடம் இருந்ததால் வீட்டிலிருந்தே செடிகள் வளர்ப்பதுடன் விற்றும் கொஞ்சம் காசும்  பார்த்து விட ஆசை வந்தது.


உடனே ஒரு வாகனத்துடன்  நாகர்கோயிலில் ஒரு பெரிய பூந்த தோட்டதை வந்து அடைந்தோம். அது ஒரு பூந்தோட்டம் அல்ல ஏதேன் தோட்டம் என்று சொல்ல வைத்தது அதன் அழகு!  ஒவ்வொரு செடியும் அதிலுள்ள பூவும் ஒவ்வொரு நிறம், அதன் வடிவு, தன்மை என திக்கு முக்கு ஆட வைத்தது.  விலை விசாரித்த போது ஒரு செடிக்கு 10 ரூபாய் என்றால் 20 செடியாக சேர்த்து வாங்கினால் ஒரு செடிக்கு 2 ரூபாய் என்றும் அறிந்த போது எங்கள் பரம்பரை தொழிலான வியாபாரத்தில் இணைந்து ஒரு பெரும் தொழில் முனைவர் ஆகிவிடலாம் என்று ஆசை கொளுந்துவிட்டு எரிந்தது.    ஒவ்வொன்றிலும் 10-20 என்று வாங்கி வந்தேன். 
பராமரிப்பு வேலை, தண்ணீர், மின்சாரம், செம்மண், இத்தியாதி செலவு தான் ‘புலி வாலை பிடித்து விட்டேனோ’ என்று எண்ணம் கொள்ள செய்தது.   திருநெல்வேலி சுடும், கொடும் வெயில் சில செடிகளுக்கு அதன் உயிரையை பறிப்பதாக இருந்தது.  சில செடியின் தோற்றம் பூந்தோட்டத்தில் கண்ட அழகு இங்குள்ள கால-சூழலுக்கு இருந்ததாக தெரியவில்லை.   சில செடிகளுக்கு குளிர்மையான சூழலுக்கு என தென்னை ஓலையில் கூரையும்  வேண்டி வந்தது.

 செடி கொண்டு வந்த மறு நாள் காலையில் என் வீட்டிலிருந்து 5 வீடு தள்ளி இருக்கும் 'ஏரியா- தாதா' பெண் வந்து “ நீங்கள் நர்சரி ஆரம்பிப்பதை பற்றி ஒன்றும் என்னிடம் சொல்ல வில்லை, எல்லோரையும் அனுசரித்து போக கற்று கொள்ளுங்கள்” என்று  எச்சரித்து  விட்டு அவர் தயவில் செம்பரத்தியில் 2 செடி,  இட்லி பூவில்  1 செடி என்று வாங்கி விட்டு, அடுத்த மாதம் மாமாவுக்கு(கணவர்) சம்பளம் போட்டவுடன் இன்னும் செடி வாங்கி விட்டு காசு தருகின்றேன் என்று சொல்லி வைத்தார்.   விடைபெறும் முன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தாங்கும் தெய்வ்ம் போல் கரிசனையுடன் “ நான் தான் கூழ்வத்தல் விற்க என வெயிலோடு மல்லடிக்கின்றேன் உங்களுக்கு என்ன நோக்காடு இந்த வீணா போன வெயிலில் மண்ணுடன்... என்று பாச மழை பொழிந்து விட்டு இந்த செடி கொடி எல்லாம் உங்களுக்கு பெருத்த நஷ்டத்தை தான் தரவுள்ளது என்று தன் ஆசிர்வாதத்தை இட்டு சென்றார்.  பின்பு நான் அறிந்தேன் அவர் தன் நட்பு வட்டத்தில் என் செடி வியாபரத்தை தடுக்கும் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ளார்  என்று!                                                                                                                                                                                                                        
                                                                                                                                                                                                       சில பெண்கள் என் தோட்டததை காண ஏதோ கண்காட்சிக்கு வருவது போல் வந்து சென்றனர்.  சும்மா நடைபயணம் வந்தேன்  என்ன செடி வைத்திருக்கின்றீர்கள் என்று பார்க்க வந்தோம் ஊட்டி ரோஜா இருந்தா தான் வேண்டும் இப்படியாக என்னிடம் இல்லாத செடியின் முகவரியை கேட்டு கடுப்பு ஏற்றி சென்றனர் .
                                                                                                                                                                                                                                                       
 சில பெண்களோ இந்த பூஞ்செடி வைத்து என்ன பலன்? மின்சாரம் தண்ணீருக்கு தன் வந்த கேடா என சமூக உணர்வோடு கேள்வி கேட்டனர்? காய்கறி, பழம் செடி இருந்தால் வாங்கி கொள்வோம் என்றனர். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க செவ்விழனி, மாங்கனி, நெல்லி,  நாரத்தம் போன்ற  செடிகள் வருவித்தேன்.   கேட்டவர்கள் பின்பு அந்த வழி காணவில்லை.   ஆனால் செடியை பற்றிய சாஸ்த்திரங்கள் கற்று கொண்டேன்.  செவ்விழனி கோயிலில் மட்டும் தான் வளர வேண்டுமாம்,  வீட்டில் வளர்த்தால் வீடை கட்டமண்ணாகி விடுமாம்.   எலுமிச்சை, நெல்லி , முருங்கை போன்ற செடிகள் வீட்டு முன் பக்கம் வைக்க கூடாது என்ற அறிய கேட்டேன்.  மல்லிகை பூ செடியை வேண்டவே வேண்டாம் நல்ல பாம்பு வந்து இனாமாக  சட்டையை கழற்றி போட்டு படம் பிடிக்குமாம் என பல வித கதைகள் கதைத்தனர். இன்னும் சில பெண்களுக்கு செடி பிடிக்குமாம் ஆனால் அவர்கள் கையில் மண் பட்டால் அலர்ஜி எனபதால் நான் மண்ணுடன் சாணி எல்லாம் சேர்த்து செடியை நட்டு கொடுத்து செடியை பராமரித்தும் தந்தால் வாங்கி கொள்வதாக  சொன்னார்கள்.  நொந்து நூடில்ஸ் ஆகுவது எப்படி என்பதை அனுபவத்தால் புரிந்தது.  ஆனாலும் துன்பம் வரும் போது சிங்கம் போல தனி தனியாகவா வரும்  கூட்டத்தோடு அல்லவா வந்தது.  

சில பெண்கள் வந்து தங்கள் சோகக்கதையை கதைத்தனர்; அவர்களுக்கு செடி என்றால் உயிராம் ஆனால் மண் பட்டு அவர்கள் டைல்ஸ் தரை எல்லாம் அழுக்கு ஆகுவதால் பூந்தொட்டிகள் வாங்கி தந்தால் நலமாயிருக்கும் என்றனர். எனக்கு தான் வலது கரமாக  அத்தான் உள்ளாரே; செடிகளையும் விற்க வேண்டும் என்ற நோக்கவும் இருந்தது. என்னவரையும் அழைத்து நெல்லை அருகிலுள்ள கூனியூர் போய் குட்டியானையில் (அது ஒரு சிறிய ரக லாரி) பூந்தொட்டிகள் மட்டுமல்ல குடி தண்ணீர் வைக்கும்  அழகான பானைகளும் வாங்கி வந்து வீட்டு மாடியில் அடுக்கி வைத்தேன். பூந்தொட்டி வாங்க வந்தவர்கள் துணிக்கடையில் பெண்கள் முந்தானைக்கு டிசைன் பார்ப்பதை விட காத்திரமாக உற்று நோக்கினர் அந்த மண் பூந்தொட்டிகளை!  இது ரொம்ப குண்டு, இந்த கரைப் பக்கம் இப்படி இருந்தால் இன்னும் நல்லது, இதன் வாய் கொஞ்சம் சிறிதாக இருந்திருக்கணும் என்று ஆளாளுக்கு பெண் பார்க்க வந்து விட்டு சொல்லி விட்டு செல்லுவது போல் சென்றனர்.  இன்னும் ஒரு அறிவான அம்மா வந்தார் 10 தொட்டி வாங்கினால் 3 இனாமாக தரலாம் அல்லவா என்று நச்சரித்து கேட்டு கொண்டிருந்தார்.  தொட்டி விற்றதோ இல்லையோ அது மாடியில் ஆடி மாச காற்றில் ஆட ஆட  எத்தனை தொட்டி உடைந்ததோ என்று என் இதயம் தான் நிதம் நிதம் உடைந்து கொண்டே இருந்தது.                                                      
சுகமாக பகல் நித்திரை கொண்டு நிம்மதியாக இருந்த எனக்கு இரவு உறக்கவும் கெட்டு குட்டி சுவரானது.  விடியும் முன் மாடியில் போய் பூந்தொட்டிகளின் நலம் விசாரிக்க உந்த பட்டேன்.
                                                                                                                                                                                                              சில பக்கத்து வீட்டு பெண்கள் தங்கள் ஆறுதலை தந்து விட்டு  இனாமா கொடுத்தா கூட மண் தொட்டிகள் எங்களுக்கு வேண்டாம் ‘சிமின்று தொட்டின்னா எங்கள் பேர குழந்தைகள் காலம் வரை இருக்கும்’ என்று கூறி சென்றனர்.  ஒரு நாள் அழகான இளம் பெண் கழுத்து கையில்  25 சவரன் நகையுடன் பூந்தொட்டி செடிகள்  வாங்க வந்திருந்தார். 100 ரூபாய்க்கு வாங்கிய பூந்தொட்டிக்கு பதில்  85 ரூபாய் மட்டும் தந்து விட்டு  பையன் வரும் வழியில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டு விட்டான். பையனிடம் பின்பு  கொடுத்து விடுகின்றேன்  என்று கூறி சென்றார். அந்த பையனோ, என் குட்டி பையனுடன் இன்றும் வீட்டிற்க்கு  விளையாட வந்து தான் செல்கின்றான் ஆனால் பணம் மட்டும் இன்னும் வந்து சேரவில்லை.

 மக்களை காக்கும் உயிர் நண்பனாம் காவல் அதிகாரி  எங்கள் பகுதிக்கு; ரோந்துக்கு வருபவர் என் பூந்தோட்டத்திற்க்கு வந்தார்.  செடியை கண்டு  பூரிப்படைந்து  ஒரு விருது தான் எனக்கு வாங்கி தரவில்லை ஆனால் புகழ்ந்தார் புகழ்ந்தார்  வான எல்லைமட்டும் புகழ்ந்தார்!   அப்படியே சொன்னார், சகோதரி செடி வளர்ப்பது என்பது பணம் ஈட்டும் தொழிலாக நாம் ஒரு போதும் பார்க்க கூடாது இதில் ஒரு மன மகிழ்ச்சி ஆன்ம திருப்தி உண்டு!  காக்கி யூனிபார்முக்கு உள்ளும் இப்படி ஒரு கலை இதையமா என்று நான் நினைக்கும் முன் தன் கால்ப்படி, கைப்படி  போலிஸுகளை அழைத்து, உரமிட்டு கொழு கொழு என்று வளர்த்து வைத்த பல செடிகளை எடுத்து தன் வாகனத்திற்க்குள் வைக்க சொன்னார்.  இனாமாகவா என்று கலங்கி நிற்கையில், பையில் கைவைத்து கொண்டு எவ்வளவு தர வேண்டும் என்றார் நானும் 850 ரூபாய் என்றேன். ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து நீட்டி விட்டு “மனைவிக்கு பூஞ்செடினா ரொம்ப பிடிக்கும்” என்று தன் மனைவிக்கு செடியால் மரியாதை செலுத்த போவதாக தெரிவித்து கொண்டு மீதம் தொகையை மறுபடி வரும் போது தருவதாக கூறி விடை பெற்று சென்றார்.  சமீபத்தில் D.I.G  ஆகி மாற்றலாகி போயுள்ளார் என்று பத்திரிக்கை செய்தி வழியாக அறிந்து கொண்டேன்.  போலிஸ் நிலையம் போய் கேட்கவும் பயம் மறுத்து விட்டது பின்பு நானே ஒரு பெட்டி கேஸ் ஆகிவிட்டால்!

அழகா, அமைதியாக என்னவரிடம் மட்டும் வம்பு தும்பு செய்து கொண்டு  நிம்மதியா தூங்கி எழுந்த எனக்கு,  சுயமாக நானும் சாதிக்க வேண்டும் என்று எண்ணிய போது நான் கண்ட பாதைகள் மிகவும் கொடூரமானதாக இருந்தது. செடிகள் வாங்க வரும் பெண்- ஆண் மனநிலைகள் ஒரு ஆய்வு கட்டுரைக்கு என்ற வண்ணம் தெரிந்து கொண்டேன்.
                                                                                                         ஒரு கல்லூரியை ஒரே நாளில் அழகு படுத்த வேண்டிய சூழலில் ஒரு பூந்தோட்ட அமைப்பாளர் மொத்தமாக செடிகள், பூந்தொட்டிகள் எடுத்து செல்லும் வரை என் துயர் ஓயவில்லை ! 
                                                                              பேசாது தமிழக சுய உதவுக் குழுவில் சேர்ந்திருந்தால் கூட ஒன்றுக்கு இரண்டு குழுவில் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுத்து ஒரு பெரும் தொழில் அதிபராக ஆகியிருப்பேன்.  அத்தானின் கொஞ்சம் பணத்தை குளத்தில் போட்டு குஞ்சு பொரிக்கும் என்று காத்திருந்தது தான் மிச்சம்!!! "பச்சை தாழ்வாரம்" (Green wally) என்ற என் பூந்தோட்ட பெயர் பலகையை எங்கள் ரிக்கி நாய் குட்டிக்கு கூரையாக்கி விட்டு என் கூரைக்குள் நிம்மதியாக இருந்து இப்போது வெட்டியாக என் மந்திர பெட்டியுடன்  என் பொழுதை போக்குகின்றேன் !

23 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நூடுல்ஸும் கூட ரொம்ப குழைந்து வெந்த கதையாகி இருக்கும்போலயே..
\\இரண்டு குழு..
வட்டிக்கு பணம் விட்டு.. தொழில்முனைவர்..//

:)))

Pathman said...

அது தான் தமிழன் , புது முயற்சிக்கு ஒருநாளும் ஆதரவு தரானே ... நானும் இங்கு ஹிப்னாடிச வேலை தொடங்கினேன் ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழரே வந்தார்கள் மிகுதி முழுவதும் வெள்ளைக் காரரே ..தமிழனுக்குத்தான் உதவி தேவைப்படுகிறது..ஆனால் என்னொரு தமிழனிடம் போகத் தயாரில்லை ...இது பலரின் அனுபவம் தான் ...நல்ல பதிவு...

சி.பி.செந்தில்குமார் said...

உங்க பூந்தோட்டம்-ம் கதை தான் சொல்லுதா? அவ்வ்வ்வ்வ்வ் இருங்க படிச்சுட்டு வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

அடடா. நல்லாருக்கு பதிவு.

Thangasivam B.Pharm,M.B.A,DPH said...

நாகர்கோவில் ராம்ஜி நர்சரி முதலாளி கூட முதலில் மிக மிக சிறிய முதலீட்டில் தான் நர்சரி ஆரம்பித்து இன்று மிக பெரிய தோட்டமே வைத்துள்ளனர் ஆகவே முயற்சியை கைவிடாதீர்கள்.முயற்சி செய்யும் போது முட்களில் நடப்பது போல தான் இருக்கும் ஆனால் வெற்றி பெரும்போது ரோஜா மலர்களில் நடப்பது போல இருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

வண்ணங்கள் மிளிர
சுகந்தங்கள் சூழ
மலர்த்தோட்டத்தில்
மனங்குளிர உலவினேன்.
நன்றி

பிரபாஷ்கரன் said...

/ஒரு நாள் அழகான இளம் பெண் கழுத்து கையில் 25 சவரன் நகையுடன் பூந்தொட்டி செடிகள் வாங்க வந்திருந்தார்./
இந்த வரிகளை ரசித்தேன் எப்படி 25 சவரன் என்று சரியாக கண்டு பிடித்தீர்கள் ..ஹா ஹா

J.P Josephine Baba said...

பிரபாஷ்கரன் ...எப்படி 25 சவரன் என்று சரியாக கண்டு பிடித்தீர்கள்// எல்லாம் ஒரு கணக்கு தான் சகோதரா தாலி கொடி-11,துணைமாலை 5, கம்மல்+மோதிரம்+1,வளையல் 8 சவரன் இருக்கும் தானே? ....ஹா..ஹா..

தமிழ்வாசி - Prakash said...

பேசாம நீங்க நூடுல்ஸ் செஞ்சு வித்திருந்தா நல்லா லாபம் பார்த்திருக்கலாம்.

தமிழ்வாசி - Prakash said...

சகோ... என்ன இந்த மாற்றம்... கமென்ட் போட்டுட்டு refresh பண்ணினால் டெம்ப்ளேட் மாறியிருக்கு... அழகான டெம்ப்ளேட்.

Anonymous said...

தங்கள் கதை படித்தேன. வீட்டினுள் இருந்து களைகள் வந்தால் நீங்கள் கேடையங்களைத் தயார் செய்யுங்கள். மாறாக நீங்களும் ஈட்டியை தயார் செய்தால் இங்கு ஒரு போர்ச் சுழல் ஏற்படும். + கங்கைமகன்.

DrPKandaswamyPhD said...

மொத்தமா ஒரு பதிவுக்குத்தான் ஆச்சு உங்கள் முயற்சி. கொஞ்சம் விலை உயர்ந்த பதிவுதான்!

jay said...

அருமையான புதிய முயற்சி...!
உங்களுக்குக் கிடைத்த அனுபவ பயிற்சி...!
மணம் வீசிய உங்கள், தோட்டத்தை நான் மிகவும் ரசித்தேன்...!

john said...

நல்லா இருக்கு

சு.செந்தில் குமரன் said...

யதார்த்தம் , மெல்லிய நகைசுவை , ரசனை , வாழ்வியல் எல்லாவற்றின் வழியேயும் நடந்து குறையுள்ளவர்களையும் 'கடிதோச்சி மெல்ல எறிந்து' கனமான சோகத்தை கோஅ மென்மையாக சொல்லி அதன் மூலம் மனித மன வக்கிரங்களை கண்ணியமாக சாடும் கட்டுரை . அருமை

J.P Josephine Baba said...

என் பதிவுக்கு வருகை தந்ததுடன் உங்கள் விலைமதிப்பற்ற பின்னூட்டங்களையும் தந்து உற்சாகம் அளித்த என் அன்பு உள்ளங்களுக்கு நன்றி நவிழ்கின்றேன்!

bogan said...

நல்லா இருக்கு ஜோசெபின்..எந்த ஒரு முயற்சியிலும் இரண்டு தொடக்கங்களை எதிர்கொள்ளலாம்.ஒன்று beginners luck என்பது.ஆரம்பித்த உடனே எல்லாமே நல்லதாக நடக்கும்.அதன் பிறகு ஒரே வறட்சிதான்.மற்றது உங்களுடையதைப் போன்று எல்லாமே எதிர்மறையாக.கொஞ்சம் தாக்குப் பிடித்தால் மெதுவாய் வளைவு திரும்பி வண்டி மேலே ஏறும்.எல்லா பெரிய வெற்றிகளின் பின்னாலும் தோல்விகளின் பின்னாலும் இந்த நிலைகள் உண்டு.

Guna said...

ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..


ஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...

வலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..


அதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்


நன்றி
http://vallinamguna.blogspot.com/

சீனி said...

fine

Anonymous said...

என் முதல் விசிட்...கலக்கல் பதிவு...என் வாழ்த்துக்களை பிடியுங்கள்...

அமைதிச்சாரல் said...

கதைகள் ரொம்ப நல்லாத்தான் இருக்கு.. பூவுடன் கூடவே முள்ளும் இருப்பதில்லையா.. அதுமாதிரித்தான், லாப நஷ்டம் சேர்ந்ததுதான் பிஸினஸ். நமக்கு கிடைக்கும் அனுபவங்கள்தான் லாபம் :-)))

ரேவதி மணி said...

சகோதரி ஜோ இந்த புதிய முயற்சி யினால் உங்களுக்கு ஒரு படிப்பினையும் அழகான ஒரு தோட்டமும் கிடைத்தது எண்ணி சந்தோஷப்படுங்கள்.எங்களுக்கும் ஒரு அழகான பூந்தோட்ட கதை கிடைத்தது அல்லவா!

kumaraguruparan said...

ஆசைஆசையாகப்பூந்தோட்டம் அமைத்து நர்சரி தொழிலாக மாற்றியதன் அனுபவங்கள் படிப்பினைகளை எள்ளல் தொனிக்க ஜோசபின் கதைப்பது படிக்க சுவாரசியம்தான்!

Post Comment

Post a Comment