header-photo

மாத்தூர் தொட்டி பாலம்!-திருவனந்தபுரம் வேளி-சங்குமுகம்
மாத்தூர் தொட்டி பாலம் நோக்கி நாங்கள்  போய் கொண்டிருக்கின்றோம்.  இது 1966 ல் காமராசர் முதல் அமைச்சராக இருந்த போது,  திருவட்டார் பஞ்சாயத்தை சேர்ந்த பகுதியில் கட்டபட்டதாகும்.  ஆசியாவிலே மிகவும் உயரம் ஆனதும் நீளமானதுமான இப்பாலம்,   115 அடி உயரம் கொண்ட   28 தூணுகளின் மேல்  1240 அடி ( 1 கி.மீ) நீளமும் 7 ½ அடி வீதியிலும் இரண்டு மலைகளை இணைக்கும் பாதையாக கட்டப்பட்டுள்ளது.  சுற்றலா பயணிகளின் கவனத்தை கவரும் விதம் அழகாக காட்சி  தரும் மாத்தூர் தொட்டி பாலம்   விளவம்கோடு, கல்குளம் என்ற இரு கிராமங்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதம் ‘பறழியார்’  என்ற நதியின் மேல் கட்டப்பட்டுள்ளதாகும். 

பாலத்தின் ஊடாக நடப்பது என்பது திகில் கொண்ட பயணம் போல் இருக்கின்றது.  மேலிருந்து கீழ் பக்கம் நதியை நோக்கும் போது தலைசுற்றுவது போல் தோன்றினாலும் 'ஹிட்சுகாக் படத்தின் ஹீரோ’ போல் பெருமிதத்துடன் ஒரு நடை பயணம் செல்லலாம்.  பாலத்தில் இருந்து  கீழ் பக்கம் இருக்கும் நதியின் கரையில் இறங்கி செல்ல படிகளிலான பாதை உண்டு.  அங்கு குழந்தைகளுக்கு விளையாட என ஒரு சிறிய பூங்காவும் பாதுகாக்கின்றனர் .  சில தமிழ் படங்கள் இப்பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமான நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு  நடந்து செல்கின்றனர்.  வெயில் காலமான பிப்ரவரியிலிருந்து மே மாதம் வரை இங்கு தண்ணீர் இல்லாதிருப்பதால் நாங்கள் செல்லும் போது தண்ணீர் இல்லாததும் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதையும் காண முடிந்தது.  மேற்க்கு தொடர்ச்சி மலையின் பகுதியான மகேந்திர மலையில் இருந்து உருவாகும் தண்ணீர் ஆகும் இது என்பதும் விவசாயத்திற்க்காக இத் தண்ணீரை பயண்படுத்துகின்றனர் என்பதும் இதன் சிறப்பு!


இப்பாலத்திற்க்கு செல்ல திருவனந்தபுரத்தில் இருந்து 60 கி.மீ அதே போல் கன்னியாகுமாரியில் இருந்து செல்ல 60 கி.மீ  தூரமும் உண்டு. இப்பாலம் கட்ட செலவாக்க பட்ட தொகை 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும். பயணிகளிடம் கட்டனம் ஏதுவும் வாங்க வில்லை என்பதும் பயணிகளுக்கு என நல்ல வசதி செய்து கொடுக்கப்படுவதும் கவனிக்கப் படவேண்டியதே.

போகும் வழியாவும்  செடி கொடிகளால் கேரளாவின் தனி அழகில் நாஞ்சில் நாடு காட்சி தருகின்றது. நம்மவர்கள், அன்னாச்சிப் பழம் செடி வைத்தால்  நல்ல பாம்பு படம் எடுத்து விடும் என்று படம் காட்டுவது உண்டு. இங்கோ வீட்டுக்கு வீடு சுற்று சுவர்  போன்று அன்னாச்சி பழம் செடி உள்ளது.

இங்கு நெல்லையில் 25 ரூபாய்க்கு வாங்கும் அன்னாச்சி பழம் 10 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கு வாங்கும் இளநீர் 10 ரூபாய்க்கும்  குறைந்த விலையில் கிடைக்கின்றது. மேலும் நாகர்கோயில் பழமான ஆயினி பழம், சாமங்கா போன்றவையும் வளமாக கிடைக்கின்றது. பெண்களுக்கு நல்லதொரு தொழில்வாய்பாக அமைகின்றது இப்பாலம்.


பசி மயக்கம் ஆரம்பித்தது.  மார்த்தாண்டத்தில் ஒரு உணவகத்தில் உணவருந்தினோம். எங்கள் மேஜைக்கு எதிர்பக்கம் இருந்த ஒரு பெண் போலிஸை விழுந்து விழுந்து கவனித்த சர்வர் எங்களை கண்டும் காணாதது போல் பாவித்தார். போலிஸ் பெண் மணி பழைய பற்றில் சேர்த்து விடு என்று விடை பெற்று சென்ற பின்பே எங்கள் அருகில் வந்தார்.  பிரியாணி,  புரோட்டா என்று வயிற்றை நிரப்பி அடுத்து சிதரால் கோயில் நோக்கி சென்று கொண்டிருந்தோம். திருவனந்தபுரத்தில் இருந்து 80 கி.மீ உம் கன்னியாகுமாரியில் இருந்து 45 கி.மீ தள்ளி உள்ளது இக்கோயில்.

மார்தாண்டத்தில் இருந்து 7 கி.மீ பயணம் செய்து சிதறால் வந்தடைந்தோம்.  மலை உச்சியில் சிறிய புள்ளி போன்று தெரிந்தது. அழகான காட்சியாக இருந்தது, பார்க்கும் திசை எங்கும் பரவசம் மூட்டும், பூமி பச்சை போர்வை விரித்து கிடக்கும் போல் உள்ளது. மிகவும் சிரமத்துடன் வழி கேட்டு கேட்டு தேடி கண்டுபிடித்து வந்து சேர்ந்தோம்.  7 ம் நூற்றாண்டுவரை முனிவர்கள் இக் கல்குகைகளை தங்கள் வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் 13 ம் நூற்றாண்டில் இது பகவதி கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.  7வது நூற்றாண்டிலுள்ள கல்வெட்டுகள் காணும் நோக்கில் இருந்த எம்மை, மலை அடிவாரத்தில் இருந்து அழகான படிகள் மேலை கூட்டி செல்ல காத்திருக்கின்றது.  ½ கி.மீ நடந்து போய் கொண்டிருந்தோம். மழை இதோ வந்து கொண்டு இருக்கின்றேன் என்று குரல் எழுப்பி கொண்டு வந்து கொண்டிருந்தது.  மேல் பக்கம் போகவா கார் பக்கம் போகவா என்று கலங்கி நின்ற போது 5-6 இளைஞசர்கள் குப்பியும் பொதியுமாக வெடி கொண்ட பன்றி போல் புதர் உள்ளில் இருந்து தாவி வெளியில் ஓடி  வந்தனர்.  கையில் இருப்பது மலைத் தேன் அல்ல,  தமிழக அரசுவின் மயக்க ரசம் என்று மட்டும் புரிந்தது.  அவர்களை படம் பிடிக்க காமராவை தயார்செய்யும் முன் மழை பலமாக பெய்ய ஆரம்பித்தது.  நாங்களும் அவர்கள் பின்னால் ஓடி வந்து காரில் ஏறி கொண்டோம்.

 இனி எங்கள் பயணம் திருவனந்தபுரம்  வேளி-சங்குமுகம் கடற்கரை நோக்கி போய் கொண்டிருந்தது.  திருவனந்தபுரம்  கேரளா தலைநகரம் என்று  தலைக்கனம் ஏறாது எளிமையான பட்டிணம்.  வழி நெடுக பூத்து குலுங்கும் மரங்கள், விஷு வருவதால் கொன்னை பூக்களும் பாதைக்கு அழகு சேர்த்தது.  தேர்தல் காலம் என்பதால் கேரளா தலைவர்களும் வழி சுவர்களில் அக்மார்க்கு சிரிப்புடன் நம்மை வரவேற்றனர். கோயிலுகளில் சிறப்பு ஆராதனை, ஆலயங்களில் ஜெபக்கூட்டம் என மக்கள் பக்தியில் திளைத்து கொண்டு இருந்தனர்.   வழி நெடுக தலைவர்களும் தொண்டர்களும் கொடி பிடித்து சிந்தா பாத் இட்டு சென்று கொண்டிருந்தனர்.  திருவனந்தபுரம் விமானத் தாவளம் பக்கம் வந்து விட்டோம்; இனி 3 கி.மீ தான்.  மணர்காடு என்ற ஏரியாவில்  வந்த போது கேரளா கடவுளின் தேசம் மட்டுமல்ல சேரிகளின் நாடும் தான் என்று புரிய வைத்தது. தமிழகத்தில் காணப்படுவது போல் சுத்தமற்ற தெருவுகள் வசதியற்ற வரிசை வீடுகள், களையற்ற மக்கள் என கேரளாவின் எதிர்பாராத  இன்னொரு முகவும்  தெளிய   துவங்கியது.   


அழகான குடியிருப்புகள், விருந்தினர் குடியிருப்புகள்  தெரிய தொடங்கியது. வேளி என்ற கடற்கரையில் 19 கி.மீ ரோட்டின் இருகரையிலும் சங்குமுகம்  வியாபித்துள்ளது.  ஒரு நபருக்கு ஒரு நாள் முழுக்க  5 ரூபாய் மட்டுமே கட்டணம்.   கடற்கரையில் அழகான ஒரு பூங்கா, கேரளா கலை ரசனையுடனான அழகிய  சிற்பங்கள், மிதக்கும் உணவகம், மிதக்கும் பாலம் என மொத்ததில் கேரளா அழகுணற்ச்சியுடன் அமைத்திருந்தனர்.  


ஏதேன் தோட்டத்தில் குடிபுகுந்தது போல் இருந்தது. அதற்கு ஏற்றது போல் மனித இணைக்குருவிகள் மரத்தடியில் கொஞ்சி கொண்டும் சிலர் கவலை மறந்து நிம்மதியாக மரத்தடியில் தூங்கி கொண்டும் சிலரோ அதீதமான சிந்தனையில் மரத்தடியில் குந்தியிருந்தனர். குழந்தைகளுக்குக்கும் பெரியாவர்களுக்கும் என 50 ரூபாய்க்கு குதிரை சவாரியும் உண்டு. என் குழந்தைகள்கும் 50 ரூபாய் கொடுத்து இந்நாட்டு மன்னர்கள் குதிரை சவாரி செய்து வரட்டும் என்று அனுப்பினால் குதிரையை நடக்க வைத்து என் நம்பிக்கையில் மண்ணை அள்ளி இட்டனர்.  60 ரூபாயிலிருந்து 1000வரை படகு சவாரியும் உண்டு.  இளம் பெற்றோர்கள் கால்-பந்து கொண்டு வந்து தங்கள் குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தனர்.  உடையற்ற பெண் சிலை பக்கம் என் கண் சென்றது சிறு ஆண்குழந்தைகள்  சிலையின் பக்கமாக தொட்டு விளையாடி கொண்டிருந்தது நெருடலாகத் தான் இருந்தது.  என் கண்கள் அவ்வகையான ஆண் சிலை உண்டா என்று தேடியது அப்படி ஒன்றும் காணவில்லை. ஆண்களால் மட்டுமே பெண்களை இவ்விதமாக ரசனையுடன் வடிவமைக்க இயலுமோ அல்லது ஆண் சிலைகள் ரசிக்க ஆட்கள் இல்லையா என்றும் என் மனம் கேட்டு கொண்டது.   மிதக்கும் பாலம் வழி கடற்கரை சென்றடைந்தோம்.  வரிசையாக இருந்த சிறு சிறு கடைகளின் முதளாளிகள் பெரும் பாலும் நைற்றியணிந்த பெண்களாகவே இருந்தனர். நைற்றி தேசிய உடையாக வெகுதூரமில்லை என்றுமட்டும் தெரிந்தது.


இணையத்தில் தங்க கலர் கொண்ட மணல் சுத்ததிற்க்கு பெயர்பெற்ற கடற்கரை என்று இணையத்தில்  எழுதி இருப்பதை நம்பலாகாது.  கடல் அலை கொஞ்சம் வக்கிரமாகவும் சகதி மண் கலரில் தான் இருந்தது. திடீர் என அலை கரைகடந்து வந்து பயமுறுத்தியது. காவலாளிகள் கம்புடன் மக்களை கட்டுக்குள் வைத்துள்ளனர்.  ஐஸ் கிரீம் விற்பவர்களே விற்கவும் குப்பையை பொறுக்கவும் செய்கின்றனர். பல பொழுதும் இவ்வகையான இடங்களை அசுத்தப்படுத்துவதற்கு அங்குள்ள உணவகமே  மிக பெறும்  பங்கு அளிக்கிறது என்பது மறுக்க இயலவில்லை. குப்பையிட என ஒரு குப்பை தொட்டிவைக்காது சுத்தம் என்பதில் ஐயம் கொள்ளவே வைக்கின்றது.  இக் கடலை கண்ட போது தமிழகத்திலுள்ள மணப்பாடு கடலின் அழகே மனதில் வந்தது. நம் தமிழக அரசு இவ்விதம் ஒரு திட்டத்துடன் செயலாற்றினால் அழகான சுற்றலாத் தலம் உருவாக்கலாம். சங்குமுகத்தை பின்பற்றி தமிழகத்தில் உருவாக்கிய சங்குத் துறைமுகம் கூட ஒரு சங்குடன் கவனிப்பாரற்று தான்  உள்ளது.அங்கு வரும் பயணிகள் பெரும் பகுதியானோர் அப்பகுதி மக்களாகவே தெரிந்தனர். வெளிநாட்டு பயணிகள் கண்ணில் படவில்லை. கோவளத்தின் வசதி இங்கு இல்லாததாக கூட இருக்கலாம். மலையாளி அம்மாக்களை கண்டு கொண்டே நிற்கலாம். பல தமிழக அம்மாக்கள் போல் அல்லது அழகான உடை அலங்காரத்துடன் பொலிவான முகத்துடன் குழந்தை குட்டி யுடன் வலம் வருகின்றனர்.சங்கு முகத்தில் இருந்து திரும்பும் போது ஏதோ ஏமாற்றபட்ட காதலி போல் மனதில் ஒரு கவலை ஊஞ்சலாடி கொண்டே இருந்தது.  பின்பு மறுபடியும் இணையத்தில் உலாவந்த போது தான் தெரிந்தது, பக்கத்திலுள்ள 'ஜலகன்னியகா' என்ற புகழ்பெற்ற சிலையை பார்க்காது வந்துள்ளது.  சங்குத் துறைமுகம் இன்னும் அழகுபடுத்த சுத்தபடுத்த வேண்டி நிற்பதாகவே எனக்கு படுகின்றது. நேரம் மாலை 6  அஸ்தமிக்கும் கதிரவனை கண்டு கொண்டு திரும்பினோம் திருவனந்தபுரம் பட்டிணம் நோக்கி.  அதிகாலை 1 மணிக்கு நெல்லையில் எங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.

  

8 comments:

kumaraguruparan said...

ஜோசபின் பதிவில் புகைப்பட சாட்சிகளுடன் கேரள சங்குமுகம் சுற்றுலாவில் நாமும் பங்கு கொள்கிறோம். 'ஹிட்ச்காக் பட ஹீரோ',மார்த்தாண்ட ஹோட்டல் சர்வரின் பெண் போலீஸ் மீதான அதீத உபசரிப்பு/இறுதியில் பழைய பற்றோடு புதிய கணக்கையும் சேர்த்துக்கொள்ளச் சொல்வது ;) ஆடையற்ற பெண் சிலை மீது நாசூக்கான விமரிசனம், புள்ளிவிவரங்கள் என செல்கிறது பயணம். சிறந்த 'ஊர்சுற்றியாக' இருப்பதற்கு தேவையான குணாம்சங்கள் ஜோசபினிடம் அதிகம் இருக்கின்றன!

J.P Josephine Baba said...

அண்ணா நன்றி நன்றி, உங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும். உங்களை போன்றவர்களாலே என்னை போன்ற வளரும் வலைப்பதிவர்களை உருவாக்க இயலும்.

ராம்ஜி_யாஹூ said...

படம் மற்றும் உங்களின் எழுத்து நடை மிகவும் அருமை.
நெல்லையை சுற்றிய சாதாரண பகுதிகளையும் (சுற்றுலா பகுதிகள் இல்லாமல்- உதாரணம் புனித இன்ஜாசியர் மகளிர் பள்ளி, வ வு சி மைதானம், கட்டபொம்மன் சிலை, பாளை பேருந்து நிலையம் ) நீங்கள் படம் எடுத்து பதிவிடலாமே

J.P Josephine Baba said...

நிச்சயமாக உங்களுக்கு நெல்லை மேல் கொள்ளை பிரியம்! உள்ளூரில் படம் எடுக்க பல தடைகள் உண்டு என உங்களுக்கு தெரிந்திருக்கும். உங்கல் ஆசைக்கு என்றாவது படங்களுடன் கதைக்கின்றேன்.

kumaraguruparan said...

ஹிட்ச்காக் படம் போன்றே திகிலுடன் அடுத்த பதிவை எதிர் கொள்ளுகின்றோம். சுவையாக, நக்கலாக,புள்ளிவிவர சலிப்பு அதிகம் இல்லாத அளவு நெல்லை அல்வா போன்று படைக்கின்றீர்கள்!...அகழ்வாய்வு தொடர்பாக சில பதிவுகளை தங்களிடம் எதிர் பார்க்கிறேன்.-உதாரணம்-கிருஷ்ணாபுரம்-கூடவே உள்ளூர் வரலாறு போன்ற செய்திகள்...

t.balasubramanian said...

thanks for this travel story with photos

Dr.எம்.கே.முருகானந்தன் said...

சுவையான தகவல்கள். நன்றி

சு.செந்தில் குமரன் said...

மிக அருமையான பயணப் பதிவு . ஆங்காங்கே சமூகப் பார்வையிலும் தெரிவது ஜோசபினின் மனசு

Post Comment

Post a Comment