header-photo

ஆதாமின்றே வாரிஎல்லு

 ‘ஆதாமின்றே வாரிஎல்லு’ என்ற மலையாளப் படத்தின் தலைப்பு படம் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொள்ள செய்தது. நடித்தவர்கள் ஸ்ரீவித்யா, சுகாசினி என்ற போது ஆற்வம் இன்னும் கூடியது.  இரண்டு தடவை தொலைகாட்சியில் வந்த போதும் கரண்டு கட்!  இனி பொறுத்து இருக்கல் ஆகாது என கண்டு என்னவரிடன் இணையத்தில் இருந்தும் தரை இறக்கி தர கேட்டிருந்தேன்.   படத்தை பார்த்து முடித்த  போது ஆகா தலைப்பை கண்டு ஏமாந்து விட்டோமோ என்று நொந்து கொள்ள வைத்தது.   மேலும் படம் கதையை விட படம் இயக்கியவர் நடித்தவர் பின்புலன் தான் மனதில் ஓடியது.


என் காலத்தில் 12 ம் வகுப்பு ப்ரீ டிகிரி(pre-degree) கல்லூரியோடு சேர்ந்த படிப்பாக இருந்தது.   வாழ்க்கையில் கல்லூரி என்ற கனவை நனைவாக்கிய, கோட்டயம் பட்டணத்திலுள்ள BCM என்ற கல்லூரி அதுவும் கேரளாவில்  மிகவும் பிரசித்தமான பெண்கள் கல்லூரி!   பின்பு தமிழகத்தில்  படித்த போது கல்லூரிகளில் கண்ட எந்த ஒரு தேவையற்ற கட்டுபாடும் அங்கு கண்டது இல்லை.   எங்களை முழுதும் நம்பினர் அதனால் பல பொழுதும் நாங்கள் எல்கை தாண்ட விரும்பியதும் கிடையாது.    சமூகப்பணி, பக்தி, அரசியல் என எல்லா நிலைகளிலும்  களம் அமைத்து தந்தனர்.  வி.பி சிங் கூட்டத்திற்க்கு சென்றுள்ளோம். எல்லா முதல் சனி கிழமைகளிலும் முதியவர் இல்லம் அழைத்து செல்வது உண்டு.   நல்ல சினிமா படம் வந்தால் தியேட்டரில் சென்று பார்க்கவும் அனுமதி உண்டு. நாங்கள் ப்றீ- டிகிரி மாணவிகள் விவரம் பத்தாத சிறு பெண்கள் என அக்காக்கள் கையிலுள்ள பொமேரியன் நாயாகவே இருந்தோம்.   ஆனாலும்  எல்லாம் அவதானிப்பதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்க தான் செய்தது.


எங்கள் விடுதி மூன்று அடுக்கு மாடி கட்டிடம்.    நாங்கள் மேல் நிலையில் அக்காக்கள் கீழ் மாடியிலும்.   பக்கத்து கட்டிடத்தில் வெளிநாடு வாழும் பெற்றோரின் பிள்ளைகள் தங்க வைக்க பட்டிருந்தனர்.    நாங்கள் பேருந்தில் பயணம் செய்து வீடு சென்று வருவது போல் அவர்கள் சரளமாக வானூர்தியில் சென்று அவர்கள் பெற்றோரை சந்தித்து வருவர்.  அவர்களுக்கு என பிரத்தியேக கட்டணத்துடன் சிறப்பான வசதியுடன் உள்ள  தனி விடுதியில் வசித்து வந்தனர்.  சிறு உடுப்பு, இசை வாத்தியங்களுடன்  பாட்டு பாட, பிடிக்காத சாப்பாட்டை தூக்கி எறியும் அனுமதியும் அவர்களுக்கு உண்டு!   நாங்கள் அதிசயமாக எங்கள்  அறை சன்னல் வழியே அவர்கள் செய்தியை உற்று நோக்குவோம். ஒரு இனம் புரியாத இடைவெளி நாங்களாகவே உருவாக்கியிருந்தோம் அவர்களுக்கும் எங்களுக்கும்.  நாங்கள் ஒரு அறையில் 8 பேர் அடைபட்டு கிடந்த போது அவர்கள் மூன்று பேருக்கு  ஒரு அறை என கொடுக்கபட்டிருந்தது.  அந்த விடுதியில்  ஒரு அறையில்  45-50 வயது தக்க  ஒரு பேராசிரியையும்  வசித்து வந்தார்.  அவர் எழுதுவதும் வாசிப்புமாக நேரத்தை கழித்தார். சில வேளைகளில் அவர் அறையில் இருந்து இதமான கித்தார்  ஒலியும் வந்து கொண்டு இருக்கும்.   அவரும் எங்களை போன்றே ஒரு தட்டும் டம்ளருடன் சாப்பாட்டு அறைக்கு வந்து உண்ணுவதை கண்டது உண்டு.   அவர் ஒரு போதும் ஒரு மாணவியையும் திட்டினதாகவோ அறிவுரை கூறியதாகவோ கேள்வி பட்டதில்லை.   ஒரு சிறு புன்முறுவலுடன் அமைதி ததும்பும் முகத்துடன் காணப்பட்டார்.   அற்புத நோய் பிடியில் இருந்த அவர் விடுமுறை நாட்களில் ஒரு பையுடன் தாய் வீட்டுக்கு சென்று வருவதும் அறிந்திருந்தோம்.   அவர் தான் மரணம் அடைந்த ஸ்ரீவித்யா என்ற நடிகையின்  கணவரின் முதல் மனைவி பெஃற்டி(Betty) என்ற குழந்தைகள் இல்லாத பேரசிரியை!


ஆதாமின் வாரியெல்லு என்ற போதே  புரிந்து விட்டது பெண்களை பற்றிய கதை என்று. பைபிள் கதைப்படி கடவுள் பூமியில் ஆகாயம், கடல், கரை, செடி கொடி, மிருக ஜாலங்கள் படைத்த பின்பு களி மண்ணால் தன் சாயலில் ஒரு மனிதனை படைத்தாராம்.  அவனை  ஆதம் என்று அழைத்துள்ளார்!   அவன்  தனிமையாக அந்த சிங்கார  தோட்டத்தில் சுற்றி திரிந்தது கடவுளுக்கு கவலையாக பட்டது.    அவனை தூங்க வைத்து அவனுடைய விலாவில் இருந்து ஒரு எலும்பை எடுத்து அவனுக்கு துணையாக ஒரு அழகான ஏவாள் என்ற பெண்ணை  படைத்து கொடுப்பார்.   விலா எலும்பில் இருந்து படைத்ததிற்க்கும் ஒரு காரணம் உண்டாம்.  ஆணின் காலினால் மிதிபடவோ அல்லது தலையில் ஏறி ஆட்சி பண்ணவோ அல்லாது   அவனது  இதயத்தில் குடியிருக்க ஆட்சி  செலுத்த வேண்யவளாம்!!! .
கதைக்கு வந்துவிடுகின்றேன்; ‘ஆதாமின்றே வாரிஎல்லு’ என்பது தமிழில் ‘ஆதாமின் விலாஎலும்பு’ என கொள்ளலாம். அப்படத்ததின் கதை மூன்று நகர்புற பெண்களின் வாழ்க்கை எப்படியாக முடிந்தது என சொல்லபட்டது.   மூன்று பெண்களின் கதையும் வரிசையாக மாறி மாறி தந்து, இயக்குனர் பல இடங்களில் ரொம்ப சலிப்பை தந்து விடுகின்றார்.  கதை முடிவு கூட இப்படிதான் இருக்கும் என பார்வையாளர்களுக்கும் புரிந்து விடுவதால் விருவிருப்பு அருவருப்பாக மாறுகிறது.   ஸ்ரீவித்யா ஒரு பணக்கார முதலாளியின் மனைவி.   பெண்கள்- கிளப், குடி, கும்மாளம் என வாழ்கையை கொண்டாடுகின்றார்.   அவருக்கு கணவருடனோ குழந்தைகளிடமோ பிடிப்பு இல்லை.  மகள் ஒரு பையனுடம் ஓடி போனதற்காய் மகளை அடித்து திட்டிய தாய் மகளை வீட்டில் பூட்டி வைத்து விட்டு ஒரு இளைஞசருடன் காதல் தேடி திரிகின்றார்.   ஸ்ரீவித்யா, தன் காதலன் தன்னை விட்டு விலகுகின்றான் என தெரிந்தவுடன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கின்றார்.


மேலும் அதற்க்கு கதையில் ஒரு நியாயவும் கற்பிக்கின்றனர் அவருடைய கணவர் இவரை பல அதிகாரிகளிடம் தன் லாபத்திற்க்கு என அனுப்பியதால் மன உளச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், வாய்ப்பு கிடைக்கும் போது சொல் என்ற சாட்டையால் கணவரை அடிப்பதும் கவலைக்கு ‘தண்ணீர்’ போட்டு கொள்வதும் என; பணக்கார பெண்கள் என்றாலே காமம், திமிற்  என உருவகப்படுத்தியுள்ளார் இயக்குனர்.  மனைவியை விற்பவன் தான் பணக்காரன் என்ற மோசமான பிம்பவும் உள்ளது இப்படத்தில்.


அடுத்து அவர்கள் வீட்டு வேலைக்காரி என்ற பெண்; பழி வாங்க துடிக்கும்  மனைவியின் மௌன சம்மதத்துடனே அந்த பணக்காரனின் காம இச்சைக்கு பலி ஆகி  கற்பமாகிய  அவளை தெருவில் வாழும் சூழலுக்கு தள்ளுகின்றனர்.   பின்பு வேலைக்காரி பைத்திய கார ஆஸ்பத்திரியில் வந்து சேர்க்கபடுகின்றார்.


மூன்றாவது பெண் கதாபாத்திரம் சுஹாசினி அவர் தூங்காம் மூஞ்சுடனே முழு காட்சியிலும் வந்து செல்வார்.    அவர் கணவர் ஒரு வேலையற்ற குடிகார பத்திரிகையாளர். அவருக்கு நிலையான வேலை இல்லை.   சுஹாசினி அரசு அலுவலகத்தில் வேலை செய்கின்றார்.  தன் உணர்வுகளை புரிந்து கொள்ளாத,  பொறுபற்ற, அவளுடைய நடத்தையில் சந்தேகப்படும் குடிகார கணவன்; ஒரு மாமியார் உண்டு உலகத்திலுள்ள குசும்பின் மொத்த உருவமாக இருகின்றார்.  ஒரு கட்டத்தில் சுகாசினிக்கு மனநிலை தடுமாறி பைத்தியகார ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை உருவாகுகின்றது.   கிறுக்கு பிடித்த பின்பு தான் அழகாக சிரிக்கின்றார் அது சிரிப்பாக அல்லாது இளிப்பாக மாறுகின்றது .


இப்படியாக பெண்கள், சமூகத்திலுள்ள ஆண்களால் எப்படி எல்லாம் துன்புறுகின்றனர் என்று பொறுமையாக (அருமையாக அல்ல) படம் பிடித்துள்ளார் கெ.ஜி ஜோர்ஜ் என்ற இயக்குனர்.   இவர் தான் எங்கள் பேராசிரியரின் கணவரும் ஸ்ரீவித்யாவின் எல்லா துன்பங்களுக்கும் காரணமாகிய அவருடைய விவாகரத்து பெற்ற கணவரும்!

ஸ்ரீவித்யா புகழ்பெற்ற கர்னாடகா பாடகி எம் எல் வசந்த குமாரியின் ஒரே மகள். அவருக்கு ஒரு சகோதரனும் உண்டு. சென்னை வாசியான ஸ்ரீவித்யாவின் குழந்தை, இளமை பருவம் அவருடைய அப்பா நோய் தாக்கியதால் வருமானம் இல்லாது வறுமைகொண்டு சிறப்புமாக இருந்ததில்லை.   ஸ்ரீவித்யாவையும் அவர் அம்மா பாடகி அல்லது நர்த்தகியாகவே காண விரும்பினார்.  ஆனால் அவர் நடிப்பில் ஒரு உன்னத இடத்தை பிடித்து கமல்ஹாசனுடன் கொண்ட  காதல், திருமணம் வரை போய் ஏமாற்றபட்டு, பின்பு முழு கிருஸ்தவராய் மாறி கெ.ஜி ஜோர்ஜுடன்  காதல் திருமணம் என வாழ்க்கை திசை மாறி தன் பணம் சொத்து எல்லாம் கெ.ஜி ஜோர்ஜிடம் இழந்த பின்பு விவாகரத்து பெற்று தனி மலையாளியாக  திருவனந்தபுரத்தில் குடிபெயர்ந்து  வாழும் போது அற்புத நோயால் மரித்து கேரளா அரசின் மரியாதையுடன் பரலோகம் போய் சேர்ந்தார்.   அவரை ஒரு தமிழராக கேரளாகாரர்களுக்கு தெரியாது. அவர் தோற்றம் அழகு , பெயர் எல்லாமே மலையாளிக்கு ஒத்து இருந்தது.    அவருடைய சொத்துக்கள் கூட கேரளா அரசிடமே ஒப்படைக்க பட்டுள்ளது.
 பல மலையாள படங்களில் கள்ள காதலியாகவும் கணவரை ஏமாற்றும் நயவஞ்சகியாகவும் அல்லது கணவனை சந்தேகிக்கும் பிசாசாகவுமே மிக இயல்பாக நடித்துள்ளார்.


இப்படி நாம் தெரிந்தே இரண்டு பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய கெ. ஜி ஜோர்ஜு தான் பெண்களை பற்றி உருகி உருகி ‘ஆதாமின்ற எல்லு’ என்ற படம் எடுத்துள்ளார் என்பதும் செம்மரி ஆட்டுக்காக அழும் நரியின் குரலாகவே பட்டது. அல்லது அவர் நேசத்தால் பெண்கள் துன்ப பட்டார்களா எனவும் தெரியவில்லை.

ஒருவேளை அவர் விதித்த விதியில் அவரும் விதிக்க பட்டாரோ?  எனவும் தெரியவில்லை!!!!

0 comments:

Post Comment

Post a Comment