header-photo

நாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ்
நாசரேத்”ன்னு கேட்டாலே அதிருதில்ல” என்ற வாக்குக்கு இணங்க தமிழகத்தை ஏன் இந்தியா முழுக்க அறியப்படும் சிற்றூராக இருந்து வந்தது நாசரேத்.  நாசரேத்துக்கு அப்படி என்ன சிறப்பு...... .இதன் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் சுவாரசியமான பல தகவல்கள் கிடைக்கும்
தூத்துகுடி மாவட்டத்தில் இடம் பெற்றாலும் தூத்துக்குடியில் இருந்து 50 கி. மீ, தொலைவிலும் திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ தொலைவில் இடம் பிடித்துள்ள ஊர் இது. தேரி காட்டருகில், உடைமுள் சூழ, மழை குறைந்த  மிகவும் வரண்ட  ஒரு குடியிருப்பாகவே  இருந்தது நாசரேத். . நாசரேத்தில் இயற்பெயர் சாண்பது என்பதாகும்.  இன்று காணும் எந்த அடையாளவுமற்று வெறும் பொத்தக்காடாக காட்சி அளித்த நாசரேத், இன்று காணும் வண்ணம் கல்வியிலும் கலாச்சாரத்திலும் வசதி வாய்ப்பிலும் இரெயில், பேருந்து என பெரிய நகரத்தின் அனைத்து வசதி  வாய்ப்புடன் நிலைகொள்கின்றது . 

இந்தியாவில் புகழ் பெற்ற பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய ஊர், கால்பந்தாட்டம் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஊர்,  94% கல்வியறிவு பெற்றவர்கள் வசிக்கும் ஊர், பெருபான்மையான கிறிஸ்தவர்கள் வசிக்கும் ஊர் என பல அடையாளங்கள் கொண்ட ஊர் இது.

சட்டசபையில் எம்பியாக இருந்த A.D.K  ஜெயசீலன் அவர்களின் பிறந்த ஊர்,  இன்று வியாபாரத்தில்  தூள் பறத்தும், ஆச்சி மசால உரிமையாளர் A.D பத்மசிங் ஐசக், பாட்டனித் துறை பேராசிரியரும் புத்தக ஆசிரியருமான டி. டானியேல் சுந்தர் ராஜ், உயரம் தாண்டுதல் வீராங்கனை ஏஞ்சலா லின்சி வசந்த குமாரி போன்ற பலரின்    சொந்த ஊராக விளங்குகின்றது..

இந்த ஊரில் இருந்து பிரதான நகரங்களான சென்னை, பாங்கலூரு, கோயம்பத்தூருக்கு செல்ல நேரடி பேருந்து வசதி உண்டு. ஊருக்கு அருகில் ஊடாக  பாலக்காடு சென்னை செல்லும் இரயில் தடங்கள் என பல சிறப்புகளை தாங்கி நிற்கிறது. உலகத்தில் எந்த மூலையிலும் ஒரு நாசரேத்காரர் இருப்பார் என்பதற்கு இணங்க கல்வியறிவால் வியாபார உழைப்பு யுக்தியால் உலகம் முழுக்க பரந்து விரவிக் கிடக்கும் மக்கள் கொண்ட ஊர் நாசரேத்.

18 வது நூற்றாண்டில் இருந்தே கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநில  தேயிலை தோட்டங்களிலும் பர்மா, இலங்கை, போன்ற நாடுகளிலும் வேலை, வியாபாரம் செய்து செழித்து வாழ்ந்த மக்களை இந்த ஊரில் காணலாம். இவர்கள் வீட்டு கட்டுமானவும், செல்வச்செழிப்பும் இவர்கள் வரலாற்றை அடையாளங்களை பேணி நிற்கின்றது.

.2011 மக்கள் தொகைக் கணக்குப்படி இந்த ஊரின் ஜனத்தொகை வெறும் 24,862 ஆகும். கல்வியறிவு தேசிய அளவான 59.5% விட மிக உயர்ந்த  94%, ஆகும்/

இந்த ஊரில் தான் தென்னிந்தியாவின் முதல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உருவானது. பாலகர் பள்ளி மேல் பள்ளி, கலைக்கல்லூரி,  பாலிடெக்னக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி நர்சிங் கல்லூரி கைத்தொழில் கல்வி, முதல்நிலை உயர் நிலை ஆசிரியர் பயிற்சி பள்ளி மிகப்பெரிய பொது மருத்துவமனை, அனாதை ஆசிரம், மூளை வளர்ச்சி அற்றவர்களுக்கான இல்லம், வாய் பேசா காதுகேக்காதோர் வசிக்கும் இல்லம், சீர்திருத்த பள்ளி, கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான மனை என இந்த சிற்றூரில் என்ன தான் இல்லை என நீங்கள் கேட்க கூடும்.

இதற்கெல்லாம் காரணகர்த்தா யார் என்றால்; அவர் தான் நாசரேத்தின் தந்தை  என அழைக்கப்படும் ஆர்தன் கேனன் மார்காசிஸ். ஒரு மாபெரும் மனித நேயர்! மதம் கடந்து மனிதர்கள் நலனுக்காக தன்னலம் அற்று செயலாற்றிய  உன்னதர்.  பிரார்த்திக்கும் உதடுகளை விட செயலாற்றும் கைகளை நம்பினவர். மக்கள் வளர்ச்சி பெற வேண்டுமென்றால் சும்மா பிரார்த்தனையில் மட்டும் இருக்கல் ஆகாது தன்சார்பாக வாழ வேண்டும் என்ற நோக்கில் பல அமைப்புகளை உருவாக்கியவர்

மிஷினறி ஆர்தன் கேனன் மார்காசிஸ் இங்கிலாந்த சேர்ந்த பெற்றோரின் எட்டு பிள்ளைகளில் கடைக்குட்டியாக 24-12-1852 அன்று இங்கிலாந்திலுள்ள லெமிங்டனில் பிறந்தார். கிறிஸ்தவ நெறியில் வளர்க்கப்பட்டவர். கல்வியில் சிறந்து விளங்கிய இவர், முதலில் இறையியலும் பின்பு மருத்துவவும் கற்று தேர்ந்தார். மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்கும் வேளையில் கால்டுவெல் பிஷப்பை சந்திக்கின்றார். இந்தியாவில், தமிழகத்தில் தென்கோடியில் அடர்ந்த காட்டில் திருநெல்வேலியில் சேவையாற்ற மிஷனறி தேவைப்படுவதாக தெரிவித்ததும் மருத்துவத்தில் தான் மேற்கொள்ள இருந்த மேற்படிப்பை உதறி தள்ளி விட்டு, யேசு நாதரின் சேவகராக இந்தியாவை நோக்கி தனது 22 வது வயதில் பயணத்தை ஆரம்பித்தார்.

  குழந்தைப்பருவத்தில் இருந்தே ஆஸ்த்மா நோயால் பாதிப்படைந்த  ஆர்தன் கேனன் மார்காசிஸ் உடல்நிலை எதிர்மறையாக இருந்தாலும்  இறைவனின் பெயரால் செய்ய போகும் மனித சேவைக்கு தடங்கலாக ஒரு போதும் எடுத்துக் கொள்ளவில்லை. உன்னை போல் உன் அயலானை நேசி, கடவுளை நேசிப்பது என்பது மனிதனை சேவிப்பது ஊடாக என்ற நெறியில் ஆழ்ந்து நம்பிய ஆர்தன் கேனன் மார்காசிஸ் தன் சேவையை இடையன்குடியிலும் துவங்கி  பின்பு நாசரேத்தில் தொடர்கின்றார்
மார்காசிஸ் என்ற மனிதரின் செயல்பாடுகள் நாசரேத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களை மட்டும் முன் நிறுத்தி இருக்கவில்லை. சுற்றியுள்ள பல கிராம மக்கள் நலனையும், சுயசார்பையும், மேம்பாட்டையும் கருத்தில் கொண்டே இருந்தது.  வெறும் ஏழு மைல் பரப்பளவில் இருந்த இந்த  ஊரில்  1803 ல் முதன் முதலில் எட்டு குடும்பம் மட்டுமே கிறிஸ்தவம் தழுவியது. 

நாசரேத்தின் அடையாளமாக திகழும் உயர்ந்த கோபுரம் கொண்ட தூய யோவான் ஆலயம் பனை ஓலைகளால் 1803 ல் கட்டப்பட்டது. 1830  அடைக்கலம் ஐயரால் மார்காஸிஸ் ஐயர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. பிரம்மாண்டமாக ஒரு ஆலயம் கட்டப்பட வேண்டும் என்ற ஆர்தன் கேனன் மார்காசிஸ் ஐயர்  ஆசைப்பட்டாலும் அவர் காலத்திற்கு பின் 1920ல் தான் தற்போது காணும் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.


 நாசரேத்தில் உள்ள லூக் மருத்துவ மனை 1870 ல் டாக்டர் ஜெ. எம் ஸ்ட்ராச்சனால் ஆர்தன் கேனன் மார்காசிஸ் ஐயரின் தலைமையில் துவங்கப்பட்டது. இந்த மருத்துவமனையின் சேவையை சுற்று வட்டாரத்திலுள்ள 20-30 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மக்கள் பயண்படுத்தி வருகின்றனர். யேசுவின் சுவிசேஷகர் லூக்காவின் நினைவாக பிற்காலத்தில் 1892 ஆண்டுவாக்கில் லூக் மருத்துவமனை என்ற பெயர் மாற்றப்பட்டது.  

தாமிரபரணி வெள்ளப்பெருக்கால்  மக்கள் பாதிப்படந்தது மட்டுமல்லாது; கொள்ளை நோயால் கால்வாசி மக்கள்  மாண்டனர்.  இச்சமயம் ஆதரவற்று அனாதமாக்கப்பட்ட குழந்தைகளுக்கு என ஆர்தர் மார்காஸின் 1877ல் ஒரு அனாதை ஆசிரமம் துவங்கினார். அரசும் 70க்கு மேற்பட்ட குழந்தைகளை இவரின் மேற்பார்வையில் வளர்க்க கொடுத்தது.இந்த குழந்தைகள் வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்ற கூறிய நோக்கில் அடுத்த வருடமே தொழில் கல்வி பாடசாலையும் ஆரம்பித்தார். அங்கு நெய்தல், மர, இரும்பு வேலைப்பாடுகள் கற்று கொடுக்கப்பட்டது. இந்த குழந்தைகளை பராமரிப்பது வளர்ப்பது எளிதாக இருக்கவில்லை.  அவர்களை சிறந்த நெறியில் வளர்த்தார். கல்யாண வயது வந்த பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார். 
1884 ல் முதன்முதலாக தையல் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதுடன் தையல் கற்று கொடுக்கும் பள்ளியையும் ஆரம்பித்தார். வெறும் தொழில் கல்வி என்று மட்டுமே நிறுத்தாது 1877 ல் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஒன்றையும் ஆரம்பித்தார். மக்கள் சேவையில் அத்துடன் திருப்தி அடையவில்லை.
’ஆங்கிலோ வெனாக்குலர் பள்ளி’ என்ற பெயரில் 1882ஆம் ஆண்டு  ஆண் குழந்தைகளுக்கான இடை நிலை பள்ளி  ஆரம்பித்தார்.. இந்த பள்ளி மெட்ராஸ் மாகாணத்திலுள்ள மிகச்சிறந்த பள்ளி என்ற பாராட்டை 1885 ல் பெற்றது. ஆண்களுக்கான மேல்நிலைப் பள்ளி இடையன்விளையில் ஆரம்பிக்க வேண்டும் என இருந்த  கால்ட்வெல் பிஷப்பின் விருப்பத்தை  மீறி;  1889 ல் நாசரேத் பள்ளியை உயர்நிலை பள்ளியாக உயர்த்தியதால்  கால்டுவெல் பிஷப்பின் எதிர்ப்பையும் சந்தித்தார்.   மனக்கசப்பில் இருந்த பிஷப் 1892 வாக்கில் நாசரேத் உயர்நிலை பள்ளியை சில காலம் மூட உத்தரவிட்டார்.

ஆண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல கல்வி; பெண் குழந்தைகளும் சமநிலையை எட்ட வேண்டுமெனில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் பெண் குழந்தைகளுக்காக சிறந்த பாடசாலை வேண்டும் என ஆர்வம் கொண்டார். அதன் விளைவாக  பொது கல்வி திட்டத்தில் 1886 ல் பெண் குழந்தைகளுக்கு என பள்ளிக்கூடம் ஆரம்பித்தார்.  1888 ஆம் ஆண்டு, முதல் செட் மாணவிகள் மெட்ரிக் கல்வி பெற்று வெளியேறினர். இந்த பள்ளி தான் முதன் தென் இந்தியாவில் பெண்களுக்கான கல்விக்கூடமாக விளங்கியது. இதன் தரமான கல்வி சூழல் மெட்ராஸ் மாகாணத்தால் பாராட்டும் பெற்றது.
இந்த நிறுவனங்களை எல்லாம் வரும் காலம் சிறப்பாக நடத்த வேண்டும் என்றால் சிறந்த தலைமையை உருவாக்க வேண்டிய தேவையையும் மனதில் கொண்டு  இறையியல் கல்லூரியும் 1890 துவங்கினார்.  

ஆர்தன் கேனன் மார்காசிஸ் நாசரேத் என்ற சிற்றூரை அவரின் குழந்தை போல் பாராமரித்து வளர்த்தி கொண்டு வந்தார். கல்வியோடும் மருத்துவ மனையோடும் மட்டும் அவருடைய சேவையை நிறுத்தி கொள்ளவில்லை. இயற்கை வளங்களுடன் மக்கள் வாழ வேண்டும் என்ற நோக்கில் வாளயடியில் இருந்து நாசரேத் வரை தெருவோரம் ஆலமரம் அரசமரம் , வேம்பு  மரங்களை நட்டு உருவாக்கினார்.
தபால் சேவைக்கு என  25-12-1894 அன்று தாபால் அலுவலகம் துவங்கினார். நாசரேத்திலுள்ள 5 வது தெருவு மார்காசிஸ் திட்டத்தில் உருவாக்கப்பட்டதாகும். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் இரயில் தடம் நாசரேத் வழி செல்லும் படியாக அமைத்தார்.
வயதானவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் வயதனவர்களுக்கான பாடசாலைகளை 1880 ல் நாசரேத் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் துவங்கினார், 

நலிந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் ’எஸ் பி ஜி’ நாசரேத் மரண உதவி நிதி  (“S.P.G. Nazareth Christian Death Aid-Fund”)   என்ற அமைப்பை 1884 ல் துவங்கினார்.  அடுத்த ஆறு வருடத்திற்கு உள்ளாக இதன் மூலம் பெறப்பட்ட 66,331 ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்து அளித்தார். அதே போன்று எஸ் பி. ஜி விதவை அமைப்பு (“S.P.G. Widows’ Association”) மூலம்  நலிந்த விதவைகளுக்கு உதவினார்.


குடும்பத்தில் யாரேனும் இறந்தால் வட்டியில்லா கடம் கொடுப்பது வழியாக அந்த குடும்பத்தை பணநெருக்கடியில் இருந்து மீட்கும் நோக்கில் ”த்ரிஃப்ட் சமூக நிதி” (Thrift Fund Society) என்ற அமைப்பையும் உருவாக்கியிருந்தார்.

இப்படியாக நாசரேத் என்ற ஊரை ஒரு நெடிய வளர்ச்சி பாதையில் நடத்தி சென்றவர் ஆவார் ஆர்தர் கேனன் மார்காசிஸ். ஊரின் தற்போதைய நிலை என்ன? இன்றும் அதே போன்றே மார்காஸிஸ் ஐயா நிறுவிய  சேவை நிறுவனங்கள் எல்லாம் உள்ளதா? செயலாற்றுகின்றதா? அனாதைகளும் ஏழைகளும், பிணியால் உழலுபவர்களும் தற்போதும் நமது சமூகத்தில் இருந்து மறைய வில்லை. அதே வேதனையும் சோகத்திலும் பசி கொடுமையிலும் வேலை இல்லா திண்டாட்டத்திலும் கல்வி பெற இயலா சுழலிலும் தற்போதும் மக்கள் உள்ளனர்.  செல்வ செழிப்பான நாட்டில் இருந்து வந்து, பருவ கால நிலையாலும் கடினமான வாழ்வியல் சூழலாலும் வாழ்ந்தாலும்; இந்த தேசத்தில் சுயநலம் இல்லாது ஒரு சமூகத்தின் மேம்பாட்டுக்காக; தன் மேல் நிலவிய அதிகார அச்சுறுத்தலைக் கூட வகை வைக்காது சேவை புரிந்த  ஆர்தர் கேனன் மார்காசிஸ் ஐயாவின்  கனவிற்கு தற்கால கிறிஸ்தவர்கள் எந்த அளவிற்கு மதிப்பு கொடுக்கின்றனர்.    மாநிலத்தில் முதன்மையாக இருந்த கல்வி நிலையங்களின் தற்போதைய நிலை என்ன? தேர்தல், சன்டை... கள்ள ஒட்டு..போன்ற செய்திகளில்  மட்டுமே  நாசரேத் பெயர் தற்போது வெளியில் வருகின்றது. இதை பற்றி எல்லாம் உண்மையான கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. 

இறையியல் கல்வி நிறுவி பயிற்சி பெற்ற போதகர்களால், ஊழியக்காரர்களால் சபை நிறுவனங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற மேன்மையான அவருடைய கனவு நிறைவேறியதா? தரமான கிறிஸ்தவர்கள் இறைவியல் கல்வி பெற்று வருகின்றனரா? கற்று தேர்ந்தவர்கள் தான் கிருஸ்தவ சபையை வழி நடத்துகின்றனரா? அல்லது இந்து குடும்பங்களிலும் பூசாரி குடும்பங்களிலும் இருந்து வந்து; கிறிஸ்தவத்தின் முற்போக்கான சிந்தனை வளத்தை நலிவடைய செய்த தனி நபர்கள் பின்னால் கிருஸ்தவர்கள் ஓடிப்பாய ஆரம்பித்து விட்டனரா? அசுத்த ஆவி, மந்திரவாதம், செய்வினை என கடந்த 20 வருடமாக தொடர்ந்து கேட்டு வந்த மக்கள் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை மறந்து விட்டனரா?

தற்போதைய நாசரேத் ஊர், மனிதர்கள் மனிதர்களை பயப்படும்; ’நாய்கள் ஜாக்கிரதை’ வீடுகளால் நிரம்பி விட்டது.  மனித நேயம் மிகவும் குறைந்து விட்டது. மனிதனை மனிதனாக பார்க்காது எகத்தாள நெஞ்சம் கொண்டோர் வாழும் ஊராக நாசரேத் மாறி கொண்டிருக்கின்றது. ஏழைகளை மதிக்காது ஆண்டவரின் ஆசிர்வாதம் கிருபையற்றோர் என ஒதுக்கி தள்ளி விட்டனர். தசம பாகம் கொடுப்பதே கிறிஸ்தவத்தில் கடமையாக நினைக்கின்றனர். கொடிய வரதட்சனை, பெண்கள் வண்கொடுமை வாழ்க்கை என கிறிஸ்தவ வாழ்க்கையில் இருந்து நகர்ந்து கொண்டு இருக்கும் ஊராக மாறிக்கொண்டிருக்கின்றது. 

இந்திய ஜாதிய ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டு மிஷனறிகள் உதவியுடன் கல்வி விழிப்புணர்வு பெற்று முன்னேறிய சமூகம் இரவு ஜெபம், ஆராதனை, என தனிநபர் சித்து வேலையில் கட்டுண்டு கிடைக்கின்றனர். தென் இந்தியாவின் முதல் பெண்கள் கல்வி நிறுவனம் உருவான ஊரில் இருந்து வரும் பெண்கள் எந்த அளவு மனவிசாலம் அடைந்துள்ளனர் சமூக அக்கறையிம் மனிதநேயத்திலும் அடுத்த தலைமுறையை நடத்துகின்றனர் என்பதும் கேட்கப்பட வேண்டியது


யேசு பிறந்து வளர்ந்த நாசரேத் என்ற ஊரின் பெயரை கொண்ட நாசரேத் தற்கால நிலை என்ன என்பதை காலமும் அதன் ஆட்சி மனிதர்களும் தான் பதில் சொல்ல வேண்டும். 

தமிழகத்தில் சிறந்த கல்வி பெறும் ஊர், நாகரீகத்தின், மனித நேயத்தின் விழிப்புணர்வின், தொட்டிலான நாசரேத் தற்போதைய நிலை பரிசோதித்தால் தமிழகத்தில் உள்ள எந்த ஊரில் இருந்தும்; எந்த விடையத்திலும் சிறப்பாக தன்னை பதிக்கவில்லை.   செழுமையான தியாக உள்ளம் கொண்ட வரலாற்றை மறந்து வெறும் கொண்டாட்ட, தற்பெருமை, அலங்கார, வெற்று கிறிஸ்தவமாக மாறி கொண்டிருப்பதை வரலாறு மட்டுமல்ல;  மார்காசிஸ் ஐயரின் தியாக ஆத்துமா மன்னிக்காது. 

மதுராஸ் ராஜதானியில் சிறந்து விளங்கிய நாசரேத், இந்தியா என்ற தேசத்தில் தலைச்சிறந்த ஊராக மறுபடியும் உருமாற வேண்டும்.  லாபம் பங்கிடும் நிறுவனமாகவும், ஆடம்பரத்திலும், வெற்று அதிகாரத்திலும் வீழும் நிலை நாசரேத்துக்கு வரக்கூடாது என எண்ணி  அருள் திரு ஆர்தர் கேனன் மார்காசிஸ் அவர்களை  மனதார வணங்குகின்றேன், ஐயாவின் மனித நேயம் முன்பாக மண்டியிடுகின்றேன்.

1 comments:

Anonymous said...

நாசரேத் சென்றதில்லை.கிறித்தவர்கள் பெருவாரியாகவும்,கல்வியிலும் செல்வ செழிப்பும் நிறைந்த ஊர் என்று எண்ணுகிறேன்.ஒரு ஐரோப்பிய மத போதகரின் முயற்சியால் பின் தங்கிய நிலையில் இருந்த மக்கள் ஓரளவு முன்னேரினர் என்பது கண் கூடு. ஆனால் இன்றைய அங்களாய்ப்பிற்கு ஆளான சூழ்நிலை ஓரளவு வளர்ந்து முன்னேற்றம் என்ற குழப்பமான இடுக்கியில் சிக்கி தவிர்க்கும் ஒவொரு சிறு நகரங்களின் நிலைமைதான்.அனைத்தும் கடந்த மனிதாபிமனமே இதற்கு நல்ல தீர்வாக அமைய முடியும்

Post Comment

Post a Comment