header-photo

பட்டுமலை நினைவுகள்

35 வருடம் பின்னோக்கிய மனப்பயணம். ஆம் அதின் நிறைவே இந்த முறை பட்டுமலை- சூளப்பிரட்டு எஸ்டேடை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்ததின் காரணம்.  அந்த எஸ்டேட்டில் தான் பாட்டி அருமை நாயகம் கங்காணி மகளாக வளர்ந்தது தன் காதல் கணவரை தன் விருப்பத்துடன் மணந்தது  குடி புகுந்ததும் இரண்டு குழந்தைகளுடன் பின்பு வாழா வெட்டியாக போராடி வாழ்ந்ததும்.


அம்மா வசதியான வீட்டில் குடி புகுந்து நகை நட்டுடன்; அப்பா நாங்கள் 3 குழந்தைகள்  என குடியிருந்தது வண்டிப்பெரியார் என்ற குட்டி பட்டணத்தில். தான் வறுமையில் தேயிலை தோட்ட தொழிலாளியாக இருந்தாலும் தன் மகளுக்கு கல்வி கொடுத்தேன் மகள் தன்னை போல் ஓர் தொழிலாளியாக இருக்க வேண்டி வந்ததில்லை என்ற விடையத்தில் பாட்டிக்கு எப்போதும் அதீத பெருமை இருந்தது. பாட்டி ஊருக்கு செல்வது என்பது மாதம் ஒரு தரம் கிடைக்கும் வாய்ப்பு. பல போதும் அம்மா விம்மிய இதயத்துடன் பேருந்தில் அமைதியாக இருப்பது தான் வழக்கம். எல்லா பெண்களும் போல் ஒரு நொறுங்கிய இதயம் தான் பிறந்த வீட்டிற்கு வழி சொல்லும். ஆனால் பிள்ளைகள் எங்களுக்கு  அந்த பயணம் அப்படியானதல்ல. பாட்டி, மாமாவை காண வேண்டும் மாமா பிள்ளைகளுடன் விளையாட வேண்டும், மாமா தோட்டத்திற்கு போக வேண்டும் அத்துடன் பல சொந்தக்காரர்களை கண்டு விடலாம் என்ற ஆசை வேறு! அம்மா எங்கள் வீட்டை  விட்டு கிளம்புவது என்பது  அப்பாவுக்கு பிடிப்பது இல்லை. ஆனால் தன் தாய் வீட்டிற்கு செல்லும் ஆசைக்கு தடை நிற்பதும் கிடையாது. சில போது அப்பாவும் எங்களுடன் வருவார்கள்.

வண்டிப்பெரியார் விட ,மிகவும் குளிரான பிரதேசம் பட்டுமலை எஸ்டேட். இது தேக்கடியில் இருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது. பச்சைபட்டு உடுத்தியிருப்பது போல் இருப்பதால் பட்டு மலை என்று அழைக்கின்றனர்.  இன்று அவ்வழியிலுள்ள பயணம் பேருந்து வசதியால் பெரிய விடையமாக புதியத்தலை முறைக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் எங்கள் குழந்தைப் பருவத்தில் அங்கு சென்று வருவது என்றால் ஓர் சுற்றுலாப்பயணம் போல் தான் இருக்கும். எப்போதும் நான் பிடிப்பது சன்னல் அருகில் தான். நம் குரல் எழுப்பது போன்றே பேருந்து சத்தவும் எதிரொலிப்பதாக தோன்றும். அந்த குளிர் பறக்கும் பனியை நோக்கி கொண்டேயுள்ள பயணம் இனிமையானது. 

பட்டுமலை என்றதும் உலக பிரசித்தி பெற்ற பட்டுமலை வேளாங்கண்ணி மாதா கோவில் பிரான்ஸிக்கன் சகோதரர்கள் நடத்தும் குழந்தைகள் அனாத ஆசிரமம் தான் அனைவருக்கும் நினைவில் வரும்.  . மாதா கோயில் மதம் கடந்து அனைவரும் வந்து செல்லும் புண்ணிய மற்றும் சுற்றுலா தலமாக இப்போது நிலைகொள்கின்றது.  இந்த கோயில்  எளிய தோற்றம் கொண்டது. தற்போதுள்ள புதுக்கோயில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜெ.பி பிரய்ட் என்பவர் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கிரானைட் கல்லால்  கட்டப்பட்டுள்ளது  என்பதை சிறப்பாக கூறுகின்றனர்.  கன்யாகுமரி தமிழக சங்குமுகம் அடுத்துள்ள புத்தன்ந்த்துறையை சேர்ந்த ஆலையத்தின் சாயலில் கட்டியுள்ளனர்.  கேரளா சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு  இந்த கோயிலின் மறைமுகமான பங்கு பெரிதும் உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு எவ்விதம் உதவினர் என்பது இங்கு பயிலும் அனாத சிறுவர்கள் நலனை அறிந்து  தான் கண்டு கொள்ள இயலும். இங்குள்ள குரிசடி காணிக்கை பெட்டியை   திருடர்கள் உடைப்பது வழக்கமான செயலாகும்.உலகில் பல இடங்களில் நல்ல சிறந்த கல்விக்கு வழிசெய்யும் பிரான்சிக்கன் சகோதரகள் இந்த எஸ்டேட் மக்களுக்கு ஒரு கல்லூரி ஏன், ஓர் மழலைப்பளி கூட திறக்கவில்லை. ஏலக்காய் காயவைத்து பதப்படுத்துவதில் இங்குள்ள தோட்டக்காரர்களுக்கு உதவுகின்றனர். பொதுவாக மலைப்பகுதி  மக்கள் அமைதிவிரும்பிகள் ஆகவே இருப்பார்கள். இயற்கையுன் போராடி வாழ்பவர்கள் என்பதால் சிறிய சிறிய சந்தோஷங்களில் இறைவனை தேடி வாழ்ந்து வருபவர்கள்.

பட்டுமலை நிறுத்தம் வந்ததும் பாட்டி குடியிருக்கும் பகுதிக்கு ஒரு மைல் நடந்து செல்ல வேண்டும். ஓடி ஆடியும் செல்வோம். வழியில் எஸ்டேடு ஆஸ்பத்திரி கடந்து நடந்து சென்றால் அழகிய சவுக்கு மரம், தேயிலை தோட்ட அதிகாரிகள் வீடுகள் வரிசையாக அதனுள்ளில் இருந்து சில கண்கள் மட்டும் எட்டி பார்க்கும். அதே பாதையில்  தேயிலை தொழில்நிலையம்(டீ பாக்டரி) கடந்து சென்றால் பூஞ்சடி பாட்டி வீடு வரும். 

பூஞ்சடி பாட்டி(பூஞ்சடி விருப்பமாக வளர்ப்பதால் இந்த பெயர். முறுக்கு சுட்டு கொண்டு வரும் பாட்டிக்கு பெயர் முறுக்கு பாட்டி!) வீடு முன் அழகிய ஓர் ரோஜா செடி உண்டு. அந்த செடி மரத்தில் நூறுக்கு மேல் பூக்கள் பூத்து குலுங்கும். அந்த பூவின் மணம் இப்போதும் நாசியை வந்தடைகின்றது. யாட்லி  ரோஸுடன் ஒத்த இதமான மணம். பூ இதழ் அதன் அமைப்பு மிக அருமையாக இருக்கும்.  அங்கு தான் ஜெயராஜ் சித்தப்பா இருப்பார்கள். சின்ன வயதில் நாங்கள் கண்ட கல்லூரி சென்று படித்து திரும்பிய ஒரே ஒரு சித்தப்பா ஜெயராஜ் சித்தப்பா தான். அதனாலே அந்தக் காலயளவில் சித்தப்பாவிடம் இனம் புரியாத ஆராதனை, அன்பு நிலைவியது  !  பின்பு அந்த சித்தப்பா எங்கள் பகுதியில் புகழ் பெற்ற தொழிலாளர் வழக்களாராக பணிபுரிந்தார். அந்த பாட்டி பாம்பனார் என்ற சிற்றூருக்கு குடிபெயர்ந்த போது அங்கு இன்னொரு தாத்தா பாட்டி குடும்பம் குடியேறியது. அங்கு தான் ரீட்டா அத்தை, லாரன்ஸ் சித்தப்பா லில்லி அத்தை என்ற ஒரு அன்பு பட்டாளம் குடியிருந்தது. அவர்கள் சாயாக்கடை மற்றும் ஹோட்டல் வைத்திருந்தார்கள்.  எங்களுக்கு ருசியான டைமன் கேக் தருவார்கள்.

பின்பு சிறிய ஓர் அருவி-கானை கடந்து சூளப்பிரட்டு செல்ல வேண்டும். அந்த ஆற்றில் தான்  பாட்டி எல்லாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது துணி துவைப்பார்களாம்.    அந்த கானில் ஓர் பெண் முனி /பேய் உண்டு என பாட்டி கூறுவார்கள். திடீர் என அங்கு நடந்து செல்பவர்களை கீழை தள்ளி விடுமாம். முனிக்கதையை சற்று விரிவாக அறிந்து விடலாம் என்றால் என்னவர் உனக்கு ஏன் முனி மேல் அக்கறை என க்கூறி தடுத்து விட்டார்

ஒரு ஏற்றம் ஏறி சென்றால் பாட்டி வீடு வந்து விடும். வீட்டோடு சேர்ந்து கடையும் இருந்தது. வீட்டு முன் குடி நீர் குழாய் இருக்கும். அத்தை வெங்கலை பானைகளை கரி -சாம்பல் சேர்த்து விளக்குவது நினைவில் உள்ளது. பாட்டி வீட்டில் தண்ணீர் கேட்டால் மோந்து தருவதாக தான் கூறுவார்கள். எங்கள் வீட்டி தண்ணீரை கோரி தான் கொடுப்போம். பாட்டி வீட்டில் சில பசுக்களையும் வளர்ந்த்தனர். காலையில் கோழி கொக்கரிக்கும் குரல் இன்றும் நினைவில் உள்ளது. அம்மா வீட்டில் இருக்கும் காலம் வளர்த்த கன்று குட்டியை பற்றி கூறுவார்கள். கன்று குட்டியும் அவர்கள் படுக்கும் அறையில் தான் தூங்குமாம். கன்று குட்டி அம்மா, மாமாவிடம் அன்பாக இருந்ததும் பின்பு ஒரு நாள் அது மலையில் உருண்டு செத்த போது அனைவரும் வீட்டில் உணவு கூட எடுக்காது அழுது புலம்பினதை பற்றிய கதைகள்  கூறும் போது ஆச்சரியமாக இருக்கும். 


இப்படி பல பல சின்ன வயது கதைகள் மனதில் ஓட பட்டுமலை எஸேட்டின் வாயிற்கதவை வந்து அடைந்தோம். பெண்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. பெண்கள் போராட்ட களத்தில் மழையில் குடையுடன் இருக்க வெள்ளைசட்டை போட்ட தலைவர்கள்  போராட்ட குழுவை உற்சாகப்படுத்தி பேசி கொண்டிருந்தனர்.  போராட்டம் நடைபெறுவதால் நாங்கள் சென்ற வாகனத்தை பாதையில் செல்ல அனுமதிக்க இயலாது எனக் கூறி ஒரு குறுகிய பாதை வழியாக செல்லும்படியாக கூறினர்.    நாங்கள்  குறுகிய பாதை வழியாக பயணித்து வண்டி சறுக்கி பள்ளத்தில் விழுமோ , டயர் உடைந்து விடுமோ என்ற பயத்தில்  செல்லவேண்டிய இடத்தை வந்தடைந்தோம்.  

அவசர கதியில் வண்டிய விட்டு  இறங்க, கீழை விழுந்து அணிந்திருந்த செருப்பும் பிய்ந்து விட்டது. செல்லும் போது இருந்த மனமகிழ்ச்சி ஒரே நொடியில் மறைந்து.   ஒரு வழியாக என் மாமா மகள் வீட்டிற்கு வந்தடைந்தோம். அங்கு ஒரு பெரியவர் வீட்டு முன் அழகான ஓர் வெள்ளை நிற ரோஜா பூத்து நின்றது. ரோஜாவை கண்டு ஆசைப்படுவதை கண்டதும் பெரியவர் பெரிய ஓர் ரோஜா கம்பை வெட்டி சிறிதாக நறுக்கி கட்டி தந்தார். ரோஸ் செடி கிடைத்ததும் விழுந்த வலியை மறந்து வீடு வந்து சேர்ந்தேன்.  

7 comments:

Manthiramoorthi Alagu said...

கதைத்துள்ளது நன்றாக உள்ளது. போகிற போக்கில் அங்கங்கே நிறையப் பொடியையும் தூவியுள்ளீர்கள். நன்று..like emoticon

Subi Narendran said...


பட்டுமலைக்கு எம்மையும் அழைத்துச் சென்று விட்டீர்கள் ஜோ. அருமையான நினைவு மீட்டலுடன் மனதைத் தொடும் பகிர்வு. உங்கள் எழுத்து லாவகத்தைப் பார்த்து வியக்கிறேன். மிக அழகாக யாவற்றையும் கோர்த்து தொய்வு இல்லாமல் எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் ஜோ.

Subbiah Ravi · Madurai Kamaraj University and the University of Madras said...


தாய் வழி பாட்டி வீடு ஒரு இழந்த சுந்தர சோலை தான்;்மிக அருமை யான பதிவு,இடம் ொு் பெயர்கள் மாறு படுகின்றதே தவிர அனைவருக்கும் பொருந்தும்.அது எப்பொழுதும் ஒரு மீண்ட சொர்க்கம் தான்.தந்தை வழி சொத்துஉடமையுடன் பிணைக்க பட்டதால் அது ஒரு ஆதரவு கோட்டை என்ற அளவிற்கே கருதப்பட்டு,தாய் வழி ுீ்உறவு அன்பின் வழியது என்று அனைவராலும் கொள்ள படுவதில் வியப்பில்லை

Valan Arul said...Valan Arul மலைச்சாரல் வழியாக கை பிடித்து அழைத்துச் சென்றது போன்ற ு இருந்தது. அம்மா வீட்டுக்குப் போகும் திருமணமான மகளின் மனநிலை. ..... பாட்டி வீட்டுக்கு போகும் குழந்தைகளின் குதூகலம். ..... எல்லாமே சொன்ன எழுத்து லாவகம். .... அருமை அருமை

Christopher Raja Kumar · St.Xavier's College Palayamkottai said...


Kudumba uravugalai marakkamal vaithu uravaduthal oru sugam ! Naanum antha paguthiil sumar30 varudangal vasitthathal pattumalai paguthiyaippatti konjam therium . vandiperiyar ninaivugal oru sugam ! Nice people !

பழனிக்குமார் பக்கங்கள் said...

அருமை

Kumaraguruparan Ramakrishnan · Sub-editor at Theekkathir said...


பட்டுமலை பூஞ்சடிப் பாட்டி வீட்டு ரோஜா மணம் எங்கள் நாசியையும் வந்தடைந்து விட்டது... பாம்பனார் ஜெயராஜ், லாரன்ஸ்-சித்தப்பாக்கள், ரீட்டா, லில்லி -அத்தைகளுடன் நாங்களும் உரையாடிக் கொண்டிருக்கிறோம்,ஜோ.

Post Comment

Post a Comment