27 Jul 2014

ஒரு பாலியல் தொழிலாளியின் சுய சரிதை-நளினி ஜமீலா

நேற்றைய தினம் புத்தகக் கண்காட்சியில் வாங்கி வாசித்து முடித்த புத்தகம். தன் வாழ்க்கை சரிதையை ஒரு பாலியல் தொழிலாளி எந்த கற்பனை இல்லாது உண்மையான வார்த்தையில் பதிந்துள்ளார்.  அவர் பாலியல் தொழிலாளியானதற்கு முதல் காரணம் வரட்டு கவுரவம் பிடித்த வேலைக்கு போகாத அவள் தகப்பன் மற்றும் கொடுமைக்காரியான பெரியம்மா தன்னலம் கொண்ட அண்ணன் எதையும் தாங்குவதாக அழுது கொண்டிருக்கும் அம்மா அடங்கிய  வசதியான குடும்பவும் தான். 
தனது ஒன்பது வயதிலே மண் சுமக்க போக வேண்டி வந்தவள். 18 வயதில் வீட்டை விட்டு வந்து ஒரு கயவனின் மனைவியாக வாய்க்கப்பட்டு இரு குழந்தைகளுக்கு தாய் ஆன சூழலில் அவன் இறந்து போக பாலியலை தொழிலாக ஏற்ற பெண்.  பின்பு ஒரு இடை வேளை என்பது போல் நாகர்கோயிலை சேர்ந்த சாகுல் என்பவருக்கு மனைவியாக 12 வருடம் வாழ்ந்த பின்பு கணவனின் போக்கால் மறுபடியும் தன் வாழ்வாதாரமான பாலியல் தொழிலையே வரிந்து கொள்கின்றார்.

கணவனின் இரு குழந்தைகளை பிரிந்து விட்ட நிலையில் இரண்டாம் கணவனின் சீனத் என்ற மகளை வளர்த்து நல்ல நிலையில் திருமணம் முடித்து கொடுத்துள்ளார். ஒரு பாலியல் தொழிலாளியாக தன்னை சமூகம் நோக்கியதையும் தன்னுடைய சமூக பார்வையும், சிறப்பாக  பாலியல் தொழிலாளிகளின் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகின்றார். இதுவரை இரண்டு ஆவணப்படம், இரண்டு புத்தகம் பல தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதை பதிவு செய்துள்ளார்.

என்னை கவர்ந்த விடையம் அவரின் பாலியல் தொழில் பற்றிய ஆழமான அறிவும் ஆண்களை பற்றிய அவதானிப்பும் ஆகும். பல வகையான பாலியல் தேவைகளை பற்றி குறிப்பிட்டுள்ளார். அறை எடுத்து தங்குவதை விட உடன் பயணிப்பது, பேசி கொண்டிருப்பது என ஆண்கள் பல விதமான விருப்பத்துடன்  அணுகுவதை பற்றி குறிப்பிட்டுள்ளார். சில ஆண்களோ திருமண உறவில் காணும் பிரச்சினைக்கு அறிவுரைகள் பெற அணுகுவதாகவும்  குறிப்பிடுகின்றார்.  கூலி வேலைக்கு மேல் தட்டு மக்கள் போக விரும்புவது இல்லை, ஆனால் அம்மச்சி வீடுகள் போன்றவை மேல் விட்டு பெண்களால் நடத்தப்படும் பாலியல் தொழில் இடமாக குறிப்பிடுகின்றார்.
ஒரு இரவில் நல்லவனான பண்பாளனாக இருந்த போலிஸ் அதிகாரி அடுத்த பகல் எந்த விதம் கொடூரனாக மாறினான் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது 13 ஆம் வயதில் வீட்டு வேலைக்கு போன இடத்தில் தந்தை வயது கொண்ட ஒரு பள்ளி ஆசிரியர் எவ்விதம் கீழ்த்தரமாக நடந்து கொண்டார் என்றும் விவரிக்கின்றார்.
சமூகத்தால் புரக்கணிக்கப்பட்ட பெண்களில் இருந்து ஒரு வரலாறு எழுத பட்டது சமூக-மக்கள் ஆய்வாளர்களுக்கு இப்புத்தகம் ஒரு பெரும் வரப்பிரசாதமாகத்தான் இருக்கும்.  எவ்விதம் ஏனும் தன் வீட்டிற்கு 3 அணா கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில்  ஒன்பது வயதில் தள்ளப்பட்ட ஜமீலா பிற்காலத்தில் பணத்தை சேகரிக்க மெனக்கெட்டதாக  தெரிய இல்லை. சொந்த ஊரில் 4 அணா பணம் பத்தாது என்ற நிலையில் நாளுக்கு 50 ரூபாய் கிடைக்கும் என்ற நோக்கில் பாலியல் தொழில் புரிய நகர் நோக்கி நகர்கின்றார். ஒவ்வொரு சூழலிலும் உடுக்கும் உடைக்கு கூட மற்றவர்களை கையேந்துவராகவே உள்ளார்.
 பின்பு சில வருடம் சாகுல் என்ற கணவர் குடும்பத்தில் மிகவும் செல்வாக்காக இருந்ததும், அவரால் புரக்கணிக்கப்பட்ட போது ஜமாத்தில் பிச்சை எடுத்து உண்ணும்  நிலைக்கு  தள்ளப்படுகின்றார். சுய மரியாதை இரண்டாவதாக இருக்க விரும்பவில்லை என பல காரணங்கள் கூறி உறவுகளை துடைத்து எறியும் போதும் பல அச்சுறுத்தல் சவால்கள், ஆபத்துகள் கொண்ட பாலியல் தொழிலில் ஈடுபாட்டுடன் தான் பங்கு பெறுகின்றார்.


நளினியின் 12 வருட கணவர் சாகுல் பற்றி குறிப்பிட வேண்டும். பாலியல் தொழிலாளி என்று அறிந்தும் தன் மனைவியாக்கி கொண்டவர்.நளினியின் மகளையும் தன் மகளாக பாவித்து தன் உறவினர்களுக்கு தன் மகள் என்றே அடையாளப்படுத்தியுள்ளார். நளினிக்கும் மரியாதயும் கண்ணியமான உறவை கொடுத்துள்ளார். நளினிக்கு இவர் வழியாக மதினி, இத்தா போன்ற உண்மையான, அன்பான உறவுகள் தந்தவர். இருந்தும் அவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டார் என்று அறிந்ததும் நளினியால் அவரை மன்னிக்க இயலவில்லை. இவருடன் வாழ்வதை விட பைத்தியக்காரியாயும் பிச்சைக்காரியாகவும் பல பள்ளி வாசல்களில் வாழ்கின்றார்.  சாகுல் பல தடவை வந்து சந்திக்கின்றார். தன் மகள் திருமணத்திற்கு தந்தை வேண்டும் என்ற சூழலில் அவசரமாக சல்லடை போட்டு  தேடி கொண்டு வரும் போதும் தன் கடமையும் செய்கின்றார். நளினியின் வாழ்க்கையில் வந்து போன ஆண்களின் எண்ணிக்கை பலர். இரு பொழுது தன் விருப்பம் இல்லாதே இரண்டு ரவுடிகளுக்கு தன்னை கொடுக்க வேண்டிய சூழல் வந்தது. ஒரு பொழுது ஒருவனுடன் இருந்து விட்டு இன்னொருவனுடன் தூங்கினேன் என்று குறிப்பிடுகின்றார். ஒரே நேரம் இரு மனிதர்களுடன் கணவர், சகோதரர் என்ற பெயரில் வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். இருப்பினும் தன்னை மீறி இன்னொரு பெண் நபர் தொடர்பு என்பதை தாங்கி கொள்ள இயலவில்லை என்பது புதிராகவே உள்ளது. ஒரு குழந்தையின் குழந்தைப் பருவம் மிகவும் முக்கியமானது. பெற்றோர்களால் சுரண்டப்பட்ட நளினி தன் வாழ் நாள் முழுதும் குறிக்கோள் அற்ற மனித உறவுகளுடனே போராட்ட உணர்வுடனே வாழ்கின்றார் என்று தான் குறிப்பிட இயலும். இவர்கள் போன்றவர்களை நம் இடத்தில் இருந்து நோக்காது அவர்கள் இடத்தில் இருந்து நோக்கி சக மனிதராக பாவிப்பதில் தான் நம் மனிதம் உள்ளது.  

இவருடைய கோரிக்கை விபசாரம் அரசு சட்டத்தால் ஏற்று கொள்ளப்பட வேண்டும் என்பதே. என்றால் இரண்டு நபர்கள் உடன் பட்டு செய்யும் போது பெண்கள் மட்டும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளார்.. அதே போன்று பாலியலை ஒரு குற்றமாக பார்க்காது ஒரு தொழிலாக பார்க்கும் படி கூறுகின்றார். தேவையுள்ளவன் பணம் கொடுத்து பெறும் போது இதில் சம்பந்தம் இல்லாதவர்கள் கருத்து தெரிவிப்பது அபத்தமகவே குறிப்பிடுகின்றார். பாலியல் தொழில் புரிகின்றவர்களை மூன்று நிலையாக பிரிக்கின்றார் முதலாவது வகை மேல்தட்டு மக்கள், இவர்களை சமூகத்தை நேரடியாக எதிர் கொள்ள வேண்டி வருவதில்லை. அடுத்த இடநிலையில் உள்ளவர்கள் தங்கள் தொழில் நலனுக்காவும் குறிப்பிட்ட லாபத்திற்காகவும் சில நோக்கங்கள் பூர்த்தி செய்யவும் விபசாரத்தில் ஈடுபடுவதாக கூறிகின்றார். ஆனால் இந்த கடைசி வகை விளிம்பு நிலை மக்களே அரசு சட்டத்தாலும் காவல்த்துறை அதிகாரிகளாலும் இந்த சமூகத்தின் பார்வையாலும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகுவதாக குறிப்பிடுகின்றார்.
 "எந்த அதிகாரத்தையும் அடக்குமுறையும் சொந்தம் கொண்டாடுதல்களையும் என்னால் பொறுத்து கொள்ள இயலாது " என்று குறிப்பிடும் ஜமீலாவின் மனபான்மை தன் சிறுவயதில் சந்தித்த கொடும் துயர்களும் தன் தாய் எதிர்க்க வலுவற்று தன் கணவனின் பிடியில் அடங்கி போனதின் எதிர் மனபாவமாகவே தெரிகின்றது. ஏதோ ஒரு வகையில் தன் சொந்த தகப்பன், உடன் பிறந்த சகோதரன், கணவர்கள், உடன் பணிபுரிந்த சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாகும் ஜெமிலாவுக்கு ஆண்கள் பற்றிய உயர்ந்த எண்னம் இருப்பதாக தெரியவில்லை. பயத்துடன் நோக்கியவர் பின்பு கேலியாகவும் வண்மாகவும் பார்ப்பதை காணலாம். தன் வீட்டில் கிடைக்காத அங்கீகாரம் அனுசரனை, பெரியம்மாவின்  அடிமைப்படுத்தல் தன் வாழ் நாள் முழுக்க வதைக்கும் நினைவுகளாகவே உள்ளது. தன் தகப்பன் பெரியம்மாவுக்கு அடங்கி போனதும் தன் மனைவியை அடிமையாக நடத்தினதும் தன் மகளை ஒரு போதும் பாச உணர்வில் நோக்காததும் அவர் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. தன் தகப்பனுக்கும் பெரியம்மாவுக்கும் தகாத உறவு இருந்திருக்காலாம் என்றும் சந்தேகிக்கின்றார். 
பாலியலை அழிப்பது அல்ல பாலியலை பாதுக்காக்க வேண்டும் என்ற தன் கருத்துக்கு பல காரிய காரணங்களை முன்வைக்கின்றார். விபசாரம், பெண் வன்கொடுமை, பெண் வியாபாரம்  போன்றவற்றில் இருந்து வேறுபட்டது என்று குறிப்பிடுகின்றார். 
தற்போதைய ஆண்களின் மனநிலையை விட  பழைய கால ஆண்கள் பெண்களிடன் பரிவுடனும் மரியாதையுடனும் நடந்தனர் என்று குறிப்பிடுகின்றார். பழைய நாட்களில் 40 வயதுக்கு மேல் பெண்கள் வயதானவர்கள் என்ற பார்வையில் ஆண் கொடூரர்களிடம் தப்பித்தது வந்தனர்.  தற்போது 55 வயது பெண்ணும் ஆண்களின் அச்சுறுத்தல் பார்வையில் வாழ்வதாகவும் பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிடுகின்றார். பழைய நாட்களில் பாலியல் தேவைக்கு பெண்களை தேடிவரும் வாடிக்கையாளர்களான ஆண்கள் தன்னை விட சிறிய வயது பெண் என ஆசைப்பட்டது போல் தற்கால இளைஞர்கள் வயதான பெண்களை விரும்புகின்றனர் என்கிறார். பாலியல் தேவை என்பது ஆணுக்கு மட்டுமானது அல்ல அதில் பெண் தேவையும் உள்ளடங்கியது என்று கூறும் நளினி ஜமீலா கேரளாவில் பெண் பாலியல் தொழிலாளர்கள் விட ஆண் பாலியல் தொழிலாளர்கள் தான் அதிகம் உண்டு என கூறியுள்ளார். 

தன் குடும்ப சூழலில் இளமையில் ஒரு தொழிலும் கைவசம் இல்லாத நிலையில் விபசாரத்தை தேர்ந்தெடுத்த நளினி; சாகுல் என்ற கணவருடன் வாழும் போதும் தொழில் செய்து கவுரவமாக வாழ்த்துள்ளார். கணவரால் புரக்கணிக்கப்பட்ட நிலையில் மறுபடியும் விபசாரத்தை தேர்ந்தெடுத்ததில் அவர் குழந்தைப் பருவ அவர் மனநிலையும் காரணமாக இருக்குமோ என்று வினா எழுகின்றது.  இருப்பினும் தன் மகள் தன்னை போல் ஒரு தொழிலை ஏற்க கூடாது என்பதில் காத்திரமாக இருக்கின்றார்.

நமது இந்திய பாரம்பரிய அடித்தளமான  குடும்பம் என்ற கட்டமைப்பு எவ்வளவு ஏமாற்று கொண்டது,  அங்கு பெண்கள் நிராதரர்களாக விடப்படுவதும் அடிமைப்படுத்தப்படுவதும் வசதியான வீட்டிலும் கவுரவம் பெண்கள் கைவிடப்படுவதும் மனம் குமுறச் செய்கின்றது. 
வசதியான குடும்பத்திலுள்ள ஆசை மகள், குழந்தை தொழிலாளி, பாலியல் தொழிலாளி, கவுரவமான குடும்பத்தலைவி பாசமுள்ள தாய், பைத்தியக்காரி, நோயாளி தற்போது பாலியல் தொழிலாளி , போராளி என பல நிலைகளில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களையும் கண்டு உணர்ந்த ஜெமிலாவின் மாயம் சேராத வார்த்தைகள் மனிதகுலத்திற்கு நல்லதே பயிர்க்கும் என நம்பலாம்.



7 comments:

  1. Subi Narendran · Top CommenterJuly 28, 2014 10:05 am


    அருமையாக எழுதி இருக்கிறீர்கள் ஜோ. புத்தகத்தை படித்தது போலவே இருக்கிறேது. கதாசிரியரின் கூற்றுகளை சரியான முறையில் புரிந்து ஆராய்ந்து பகிர்ந்திருக்கிறீர்கள். விபச்சாரம் என்றாலே பாவம், பேசக் கூடாத ஒன்று என்ற எண்ணத்தை மாற்றி நாம் அறியாத நிறைய விடயங்களை இந்தப் புத்தகம் சொல்வதை அறியக் கூடியதாக உள்ளது. நல்ல பகிர்வு. நன்றி ஜோ.

    ReplyDelete
  2. Bama Ithayakumar · Vancouver, British ColumbiaJuly 28, 2014 10:06 am


    உண்மைதான் , வாசித்த போது புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது , ஆளுக்கு ஆள் கண்ணோட்டம் மாறுபடுகிறது , நியாமான கேள்விகள் மனதை தொடுகின்றன .

    ReplyDelete
  3. அந்த பெண்ணின் கருத்துகளும் கேள்விகளும் மிக நியாமானவைகள்தான் ஆனால் அதற்கு உடன்பட இந்த சமுகம் தயாராக இல்லை என்பதுதான் உண்மை உங்கள் பதிவை படித்த போது அந்த புத்தகத்தை முழுவதும் படித்தது போல ஒரு உணர்வு... பகிர்வுக்கு பாராட்டுக்கள் ஜோ

    ReplyDelete
  4. சிறந்த ஒரு பதிவு .
    சில வருடங்களுக்கு முன்பு எனது இலங்கை நண்பர் ஒருவர் இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கும் படி வேண்டுகோள் விடுத்த இலங்கை சமூக ஈடுபாடுகள் கொண்ட முற்போக்கான முஸ்லிம் பெண்மணி ஒருவர் இலங்கையில் முஸ்லிம் மதவாதிகளால் தான் சொன்னதை திரும்ப வாபஸ் பெறும் படி பயமுறுத்தி அந்த பெண்மணி தலைமறைவாக வாழ்ந்து பட்ட பாட்டை எனக்கு அறிய தந்தார்.
    ஆனா அதன் பின்புதான் நான் நிறைய,நிறைய அறிந்து கொண்டேன். நம்ம ஊர்களில் பகுத்தறிவாளர்களாக சொல்லி கொள்பவர்கள் கூட இலங்கையில் உள்ள மத வாதிகளின் சிந்தனை நிலையிலேயே இன்னும் இருக்கிறாங்க என்பதை.
    வாழ்த்துக்கள் உங்களுக்கு.
    http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/11/121121_sharmilacontroversy.shtml

    ReplyDelete
  5. விரிவான விமரிசனம்.
    பாலியல் பற்றிப் பேசவே தயங்கும் போலிச் சமுதாயத்தில் இவர் திறந்த புத்தகமாக எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. படிக்கத் தூண்டும் நூல் குறிப்பு.

    ReplyDelete
  6. Tony ArockiyaRaj · Following · St.Xaviers College (Autonomous) TirunelveliJune 30, 2015 11:05 am

    இந்த காலத்துல இத பத்தி ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்துல பாக்குறதே ரொம்ப கஷ்டம் இதுல. அத பத்தி ப்ளொக்ஸ் வேற எழுதிருக்கேன்களே மேடம் . யு ஆர் கிரேட்

    ReplyDelete
  7. Pathmanathan Nalliah · Following · Top Commenter · Rektor/Principal at Realfagakademiet OsloJune 30, 2015 11:07 am

    நல்ல கட்டுரை .J P Josephine Baba , புத்தகம் வாசிக்க ஆசிஅயி ஏற்படுத்துகிறது ..

    ReplyDelete