header-photo

பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை

முதல் காட்சியே நெற்றி பொட்டில் அடித்தது போல் நாயை இரெயில் தண்டவாளத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்படும் காட்சியுடன் துவங்குகின்றது. பின்பு சமூக அவலத்தை எடுத்து சொல்லும் கருத்துள்ள சோகத்தை அள்ளிகொட்டும்  பாடல். 
அப்புறம் ஆங்கில மீடியம், தமிழ் மொழிகல்வி என கல்லூரி வாழ்க்கையுடன் நம்மை அழைத்து செல்கின்றனர். அங்கு கிடைக்கும் பெண் நட்பு கதாநாயகனுக்கு சிறப்பாக  படிக்கும்   உந்து சக்தியை தருகிறது. 

பின்பு கல்யாணத்திற்கு அழைப்பது , கதிர் அடிபடுவது , அவர் அப்பா அவமானப்படுத்தப்படுவது என கதை இறக்கு முகமாக பயணிக்கின்றது. எல்லா படத்திலும் இருந்து மாறுபட்டு, வலுகட்டாயமாக பெண்ணை  கடத்தி செல்லும் கதாப்பாத்திரப்படைப்பில் இருந்து மாறுபட்ட ஆளுமையான கதிராக பேசவைப்பதுடன் படம் நிறைவு பெறுகின்றது. 
 முதன்மை கதாப்பாத்திரத்தை இரெயில் கட்டிவைத்து கொலை முயற்சி செய்வதும் நாயை இரயில் தண்டவாளத்தில் கட்டிவைத்து கொலை செய்வதும் விழுப்புறத்தில் கொலையுண்ட இளவரசனை நினைவூட்டாது இருக்க இல்லை.

எல்லா கல்லூரி  சீனுகளிலும் எங்கள் கடந்த மூன்றாம் ஆண்டு விஸ்காம்  மாணவர்கள் பால் பாண்டி, பால  முரளிகிருஷ்ணன், வள்ளிநாயகம், கமலக்கண்ணன், ஜேசு போன்றவர்கள் நடித்திருந்தது பெருமையும் மகிழ்ச்சியுமாக  இருந்தது.

மண்ணின் கலைகள், மண்ணின் மனிதர்களின் இயல்பான உரையாடல்கள் கலைகள் உருவகப்படுத்திய விதம் அருமை. கதிரின் நடிப்பும் அருமை. கதைத்தளத்திற்கு பொருந்தும் பாடல் வரிகள், பாடல்கள் வரிகள் இசை அழகு.

நெல்லையை சுற்றிய ரோடுகள், எங்கள் தூயசவேரியார் கல்லூரி விடுதி சாலை, ஜான்ஸ் கல்லூரி போன்ற இடங்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.பரியன் தந்தை யாக நடித்த நடிகரின் நடிப்பு அபாரம்.பரியன் அப்பா

முரண்கள் கொண்ட இடங்கள். 
 • முதன்மை பெண் கதாப்பாத்திர படைப்பு
படிப்பில் கெட்டி ஆனால் சமூக அறிவில் சூனியம்.  90 களிலுள்ள பெ?ண்களை போல் உணர்ச்சிவசப்படுகின்றார். பையன் பிரச்சினையில் உச்சத்தில் உயிர் போகும் போராட்டத்தில் உள்ளார்; பெண் கதாப்பாத்திரமோ முட்டாய் வாங்கி கொடுத்து சின்னபுள்ளையா உருகுகிறது, அழுகின்றது, சிரிக்கின்றது, சினுங்குகின்றது.!!!

 • கல்லூரி முதல்வர்
படிப்பு நம்மை உயர்த்தும் என்ற நல்ல கருத்தை முன் வைய்ப்பவர்.  அடுத்தவன் நம் முன் கைகட்டி நிற்பான் என போதிக்கின்றது;  கைகட்டி நிற்பதும் கைகட்டவைத்து நிற்க வைக்கப்படுவதும் இழிவு நிலையே.
மாணவர்களுக்குள் ஒரு பிரச்சினை என்றதும் சரியான நிலைபாடு எடுக்காது “ நம்மால் அவன்களை அடக்க இயலாது, இவன் அடக்கட்டுமே, போராடி சாகட்டும் போன்ற வசனங்கள் சமூக வளர்ச்சிக்கு என்ன சொல்ல வருகிறது. 
 கல்லூரி முதல்வர் பதைவியை தன்னால் திரன்பட நேரடியாக செயல்படுத்த இயலாது மறைமுகமாக ஒரு கோஷடிக்கு இடம் கொடுத்து இன்னொரு கோஷ்டியை அடக்க நினைக்கும் நிர்ஜீவனான அதிகார நிலை.
கதிரை பெண்கள் கழிவறையில் தள்ளி விட்டது எதிர் அணி என்று அறிந்தும் கதிர் பெற்றோரை மட்டும் வரவைப்பது முதல்வர் என்ற அதிகாரத்தை வலிமையானவர்களுக்காக வணங்குவது போல் தான் உள்ளது,

 • அடுத்து பேராசிரியை என்ற கதாப்பாத்திரம்

இரு மாணவர்களுக்கு ஏதோ பிரச்சினை என்றால், சரியாக பிரச்சினையை புரியவைக்காது பெண் மாணவியிடம் ”அவன் உன்னை காதலிக்கான்”  என கல்யாணத் தரகர் வேலை செய்யும் அவலம்.


 • பேராசிரியை : மாணவரும் மாணவியும் பேருந்து நிலையத்தில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். கரடி மாதிரி புகுந்த ஆசிரியையை கண்டதும் மாணவர்கள் எழுந்து ஒரு பேருக்குக்கூட வணக்கம் செலுத்தவில்லை. ஆசிரியையோ, ”நான் உனக்கு தேவதையா, எத்தனை தேவதை உண்டு என வினவும்  ,  வழியும் உரையாடல்
 • அப்பா கதாப்பாத்திரம். நல்லவரா கெட்டவரா? கல்யாணத்திற்கு வந்த பையனை  தேவையில்லாது விசாரிப்பது , அறையில் பூட்டி வைத்து அடிவாங்க காரணமாக இருப்பது, அப்புறம் கெஞ்சுவது, கடைசி எல்லாம் முடிந்த பின்பு போய் வழிந்து கொண்டு ”என்ன நடக்குமோ தெரியாது அப்ப பாப்போம்”ன்னு எதிர்பார்ப்பை உருவாக்குவது. இவ்வளவு நேர்மறையான  தகப்பன் தன் பெண் பிள்ளைக்கு அறிவுரை வழங்காது  இன்னொரு பெற்றோரின்  மகனை அடிக்கும் மன நிலை என்னது.
 • பல ஆணவக்கொலைகள் செய்யும் முதியவர் கதாப்பாத்திரம்! எந்த படத்திலும் காணாத வித்தியாசமான வில்லன்.  இரக்கத்தோடு மதிப்புடன் காண வேண்டிய முதியவர்களை கண்டாலே இனி பயம் தான் வரும். 
 • அரசியல்சட்டம் படிக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே ஜாதிய கட்டமைப்பில் நின்றுகொண்டு படித்தால், வாழ்க்கையை எதிர் கொண்டால் கலைக்கல்லூரி பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் இருந்து என்ன அரசியல் மாற்றத்தை எதிர் நொக்க இயலும்.
 • சமூகத்தில் புரையோடிகொண்டிருக்கும்  அழுகி கொண்டிருக்கும் ஜாதி என்ற புண்ணை நவீன சிந்தனையால் தீர்வு தேடாது அடிமட்ட,  சிந்தனையுடன் வண்மத்துடன் எதிர்கொள்வது போல் எடுக்கப்பட்ட பல காட்சிகள் புண்ணில் வேல் பாய்ப்பது போல் தான் உள்ளது. 
 • சமூகத்தில் மறைந்து கொண்டிருக்கும் ’சீமியாட்டிக்’ ஜாதிய  அடையாளங்களை எல்லாம் படமிட்டு காட்டி இளம் சமுதாய குழந்தைகள் மனதில் ஒரு வண்மத்தை பரவவும் பல சீன்கள் காரணமாக அமையும் . 
 • ஒரு சீனில் மாணவர் கதிர் மாணவிகள் கழிவறையில் விழவைக்கப்படுவார். மாணவிகள் அலறுவதும் கதிரை கண்டு பாம்பை காண்பது போல் நெளிவதும் ஓடுவதும் மிகவும் அபத்தமாக உள்ளது. சட்டம் படிக்க வரும் மாணவிகள் இந்தளவு கோழைகளும் பயந்தாம்கொள்ளிகளுமா? 
 • வரலாற்றை அல்லது நிகழ்கால நிகழ்வுகளை வைத்து எடுக்கப்பட்ட சமூக கருத்துள்ள வண்முறைப்படமாகவே எனக்கு தோன்றியது. 
 • எத்தனை யுகங்களுக்கு தான் கல்லூரி சூழல், கல்லூரி பேராசிரியர்களை கேனைகளாக உருவகுப்பீர்கள்?
 • எல்லா பொழுதும் பாதிக்கப்படும் கதிர் ஒருபுறம், எதிர் அணி நெஞ்சை நிமர்த்தி அடாவடித்தனம் பண்ணுவார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் கீழ் இயங்கும் அரசு , அரசின் கீழ் இயங்கும் சுதந்திர இந்தியாவின் கல்வி நிலையங்களில் நிலை இது தானா?
 • நல்ல திரைப்படம். ஆனால் கதாப்பாத்திரப்படைப்பில் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய படம் இது. 

திரைப்படம் என்பது கோஷம் அல்ல, அறிவுரையல்ல  ஆனால் ஒரு தீர்வாக அமையவேண்டியது தேவையாகும். இயக்குனர் மாரி செல்வராஜிற்கு வாழ்த்துக்கள். இன்னும் பல படங்கள் எடுத்து வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்.

0 comments:

Post Comment

Post a Comment