11 Jun 2017

Teachers make difference – ஆசிரியர்கள் உருவாக்கும் மாற்றங்கள்.



Teachers make difference என்ற தலைப்பில் ஜூன் 3, 4  இரண்டு நாட்கள் நடந்த கருத்தரங்கில் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றேன்.  நிகழ்ச்சி ஒருங்குணைப்பாளர் நண்பர் பால முருகன் அவர்கள் வாயிலாக அறிந்து, பங்கு கொண்ட நிகழ்வாகும்.

 தூத்துக்குடி றோட்டறி கிளப்பு மற்றும் விவேகானந்தா  தொண்டு நிறுவனத்தின்  தலைமையில் நடந்த பட்டறையாகும். கோயம்பத்தூரை சேர்ந்த குழந்தை மேம்பாட்டு வல்லுனரான திருமதி பி. ஜெயஸ்ரீ   பயிற்சி பட்டறையை நடத்தினார்கள்.

வீட்டிலிருக்கும் மகன்களுக்கு பழ ரசம், சாப்பாடு என தயார்ப்படுத்தி வைப்பதற்குள்; காலை 7 மணிக்கு எங்கள் வீட்டு அருகாமையில் வரும் பேருந்தை பிடிக்க இயலாது போய் விட்டது.  ஒரு பர்லாங்கு நடந்து சென்றுஅடுத்த பேருந்தை பிடித்து புது பேருந்து நிலையம் வந்து  சேர்ந்து தூத்துக்குடி பேருந்தில் இருக்கையை பிடித்து விட்டேன்.  தூத்துக்குடியில் இருந்து இன்னும் சில மைல்கள் பயணித்தால் அன்னம்மாள் கல்லூரி வந்து அடையலாம்அதன் எதிர்புறத்தில் விவேகானந்தா தொண்டு நிறுவனம் செயலாற்றுகின்றது. தூத்துக்குடியின் எந்த நெரிசலும், அலம்பும் இல்லாது அமைதியான பகுதியில் அமைந்து இருந்து  ஆசிரமம் .  நான் செல்லும் போது நிகழ்ச்சி ஆரம்ப நிகழ்வு நடந்து கொண்டிருந்து. நிகழ்ச்சியின் நோக்கம் கல்வி மாற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு பற்றி நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் கருத்தை முன் வைத்து பேசினர். காமராஜ் கல்லூரி தலைவர் பட்டறையை துவங்கி வைத்தார்.


அடுத்து பயில வந்த நாங்கள் அனைவரும் எங்களை அறிமுகப்படுத்தி கொண்டோம்.  மழலை பள்ளி ஆசிரியர்கள் துவங்கி கல்லூரி பேராசிரியர்கள் வரை  பட்டறையில் பங்கு பெற்றோம் என்பதே சிறப்பம்சம் ஆகும். சொந்தமாக டூயூஷன் நடத்தும்   கல்லூரி மாணவர்கள் இருவரும்  பங்கு கொண்டனர். மாணவர்களின் பார்வையில் கல்வி சூழல் பற்றி தங்கள் ஆணித்தரமான கருத்தை ஒவ்வொரு நிலையிலும் எடுத்துரைத்தனர். பொறியியல் பட்டதாரியான,  போட்டி தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் நிறுவனம் நடத்தும் ஆசிரியரும் பங்கு பெற்றார். இவர் தன்னை அறிமுகப்படுத்தும் வேளையில் தமிழக  கல்வி தரத்தை பற்றியும் கல்வி திட்டத்தை பற்றி பல விமர்சங்கள் அடுக்கினார்.  அரசு அலுவலகத்தில் இருந்து மனிதவளத்துறையை சேர்ந்தவரும் பங்கு பெற்றார்.  உயர் பள்ளி வகுப்பு ஆசிரியரும் பங்கு பெற்றார். கல்வியல் பள்ளி ஆசிரியர்கள் இருவர் பங்கு பெற்றனர்.


அரசு கல்வி , மத்திய , தேசியபல வகையான கல்வித்  திட்டத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களும், எந்த கல்வி திட்டத்தில் படித்தாலும் எல்லா மாணவர்களும் மேற்கல்விக்கு வந்து சேரும் பல்கலைகழக திட் டத்தின் கீழ் இயங்கும்  கல்லூரி பேராசியர்கள்  என எல்லோரும் ஒரே இடத்தில் ஒருமித்து மாணவர்களை நாட்டின் வளமாக மாற்ற வேண்டிய தேவையும் அதில் ஆசிரியர்கள் பங்கைப்பற்றி விவாதித்தோம் .

 கருத்தாக்க விவாதம்., அதன்  பலன் எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதை வெறும் சொற்பொழிவு பேருரை என்று இல்லாது விளையாட்டு, குறும் கேள்வி , குறிப்பிட்ட நிகழ்வை சிறு குழுவாக விவாதித்து முடிவிற்கு வருவது என ஒரு நாள் பட்டறை சிறப்புற  நடந்து முடிந்தது.

எனக்கு ஒரு நாள் பங்கு பெறும் நோக்கமே இருந்தது. அதனால் ஜெயஸ்ரீ மேடம், ஒருங்கிணைப்பாளர் பாலா சாரிடம் நாளை வர இயலாதுஎன்று அனுமதி பெற்று விடை பெற்றேன். நீங்கள் நாளையும் பங்கு பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் எனக்கூறி விடை தந்தனர்.


வீடு  இரவு 9 மணி வந்து சேர்ந்தேன். சோர்வு ஒரு புறம். அடுத்த நாள் காலை 5 மணிக்கே விழிப்பு தட்டியது. இன்றைய வகுப்பை இழந்தால் நேற்றைய வகுப்பின் அர்த்தம் அற்று போகும் என வேலையை விரைவாக முடித்து வைத்து பேருந்தை பிடித்து பயிற்சி இடம் வந்து சேர்ந்தேன்.

ஒரே கேள்வியை வைத்து குழுவாக கருத்து உருவாக்கம், ஒரே பிரச்சினைக்கு  தனி நபர்களின் அனுபவம் சார்ந்த சிந்தனை, விளக்கம் மற்றும் தேர்வு, கல்வி என்பதை எந்த நோக்கத்தில் மாணவர்களை அணுக வேண்டும். படிப்பித்தல் என்பதையும் கடந்து மாணவர்களை நாட்டின் வளமாக உருவாக்குவது, வகுப்பறைகள் என்பது தேர்வு மதிப்பெண்ணையும் கடந்து  படித்தல், தெரிதல், புரிதல், ஆராய்தல், என்ற நிலைக்கு கொண்டு செல்லுதல், மாணவர்கள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக வரும் சூழலை உருவாக்குதல், ஆசிரியர்களும் மகிழ்சியாக வருதல் என பல நிலைகளில் கல்வி சூழலை பற்றி ஆராய்ந்து கலந்து ஆலோசித்தோம்.


சோர்வு தட்டும் போது குழு விவாதம், குழு விவாதம் நிறைவடையும் போது விளையாட்டுகள் என இரண்டு நாள் பயிற்சி பட்டைறை மிகவும் நிறைவாக; விருவிருப்பாக உபயோகமாக இருந்ததுஆசிரியர்கள் என்ற தோரணையை, நிலையை மறந்து மாணவர்களை போல்  மீன் குளம், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகள் நாங்கள் விளையாடினது, மாணவர்களை சோர்வில்லாது எவ்வாறு  வழி நடத்தலாம் என போதித்தது. ஸ்மார்டு பலகை, சாக்கு பீஸ் பலகை, உரையாடும் கற்பித்தலையும் கடந்து அட்டைகள் வழியாக அர்த்தங்களை விளக்கும் சூழல் இன்னும் சுவாரசியமாக இருந்தது

   
மாணவர்கள் கல்வி கற்பதில் பெற்றோரின் பேராசை, பெற்றோரின் பேராசையை காசாக்க துடிக்கும் தனியார் கல்வி சூழல், பொறுப்பற்ற அரசு பள்ளி சூழல் இதன் மத்தியில்  கற்றல் ஆசையை மாணவர்கள் பக்கம் எட்ட வைக்க ஆசிரியர்களின் பங்கு அளவிட இயலாதது. 2 வயது ஆகும் முன்னே பள்ளியில் சேர்க்கும் பெற்றோர், மூன்று வயது ஆகும் முன் தன் பிள்ளை எழுத வேண்டும் என அடம் பிடிக்கும் பெற்றோர், பல பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவ சமுதாயத்தை கற்பதில்  ஆக்க பூர்வமாக நகர்த்துவோம் என உறுதி பூண்டு கல்வி சூழலை அச்சத்திற்கு உள்ளாக்கும் தனியார் கல்வித்துறை, அரசின் லாபநோக்கான கல்வி நயங்கள், மாணவர்களின் உள-மன நலனில் அக்கறை இல்லாது முன் செல்ல கல்லூரி எட்டும் மாணவர்கள் கல்வியோடு மட்டுமல்ல கல்வி சூழல் கல்வியாளர்கள் மேல் வெறுப்பு கொண்டு இருக்கின்றனர் என எல்லா பரிமாணங்களை பற்றியும் விவாதித்தோம்

கல்லூரி விடுமுறை நாட்களில் ஒரு பயிற்சி பட்டறையில் பங்கு பெற்றதும் எங்கள் மாணவர்களை வழி  நடத்த இந்த பட்டறை வழியாக நாங்கள் பெற்ற ஊக்கவும்  உற்சாகவும்    மிகவும் பெரிது.

சிறந்த ஆசிரியையாக மதிப்பிற்குரிய திவ்யா டீச்சரும் சிறந்த ஆண்பால் ஆசிரியாராக ராஜாவும் தேர்வாகி   பரிசு பெற்றனர். நிகழ்வை பற்றிய எங்கள் கருத்தை ஆசிரியர்களை பிரதினித்துவப்படுத்தி நான் நன்றியையும் வாழ்த்துதலையும் எங்கள் கருத்தையும் தெரிவித்தோம். அதே போல் காமராஜ் கல்லூரி கார்ப்பரேட் துறைத் தலைவரும் பயிற்சி பட்டறையை பற்றிய நல்ல செய்திகளை பகிர்ந்தார்.

அறிமுகமே இல்லாது ஒருமித்த  நாங்கள் 23 பேரும் பட்டறை முடியும் தருவாயில் நட்பில் இணைந்து இருந்தோம். நிகழ்ச்சி முடிவில் சாற்றிதழுடன் சில புத்தகங்களும் பரிசாக பெற்று விடை பெற்றோம்.

பட்டறையை நடத்திய ஜெயஸ்ரீ அவர்களின்  கல்வி மற்றும் குழந்தைகள் மனநலம் பற்றிய பல கருத்துக்களை பகிர்ந்தார். ஒரு பட்டறையை சிறிதும் சோர்வற்று மிகவும் ஆக்கபூர்வமாக நடத்தி சென்ற அவருடைய திறமை அளபரியாதுஒரு கருத்தை மிகவும் நுட்மாக ஒவ்வொருவர் மனதிலும் பதிய வைத்த ஜெயஸ்ரீ அவர்கள் பாராட்டுதலுக்குரியவர். அவருடைய கருத்தாக்கங்கள் கல்வி நலனுடன் சமூக அக்கறையும் பொதிந்து இருந்தது. 

இந்த பட்டறையில்  அரசு ஆசிரியர்கள் பங்கு பெறாதது கவனிக்கப்பட வேண்டியது. மிகவும் குறைவான ஊதியம் பெற்று மிகவும் கடினமான வேலைப்பழுவுடன் இயங்குபவர்களே தனியார் கல்விக்கூட  ஆசிரியர்கள். வேலை ஸ்திரதையும்  மிகவும் குறைவு. இருப்பினும் தங்கள் கடமையை செவ்வனே செய்ய வேண்டும் என்ற உந்துதலில் தனியார் ஆசிரியர்கள் கூடி பயிற்சி பெற்ற நிகழ்வு எடுத்து சொல்லக்கூடியது..