header-photo

மாமியார் வீட்டு உறவுகள்!


அத்தானுக்கு விபத்து என்றதும் காயம் கடும் காயம் என்பதை கடந்து என்னால் ஒரு போதும் சிந்திக்க இயலவில்லை. அவர் போன பின்பு பல யாதார்த்தங்களை சந்திக்கும் சூழல் சுழியில் மாட்டி கொண்டது போல் உணர்ந்தேன். விதியின் கொடூரம் இந்தளவு என்னை தாக்கும் என நம்பவே இயலவில்லை

இயல்பாகவே வேலையில் சுறுசுறுப்பும், சுய சிந்தனையும் ஒட்டி கொண்டதால் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தில் என்னால் ஆன முடிவுகள், அத்தான் ஒத்துழப்புடன், வாழ்க்கையை முன் நகர்த்துவதுமாகத் தான் இருந்தது.

இந்த திருமணமே ஒரு விபத்தாகத்தான் வாழ்க்கையில் வந்தது. அந்த விபத்தை மறிகடக்கும் முன்னே அத்தான் விபத்தில் மறைந்தது தான் மாபெரும் விபத்து.

நாம் ஏமாற்றப்படுவது நாம் நேசிப்பவர்களால் நாம் நம்புவர்களால் தான் என்பதை கூறும் விதமாக முதல் ஏமாற்றம் பெற்றோர்களால் நிகழ்ந்தது. நல்ல வசதி வாய்ப்பாக வளர்த்து விட்டு தேயிலை தோட்ட அதிகாரி என்ற ஒரே தகுதியில் வேறு எந்த தகுதியும் இல்லாத குடும்பத்திற்குள் அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அந்த நேரம் நிலபுலன்களை விற்காது என் கல்யாணத்தை நடத்த வேண்டிய நிற்பந்தம். மாப்பிள்ளை வீடு பார்க்க வந்த போது அவர்களை கொண்டாட வைத்த ஒரே விடையம் நாசரேத் ஆலையம் மட்டுமே.   பெரிய கோவில் அங்கிருந்து பிரார்த்தனையுடனே என் வாழ்க்கையை தள்ளி விடலாம் என்றனர்.

மாமியார் வீட்டில் வந்த ஒரே வாரத்தில் அந்த வீட்டின் லட்சணம் தெரிந்தது. என்னை ஈடாக வைத்து அப்பாவிடம் பணம் பிடுங்க வேண்டும் என்ற நோக்கம் ஒன்றே இருந்தது.  அந்த முதல் மூன்று வருடம் பைத்திய மருத்துவமனையில் இருந்தது போல் தான் வாழ்க்கை நகர்ந்தது.
அந்த கொடிய சூழலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று தஞ்சம் புகுந்த இடம் தான் தூத்துக்குடி. அங்கு நான்கு வருட வாழ்க்கை. அத்தான் சில தனியார் அலுவலங்களீல் சாதாரண கணக்கராக வேலை பார்த்தார். வளர்ந்த சூழலில் புகுந்த வீட்டில் எதிர் கொண்ட தரித்திரத்தில் என்னை மீட்டு செல்ல வைத்தது அப்பா கொடுத்தனுப்பிய நகைகள் தான். அப்பா கொடுத்த பணத்தை கிடைத்த உடனே தங்கள் வங்கி கணக்கில் சேர்த்து மாப்பிள்ளை வீட்டார் தங்கள் இருப்பை நிலை நாட்டினர். நியாயம் என்பது பெண் வீட்டில் கொடுக்கும் பணம் வைத்தே கோட்டு சூட், தாலி வாங்கி கல்யாணச் செலவு நடத்துவதே என்றனர் முறைவாதிகள்.

அத்தான் படிப்படியாக வளர்ந்தார் உயர்ந்தார். பல கணிணி சிறு படிப்புகள் முடித்தார். கணக்கு என்றால் பாபாவை அடித்து கொள்ள இயலாது என்று பெயரெடுத்து வந்த வேளையில் ஈனாப்பேச்சி போன்று ஒட்டி கொண்டு விட்டனர் அவர் குடும்பத்தினர்.  அவருடைய சீர் கெட்ட நேரம் நான் உதவியதையோ நான் உடன் இருந்ததையோ நினையாது தாய் விருப்பம் நிறைவேற்ற கத்தார் போயே தீருவேன் என்ற நிலையில் உலகை விட்டே போய் விட்டார்.

எல்லா பிடியும் தாயிடமே அடமானம் வைத்து விட்டு சென்று விட்டார் என்னவர். அந்த தூய அன்பிலும் அந்த இணைபிரியா நட்பையும் அத்தான் தனக்காக பயண்படுத்தி கொண்ட அதிற்ச்சி என்னை விட்டு ஓய்ந்த பாடில்லை. அத்தானாலும் எட்டு மாதம் பொய் சொல்லி மறைக்க  இயலுமா?வீட்டிற்கு வந்து உரிமையுடன் பேசி செல்லும் நண்பர்கள் கூட எங்கள் குடும்ப நலனை பார்க்கவில்லை, அத்தானை வைத்தே தங்கள் நலனையும் தேடி கொண்டனர்.இப்போது அவருக்கு இப்படி ஒரு விபத்து நடக்கும் என்றிருந்தால் நாங்கள் சொல்லியிருப்போமே என முதலை கண்ணீர் வடிப்பதை கண்டேன்.

இனி என் மகன் இல்லாது இவ சம்பளத்தில பிள்ளைகளை எப்படி வளக்க இயலும் என எகத்தாளத்தில் சிரித்த போது நான் நினைத்தேன் பிள்ளைகள் படிப்பு சிலவை ஏற்று விடுவார்கள் போலும் என்று. அத்தானை வழி அனுப்ப வந்த உறவினர்கள் ஆலயம் வந்து ஆலய ஜெபத்துடன் திரும்பினர். ஒரு குழு வந்து  இனியுள்ள வாழ்க்கையில் என்னுடைய நன்னடைத்தை வாழ்க்கைக்கு வேண்டி ஜெபித்து சென்றனர்.

நானும் பிள்ளைகளும் புது உலகை சந்திக்க ஆரம்பித்தோம். வங்கியிலிருந்து கடம் எடுத்து தம்பிக்கு கொடுத்துள்ளாதால் அவர் வைத்திருந்த சிறு சேமிப்பும் என்னால் பயண்படுத்தா இயலாவண்ணம் முடக்கப்பட்டது. முதல் இரண்டு மாதம் என்  உறவினர்கள் பராமரிப்பில் நாட்கள் நகர்ந்தது. என் வேண்டுதல் இல்லாதே என் நண்பர்கள் உதவியும் பெறப்பட்டேன். ஆனால் கடந்த எட்டு மாதம் அவரை அட்டை போல் பற்றியிருந்த தம்பியால் அடக்கத்திற்கு ஏன் எதற்கும் பங்கு கொள்ள மனதில்லை. என்னவரிடம் ஏமாற்றின பணத்திற்கு பதில் தரவும் மனமில்லை.

பெற்ற தாய் கடந்த எட்டு மாதமாக வீட்டு காய்கறி செலவு மின்சாரம் வீட்டை சுத்தப்படுத்த என என்னவரை ஆட்கொண்டவர் எங்களை தூக்கி எறிந்தது போல் பேசி உறவென முறித்து கொண்டார். தொலை பேசி எடுத்தாலும் கதைப்பது இல்லை; அத்தான் நாட்களுக்கு பிரார்த்தனைக்கு அழைத்தால் வருவதில்லை. மகன் கல்லூரி க்கு சேர்ந்த போது விசாரிப்புகள் இல்லை. மிகவும் பக்குவமாக மிகவும் சாதுரியமாக ஒதுங்கி இருந்து கொண்டார். இனி மருமகள் வாழ்க்கை அவர்களுக்கு ஒரு கேள்வி இல்லை. ஆனால் இதே அம்மையார் அத்தான் உள்ள போது தனக்கு மருத்துவ தேவை என்றால் தஞ்சம் அடைவது எங்கள் வீடாகத்தான் இருந்தது. ஒரு கேடு கெட்ட காலத்தை சந்திக்கும் போது; தாயே ஓடி ஒளிந்து கொள்ளும் போது  உறவுகளை எண்ணி என்ன பலன். கடந்து ஆறு மாதமாக ஒரு கைபேசி விசாரிப்புகள் கூட இல்லை, வந்து நோக்கி செல்ல கணவர் உறவுகள் இல்லை என்கிற போது என்ன நினைப்பில் அத்தான் அவர்கள் பெயரில் எனக்கு  ஐந்து லட்சம் கடனை வைத்து சென்றுள்ளார் என்று தான் புரியவில்லை.   

என் மகன்கள் சுய சார்பாக இருக்கவும் நான் என் சொந்த காலில் நிற்கவும் இந்த புரக்கணிப்புகள்  பயண் தந்தது. முதன் முதலாக மின்சாரக்கட்டணம் கட்டும் அலுவலகம் சென்று வந்தேன். சமஒயல் கியாஸ் இணைப்பை பெயர் மாற்ற முயல்கின்றேன். சட்ட நடவடிக்கைக்கு என்ன செய்ய வேண்டும் என முயன்று வருகின்றேன். 

  ஒரு சோதனை என்கிற போது நமக்கு கை கொடுப்பவர்கள் விரலில் எண்ணும் சொந்தங்கள் கூட இல்லை என்பது உண்மையாகுகின்றது. இதில் முக்கிய மன உளச்சல் தருவது மருமகள் என்ற ஸ்தானத்தில் முறை என்ற பெயரில் நம்மை வைத்து  வேலை வாங்கி விட்டு  நம் தேவை என்கிற போது தெருவில் எறிகிற புகுந்த வீட்டை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. எங்கிருந்தும் ஒரு ஒத்துழைப்பும் கிடைக்க போவது இல்லை.  கிறிஸ்வ நம்பிக்கை என்ற பெயரில் பொறுத்து, ஜெபித்து கொண்டு இருக்க ஏவல்ப்படுகின்றோம். பெற்ற தாயை எதிர்ப்பதை பெரும் குற்றமாக பார்க்கும் சமூகம்; பெற்ற பிள்ளையை ஏமாற்றும், புரக்கணிக்கும் தாயை கண்டு கொள்வதே இல்லை என்ற வசதியும் இதில் அமைந்து உள்ளது.   ஒரு யுத்தம் இங்கு எப்போதும் பாதிக்கப்படுவது ஒரு சாராரும் ஜெயிப்பது இன்னொரு சாராரும் என்பது நம் இருப்பை பொறுத்தே அமைகின்றது. நம் இருப்பை தக்க வைத்து கொள்வது என்பது நம் கைய்யில் தான் உள்ளது. நம் இருப்பை தக்கவைத்து கொள்ள கட்டின கணவனை கூட நம்பாது நம் வாழ்க்கையை முன் நடத்த வேண்டும் என்பதே வாழ்க்கை பாடம் படிப்பிக்கின்றது. 

இன்று என்னை தாங்குவது என் வேலையும் அதனூடாக பெறும் பணம் என்ற கருவியுமே. என்னவர் உள்ள போது நான் என் வங்கி அட்டையை பயண்படுத்தியதே கிடையாது. ஆனால் இன்று நான் பயண்படுத்தும் போது அதன் விலையை அதன் பெருமையை அதன் பயண்பாட்டை நன்கு உணருகின்றேன். பெண்கள் சுயசார்பாக தன் கையால் பணத்தை பயண்படுத்த தெரியவேண்டிய அவசியத்தையும் நன்கு உணருகின்றேன். ஒரு வேளை அத்தான் உள்ள போதே பணத்தை கையாண்டிருந்தால் அதன் மதிப்பு தெரிந்து; அத்தான், ஏமாறாது தடுத்திருக்க இயலும்.  ஏதோ ஒரு வகையில் கொடுமைக்கார மாமியாரிடம் மட்டுமல்ல அன்பான கணவரிடமும் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றோம்.   

மறுபடியும் மறுபடியும் சொந்த வாழ்க்கையை எழுத வேண்டாம் என மனம் கூறினாலும் என்னை போல் பாதிக்கப்படும் பல பெண்கள் அடங்கிய சமூகமாக உள்ளது. நான் எழுதி என் மனக்குமுறைலை வெளிக்கொணருகின்றேன். பல பெண்களூக்கு அதற்கும் வாய்ப்பதில்லை. அவ்வகையில் பல பெண்கள் குடும்ப உறவுகளில் பாதிக்கப்படுவது வெளியில் வர வேண்டும் என்று வேண்டுகின்றனர் . வெறும் ஐந்து வயது குழந்தையுடன் கணவர் வீட்டில் இருந்து துரத்தப்பட்ட பெண்உண்டு. இன்னும் மருமகள் என்ற பெயரில் மாமியாரை மருத்துவமனையில் வைத்து பராமரிக்க வைக்கப்பட்டு துரத்தப்பட்ட பெண்கள் பலர் உண்டு. என்னை எழுதியே தீர வேண்டும் என ச்மீப நாட்களக தூண்டும், துரத்தும் பத்மா என்ற என் சகோதரிக்கு இந்த பதிவு சமர்ப்பணம் செய்கின்றேன்.