12 Jun 2016

அன்பின் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை

விபத்து என்பது நிதம் நிதம் காணும் சகஜ  நிகழ்வாகி விட்ட சூழலில்,  விபத்து எதனால் நிகழ்கின்றது எவ்வாறு தவிற்திருக்கலாம்  என்ற சிந்தனையை விட  விதியுடன் இணைத்து நினைத்து நிம்மதி தேடவே விளைகின்றோம். 


இந்தியாவில் டெல்லிக்கு அடுத்து சென்னை விபத்து அதிகம் நிகழும் இடமாக கருதப்படுகின்றது. வாகனங்கள்  மோதுவதால் உருவாகும் விபத்தால் மணிக்கூறுக்கு 14 பேர் இறப்பதாக தரவுகள் கூறுகின்றன. ”ரோடு பாதுகாப்பு” என்ற தன்னாற்வ தொண்டின் கூற்றின் படி  ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கும் ஒரு மனிதர் மரணித்து கொண்டு இருக்கின்றார். 

 NCRB ன் 2014 ஆம் ஆண்டு  கணக்கு ப்படி  நடைபெறும் 4 லட்சத்தி ஐம்பதானிரம் விபத்தால் ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் மரணித்து போக, நாலு லட்சத்திற்கும் அதிகமானோர் காயத்திற்கு உள்ளாகுகின்றனர். WHO வின் கணக்குப்படி கடந்த வருடம் மட்டுமே  2 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  இதில் மதியம், மாலை, நேரங்களில் தான் விபத்து அதிகம் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ள்ளது. 

எதனால் விபத்து என்பதற்கு அதிவேகம்,  போதையில் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம்,  இருக்கை பெல்ட் இல்லாது பயணிப்பது போன்ற காரணங்களை குறிப்பிடலாம். இதையும் தவிற்து பராமரிப்பற்ற ரோடு, செம்மையல்லாத விபத்தை உருவாக்கும் வகையிலுள்ள ரோடு உருவாக்கவும்  மற்றும் ஒரு சில காரணங்களே. . வாகன லைசன்ஸ் பெறாது ஓட்டுவது, சிறு குழந்தைகளை வைத்து ஓட்ட வைப்பது,  வாகனம் ஓட்டும் போது அக்களிப்பிலும் கேளிக்கையிலும் ஏற்படுவது என பல காரணங்கள் உண்டு.  

சமீபத்தில் இது போன்ற பொறுப்பற்ற ஒரு வாகன ஓட்டியால் பின்னால் இருந்து தூக்கி வீசப்பட்டு  தன் உயிரை இழந்தவரின் மனைவி என்ற நிலையில் ஒரு விபத்து என்பது எண்ணிக்கைகளில், ஆராய்ச்சியில் தரவுகளில் ஒதுக்கப்படுவது அல்ல. இதனால் பல குடும்பங்கள் பாதிப்பிற்கு உள்ளாகுவதை அவதானிக்கலாம். என்னவருக்கு விபத்தை உருவாக்கினவர் கூறின காரணம் ’தூங்கி விட்டேன்’ என்பதாகும்.  அவர் ஒரே வார்த்தையில் ’தூங்கி விட்டேன்’ என முடித்ததால் எத்தனை கனவுகள், எத்தனை சந்தோஷங்களை தூங்க வைத்து விட்டார் என வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். நம்முடைய சமூக மாநில சூழலில் உயிர் இழைப்பயும் சந்தித்தது மட்டுமல்லாது இதற்கான சாற்றிதழ் பெற என அந்த குடும்ப உறுப்பினர்கள் அலைக்கடிக்கப்படுவதையும் கண்டு உணரலாம். சோகத்திலும் இது போன்ற நிலையை கடந்து வர மன வலிமை நிஜத்தை புரிந்து கொள்ளும் மனநிலையும் வேண்டும்

ஒரு கல்லூரியில் ஆசிரியையாக பணி புரிந்தும், என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மரணத்தை பதியவோ சாற்றிதழ் பெறவோ இயலவில்லை. முதல் காரணம் அறியாமை, யாராவது  நமக்காக எடுத்து தந்து விட் மாட்டார்களா என்ற  நற்பாசையே. தன் தேவைகள் உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களே  சாற்றிதழ்  பெற முயல்வதே சிறப்பாக இருக்கும். இது போன்ற  நெருக்கடியான  கட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள்  எளிதாக பெறுவது உபதேசம் மட்டுமாகவே இருக்கும். ஒரு இறப்பு சாற்றிதழ் பெறக்கூட ஐந்து நூறு  காந்தி தாத்தாவை கண்ணியமாக கண்ணில் காட்டும் சூழலே நம் அரசு அலுவலங்களில் நிலவுகின்றது. என்னவர் சம்பவம் நடந்த இடத்தில் மரணித்ததால் பிரேத அறிக்கை சாற்றிதழுடன்  மரண சாற்றிதழ் பெற இன்னும் சிக்கல் உருவாகியது. மரணம் மருத்துவ மனையில் நிகழ்ந்தால் மருத்துவ மனை நிர்வாகத்தின் கீழ் சாற்றிதழ் விரைவாக கிடைக்கும் சூழல் உண்டு. 

அடுத்து மரணித்தவருடைய வாரிசு சாற்றிதழ் பெறுவது. இந்த இரண்டு சாற்றிதழும் எல்லா தேவைக்கும் மிக முக்கியமானது. இறந்தவர் பெயரிலுள்ள கைபேசியை மாற்ற, சமையல் காஸ் பெயர் மாற்ற என  எல்லா தேவைக்கும் இரு சாற்றிதழும் மிக முக்கியமாகும்.  தற்போது இதை கைபற்றித்தர இடைத்தரகர்கள் உண்டு எனிலும் கையில் கிடைக்க  வெகுநாட்கள் காக்க வைக்கப்படுகின்றனர். 

இதையும் கடந்து பாதிக்க்கப்பட்ட்வர்களுக்கு கிடைக்க வேண்டிய அறிவுரைகள் தேவையான நேரம் தேவையானவர்களிடம் இருந்து கிடைக்கப்பெறுவதில்லை. 
எப்போதும் நம்முடன் வசித்த வாழ்ந்த மனிதர் மரணம்   அடையும் போது ஓர் பெரும் வெற்றிடம் நிலவுகின்றது. அதை ஈடு செய்ய யாராலும் முடியாது என்றாலும்   குடும்ப உறுப்பினர்கள் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற சவாலை சந்திக்கின்றனர்.  இந்த தருணங்களில் தான் ஆறுதல்ப்படுத்த, அக்கறை உள்ளம் என்ற பெயரில் பல பல பயங்களை நம்பிக்கை இன்மையை விதைத்து செல்கின்றனர். அங்கு ஒரு தனிமையுடன் பயமும் பலவீனமும், பிடிப்பு இன்மையும் உருவாகின்றது. 

இனி ஒரு வாழ்க்கை உண்டு அதை வாழ்ந்தே தீர வேண்டும், தேவையற்ற அனுதாபம் காட்டி வருபவர்கள் நோக்கம் பல போதும் சரியானதாக இருக்க வாய்ப்பு இல்லவே இல்லை. முதலில் கவலைப்பட  நேரம் கொடுத்து விட்டு  பின்பு மீண்டு எழ பாதிக்கப்பட்டவர்களே முன் வர வேண்டும். யாரும் தரும் அனுதாபத்தால் வயிற்று பசியை போக்கிட இயலாது தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது. இது போன்ற தருணங்களில் மிக முக்கிய சொந்தங்கள் ஓடி ஒளிவதும்  பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டும் உரிமையையும் எடுத்து கொள்வார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் முக்கிய தேவையை உணர அதை கிடைக்கப்பெற   செயலாக்கமாகும் முற்ப்போக்கானது.  மிக முக்கிய தீருமானங்கள்; விற்பது, உறவுகளை புதுப்பிப்பது, நட்புகளை புதிதாக சேர்த்து கொள்வது எல்லாமே நன்மையை விட தீமையை  விளைவிக்கும். அதனால் சம்பவம் நடந்து ஒரு சில வருடங்களுக்கு 
பல முடிவுகளை தள்ளி போட வேண்டும். விரும்பாதே கிடைத்த  தனிமையை பலன் தரும் வண்ணம் மாற்ற முயலவேண்டும் பாதிப்பிற்குள்ளான நபர்கள்.   

குறிப்பாக நல்ல நாட்களில் நம்மோடு சேர்ந்து பயணித்தவர்கள் சேர்ந்து உண்டவர்கள், நம் உதவியை பெற்றவர்கள் எல்லோரும் ஓடி வந்து உதவுவார்கள் என எதிர் நோக்கக்கூடாது. இருப்பினும் எதிர் பாரா உதவிகள் நமக்கு கிடைக்கும் அதை பயண்படுத்தலாம். எங்கள் வீட்டில் ஓர் பைக், கார் எங்கள் தேவைக்கு இருந்த வாகங்கள் அவர் விபத்துடன் இரண்டையும் இழந்தோம். உடன் பொது பேருந்தில் பயணித்து விரைவில் செல்ல வேண்டிய இடத்தை அடைய இயலாது மிகவும் துன்பத்திற்கு உள்ளானோம். என் மகன் நண்பன் அவன் இரு சக்கர வாகனத்தை மூன்று மாதம் கொடுத்து உதவினான்.


அடுத்த மனிதர்கள் செயல்களை பேச்சுக்களுக்கு முன்னுரிமை கொடுப்பது பெரும் துன்பத்தையே விளைவிக்கும். எந்த சூழலிலும் பெறும் துயர்- பிரச்சினை இருப்பது போல் அதில் சில நல்ல பக்கங்களும் வசதிகளும் இருப்பதை கணக்கில் கொண்டு புதியதை நோக்கி நகருவதே பாதிப்புள்ளாவர்களில் அறிவான செயலாக்கமாகும்.  மற்றவர்கள் இத்தருணத்தில் அவர்கள் வஞ்சம் தீர்க்கவும் மறுபடியும் நம்மை ஒடுக்கி நொறுக்கவே முன் வருவர். 

நம் சமூக சூழலில் பாதிக்கப்பட்டவர் ஆணும் பாதிப்பிற்குள்ளாகினவர் பெண் என்றால் வாயில் அவல் போட்டு பேசவும் அம்போ என அவர்களை தவிக்க விட்டு வேடிக்கை பார்க்க உறவுகள்  நெருங்கிய உறவுகள் தயங்காது. இத கண்டு கொண்டால் முன் நோக்கி செல்லவும் இயலாது.    பதின்ம வயதில் பெற்ற பல நல்லொழுக்க உபதேசங்களை நாம் பெறுவோம். சிறப்பாக ஒரு பெண் என்ற நிலையில் என் குணத்தை கண்ணியமாக வைத்து கொள்ள மற்றவர்கள் உபதேசிப்பது பெரும் கேவலமாக இருந்தது. ஆனால் அதை எல்லாம் தூசி என எடுத்து தூக்கி போட்டு முன் செல்வதாகும் காலச்சிறந்தது. நம் வாழ்க்கை நம் கையில் இதில் மூன்றாம் நபருக்கு இடம் கொடுப்பதே சிறை தான். ஆனால் பாதிப்பிற்குள்ளான பல லட்சம் பெயரில் நானும் ஒருவர் என்ற புரிதலே அடுத்த கட்டத்தை நோக்கி நகர உதவும்.\

மற்று இழப்பில் கிடைக்கும் சாவகாசம், விபத்து மரண குடும்ப நபர்களுக்கு கிடைப்பதில்லை. . எனக்கான வருமான மார்கம், சமூக அந்தஸ்திற்கான வேலை, வளர்ந்த மகன்கள் உள்ள நானே பல இன்னல்களை நேர் கொள்ள வேண்டி வந்தது. தங்களுக்குள் உழலாது மிகவும் நேர்மறையானவர்கள், நம்மிடம் உண்மையான அன்பும் மரியாதை கொண்டவர்களிடம் அறிவுரை பெற்று நகர்வதாகும்  ஆக்கபூர்வமான செயல். . 

இருவர் பேசி முடிவு எடுக்கும் பல காரியங்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கல், தன் சுயத்தை அன்பு செலுத்துதல், மதிக்கல், சுயமாக செயலாற்ற விரும்புதல் ஆகும் ஆகச்சிறந்த வழி.   சாம்பலில் இருந்து எழும் பக்‌ஷி போல் மனிதர்கள் எழ வேண்டும். வீழ்ந்து துவண்டு நொறுங்கி கிடப்பது அல்ல வாழ்க்கை மீண்டு வருவதே வாழ்க்கை. போனவர் முன்னே போக, பின்னால் கடமையை முடித்து போக சிறந்த வழியை தேடுவதாகும் யுக்தி. இதில் உணர்வை தள்ளி அறிவை பிடித்து கொள்ளும் போது எடுக்கும் முடிவுகள் எளிதாகின்றது.   

நானும் ஒடிந்த நொடிந்த தனித்த சூழல் கடந்து வர நல்ல நண்பர்கள் உதவினர். அரசு சாற்றிதழ் பெற்று தர, வாழ்க்கையின் நோக்கை உணர்த்த பல நண்பர்கள் உதவினர்.  என்னிடம்  இரக்கம் மொழியால்  பேசியவர்களை விட திடமான பல வழிகளை எடுத்துரைத்தவர்களே மனதில் நிற்கின்றனர்.  அவர்கள் யாவருக்கும் என்  நன்றிகள் மகிழ்ச்சிகள் பல  கூறி சாம்பலில் இருந்து பறந்து உயர்ந்த பீனிக்ஸ் பறவையை மனதில் கொண்டு எழுகின்றேன். 


பாபா அத்தான் இறந்த அன்று அவருக்கு சரியான அளவில் சட்டை கிடைக்கவில்லை என்ற உண்மை இன்னும் மனதை பிசைகின்றது. அவருக்கு செய்யும் பிராச்சித்தம் என்ற வண்ணம் அவர் பெயரால் உருவாகும் சமூக தொண்டு நிறுவனம் வழியாக  விபத்தால் உயர் இழந்தவர்களுக்கு சட்டை வேட்டியை எட்ட வைக்க வேண்டும்.   அகாலத்தில் கால யவனிகைக்குள் மறைந்த என்னவர் ஒரு 100 வருடமாவது வாழ்ந்தது போல் அவர் பெயர் சொல்லும் படி நல்ல சமூக அக்கறை கொண்ட செயல்களுக்கு வழி நடத்த வேண்டும். விபத்து நடந்த பின்பு விபத்தை எதிர் கொள்பவர்களுக்கு   பல விழிப்புணர்வு தகவலகள் , உடன் செய்ய வேண்டிய அணுக வேண்டிய அரசு அலுவலகம் , நிறுவனம் இவை பற்றி எல்லாம் நான் தெரிந்த அறிந்த தகவல்களை பகிர உள்ளேன். இந்த விடுமுறைக்கு நாங்கள் எங்கும் செல்ல வில்லை. என்னவர் நினைவுகளை புத்தக வடிவில் எழுதி முடித்துள்ளேன். விரைவில் புத்தகமாக வெளி  வ்ரும். கார் ஓட்ட கற்று விட்டேன். 

என் மாணவர்கள் வாழ்க்கைக்கு வெற்றி சேர்க்க உதவ வேண்டும், என் மகன்களை  நம்பிக்கை கொண்டவர்களாக, தைரியம் கொண்டவர்களாக உருவாக உதவ வேண்டும். 


இனி தனிமை இல்லை, தனிமை என நினைக்க நேரம் இல்லை, தனிமையிலும் பல இனிமை உண்டு.  விட்டு போன, மேற்கொள்ள வேண்டிய பயணங்கள் நிறைய உண்டு.  யார் அச்சுறுத்தலும் இல்லை. யாருக்கும் பதில் கொடுக்க வேண்டாம். குடும்பம், மாமியார், கடமை,  என்ற சிறை இல்லை. நான் என் மகன்கள், என் கடமை என ராஜாவும் ராணியுமாக என் விளையாட்டை  நானே ஆடி தீர்க்க கிடைத்த தருணத்தை சிறந்த  வழியில் கையாள உள்ளேன்.   நடந்ததும் நடப்பவையும் நடக்க இருப்பவையும்  நல்லவையே!!

9 Jun 2016

இறைவி -திரை விமர்சனம்

'

இறவி'  திரைப்படம்  கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாகுவதை கூறியுள்ள படம் என்று சொல்லப்படுகின்றது. கதாப்பாதிர படைப்பு ஒன்று கூட உருப்படியாக அமையவில்லை. ஒரு முழுக்குடிகார இயக்குனர், ஒரு முழு நேர ரவுடி, மாணவனான  பகுதி நேர ரவுடி என ஆண் கதாப்பாதிரங்களை வடிவமைத்துள்ளனர். பெண் கதாப்பாதிரங்கள் கணவர் ஜெயிலில் இருந்தால் கூட சுயமாக நிற்க தெரிந்த அஞ்சலி, ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை புரியும் அருள் மனைவி, எக்காரணம் கொண்டு உறவு சிக்கலில் சிக்கி தவிக்க விரும்பாத ஆனால் தன் தேவையை நிவற்தி செய்ய தெரிந்த கணவர் இழந்த பெண்.  இதில் யார் யாரையும் சாரத்தேவை இல்லையே.

எப்போதும் குடி கூத்தாட்டம் சிலை திருட்டு என சட்டத்திற்கு புறம்பான, மனித இயல்பிற்கே பொருந்தாத செயலாற்றும் ஆண்கள். வாக்கு வாதம் கணவர்களிடம் துவங்கும்  போதே கண்ணத்தில் அடிக்க தைரியமுள்ள மனைவிகள், அடி கிடைக்கும் போதும் வாங்கி கொள்ளும் மனைவிகள்! 
ஒரு ஆன்மா இல்லாத படம். எந்த காட்சியும் மனதில் பதியவில்லை, ஆண் பெண் சீனுகள் தான் அளவிற்கு மீறி காட்சிப்படுத்தியுள்ளனர். பார்க்கும் ஆடியன்ஸ் கற்பனை வளர்த்திற்கு என எதையும் விட்டு வைக்கவில்லை. இப்போதும் தமிழர்கள் எலலாம் தூங்கும் போதும் விளக்கை அணைப்பது இல்லையோ?

அஞ்சலிக்கு  டம்பிங் கொடுத்தவர்கள் இன்னும் சரியாக பேச கற்றிருக்கலாம்.  குடிகாரக்க ணவனை வெறுக்க வலுவான காரணமே இல்லை. மறுபடி காதலிக்கும் நபரும் குடிகாரர்தான். குடி நிறுத்தியவர் சிகரட் பிடிப்பதை விட வில்லை சிலை திருட்டை விடவில்லை கொலை செய்யக்கூட அஞ்சவில்லை. 

நீ என் அண்ணன்,  நீ என் உடன் பிறவா தம்பி என அன்பு மழையில் நனைபவர்கள் அவர்களுக்குள் பிரச்சினை என்றதும் கொல்ல மடிப்பதில்லை. பெண் பிரசினை என்றதும் மிகவும் கொடூரமானவர்களாக மாறி விடுகின்றனர். 

ஏதோ ஒரு கருத்து சொல்ல வந்திருக்கலாம், சொல்ல வந்த கருத்தில் தெளிவு இருந்திருக்க வேண்டும். ஆக மொத்தம் படம் ஏதோ போதையிலே இருந்து எடுத்தது போல்  இருந்தது. 

தேவைக்கதிகமான கெட்ட வார்த்தை பிரயோகங்கள், கெட்ட வாய் அசைவுகள் என மோசமான பக்கங்கள் கொண்ட மனிதர்களுடைய படம் இது.   அடியாட்கள், மற்றும் பணக்காரர்களுக்காக ஏமாற்றப்படும் அடியாட்களை பற்றி எத்தனை படம் தான் தமிழில் எடுக்க உள்ளார்கள்

கணவர் குடிகாரர் என்றதும் மனைவி நல்ல ஒருவரை தேர்ந்து திருமணம் செய்ய உள்ளாராம், இதற்கு பெற்றோரும் கூட்டு. இது எந்த ஊரில் நடக்கும் என்று தெரிந்தால் நல்லம். சம்பாதிக்கும் மகள்களுக்கே திருமணம் செய்து வைக்க தயக்கம் கொள்ளும் பெற்றோர்தான் இப்போது பெரும்வரியானோர். இதில் திருமணம் முடிந்த மகளுக்கு மணம் முடித்து வைக்கபோகிறார்களாம். 

இதில் கவனிக்கதக்க ஒரு கதாப்பாத்திரம் காதல் கணவனை இழந்த ஒரு பெண். அவர்  மேற்கொ ள்ளும் ஒவ்வொரு உரையாடலும் கொச்சையிலும் கொச்சை. எதற்கு ஆணை தேடுகிறார் என்பதற்கு தரும் விளக்கம், கொடுக்கும் முகபாவ அருவருப்பு. கணவர்   இழந்த பெண்களை பற்றிய சமூகப்பார்வையை அப்பெண் மூலம் திணித்துள்ளார் இயக்குனர். ஜன்னலோரம் சென்று அவன் செல்வதை கண்டு அழும் பெண் திருமணம் செய்ய அவனை மறுத்தது ஏன்? ஆக மொத்தம் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்தால் நாலு கேள்வி கேட்கும் சமூகம், ஒருவனுடன் கள்ளக்குடித்தனம் நடத்தினால் கண்டு கொள்ளாது இருக்கும் என்பதை சொல்கிறாரா அல்லது இது தான் கணவரை இழந்த பெண்களுக்காக வழி என சொல்லி கொடுக்கின்றாரா என தெரியவில்லை. 

இந்த தலைமுறை ஆண் பெண்கள் கொஞ்சம் பித்தம் கலங்கி மண்டை வெடித்து தான் சிந்திக்கின்றனர்,. டே மக்கா இயல்பா சிந்திங்கடா? சென்னை போன்ற சில நகர லகரியில் இருந்து விடுபட்டு படமெடுக்க முன் வர வேண்டும். கதையிலும் ஆழமில்லை கதாப்பாத்திர படைப்பிலும் அர்த்தமில்லை. கொடுத்த வேலையை நடிகர்கள் சிறப்பாக செய்துள்ளனர். எஸ் ஜே. சூரியா நடிப்பு அருமை. ஆனாலும் சார் இப்படி குப்பி குப்பியா நடித்து காட்டியிருக்கக் கூடாது! பாபி சின்ஹா நடிப்பு இயல்பாக தெரிகிறது.     சேது நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்து எடுக்கும் காலம் நெருங்கி விட்டது. எடுத்ததிற்கும் கொலைகாரனாக மாறும் சேதுவை வெறுப்புடன் நோக்க தான் வைக்கின்றது இப்படம்.  அவருக்கும் அடியாட்கள் ரவுடி கதாப்பாத்திரங்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும் போல். ரவுடிகள் எல்லாம் கரடி மாதிரி தாடி மீசை வைப்பது தான் நிஜமா அல்லது சினிமா பாஷனா எனத் தெரியவில்லை. ஆக தமிழ்த்திரையுலகில்  நல்ல இயக்குனர் மனிதனை சிந்திக்க வைக்கும் கதைகளுக்கு பஞ்சம் ஆரம்பித்து விட்டது.  

இயல்பில் இருந்து வெகு தூரம் வெறும் கற்னையும், தப்பிதங்களான மனித உறவுகள், மோசமான  மனித நிலையை மட்டும் எண்ணி படம் எடுத்தால் இப்படி தான் அமையும். நல்ல வேளை வடிவுக்கரசியை ஒரு சீனை தவிற்து எல்லா சீனிலும் கோமா நிலைக்கு தள்ளி விட்டனர். அந்த அம்மா ஒரு சீனில் வந்தே அழுத அழுகை   வெறுப்படைய செய்தது. கணவர் இறந்து கிடக்கின்றார் மனைவி எந்த உணர்வும் அற்று குழந்தையுடன் பயணிக்க துவங்குகின்றார். பெண்கள் மழை நனைவதை பெண் விடுதலை மனநிலையை ஒருமைப்படுத்தியுள்ளாரா  இயக்குனர். 

இது போன்ற படங்களை எல்லாம் தியேட்டரில் போய் ரூபாய் கொடுத்து பார்ப்பதே நமக்கு பிடித்த செலவு தான். . அந்த  கொடுத்த ரூபாய்க்கான எந்த அழகியலும் எந்த நன்மையும் இது போன்ற படங்கள் சமூகத்திற்கு தரப்போவதில்லை. 

தமிழனின் வாழ்க்கை, பண்பு  இனி ஆராய்ச்சி உள்படுத்தும் வஸ்துவாக மாற போகின்றது. திருநெல்வேலி தியேட்டரில் பொதுவாக ஒலியை மிகவும் உயர்த்தி தான் வைப்பார்கள். பிவிடி தியேட்டரிலும் இதே நிலை தான். உரையாடல்களை கேட்கவே இயலவில்லை. கேட்ட உரையாடல்களும் அவ்வளவு செம்மையாக இல்லை. 

இந்த படம் கண்டால் ரவுடியாகவும், அடியாள் ஆகவும் குடிகாரனாகவும் மாறிவிட தன்னறியாது ஆசை வந்து விடும். தேவைக்கதிகமான கொலை தேவைக்கதிகமான சத்தம், அழுகை, அலம்பல் ஆட்டம் என ஆட்டம் கண்ட படம் இறைவி!  

8 Jun 2016

பள்ளிக்கூட நினைவுகள்!

 சில பழைய படங்களை கண்ட போது நினைவுகளும் தானே ஓடி வருகின்றது. நாங்கள் அரசு இடைநிலைப்பள்ளியில் படிக்கும் போது நடந்த ஒரு சம்பவம் நினைவை சூழ்கின்றது. நாங்கள் மாணவிகள் செல்லும் போது உயர்நிலை மாணவர்கள் வழி மறித்து கலாட்டா செய்யும் வழக்கம் இருந்தது. மாணவிகள் அலறி சிதறி ஓடுவதில் அந்த விடலை பசங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி!
ஆனால் எங்கள் குழு சொல்லி வைத்து, அந்த பசங்க எங்கள் அருகில் சீண்ட வந்ததும் எடுத்து வைத்திருந்த சேப்டி பின்(ஊக்கு) வைத்து கிழித்து விட்டோம். இந்த செய்தி எங்கள் ஆசிரியர்கள் காதில் விழ எங்களிடம் விசாரித்து விட்டு உயர் நிலைபள்ளிக்கு தெரிவித்தனர். எங்கள் வீரத்தை ஆசிரியர்கள் பாராட்டினாலும் ஆசிரியர்களிடம் தெரிவிக்காமல் இருந்தமைக்கு கடிந்து கொண்டனர். அந்த வருடம் நான் பள்ளி தலைவராக இருந்ததால் என் பொறுப்பற்றதனத்தையும் கண்டித்தனர்.
அந்த பள்ளியில் அந்த மாணவர்கள் தண்டனை என்ற வண்ணம் ஒரு வாரம் நீக்க அவர்கள் பெற்றோர்கள் எங்கள் வீடு தேடி சமரசம் பேசி வந்தனர். அந்த மாணவர்களோ நாங்கள் காம்பஸை எடுத்து குத்த வந்தோம் என புளுவி விட்டனர். பின்பு எங்கள் குழுவிற்கு காம்பஸ் என்ற அடைமொழி கிடைத்தது.
உயர்நிலை பள்ளிக்கு அம்மாவுடன் சேர சென்ற போது பள்ளி முதன்மை ஆசிரியை என்னை கண்டதுமே நீ தான் மாணவர்களை காம்பஸ் எடுத்து குத்த முயன்றாயோ? என்று கேள்வியுடன் அவர் கண்ணிலுள்ள முள்ளாகவே பின் வந்த மூன்று வருடத்திலும் என்னை பராமரித்து வந்தார். பின்பு வாய் நோக்கும் மாணவர்களை மாணவிகள் இட்டலி வைத்து எறிந்தால் கூட அதன் பின்புள்ள மூளை நானாக இருக்க வேண்டும் என தலைமை ஆசிரியை நினைத்து என்னையும் ஓர் குற்றவாளி போன்று விசாரித்து கொள்ளுவார். நம்ம ஊர் போலிஸிடம் மாட்டும் திருடாத கள்ளன் போல் தன் என் நிலை இருந்தது. அப்படி பள்ளிக்காலத்தில் காம்பஸ் , இட்டலி என பல கலாய்ப்புக்கு உள்ளாகியுள்ளோம். இப்போது உள்ள பெற்றோர் போல் பிள்ளைகள் விடையத்தில் பெரியவர்கள் தலையிட மாட்டார்கள், பெண்களும் இன்றைய பெண் பிள்ளைகளை போல அழுவாச்சிகள் அல்லாது வீர சூரமாக இருந்தோம்.
அன்று எங்களுடன் படித்த மாணவர்களை எல்லாம் இன்று அடையாளம் கண்டு பிடிப்பதே கடினமாகி விட்டது. மீசை தாடி என புது உருவத்தில் உள்ளனர் . இருப்பினும் அந்த பள்ளிக்கால நேசம், பாசம், மரியாதை என்றும் மறையாது இருப்பது அக்காலத்தின் அழகாகும்.