header-photo

அவள் அப்படி தான்!

நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில்  மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ருத்ரைய்யாவின் இயக்கத்தில் ஸ்ரீ பிரியா, ரஜினி காந்த், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் இது.   முரண்பட்ட  பல கருத்துக்களை முன் நிறுத்தி 1978 களில் வந்த படம் என்பது நம்மை ஆச்சரியத்தில் உள்ளாக்குகின்றது.

பெண் உடல், பாலியல், ஆணாதிக்க பார்வை போன்ற பிரச்சினைகளை அலசி ஆராயும் சிறப்பான படம் இது. ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய படம்  இது. 

ஸ்ரீபிரியா போன்ற ஆளுமை கொண்ட நடிகைகள் காலம் கடந்து விட்டதே என்ற நினைப்பும் நம்மை வருந்த வைக்கின்றது. வெறும் கவர்ச்சிக்கும்  அல்லது நாயகனுடன் ஜோடி சேர என்ற நோக்கில் மட்டுமே கதாநாயகிகளை பெரும் வாரியான படங்களில் பயண்படுத்தி வரும் வேளையில் எல்லா சீனிலும் வந்து போகும் மிகவும் ஆளுமை கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பது  பாராட்டும் படி இருந்தது. 

இந்த படத்தின் உரையாடல்கள் ஊடாக காண்பவர்களை சிந்திக்க வைக்கும் ஒவ்வொரு காட்சியும் மனதை விட்டு அவ்வளவு எளிதாக நகர இயலாது. 

எழுத்தாளர் வண்ண நிலவனின் திரை உரையாடல்கள் எடுத்து கொள்ளப்பட வேண்டியவை.  அடுத்தது இளைய ராஜாவில் இசை. குறிப்பிட்டு சொல்லவேண்டிய பாடல் உறவுகள் ஒரு தொடர்கதை  பாடல் என்ற பாடல் ஆகும்.

ஆறுதல் தேடி அலையும் ஓர் பெண் மனம் சந்திக்கும் துயரை நாம் காண்கின்றோம்.  தன் தாயின் செயல்பாட்டால் மன பிளர்விற்கு உள்ளான இளம் பெண் பின்பு தான் சந்திக்கும் ஆண்களிடம் எவ்வாறு உறவு சிக்கல்களில் உழலுகின்றார் என்று கதை செல்கின்றது.  ஒரே பெண் மற்று பலரின் அவரவர் பார்வையில் விதிக்கப்படுகின்றார். ஒரு பெண்ணின் ஒழுக்கம் என்பது அவரிடம் இல்லாது அவர் வாழும் சமூகப்பார்வையில் உள்ளதும் அப்பெண் அவர் எதிர் கொள்ளும் விதவும் தான் சிறப்பாக உள்ளது.

ஆண் ஆதிக்கம் கொண்ட மனநிலையில் ரஜினிகாந்த் வருகின்றார். பெண்கள் என்பர்களை ரசிக்க வேண்டும் ஆராயக்கூடாது, அவள் ஆண் தேடி அலைபவள் போன்ற உரையாடல்கள் வழி பெண்களை சித்தரிகரிப்பது  என்றால்; பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்பதும் அவர்கள் உரிமை பற்றி எல்லாம் சிந்தித்து படம் எடுக்கும் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் வருகின்றார்.

என்ன தான் பெண் உரிமை என பேசினாலும் தனக்கான ஒரு கொள்கை, சில கருத்துக்கள் வைத்துள்ள பெண்ணை திருமணம் என்றதும் மணம் முடிக்க யோசிக்கின்றார்.  பெண் உரிமை என்று எதுவும் தெரியாத வெகுளி பெண்ணை தன் மனைவியாக ஏற்று கொள்ளும் சமகால ஆணாக கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.

ஆண் உலகம் பெண்கள் நிலையை தனக்கு சாதகமாக்கி கொண்டு பயண்படுத்தும் கதாபாத்திரமாக சந்திர சேகர் என்ற நடிகர் நடித்துள்ளார். உறவுகள் தொடரும் என்ற அழகிய இனிமையான பாடல் வந்துள்ளது இப்படத்தில். 

காலம் என்ன மாறினாலும் அடிப்படையில் பெண்களை பற்றியுள்ள பார்வை அதே போல் தான் இப்போது உள்ளது என இப்படம் காணும் போது விளங்கும். மனிதனின் புலன்படாத மனநிலைகளும் செயல்பாடுகளும் சரியாக அலசப்பட்டுள்ளது. 

கடைசியாக ஸ்ரீபிரியா எந்த முடிவும் அற்று நடுத்தெருவில் இறங்கி செல்வார். இது போன்ற பெண்கள் இனியும் ஜெனிப்பார்கள் மரிப்பார்கள் என முடிக்கப்பட்டுள்ளது. அதே போல் ”பெண் உரிமை என்றால் என்ன”? என்று கமல்ஹாசன் மணம் முடித்து கொண்டு வந்த சரிதாவிடம் கேட்பார். அவரும் ”எனக்கு தெரியாது” என்பார். தெரியாது இருப்பதால் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக உரையாடல்கள் வரும். இது போன்ற முடிவுகள் எடுத்து காட்டுகள் கூட இது போன்ற படங்கள் சமூகத்திற்கு தரும் எதிர் மறை கருத்து ஆகும். சுயமாக சிந்திக்கும் பெண்களால் ஒரு மனைவியாக வாழ இயலாது அவர்கள் நட்டாத்தில் தான் விடப்படுவார்கள் என்றா மறைமுகமாக சொல்ல வந்தார் என்று கூட மனதில் தோன்றாது இல்லை. பெண்கள் மகிழ்ச்சி என்பது விழிப்புணர்வு அற்று வெகுளியான வெளிதானா என்ற கேள்வியும் எழாது இல்லை. 

இருப்பினும் சிந்தனையை தூண்டும் படம். 

முதல் பிள்ளையை தந்தார் !


சினிமாவில் காண்பது போன்றோ,  சிலர் வாழ்க்கையில் நேரில் கண்டது போலவோ சுவாரசியமோ மகிழ்ச்சியோ ஒன்றும் தென் படவில்லை என் திருமண முதல் நாட்களில்!  உறவு, முறை, வழக்கம் போன்ற சில சங்கிலிகளால் என் எண்ணைங்களையும் செயல்களையும் பிணக்க பட்டது போல் தான் உணர்ந்தேன்.

அதும் அவருடைய வீட்டில் எதற்கும் ஒரு  எந்திரதன்மை காணபட்டது. ஒரே சோபாவில் தான் என்றும் இருக்க வேண்டும், அவர்கள் பார்க்கும் தொலைக் காட்சி நிகழ்ச்சியை தான் நானும் பார்க்க வேண்டும். நான் என்றவளை உயிருள்ள மனுஷியாக அல்லாது அவர்கள்  வீட்டிலுள்ள  ஒரு பொருளாக தான் பார்க்கபட்டேன்.  நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் கொடுக்கப்பட்ட்து, கேலி செய்யபட்டேன், அல்லது விமர்சிக்க பட்டேன்.

தினம் பூந்தோட்டத்தில் இருந்து பூக்கள் பறித்து மேஜை அலங்கரிக்கும் வழக்கத்தை கேலி செய்த போது அப்பூவுடன் என் மனவும் வாடியது. காலை இரவு பல் துலக்குவது கூட "பல் துலக்க மட்டும் தான் தெரியும் என்ற குத்தி பேச்சு அச்சம் தரவே செய்தது.  மேலும் நிறைய நேரம்  நிறைய தண்ணீரில் குளிக்க நினைத்த போது இவ்விதம் நிறைய தண்ணீர் செலவழிக்கும் பெண்ணின் வீட்டில் பணம் நிற்காது செலவாளியாக இருப்பாள் என்று இழிவு சொல்லுக்கும் ஆளாக்கபட்டேன்.

இதிலும் கொடுமை துணி துவைக்க, துணி தேக்க, புட்டு செய்வது எப்படி என என் மாமியார் எடுத்த வகுப்புகள் மறக்க முடியாதது.   புது மணவாட்டியாக என்னவருடன் சுற்றிவர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும்போது கொளுந்தனை சகுனியாக்கி ‘என் சின்ன மகன் வருத்தபடுகின்றான் அதனால் நீ வீட்டில் இரு அவர்கள் சென்று வரட்டும்’ என்று அவர்களை அனுப்பி விட்டர்..  ‘உன் பாட்டி போல் உன் முடி பரட்டை போன்று இருப்பது அங்கிளுக்கு  பிடிக்காது’ என்று கூறி கட்டி கட்டியாக எண்ணையை தலையில் தேய்த்து விடுவதும் அதை தடுக்க வழியற்று விழி பிதுங்கி இருப்பதை தவிர்க்க  வேறு ஏதும் தெரியவில்லை!  இதிலும் உச்சம் என நான் கொண்ட மத நம்பிக்கையை கேலி செய்வது அதை சார்ந்த சம்பிராதயங்களை பழிப்பது என என்னை உணர்வு பூர்வமாகவும்   சிதைப்பதாக இருந்தது.


எனக்கு என்று அந்த வீட்டில் ஒரு தளம் இருக்கவே இல்லை.  என்னால் எடுத்து கொள்ளவும் தெரியவில்லை. எதற்கும் சுதந்திரமும் இல்லை. என் உறவினர்களிடம் கூட பேசக்கூட அனுமதியில்லை. 24 மணி நேரவும் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மற்றவர்கள் நிர்ணயிப்பது கொடுமையாக இருந்தது. கொடிய விடுதி முறைகளையும் மீறி 8.30 தூக்க போகும் நான் திருமணம் முடிந்ததில் இருந்து "10.30 க்கு தான் தூங்க வேண்டும். அவனை பேசி நீ கெடுக்க கூடாது என்ற புத்திமதியுடன் தொலைகாட்சி பெட்டி முன் இருக்க வைத்தது என்னை நான் கேணை என்று சிந்திக்க செய்தது.  அவனுக்கு நாளை அலுவலகம் செல்ல வேண்டும் அவன் தூங்க போகட்டும் நீ இரு என் சொல்வது மட்டுமல்லாது எனக்கு பிடித்த கதை புத்தகம் கூட வாசிக்க அனுமதிக்காது அவர்கள் புராணகதைகளை கேட்டு கொண்டு இருக்கவும் பணியபட்டேன். ஒரே மகிழ்ச்சி என்வரின் வேலையிடத்தின்  நாங்கள் தங்கும் 4 நாட்களே.   அந்த நாலு நாட்களின் சந்தோஷத்தை சுத்தமாக துடைத்து போடுவதாக இருந்தது மற்ற 3 நாட்கள்.

 அதிகாலை கிளி சத்தம் 10 மணிவரை மறையாத பனிக்கூட்டம்,  பகலில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு குரங்குகள்,  மரம் கொத்தியின் மரம் கொத்தும் டொக் டொக் என்ற அழகான ஓசை, காணும் திசை எங்கும் பச்சை மர காடுகள் ஏலக்காய் தோட்டம், தேயிலை காடுகள் அதில் பணிபுரியும் பெண்களின் கலபில என்ற பேச்சு ஒலி, பூக்கள் மரங்கள், காடுகள், இரவில் திகிலோடு ஜென்னல் வழியாக காணும் வரிசையாக செல்லும்  காட்டு பன்றி கூட்டம்  அங்கு பணி செய்யும் புழுவுணி நடநாஜன் வாச்சரின் பேய் கதைகள் தான் ஒரே ஆறுதலாக இருந்தது அந்த நாட்களில்.

  என்னவர் அவருடைய 3 வயதில் இருந்தே பெற்றோரிடம் வளராது பாட்டியிடம் வளர்க்க பட்டவர்.  அவர் மனதில் அதிகாரம் செலுத்தும் மனைவி என்பதை விட ஒரு உற்ற தோழியாக நான் பார்க்கபட்டேன்.   அவருடைய கல்லூரி பள்ளி நாட்கள் கதையாக ஓடி கொண்டிருந்தது.  பள்ளியில் படிக்கு போது அவர் அம்மாவிடம் விறகு கட்டயால் அடி வாங்கியது காலால் உதை பட்டது, கால் சட்டை கேட்டதற்க்கு என அவர் அப்பா கன்னத்தை பதம் பார்த்தும் அவர் தம்பி கோபத்தில் குத்திய கத்தி தழும்பு, அவர் கல்லூரியில் படிக்கும்  போது வில்லியாக வந்த மேரியும்,  காதல் நோயால் அவருடையா வீடு தேடி வந்த ஆசிரியரின் மகள்; இப்படி எங்கள் பேச்சில் எல்லாம் சம்பவங்களும் வந்து  சென்றது.  எங்கள் நட்பும் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வந்தது.

அப்போது தான் என் பட்டபடிப்பில் (வணிகவியல்) முதல் வகுப்பில்  தேர்வு ஆன முடிவு வந்தது. உறங்கி கிடந்த என் மன பூதம் விழித்தது.  படிக்க இரண்டு வருடம் அனுமதியுங்கள் என கேட்டேன். அவரும்  சரியென தலையாட்டி விட்டார். அவருடைய அம்மா ரொம்ப சந்தோஷம். அப்படி இரண்டு வருடம் ஓடி விடும் படிப்பு செலவு முறைப்படி உன் அம்மா செலவு தான் என நாசூக்காக சொல்லிவிட்டார்.  என்னவர் சம்பளம்; இன்சுரன்ஸ், சீட்டு பணம், அவர் அப்பாவிடம் கொண்ட கடன் என அவர்கள் கணக்கில் தான் இருந்தது.   என்னவர் சொத்தான மூன்று பை நிறைய பாடல் காஸட்டுகள்   பாம்பு பயம் இல்லாது சத்தமாக பாட்டு கேட்டு தூங்க வைத்து கொண்டு இருந்தது. 

 என்னுடைய அம்மாவோ வித்த மாட்டுக்கு செலவா? என்ற ஆதங்கத்தில் ஒரு பிள்ளையை பெற்று வளர்க்கும் வழியை பார் என அறிவுறுத்தினார்.  என் மாமனாரோ “ உனக்கு திருமணம் முடிந்த பிறகு எதற்க்கு படிப்பு ? மாடு வளர்க்க உன் மாமியாரிடம் கேட்டு தெரிந்து கொள்” என்று கொஞ்சம் வேலையாட்களை அனுப்பி  ஒரு மாட்டு கொட்டகை போட்டு தந்தார்.   அப்பாவும் தன் பங்குக்கு ஆள் அனுப்பி வீட்டை சுற்றியுள்ள் இடத்தை சுத்தம் செய்து கத்திரிக்காய் வாழைத் தோட்டம் நட்டு தந்தார்.   என்னவர் முதல் முதலாக அவருடைய அம்மாவின் கட்டளையை தூக்கி எறிந்து  விட்டு எங்கள்  முதல் பிள்ளையை தந்தார்!!!!  

அத்தானுக்கு பிடித்த பாடல்கள்!

அத்தான் நீங்க எப்போதும் பாட்டு கேட்டு கொண்டிருக்கும் போது ஒரு வித வெறுப்பும் பொறாமையும் என்னை பற்றி கொள்ளும். நான் கதைப்பதை கேட்க  விருப்பம்  இல்லையோ என தோன்றும். சில பொழுது என்னை தவிர்க்க தான் இப்படி பாட்டு கேட்கின்றீகளோ என்றும் தோன்றுவதும் உண்டு. சில நேரம் பாட்டை கேட்க கூடாது என காதில் கொஞ்சம் பஞ்சு வைத்து கொண்டு கூட இருந்த நாட்களும் உண்டு.

நான் முதன் முதலில் நம் பாண்டவர்மேடு வீட்டிற்கு வந்த  போது  காப்பி போட்டு குடிக்க, சோறு வைத்து சாப்பிட இரண்டு பானைகள் மட்டும் தான் வைத்து இருந்தீர்கள். ஆனால் இரண்டு பெரிய பை நிறைய காசட்டுகள்  வைத்திருந்தீர்கள். சில பொழுது உங்களிடம் கோபம் வரும் போது அந்த காசட்டுகளை எல்லாம் வீட்டில் விரித்து எறிந்து நானும் அதன் நடுவில் உட்காந்து இருப்பேன். அதே நான், பாம்பை பயந்து சத்தமாக பாட்டு போட்டு விட்டு தூங்குவதும் வழக்கமாக வைத்திருந்துள்ளேன். 

அந்த பாடல் கேட்கும் பைத்தியம் உங்களை விட்டு பெப் 19 2016 இரவு வரை இருந்தது, காலையில் நீங்கள் பாட்டு கேட்கவில்லை. ஏன் என்று இன்றும் மனதில் கேட்டு கொண்டு இருக்கின்றேன். 19 இரவு நான் படுத்து கொண்டே உங்களை பார்த்து கொண்டு இருக்க; நீங்கள் என்னிடம் எடா, நான் இரண்டு பாட்டு கேட்டு விட்டு வரவா என்றீர்கள். கேளுங்கள் என்று கூறி கொண்டு  பாட்டு கேட்டு கொண்டு நான் படுத்திருந்தேன்.

இப்போது ஒவ்வொரு நிமிடவும் என்னை நடத்துவது நீங்கள் வைத்து போன பாடல்கள் தான். உங்களிடம் இல்லாத பாடல்கள் இருந்திருக்குமா அத்தான்? பழைய பாடல்களீல் இருந்து நேற்றைய நாட்கள் பாடல்கள் வரை வைத்திருந்தீர்கள்.  திருமணம் முன்பு உங்கள் வீட்டிற்கு வந்த போது நீங்கள் என் காதில் கேட்க வைத்த பாடல் குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு....குழலூதும் கண்ணனுக்கு ...... நினைவு வருகிறதா? எப்போதும் பாடல்களுடன் தான் வாழ்ந்தீர்கள். படிக்கும் போது கூட பாட்டு கேட்டு கொண்ட படிப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நாம் பாண்டவர் மேட்டில் திருமணம் முடிந்து வந்து குடியேறிய புதிதில் காலையும் நீயே மாலையும் நீயே காலையும் நீயே ................. என்ற பாடல் எப்போதும் கேட்டு கொண்டு இருப்பீர்கள். அந்த பாடல்கள் பின்பு உறக்கத்திலும் பாடும் அளவிற்கு எனக்கு மனப்படம் ஆனது.  என்னிடம் வம்பு இழுக்க சட்டி சுட்டதடா கை விட்டதடா கை சுட்டதடா...என்ற பாடலை போட்டு வெறுப்பு ஏற்றுவீர்கள். பிள்ளைகள் வளர்ந்த பின் அவர்களுக்கு பிடித்த பாடல்கள், எனக்காக மலையாளப் பாடல்கள் 70 களில் 80 களில் 90 களில் என தற்போதைய பாடல்கள் வரை வைத்திருந்தீர்கள். இதில் கிருஸ்தவ, ஹிந்து பாடல்கள், இஸ்லாம் என எல்லா மதப்படல்களும் வைத்திருந்தீர்கள்.


பிள்ளைகளுடன் சேர்ந்து கேட்கும் பல பாடல்களில் ஊதாக்கலரு ரிப்பனு ஊதாக்கலரு ரசித்து சிரித்து கேட்டு கொண்டு இருப்பீர்கள். ஸ்ரீவித்யாவை ரசிக்க... நான் இது நல்லா இல்லை.... என கொமைக்க  ஒரே சிரிப்பும் விளையாட்டுமாக இருப்பீங்க. கண்ணும் கண்ணும் கண்ணுன் கண்ணும்... என்ற பாடல் மிகவும் விரும்பி கேட்கும் பாடலாக இருந்தது. இதன் பொருள் அப்படியே புரியாவிடிலும் அதன் இதமான டியூனை ரசித்து கேட்டு கொண்டு இருப்பீர்களே அத்தான். 

பின்பு என்னுடன் சேர்ந்த பின்பு மலையாளப் பாட்டு மேலும் உங்களுக்கு ஆர்வம் வந்தது. நாம் வண்டிப்பெரியார் போகும் போது மலையாலப்பாடல்கள் சேகரிப்பதற்கு என்றே முயூசிக் இந்தியா என்ற இசைக்கடையுடன் நட்பு வைத்திருந்தீர்கள். அவர்கள் தமிழகம் வரும் போதும் உங்களுக்கு பிடித்த பாடல்களை பதிந்து கொண்டு தருவதை அறிந்துள்ளேன். ஹிந்து பாடல்களில் உங்களுக்கு ஹரிவர்சனம் ஹரிகரா என்ற சபரிமலையை சார்ந்த சம்ஸ்கருத பாடலை விரும்பி கேட்பீர்கள். நீங்கள் பிறந்த இடம் சபரிமலை எஸ்டேட்டு தானே. ஒரு முறை அந்த பக்கம் போக வேண்டும் என்று கூறியிருந்தீர்கள்.  நீங்கள் போகும் முதல் நாள் கூட என் கைபேசியில் சில பாடல்கள் பதிந்து வைத்திருந்தீர்கள். 

 இளையராஜாவின் தமிழ் பாடல்கள் உங்களுக்கு பிடித்தமானது காக்கால கண்னம்மா
நமக்கு இருவருக்குமான பாடல் ஒன்றும் வைத்திருந்தீர்களே அத்தான்.கண்ணே கலை மானே..

கிறிஸ்தவ பாடல்களில் மாதா பாடல்களை விரும்பி கேட்பீர்கள்.மாதா மன்றாட்டு மாலை அதிலும் காலையில் கேட்கும் பாடல்களை தினம் கேட்டு வந்துள்ளீர்கள். தினகரன் பாடல்களில் நீங்கள் எப்போதும் கேட்கும் பாடல்கள் நினைவில் வருகின்றது தொல்லைகள் கஷ்டங்கள். அருட் தந்தை ஜெரியின் நீயே நிரந்தரம் , டென்னிஸ் தந்தையின் பாடல்கள் https://www.youtube.com/watch?v=ZmcOoxjHl8U பாடல்கள், ஜிம் ரெவெர்ஸின் ஜிம் ரிவேர்ஸ் பாடல்கள்  நீங்க விரும்பி கேட்கும் பாடல்கள் ஆச்சே. 

நீங்கள் கானா பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களையும் விரும்பி கேட்பீர்கள். கலாபவன் மணி பாடல்கள் கலாபவன் மணியின் கலாபவன் மணி பாடல்கள் கலாபவன் மணி பாடல்கள் பாடல்கள் என்றால் ரசித்து சிரித்து கேட்டு கொண்டு இருப்பீர்கள். நான் நீங்கள் இருக்கும் போது உங்களுக்காக பாட்டு கேட்பது போல் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் உங்களுக்காகவே உங்களை நினைத்து கொண்டே இப்போது பாட்டு கேட்டு கொண்டிருக்கின்றேன்.

என்னால் நம்ப இயலவில்லை அத்தான். நீங்க போய் விட்டீர்களா? உங்கள் ஒவ்வொரு படங்களை பார்க்கும் போது; நான் நினைத்து கொள்வது என்ன அதிசயம், என்ன கொடுமை, என்ன நயவஞ்சகம்! கடவுள் என்னை விட்டு உங்களை அழைத்து போனது என தோன்றுகின்றது. நம் வாழ்க்கையில் நீங்கள் என்னை பார்ப்பது நான் உங்களை பார்த்து கொண்டு  ரசித்து தானே வாழ்ந்தோம். 

என்னை ஆறுதல்படுத்துவது உங்கள் பாட்டுகள் தான். நான் ஒரு தூக்க சாமியார். என்ன வேலை இருந்தாலும் தூக்கம் வந்தால் ஓடி வந்து தூங்கும் நான் இப்போது இரவு 12 வரை நீங்கள் வைத்து போயுள்ள ஒவ்வொரு பாட்டாக கேட்டு கொண்டு இருக்கின்றேன். அந்த பாடல்கள் கேட்டு கொண்டே தூங்குகின்றேன். 

நான் விரும்பி பாட்டு கேட்பது நாம் பயணிக்கும் போது தான். சில நேரம் நீங்களும் நம் பிள்ளைகளும் பாட்டு போடுவதில் போட்டி போட்டு சண்டையிடுவதை ரசித்தும் உள்ளேன். நீங்கள் போகும் வாரம் வியாழன் அன்று ஜெரியும் நீங்களும் பாட்டு போடுவதற்காக சண்டை இட்டது நினைவு வருகின்றது. ஜெஸ்டின் பீபர் பேபி பேபி பாட்டை நீங்கள் விரும்பாதது போலவே நீங்கள் பழைய தமிழ் பாட்டுகளை போடும் போது அவன் மாற்ற உங்களுக்கு கோபம் வரும். ஜஸ்டின் பீபர் வைத்தே நீங்களும் சாமும் சேர்ந்து ஜெரியை வெறுப்பு ஏற்றி கொண்டு இருப்பீர்கள்.

எப்போதும் யார் பக்கம் சரியோ தவறோ என பார்க்காது உங்கள் பக்கம் தான் நின்றுள்ளேன். ஆனால் அத்தான் நீங்க போகும் போது மட்டும் என்னை தனியாக்கி போய் விட்டு விட்டு போய் விட்டீர்களே. லயோளாவில் நான் இருந்த போது என் அழைப்பிற்கு என்றே இந்த பாடலை புலரித்தூமஞ்சு துள்ளியில் தானே உங்கள் கைபேசியில் வைத்திருப்பீர்கள். உங்கள் பிரிவை மறக்க என்றே ஒரே நேரம் பல தரம் இந்த பாடலையை மறுபடியும் மறுபடியும் கேட்டு கொண்டு இருப்பேன். இப்போதும் அதே போன்று உங்களுக்கு பிடித்த பாடல்கள் எல்லாம் போட்டு கேட்டு கொண்டே உயிர் வாழ்கின்றேன். 

அத்தான் பயமாக உள்ளது. உங்க அன்பு இல்லாம, உங்க சத்தம் கேட்காம நான் எவ்வளவு நாட்கள் இருப்பது.   இப்படி என்ன நடுவில் விட்டு விட்டு போக இந்த திருமணமே தேவையிலையே? ஆறுதல் படுத்த சிலர் 19 வருடம் வாழ்ந்து விட்டீர்கள் தானே என்கின்றனர். அத்தான்  19 வருடம் பறந்து போய் விட்டதே. இனியுள்ள வருடம் எப்படி போகும் என்று நினைத்து நினைத்து தான் அழுகையாக வருகின்றது.

நம்ம பிள்ளைகள் அன்பாக என்னை பார்த்து கொள்கின்றனர். நான் லயோளாவில் இருந்த போது நீங்க இரத்த அழுத்த மாத்திரை எடுக்க ஆரம்பித்ததால் தான் நான் கூட திரும்பி வரவேண்டியதாக போனது. ஆனால் இங்கு என்னை கொண்டு வந்து விட்டு இப்படி போய் விட்டீர்களே அத்தான். 

ஐயோ, உங்களுக்கு என்ன என்ன ஆசைகள்! நான் கூட சரியாக கேட்காமே விட்டு விட்டேனே. உண்மையிலே நீங்க என்னை விட்டு கத்தார் போவதே  நான் நம்பவில்லை அத்தான். அதனால் தான் கத்தாரில் சென்று விட்டு நீங்க இன்ன இன்னது செய்ய வேண்டும் எனக் கூறிய போது ”பிறக்காத குழந்தைக்கு ஜாதகம் எழுதாதீர்கள்” எனக்கூறி சரியாகக்  கேட்காம விட்டு விட்டேனே அத்தான். 

”சனிக்கிழமை தான் என் துணிகளை எல்லாம் மடித்து வைக்க வேண்டும் எல்லாம் ஜெரி உலைத்து போட்டு விட்டான்” என கோபப்பட்டு கொண்டு இருந்தீர்கள். நான் மடித்து வைத்துள்ளேன். நேற்று பகல் தூங்கி கொண்டிருந்த போது கனவில் ஆஷ் கலர் சட்டை கறுப்பு கலர் கால் சட்டையுடன் என்னுடன் கல்லூரிக்கு  வந்தீர்கள். நான் அங்கு அலுவலர்களிடம் பேசி திரும்பும் முன்  விரைந்து சென்றீர்கள். நான்  அத்தான்.... அத்தான்........... என அழைத்து கொண்டு பின்னால் ஓடி வரும் போது பார்த்து கொண்டே விரைந்து நடந்து சென்றீர்கள். அந்த சட்டையை உங்கள் துணியில் இருந்து எடுத்து  முகர்ந்து பார்த்த போது உங்கள் அருகாமை தெரிந்தது.  

அத்தான் வேண்டாம் இந்த கொடுமை எனக்கு வேண்டாம். என்னால் தொடர்ந்து ஐந்து மணிநேரம் கூட தூங்க இயலவில்லை. ”கத்தார் போனால் என்னை பிரிந்து இருந்து விடுவீர்களா” என்றதும் உனக்கும் பாஸ்போர்ட் எடுத்து வைத்து விட்டேன். உன்னை பார்க்க வேண்டும் எப்போ தோன்றுகின்றதோ அப்ப உடனே நான் வருவேன். உனக்கு என்னை காண வேண்டும் என்றாலும் உடனே வந்து விடவேண்டியது தானே என்று ஆறுதல்படுத்தினீர்கள். இனி நான் எங்க ஓடி வர அத்தான். 

நீங்க ஏன் உங்க செல்லமாக வைத்திருந்தீர்கள். அதனால் தான் என்னால் மீண்டு வரவே இயலவில்லை. தேடி தேடி இல்லையா எனக்கு பொருட்கள் வாங்கி வருவீர்கள். அத்தான் என்னால் தாங்க இயலவில்லை. உங்களை கொண்டு போக நினைத்த கடவுள் நம்மை குடும்பமாகவே அழைத்து சென்றிருக்கலாம். இது எனக்கான தண்டனை மட்டும் தான். நீங்க என் அன்பு பிடியில் இருந்து எப்படியோ தப்பித்து போய் விட்டிர்கள். இப்படி விரைவில் போகத்தான் எல்லாரிடமும் ஓடி ஓடி பேசி கொண்டிருந்தீர்களோ. நீங்க பேசுவதாலே உங்க முதுகு பக்கம் நின்று கொண்டே  நான் இருந்து வந்தேன். இப்போது எனக்கும் யாரையும் தெரியாது. உங்களை மட்டும் தான் தெரியும். நீங்க திரும்பி வந்தே ஆக வேண்டும் அத்தான். இல்லாவிடில் உங்களை மறப்பது எப்படி என்றாவது சொல்லி தாங்க. 

நீங்க இரவில் வேலை செய்து கொண்டிருக்கும் போது உங்களுக்கு சுகர், இரத்த அழுத்தம் ஏதும் வந்து விடக்கூடாது என்று நினைத்து தான் தூங்க வாங்க, காலையில் முடிக்கலாம் என்பேன். அதுவெல்லாம் முடியாது நாளைக்கு முடித்து தருகிறேன் என்று வாடிக்கையாளரிடம் கூறி விட்டேன். நீ தூங்க போ என விரட்டுவீர்கள். உங்களை எரிச்சல்படுத்த என்றே அருகில் நானும் இருக்க உன் நாற்காலியை தள்ளி போடு, தள்ளி இரு என சண்டை இட்டு கொண்டே; உன்னால் பெரிய தொல்லை . என அலுத்து கொண்டே எழுந்து வருவீர்கள்.

அத்தான் என்னால் இன்னும் ஒத்து கொள்ள இயலவில்லை. நீங்க போய் விட்டிர்களா இனி வரவே மாட்டீங்களா இனி பேசவே மாட்டீங்களா , உங்க கூட நான் சண்டை போட முடியாதா? உங்களை அணைத்து உங்க தலை முடியை உலைத்து விட  இயலாதா? அத்தான் அத்தான் உங்களை நான் நேசித்தேன் இப்போது உங்கள் பாட்டுகள் ஊடாக உங்களை நேசிக்கின்றேன். . அத்தான் உங்களுக்கான என் பாடல் நீங்க ஏற்று கொள்ளுங்கள் என்னோடு நீ பேச வந்தாய் என்னோடு நீ பேச வந்தாய்


முடிவுற்ற நம் பயணங்கள்!இந்த முறை நாங்கள் விடுமுறைக்கு எங்கும் போகவில்லை.  நீங்கள் இல்லாத பயணமா? நினைத்து பார்க்கவே இயலவில்லை.  கடந்த ஆறு மாதம் முன்பு நமது பிள்ளைகள் பத்து நாட்களுக்கு முன்னமே தாத்தா பாட்டி வீட்டிற்கு போய் விட்டனர்.  நீங்கள் கூறினாலும் உங்களை விட்டு நான் அங்கு தனியாக சென்று தங்க நான் விரும்புவதில்லை. உங்களுடனே வந்து உங்களுடனே திரும்புவது தான் என் விருப்பம். நாம் காலை 5 மணிக்கு கிளம்பினோம். எப்போதும் போல் நீங்கள் தான் எல்லாம் எடுத்து வண்டியில் வைப்பீர்கள். நான் புகைப்படக்கருவி என் கம்பிளி புதப்பு, தலையில் கட்டும் ஸ்கார்ப் மட்டுமே எடுத்து கொள்வேன்.
அத்தான் வண்னார்பேட்டை பக்கம் ஒரு கடையில் இருந்து சாயா வாங்கி தந்தீர்கள். அப்படியே நம் பயணம் ஆரம்பமானது. வழியில் செல்வராணி அத்தையை அழைத்து பார்த்தேன். இருந்தால் கண்டு விட்டு வரலாம் விரும்பினால் அவர்களையும் எஸ்டேடுக்கு அழைத்து செல்லலாம் என்ற நோக்கவும் இருந்தது. .

போகும் வழியில் கூடுலூரில் வைத்து  இளனியை ஒரு இயந்திரத்தால் வெட்டி தரும் கடையில் நிறுத்தி இளனி வாங்கி தந்தீர்கள். நான் அங்கிருந்து இரண்டு திராட்சைச் செடி வாங்கி இருந்தேன். ஆனால் மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன்.  

இந்த முறையும் பக்கத்து வீட்டு வைத்தியர் சேச்சி மிகவும் நோய் உற்று இருப்பதாக அப்பா கூறினார்கள். கடந்த முறை அங்கு சென்றதால் நாம் அருட் தந்தை ஃபென்னான்றோ அவர்களை சந்திக்க சென்றோம். அவரிடம் சில நேரம் கதைத்து விட்டு ஆனக்கல் ஆலையத்தில் வைத்து அவர் நமக்காக பிரத்தியேக ஜெபம் ஏறெடுத்தார் . பின்பு உங்களை மிகவும் புகழ்ந்து பேசினார். உங்கள் பெயரைப்பற்றி இதுவரை யாரும் கதைக்காத பார்வையில் மிகவும் பூரிப்பாக கதைத்தார். அப்பெயர் யூத மொழியில் தந்தை, குரு என அர்த்தம் கொள்வதாக கூறினார்.  உங்கள் முகத்தில் பிரத்தியேக ஒளி மின்னுவதாக கூறினார். அத்தான் நினைத்து பார்க்க பார்க்க என் இதயம் வெடிக்கின்றது. உங்க  பிரத்தியேக பயணத்திகான ஒளியா ஃபாதருக்கு தெரிந்தது. பின்பு வீட்டில் வந்து உணவு எடுத்து விட்டு பட்டுமலைக்கு சென்றோம். இந்த முறை என் குழந்தைப் பருவத்தில் மரியாகம்மா பாட்டி வசித்த வீட்டை நோக்க வேண்டும் படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. ஆனால் வண்டியை விட்டு இறங்கும் போதே கீழை விழுந்து காயம் பட்டதால் பின்பு போன உற்சாகம் எனக்கில்லாது போய் விட்டது,  நானும் விழுந்த கோபத்தில் உங்களை திட்டி விட்டேன் என்று என்னிடம் கோபித்து கொண்டீர்கள். கேத்திரின் வீட்டில் சென்று சாயா குடித்து விட்டு அவள் பக்கத்து வீட்டில் இருந்து ஒரு ரோஜாச்செடி வாங்கி தந்தாள். அது இந்த வாரம் தான் பூத்தது அத்தான். எப்போதும் முதல்ப் பூவை உங்களிடம் தான் காட்டி கொடுப்பேன். இந்த முறை நானாக பார்த்து கொள்ள வேண்டியதாக போயிற்று.


அத்தான் நீங்களும் உங்கள் சகலனும் சேர்ந்து திட்டமிட்டு பாஞ்சாலிமேடு அழைத்து சென்றீர்கள். எனக்கு தெரிந்திருந்தால் வேண்டாம் என்றிருப்பேன். இரு வருடம் முன்பு நாம் அங்கு சென்றிருக்கோம் என்றிருப்பேன். அதனாலே நீங்கள் சொல்லாதே அழைத்து சென்றீர்கள். வசதியாக உங்கள் வாகனத்தில் எல்லா பொடி வாண்டுகளையும் ஏற்றி கொண்டீர்கள். எனக்கு உங்கள் பக்கம் சீட் போடாதது கோபமாக இருந்தது. சமீப நாட்களாக என் முன் சீட்டை சாம் பிடித்து கொள்வான். சில நேரம் நான் என் மாப்பிள்ளை கூட நான் தான் இருப்பேன் என சண்டை இட்டு விரட்டி விடுவது உண்டு. உன் மனைவி வந்ததும் நானும் அப்பாவும் பின் சீட்டிற்கும் போய் விடுகிறோம் என மிரட்டுவதும் உண்டு. ஆனால் இந்த முறை எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. மழையும் மேகமூட்டவுமாக காட்சி அளித்த அந்த குறுகிய மலைபாம்பு போன்ற  ரோட்டில் நீங்கள் சவாலாக ஆனால்  மகிழ்ச்சியாக வந்தீர்கள். ஒவ்வொரு முறை உங்கள் அருகில் வர வர நீங்கள் முன் சென்றே நடந்து போய் விட்டீர்கள். திரும்பி நெல்லை நோக்கி வரும் போது இந்த சம்பவத்தை கூறி உங்களிடம் நான் கோபப்பட்டேன். நீங்களூம் நீ என்னுடன் ஓடி வரவேண்டியது தானே. பின்னால் பேசி கொண்டு வந்தால் அப்படி தான் என்று கூறி என் வாயை அடைத்து விட்டீர்கள். அங்கு வைத்தும் ஒரு குழுவை கண்டதும் பேசி நட்பாகி விட்டீர்கள்.
கம்பம் பள்ளதாக்கு வந்ததும் ஒரு திராட்சை தோட்டம் முன்  உள்ள கடையில் திராட்சைப்பழம் ஒரு பெட்டியாக வாங்கினீர்கள்,  பின்பு வரும்  வழியில் வத்தலகுண்டுவில் கொஞ்சம்  காய்கறியும் வாங்கி வீடு வந்து சேர்தோம். மே மாதம் போக திட்டமிட்டிருந்தோம். நாம் வகுத்த திட்டம் ஒருபுறம் இருக்க இறைவன் வகுத்த திட்டத்தில் நீங்களும் போய் விட்டீர்களே. நீங்க சொன்னது போல் இன்று கத்தாருக்கு போயிருந்தால் என்னால் ஒரு ஓட்டுநரை அமர்த்தி கூட என் வீடு சென்று வந்திருப்பேன். இப்போது உள்ள மனநிலையில் உங்க வீட்டை விட்டு போக மனமில்லை. எல்லாம் ஸ்தம்பித்து விட்டது. ஒரு அமைதியான இருள்படர்ந்த  இடத்தில் நிற்பது போல் உள்ளது.
நீங்கள் காரை ஓட்டும் அழகு எங்களுக்கு தேவையான பொருட்கள் சாப்பிட வாங்கி தந்து அழைத்து செல்லும் காட்சிகள் கண்ணில் இருந்து இன்னும் மறையவில்லை. பின் எப்படி தனியாக செல்ல இயலும். இந்த தனிமையான பயணம் நம்ம மகன்களுக்கும் பிடிக்கவில்லை. நாங்கள் நம் வீட்டிலே இருந்து கொண்டோம்.


இங்கு நீங்கள் வாசல் கெயிற்டை திறந்து கொண்டு வேகமாக வருகின்றீர்கள். செருப்பை கழற்றி கொண்டே அம்மா எங்கே எனக் குரல் கொடுக்கின்றீர்கள். உங்கள் கணிணி அருகில் இருந்து பாட்டு கேட்டு கொண்டு இருக்கின்றீர்கள். சாம் சாம் என அழைத்து பார்த்தீர்கள் அவன் வரவில்லை என்றதும் அவன் அறையில் அவன் கட்டில் இருந்து அவனிடம் வம்பு இழுத்து கொண்டு இருக்கின்றீகள்.  உங்களை எப்படியாவது என்னுடன் கடத்தி கொண்டு போக வேண்டும் என்று அத்தான் மாடிக்கு வாரீங்களா ...........//? நல்ல காற்று, நிலா ஒளிகூட இன்று நல்லா இருக்கு என்கிறேன். என்னை திருப்திப்படுத்த என்னுடம் மாடிக்கு வருகின்றீர்கள். அங்கு ஜெரி அவன் பந்தையும் எடுத்து கொண்டு வந்து உருட்டி கொண்டு இருக்கின்றான். கத்துகின்றீர்கள். சும்மாவே இருக்க மாட்டானா, இரவு ஒன்பது மணிக்கும் ஆடி கொண்டு தான் உன் பிள்ளை இருப்பானோ என்கிறீர்கள். நானும் அத்தான் உங்களுக்கும் சின்ன குழந்தையாக இருக்கும் போது கால் பந்து தானே பிடிக்குமே. உங்களை போல தானே உங்க பிள்ளை இருப்பான் என்கிறேன். எனக்காக இருந்து விட்டு ஜெரி தண்ணீர் எடுத்து வா என விரட்டி விடுகின்றீர்கள். 10 மணி கடந்ததும் தூங்க போகலாமா என வந்து பின்பும் கணிணியில் சில பாட்டுகள் கேட்டு விட்டு வாட்ஸாப்பில் வந்த சில சிரிப்பு காணொளி பார்க்கின்றீர்கள். முகநூலை பார்க்கின்றீர்கள். உங்க சொந்தக்காரர்கள் உங்க நண்பர்கள் படங்கள் காட்டி தருகின்றீர்கள்.  அப்படியே உங்க நினைவுடனே நாள் பொழுதை முடிக்க போகின்றோம்.