header-photo

மயங்கினேன் உங்களில் அத்தான்.- 41 வது தின நினைவு நாள்!

அத்தான் நம் உலக பிரகாரமான பிரிவின் 41 வது நாள்! திருமணம் நமக்கு நிச்சயம் ஆகியதுமே உங்களிடம் கேட்டேன்  எனக்கு சமைக்க தெரியாது, நீங்க சொன்னீங்க நான் பார்த்து கொள்ளுகின்றேன் என்று. உங்கள் அப்பா ஒரு நாள் கேட்டார் இந்த கல்யாணத்தால் எனக்கு என்ன லாபம்?  உனக்கு நகை கிடைத்து விட்டது, என் மகனுக்கு உன்னை கிடைத்துள்ளது. எனக்கு ஆயிரங்கள் செலவாகியுள்ளது. அன்று தான் நான் இந்த திருமணத்தால் என்ன லாபம் என்று சிந்திக்க துவங்கினேன். என் பாசமான குடும்பத்தை, வீட்டை பிரிந்தேன், மகள் என்ற உரிமையை இழந்தேன், ஆனால் எனக்கு கிடைத்த ஒரே லாபம், என் சொந்தம் என் வரம் எல்லாம் நீங்க தான். நீங்க விளையாட்டாக கூறுவீர்கள் உனக்கு விளையாட உங்க அப்பா என்னை வாங்கி கொடுத்துள்ளார் என. ஆம் அத்தான் நம் வாழ்க்கையே விளையாட்டாகத் தான் இருந்தது. அது எதிர்பாராத விளையாட்டில் முடிந்து விட்டது. 


இன்று உங்க கல்லறைக்கு சென்றேன். சில மெழுவத்திகள் பற்ற வைத்து அந்த தீபத்தில் உங்க அணையாத அன்பை நினைத்து கொண்டு இருந்தேன்.  நம் மகன்களிடம் கடைசி சில மாதங்களில் நீங்க அதீதமாக கோபப்பட்டீர்கள். என்னிடம் நீங்கள் குறை  கூறும் போது நான் கூறுவேன்  அப்பாவை என்னிடம் குறை  கூ வேண்டாம். அவர் அப்படி தான். அவர் கோபப்படும் போது நீ கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடு அவர் சாந்தமாகி விடுவார். அதே போன்று தான் நீங்கள் நம் பிள்ளைகளை குறை கூறும் போதும் நான் கூறியுள்ளேன். அத்தான் உங்களுக்கு உங்க பெற்றோர்களிடம் கிடைத்த அடி, வேதனையின் கால் பங்கை நம்ம  பிள்ளைகளுக்கு கொடுக்காதீர்கள். அவர்களை உங்க நெஞ்சோடு அணைத்து முத்தமிடுங்கள். அப்படி தான் நம் நான்கு பேரின் வாழ்க்கையும் ஓடியது. நாம் மாறி  மாறி அரவணைத்து கொண்டோம். இரண்டு நாள் முன்பு நான் தூக்கத்தில் இருந்து எழுந்து அவர் எங்கே எங்கே என தேடியுள்ளேன். அம்மா தான் தூங்க கூறியுள்ளார்கள். நினைத்தால் மறைந்து போன தெளிவற்ற  கனவு போல் தான் உள்ளது. நீங்கள் போனதாக என்னால் நம்ப இயலவில்லை அத்தான். 

மாலை 4.30 க்கு உங்க ஆப்பிள் போன் என்னிடம் கதைக்க ஆரம்பித்து விடும். சுபி அக்கா நரேன் அண்ணாவை நாங்கள் அழைத்து வர கிம்பி கொண்டு இருந்த போது நீங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தீர்கள். ஆப்பிள் போன் சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்தது. 

அத்தான் உங்களூக்கு  நாம் தனிக்குடித்தனம் சென்ற போது  சாதத்தை  கஞ்சாக வைத்து தந்தது முதல் கடைசியாக வெள்ளி இரவு தக்காளி சாதம்- துவையல் வைத்து தந்தது வரை ஞாபகம் வருகின்றது.  பொதுவாக நான் அரைத்து வைத்திருக்கும் துவையலை மறுபடியும் அரைக்க கூறும் நீங்கள் அன்று சாப்பாடு, துவையல் எல்லாம் நன்றாக உள்ளது என்று என்னிடம் கூறினீர்கள். பொதுவாக தேங்காய் துருவித்தரும் நீங்கள் இடியாப்பம் பிழிந்து தரும் நீங்கள் சனிக்கிழமை நான் கைவலி என்று கூறியும் எனக்கு எந்த உதவியும் செய்து தரவில்லை. அன்று நீங்கள் பாட்டும் கேட்கவில்லை. நீங்கள் வீட்டில் இருந்து கிம்பும் போது வலது தோள்ட்டை கடினமாக வலித்து கொண்டிருந்தது. அதனால் தான் வெளியே வராது வாசலில் நின்றே உங்களை பார்த்து கொண்டு நின்றேன். அன்றை விபத்தில் என்னை எப்போதும் தாங்கும் துங்க, தலை வைக்க தரும் உங்க தோள் பட்டை உடைந்து விட்டதாம் அத்தான்.

இன்று நம் மகன் சாமிடம் புலம்பி கொண்டு இருந்தேன் தம்பி, அப்பா உயிர் மட்டும் இருந்தால் நாம் சந்தோஷமாக வைத்து கவனித்திருக்கலாம். கடவுள்  அவர் உயிரை நமக்கு தந்திருக்கலாம். அவர் முகத்தை பார்க்க வேண்டும் போல் உள்ளது. அவன் கூறினான் இல்லை அம்மா அப்பா கம்பீரமாக் இருக்க வேண்டும். ஒரு கால், கை இல்லாது இருந்தால் வருத்ததால் நொறூங்கி இருப்பார்.  இல்லை அத்தான் உங்க  முகத்தை பார்த்து கொண்டே  மயக்கித்திலே வாழ்ந்திருப்போம் தானே/

உங்களுக்கு விபத்து என்துமே என் உடன் பணிசெய்யும் பேராசிரியர்களுக்கு தெரிவித்தேன். டவ்லஸ்  மற்றும் விஜய் சார் உங்களுடன் மருத்துவ மனையிலும் சந்தோஷ் சார் நம் வீட்டிலும்  வந்து உதவினர். என்னவர் தலைக்கவசம் அணிந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமே என்றேன்; இல்லை மேம் இன்னும் 10  நாள் இருந்து வேதனைப்பட்டு போயிருப்பார் என்றார். நீங்க உடனே அந்த கடவுளிடம் போய் விட்டீர்கள். நாம் எப்போதும் பற்றி நடக்கும் உங்கள் கையை தொடத்தான் ஆசை கொண்டேன். யாரும் அனுமதிக்கவில்லை. கடைசியாக என் கண்ணை மூடி கொண்டாவது உங்கள் கையை மட்டும் தொடவேன்டும் அந்த விரல்களில் என் விரல்களை ஊடுரவ  வேண்டும் என்றது.  அதற்கும் அனுமதிக்கவில்லை. உங்களை வீட்டில் கொண்டு வந்த போதும் உங்க கைவிரல்களை துணீயால் மூடியிருந்தனர். பார்க்ககூட இயலவில்லை அத்தான்.  உங்க கண் விழிகள் நீங்க வீட்டில் இருந்து கிம்பிய போது என்னை பார்த்தது போலவே இருந்தது.

அத்தான் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சி, எதிர்பார்ப்புகள் கொண்டதாக தான் இருந்தது.  உங்கள் அன்பு எங்களை பரவசப்படுத்தியது. எங்க மூன்று பேருக்கும் என்ன என்ன தேவையோ அதை வாங்கி தந்தீர்கள். எனக்கு என சில பலகாரங்களை கொண்டு அந்து தனியாக தந்தீர்கள். சமீபமாக நான் என் அப்பாவிடம் எதிர்பார்ப்பது போல் வாசலில் நின்றே எனக்கு என்ன கொண்டு வந்திருப்பீர்கள் என தேட துங்கினேன் . கடைசியாக நாகர்கோயிலில் இருந்து எனக்காக வாங்கி வந்த இனிப்பு பன் நினைவில் வருகிது. 
யார் உங்களை குறை கூறீனாலும் என் மனதிற்குள் செல்லவே இல்லை. எதோ ஒரு மயக்க நிலையில் தான் இருந்துள்ளோம். நீங்களும் வீட்டு வாசல் வரும் போதே நான் வாசலில் நின்று வரவேற்க வேண்டும், உங்க வாகனம் வர வாசல் திந்து விட வேன்டும் என எதிர்பார்த்தீர்கள் நானும் செய்து வந்தேன். வெள்ளி இரவு நீங்கள் வரும் வரை நான் வாசலில் தான் நின்று கொண்டு இருந்தேன். வந்ததும் குளித்து விட்டு சாப்பிட கூறியும் எனக்கு பசிக்குது என்று நேராக அடுக்களையை தேடி வந்தீர்கள். நீங்க முட்டை வாங்கி வருவீர்கள் என வெட்டி வைத்த வெங்காயத்துடன் இருந்தேன். மறுபடியும் வாங்கி வரவா என்தும் வேண்டாம் துவையல் உள்ளது என வெங்காயத்தை குளிர்சாதனைப்பெட்டியில்  வைத்தேன். 

அத்தான் அந்த மயக்கம் தான் நம்மை வாழ வைத்தது. நம் இருவர் குறையும் நம்மை காணாது மறைக்க வைத்தது. உங்களை பிரிந்து லயோலா அருகிலுள்ள செர்வெய்ர்ட் விடுதியில் சேர்த்து விட்டு நீங்கள் சென்ற  போது நான் அந்த கட்டிலில் இருந்து உங்களை நினைத்து அழுதது நினைவு வருகின்து. அத்தான் தற்போது அந்த அழுகையுடன் தான் நிதம் நிதம் புரளுகின்றேன். நீங்க உங்க ஜாதகத்தை பற்றி என்னிடம் கூறியதில் ஏதோ பிழை உள்ளது. ஆனால் 10 வருடம் முன்பு ஒரு வீட்டில் ஜெபிக்க செல்லுவோமே  உங்க மகனுக்கு 18 வயது ஆகும் போது பெரும் கவலையை சந்திப்பீர்கள் என்றதும் அந்த ஜெப கூட்டத்திற்கு போவதை நான் நிறுத்தி கொண்டது இப்போது தான் நினைவில் வந்தது. 

அத்தான் நம் மயக்கம் என்ன அழகானது. என்னை நீங்க அழவே அனுமதிக்க மாட்டிங்க. உங்களுக்கு தெரியாது உங்க கையில் கிடந்தே அழுதுள்ளேன். நீங்க என் கன்னத்தை தடவி பார்த்து ஏன் அழுகின்றாய் என்றதும் ஒரு கவலை என்தும் நான் இருக்கும் போது உனக்கு என்ன கவலை  என  நீங்க அழ ஆரம்பிக்க மன்னித்து கொள்ளுங்கள் அத்தான் என நான் சிரிக்க நீங்களும் சிரிக்க என நம் பொழுதை கழித்துள்ளோம். அத்தான் இப்ப கொஞ்ச நாட்களாக நான் ஒன்றும் எதிர் பார்க்கவில்லை உங்க மாறாத ன்பைத் தவிர. இரவு எட்டு ஆகியும் நீங்கள் வரவில்லை என்றால் அத்தான் உங்கள் வீட்டில் உங்களுக்காய் காத்து  ஒரு பெண்டாட்டி வீட்டிலுள்ளாள் என்தும் பந்து வருவீர்களே. வீட்டில் வந்ததும் குளித்து சாப்பிட்டு விட்டு நான் எங்கு இருக்கின்றேனோ அங்கு நீங்களும் என்னை தேடி வருவீர்கள்.  நீங்க சாப்பிடும் போது நான் தான் உங்க அருகில் இருக்க வேண்டும் என்று   பிடிவாதம் பிடிப்பீர்ள். என் பெண்டாட்டிக்கு அருகில் இடம் போடுங்கடா இல்லை என்றால் நான் எழுந்து விடுவேன் என நம் பிள்ளை மிரட்டுவீர்களே. நம்ம பிள்ளைகளும் நமக்காக விட்டு தருவார்கள்.  அத்தான் இப்போது நான் தனியாக இருந்து சாப்பிடும் போது நீங்க அருகில் இருந்து பார்ப்பது போலவே தோன்றுகின்து..

விபத்தும் அதை தொடரும் சிக்கல்களும்!

இன்றுடன் என்னவர் விடைபெற்று 40 நாட்கள்!இன்னும் மனம் ஆறுதல் அடையவில்லையே? சிலர் நியதி என்கின்றனர், சிலரோ அவரின் விதி முடிந்து விட்டது என்கின்றனர். சிலர் இந்த துயரில் இருந்து கரையேற அவர் வெளீ ஊருக்கு சென்றிருப்பதாக கருதக் கூறுகின்றனர். ஆறுதல் பட அறீவு  துணிந்தாலும் அவரை நினைத்து அழாத நாட்களில்லை. அவரை நினையாத கணங்கள் இல்லை. ஒரு குடும்பத்தை வழி நடத்தியவர்.  நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பாதிக்கப்பட்டு கரையேற இயலாது துயருற்று கலங்குகின்றோம்.    18 வயதை எட்டாத பெரிய மகன்   சின்னவர் 14 வது வயது அவருடைய சோகத்தை அன்பான அப்பாவின் இழப்பை சரிகட்ட தெரியாது கலங்கும் வயது. என் நிலையோ இன்னும் நிஜத்தை ஏற்று கொள்ள இயலாது தவிக்கும்  மனநிலை.

எங்களையும் கடந்து அவருக்கு இன்னும் பல உறவுகள். என் பெற்றோர்கள் வயதான சூழலில் கதி கலங்கி விட்டனர்.  என் சகோதரி குடும்பத்தில் இன்னும் வருத்தம் ஓயவில்லை. ஹெல்மெட் அணீந்திருந்தால் தப்பித்திருப்பாரோ எல்லா வாரவும் கோயிலுக்கு சென்றீருந்தால் தப்பித்திருப்பாரோ எனறூ பரிதபிக்கும் நிலை  என் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்க கடந்த முறை அத்தான் முதல் நபராக வந்திருந்ததை எண்ணி ஏங்குகின்றார். இன்னும் என் குடும்ப சித்தப்பா சித்தி அத்தைகள் என எல்லோரும் பழக இனிமையான மனிதருக்கு எவ்வாறு நிகழ்ந்தது என  புலம்புகின்ரானர்.. என்னவர் வீட்டிலும்  சூழல்.மிகவும் பரிதாபம். தன் தந்தைய் இராந்து  எட்டு மாதம் கடக்காத நிலையில் தன் தாய்க்கு தணலாக இருந்தவர்.  தன் தாயாருக்கு சுகவீனம் என்றால் யாரையும் எதிர்பார்க்காது மருத்துவ மனையில் இருந்து கவனிக்கும் மகனின் இழப்பு.  தேவை என்ற போது பனம் கொடுத்து மனபலன் கொடுத்து உதவின சகோதரனின் பிரிவு. இவர்களை எல்லாம் மிஞ்சி அவருடைய இழப்பை தாங்க இயலாது தவிக்கும் நண்பர்கள்.

நேற்று வரை கார், கணவர் நிறுவனம்,  என்றிருந்த நிலையில் இருந்து இன்று யாருமற்ற  யாதுமற்ற நிலை. இவை எல்லாம் விளங்க மறுக்கின்றது, ஏதேதோ காரணம் கூறி மனம் சமாதானம் அடைய துனீயும்  போது இடித்த கார் பற்றிய தகவல்கள் பல வேதனையான வருத்தப்படும் உண்மைகளை தருகின்றது.

ரோடு மேல் ஏதோ சத்தம் கேட்கின்றது என ஓடி ரோடு மேல் வந்த சட்ட கல்லூரி மாணவர்கள் கண்டது தலை உடைந்து மூளை சிதறிய நிலையில் மரித்து கிடக்கும் என்னவர்!  முட்டிய கார் பின்னால்  உறவினர்கள் கார் என மிகவும் உல்லாசமாக தாறுமாறாக ஓட்டி வந்துள்ளனர். காலை  எட்டு மணியாக இருந்தும் கூட கார் ஓட்டினவன் குடித்திருந்துள்ளான்.அதை மறக்க தூங்கி விட்டேன் என கூறீயுள்ளான். சிலர் அவனை அடிக்க பாய்ந்துள்ளனர். பின்னால் வந்தந்த காரில் எல்லோரும் தப்பித்து விட்டு கார் முன் சீட்டில் இருந்த முதியவர் மட்டுமே போலிஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  பின்பு சிலர் கூட திட்டமிட்டு என்னவர் வந்த  வழியை மாற்றீ கூற முயன்றூள்ளனர். அந்த விபத்து நடந்த இடத்தின் மிக அருகில் கரும்பு ஜூஸ் விற்கும் நபரை  கார்காரர்கள் சார்பாக கதைக்க வைத்துள்ளனர்.  இவரோ வீட்டின் அருகில் இருந்து நான்குவழி சாலைவழியாக  இடது ஓரத்தில் பயணித்தவர் சில நொடிகளில் சாந்தி நகர் பக்க ரோட்டில் இறங்க வேண்டியவர்.  தங்களுடைய கேளிக்கையின் விளைவாக தங்களூடைய சுயநலம் சார்ந்த நிதானமற்ற கார் ஓட்டுதலால் இருசக்கிர வாகனத்தில் பயணம் செய்த என்னவர் மரணத்திற்கு காரணமாகியுள்ளார். எப்படி விபத்தில் என்னவர் பலியாடு ஆகி கலங்க வைத்தாரோ அதே போன்று கார் என்ற வாகனத்தால் இன்னொரு நபரின் உயிரை பலிவாங்கி கொலைக்காரர்களாக மாறீயுள்ளனர். தனி நபர் கார்களால் பல விபத்துக்கள்.  விபத்துக்களை பொறுத்தவரை சட்டங்கள் கூட நபருக்கு நபர் மாறுகின்றது. பல சட்டங்களும் சாட்சியங்கள் என்ற பெயரில் பொய்களால் மூடப்படுகின்றது. அதே போன்று தான் இந்த விபத்தை நிகழ்த்திய ஓட்டுனரைக் கூட சட்டம் உடன் தண்டிக்கவில்லை. தூங்கி விட்டேன் என தப்பித்து கொண்டான். 

ஒரு விபத்தால் ஒரு நல்ல கணவர் , பாசமான தகப்பன் பாசமுள்ள மகன் மருமகன், நல்ல நண்அர் இழப்பு என பல இழப்புகள், ஒரு நாளும் என்னால் இதை நம்ப இயலவில்லை. படைத்த இறைவனிடம் தான் கோபித்து கொள்கின்றேன். . அத்தானிடம், அல்லது  என்னிடம் குறை கண்ட தெய்வமே ஒரு கை காலையாவது எடுத்து விட்டு அத்தானை தந்திருக்கக் கூடாதா?  அவர் ஓடி வரும் வீட்டுப்படி , அவருடைய அழகிய பார்வை, நடை அவர் செயல்கள் எல்லாம் நினைக்க நினைக்க முள்ளாக குத்துகின்றது. அவர் இனி இல்லை இனி அவர் வர மாட்டார் என்ற உண்மை என் வாழ்க்கையின் நம்பிக்கையை இருள் அடையச் செய்து விட்டது. இனி ஒவ்வொரு நாளும்  கடமையை முடிக்கும் பயணமாகவே என் வாழ்க்கை அமையபோகின்றது.  இனி மிஞ்சிய என் வாழ்க்கை உயிர்ப்பான ஒரு வாழ்க்கைக்கு ஒப்பாகாது.
 
 சாலை விபத்தில் இந்தியாவை போன்றூ மோசமான நாடு இருக்க போவதில்லை. நான்கு வழிச்சாலையில் சில குறீப்பிட்ட இடங்களீல் தொடர்ந்து விபத்து நடைபெறூவது ரோடுகள் தரத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. நான்குவழிச்சலையில் மக்களீடம் இருந்து பெறூம் சுங்க வரி நாட்களூக்கு நாள் அதிகமாகி கொண்டேபோகின்றது.  டிரவிங் சாற்றீதழ் முறயாக  யாரும் வேண்டுவதில்லை. ரோட்டிலுள்ள பயணத்தை உல்லாசமாக மாற்ற நினைக்கும் போது பலருடைய வாழ்க்கை அர்த்தமற்றூ அனாதமாக மாறூகின்றது.


கிடைத்த ஓர் தரவுப்படி வருடம் ஒரு லட்சத்திற்கு  மேல் மக்கள்  மரணீக்கின்றனர். இந்தியாவின் குற்றவியல் சட்டப்படி பிரிவு 304 ப்படி இந்திய சட்டத்தால் விபத்தால் பாதிப்படைந்தவர்களூக்கு 4600 டாலர் அபராதவும் ஏழு வருட சிறய் தண்டனை என்பதை  780 டாலர் அபராதம் ஒரு வருட சிறய் தண்டனை என குறத்து விதித்துள்ளனர்.  நமது நாட்டை பொறூத்த வரை சட்டம் ஆள் ஆளூக்கு மாறூபடுகின்றது.  காரில் வருபவர்கள் கவனமாக ஓட்டியிருந்தால் ஒரு குடும்பம் அனாதமாகியிருக்காது. நாங்கள் அத்தானின் நினைவுகளீல் இருந்து வெளீவர இன்னும் 5 வருடம் ஆகலாம்.

எங்கள் ஆதரவு, பாசம், தலைமையாக இருந்தவரின் பிரிவு எங்களய் உருக்குலைய செய்து விட்டது. மேலும் தேவையான   . சாற்றீதழ்கள் பெற  பல பல சிக்கல்கள். ; அரசு பக்கம் இருந்து மக்களூக்கு உதவும் வண்ணம் எந்த திட்ட செயல் பாடுகளூம் இல்லை. முழுமையான பிரேத பரிசோதனைக்கு கூட ஒரு  மாதம் மேல் ஆகும் என்கின்றனர். இப்படியாக எங்கள் வாழ்க்கை நாளூக்கு நாள் சுமையாக மாறூகின்றது

\

மரண விதி!
 இன்னும் என்னால் ஏற்று கொள்ள இயலாதது அத்தானின் உங்கள் பிரிவு தான்.  ஏன் எதற்கு என்ற கேள்வியில்அர்த்தம் இல்லை, விடை கிடைக்க போவதும் இல்லை. ஆனால் என் நம்பிகை, என் அன்பு,  என் பாசம், என் காதல்,  என் தஞ்சம், என் மகிழ்ச்சி   என எல்லாமாக இருந்தவர்.  கண்ணே கலைமானே என்று தினம் தினம் தாலாட்டு பாடி தூங்க வைத்தவர். https://www.youtube.com/watch?v=oCkg3S1uTFQ இன்றய மனநிலை பைத்தியம் பிடித்து அலைவது போல் தான் உள்ளது.  கருணை உள்ளம் கொண்ட அன்பு மயமான இறைவன் ஏன் இப்படி செய்தார் என ஆராய்வதில் பொருள் இல்லை என தெரியும். கடந்த நாட்களாக அத்தானை தேடி கொண்டு இருக்கின்றேன். உணவருந்தும் போது என்னை அழவைக்கின்றார், அல்வா கடையில் அத்தான் நிற்கின்றார், சென்னை சில்க்ஸில் படியேறூம் போது அத்தான் என்னை பின் நோக்கி கொண்டே என் முன்னே செல்கின்றார், பட்டு சேலை நோக்கும் போது என்னருகில் வந்து நின்று நோக்குகின்றார்.  என் மனபிராந்தி என்று  ஓயும்  எனக்கு தெரியாது. அத்தான் நீங்கள் இல்லாத ஒவ்வொரு நாளும் கொடியதாக உள்ளது. 


வாழ்க்கையை பற்றிய எல்லா நம்பிக்கையும் ஆசையும் உங்களுடனே வந்து விட்டது.  யாரிடமும் சமரசப்படவும் விரும்பவில்லை  ஒரு போதும் எண்ணாத சம்பவங்கள் நடந்து விட்டது.  இனி  இதற்கு மேல் ஆகப்போவதற்கு ஒன்றும் இல்லை. கடந்த நாலு மாதமாக நான் கூறினதை  நீங்கள் ஒன்றும் பொருட்படுத்தவே இல்லை. உங்கள் அக்காவிடம் கூறியது போல் நான் குழந்தை கிணற்குள் இருந்து கத்தும் தவளை!   நீங்கள் கடைசியாக என்னை நோக்கியது கருணைப் பார்வை தான். உங்களை மாலையில் கொண்டு வந்த போது உங்கள் கண்ணை  திறந்து நான் நோக்கின போதும் அந்த கருணையை உங்கள் கண்ணில்  கண்டேன். 

சுபி அக்கா வானத்தில் தனியாக மின்னிய ஒரு நட்சத்திரத்தை காட்டி தந்தார். அது நீங்களாகத்தான் இருக்க வேண்டும். கடந்த மூன்று நாட்கள் மகிழ்ச்சியான நாட்கள். சுபி அக்காவிடம் மனம் விட்டு கதைத்துள்ளேன் அழுதுள்ளேன். அழுகையே வராத எனக்கு இனி கண்ணீரின் நாட்கள் தான். தூக்கம் வரும் போது உங்கள் கழுத்தை பற்றினால் புழுக்கமாக உள்ளது என்று கூறீனீர்கள் என்றால் உங்கள் லுங்கியை பற்றி கொண்டு தான் தூங்கியுள்ளேன்.  எல்லா அன்பையும் பாசத்தையும் நீங்கள் விரைவாக தீர்த்து விட்டீர்கள் பாபா அத்தான். 

உங்கள் பிரிவு இன்னும் நம்பும் படியாக இல்லை. அதை தொடர்ந்து நடந்த சம்பவங்கள் எல்லாம் நான் எதிர்பார்த்தது தான். அந்த குறிப்பிட்ட நபரை வேலையில் வைக்காதீர்கள் என்றேன். ஆனால் அந்த நபருக்கு தான் உங்கள் அலுவலகத்தை  கொடுத்துள்ளீர்கள். அந்த நபரோ நீங்கள் இல்லை என்றதும் உங்கள் அலுவலகத்தையும் கைகழுகி விட்டுள்ளார். இன்னும் ஒருவனை நம்பாதீர்கள் என்றேன். அவனையும் வலது கையாக வைத்துள்ளீர்கள். பெரும் ஏமாற்றம்! நோக்கம் நன்றாகவே தான் உள்ளது. தேர்ந்தெடுத்த வழிகள் நம்மை பிரித்து விட்டது. 

உங்களை நேசித்த உங்களை மனதார நேசித்த எங்களை விட உங்களை கட்டுபடுத்தினது அந்த நயவஞ்சகர்கள், சூது பிடித்தவர்கள் என்று அறியும் போதும் மனம் கொந்தளிக்கின்றது. நீங்கள் பணப்பையில் வைத்திருந்த அந்த போட்டைவை 15 வருடங்களூக்கு முன்பு நீங்களே தீயிட்டு எரித்தீர்கள், பின்பு மறுபடியும் இந்த போட்டோ எப்படி  உங்கள் பையை வந்து அடைந்தது என எனக்கு தெரியாது. 

எப்படி எல்லாம் வாழ வேண்டும் நினைத்தீர்களோ அப்படியே வாழ்ந்து விட்டோம். எங்கு எல்லாம் போக வேண்டும் என நினைத்தீர்களோ போய் வந்து விட்டீர்கள். இலங்கை செல்ல ஆசைப்பட்டது பாக்கி உள்ளது. இவ்வளவு பணத்தை நீங்கள் அந்த பண்ணாடைக்கு கொடுத்து மகிழ்ந்தற்கு சில உலக நாடுகள் சுற்றியிருக்கலாம். 

உங்கள் மூச்சு காற்றோடும், உடல் மண்ணோடும் கலந்துள்ளதாக வைரமுத்து எழுதியுள்ளார். https://www.youtube.com/watch?v=uUPFuJIa9qY மரணம் சாபத்தாலா விதியா என தெரியாது ஆனால் உங்கள் புண்ணீயம் எங்களை சேர உள்ளது.  எல்லோரிடமும் அன்பு வைத்தீர்கள், யாரிடமும் பகை இல்லை. பண ஆசைப்பிடித்த குலதெய்வதிற்கு பணமாக கொடுத்து விட்டீர்கள், வஞ்சகம் பிடித்த தம்பிக்கு நீங்கள் தெரிந்தே இரையாகி விட்டீர்கள். நான் விரும்பினது உங்கள் அன்பை மட்டும் தான். எனக்கு ஏக்கவும் அழுகையும் தந்து சென்று உள்ளீர்கள். எத்தனை வருடங்கள் உங்களை எண்ணி அழவேண்டும் எனக்கு தெரியாது. அத்தான் இந்த தண்டனை எனக்கு தேவையில்லை தானே? இப்போது என் பூர்வ ஜென்மங்கள் மேல் எனக்கு நம்பிக்கை வருகின்றது. மருமகளை கொன்ற பாவியாக இருந்திருப்பேனோ//? கணவனை மதிக்காத கொலைகாரியாக இருந்திருப்பேனோ? பெற்ற குழந்தைகளை கொன்ற இவ்விரக்கம் இல்லாத தாயாக இருந்திருப்பேனோ அல்லது வயதானவர்களை பட்டிணிக்கிட்டு கொன்ற  கல் நெஞ்சக்காரியாக இருந்திருப்பேனோ/?


அத்தான் இந்த தண்டனை எனக்கு கொடியது. எனக்கு தாங்க இயலாத சோதனை!  அத்தான் இந்த கொடிய சூழல் எனக்கு வேண்டியிருக்க தேவையில்லை.  . உங்கள் அம்மாவை மருத்துவ மனையில் வைத்திருந்த போது ஒரு நாள் முழுதும் தீவிர சிகித்சைப்பிரிவின் முன் காத்திருக்காமல் இருந்திருக்கலாம். உங்கள் விருப்பத்திற்கு இணங்க  நம்ம வீட்டில் வைத்து 15 நாட்கள் கவணிக்காது இருந்திருப்பேன். இப்படி எல்லாம் வரும் என்று தெரிந்திருந்தால் என்னை மதிக்காத உங்கள் அப்பா மரணக்கிரியைக்கு நான் வராது இருந்திருக்கலாம். அத்தான் நீங்கள் பரலோகம் சேர்ந்து விட்டீர்களாம்.  நீங்கள் யாரிடமும் தோற்கவில்லை. வாழ்க்கையின் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த போது ஒரு மின்னலாக மறைந்து விட்டீர்கள். நான் தான் மரணத்தை பற்றி உங்களிடம் கதைத்துள்ளேன். நீங்கள் மரணத்தை பற்றி நினைத்ததே இல்லை. விபத்து மரணம் என்பது சில பின்புலன்கள், குடும்ப சாபத்தின் நீட்சி என்று கருத்து உடையவர் நீங்கள்.  உங்களுக்கு விபத்து வரப்போவதில்லை என தீர்க்கமாக நம்பியவர். அதுவே நான் பைத்தியமாக இப்போதும் புலம்புகின்றேன் . 

 

அத்தானின் 30 வது நாள் நினைவுகளுடன்!

மே 20! ஒரு மாதம்!  உங்களுக்கு பிடித்த மல்லிகைப்பூ  நம் வீட்டு பூக்கள் வைத்து விட்டு வந்தேன். அத்தான் இன்னும் என்னால் புரிய இயலாதது நம் பிரிவைத்தான். நம் வாழ்க்கையின் மொத்த சந்தோஷமே நாம் பேசி கொண்டிருப்பது தான். ஓயாது பேசி கொண்டே இருப்பேன். சில நேரம் எனக்கு சந்தேகம் எழும் உங்களுக்கு கேட்கின்றதா என. நீங்களும் கூறுவீர்கள் நான் கேட்டு கொண்டு தான் இருக்கின்றேன். நம் பயணங்களிலும் அப்படித்தான். நான் கதைத்து கொண்டே அத்தான் என்ன பதில் இல்லை என்றதும் நான் கேட்டு கொண்டு இருக்குன்றேன் என்பீர்கள். கல்லூரி விட்டு வரும் போதும் போகும் போதும் எனக்கு கதைகள் இருக்கும். சில போது நீங்களே கொஞ்சம் அமைதியாக இரு இந்த ரோடு கடந்ததும் கதை கேட்கின்றேன் என்று கூறுவீர்கள். 

தூங்க போகும் போது நாளை என்ன சாப்பாடு?  என்பீர்கள். நான் கடுப்பாக நாளை பார்த்து கொள்ளலாம் என்றால் இல்லை  சப்பாத்தி என்றால் கடலையை நனைய போடு என்பீர்கள். தூங்கி எழுந்ததும் இன்று என்ன சமையல் ஜெரிக்கு பள்ளி உண்டா, சாம் பள்ளி  செல்ல உள்ளான என்பீர்கள். வேலையை தொடங்கி விடு நான் சிறிது தூங்கி எழுந்து வருகின்றேன் என்று கூறி குட்டி தூக்கம் போடுவீர்கள். 

நாட்கள் செல்ல செல்ல எங்களால் தாங்க இயலவில்லை.   உங்களுக்கு ஒரு கால் போய் எங்களுடன் இருந்திருந்தால்  கூட நாங்கள்  மகிழ்ச்சியாக இருந்திருப்போம். இன்று மகிழ்ச்சியாக இருக்க சிந்திக்க எந்த முகாந்திரவும் இல்லை அத்தான். நீங்க நம்மை வீட்டை முழுதுமாக ஆக்கிரமித்து உள்ளீர்கள். எங்கள் உணவு நேரம், தூக்க நேரம் ஏன் எந்நேரவும் உங்கள் நினைப்பாகத் தான் உள்ளது.  

உங்கள் கல்லறையில் பிரார்த்தனை செய்தோம். அத்தான் என் நெஞ்சு பொறுக்கவில்லை. என்னருகில் அரணாக நின்றவர் இன்று அமைதியாக கிடக்கின்றீர்கள். இது கொடுமை! எத்தனை வருடம் உங்கள் பிரிவை நாங்கள்  அனுபவிக்க வேண்டும். ஒரே ஆறுதல் நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே!  நாங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பிரிவை  ஒவ்வொரு விதமாக எதிர் கொள்கின்றோம். 

ஒரு நாளும் நாம் பிரியவில்லை. லயோளா கல்லூரியிலும் தூக்கம் வரும் வரை உங்களிடம் பேசி கொண்டிருந்தேன். தூக்கம் விட்டு எழுந்ததும் உங்கள் குரல் கேட்டு தான் விழித்து என் வேலையில் ஆழ்ந்தேன். அத்தான்  உங்கள் நினைவு வந்ததும் ஒரு குறுஞ்செய்தி அனுப்புவேன். உடன் நீங்கள் இப்போது பேசலாமா வகுப்பு இல்லையா என ஆரம்பிப்பீர்கள். 

மாதம் ஒரு முறை ஏனும் நாம் ஒரு பயணம் செய்வோம். உங்கள் பணியில் இருந்து விடுதலை, எனக்கோ நாள் முழுதும் உங்களுடன் பயணிக்க ஓர் வாய்ப்பு. நம் பயண வேளையில் பல போதும் உங்கள் கைபேசியை கூட அணைத்து வைத்து இருப்பீர்கள்.  சில போது தோன்றும் இந்த பயணங்கள் சில செலவினங்களை கூட்டுகின்றதே என்று. பல போதும் டோல்கேட்டில் பணம் கொடுக்கும் போது தான் நாம் எரிச்சல் கொள்வோம்.  ஒரு பயணம் முடியும் போதே அடுத்த பயணத்திற்கு திட்டம் தீட்டுவீர்கள். நீங்கள் போன மறுநாள் கூட நாம் நாகர்கோயில் செல்ல இருந்தோம். மே மாதம் சந்திர சேகர் அண்ணா வீட்டிற்கு போய் அவர்கள் குடும்பத்துடம்  உங்கள் நண்பர் ஜெப ராஜ் அண்ணா வீட்டிற்கு ஊட்டி செல்ல வேண்டும் என்றிருந்தீர்கள். சமீபத்தில் உங்களுக்கு ராஜஸ்தான் செல்ல வேண்டும் என்று கூறினீர்கள்.  கோவா செல்ல செல்வராணி அத்தை குடும்பத்துடன் திட்டம் தீட்டினோம். ஈஸ்டருக்கு வண்டிப்பெரியார் சென்றிருப்போம். அந்த பயண நாட்கள் நினைப்பு  தான் என்னை உயிர்ப்பிக்கின்றது.  நீங்கள் உங்கள் வேலை விடையமாக செல்லும் போது கூட நெடும் பயணத்தில் உங்கள் அருகில் இருந்து பேசிக்கொண்டு வரலாமே என்று என் சில புத்தகங்களுடன் நானும் உங்களுடன் வருவது உண்டு, இந்த மே மாதம் என்ன செய்வேன்?

நீங்கள் பணம் பணம் என்று அலையவில்லை. தேவைக்கு பணம், பயணம் , சொந்தக்காரர்கள் உறவு, நண்பர்கள் வீட்டு நல்ல நிகழ்ச்சிகள் புகைப்பட குழுவுடனுடன் பயணம் என எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம். குற்றாலம் பகல்  சென்ற நாம் இரவு நடுநிசியில் எப்படி இருக்கும் என காண சென்றிருந்தோம்.குற்றாலம் இரவில் என் மாணவர்களுடன் நான் கிராமப்பணிக்கு செல்லும் போது நீங்கள் கிமாராவுடன் கிராமத்தை சுற்றி படமெடுத்து கொண்டிருந்தீர்கள். 


 உங்கள் தம்பி கூறியுள்ளான் பிரோட்டா சாப்பிட செங்கோட்டை பார்டர் செல்லுவான், இவனுக்கு கிமாரா தேவையா? பிரோட்டா சாப்பிட கல்கத்தா கூட போவோம். இதை சொல்ல இவன் யார். நம் வாழ்க்கையை பற்றி இவனுக்கு தெரியுமா. அன்றைய நாள் நீங்கள் வீட்டில் இருந்து இறங்கும் மட்டும் சிரித்து கொண்டு இருந்தீர்கள். என்றும் போல் நீங்களும் உங்கள் மூத்த மகனும் சேர்ந்து என்னை கலாய்த்து கொண்டிருந்தீர்கள். நம் வீடு அப்படி தான். உங்கள் அன்பைத் தான் எங்களுக்கு தந்தீர்கள். உங்களுக்கு அதிகாரம் செலுத்துவது, வெட்டி பந்தா காட்டுவது பிடிக்காது. 


உங்களுக்கு அடுத்து வீட்டு கதை பேசினால் பிடிக்காது குறிப்பாக புரணி பேசினால் பிடிக்காது. இதனாலே உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் முரண்கள் எழும். பக்கத்து வீட்டு பெண் பற்றி தகாத கதை கூறும் போது முகத்தில் அறைந்தது போல் உங்களுக்கு வேறு வேலையில்லையா என பேச்சை முறித்து விடுவீர்கள்.


அத்தான் அது உங்களை பற்றி கதைப்பது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.  இது என்று? உங்களை நிம்மதியாக இருக்க விட்டது. திருமணம் முடிந்து அந்த முதல் மாதத்திலே தன் தாயிடம் கூறி " என் மகன்கள் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள் நீ வந்ததால் என் சின்ன மகன் வருத்தம் கொள்கின்றான், அவன் விடுமுறைக்கு வரும் போது பாபாவுடன் பேசக்கூடாது என்று நம்மை முதன்முதலாக பிரித்தது.   நமக்கு  முதல் ஐந்து வருடத்திற்கு பிள்ளை  இருக்க கூடாது என்று இந்த நாயை வைத்து தான் உங்க அம்மா நம்மிடம் கூறினாள். அடுத்து உங்க பைக்கை ஒரு மாதத்திற்கு என கடம் வாங்கி சென்று  உங்க அப்பாவுடன் சேர்ந்து விற்று போட்டது. நம் முதல் மகனை எடுத்து கொண்டு உங்கள் வீட்டிற்கு செல்லும் போது நம் அறையில் உங்கள் அப்பாவின் விற்பனை பொருட்களை வைத்து விட்டு நடு அறையில் மெத்தையை விரித்து " உங்க அம்மா வந்து ஏய்  நீ இங்க படு, பிள்ளையை உன் அருகில் போடு, அடுத்து  பாபு படுக்கட்டும் அடுத்து  அவன் தம்பிரமேஷ் படுப்பான் என்று கட்டளை பிறப்பித்து செல்வாள்.  அத்தான் அதன் பொறாமைக்கு தான் நீங்கள் இரையாகி விட்டீர்களோ. ஒன்றும் இல்லாது அன்னகாவடியாக வந்த போது நான் ஒட்டதீர்கள் என்றேன் நீங்கள என்னை பொருட்படுத்தவில்லை. அது மிதித்த இடம் எல்லாம் கட்டைமண்னாகி விட்டது. உங்களை என்னை குற்றம் கூறி பழித்து கொண்டு நடக்கின்றது.  நான் நம் மகனிடம் கூறினேன் 72 வய்து வரை உங்க தாத்தா இருந்தாரே அப்பாவை ஏன் இவ்வளவு விரைவில் அழைத்து விட்டார். நம் மகன் கூறினான் தாத்தா செத்தபோது 10 பேர் கூட இல்லை  நம் அப்பா அவர் நட்பு , உறவு என கம்பீரமாக, அன்பின் மத்தியில் போனார்கள். அந்த தாத்தாவை அப்பாவுடன் இணைத்து  ஒரு போதும் பேசாதீர்கள் என்றான். 


அவன் திருமண நாள் அன்றே உங்க அப்பா உங்களை திட்டி விரட்ட, உங்களிலும்  ஏழு வயதிற்கு இளைய இந்த நாய் "உனக்கு என்ன தகுதி இருக்கு இரண்டு பிள்ளைகளை தானே பெற்று  போட்டாய்"  எனக்கூறி உங்களை அழ வைத்தது.  நீங்களும் சொந்தமாக அலுவலகம் வைத்து , எனக்கு வேலை கிடைத்ததும்  வெட்கமே இல்லாது "எனக்கு நீ மட்டும் தான்"  என கூறி உங்களை ஒட்டி கொண்டது. ஆகஸ்து மாதம், எனக்கு உங்களை சந்தேகம் என உங்களிடம்  கூறியதால் அந்த புறம்போக்கை  நான் நம் வீட்டிற்குள் அழைத்து வராதீர்கள் எனக் கூறி பிடிவாதமாக அதனிடம் பேச மறுத்து வந்தேன். அத்தான் இந்த கொடிய  பிறவியின் பிடியில் கடந்த நாலு மாதங்களாக நீங்கள் மாட்டி கொண்டீர்கள். சகோதரப் பாசம் என்றீர்கள் கடமை என்றீர்கள் ... ஆனால் எல்லாம் போய் விட்டது எங்களுக்கு. அவன் இப்போதும் உங்களை புறம் பேசிகொண்டு அலைகின்றான் இப்போதும், என்னை, உங்களை குறை கூறுவது உங்கள் மகனுக்கு மிகவும்  மனநெருக்கடியை கொடுக்கின்றது.  

விரைவில் சென்று விட்டீர்கள். ஆனால் ராஜாவை போல் சென்றீர்கள். உங்களை கிண்டலாக பேசின உங்கள் தாய், தம்பி காண்க நீங்கள் உங்கள் நட்புகள் மத்தியில் மிகவும் கம்பீரமாக சென்றீர்கள்.  நீங்கள் ஒரு முழு புருஷனாக, ஆண் என்ற ஆளுமையின் உச்சத்தில்,  , இளைமையுடன் அழகான பாபாவாக சென்று விட்டீர்கள். உங்களை இன்று நினைத்து கொண்டு இருக்க பலர் உள்ளோம்.  உங்கள் கம்பீரத்தை கட்டி காக்க உங்கள் மகன்களை வழி நடத்துங்கள்.  உங்கள் மகன்கள் என்னை போல் புலம்பவில்லை   என்னை போல் அழுது புரளவில்லை. அவர்கள் உங்களை போன்று சிந்திக்கின்றார்கள் உங்களை போன்று வாழ நினைக்கின்றார்கள். உங்களுடன் இருந்த ஒவ்வொரு கணத்தை நினைத்து பெருமை கொள்கின்றார்கள்.  அத்தான் நீங்கள் எப்படி இருந்தாலும் இப்படி விட்டு விட்டு போயிருக்க கூடாது. நம் கல்யாணம் முடிந்து ஆறு மாதத்திலே பிரிக்க உங்கள் பெற்றோர் முடிவு எடுத்தனர். ஆனால் நம் முதல் மகன் பிறந்து நம்மை சேர்த்தான். ஆனால் இன்று அவர்கள் ஆசை நிறைவேறி விட்டதே என்று எண்ணி தான் கலங்குகின்றேன். 

அத்தான் என் கேள்வி எல்லாம் இது இறைவன் நியதியா என்று தான். நம்மை பிரிக்க வேண்டும் என இறைவனுமா நினைத்திருப்பார். நாம் நம்பின எந்த புனிதரும் ஏன் நம்மை காப்பற்றவில்லை. கேள்வி கேட்பதும் தவறு தானாம். இன்று குருத்தோலை ஞாயிறுக்கு அருட் தந்தை ஓர் கதை கூறினார் யேசு குருத்தோலை பவனி செல்ல ஓர் கழுதையை அழைத்து வரக்கூறினாரம். அப்பழுக்கற்ற இளம் கழுதையை தான் இறைவன் விரும்பினாராம். 

அத்தான் இது கொடிய வேதனை புரிந்து கொள்ள  இயலா வேதனை.  நீங்கள் எனக்கு உதவுங்கள் எனக்கு அமைதி வேண்டும் எனக்கு நிம்மதி வேண்டும்,. அதற்கு நீங்கள் என்னிடம் பேச வேண்டும். நான் கதைப்பதை நீங்கள் கேட்டு விட்டதாக கூற வேண்டும்.  உங்கள் மனபலனை எனக்கு தாருங்கள். 

அத்தான் செப்பனிட்ட என் வாழ்க்கை பாதை!

வீட்டை கட்டி விட்டோம். அத்தான் வீட்டு வேலை துவங்கிய போது சுசி ஆட்டோசோனில் பஜாஜ் கிளையின் கணக்கர் மேற்பார்வையாளராக இருந்தார்.  அந்த நேரம் ஹூண்டாய்க்கு  ஓர் ஆள் தேவைப்பட்டது. அத்தானுடைய நண்பருடைய  நண்பரை அத்தானின் பரிந்துரையின் பேரில் வேலையில் அமரச் செய்தார் முதலாளி. அந்த ஆள் முகத்திற்கு முன் சரியாக பேசினாலும் முதுகில் குத்தும் வழக்கம் கொண்டவராக இருந்தார். இந்த நேரம் தான் நாங்கள் வாங்கி இட்ட நாலு சென்று இடத்தில் வீடு கட்ட முடிவெடுத்தோம். இடம் பார்க்க, இடம் வீடு கட்ட தகுந்ததா, என முடிவு செய்ய அந்நிறுவனத்தில் வேலை நோக்கும் ஓர் வயதான அதிகாரியை அழைத்து சென்று இருந்தார். வீட்டிற்கு அஸ்திவாரக்கல்லிட யாரையும் அழைக்கும் சூழல் இல்லை செலவழிக்க பணவும் இருக்கவில்லை. அன்று என் அம்மா எங்களுடன் வசித்து வந்ததார். அத்தானுடைய பெற்றோரை அழைக்க சூழல் சரியாக இருக்கவில்லை.  அந்நேரம் அவர்கள் எங்களுடன் பேச்சு வார்த்தையில் இருக்கவில்லை.  அவர் பெற்றோரை அழைக்க இயலவில்லை என்ற காரணத்தாலும் யாரையும் அழைக்க அத்தான் விரும்பவில்லை. ஆனால் என் அம்மா சிறப்பாக செய்யுங்கள் என்று வலியுறுத்த ஆலய அருட் தந்தையரை அழைத்து ஜெபித்து கல்லிடும் கொத்தனாருக்கு 500 ரூபாய் தட்சினையும் வைத்து நிகழ்வை நடத்தினோம். அந்த மிட்டாயை அத்தான் அலுவலகத்திற்கு எடுத்து செல்ல அதை அங்கு வேலை செய்யும் பெண்கள் அவர் மேஜை அருகில் வந்து மிட்டாய் சார் என்று எடுத்து கொள்ள இவர் இப்பெண்களூக்கு மிட்டாய் கொடுத்தார் ஆனால் தன்னை அழைக்கவில்லை என்று சினம் கொண்ட அந்த பெரிய மனிதர் அத்தான் பரிந்துரையால் வேலைக்கு சேர்ந்த மனிதருடன் சேர்ந்து முதலாளியிடம் சில அவதூறுகளை பரப்பி விட்டனர். 

பெரிய நிறுவனங்களை பொறுத்தவரை முதலாளிக்கு தெரியும் அவர்கள் பணவிடையத்தை விட அவர்கள்  கணக்கர்களே அத்துப்படியாக இருப்பார்கள். நிறுவனருக்கும் அத்தான் மேல் சந்தேகம் வந்து , தணிக்கை செய்ய ஒரு குழுவை அமர்த்தி ஒரு மாதமாக இவர் நோக்கிய கணக்கை தணிக்கை செய்தனர். அந்த நேரம் நானும் அந்நிறுவனத்தில் வேலை நோக்கியதால் மிகவும் மனஉளச்சலுக்கு ஆளானேன்.   அத்தானுடைய கவலையும் என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.  வேலை போனால் இருவருக்கும் ஒரே நேரம் வேலை போகும் நம் நேர்மையின் மேல் கொண்ட பெரும் சவால் என்ற ஆதங்கத்தில்  அந்நேரம் அத்தான் 5500 ரூபாயும் நான் 2500 ரூபாயும் பெற்று வந்தோம்.  நான் எங்கள் திருமண படத்துடன் முதலாளியை சந்தித்து "சார் நாங்கள் உங்கள் பணத்தை ஒரு பைசா கூட திருட வில்லை. நாங்கள் வீடு கட்ட இடம் வாங்கினது என் நகையை விற்று தான்,  வீடு கட்ட துவங்கியது மயன் நிறுவனத்தின் உதவியுடன் எங்களிடம் இருக்கும் இன்ஷுரன்ஸ் பாலிஸீயின்   அத்தாட்சியுடன் தான். 

முதலாளி கூறினார் பனைமரத்தின் அடியில் இருந்து பால் குடித்தாலும் கள்ளு என்று தன் கூறுவார்கள். ஒரு வேளை உங்கள் கணவர் கையாடல் செய்திருந்தால் நான் போலிஸீல் மாட்டி விடுவேன் என்றார். ஆகட்டும் இந்த சூழலில் என் வேலையை நான் ராஜினாமா செய்து விடுகின்றேன்., அவர் எதிர் கொள்ளும் பிரச்சினையால் என்னாலும் சரிவர வேலை செய்ய இயலவில்லை என்று கூறி என் வேலையை விட்டு விட்டேன். ஆனால் அந்த ஆடிட்ங் முடிந்ததும் "என்னை மன்னித்து கொள் பாபா நான் தவறாக சந்தேகித்து விட்டேன். உனக்கு மேலும் 2000 ஆயிரம் ஊதியம் கூட்டி தருகின்றேன் என் நிறுவனத்தை விட்டு போக வேண்டாம் என்று வேண்டினார்." அத்தானோ இனி என்னால் பழையது போன்று வேலை செய்ய இயலாது என்று கூறி கனடாவில் அலுவலகம் உள்ள ஆனால் நெல்லையில் இருந்து கனடா நேரப்பிரகாரம் வேலை செய்யும் ஓர் கணக்கு நிறுவனத்தில் சேர்ந்தார். 

இவர் வேலை நேரம் காலை 9 துவங்கி மாலை 2 வரை. பின்பு மாலை 4 துவங்கி அதிகாலை 2 மணி நேரம் வரை வேலை நோக்க வேண்டும். அத்தானுக்கு கனடா நாட்டு கணக்கை செய்வதில் பெரும் மகிழ்ச்சி. அந்த நிறுவனரும் அத்தானை கனடாவுக்கு அழைத்து செல்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்த சூழலில் எனக்கு வேலையும் இல்லை நேரம் போகாது தவித்தேன். அன்றைய தினம் நான் திருமணம் முடிந்து சரியாக 10 வருடங்கள் ஆகி இருந்தது. எனக்கு கல்லூரி ஆசிரியை ஆவது தான் விருப்பமாக இருந்தது  நம் திருமணம் என் பல ஆசைகளை நிராசையாக்கி விட்டது என புலம்புவது உண்டு.  அத்தான் மனோன்மணியம் பல்கலைகழகம் சென்று தகுந்த பாடத்திட்டம் பற்றி விசாரித்துள்ளார். அவருக்கு நான் நிறைய வாசிப்பதால் இதழியல் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது. நான் நேரடி படிப்பில் சேர தயங்கினேன். பகுதி நேர போஸ்டல் படிப்பில் சேரவே விரும்பினேன்.  ஆனால் அத்தானோ பகுதி நேரம் படித்தால் சரியான படிப்பு கிடைக்காது. நீ படிக்க சேர் நான் பார்த்து கொள்கின்றேன் என கூறி படிக்க சேர்த்து விட்டார். 

அந்த நாள் இன்று போல் நன்றாக ஞாபகத்தில் உள்ளது. புஷ்பலதா பள்ளி நிறுத்ததில் வரு்ம் அரசு பல்கலைகழக பேருந்தில் முதன்முதலாக அனுப்பி விட்டார்.  அவர் கண்ணிலும் என் கண்ணிலும் நீர் கோர்த்தது. என்னை முதன்முதலாக தனியாக ஒரு பேருந்தில் அனுப்பி விட்டார். அந்த பேருந்து எங்கள் துறை முன் நிற்கும். மாலை என்னை அழைக்க புதிய பேருந்து நிலையத்தில் காத்து நிற்பார். அப்படி என் முதுகலைப்பட்டம் இரண்டு வருடம் சென்றது. பல பிரச்சினைகளை எதிர் கொண்டேன்.  ஒன்று எனக்கு கற்பித்து பல ஆசிரியர்கள்  என்னை விட இளையவர்களாக இருந்தனர். நான் வயது கொண்டு 33 வயதாக இருந்தாலும் மனதில் தோன்றுவதை பேசும் கேள்வி கேட்கும் வெகுளியாக இருந்தேன். இந்த குணம் பல எதிராளிகளை பிடிக்காதவர்களை எளிதாக உருவாக்கினது. பின்பு இரண்டாம் ஆண்டில் பேரா. நட்ராஜ் அவர்களின் சில வழிமுறைகள் பேரில் பல சிக்கல்களில் இருந்து வெளியேறினேன். நானும் பேசுவதிலும் சுற்றும் நோக்கி பேசுவதிலும் பக்குவமானேன்.  என்னுடன் படித்த மாணவர்கள் எல்லாரும் மிகவும் அன்பானவர்களும் பாச நேச கொண்டவர்களாகவும் இருந்தனர். அந்த  வருட மாணவர்களில் முதல் இடம் பெற்று பல்கலைகழக தங்கப்பதக்கம் பெற்று  
முதுகலைபட்டம்  முடித்தேன். மறுபடியும் நான் வேலை பார்த்த நிறுவனத்தில் உயர் பதவியில் சேர வேண்டும் என்ற ஆர்வமே மேல் ஒங்கியது. ஆனால் அத்தான் முனைவர் பட்டம் சேரக்கூறினார் எனக்கோ 3 வருட படிப்பு என்றதும் சேர விருப்பமில்லாது ஒரு வருட இளம் முனைவர்  பட்டத்திற்கு சேர்ந்து  முதல் வகுப்பில் தேர்வாகினேன். என் வெற்றியில் என் உயர்வில் கொண்டாடும் மனநிலையில் நான் இருக்கவில்லை. ஆனால் அத்தான் வெற்றி களிப்புடன் என் வெற்றியை கொண்டாடினார்.  என்னை வேலைக்கு அனுப்பி சம்பாதிப்பதை விட நான் முதுகலை , இளம் முதுகலைபட்டம் பெற்றதை பற்றி மிகவும் பெருமை கொண்டார். அவர் என் வெற்றியை மிகவும் ஆசையுடன் மகிழ்ச்சியுடன் நோக்கினார். மறுபடியும் என்னை முனைவர் பட்டம் பெற ஊக்குவித்தார். ஆனால் எனக்கு வேலைக்கு செல்ல வேண்டும். எனக்காக கஷ்டப்பட்டு படிப்பித்த அத்தானுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றே தோன்றியது.  

நான் பல்கலைகழகம் சேர்ந்த போது இளையவர் ஒன்றாம் வகுப்பும் பெரியவர் நாலாம் வகுப்பிலும் படித்தனர். நான் பேருந்தில் பயணிக்கும் போது என் வயது ஒத்த பெண்கள் மிகவும் ஆச்சரியத்துடனும் சிலர் கேலியாகவும் சிலர்  பொறாமையுடனும் நோக்குவார்கள். என்னவர் தாயோ, "இந்த வயதில் சின்ன பசங்க கூட படிக்க அனுப்பியுருக்கான், அறிவு கெட்டவன்" என்று பழித்துள்ளார். என் தாயாரோ இந்த வயதில் படிப்பு தேவையா? கொண்டு வரும் பணத்தை சேகரித்து நகை நட்டு வாங்கி சேக்கலாம் தானே என்பார். சில நேரம் குழந்தைகளை சரியாக பராமரிப்பதிலும் சிரமம் கொண்டேன். பல பொழுதும் நான் படிக்க அத்தான் நோட்ஸ் எடுத்து தருவார்  பிரிட் போட்டு தருவார் சில போது படித்து முடிக்கும் மட்டும் அவர் வேலையை செய்து கொண்டே எனக்கு துணை இருப்பார். அத்தானின் அன்பும் கரிசனையும் வெறும் பட்டாதாரியாக இருந்த என்னை முதுகலை பட்டாதாரியாக மாற்றியது. இளம் முனைவர் பட்டத்திற்கு என ஈழ வலைப்பதிவுகளை ஆராய்ந்ததில் பல அரிய ஈழ சகோதர்களை நண்பர்களாக பெற்றேன். என் பாடத்திட்டத்திற்கு புகைப்படம் பிடிக்க, செய்தி கட்டுரை எழுத என துவங்கிய எங்கள் பயணம்; பயணம் கொண்டு நிறைந்தாக மாறியது.   என் வாழ்க்கையை பற்றிய பார்வைகள் கூட மாறினது.  பயணம் வாசிப்பு மக்களுடன் கருந்துரையாடியது என் வாழ்க்கையை மாற்றியது. என்னை பற்றி  மட்டுமே சிந்தித்து கொண்டிருந்த நான் இந்த சமூகத்தை பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். எங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையின், பேராற்றலின் ஒளிவெள்ளம் வர ஆரம்பித்தது.

நிலையில்லாத வாழ்வில் நிலையற்ற இடத்தை தேடி தந்த அன்பு அத்தான்!

என் துக்கம் தீரப்போவதில்லை. இனி என் பூமியில் உள்ள நாட்கள் மட்டும் அத்தான் நினைவுகள் என்னை வதைத்து கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு  இடத்திலும் ஒவ்வொரு சூழலிலும்   நீங்கள் என்னை நினைக்க வைக்கின்றீர்கள். நீங்கள் இறந்த அன்று என் வங்கி அட்டையும் உங்கள் பணப்பையில் தான் இருந்தது.   என்னுடைய வங்கி புத்தகத்தை எங்கு வைத்துள்ளேன் என்பது கூட உங்கள் அறிவில் இருந்ததால் என்னால் சிந்தித்து அதை தேடும் மனநிலையும் வரவில்லை. ஆனால் +2 வில் படிக்கும் நம்மகன்   வங்கியை அணுகிய போது உங்களுடைய கணக்கும் முடக்கப்பட்டது முதல் அதிர்ச்சியாக இருந்தது. 

நிலையில்லாத வாழ்வில் நிலையில்லாத இடத்தை  எட்டிய போது அறிந்த உண்மைகள் கசக்கும் படியாகத்தான் இருந்தது. ஒரே வீட்டில் ஒரே மனதில் ஒரே  பாசப்பிடிப்புடன் வாழும் போதும் சில உண்மைகள் பெண் தானே, என் மனைவி தானே, அவள் வருத்தம் அடைய வேண்டாம் என்று மறைப்பது பல இன்னல்களை எதிர்கொள்ள காரணமாகின்றது.  இந்த கொடிய துயரிலும் என்னை ஓர் வழக்கறிஞர் போல் ஓர் புலனாய்வாளர் போன்று சிந்திக்க வைத்து என் பழுவை குறைத்து விட்டீர்கள் அத்தான். 


எதிர்பாராத உங்களுடைய இழப்பால் தவித்த போதும் உங்கள் சகோதருனுக்காக   பட்ட கடத்திற்கு நான் பதில் சொல்லும் இடத்தில் நிறுத்தப்பட்டேன். நீங்கள்  இருக்கும் வரை குடும்ப சொத்து அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில்,வராத எனக்கு தற்போது உங்கள்  பங்கை பெறுவது என்பது தன்மானப் பிரச்சினையாக மாறிவிட்டது. உங்க வங்கி கணக்கில் இருந்து லட்சங்கள் எங்கே போனது? என்று கேள்வி எழுந்த போது கடந்த ஒரு வருடமாக இடைவிடாது பேசிக்கொண்டிருந்த உறவு கொண்டிருந்த சொந்த சகோதரனே "அவன் யாருக்கு கொடுத்தான் என்று நீங்கள் கண்டு பிடியுங்கள்" என்ற போது கவலையும் மீறி உங்களுடைய மானப்பிரச்சினையாக மாறியது எனக்கு. அந்த எல்லா பணவும் வேளச்ச்சேரி வங்கியில் குறிப்பிட்ட நபருக்கு தான் சென்றுள்ளது  என்ற போது ஒரு பக்கம் ஆச்சரியம் ஒரு பக்கம் ஆறுதலும் ஒருங்கே வந்தடைந்தது! 

 . இப்போதும் நான் இறைவனிடம் கேட்பது  உங்களை உயிருடன் விட்டிருந்தால் நான் உங்களுக்காக எப்போதும் போல் போராட வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால் கடவுள் உங்களை வருத்தப்பட அனுமதிக்கவில்லை. உங்களுக்கான செழிப்பான தொழில், வீடு,  ஆசை மனைவி அறிவான மகன்கள்  என்றதும் அட்டை போல் ஒட்டின பெற்றோர், சகோதரனையும் நன்றாக கவனித்து வந்த வேளையில் தான் இனியும் முன்னேற இயலும் என்ற நம்பிக்கை உள்ள சூழலில் விடை தந்து விட்டீர்கள்!

அத்தான் நீங்க அந்த வீட்டிற்கு போயிருக்க கூடாது. முதல் முறை நம் கார் கொண்டு சென்ற போது கல் வீழ்ந்து கண்ணாடி கீறியது. அடுத்த முறை கார் பெல்டுகள் உடைந்து காரையை மாற்றினீர்கள். மூன்று பாம்பை கனவில் காட்டியும் மறுபடியும் சென்று வந்துள்ளீர்கள். உங்க வீழ்ச்சியே பேச்சில் மயங்குவது தான். நீங்க பச்சை பிள்ளை குணம் என்பது இது தானோ? கடைசி முறை சென்ற போதும் கூட உங்க கார் பழுதி ஆகி உங்க சொந்தக்கார சகோதர் தான் வீட்டில் கொண்டு விட்டாராம்.  உங்க உழைப்பை வீணடித்து  உங்க கடமைகளை மறக்க செய்து விட்டீர்களே?

அத்தான் நீங்க இனி வர மாட்டிங்க என்று என்னால் நம்ப இயலவில்லை. ஆனால் நேற்றிலிருந்தே நம் கதைகளுடன்   பழையபடியும் கதைக்க ஆரம்பித்து விட்டோம்.  நீங்க என்னிடம் எப்போதும் போல் சிரித்து கேலியாக, அதட்டலுடன்  பேசி கொண்டிருந்தீர்கள்.  நான் எப்போதும் போல் உங்களை கேள்வி கேட்டு கொண்டிருந்தேன். மரியாகம்மா பாட்டி உங்களை நினைத்து நேற்று வரை அழுது தீர்த்து விட்டாராம், நீங்கள் இறைவன் சித்தத்திற்கு இணங்கியே போய் உள்ளீர்களாம்.

என்னை ஆறுதல் படுத்த என என் நண்பி பேராசிரியர் சொல்கின்றார் இனி ஜீசஸ் தான் என் நண்பராம் , கணவராம் ஆறுதல்படுத்துபவராம். இல்லை அதை நான் ஏற்று கொள்ள இயலாது. நீங்க தான் என்னவர்,  என் கணவர், என் நண்பர்.என் கடவுள்! நான்  உங்கள் நினைவு வந்ததும் கைபேசியில் குறும்செய்தி அனுப்புவேனே, நீங்களும் உடனே அழைத்து பேசுவீர்கள். அத்தான் எப்ப வீட்டுக்கு வருவீர்கள் என்றதும் அரை மணி நேரத்திற்குள்ளாக வீட்டில் வந்து நின்று நீ அழைத்ததும் வேலை செய்ய மனம் வரவில்லை என்பீர்கள், கோபமாக வேலைக்கு அனுப்பி விட்டால் இன்று என்னால் ஒரு வேலையும் திறம்பட செய்ய இயலவில்லை என்று கூறி  வீட்டை அடைவீர்களே.  அத்தான் உங்கள் சிரித்து கொண்டிருக்கும் படத்தை இப்போது பார்த்து நிம்மதி தேடுகின்றேன்.   உங்கள் அருகில் தான்  ஜீசஸும் உள்ளார். 


ட்ரைவிங்க கற்று கொள்ள சாம் ஜோயேல் சேர்த்து விட்டான். இன்று அவன் வங்கிக்கு அழைத்து செல்லும் போது வளைவில் வேகமாக சென்று பைக்கை கீழை போட்டு விட்டான். அடிபடவில்லை. என்னால் தாங்க முடியும் என்பதால் தான் கடவுள் இந்த சூழலை கொடுத்தாராம்! எனக்கு என்னமோ நீங்கள் என்னை பற்றி இன்னும் நன்றாக கனவு காணவில்லையோ என்று படுகின்றது. அத்தான் நீங்கள் இல்லாத வருடங்களை நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது.  கல்லூரி நாள் நிகழ்ச்சிக்கு செல்லும் போது கடந்த வருடம் நீங்கள் கொண்டு விட்டு அழைத்து சென்றது தான் நினைவில் வந்தது,
நான் வருத்தப்படக்கூடாது என்று மட்டுமே நீங்கள் நினைத்திருப்பீர்கள்.   நீங்கள் வாங்கிய வங்கி கடத்திற்கு வட்டி கட்டி விட்டேன்.  அந்த கடன் நம் பிள்ளைகளுக்காக  என்றால் கூட நான் சகித்திருப்பேன்.  நீங்க அந்த பிராடுக்காக வாங்கியுள்ளீர்கள் என்பதை தான் ஜீரணிக்க இயலவில்லை. காரையும்  விற்று விட்டேன். எனக்கு வருத்தம் ஒன்றுமில்லை. கடவுள் தந்தார், எடுத்தார், தருவார். எல்லாம் மாறக்கூடியது. இப்போதும் என்னை வருத்தமடைய செய்வது கடவுள் உங்களை எனக்கு திரும்ப தந்திருக்க கூடாதா?  உங்கள் கண்ணாடியை தினம் தினம் எடுத்து முத்தம் கொடுக்கின்றேன், உங்கள் உடைகளை எடுத்து முகர்ந்து பார்க்கின்றேன்.  நீங்கள் அழகாக அடுக்காக தேய்த்து மடித்து வைத்துள்ள சட்டைகள் உங்கள் ஒழுக்கத்தை, அழகை நினைவுப்படுத்துகின்றது.  உங்கள் செருப்பை அலமாரை ,ஏல் வைத்து உங்களை நினைத்து கொண்டிருக்கின்றேன். அத்தான் இந்த பிரிவை நான் தண்டனையாக சில நேரம் எடுத்து கொள்கின்றேன் இல்லை அதை சவாலாக எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள் என்னில் இருந்து பிரியவில்லை. என்னுடைய ஒவ்வொரு ஜீவ அணுவிலும் நீங்களே குடியிருக்கின்றீர்கள். 


பாபா அத்தானுக்கு பிடித்த அந்தோணியார் கோயில்

அத்தானுடைய பக்தி  வித்தியாசமாக இருக்கும். நாம் தூத்துக்குடியில் இருந்த போதும் முதன் முதலில் வந்திறங்கிய அந்தோணியார் கோயில் மேல் தான் அதீதமான விருப்பம் கொள்வீர்கள். திருநெல்வேலியிலும் அப்படி தான். எல்லா செவ்வாய் அன்றும் பிரார்த்தனை செய்து விட்டு எனக்கு மிளகு உப்பு சில பூக்கள் கொண்டு தருவீர்களே.. சில நாட்களில் வீட்டிற்கு வந்து விட்டு எங்களையும் அழைத்து செல்விர்கள். அந்தோணியார் கோயிலை விட அதன் அருகில் உள்ள குரிசடியில் ஜெபிக்க தான் மிகவும் விரும்பி போய் ஜெபிப்பீர்கள். நான் தான் ஆலயம் உள்ளே வந்து ஜெபித்து விட்டு செல்ல வற்புறுத்துவேன்.  வாசலில்  இருக்கும் ஓர் அம்மையாரிடம் 4 மெழுகுதிரி ஒரு உப்பு பொட்டலம் சேர்த்து 10 ரூபாய்க்கு வாங்கி எங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு மெழுகுவத்தி தருவீர்கள். அந்த கோயிலின் சிறப்பே பக்தர்கள் இரவு 10 மணி வரை பிரார்த்திக்க வருவார்கள் என்பது தான். 8 மணி துவங்கி அருகிலுள்ள வியாபரிகள் பிரார்த்தனை முடித்து அமைதியாக சென்று கொண்டு இருபார்கள் அந்த அமைதியான இரவில் பிரார்த்திப்பதற்கு தான் நீங்கள் மிகவும் விருப்பபடுவீர்கள்.   நீங்கள்   விரும்பி கோயில் அசனகளுக்கு செல்வதை நான் கேலி செய்துள்ளேன். நல்ல வேளை விருப்பம் இல்லாதிருந்தும் உங்களுக்காக பெப் 2 அன்று உங்களுடன்ன் அசனச்சாப்பாடு சாப்பிட்டு வந்தேன். இனி என் ஆயிசுக்கு அசனசாப்பாடே இல்லை அத்தான்.

உங்களுக்கு சிலுவைப்பாதை செல்வது மிகவும் பிடிக்கும் தானே. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்  சொந்த வீடான வண்டிப்பெரியார் சென்று சிலுவைப்பாதை சென்றிருந்தோம். உபவாசம் இருப்பது, சத்தமாக பிரார்த்திப்பது எதுவுமே உங்களுக்கு பிடிப்பதில்லை. இருந்தும் வேளங்கண்ணி மாதா கோயிலுக்கு நவம்  8, 2016 அன்று சென்ற போது அந்த ஒரு வாரம் அசைவம் சாப்பிடாது உபவாசம் காத்து சென்றது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இரவும் காலையும் அமைதியாக பைபிள் வாசிப்பீர்கள். மற்றபடி காலையும் மாலையும் கிறிஸ்தவ பாடல்கள் விரும்பி கேட்பிங்க. உங்களிடம் இல்லாத பாடல்களே இருந்திருக்க வாய்ப்பில்லை. எல்லா வகைப்பாடல்களையும் விரும்பி கேட்பீர்களே அத்தான்.  உங்களுக்கு விருப்பி கேட்கும்   திரு தந்தை டென்னிஸ் வோய்ஸின்  கடந்த வாரம்  எங்கள் துறைக்கு வந்து சென்ற போது அத்தான் உங்கள் நினைவுகள் தான் என்னை வாட்டியது.  நீங்கள் இருந்திருந்தால் கைபேசியில் அழைத்து அருட் தந்தையை அறிமுகப்படுத்தி நேரில் பேசவைத்திருப்பேனே.. 

அந்தோணியார் கோவில் முன் தான் கிறிஸ்தவர்களை அடக்கம் செய்யும் பெட்டிக்கடை உள்ளது.  நாம் எப்போதும் பார்த்து விட்டு கடந்து செல்வது தான்.  இந்த முறை அந்த கடைகளை பார்த்த போது என்னை அறியாது திகில் பற்றி கொண்டது.  அத்தான் நீங்கள் செய்வது  போலவே, நானும் உங்கள்  மூத்தமகனும் மெழுகு திரி வாங்கி பத்த வைத்த பின்பு  நீங்கள் செய்வது போலவே நான்கு பூக்கள் கொஞ்சம் உப்பு எடுத்து உங்கள்  கல்லறைக்கு மேல் வைத்து விட்டு வந்தேன். நானும் நீங்களும் இரு கிறுஸ்தவ சபை என்பதால் உங்கள்  அடக்க நேரம் மிகவும் குழப்பம் ஏற்பட்டது.  என்னால் ஒரு தீருமானத்தில் எட்ட இயலவில்லை.  நாசரேத்தா? திருநெல்வேலியா? எந்த கோயில் என சிந்தனையில் ஆழ்ந்தோம். நீங்க கூட  இரு வாரம் முன்  நான் கத்தாறு செல்லும் முன்  சகாய மாதா  பங்கில் சேர்ந்து விடலாம் என்றீர்கள். ஏற்கனவே  இளைய மகன்  பாடல்க்குழுவில் இருந்ததும் நமக்கு அந்த ஆலயத்தில் உறுப்பினாராகலாம் என்றீர்கள்.  ஆனால் கத்தார் எனக்கூறியது இந்த பயணம் என்று எனக்கு தெரியாதே அத்தான்..


நம் மூத்த மகன் அவரை நாசரேத் கொண்டு போகக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தான்.  நாசரேத் கொண்டு போனால் யார் பொறுப்பாக செய்வார்கள் என்றால் அங்குள்ளவர்கள் நெல்லைக்கு திரும்பியதை அறிந்தோம். எனக்கு உங்கள் தாலாபுரம் சொந்த இடத்தில் வைத்து விட்டால் அங்கே ஒரு வீடும் கட்டி அருகில் இருந்து விடலாம் என்று இருந்தது.  ஒருவகையில் நெல்லையில் நாம் தனித்து விடப்பட்ட குடும்பம்.  ஆனால் அப்படி நாம் தான் நினைத்து இருந்துள்ளோம். உங்கள் உறவினர்கள் எல்லாம் அடக்க ஆராதனைக்கு என்று மாலை ஆலயம் தான் வந்து சேர்ந்தனர். ஆனால் நம் உங்கள் நண்பர்கள் என நல்ல மனிதர்கள், எங்கள் கல்லூரி குடும்பத்தினர் என எல்லோர் உதவியாலும் எந்த  குறையும் இருக்கவில்லை.  உங்க மனம் போலவே இரு சபையின் தலைமையில் பிரார்த்தனை -ஆசிர்வாதத்துடன் சென்றீர்கள். என்  மாணவ்ர்கள் நம் மகனின் பள்ளி நண்பர்கள் என நம் வீட்டில் வீட்டில், உங்களை வைத்திருந்த மருத்துவ மனையில் 100க்கு மேற்பட்ட குழந்தைகளை கடவுள் அருளினார்.  தூக்க வேண்டிய இடங்களில் எல்லாம்  குழந்தைகள் தான் உங்களை தூக்கியுள்ளனர். உங்கள் தலை மிகவும் காயப்பட்டதால் பெரியவர்கள்  பயப்பட்டு அருகில் வர  தயங்கிய போது குழந்தைகள் தான் கள்ளமில்லா உங்களை தூக்கி சுமந்துள்ளனர். ராஜசேகர் மாமா தான்  உங்களுடன் உடன் இருந்துள்ளார். 

வீட்டில் இருந்து கிளம்பி 15 நிமிடத்திற்குள் விபத்து நடந்து விட்டது அத்தான். உங்கள் அலைபேசியை லாக் செய்திருந்ததால் உடன் அருகில் வந்தவர்களாலும் பயண்படுத்த இயலவில்லை. உங்கள் அலுவலக ஊழியர் பரமேஸ்வரன்  பேச முயன்ற போது தான் உங்களை பற்றிய தகவல் கிடைத்துள்ளது.  இருப்பினும் சட்டை பாக்கடில் உள்ள முகவரியில் வீட்டை போலிஸ் அரை மணி நேரத்தில் வந்து  அடைந்தனர். நானும் உடன் மருத்துவ மனை க்கு வந்து விட்டேன். உங்களுக்கு விபத்து பலமாக அடிபட்டிருக்கலாம் என்ற எண்ணமே என்னிடம் இருந்தது. நீங்கள் இனி  இல்லை என்றதும் உங்கள் கையை தொடத்தான்  வேண்டினேன். உங்கள்  ஆன்மா அப்போதும் உங்களிடம் இருக்கும்,என்னை தேடும் என நம்பினேன். யாரும் என்னை உங்கள் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. யார் யாரோ கண்ணாடி வழியாக எட்டி பார்த்தனர். உங்கள் கைவிரல்களை என்னால் கடைசிவரை பார்க்கவே இயலவில்லை என்பது ஏக்கமாக உள்ளது. நீங்கள்  என் கை விரல்களை பிடித்து கொண்டு தான் நடப்பீர்கள். எனக்கும் உங்க  கையை பற்றவே பிடிக்கும்.  

காலை ஒன்றாக உணவருந்தி சென்ற நீங்கள்  மாலை 4.30க்கு தான் கண்டேன். அதுவும் பிரார்த்தனை நேரம். பின்பு உங்களை  கொண்டு போய் விட்டனர். மூன்றாம் நாள் பிரார்த்தனைக்கு அழைத்து சென்ற போது எனக்கு ஒரே ஆச்சரியம் உங்களுக்கு பிடித்த வாரம்தோறும் வரும் அந்தோணியார் ஆலயம் முன்பே உங்கள் கல்லறை அமைந்துள்ளது.  அந்த கல்லறையை தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் ஒருவர் கண்காணிப்பதால்  சிறப்பாக பராமரிக்கின்றனர் . டாக்டருடைய ஏழு வயது மகனுக்காக அங்கு பூங்கா அமைத்துள்ளார்களாம். நான் அடுத்த முறை வரும் போது செம்பருத்தி செடி நட்டு தரவேண்டும் என வேண்டியுள்ளேன் அங்குள்ள பணியாளர்களிடம். 

அங்கு வேலை செய்யும் வயதான பெண் மணி கரிசனையாக ஓடிவந்து கதைத்தார் கல்லறையை சுத்தம் செய்து தந்தார். தினம் கொஞ்சம் தண்ணீர் விட கேட்டுள்ளேன். கடினமான வெயில் அத்தான் மேல் வெயில் படும். செம்பரத்தி செடி வைத்தால் அழகாக பூத்து உங்களுக்கும் நிழல் தரும். உங்களை கல்லறையில் சந்தித்து சில மெழுகுதிரி பற்ற வைத்து உங்கள் அருகில் இருந்து கண்ணீர் விடும் போது என் மனபாரம் இறங்குகின்றது. கேரளா போன்று வீட்டு தோட்டத்திலே வைக்க அனுமதித்திருந்தால் அத்தான் அருகில் இருந்தே பேசி கொண்டு இருந்திருக்கலாம். இன்னும் என்னால் நம்ப இயலவில்லை. நீங்கள் நெடிய தூரம் பயணம் சென்றது போல் நினைக்க விரும்புகின்றேன். நீங்கள் சென்னைக்கு சென்றாலே தினம் 10 முறை  பேசிக்கொள்வோம். நீங்கள் அடுத்த நாள் காலை வந்து சேரும் வரை பித்து பிடித்தது போன்று இருக்கும். 

அத்தான் நீங்க சென்று 25 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. பெரியவர் வீட்டை மாற்றலாம் என்றான். ஏனோ நீங்க  இருந்த வீட்டை விட்டு போக மனம் வரவில்லை. உங்களுக்கு எவ்வளவு கனவுகள் இருந்தன  வீடு கட்டுவதை பற்றி.

அத்தான் உங்களை இறைவன் 45 வயதிலே அழைத்து கொண்டது தான் என்னால் நம்ப இயலவில்லை. எல்லாம் கடந்து போகும். வாழ்க்கை நிரந்தரமல்ல என தெரியும்.  அத்தான் விரும்பி வாங்கின காரை இன்று விற்று விட்டேன்.  உங்களிடைய அலுவலகம் நாளை மூடவேண்டும். எல்லாம் கனவு மாயை! ஆழமாக யோசிக்கும் போது ஒன்றும் புரியவில்லை. யோசிக்கவும் பயமாக உள்ளது. நான் விரும்பினது உங்களீடன் உள்ள மகிழ்ச்சியான வாழ்க்கை ஒன்று மட்டும் தான். வாழ்க்கை ஓர் ஏணீயும் பாம்பும் விளையாட்டு போல் உள்ளது. பாம்பு வாய் வழியாக சறுக்கி முதல் கட்டத்திற்கு வந்து விட்டோம். ஏன் அந்த பாம்பு அத்தானை விழுங்கியது அத்தான் நீங்க  அந்த மூன்று பாம்புகளை நம்பியதாலும் ம் மன்னித்ததாலுமா?  அப்படி தானே பைபிளிலும் நமக்கு சொல்லி கொடுக்கப்பட்டுள்லது. எதிரியையும் நேசிக்க வேண்டும், நம்மை பழித்தவனையும் தின்மை செய்தவனையும் அன்பு செலுத்த வேண்டும்.  அத்தான் அதை தானே நீங்களும் செய்தீர்கள். இல்லை வாழ்க்கை விளையாட தகுந்தது. நாம் பாம்புகளை பற்றி நினைப்பது கூட தவறு தான்.  நம் தொடக்க அந்த பத்து வருட கொடிய வாழ்க்கையின் பின்பு கடந்த பத்து வருடம் ஏறுமுகமாக வந்தோம். இன்னும் சரியாக விளங்குவது என் மாணவர்களுக்கு நான் எடுக்கும் திரைக்கதை எழுத்து என்ற பாடம் தான். 

கதை ஓர் முக்கோண பாதை கொண்டது. துவக்கம் , எறுமுகம், கிளைமாக்ஸ்.  இறக்கம், முடிவு ! எதிர்பாராத கைளைக்ஸ்.  வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சினைகள், வறுமை, பணப்பிரச்சினை யாவும் இளம் வயதிலே சந்தித்ததால் முடிவு சுபம் தான் அத்தான் நீங்களும் நானும் பேரப்பிள்ளைகளுடனும் விளையாடுவோம் என்றிருந்தோம்.  இன்று நம் குழந்தைகள் நல்ல தகப்பனை உங்கள் பாசத்தை இழக்க வேண்டிய சூழல். கடந்த  வருடங்களில்  ஒரே நிழலில் ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தோம் என்ற மகிழ்ச்சி மட்டுமே மிஞ்சுகின்றது. நீங்கள் எங்களை பிரிந்து கத்தார்  போக வேண்டும் என்று முடிவு எடுத்ததே உங்கள்  முடிவாக மாறி விட்டதா?. கத்தார் என்று ஆசை கொண்டு அவனுடன் கதைத்து கொண்டிருந்த போதே நான் உங்களை தடுத்திருக்கவேண்டும். நான் அமைதியாக சிலவற்றை சொல்லி ஒதுங்கி கொண்டேன். இ ப்போது  சில நேரம் ராட்சஷியாக இருந்து ஏன்  தடுக்கவில்லை என மனம் கேட்கின்றது. அப்படி நான் எதிர்த்தாலும் என்னை ஏற்கும் மனநிலையில் நீங்கள் இருந்திருப்பிர்களா? எங்களை விட்டு போக வேண்டும் என ஐஸ் கீரீம் கேட்டு அழும் ஓர் குழந்தையை போல் அல்லவா பிடிவாதமாக இருந்தீர்கள்,  உங்களை  படத்தில் பார்த்து இப்போது பேசிக்கொண்டிருக்கின்றேன். அத்தான் எங்கும் போகவில்லை. நம்  வீட்டில் எங்களுடன் தான் உள்ளீர்கள்..