header-photo

நவம் 2- நினைவு தினம்

கடந்த வருடம் இதே நவம். அது ஒரு ஞாயிறு. மதியம் சாப்பிட்டு முடித்து விட்டு நாம் நாலு பேரும் ஏதோ ஒரு பொழுது போக்கில் இருந்தோம். திடீர் என நீங்கள் கூறினீர்கள். நாளை கல்லறை திருவிழா. எனக்கு நாளை வேலை உண்டு  நாகர்கோயில் போகவேண்டும். இன்று நாசரேத் வா.. எங்க அப்பாவிற்கு    மாலை போட்டு வந்து விடலாம் என்றீர்கள். நானோ நாளை போகலாமே என்று கூறி கொண்டே உங்கள் விருப்பம் கருதி உங்களுடன் மனம் இல்லாமலே  வந்தேன்.. 

ஆழ்வர்ட்டிரு நகரி வந்ததும் இரண்டு மாலை வாங்கி வரக்கூறி வ்ண்டியை நிறுத்தினீர்கள். இரண்டா என்றேன். சித்தப்பா பக்கத்துலா இருக்காருல்லே... மூன்று வருடம் அவருதானே வளர்த்தார் என்று  என் முகத்தை உற்று நோக்கி கொண்டே சிரித்தீர்கள், 

இரண்டு பூ மாலை வாங்கியாச்சு. நேர உங்க வீட்டிற்கு வந்தீர்கள். உங்க அம்மா ”பாபு எனக்கு கல்லறை என்றாலே பயம் . அதான் அப்பா கல்லறைக்கு நான் போகவே இல்லை என்றார்”.  சரி எங்களுடன் வாங்க என்று கூறி அழைத்து வந்தீர்கள். அந்த கல்லறையின் சாவி கொத்து பக்கத்தில் குடியிருக்கும் ஒரு ஏழை பெண்ணிடம் இருந்தது .   உங்க அம்மா கைய்யில் கொடுத்து ஒரு மாலையை போட வைத்தீர்கள், இன்னொரு மாலையை உங்க சித்தப்பாவிற்கு நீங்களே போட்டீங்க,.

உங்க அம்மாவிற்கு பதிந்து வைத்துள்ள கல்லறையை காட்டினீர்கள். 2500 ரூபாய் விலை கொடுத்ததாக சொன்னீர்கள்.  உங்க அம்மா  பாபு இவ்வளவு தான் இடமா? அதன் மேல் நெடுகையும் குறுகையுமாக நடந்து கொண்டே கேட்டார்கள்எ.  ஒரு பக்கம் உங்க மேல கோபமா தான் இருந்தது. எதற்கு இன்று மாலையை வாங்கி அவசரமா வரணும் /? கல்லறைக்கு ஒரு  போது வர விரும்பாத, பயப்படும்  தாயை ஏன் அழைத்து வர வேண்டும் என்றிருந்தது. 

எப்போதும் போல என் மவுனத்தின் துணையுன் நின்று கொண்டிருந்தே. எனக்கு எப்போதும் உங்க வீட்டு வாசல்ப்படி மிதித்ததும் இரத்தம் உறைந்து இமைய மலை  பனியை போல் மாறி விடும். வானத்தை நோக்கி கொண்டு உங்க வீட்டு திண்ணையில் போட்டிருக்கும் எனக்கான சோபாவில் இருந்து அவதானித்து கொண்டிருந்தேன், உங்க அம்மா உங்க பக்கத்து வீட்டில் மூன்று மரணம் நடந்ததாகவும், அதில் இரண்டு பேர் இளைஞர்கள் என்றும் ஒருவர் கான்சரில் இறந்தார் 30 வயது தான் பாபு என திகில் ஊட்டும் கதைகளை கதைத்து கொண்டிருந்தார். இன்னும் வயதான கட்டைகள் காத்திருக்கு என அந்த தெருவுகளை எல்லாம் அடையாளம் கூறி கொண்டிருந்தார். எனக்கு எதுவும் மனதிற்கு உகப்பாகவில்லை.  கிடைத்த வடையை சாப்பிட்டு விட்டு நம் வீடு வந்து சேரத்தான் மனம் எத்தனித்து கொண்டிருந்தது. 

உங்க வீட்டு சந்து தெருவை கடந்து லூக் மருத்துவ மனை வந்ததும் ”ஜோ உனக்கு பன்னீர் ரோஜாச்செடி வேண்டும் என்றாயே. ஒரு நர்ஸ் இங்கு செடி விற்கின்றார். அவர் மருமகன் என் வகுப்பு தோழன். அவர் மகள் என் உறவு சகோதனின் வகுப்பு தோழி” என சில கதைகளை கதைத்து கொண்டு அந்த வீட்டு வந்து சேர்ந்தோம். அந்த அம்மா பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு ஒரு பக்கம் செயலிழந்த நிலையில் இருந்தாலும் அவர் அந்த செடிகளை பராமரிக்கும் விதம் ஆச்சரியம் ஊட்டியது.  நான் ஆசைப்பட்ட பன்னீர் ரோஸ் அத்துடன் நெல்லி, ஒரு சப்போட்டாவும் என் தலையில் அழகாக கட்டி விட்டார். செடியை கண்டால் எனக்கு குடிகாரர்களுக்கு டாஸ்மார்க்கு பார்ப்பது மாதிரி என்பது தெரிந்ததால் எதையும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை நீங்கள். எப்படியோ தொட்டிகளை வண்டியில் ஏற்றி என்னையும் எல்லகையை விட்டு நகத்தி கொண்டு வந்து விட்டீர்கள். அந்த ரோஸ் இன்று பூத்திருந்தது நம் வீட்டில். 

காலையில் 6 மணி முதல் அதன் அருகில் உங்களை நினைத்து கொண்டே இருந்தேன். என் வீழ்ச்சியை உங்க தோளிலும் உங்கள் வீழ்ச்சியும் என் இதயத்திலுமாக வைத்து கடத்திய காலம் நொடியில் முடிந்து விட்டது. ஆனாலும் இது போன்ற நினைவுகள் என்னை   மீழ   வைக்கின்றது அத்தான். நம்ம வாழ்க்கையில் நாம் சாதித்தது எல்லாம் நம் அன்பும் நேசவும் மட்டும் தான். எல்லா நிலையிலும் நீங்கள் என்னையும், நான் உங்களையும் சார்ந்து இருந்து விட்டு  என்னை மட்டும் தனியே  உங்களை தேட வைத்து     கண்ணா  மூச்சி     விளையாடுதீங்க அத்தான். 


உங்களை சுற்றி எல்லோரும் மகிழ்ச்சியா  இருக்கனும் என்று நினைத்தீர்கள். அதற்காகத்தான் என்னை இங்கை அழ வைத்து விட்டு மறைந்து விட்டிர்கள். கடந்த வாரம் காமத்தின் வாழ்வும் மரணவும் என்ற புத்தகம் வாசித்து கொண்டிருந்தேன், மனிதனுக்கு மரணமே இல்லை. ஒரு உருவகத்தில் இருந்து இன்னொரு உருவகத்திற்கான மாற்றம் மட்டுமே என சில தத்துவங்கள் கூறுகின்றன. ஆமாம் நீங்க மகிழ்ச்சியா கண்டம் விட்டு கண்டம் பயணித்து கொண்டு இருக்கின்றீர்கள். உங்கள் எச்சங்கள் அடங்கிய  அந்த கல்லறை என்னை நீங்கள் ஏமாற்ற மட்டும் தான். நாளை பாருங்கள் அதன் பக்கத்தில் நிற்கும் போது என் அத்தானே இதற்குள் பூட்டி விட்டார்களே என நான் அழ மாட்டேன். நீங்க சந்தோஷமா பயணித்து கொண்டு இருக்கின்றீர்கள்   இந்த அண்ட வெளியில் . என்னையும் பிள்ளைகளையும் நீங்க  தனித்து விட்டது  தான் எங்களால் மன்னிக்க முடிய வில்லை அத்தான். ஒவ்வொரு நொடியும் எங்க மனம் உங்களை தேடி கொண்டே இருக்கின்றது.

நம் வாழ்க்கையே பயணங்களாக தான் நிரப்பியிருந்தோம். அந்த பயண வேளையில் மட்டும் தான் நாம் நாலு பேரும் ஒன்றாக மகிழ்ந்தோம். உங்களுக்கும் சுயநலம் இருக்கு அத்தான் இப்படி தனியா உங்க பயணத்தை தேடி போயிட்டீங்களே. எப்படியோ நீங்க எப்பவும் போல மகிழ்ச்சியா இருக்கனும். எனக்கு எவ்வொரு தினவும் ஒவ்வொரு நிகழ்வும் துயர் தருவது தான். இருந்தாலும் அந்த நீங்க எங்களூக்காக விட்டு போன நல்ல நினைவுகளுடன் நாங்களும் பயணிப்போம், ஓகேவா!
0 comments:

Post Comment

Post a Comment