4 Nov 2016

இரால் பிரியாணி-திருமதி ஹசீனா சைய்யது



எங்கள் காட்சி தொடர்பியல் மாணவர்கள் பாடம் வெறும் ஏட்டு கல்வியுடன் நிற்காது களத்தில் இறங்கி பணியாற்றி அதை சமர்ப்பித்து தேர்வுகளுக்கு மதிப்பெண் பெறும் படியே பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எங்கள் மாணவர் டோணி,  உணவு பொருட்கள் மற்றும் சமையல் நிகழ்ச்சியை படம் பிடிக்க விரும்புவதாக கேட்டிருந்தார். முகநூலில், நெல்லை திருமதிகளின் பக்கத்தில் எங்கள் மாணவர் தேவையை குறிப்பிட்டு பதிந்திருந்தேன். சில மணித்துளிகளில் மகாராஜா நகரை சேர்ந்த திருமதி ஹசீனா சைய்யது அவர்கள் தன் விருப்பம் தெரிவித்து பதில் அனுப்பியிருந்தார்.  உடன் தயாராகி அந்த வார இறுதியில் எங்கள் மாணவர் சமையல் நிகழ்வை திட்டப்படுத்தினோம். 



அவசரத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் தொகுத்து வழங்க ஆள் தேடினால் கிடைக்கவில்லை. அதிரடியாக நானே தொகுந்து வழங்குகின்றேன் என்று களத்தில் இறங்கினேன். ஆனால் ஆசிரியர்களுக்கே ஆன  பிரச்சினை என்ன என்றால் எங்களால் எப்படி ஒரு நல்ல நிகழ்ச்சி இருக்க வேண்டும், எந்த  காட்சிகள் வலு சேர்க்கும் என்று  கற்பித்தாலும்; விளையாட்டு களத்தில்    பயிற்சியாளர் என்பது போல் ஊக்குவிப்போம் விளையாடவைத்து பரிசு பெற வைப்போம்.  மெடல் எல்லாம் எங்களால் வாங்க இயலாது நல்ல  வீரர்களை உருவாக்குவோம் என்பதிற்கு இணங்க ஒரு ஷாட்டிற்கே பல டேக் வாங்கினேன் எங்கள் மாணவர்களிடம். மேம் இந்த காமிராவை மட்டும் பாருங்க என்றால் வகுப்பில்  பாடம் நடத்துவது போல் கண் சுற்றி சுற்றி நாலு பக்கவும் போகும். எப்படியோ என் மாணவருக்கு ஒரே ஆறுதல் தொகுப்பாளரே தேவை இல்லை என்பது போல் நிகழ்ச்சி வழங்கிய திருமதி ஹசீனா சைய்யது அவர்கள் சிறப்பாக சமையலை செய்து காட்டினார்.

அவர் திறமை சமையல் செய்வதில் மட்டுமல்ல அதை விவரிப்பதிலும் மிகவும் விருவிருப்பாக சிறுசுறுப்பாக வழங்கினார்.   கோயம்பத்தூரை பிறப்பிடமாக கொண்ட ஹசீனா அவர்கள் நெல்லையின் சமையல் அரசியாக திகழ்கின்றார்.   பள்ளிப்   படிப்பை முடித்த உடன்  இல்லத்து அரசியாக   மாறின ஹசீனா அவர்கள்  தன் நேரத்தை மிகவும் பயனுள்ள வகையில் பயண்படுத்தும் ஆளுமை.  சானல்களில் இவருடைய சமையல் நிகழ்வு வந்துள்ளது.   பல பத்திரிக்கைகளில் இவருடைய சமையல் குறிப்புகள் வருகின்றன.  சிறப்பான ஒரு  சமையல்   வலைப்பதிவாளர் ஆவார்.  மேலும் ஒரு சமையல் புத்தக ஆசிரியர். அடுத்த புத்தகம் எழுதி கொண்டு இருக்கின்றார்.  வீடு, பூந்தோட்டம்  பெண்களுக்கே உரிய அழகியலுடன் பராமரிப்பது அவர் மேல் நமக்கு ஈர்ப்பை   தருகின்றது.  விடுமுறை நாட்களில் சமையல் வகுப்பு நடத்துகின்றார். பிரபல தூய சவேரியார் கல்லூரியில் சிறப்புரையாற்றியும் உள்ளார். இப்படியாக சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு பெண்மையாக நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றார். 

பெயர் பெற்ற தொழில் அதிபர் குடும்பத்தில் இருந்தாலும் எளிமையாக, என்னுடைய பெயரைக்குறிப்பிடுங்கள் என்றார். தனக்கான ஒரு அடையாளத்தை தன் உழைப்பால் நிறுவும் பெண்கள் தான் பெண் உரிமை பற்றி வெறும் வாய் சவுடால் விடும் பெண்களை விட எடுத்துக்காட்டாக சமூகத்தில் திகழ வேண்டியுள்ளது என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டு ஹசீனா சையது ஆவார்.

எங்களுக்கு செய்து காட்டினது இரால் பிரியாணி. அதன் செய்முறை நான் விளக்க போவது இல்லை. அவருடைய புத்தகம் வாங்கி வாசித்து கொள்ளுங்கள். அவருடைய புத்தகத்தின் சிறப்பே சமையலை மிகவும்  எளிமையான விதத்தில் விளக்கும் பாங்காகும்.  அவருடைய வலைப்பதிவையும் இணைத்துள்ளேன். அதன் வழியாக இன்னும் சிறப்பாக தெரிந்து கொள்ளலாம். மாணவருடைய  சமையல் நிகழ்ச்சி நமது நெல்லை சானல்களில் மிகவும் விரைவில் வரும். துல்லியமான நேரத்தை தெரிவிக்கின்றேன். கண்டு பயண்பெறுங்கள்.வலைப்பதிவு 

 கற்று கொண்ட நுணுக்கமான சமையல் ரகசியம் என்ன என்றால்
சமையல் செய்யும் போது பெண்கள் மனது மகிழ்ச்சியால் இருக்க வேண்டும். தன் குடும்பத்தினரின் உடல் மன ஆரோக்கியத்தை எண்ணி பூரிப்பாக சமைக்க வேண்டும். 

சமையல் ஒரு கலை அது வேலையல்ல. ஆகையால் பொறுமையாக செய்ய வேண்டும். ஒவ்வொரு பொருளும் வதங்க மசிய போதுமான நேரம் கொடுக்க வேண்டும். அடுப்பில் வைத்து விட்டு சீரியலை  கண்டு வர போய் விட்டீர்கள் என்றால் நாம்   எதிர்பார்க்கும் ருசி வர வாய்ப்பு இல்லை. மிகவும் முக்கியமாக சமையல் அறையை /அடுக்களையை மிகவும் தூய்மையாக சுகாதாரமாக பேண வேண்டும். 

உடனடி பொடிகள் சேர்க்காது நாமே அரைத்து பொடித்து சேர்க்க வேண்டும். 

சமைத்த உணவை எங்களுக்கு அவர்கள் பருமாறிய விதம் அன்பால் ததும்பி இருந்தது.  

மிக முக்கியமாக அவருடைய உதவியாளர் பெண்களை அக்கா என்று அவர் அன்புடன் விளிப்பதே நமக்கு தேனாக சுவைக்கின்றது.  விடைபெறும் சமையல் புத்தகம் பரிசாக தந்து வழி அனுப்பினார்




1 Nov 2016

நவம் 2- நினைவு தினம்

கடந்த வருடம் இதே நவம். அது ஒரு ஞாயிறு. மதியம் சாப்பிட்டு முடித்து விட்டு நாம் நாலு பேரும் ஏதோ ஒரு பொழுது போக்கில் இருந்தோம். திடீர் என நீங்கள் கூறினீர்கள். நாளை கல்லறை திருவிழா. எனக்கு நாளை வேலை உண்டு  நாகர்கோயில் போகவேண்டும். இன்று நாசரேத் வா.. எங்க அப்பாவிற்கு    மாலை போட்டு வந்து விடலாம் என்றீர்கள். நானோ நாளை போகலாமே என்று கூறி கொண்டே உங்கள் விருப்பம் கருதி உங்களுடன் மனம் இல்லாமலே  வந்தேன்.. 

ஆழ்வர்ட்டிரு நகரி வந்ததும் இரண்டு மாலை வாங்கி வரக்கூறி வ்ண்டியை நிறுத்தினீர்கள். இரண்டா என்றேன். சித்தப்பா பக்கத்துலா இருக்காருல்லே... மூன்று வருடம் அவருதானே வளர்த்தார் என்று  என் முகத்தை உற்று நோக்கி கொண்டே சிரித்தீர்கள், 

இரண்டு பூ மாலை வாங்கியாச்சு. நேர உங்க வீட்டிற்கு வந்தீர்கள். உங்க அம்மா ”பாபு எனக்கு கல்லறை என்றாலே பயம் . அதான் அப்பா கல்லறைக்கு நான் போகவே இல்லை என்றார்”.  சரி எங்களுடன் வாங்க என்று கூறி அழைத்து வந்தீர்கள். அந்த கல்லறையின் சாவி கொத்து பக்கத்தில் குடியிருக்கும் ஒரு ஏழை பெண்ணிடம் இருந்தது .   உங்க அம்மா கைய்யில் கொடுத்து ஒரு மாலையை போட வைத்தீர்கள், இன்னொரு மாலையை உங்க சித்தப்பாவிற்கு நீங்களே போட்டீங்க,.

உங்க அம்மாவிற்கு பதிந்து வைத்துள்ள கல்லறையை காட்டினீர்கள். 2500 ரூபாய் விலை கொடுத்ததாக சொன்னீர்கள்.  உங்க அம்மா  பாபு இவ்வளவு தான் இடமா? அதன் மேல் நெடுகையும் குறுகையுமாக நடந்து கொண்டே கேட்டார்கள்எ.  ஒரு பக்கம் உங்க மேல கோபமா தான் இருந்தது. எதற்கு இன்று மாலையை வாங்கி அவசரமா வரணும் /? கல்லறைக்கு ஒரு  போது வர விரும்பாத, பயப்படும்  தாயை ஏன் அழைத்து வர வேண்டும் என்றிருந்தது. 

எப்போதும் போல என் மவுனத்தின் துணையுன் நின்று கொண்டிருந்தே. எனக்கு எப்போதும் உங்க வீட்டு வாசல்ப்படி மிதித்ததும் இரத்தம் உறைந்து இமைய மலை  பனியை போல் மாறி விடும். வானத்தை நோக்கி கொண்டு உங்க வீட்டு திண்ணையில் போட்டிருக்கும் எனக்கான சோபாவில் இருந்து அவதானித்து கொண்டிருந்தேன், உங்க அம்மா உங்க பக்கத்து வீட்டில் மூன்று மரணம் நடந்ததாகவும், அதில் இரண்டு பேர் இளைஞர்கள் என்றும் ஒருவர் கான்சரில் இறந்தார் 30 வயது தான் பாபு என திகில் ஊட்டும் கதைகளை கதைத்து கொண்டிருந்தார். இன்னும் வயதான கட்டைகள் காத்திருக்கு என அந்த தெருவுகளை எல்லாம் அடையாளம் கூறி கொண்டிருந்தார். எனக்கு எதுவும் மனதிற்கு உகப்பாகவில்லை.  கிடைத்த வடையை சாப்பிட்டு விட்டு நம் வீடு வந்து சேரத்தான் மனம் எத்தனித்து கொண்டிருந்தது. 

உங்க வீட்டு சந்து தெருவை கடந்து லூக் மருத்துவ மனை வந்ததும் ”ஜோ உனக்கு பன்னீர் ரோஜாச்செடி வேண்டும் என்றாயே. ஒரு நர்ஸ் இங்கு செடி விற்கின்றார். அவர் மருமகன் என் வகுப்பு தோழன். அவர் மகள் என் உறவு சகோதனின் வகுப்பு தோழி” என சில கதைகளை கதைத்து கொண்டு அந்த வீட்டு வந்து சேர்ந்தோம். அந்த அம்மா பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு ஒரு பக்கம் செயலிழந்த நிலையில் இருந்தாலும் அவர் அந்த செடிகளை பராமரிக்கும் விதம் ஆச்சரியம் ஊட்டியது.  நான் ஆசைப்பட்ட பன்னீர் ரோஸ் அத்துடன் நெல்லி, ஒரு சப்போட்டாவும் என் தலையில் அழகாக கட்டி விட்டார். செடியை கண்டால் எனக்கு குடிகாரர்களுக்கு டாஸ்மார்க்கு பார்ப்பது மாதிரி என்பது தெரிந்ததால் எதையும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை நீங்கள். எப்படியோ தொட்டிகளை வண்டியில் ஏற்றி என்னையும் எல்லகையை விட்டு நகத்தி கொண்டு வந்து விட்டீர்கள். அந்த ரோஸ் இன்று பூத்திருந்தது நம் வீட்டில். 

காலையில் 6 மணி முதல் அதன் அருகில் உங்களை நினைத்து கொண்டே இருந்தேன். என் வீழ்ச்சியை உங்க தோளிலும் உங்கள் வீழ்ச்சியும் என் இதயத்திலுமாக வைத்து கடத்திய காலம் நொடியில் முடிந்து விட்டது. ஆனாலும் இது போன்ற நினைவுகள் என்னை   மீழ   வைக்கின்றது அத்தான். நம்ம வாழ்க்கையில் நாம் சாதித்தது எல்லாம் நம் அன்பும் நேசவும் மட்டும் தான். எல்லா நிலையிலும் நீங்கள் என்னையும், நான் உங்களையும் சார்ந்து இருந்து விட்டு  என்னை மட்டும் தனியே  உங்களை தேட வைத்து     கண்ணா  மூச்சி     விளையாடுதீங்க அத்தான். 


உங்களை சுற்றி எல்லோரும் மகிழ்ச்சியா  இருக்கனும் என்று நினைத்தீர்கள். அதற்காகத்தான் என்னை இங்கை அழ வைத்து விட்டு மறைந்து விட்டிர்கள். கடந்த வாரம் காமத்தின் வாழ்வும் மரணவும் என்ற புத்தகம் வாசித்து கொண்டிருந்தேன், மனிதனுக்கு மரணமே இல்லை. ஒரு உருவகத்தில் இருந்து இன்னொரு உருவகத்திற்கான மாற்றம் மட்டுமே என சில தத்துவங்கள் கூறுகின்றன. ஆமாம் நீங்க மகிழ்ச்சியா கண்டம் விட்டு கண்டம் பயணித்து கொண்டு இருக்கின்றீர்கள். உங்கள் எச்சங்கள் அடங்கிய  அந்த கல்லறை என்னை நீங்கள் ஏமாற்ற மட்டும் தான். நாளை பாருங்கள் அதன் பக்கத்தில் நிற்கும் போது என் அத்தானே இதற்குள் பூட்டி விட்டார்களே என நான் அழ மாட்டேன். நீங்க சந்தோஷமா பயணித்து கொண்டு இருக்கின்றீர்கள்   இந்த அண்ட வெளியில் . என்னையும் பிள்ளைகளையும் நீங்க  தனித்து விட்டது  தான் எங்களால் மன்னிக்க முடிய வில்லை அத்தான். ஒவ்வொரு நொடியும் எங்க மனம் உங்களை தேடி கொண்டே இருக்கின்றது.

நம் வாழ்க்கையே பயணங்களாக தான் நிரப்பியிருந்தோம். அந்த பயண வேளையில் மட்டும் தான் நாம் நாலு பேரும் ஒன்றாக மகிழ்ந்தோம். உங்களுக்கும் சுயநலம் இருக்கு அத்தான் இப்படி தனியா உங்க பயணத்தை தேடி போயிட்டீங்களே. எப்படியோ நீங்க எப்பவும் போல மகிழ்ச்சியா இருக்கனும். எனக்கு எவ்வொரு தினவும் ஒவ்வொரு நிகழ்வும் துயர் தருவது தான். இருந்தாலும் அந்த நீங்க எங்களூக்காக விட்டு போன நல்ல நினைவுகளுடன் நாங்களும் பயணிப்போம், ஓகேவா!