header-photo

எல்லாம் கடந்து போகும்!

ஒ வாழ்க்கையில் ஓராளவு துயர் அவமான கட்டங்களை கடந்து விட்டேன் இனி அப்படி ஒன்றுமில்லை என்று நினைத்து கொண்டிருந்த வேளையில் வந்த கொடும் துயரே அத்தான் உங்கள் பிரிவு. இதற்கு மேல் எனக்கு வர ஒன்றுமில்லை. அந்த அளவு என் வாழ்க்கையை நீங்கள் ஆக்கரமித்து இருந்தீர்கள். 

அந்த பிரிவை பலர் பல வகையில் ஆறுதல்ப்படுத்தினர். அவர் நோயின் பிடியில் சிக்குள்ள வாய்ப்பு இருந்திருக்கலாம்,  இதை விட பெரும் பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும் என்றனர். சிலர் கடவுளுக்கு அவரை மிகவும் பிடித்து போய் விட்டது என்றனர்.  சிலர் கடவுளுக்கு என்னை மிகவும் பிடித்து விட்டதால் சோதித்தார் என்றனர்.  மற்று சிலர் நீ கடவுளை விட உன்னவரை இரொம்ப நேசித்து விட்டாய்,  கணவ்ருக்காக வாழ்ந்தாய் இனி கடவுளுக்காக வாழ் என்றனர். சிலர் நான் சரியாக உபவாசமிருக்கவில்லை, பிரார்த்திக்கவில்லை என்றனர். இன்னும் சிலர் 19 வருடம் நிறைவாக வாழ்ந்து விட்டீர்களே என்றனர். மற்று சிலர் வளர்ந்த ஆண் பிள்ளைகள் தானே கவலை கொள்ளாதே என்றனர்.  சிலர் குடும்ப சாபம் என்றனர் சிலர் என் சாபம் என்றனர் வேறு சிலர்  நீங்கள்  செய்த தவறு என்றனர். 

ஆனால் சூழலை சுயமாக, சொந்தமாக சுமந்தவள் என்ற நிலையில் என் நிலையை பற்றி விளங்கவே எனக்கு ஒரு சில மாதங்கள் ஆனது. நீங்கள்  இல்லை என்று அறிந்த மறு நிமிடம் இருந்தே  தற்காப்புக்கு என மூளை உங்கள்  உருவத்தை, குரலை என்னில் இருந்து மறைத்து விட்டது.   நினைவில் ஒன்றும் தெரியவில்லை எல்லாம் மங்கிய கனவென தெரிந்தது.. கணிணியை திறந்து வைத்து உங்கள் உருவங்களை பார்த்து கொண்டே இருந்தேன். . குரலை நினைத்து நினைத்து பார்த்து கொண்டே இருந்தேன். மறுபடியும் உங்கள்  குரல் இரு மாதம் பின்பு ஒரு காணொளியை கேட்டு மறுபிரவேசனம் செய்து கொண்டேன்.

நிஜவும் கனவும் கலந்து, ஒரு வகை நிழல் போன்ற மனநிலையில் இருந்தேன். அவர் இனி வரமாட்டீங்களா  என்ற கேள்விக்கு இனி வரமாட்டீங்க என்று தெளிவு பெற இன்னும் காலம் தேவைப்பட்டது. உங்களை  நினைத்ததுமே சிறு குழந்தையாக இருக்கும் போது அத்தை வீட்டிற்கு விருந்துக்கு போவதும் பகல் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்து விட்டு இரவில் அம்மாவை நினைத்து அழுவது போன்று தான் பாபா அத்தான்... பாபா அத்தான் என கதறி கதறி அழுது கொண்டு இருந்தேன்.   ஒரு மீனைப் பிடித்து கரையில் போட்டால் அது உயிருக்கு ஏங்கும்  நிலையை அனுபவித்தேன்.  என் உயிர் அல்லவா அத்தான் நீங்கள். இன்னும் என்னால் நம்ப இயலவில்லை என்னை விட்டு நீங்கள் போனது.  இது என்ன வாழ்க்கை?  இனி இவ்வளவு தூரம் என்னால் தனியாக வாழ இயலுமா? நேசிக்காதும் நேசிக்கப்படாது இருப்பதும் எவ்வளவு கொடுமை. மனிதனின் வாழ்க்கையே அன்பில், நேசத்தில், காதலில், இயக்கப்பட வேண்டியது தானே அத்தான்.

ஒரு மோசமான ஒரு கொடுமைக்கார கணவரை பிரிவது என்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தது என் நிலை. உங்கள்  அன்பு , நேசம் , பாசம் நிதம் நிதம் என்னை சாவடித்து கொண்டு இருந்தது. ஆறுதல்ப்படுத்தியவர்களை எல்லாம் வெறுக்கத்தான் வைத்தது உங்கள் நேசத்தால் இந்த உலகத்தையே வெறுத்தேன் என் பெற்றவர்களை வெறுத்தேன். என்னை சபித்தவர்கள் சண்டையிட்டவர்கள் என எல்லோரும் சிந்தனையில் வந்து போய் கொண்டு இருந்தனர். 


வர மாட்டார் என மூளைக்கு தெரிந்தும் அத்தான் வந்து விடுங்க, பேசுங்க, என்னிடம் இருந்து போகாதீங்க என இருதயம் கதறியது. பல இரவுகள் தலையிலும் நெஞ்சிலும் அடித்து அழுது  உறங்கி போனேன்.  சில இரவுகளில் தூக்கம் வரவே இல்லை. ஏதோ எழுதி கொண்டு இருந்தேன். அழுது கொண்டு இருந்தேன். ஒவ்வொரு மணி நேரவும் விழித்து உங்களை நினைத்து கொண்டு இருந்தேன். நீங்கள் விட்டு போன துணிகளை எடுத்து முகர்ந்து உங்கள் மணம் தெரிகிறதா என நோக்கினேன். அதிகாலை 5,15 மணி  பேருந்தில் ஆலயம் சென்று திருப்பலி பங்கு பெற்று நடந்தே வீடு வந்து சேர்ந்தேன்.  

என் தாய் வழி பாட்டி, தன் 23ஆம் வயதில் கணவரை இழந்தவர்.. விதவை நிலை,  விதவைக்கோலம் எல்லாம் நான் கண்டு வளர்ந்தவள் என்பதால் மிகவும் பயத்துடன் நோக்கிய நிலை அது.  நீங்கள் கரிசனையாக பாசம் செலுத்துவதும் அதே பாட்டியிடம் தான். பாட்டி என்னிடம் எந்த உபதேசவும் தரவில்லை. உன் வாழ் நாள் முழுக்க இந்த துக்கம் உன்னை விட்டு விலகாது என்றார்.  ஐந்து வருடத்தில் உன் மகன் ஒரு நிலையை அடையும் போது நீ ஆறுதல் அடைவாய்  என்று கூறி விடை பெற்று சென்றார். 

அத்தான் முதல் சில மாதங்கள் அந்த சகுனி தாயாரை பழி வாங்க வேண்டும் என்று தான் மனம் துடித்தது. நல்ல பொம்மை மாதிரி இருந்தாள், இனி தனியாக அனுபவிக்கட்டும், என் மகன் தான் அவளுக்கு சமையல் செய்து கொடுப்பான், கல்லூரியில் கொண்டு விடுவான் என பெருமூச்சு விட்டு கொண்டு இருந்தாள்.  நான் இனி என்ன செய்ய எனச் உங்க அம்மா சொன்ன  போது  மனம் கலங்கினது. அவளுக்கு பாடம் புகட்ட என்ன என்னல்லாமோ செய்ய வேண்டும் என மனம் துடித்தது.  நிறுத்தி ஆறுதலாக சிந்தித்த போது அந்த அம்மையாரை நான் நோக்க அவள் எனக்கு யார்? உங்கள் இந்நிலைக்கு காரணமே அந்த கருணையற்றவள் தான். குடும்பத்தில் கஷ்டபட்ட உங்க பெரியப்பா, உங்க தாய்  மாமாக்கள் குடும்பம் யாவரும் உங்க தாய், அவர்களிடம் நடந்து கொண்ட வண்மமான செயல், பேச்சை பற்றி தான் கதைக்கின்றனர். அவர்கள் அனுபவித்த வருத்தங்கள்  தான்  உங்கள் தலையில் விழுந்ததா என்று எனக்கு தெரியாது.  நியாயமாக உங்க தம்பி தலையில் விழுந்தால் அந்த தாய் கதறியிருப்பாள்.. ஆனால் உங்கள் தலையில் விழுந்ததால் அவளுக்கு கிடைத்த அருள் வாக்கு பலிக்க போகின்றது என்ற கனவில் நடக்கின்றாள். 

நீங்க போன அன்று முதல்  இரு அறையில் கிடந்த கட்டிலை நடு அறையில்  போட்டு என் இரு பக்கவும் நம் மகன்கள்,  அருகில் என் அம்மா என படுத்து தூங்கினோம். ஒவ்வொரு நொடியும் பயத்தால் நிரம்பியிருந்தது. நம் வாழ்க்கையில் எதுவும் இனி நடக்கலாம் என அங்கலாய்த்து கொண்டு இருந்தேன். ஒரு வேளை நானும் உங்களை போன்றே நினையாத நேரத்தில் போனால் எவ்வாறு செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என மகன்களுக்கு அறிவுறுத்தினேன். உங்க உறவினர்கள் இனி கொஞ்சம் வருடங்களுக்கு திரும்பி பார்க்க மாட்டார்கள் என தெரியும். தேவை இல்லாத என்ன என்ன பயமெல்லாமோ தொற்றி கொண்டது. முன்பு இருந்த நிம்மதியான   துக்கம் கூட என்னை விட்டு போனது.  ஆன் வீட்டில் இருந்து தான்  முதல் பல வாரங்கள் சாப்பாடு குழம்பு வந்து கொண்டிருந்தது. ஆன் அம்மா என்னை சந்திக்க வரும் போது பேசி கொண்டே தூங்கி போனேன். முதல் 16 நாட்கள்  வீடே ஸ்தம்பித்தது. பின்பு தான் உங்கள் பாட்டுகளை உங்களை போன்றே போட்டு கேட்டு கொண்டு இருக்க ஆரம்பித்தோம். 

எங்கு திரும்பினாலும் உங்கள் பார்வை, நடை, ஓட்டம் தான் தெரிந்தது. நம் கதவு  நிலைக்கு மட்டும் வளர்ந்த உருவம் தான் கண்ணில் பட்டது. அத்தான் நினைவுகளையே பயந்தேன்.    சாம் கல்லூரிக்கு அழைத்து செல்ல, அவன் திருமணத்திற்கு என எல்லாற்றிர்க்கும் தனி கட்டையாக நிற்கும் என் உருவம் என்னை பலவீனப்படுத்தியது. வெளியே செல்லும் போது நான் அறியாது ஒரு  வருத்தவும் கலக்கவும் என்னை பற்றி கொண்டது.  யார் உற்று பார்த்தாலும் பயமாக இருந்தது. நீங்கள் பயணம் செய்த ஆக்டிவா வண்டியை கண்டாலே அருவருப்பாக இருந்தது.  சர்வவும் சந்தேகிக்கும் படி பயம் கொள்ளும்படி தான் இருந்தது.

அத்தான் நம் வீட்டு விடையங்களை நீங்கள் தான் முடிவு எடுத்தீர்கள் என் விருப்பங்களுடன்.  இப்போது நம் மகன்களுடன் ஆலோசித்து உங்கள் விருப்பம் போல் நம் வீட்டை பற்றிய கனவுகளை திட்டங்களை வகுத்துள்ளோம்.    உங்கள் ஆசை போல் வீடு கட்ட வேண்டும், உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். நீங்கள் விரும்பியது போல் ஏழு வருடத்தில் நம் மருமகளை நம் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்,. நான் ஊஞ்சலில் இருந்து வாசித்து கொண்டு இருப்பேன் நீங்கள் என்னருகில் இருந்து பார்த்து கொண்டு இருப்பீர்கள், 1 comments:

Giri said...

நமக்கு பிரியமானவர்களின் பிரிவு என்பது தாங்க முடியாத ஒன்று தான்.

உங்கள் கட்டுரையின் தலைப்புத் தான் அதற்கு ஒரே தீர்வு.

உங்கள் கடந்த கட்டுரைகளையும் உங்கள் உறவுகளால் ஏற்பட்ட கசப்புகளையும் படித்தேன். நீங்கள் இவற்றை இதோடு விட்டுட்டு உங்கள் வாழ்க்கையை தொடர்வது தான் நல்லது.

உங்களின் கோபம் புரிகிறது இருப்பினும் இவற்றை புறக்கணித்து நல்ல எண்ணங்களை வளர்த்து வாழ்க்கையை தொடருவதே உங்களுக்கும் உங்கள் மகன்களுக்கும் நல்லது.

தவறு செய்தவர்களை கடவுள் கவனித்துக் கொள்வார் என்ற எண்ணத்துடன் பழைய கசப்பான சம்பவங்களை கடந்து விடுங்கள்.

இதுவே உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.

Post Comment

Post a Comment