header-photo

யார் வாரிசு !

சமீபத்தில், உங்கள் வீட்டு வாரிசு சாற்றிதழை  காணும் வாய்ப்பு கிட்டியது. உங்கள் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் செல்வராஜ் என்ற பெயர். எனக்கு ஆச்சரியம் உங்களுடன் இரட்டைகள் யாரேனும் பிறந்திருக்க கூடுமோ என்று. உங்கள் தாய் மாமா, பெரியப்பா வீட்டில் விசாரித்து பார்த்தேன். உங்களுக்கு முதலாக பிறந்த குழந்தைய் இறந்தே பிறந்ததாம்.  யார் இந்த  செல்வராஜ் என்று எங்களை கலங்க வைத்தது?  உங்களூக்கு பின் ஏழு வருடம் பின்பு பிறந்த உங்க அம்மாவின் செல்லப்பிள்ளை உங்க தம்பி பெயர் சரியாக இருந்தது. உங்க பெயர் மட்டும் மறந்து போக காரணம் என்ன? சரி இந்த அரசு சாற்றிதழில் தான் உங்க பெயர் இல்லை என்றால் நீங்க பெருமை கொள்ளும் நாசரேத் ஆலயத்திலும் உங்க பெயர் இல்லை!

ஒரு  குழந்தையை பெற்றோம் என்பதற்காக பெற்றோர் ஆக இயலாது என்பதற்கு சிறந்த உதாரணமே உங்கள் பெற்றோர்.  உங்களுக்கு இரண்டு வயதாக இருந்த போது உங்கள் பாட்டி வீட்டில் கொண்டு விட்டு விட்டு ஓடி வந்து விட்டனர் உங்க பெற்றோர் என அறிந்தேன்.  உங்களுக்கு கக்குவா இருமல் வந்த போதும் திரும்பி பார்க்க வில்லையாம். பின்பு  நீங்களா வளர்ந்து ஒரு வேலைக்கு வந்த பின்பு தான் பெற்ற பிள்ளையாக தெரிந்துள்ளது. அடுத்த மூன்று வருடத்தில் திருமணம்.   உங்களுக்கு விபத்து இழப்பீடு என்றதும் நான் பெற்ற பிள்ளை, என் பிள்ளை என நீலிக் கண்ணீர் விடுவதாக அறிந்தேன்.  அதனால் நம் வீட்டு வாரிசு சான்றிதழில் உங்களை நம்பி இருப்பவராக உங்கள் அம்மாவையும் சேர்த்துள்ளோம்.. ஆனால் உங்கள் வீட்டில் உங்களையே மாற்றி விட்டனர். 

நீங்கள் போனதில் இருந்தே நான் என்ற நபரை உங்கள் வீட்டிற்கு மறந்து போய் விட்டது.  ஆம்பிள்ளை இல்லாத வீட்டில் என்ன பாடு என்று எனக்கு தெரியும் .... அதற்கு நாங்க என்ன செய்ய இயலும்... இனி இந்த வீட்டில் முடிவுகள் எடுப்பது நானும் என் மகனும் தான் என்ற கேலி, கிண்டல், விண்ணாரம் வேறு.!

எனக்கு பேசக் கிடைத்த இடம் இந்த வலைப்பதிவு மட்டும் தான் அத்தான். யாரிடமும் சொல்லவும் விரும்பவில்லை அப்படி கூறினாலும் கேட்கவும் யாரும் இல்லை.  கலையிழந்த மாடம் தானே தற்போதைய என் நிலை. ஆனால் இந்த சாற்றிதழ்,  செல்வபாபா  உங்களுக்கு யார்? என்று கேட்கும் துணிவை எனக்கு தந்து உள்ளது. 

நீங்க உள்ள போதே அந்த தாயில் சில செயல்படுகளை கண்டு வருந்தி இவர் உங்க உண்மையான தாய் தானா என்று வினவியுள்ளேன். ஒரு பெண் பிரசிவிப்பதால் தாய் ஆக இயலாது. தாய்மை உணவை தொட இயலாது என்பது தான் செல்வவதி தவமணி தாயை கண்டு நான் கற்றது.  உலக நடப்பிற்காக, மலடி என்ற பட்டம் பயந்து பிள்ளை பெற்று கொள்பவர்களும் உண்டு என்பது தான் இவர்களை போன்றவர்களை கண்டு நான் உணர்வது. உங்க பெயரை மாற்றி போட்டிருப்பதை கண்டு உங்க மகன் கொந்தளித்து போனான். 

சட்ட பூர்வமாக என் எதிர்ப்பை பதிவு செய்துள்ளேன். அதையும் மீறி அவர்கள் பக்கம் நோக்கினால் என் பாதை தடைபடும் அத்தான். நீங்கள் விரும்பிய படி மகிழ்ச்சியாக எங்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்தி கொண்டு இருக்கின்றோம். யாரையும் நம்பவோ யார் விருப்பங்களுக்காகவோ யார் மானப்பிரச்சினைக்காகவோ எங்களை மாற்றி கொள்ள விரும்பவில்லை. எங்களுக்கான வாழ்க்கையை நாங்கள் வாழ வேண்டும் அல்லவா?


நீங்கள் இங்கிருந்து போய் விட்டாலும் உங்க எச்சங்களான உங்க மகன்களை வருந்த செய்வது என்ன நியாயம்? நான் நம் மகன்களை யாரையும் சாராது இருக்க தான் கூறியுள்ளேன். அப்படி தான் நீங்களும் வளர்த்தீர்கள். . எனக்காக அவர்கள் விருப்பங்கள் வாழ்க்கை பாதை தடைபடக்கூடாது மாறக்கூடாது என்பதில் கருத்தாக உள்ளேன். .  அவர்கள் என்ன தான் நம் பிள்ளைகள் என்றாலும் அவர்கள் தனி நபர்கள் அவர்களுக்காக வாழ்க்கை பாதையை தேர்வு செய்ய அவர்களுக்கு உரிமையுண்டு தானே?.  நீங்க கடந்த பல மாதங்களாக உங்கள் அலுவலக வேலைகளை பற்றி என்னிடம் கதைப்பது இல்லை. என்னை விட உங்க தம்பி, அம்மா, உங்க நண்பர்கள் உங்க அலுவலக ஊழியர்கள் தெரிந்து வைத்துள்ளனர். அதனால் நீங்கள் போன அன்று நீங்கள் உங்கள் சட்டை பையில் வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாயை என்னிடம் கேட்டு அனுப்பியிருந்தார் உங்கள் கஸ்டமர். அந்த 15 ஆயிரத்தை உங்களை முதலில் எடுத்த ஆம்புலன்ஸ்காரன் எடுத்திருக்க வேண்டும் என சந்தேகின்றேன். உங்கள் சட்டை பாக்கடில் இருந்த 100 ரூபாய் பர்சில்  இருந்தது என  600 ரூபாயும் கைபற்றினேன். 


கடந்த இரு வாரங்களாக காலை ஏழு மணிக்கே நாகர்கோயிலில் வேலை என வண்டியும் உதவியாளர்களுமாக கிளம்பி விடுவீர்கள். அத்தான் எத்தனை நாள் வேலை?, எங்கு வேலை? என்றதும் உன் வேலையை மட்டும் பார் மாணவர்களுக்கு சரியாக வகுப்பு எடுக்கும் வழியை பார் என்றீர்கள். உங்களை இழந்த துக்கம் மாறி நான் விழித்து கொள்ளும் முன் உங்க உதவியாளர்களே கிடைக்க வேண்டிய பணத்தை கைபற்றினர் என அறிந்தேன்.  ஒரு நபரிடம் விசாரித்தேன். அதனால் எந்த பிரயோசனவும் இல்லை என்று தெரிந்தால் என் வேலையை பார்த்து கொண்டு அமைதியாகி விட்டேன். 

நம் பிள்ளைகளும் என்னுடன் சேர்ந்து வாழ்க்கையின் மிகவும் கசப்பான புரக்கணிப்பின் பாடங்களை கண்டு படிக்கின்றனர்.  பட்டறிவு போல் ஒரு பாடம் யாருக்கும் பலன் தராது இல்லை தானே. அதனால் நான் வருந்தவும் இல்லை. எங்கள் மகிழ்ச்சி சின்ன சின்ன சிரிப்பில், பேச்சில் போய் கொண்டிருக்கின்றது. ஜெரி கொண்டு காட்டும் Be Like Bro( பி லைக் பிரோ)m வாசித்து சிரித்து கொண்டு இருப்போம். 

இன்னும் ஒரு ஆச்சரியமான விடையம் என்ன தெரியுமா? நான் கார் ஓட்ட கற்று விட்டேன்.  என்னை பயந்து ஒரு நாள் கூட உங்க காரை தரவில்லை தானே. நீ தாவி குதித்து ஓட பார்ப்ப, பிரேக் போட்டா உன் கால் வலிக்கும், கார் ஸ்டைரிங் பிடித்தால்  உன் கை வலிக்கும்  என்று கூறி தானே எனக்கு கார் தர மாட்டீங்க. உண்மை தான். சாம் பிரேக் போடுங்க என்று கத்தினாலும் என் சக்திக்கு ஒரே மிதியில் பிரேக் விழ கடினமாகத்தான் உள்ளது. இருந்தாலும் நானே காரை ஓட்டி வரும் போது என்ன மகிழ்ச்சி என்று தெரியுமா அத்தான்.  சாம் ஜோயல் தான் தற்போது கற்று தருகின்றான். அம்மா பார்த்து ஓட்டுங்க, கவனம், ரோட்டுல ஓட்டுங்க ஐயோ............. குப்பை அம்மா எத்தனை முறை சொல்லி கொடுத்தாலும் ஏன் கிளச்சை போட மாட்டுதீங்க என கத்துவான். என் மாணவர்களை கூட நான் இப்படி எல்லாம் திட்டியிருக்க மாட்டேன் அத்தான். இருந்தாலும் பிள்ளை அழகாக எனக்கு கற்று தருகின்றான். 

நாங்க ஓர் பழைய காரை வாங்கி விட்டோம்.  வத்தல் சிவப்பு கலரில். ரொம்ப பழையது.  விரலுக்கு தகுந்து தானே வீங்க இயலும்.  நல்ல கார் தான் அத்தான். சாம் சூப்பாரா காரை ஓட்டுவான். என்னிடம் அப்பாவை விட நான் நன்றாக ஓட்டுகின்றேனா என்பான்... உண்மை தான் உங்களை விட அழகா, எளிதா ஓட்டுகின்றான் அத்தான். அதற்காக உங்களை விட்டு கொடுக்க இயலுமா? அப்பாவும் சூப்பரா கார் ஓட்டுவார் என்பேன்.   எனக்கு ஒரு மணி நேரம் மேல் பயிற்சி எடுத்தால் கவனம் சிதறுகின்றது. ஆனால் நீங்கள் ஏழு மணி நேரம் அதுவும் பேசி கொண்டே அல்லவா சூப்பாரா காரை இயக்குவீர்கள். 

நம்ம பிள்ளைகள் நாம் கொடுத்த தன் நம்பிக்கை, சுதந்திரம் கிடைத்து வளர்ந்ததால் சிறப்பாக எளிதாக கற்று கொள்கின்றனர்.  இந்த விடுமுறையை கார் ஓட்ட உங்க அரசு சாற்றிதழ் பெற என சிலவழித்தோம். இன்னும் எல்லாம் சாற்றிதழும் கிடைக்கவில்லை. உங்கள் கைபேசியை என் பெயரில் மாற்ற சாற்றிதழ் கேட்கின்றனர், சமையல் கியாஸ் ஆர்டர் செய்ய கூட சாற்றிதழ் கொடுத்து  மாற்ற கூறுகின்றனர். அப்படியாக எங்களை சுறு சுறுப்பாக செயலாற்ற வைத்து விட்டு சென்றுள்ளீர்கள் அத்தான். திருநெல்வேலியிலுள்ள அரசு அலுவலகம் மட்டுமல்ல திருச்செந்தூர் அலுவலகம் வரை சென்று வருகின்றோம். 

அந்த திருடன் தம்பியிடம் கேட்டு பார்த்தோம், கெஞ்சி பார்த்தோம், மிரட்டி பார்த்தோம், ஒரு பலனும் காணவில்லை, அவனுக்கு உங்களிடம் இருந்து வாங்கின பணத்தை  திருப்பி கொடுக்கும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை.  அந்த தாய்க்கும் அந்த எண்ணமில்லை. உங்களுக்கு கிடைக்க வேண்டிய புண்ணியத்துடன் அதையும் சேர்த்து விட்டோம் அத்தான். உங்கள் அருளால் எங்களுக்கு எந்த குறையும் இல்லை.  உங்கள் சில நண்பர்கள் உதவுகின்றனர், சில உறவினர்கள் உதவுகின்றனர்.  உங்கள் நினைவாக எங்கள் வாழ்க்கையும் சிறப்பாக செல்கின்றது.

இன்றும் உங்கள் கல்லறையில் செல்ல வேண்டும் என்று மனது கதற துவங்கி விட்டது. சென்றேன் அந்த கல்லறை மேல் படுத்து நிம்மதியாக தூங்கி விட வேண்டும் போல் இருந்தது.  அத்தான் உங்க பிரிவு நாட்கள் செல்ல செல்ல என் நினைவுகளில் இருந்து மறைய மறுக்கின்றது. மீண்டு எழ எழ உங்க நினைவு என்ற தீயில் எரிந்து சாம்பலாகி கொண்டு இருக்கின்றேன். 

0 comments:

Post Comment

Post a Comment