header-photo

முடிவுற்ற நம் பயணங்கள்!இந்த முறை நாங்கள் விடுமுறைக்கு எங்கும் போகவில்லை.  நீங்கள் இல்லாத பயணமா? நினைத்து பார்க்கவே இயலவில்லை.  கடந்த ஆறு மாதம் முன்பு நமது பிள்ளைகள் பத்து நாட்களுக்கு முன்னமே தாத்தா பாட்டி வீட்டிற்கு போய் விட்டனர்.  நீங்கள் கூறினாலும் உங்களை விட்டு நான் அங்கு தனியாக சென்று தங்க நான் விரும்புவதில்லை. உங்களுடனே வந்து உங்களுடனே திரும்புவது தான் என் விருப்பம். நாம் காலை 5 மணிக்கு கிளம்பினோம். எப்போதும் போல் நீங்கள் தான் எல்லாம் எடுத்து வண்டியில் வைப்பீர்கள். நான் புகைப்படக்கருவி என் கம்பிளி புதப்பு, தலையில் கட்டும் ஸ்கார்ப் மட்டுமே எடுத்து கொள்வேன்.
அத்தான் வண்னார்பேட்டை பக்கம் ஒரு கடையில் இருந்து சாயா வாங்கி தந்தீர்கள். அப்படியே நம் பயணம் ஆரம்பமானது. வழியில் செல்வராணி அத்தையை அழைத்து பார்த்தேன். இருந்தால் கண்டு விட்டு வரலாம் விரும்பினால் அவர்களையும் எஸ்டேடுக்கு அழைத்து செல்லலாம் என்ற நோக்கவும் இருந்தது. .

போகும் வழியில் கூடுலூரில் வைத்து  இளனியை ஒரு இயந்திரத்தால் வெட்டி தரும் கடையில் நிறுத்தி இளனி வாங்கி தந்தீர்கள். நான் அங்கிருந்து இரண்டு திராட்சைச் செடி வாங்கி இருந்தேன். ஆனால் மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன்.  

இந்த முறையும் பக்கத்து வீட்டு வைத்தியர் சேச்சி மிகவும் நோய் உற்று இருப்பதாக அப்பா கூறினார்கள். கடந்த முறை அங்கு சென்றதால் நாம் அருட் தந்தை ஃபென்னான்றோ அவர்களை சந்திக்க சென்றோம். அவரிடம் சில நேரம் கதைத்து விட்டு ஆனக்கல் ஆலையத்தில் வைத்து அவர் நமக்காக பிரத்தியேக ஜெபம் ஏறெடுத்தார் . பின்பு உங்களை மிகவும் புகழ்ந்து பேசினார். உங்கள் பெயரைப்பற்றி இதுவரை யாரும் கதைக்காத பார்வையில் மிகவும் பூரிப்பாக கதைத்தார். அப்பெயர் யூத மொழியில் தந்தை, குரு என அர்த்தம் கொள்வதாக கூறினார்.  உங்கள் முகத்தில் பிரத்தியேக ஒளி மின்னுவதாக கூறினார். அத்தான் நினைத்து பார்க்க பார்க்க என் இதயம் வெடிக்கின்றது. உங்க  பிரத்தியேக பயணத்திகான ஒளியா ஃபாதருக்கு தெரிந்தது. பின்பு வீட்டில் வந்து உணவு எடுத்து விட்டு பட்டுமலைக்கு சென்றோம். இந்த முறை என் குழந்தைப் பருவத்தில் மரியாகம்மா பாட்டி வசித்த வீட்டை நோக்க வேண்டும் படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. ஆனால் வண்டியை விட்டு இறங்கும் போதே கீழை விழுந்து காயம் பட்டதால் பின்பு போன உற்சாகம் எனக்கில்லாது போய் விட்டது,  நானும் விழுந்த கோபத்தில் உங்களை திட்டி விட்டேன் என்று என்னிடம் கோபித்து கொண்டீர்கள். கேத்திரின் வீட்டில் சென்று சாயா குடித்து விட்டு அவள் பக்கத்து வீட்டில் இருந்து ஒரு ரோஜாச்செடி வாங்கி தந்தாள். அது இந்த வாரம் தான் பூத்தது அத்தான். எப்போதும் முதல்ப் பூவை உங்களிடம் தான் காட்டி கொடுப்பேன். இந்த முறை நானாக பார்த்து கொள்ள வேண்டியதாக போயிற்று.


அத்தான் நீங்களும் உங்கள் சகலனும் சேர்ந்து திட்டமிட்டு பாஞ்சாலிமேடு அழைத்து சென்றீர்கள். எனக்கு தெரிந்திருந்தால் வேண்டாம் என்றிருப்பேன். இரு வருடம் முன்பு நாம் அங்கு சென்றிருக்கோம் என்றிருப்பேன். அதனாலே நீங்கள் சொல்லாதே அழைத்து சென்றீர்கள். வசதியாக உங்கள் வாகனத்தில் எல்லா பொடி வாண்டுகளையும் ஏற்றி கொண்டீர்கள். எனக்கு உங்கள் பக்கம் சீட் போடாதது கோபமாக இருந்தது. சமீப நாட்களாக என் முன் சீட்டை சாம் பிடித்து கொள்வான். சில நேரம் நான் என் மாப்பிள்ளை கூட நான் தான் இருப்பேன் என சண்டை இட்டு விரட்டி விடுவது உண்டு. உன் மனைவி வந்ததும் நானும் அப்பாவும் பின் சீட்டிற்கும் போய் விடுகிறோம் என மிரட்டுவதும் உண்டு. ஆனால் இந்த முறை எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. மழையும் மேகமூட்டவுமாக காட்சி அளித்த அந்த குறுகிய மலைபாம்பு போன்ற  ரோட்டில் நீங்கள் சவாலாக ஆனால்  மகிழ்ச்சியாக வந்தீர்கள். ஒவ்வொரு முறை உங்கள் அருகில் வர வர நீங்கள் முன் சென்றே நடந்து போய் விட்டீர்கள். திரும்பி நெல்லை நோக்கி வரும் போது இந்த சம்பவத்தை கூறி உங்களிடம் நான் கோபப்பட்டேன். நீங்களூம் நீ என்னுடன் ஓடி வரவேண்டியது தானே. பின்னால் பேசி கொண்டு வந்தால் அப்படி தான் என்று கூறி என் வாயை அடைத்து விட்டீர்கள். அங்கு வைத்தும் ஒரு குழுவை கண்டதும் பேசி நட்பாகி விட்டீர்கள்.
கம்பம் பள்ளதாக்கு வந்ததும் ஒரு திராட்சை தோட்டம் முன்  உள்ள கடையில் திராட்சைப்பழம் ஒரு பெட்டியாக வாங்கினீர்கள்,  பின்பு வரும்  வழியில் வத்தலகுண்டுவில் கொஞ்சம்  காய்கறியும் வாங்கி வீடு வந்து சேர்தோம். மே மாதம் போக திட்டமிட்டிருந்தோம். நாம் வகுத்த திட்டம் ஒருபுறம் இருக்க இறைவன் வகுத்த திட்டத்தில் நீங்களும் போய் விட்டீர்களே. நீங்க சொன்னது போல் இன்று கத்தாருக்கு போயிருந்தால் என்னால் ஒரு ஓட்டுநரை அமர்த்தி கூட என் வீடு சென்று வந்திருப்பேன். இப்போது உள்ள மனநிலையில் உங்க வீட்டை விட்டு போக மனமில்லை. எல்லாம் ஸ்தம்பித்து விட்டது. ஒரு அமைதியான இருள்படர்ந்த  இடத்தில் நிற்பது போல் உள்ளது.
நீங்கள் காரை ஓட்டும் அழகு எங்களுக்கு தேவையான பொருட்கள் சாப்பிட வாங்கி தந்து அழைத்து செல்லும் காட்சிகள் கண்ணில் இருந்து இன்னும் மறையவில்லை. பின் எப்படி தனியாக செல்ல இயலும். இந்த தனிமையான பயணம் நம்ம மகன்களுக்கும் பிடிக்கவில்லை. நாங்கள் நம் வீட்டிலே இருந்து கொண்டோம்.


இங்கு நீங்கள் வாசல் கெயிற்டை திறந்து கொண்டு வேகமாக வருகின்றீர்கள். செருப்பை கழற்றி கொண்டே அம்மா எங்கே எனக் குரல் கொடுக்கின்றீர்கள். உங்கள் கணிணி அருகில் இருந்து பாட்டு கேட்டு கொண்டு இருக்கின்றீர்கள். சாம் சாம் என அழைத்து பார்த்தீர்கள் அவன் வரவில்லை என்றதும் அவன் அறையில் அவன் கட்டில் இருந்து அவனிடம் வம்பு இழுத்து கொண்டு இருக்கின்றீகள்.  உங்களை எப்படியாவது என்னுடன் கடத்தி கொண்டு போக வேண்டும் என்று அத்தான் மாடிக்கு வாரீங்களா ...........//? நல்ல காற்று, நிலா ஒளிகூட இன்று நல்லா இருக்கு என்கிறேன். என்னை திருப்திப்படுத்த என்னுடம் மாடிக்கு வருகின்றீர்கள். அங்கு ஜெரி அவன் பந்தையும் எடுத்து கொண்டு வந்து உருட்டி கொண்டு இருக்கின்றான். கத்துகின்றீர்கள். சும்மாவே இருக்க மாட்டானா, இரவு ஒன்பது மணிக்கும் ஆடி கொண்டு தான் உன் பிள்ளை இருப்பானோ என்கிறீர்கள். நானும் அத்தான் உங்களுக்கும் சின்ன குழந்தையாக இருக்கும் போது கால் பந்து தானே பிடிக்குமே. உங்களை போல தானே உங்க பிள்ளை இருப்பான் என்கிறேன். எனக்காக இருந்து விட்டு ஜெரி தண்ணீர் எடுத்து வா என விரட்டி விடுகின்றீர்கள். 10 மணி கடந்ததும் தூங்க போகலாமா என வந்து பின்பும் கணிணியில் சில பாட்டுகள் கேட்டு விட்டு வாட்ஸாப்பில் வந்த சில சிரிப்பு காணொளி பார்க்கின்றீர்கள். முகநூலை பார்க்கின்றீர்கள். உங்க சொந்தக்காரர்கள் உங்க நண்பர்கள் படங்கள் காட்டி தருகின்றீர்கள்.  அப்படியே உங்க நினைவுடனே நாள் பொழுதை முடிக்க போகின்றோம். 


3 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பழைய தருணங்கள்/நினைவுகள் உங்கள் மனதுக்கு ஆறுதல் அளிக்கட்டும்

Subbiah Ravi · Madurai Kamaraj University and the University of Madras said...


வாழ்க்கை பயணம் சில நேரங்களில் முடிவு அடைந்ததை போல் தோன்றினாலும் ஆன்ம பயணம் முடிவு அற்றது.வாழ்க்கை பயணத்தை இன்பம்,துன்பம்,நன்மை,கெடுதல்,வேண்டுதல்,வேண்டாமை முதலிய உணர்ச்சி ஊடகங்களின் தொகுதியாக நாம் காண்பதால் மனதில் அமைதி இன்மை ஏற்படுகின்றது.ஒலி்்கூட நேர் அலையில் பயணிப்பது இல்லை.பாம்பு போல் வளைந்து வளைந்து செல்கின்றது.அது நேர் கோடாகும் பொழுது நிசப்தம் ஆகின்றது.வாழ்க்கையும் உணர்சிகளின் பிடியில் இருந்து விலகும் பொழுது ஆன்ம நேயமாகின்றது.உணர்சிகளின் எல்லை மீறி நம்மை பன்படுத்தி கொள்ள வாய்ப்புகள் இந்த சோதனைகள் தாமா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சகோதரி! தங்கள் பதிவுகள் படித்துள்ளேன், தங்கள் அன்பர் மறைவின் பின்பும் படிக்கிறேன். உங்கள் பாதிப்பை உணருகிறேன். எனினும் எதுவும் முடிவில்லை. தங்கள் மகன்மாருக்கு நீங்கள் வேண்டும். ஆண்டவனை நம்பி வெளியே வாருங்கள்!நீங்கள் அறியாததா? "வாழ்க்கையென்றால் ஆயிரம், வாசல் தோறும் வேதனை, நமக்குக் கீழே உள்ளவர் கோடி - நினைத்துப் பார்ப்போம் - நான் ஈழத்தவன் , என்னுறவுகள் பலரை இழந்தவன், என்னுறவுகளில் சிலர் முழு குடும்ப உறுப்பினர்களையும் போரில் இழந்தவர்கள். வெளிநாட்டில் வாழும் சில என் நண்பர்களுக்கு அவர்கள் தவிர உறவே இல்லாது ஒரே நாளில் அழிக்கப்பட்டவர்கள். வெளியே வாருங்கள், உங்களுக்கான உங்கள் பில்ளைகள் உலகத்தை உங்கள் அன்பானவரின் ஆசியுடன் வழி நடத்துங்கள்.

Post Comment

Post a Comment