20 May 2016

அவள் அப்படி தான்!

நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில்  மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ருத்ரைய்யாவின் இயக்கத்தில் ஸ்ரீ பிரியா, ரஜினி காந்த், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் இது.   முரண்பட்ட  பல கருத்துக்களை முன் நிறுத்தி 1978 களில் வந்த படம் என்பது நம்மை ஆச்சரியத்தில் உள்ளாக்குகின்றது.

பெண் உடல், பாலியல், ஆணாதிக்க பார்வை போன்ற பிரச்சினைகளை அலசி ஆராயும் சிறப்பான படம் இது. ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய படம்  இது. 

ஸ்ரீபிரியா போன்ற ஆளுமை கொண்ட நடிகைகள் காலம் கடந்து விட்டதே என்ற நினைப்பும் நம்மை வருந்த வைக்கின்றது. வெறும் கவர்ச்சிக்கும்  அல்லது நாயகனுடன் ஜோடி சேர என்ற நோக்கில் மட்டுமே கதாநாயகிகளை பெரும் வாரியான படங்களில் பயண்படுத்தி வரும் வேளையில் எல்லா சீனிலும் வந்து போகும் மிகவும் ஆளுமை கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பது  பாராட்டும் படி இருந்தது. 

இந்த படத்தின் உரையாடல்கள் ஊடாக காண்பவர்களை சிந்திக்க வைக்கும் ஒவ்வொரு காட்சியும் மனதை விட்டு அவ்வளவு எளிதாக நகர இயலாது. 

எழுத்தாளர் வண்ண நிலவனின் திரை உரையாடல்கள் எடுத்து கொள்ளப்பட வேண்டியவை.  அடுத்தது இளைய ராஜாவில் இசை. குறிப்பிட்டு சொல்லவேண்டிய பாடல் உறவுகள் ஒரு தொடர்கதை  பாடல் என்ற பாடல் ஆகும்.

ஆறுதல் தேடி அலையும் ஓர் பெண் மனம் சந்திக்கும் துயரை நாம் காண்கின்றோம்.  தன் தாயின் செயல்பாட்டால் மன பிளர்விற்கு உள்ளான இளம் பெண் பின்பு தான் சந்திக்கும் ஆண்களிடம் எவ்வாறு உறவு சிக்கல்களில் உழலுகின்றார் என்று கதை செல்கின்றது.  ஒரே பெண் மற்று பலரின் அவரவர் பார்வையில் விதிக்கப்படுகின்றார். ஒரு பெண்ணின் ஒழுக்கம் என்பது அவரிடம் இல்லாது அவர் வாழும் சமூகப்பார்வையில் உள்ளதும் அப்பெண் அவர் எதிர் கொள்ளும் விதவும் தான் சிறப்பாக உள்ளது.

ஆண் ஆதிக்கம் கொண்ட மனநிலையில் ரஜினிகாந்த் வருகின்றார். பெண்கள் என்பர்களை ரசிக்க வேண்டும் ஆராயக்கூடாது, அவள் ஆண் தேடி அலைபவள் போன்ற உரையாடல்கள் வழி பெண்களை சித்தரிகரிப்பது  என்றால்; பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்து மதிப்பதும் அவர்கள் உரிமை பற்றி எல்லாம் சிந்தித்து படம் எடுக்கும் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் வருகின்றார்.

என்ன தான் பெண் உரிமை என பேசினாலும் தனக்கான ஒரு கொள்கை, சில கருத்துக்கள் வைத்துள்ள பெண்ணை திருமணம் என்றதும் மணம் முடிக்க யோசிக்கின்றார்.  பெண் உரிமை என்று எதுவும் தெரியாத வெகுளி பெண்ணை தன் மனைவியாக ஏற்று கொள்ளும் சமகால ஆணாக கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.

ஆண் உலகம் பெண்கள் நிலையை தனக்கு சாதகமாக்கி கொண்டு பயண்படுத்தும் கதாபாத்திரமாக சந்திர சேகர் என்ற நடிகர் நடித்துள்ளார். உறவுகள் தொடரும் என்ற அழகிய இனிமையான பாடல் வந்துள்ளது இப்படத்தில். 

காலம் என்ன மாறினாலும் அடிப்படையில் பெண்களை பற்றியுள்ள பார்வை அதே போல் தான் இப்போது உள்ளது என இப்படம் காணும் போது விளங்கும். மனிதனின் புலன்படாத மனநிலைகளும் செயல்பாடுகளும் சரியாக அலசப்பட்டுள்ளது. 

கடைசியாக ஸ்ரீபிரியா எந்த முடிவும் அற்று நடுத்தெருவில் இறங்கி செல்வார். இது போன்ற பெண்கள் இனியும் ஜெனிப்பார்கள் மரிப்பார்கள் என முடிக்கப்பட்டுள்ளது. அதே போல் ”பெண் உரிமை என்றால் என்ன”? என்று கமல்ஹாசன் மணம் முடித்து கொண்டு வந்த சரிதாவிடம் கேட்பார். அவரும் ”எனக்கு தெரியாது” என்பார். தெரியாது இருப்பதால் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக உரையாடல்கள் வரும். இது போன்ற முடிவுகள் எடுத்து காட்டுகள் கூட இது போன்ற படங்கள் சமூகத்திற்கு தரும் எதிர் மறை கருத்து ஆகும். சுயமாக சிந்திக்கும் பெண்களால் ஒரு மனைவியாக வாழ இயலாது அவர்கள் நட்டாத்தில் தான் விடப்படுவார்கள் என்றா மறைமுகமாக சொல்ல வந்தார் என்று கூட மனதில் தோன்றாது இல்லை. பெண்கள் மகிழ்ச்சி என்பது விழிப்புணர்வு அற்று வெகுளியான வெளிதானா என்ற கேள்வியும் எழாது இல்லை. 

இருப்பினும் சிந்தனையை தூண்டும் படம்.