header-photo

அத்தான் விரும்பிய லயோளா கல்லூரியில்!

அத்தான் கணவர் மட்டுமல்ல சில நேரம் நீங்கள் தந்தையாக தெரிவீர்கள் சில பொழுது தோழனாக மாறுவீர்கள் மற்று சில பொழுது ஆசானாக தெரிவார் மாறுவீர்கள் அவ்வப்போது காதலனாகவும் மாறி விடுவீர்கள்.


நீங்க  அலுவலகம் சென்று வீடு திரும்ப இரவு ஆகி விடும். குழந்தைகளும் பள்ளி சென்ற போது ஓர் வெற்றிடம் நிலவியது. அப்போது தான் தபால் வழி படிக்க வேண்டும் என்ற  ஆசை  எனக்கு உதித்தது, எப்போதும் உங்களிடம் இந்த திருமணத்தால் என் கல்வி தடைபட்டது என குறை கூறி கொண்டே இருப்பேன்.

 மனோன்மணியம் பல்கலைகழகத்தில் எனக்கு தகுந்த படிப்பு, எது உண்டு என தேடியதும் நீங்கள் தான். அப்படி உங்களை கவர்ந்த  தொடர்பியல்-ஊடகத்துறையில் கல்வி கற்க சேர்த்து விட்டீர்கள். நீங்களுக்கும் கல்லூரி படிக்கும் காலத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து கைஎழுத்து பத்திரிக்கை நடைத்தியிருப்பதாக கூறியுள்ளீர்கள்..  மேலும் எனக்கு வாசிப்பு ஆர்வம் இருந்தால் இந்த துறையை தேர்ந்து என்னை சேர்த்து விட்டீர்கள்.  என்னை அழையாதே தனியாகவே சென்று அத்துறை பேராசிரியர்களை கண்டு என் மனைவிக்கு முதுகலை பட்டபடிப்பிற்கு சேர அனுமதி தர இயலுமா என விசாரித்து வந்த பின்பு தான் என்னை தெரிவித்தீர்கள்..  துறைத்தலைவரும், படிப்பிற்கு வயது தடை இல்லை என்று கூற துறையின் வாச்லில் நின்ற பேராசிரியர் நடராஜ் அவர்களும் உற்சாகப்படுத்த என்னை அழைத்து கொண்டு மதியமே பல்கலைகழகம் சென்று அதன் வழி முறைகளை பின்பற்றி சேர்த்து விட்டீர்கள்.   


என் படிப்பு சுமுகமாக சென்றது. என்னுடன் படிப்பவர்கள் என்னை விட 10 வயதிற்கு இளையவர்கள் என்றாலும் பாச-நேசத்துடன் என்னை அங்கீகரித்தனர். பாடங்கள் எடுக்கும் பல  ஆசிரியர்கள்  என்னை விட இளையவர்களாக இருந்தனர். காலையிலும் மாலையிலும் நீங்களே என்னை அரசு பல்கலைகழக பேருந்தில்  அனுப்பி விட்டு அழைத்து வந்தீர்கள். முதுகலைப்பட்டத்தில் தங்கப்பதக்கத்துடன் வெற்றேன். வெற்றி களிப்பில் இருந்த  நீங்கள் இத்துடன்  முனைவர் பட்டவும் முடிக்க உற்சாகப்படுத்தினீர்கள். . மூன்று வருடம் என்பது என்னை பொறுத்த வரை ஒரு நீண்ட காலவெளி என நினைத்ததால் இளம் முனைவர் பட்டம் பெற்றேன். அத்துடன்  தூய சாவேரியார் கல்லூரியிலும் வேலை கிடைத்தது.

அந்நேரம் நம் அலுவலகம் எங்கள் வீட்டின் ஓர் அறையில் இயங்கி கொண்டிருந்தது. நீங்கள் ஒரு வாடிக்கையாளரின் கணக்கை முடிக்க வேண்டும் என்றால் எப்போது முடிகிறதோ அப்போது வரை கண் விழித்து வேலை செய்யக் கூடியவர். அந்த நேரம் இரவு 12 மணியாகவும் இருக்கலாம் அதிகாலை இரண்டு-மூன்று மணியாகக்கூட இருக்கலாம்.  பல நாட்கள் அசதி தெரியாது வேலை செய்ய பாட்டு போட்டு கேட்டு வேலை செய்து கொண்டிருபார். நான் பால் சேர்க்காத சாயா மற்றும் சேவு,மிக்சர், சீவல்கள் கொண்டு கொடுத்து  அருகில் என் வாசிப்பில் இருப்பேன். சில வேளைகளில் நான் அவர் காலருகிலே படுத்து தூங்கியும் இருப்பேன். இப்படியான வேளைகளில் பேராசிரியர் தகுதி தேர்வுக்கான மாதிரி வினா -பதில்  தாள்களை இணையத்தில்  இருந்து எடுத்து அச்சு எடுத்து தந்து விடுவார். அவர் வேலை செய்ய நான் தினம் கொஞ்சம் கொஞ்சமாக தேர்வுக்கும் தயாராகி வந்தேன்.

ஆறு மாதம் கல்லூரியில்  வேலை செய்த சூழலில் தகுதி தேர்வு முடிந்துவரக் கூறி கல்லூரியில் இருந்தும் நிறுத்தப்பட்டேன். அந்த பருவத்தில் தான் தேர்வு எழுதினேன். யு ஜி சி அறிவிக்கும் தேர்வுக்கு நாள் அறிவது, தேர்வுக்கு எழுதியிடுவது, ஹாள் டிக்கட் எடுத்து வைப்பது ,  என எல்லா வேலைகளையும் அத்தானுடையது தான். என் வேலை படிப்பது, தேர்வு நேரம் அவர் காரில் பயணப்பட்டு மதுரையை அடைவது என்பதாக மட்டுமே இருந்தது.  எழுத போகும் அன்றும் எனக்கு ஓர் பயம்  நான் நன்றாக படிக்கவில்லை அடுத்த முறை எழுதி கொள்கின்றேன் என்றேன்.  அந்த தேர்வின் ரிசல்ட் ஒரு தீபாவளி இரவு வந்தது. எப்போதும் போல் அவர் தன் வேலையில் மூழ்கியிருந்தார் நானும் தூங்கி கொண்டிருந்தேன். இணையத்தில் என் பெயரும் வெற்றி பெற்ற லிஸ்டில் கண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் தூக்கத்திலிருந்த என்னை எழுப்பி விட்டு வெற்றியை கொண்டாடினார். அவருக்கு நான் முதல் தரம் எழுதி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. எனக்கும் என் வெற்றியில் ஆச்சரியமாகத்தான் இருந்தது. தகுதி தேர்வில் நான் வெற்றி பெற்றேன் என்றால் முழுக்க முழுக்க அத்தான் முயற்சி ஆசை, நேர்மறையான என்னை பற்றியுள்ள எண்ணம், என் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை அவருடைய விடா முயற்சி. இந்த தேர்வுக்கு எனவே மூன்று புத்தகம் வாங்கி தந்திருந்தார். அதை விட அதிகமாக இணையத்தில் இருந்து வினா தாள்கள் எடுத்து படிக்க உற்சாகப்படுத்தினார்.

நெட் தேர்வில் வெற்றி பெற்றதால் சென்னை லயோளா கல்லூரியில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. எனக்கு உடன் முடிவெடுக்க தயக்கம். குழந்தைகள் பாளையம்கோட்டையில் படிக்கின்றனர் என்னவருடைய பிழைப்பும் இங்கு. சென்னை எனக்கு ஒவ்வாத நகரமாக இருந்தது. எங்கள் மூத்த மகன் 10 ஆம் வகுப்பில் படித்து கொண்டிருந்தார். ”லயோளா கல்லூரியில் வேலை செய்வது என்பது பெரும் பாக்கியம், பெருமை உன் கரியரில் மிகப்பெரிய மயில்கல்” எனக் கூறி கல்லூரிக்கு செல்ல ஆயத்தம் செய்தார்.   அவருடைய வேலை விடையமாக என்னவர் சென்னை வந்து ஒரு நாள் ஆகி விட்ட நிலையில் எனக்கு கல்லூரியில் இருந்து அழைப்பு வந்ததால் தனியாகவே இரண்டு பை லக்கேஜுடன் சென்னை வந்தடைந்தேன்.  என்னை தாம்பரத்தில் இருந்து அவர் சகோதரி வீட்டிற்கு அழைத்து சென்றார். 

கல்லூரியில் சேர்ந்து விட்டேன் ஆனால் கல்லூரி விடுதி கிடைக்கவில்லை. அருகிலுள்ள செர்வெட் அருட்சகோதரிகளின் விடுதியில் சேர்த்து விட்டு பிரியா விடை பெற்று, நான் விடுதிக்குள் செல்ல என்னவர் பாளையம்கோட்டை திரும்பினார். 16 வருடங்களுக்கு பின் விடுதி வாழ்க்கைக்கு செல்கின்றேன். என்னை பொறுத்தவரை மிகவும் கடினமாக இருந்தது. கல்லூரி வளாகம் சென்றதும் என் சோர்வு எல்லாம் நீங்கி விடும். அந்த விடுதியில் தங்கி இருந்த போது சென்னையில் பல உயர் நிறுவங்களில் வேலை செய்யும் படிக்கும் பெண்களின் வாழ்க்கை சூழல் புரிந்தது. எனக்கு ஓர் புது உலகமாகத்தான் இருந்தது. ஞாயிறு அந்த விடுதியில் என்னை தவிற யாரும் இருப்பதில்லை. தனிமையின் கொடுமை அன்று தான் விளங்கும். அன்று முழுதும் அத்தானிடம் போனின் கதைத்து கொண்டிருப்பேன். சில நேரம் பொறுமையாக கேட்பார். சில பொழுது அவரையே மன அழுத்ததிற்கு உள்ளாக்கி விடுவேன். அத்தான் எனக்கு பிடிக்கவில்லை உங்களை பிரிந்திருப்பது, நம் குழந்தைகளை காணாதிருப்பது கடினமாக உள்ளது என்பேன். இருப்பினும் கல்லூரியில் சேர்ந்த பின், பின் வாங்கவும் தயக்கமாக இருந்தது. 

அங்கு தான் என்னவரின் எல்லா உறவினர்கள் வீடும் இருந்தது . என்னவரின் சகோதரன் வீடு கூட சென்னையில் தான் இருந்தது. யாராவது வந்து என்னை பார்க்க மாட்டார்களா என்னை அழைத்து செல்ல மாட்டார்களா என உள்ளம் கேட்டாலும், யார் வீட்டிற்கும் அத்தான் இல்லாது போக மனம் வரவில்லை.  உனக்கு பிடிக்க வில்லை என்றால் வந்து விடு என்றார். ஆறு மாதம் சென்றதும் அத்தானும் என் பிரிவை தாங்காது நிதம் இரத்த அழுத்த மாத்திரை எடுக்க துவங்கினார்.  வேலையை தக்க வைக்க வேண்டும் என்ற ஆசையும் பின் வாங்கக்கூடாது என்ற சிந்தனையும் என்னை சென்னையில் இருக்க வைத்தது. கல்லூரி விடுதியில் விண்ணப்பம் செய்திருந்தேன்.  ஆகஸ்து மாதம் எனக்கு கல்லூரி விடுதி காப்பாளராகவும் பணி கிடைத்தது.  காலை லிபா நிறுவனத்தில் வெப் டிசைனிங் போன்ற சாற்றிதழ் படிப்பு , மதியம் கல்லூரி பேராசிரியர் வேலை, மாலை காப்பாளர் வேலை,  என என்னை முழுநேரவும் வேலையில் ஈடுபடுத்தி கொண்டேன்.  கல்லூரி விடுதியில் சேர்ந்த பின் நேரா நேரம் உணவு, தங்க வசதியான தனி அறை, மாணவிகளுடன் உரையாடல், கண்காணிப்பாளர்களான மற்று அருட்சகோதரிகளுடன் உள்ள நட்பு,  தினம் காலை ஆலயம் சென்று பிரார்த்திக்கும் வாய்ப்பு, என சுவாரசியமாக சென்றது வாழ்க்கை. அத்தான் குழந்தைகள் நலனுக்காக அவருடைய தொழில் வளர்ச்சிக்காக என நிறைய பிரார்த்தனை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவர் நினைவு வந்து வாட்ட துவங்கினால்; நடைபயணம், வேலை என மும்முரமாகி விடுவேன். மாதம் ஒரு முறை வீட்டிற்கு வந்து விடுவேன். அவரும் என்னை வந்து சந்தித்து செல்வார்.   சில பொழுது இருவரும் ஒன்றாக பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் ஒரே நேரம்  வரும்படி பயணத்திட்டத்தை ஒருங்கிணைப்பார்.  சென்னைக்கு என் விடுமுறை நாட்களில் வந்து 50 ரூபாய் டிக்கட் பேருந்தில் ஒரு பக்கம் இருந்து மறுபக்கம் வரை பயணிப்போம். அங்குள்ள மால்களுக்கு அழைத்து செல்வார். மாலை விடுதியில் கொண்டு விட்டு என்னவர் பாளை திரும்புவார்.  


நான் லயோளா கல்லூரியில் வேலை செய்கிறேன் என்பதை என்னை விட அத்தானே பெருமையாக கருதினார். அவருடைய தொழிலையும் சென்னைக்கு மாற்றும் படி கேட்டிருந்தேன். அந்த காலையளவில் இவருடைய பெற்றோர் முதுமையின் காரணமான பல நோய்களுக்கு பாளையம் கோட்டை மருத்துவமனைகளில் சிகித்சை பெற்று வந்தனர். உன் தேவையே இல்லை , எங்களிடம் பணம் உண்டு என கொக்கரித்தவர்களுக்கு என்னவர் உதவி தேவைப்பட்டது. பக்குவமாக இவர் நிழலில் ஒட்டி கொண்டனர்.  பல பொழுதும் மருத்துவ செலவை இவரே செய்துள்ளார். இவர் தம்பி இந்த வேளைகளில்  சில காரணங்கள் கூறி பெற்றோரை சந்திப்பதே இல்லை. இதனால் இவர் பெற்றோர்கள் இவரையே சார்ந்திருந்தனர். பெற்றோர் அரவணப்பு கிடைக்காது இருந்த என்னவருக்கு இந்த சூழல் பிடித்திருந்தது. தன்னை சார்ந்திருக்கும் பெற்றோரை விட மனம் இல்லாது பாளையம் கோட்டையிலே இருந்து கொண்டார். என்னிடம் நீ லயோளாவில் வேலை பார்த்து கொள் நம் மகன்களை நான் பார்த்து கொள்கிறேன் என்றார். ஒரு வருடம் மேலும் பிரிந்து இருப்பது என்னால் இயலாது  என்ற சூழலில் மறுபடியும் பாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தேன்.  

அந்த பிரிந்திருந்த ஒரு வருடம் என்னை வாழ்க்கையை பற்றி சிந்திக்க வைத்தது. அத்தானிடம் தேக்கி வைத்திருந்த அன்பை எல்லாம் கொட்ட வைத்தது. கடந்த இரு வருடமாக எந்த முகாந்திரவும் இல்லாது அவரை அவராகவே ஏற்று கொள்ள பழகினேன். விரும்பினேன். ஆனால் அந்த ஒரு வருட இடைவெளி என்பது அவர் குடும்பத்தின் ஆளுகைக்கு அவரை உட்கொள்ள வைத்து விட்டது.  அவர் இரு முகமாக வாழ பழக    ஆரம்பித்திருந்தது எனக்கு தெரிந்திருக்கவில்லை. நான் லயோளாவில் இருந்த காலம் எங்கள் மகன்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக அவருடன் இருந்த நாட்களாக இருந்துள்ளது. இருவரும் அவருடைய இரு பக்கவும் படுத்து தூங்கியுள்ளனர். ”நீங்க மறுபடியும் சென்னைக்கு போங்க நாங்க அப்பாவுடன் இருந்து கொள்கின்றோம்” என எங்கள் மகன்களை சொல்ல வைத்தது அவருடைய வளர்ப்பு. மகன்களுக்கு பிடித்த உணவு வாங்கி சமைத்து கொடுத்து என்னை விட அழகாக நோக்கியுள்ளார்.  என் மகன்கள்;அவர் இருந்து, நான்  போயிருந்தால் கூட இந்த அளவு துயருற்றிருக்க வாய்ப்பு இல்லை.  எப்போதும் மகிழ்ச்சி, சிரிப்பு, பாடல், பயணம், என  சின்ன குழந்தையாகவே மாறி விடுவார். அவர் மனமே இயல்பானது குழந்தைகளை போன்று வஞ்சகம் இல்லாதது குழந்தைத்தனமானது. அன்பு கிடைக்கும் இடத்தில் பஞ்சு போன்று ஒட்டி கொள்வது. அவர் தேவை எல்லாம் சிறிதாகத் தான் இருக்கும். நிறைய பணம் சேர்க்க வேண்டும் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை அவரிடம் இருக்காது. அந்த நிமிடம் நிம்மதியாக இருக்கும் தன்மையுடையவர். கையிலுள்ளது எல்லாம் மற்றவர்களுக்கு கொடுத்து மற்றவர்கள் சந்தோஷத்தை பார்த்து மகிழக்கூடியவர்.

வாழ்க்கையை சிறுக சிறுக ரசித்து சின்ன சின்ன சேமிப்பில் வாழ்ந்தவரை அவருடைய சகோதர சகவாசம்; கத்தார் என்ற  அரபி தேசம் சென்று சம்பாதித்து  பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டது. அந்த ஆசைக்கு நான் பங்கம் விளைவித்து விடுவேனோ என்று பயந்த அத்தான் எங்களிடம் இருந்த இயல்பான அன்னியோன்னியத்தை குறைத்து கொண்டார்.  கடந்த எட்டு மாதமாக. தன் சகோதரனை எந்த சந்தேகவும் இன்றி நம்பும் சூழலுக்கு உள்ளானார். தன் தாயிடம்  எங்கள் வீட்டு விடையங்களையும் கூறும் நிலைக்கு எட்டினார்.   எப்போதும் போல் பட்டு அழுந்தி எங்களை வந்து அடைவார் என்றிருந்தேன். கடந்த ஒரு வருடமாக எங்கள் அலுவலகம் கூட என் பார்வையில் இருந்து நெடும் தூரம் இருந்தது இவருடைய அத்து மீறின சுதந்திரத்திற்கு வழியாகினது. ஆனால் இதன்  முடிவு இந்த  துயர் நிலை என  எதிர்பார்க்கவில்லை

அத்தானை பற்றிய நினைக்க நினைக்க இனிமையான  நினைவுகள் தான் என் மனதில் உள்ளன. அதை மட்டுமே தேக்கியும் வைத்துள்ளேன். அவர் என் மேல் வைத்த அதீதமான அன்பிற்கு ஈடு இணையே கிடையாது. இருந்தும் சிலவற்றை மறைத்தார் என்றால் நான் வருத்தப்படுவேன் நான் விரும்பவில்லை என்பது அவருக்கு தெரிந்ததால் தான். என்னை உருவாக்கியவர், என்னை நிரந்தரமாக நேசித்தவருக்கு நான் செய்யும் காணிக்கையாக இனி அவரை அந்த பரம்பொருளுக்கு காணிக்கையாக கொடுத்து விட்டதாக எண்ணுவதாகும். அத்தான் இனி நான் அழக்கூடாது உங்களை நினைத்ததும் என் நெஞ்சு அடைத்து கண்ணீர் வழிந்தோடுகின்றது. அதற்காக உங்களை நினையாதும் இருக்க இயலாது. அத்தான் .நீங்க மகிழ்ச்சியாக இறைவன் பக்கம் இருக்க வேண்டும். எங்களுக்கு தேவையான துணையை அங்கிருந்து நீங்கள் தர வேண்டும். 

0 comments:

Post Comment

Post a Comment