header-photo

சவால்களை கடந்த அத்தான்!நம் வாழ்க்கை பல சவால்கள் நிரம்பியதாகத்தான் இருந்தது. இல்லாவிடில் எஸ்டேடில் இருந்து தூத்துக்குடி ஸ்பின்னிங் வேலைக்கு என பயணப்பட்டிருக்க மாட்டோம். அந்த முடிவை அறிந்ததுமே உங்கள் அப்பா இவன் நாசமா போக போகிறான் நான் வாங்கி கொடுத்த எஸ்டேட் வேலையை விட முடிவெடுத்தது மிகவும் அபத்தம் என்றார். ஆனால் எஸ்டேடில் நாலு மாதமாக நாம் ஊதியம் பெறாது வேதனைப்பட்ட போதும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. தூத்துக்குடிக்கு வந்த போது நாம் பெற்ற ஊதியம் வெறும் 3500 ரூபாய். நம்மிடம் இருந்த புல்லட் பைக்கையும் உங்கள் வீட்டில் பறித்து கொண்டதால் நீங்கள் கல்லூரியில் பயண்படுத்திய சைக்கிளை தான் பயண்படுத்தி வந்தோம். அன்று வீட்டு வாடகையோ 1200 ரூபாய். லைன் வீடு தான் நம் வாடகைக்கு பொருந்தும் படியாக இருந்தது. ஆனால் என்னால் அவ்வகையான சூழலில் வாழ இயலாது என்பதால் நம்  தனிப்பட்ட செலவை சுருக்கி கொண்டு நல்ல வீடுகளில் தான் வசித்தோம். அப்போது நமது முதல் மகன் சிறுவர்-விளையாட்டு பாடசாலைக்கு செல்லும் வயதை எட்டினான். சுத்தம் சுகாதாரம் பார்த்து கிட்டீஸ் வேள்ட் என்ற அழகான பள்ளியில் சேர்த்தோம். அவனுக்கும் 500 ரூபாய் செலுத்த வேண்டி வந்தது.  இதன் மத்தியில் நம் உணவு,உடை செலவும் அடங்கியது. நீங்கள் பல வருடமாக பண்டிகைக்கு சட்டை அல்லது பான்று ஏதாவது ஒன்று மட்டுமே எடுத்து வந்தீர்கள் ஆனால் எங்களுக்கு நல்லதாகவே எடுத்து தந்தீர்கள். இந்த காலயளவில் தான் உங்க தம்பி எம்பி ஏ முடித்து பல நிறுவனங்களில் மேலாளராக பணி புரிய அந்த கர்வத்தில் உங்க பெற்றோர் நம்மை, உங்க வீட்டு நடையை மிதிக்க  அனுமதிக்கவில்லை. வலுகட்டாயமாக நாம் சென்றாலும் கேலி பேசி நாம் வராத வண்ணம் அனுப்பி விடுவார்கள். 

இந்த நேரம் தான் நம் முதல் மகன் ஆசைப்படுகின்றான் தனிமையை வெறுக்கின்றான் என்ற சூழலில் நம் இரண்டாவது மகன் வரவேண்டும் என முடிவெடுத்தோம். குழந்தை வளர வளர பிரசவம் எந்த மருத்துவ மனையில் யார் பார்ப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதன் மத்தியில் தான் தூத்துக்குடி ஸ்பின்னிங் முதலாளி மிகவும் அவமரியாதையாக பேசுகின்றார் நான் வேலையை விடப்போகிறேன் நீ என்னை குறை கூறக்கூடாது என்ற  உத்தரவாதத்தில் வேலையையும் விட்டீர்கள். பின்பு நம் வேலையே  பத்திரிக்கையில் வரும் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற பத்தியை இருவருமாக தேடுவதாக இருந்தது.   இக்கட்டான இக்காலயளவில் சில வேலைகளை பெற்றீர்கள் ஆனால் ஊதியம் தராது ஏமாற்றினர்.   ஒரு முறை ஜாம்பட் மகன் அலுவலகத்தில் பணி செய்த போது இரண்டு மாத ஊதியம் தர இருக்க என் அலுவலகத்திலுள்ள கணிணி காணாது போய் விட்டது என கூறி அலுவலகத்தில் வேலை செய்த அனைவரையும் போலிஸ் பிடியில் சிக்க வைப்பேன் எனக்கூறி சம்பளம் கொடுக்காதே விரட்டி விட்டான். 

பின்பு ராஜா ஏஜன்ஸியில் மூன்று  வருடங்கள்  திருப்தியாக வேலை செய்தீர்கள். ஊதிய உயர்வு என்றது நினைத்தது போல் இல்லை மேலும் திருநெல்வேலியில் கிடைக்கும் என ஒரு வேலையை நம்பி வர அது தாமதிக்க சுசி ஆட்டோ சோனில் வேலைக்கு சேர்ந்தீர்கள். முதலாளியின் தயவில் நான்கு வருடம் வேலை செய்ய உடன் வேலை செய்பவனின் நயவஞ்சகம் பிடிக்காது;கனடாவில் உள்ள ஓர் ஆடிட்டிங் நிறுவனத்திற்கு நெல்லையில் இருந்து இயங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தீர்கள். 

 கம்பனி ஸ்கூட்டர், பைக் என பயண்படுத்திய நீங்கள் சொந்தமாக ஷைன் பைக் வாங்கினீர்கள். அந்த பைக்கில் தான் நாம் தேனி துவங்கி திருவனந்தபுரம் எல்கை வரை பயணித்துள்ளோம். பின்பு பல கல்லூரி மருத்துவமனைகளுக்கு பகுதிநேர கணக்கராக சேர உங்கள் தொழிலில் வளமை காண ஆரம்பித்தீர்கள். 2011ல் நீங்களே தனியாக ஓர் அலுவலகம் நம் வீட்டில் ஓர் அறையில் ஆரம்பித்து பின்பு 2015ல் நெல்லையில் தமிழ்நாடு என்றர்பிரைஸ் என்ற கட்டிடத்தில் பிரபல ஆடிட்டர் சாமுவல் சார் அவருடைய சொந்த கட்டிடத்திற்கு மாறினபோது அந்த  அலுவலகத்தை உங்களுக்கு  விட்டு தந்தார். இன்றைய தினம் உங்கள் அலுவலகத்தில் மூன்றுபேர் வேலை நோக்கி வந்தனர். வெறும் 3500 ரூபாய்க்கு வேலைபார்த்த நீங்கள் உங்கள் உதவியாளர்களுக்கு 15000, 10000, 8000 என ஊதியம் வழங்கி வந்தீர்கள்.


5 ரூபாய் பேருந்து செலவில் வீட்டில்  வரும் உங்கள் ஊழியனை உங்கள் வாகனத்தில் வீட்டில்  கொண்டு விட்டுள்ளீர்கள். நான் இது போன்ற அதிகபிரசங்கித்தனமான சேவையை பற்றி கேள்வி எழுப்பும் போது ஒரே வார்த்தையில் என் வாயை அடைத்து விடுவீர்கள். ஊதியம் போக இந்த ஊழியக்காரர்களுக்கு உணவும் உங்க செலவில் வழங்கியுள்ளீர்கள்.  நீங்கள் வரவுக்கு மீறி செலவு செய்கின்றீர்கள் என்று  தெரிந்ததால் தான் மறுபடியும் நம் அலுவலகத்தை நம் வீட்டு வளாகத்தில் மாற்ற  வேண்டினேன். ஆனால் நீங்க்ளூம் மகிழ்ச்சியாக இருந்து சுற்றுமிருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நிர்பந்தம் கொண்டீர்கள்.  அதற்குள் உங்களை கத்தார் அனுப்பியே தீருவேன் என்று உங்க தம்பியும் நம் வாழ்க்கையில் நுழைந்து விட்டான்,நீங்க அந்த கடைசி வெள்ளியன்று முடித்து வைத்த  சாற்றிதழ்களை உரியவர்களிடம்,உரிய அலுவலகம் சேராது 10 நாட்கள் நீங்க வைத்த இடத்திலே இருந்தது.  உங்க அலுவலக உதவியாளர்களிடம் இதை சேர்க்குபவர்களிடம் சேர்க்கலாமே என்றதும் அலுவலகம் வரவே பிடிக்கவில்லை சார் எங்களுக்கு வாங்கி தந்த உணவு தான் நினைவில் வருகிறது ,நான் ஊரில் உள்ளேன்,என்னால் இன்று வர இயலாது என்ற பதில்கள் தான் வந்தன.  உங்கள் நண்பர் ரீகன் இடைபட்டதால் சேர்க்கவேண்டியவர்களிடம் அவர்கள் சாற்றிதழ்கள் பைல்களை கொடுத்து விட்டு கணக்கு பார்த்த போது நீங்கள் பணத்தை கையாளூம் விடையத்தில் கரைகடந்த வெள்ளமாகத்தான் பாய்ந்துள்ளீர்கள் அத்தான். ஒரு வகையில்
ஏமாற்றமாக பட்டாலும் நீங்கள் ஏதோ வகையில் யார் யாரிடமோ பெற்ற கடனை யார் யாருக்கோ கொடுத்து அடைத்து விட்டீர்கள். 


இல்லை, இல்லை என்று ஆரம்பித்து,போதும் போதும் என்ற மனநிலையில் என்ன என்ன வேண்டுமோ எல்லாம் வாங்கி பயண்படுத்தி விட்டு நிம்மதியாக கண்ணை மூடி விட்டீர்கள். முதலில் உங்களுக்கு மிகவும் பிடித்த பிஃயட் கார் வாங்கினீர்கள். பின்பு புதியதாக வேகனர் கார் வாங்கி நாலு மாதம் பயண்படுத்தி விட்டிர்கள்.  20 வயதில் வேலை செய்ய ஆரம்பித்த நீங்கள் உங்கள் 44 ஆம் வயதில் மிகவும் வேகமாக பணி செய்து வந்தீர்கள். எப்போதும் பிசி! என்னிடம் நீங்கள் கெஞ்சுவதே என்னை 20ஆம் தியதி வரை தொல்லை தராதே , மாதம் துவங்கி விட்டது நிறைய பணி உள்ளது. எனக்கு தொல்லை தராதே என்பதாகத்தான்  இருந்தது. கடைசி வாரங்களில் கூட வீட்டிற்கு வந்த பின்பு இணையம் மூலம் செய்ய வேண்டிய சில பணிகளை செய்து கொண்டு தான் இருந்தீர்கள். அந்த கடைசி வியாழம் நாம் இருவரும் ஒன்றாகத்தான் வீடு வந்து சேர்ந்தோம்.  ஒரு காப்பி கடையில் கேக்-புட்டிங்குடன்  காப்பி குடித்தோம். பின்பு என் மாணவிக்கு பிறந்த நாள் உடை வாங்கி கேட்டேன். அதையும் வாங்கி தந்தீர்கள். வெள்ளி அன்று அவசர அவசரமாக வந்தீர்கள். என்னை கல்லூரிக்கு நீங்கள் தான் கொண்டு விட்டீர்கள்.  அவசரத்தில் தேப்பு பெட்டி சரியாக வேலை செய்யவில்லை என நான் கூறின போது உனக்கு உடுத்த வேறு சேலையே இல்லையா எனக்கூறி நீங்க ஐயன் பாக்ஸை சரி செய்து தந்தீர்கள். சனி எனக்கு கல்லூரி விடுமுறை. நீங்களோ உங்கள் வாழ்க்கைகே விடுமுறை எடுத்து கொண்டீர்கள். வேகமாக ஓடி ஓடி வேலை செய்து உங்க பணியை வேகமாகவே முடித்து கொண்டீர்கள் அத்தான். எனக்கு தான் நீங்கள் வரும் ஒவ்வொரு நொடியும் நீங்கள் என்னை கைபேசியில் அழைக்கு ஒவ்வொரு மணித்தியாலவும் நீங்கள் பேசும் ஒவ்வொரு மொழியும் கொல்கின்றது. 

அத்தான் இது மிகவும் கொடியது. நாம் நம் இளைமையில் எதிர் கொண்ட வறுமை, பெற்றோர் புரக்கணிப்பு அவமதிப்பு எல்லாம் கடந்து வந்ததால் இனி இதற்கு மேல் ஒன்றும் சந்திக்க ஒன்றும் இல்லை என்று இருந்தேன். உங்களை எங்களிடம் இருந்து பிரித்து அந்த கடவுள் முழுதுமாக பழி தீர்த்து விட்டார். சவாலை எதிர்கொள்ள இயலாத வண்ணம் என்னை ஒடித்து நொறுக்கி விட்டார். உங்க வேலைப்பழுவிலும் இயலாமையிலும் என்னையும் படிக்க வைத்து பேராசிரியர் தகுதித்தேர்விலும் வெற்றியடைய செய்து இன்று இந்தியாவில் எந்த பல்கலைகழகத்திலும் கல்லூரியிலும் வேலை செய்யும் வண்ணம் உருவாக்கி விட்டுள்ளீர்கள்,  கடவுளின் கருணை பொய்ந்து விட்டது என நான் அங்கலாய்க்கும்  போதும் இது போன்ற எதிர்பார வெற்றிகள் நம்பிக்கை துளிர்க்கச்செய்கின்றது. சோதனைகள் வரலாம் சோதனையே வாழ்க்கையாக தெரிகிறது எனக்கு. நீங்க எங்களுடன் இருந்திருந்தால் இதையும் ஓர் சவாலாக ஏற்று நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருப்போம் தானே? 

நீங்களூம் சில குடும்ப நியதிகளை மீறி விட்டீர்கள். உங்கள் வறுமையில் துன்பத்தில் உங்களோடு இருந்த என்னை கடந்த ஆறு மாதமாக புரக்கணித்து விட்டீர்கள். லயோளா கல்லூரிக்கு அனுப்பும் போது என் கரியருக்கு நல்லது என்றீர்கள் ஆனால் என் வாழ்க்கை கரியருக்கு நான் பெரிய பங்கம் விளைவித்துள்ளேன். அப்போது துவங்கி உங்களை சுற்றிய அந்த நல்ல பாம்பு கரும் நாகம்,சாரை பாம்பு உங்களை என்னிடம் இருந்து பிரித்து விட்டது. நீங்கள் போகும் முன் புதன் அன்று கூறினீர்கள் உங்கள் நசரேத் பழைய வீட்டின் உள்ளில் இருந்து வந்த இந்த மூன்று பாம்பையும் கொன்று விட்டீர்கள் என்று. ஆனால் அத்தான் நீங்க எங்களை விட்டு போன மர்மம் தான் என்னால் விளங்கவில்லை. 

இதற்கு மேல் சவால்களை சந்தித்து நீங்கள் துன்பப்படக்கூடாது என இறைவன் முடிவெடுத்து விட்டாரோ? அத்தான் நீங்க இறைவன் சந்தியில் மகிழ்ச்சியாக வெற்றி களிப்புடன் இருங்க. ஒன்றுமே இல்லாது துவங்கிய நம் வாழ்க்கை எல்லாம் இருக்க முடிந்ததும் வெற்றி தானே?   கடைசி நாட்களில்  உங்களை நசுக்கிய உங்களிடம் இருந்தவையை எல்லாம் பிடுங்கி உங்களை அவமதித்தவர்களை மன்னித்து அவர்களுக்கு கொடுக்க வேண்டியதையும் கொடுத்து சென்றுள்ளீர்கள் அத்தான்.

அவனை நம்ப வேண்டாம் என பல முறைக்கூறியும் நீங்கள் அவனை நம்பி உங்கள் வசம் இருந்ததை எல்லாம் கொடுத்து சென்றுள்ளீர்கள். இதனால் தான் நான் நம்புகின்றேன் உங்கள்  ஆயிசு முடிந்து விட்டது. அவர்களுக்கு இதை விட ஒரு தண்டனை உங்களால் கொடுக்கவே முடியாது. உங்க பைக்கை பிடுங்கி வித்தவனுக்கும்,உங்க கையிலிருந்த நகைகள் எல்லாம் பிடுங்கிய தாய், தற்போதும் உங்களுக்கு கொடுக்க ஒன்றுமில்லை எனக்கூறும் அந்த தாய்க்கும் நீங்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்து சென்றுள்ளீர்கள்.புராணங்கள் கூறும் குந்தி , பைபிளில் காணும் யாகோபின் தாய் போன்றவர்கள் இருக்கும் வரை உங்களை போன்ற மகன்கள் சரித்திர புருஷனான உருமாறுகின்றீர்கள். உங்களை போன்ற மிகவும் நல்லவர்களை புரியவும் பிரியவும் அந்த இறைவன்  தான் துணை நிற்க  வேண்டும்.3 comments:

பழனி.கந்தசாமி said...

உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டேன்.

Palaniappan Kandaswamy · Chief at At Home said...


உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டேன்.

வேகநரி said...

அவர் ஒரு உத்தம புருஷனே தான். மற்றவர்களுக்கு துன்பம்,தொல்லைகள் கொடுக்காம, தன் பிள்ளைகளுக்கே தொல்லைகள் கொடுக்க கூடாது என்று வாழ்ந்த உத்தமர். எல்லா சகோதரனும் நல்லவர்கள், எல்லா அம்மாவும் பிள்ளையில் அன்பானவர்கள் என்ற தனது மூட நம்பிக்கையால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் துன்பம் தேடிகொண்டார்.

Post Comment

Post a Comment